16.1.08

சக் தே! பில்லா மற்றும் சில படங்கள்...


Big Temple, Thanjavur


ஷோலேயைத் தவிர வேறு எந்த ஹிந்திப்படமும் எனக்குப் பிடித்ததில்லை பார்ப்பதிலும் விருப்பம் இல்லை என்று கூறிக் கொண்டிருந்தேன், ராம் கோபால் வர்மாவின் ‘சத்யா’ (Satya) பார்க்கும் வரை!

இத்தனைக்கும் நான் ‘சத்யா’ கேபிள் இணைப்பில் மோசமான ஒலித்தரத்துடன் பார்த்தேன். ஆனாலும் இரண்டு மூன்று நாட்களுக்கு என்னை சத்யா நினைவுகள் துரத்தியடித்ததற்கு முக்கிய காரணம், அதன் தெளிவான திரைக்கதை, திரைத் தொகுப்பு...முக்கியமாக அதன் யதார்த்தம்!

மும்பையில் எனது முதல் நாள் அனுபவம், சத்யாவின் முதல் நாள் அனுபவத்தை ஒத்திருந்ததும் ஒரு காரணம். தேவையற்ற இரு பாடல்களை எடுத்துவிட்டால்...ஹாலிவுட்டின் காட் பாதர் படத்திற்கு இணையான ஒரு படம்.

சமீபத்தில் நான் பார்த்த பிளாக் ஃபிரைடே (Black Friday) ஓரளவிற்கு சத்யா அனுபவத்தினை கொடுத்தது. மும்பை குண்டு வெடிப்புகளுக்குப் பின்னர் நடைபெற்ற புலன் விசாரணையைப் பற்றி எவ்வித பாரபட்சமும் இன்றி, எடுக்கப்பட்ட சுவராசியமான ஒரு படம். ஏறக்குறைய ஆவணப்படம் என்றாலும், விறுவிறுப்பில் எந்த ஒரு திரில்லர் ரக படத்திற்கும் குறைவில்லாதது. ஸ்பீல்பெர்க்கின் மியூனிக் (Munich) படம் போன்றதொரு முயற்சி.

சத்யா பெருவெற்றி பெற்றது என்றாலும், பிளாக் ஃபிரைடே என்னவாயிற்று என்று தெரியவில்லை.


***

பிளாக் ஃபிரைடே பற்றி எழுதுவதற்குள்ளாக மற்றுமொரு படம் நேற்று முன்தினம் பார்த்த ‘சக் தே இந்தியா’ (Chak De India)

ஷாருக் கான், இந்திய ஹாக்கி அணியின் தலைவர். உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக பெனால்டி அடியில் கோட்டை விட்டு ‘துரோகி’ என்று பட்டம் சூட்டப்பட்டு, ஹாக்கி உலகிலிருந்தே துரத்தப்படுகிறார். ஏழு வருடங்கள் கழித்து எப்படி இந்திய பெண்கள் அணிக்கு பயிற்சியாளராக முன் வந்து அதனை ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலக கோப்பை போட்டியில் வெற்றி பெறச் செய்கிறார் என்பதுதான் கதை!

படத்தில் குறிப்பிடத்தகுந்த அம்சங்கள்...

ஷாருக் கான் படம் முழுக்க மடித்து விட்ட கைகளுடன் கூடிய வெள்ளை நிற முழுக்கை சட்டையில் படம் முழுவதும் வருவது.

நம்மவர்களுக்கு எரிச்சலூட்டும் அவரது வழக்கமான ஏதோ குளிரில் நடுங்குவன் போல பேசும் பாணியை கைவிட்டு சாதாரணமாக பேசியிருப்பது.

உணர்ச்சியில் பொங்கி, ஓவர் ஆக்டிங் செய்யக்கூடிய பல சந்தர்ப்பங்கள் இருந்தும் அவ்வாறு செய்யாமல் அமைதியாகவும், ஆழமாகவும் நடித்திருப்பது. இத்தாலி உலக கோப்பை கால்பந்தாட்டத்தில் பெக்கென்பர் (beckenbauer) இருந்த அளவிற்கு இறுக்கமாக இல்லையெனினும், தேவைப்படும் அளவிற்கே உணர்ச்சி காட்டியிருப்பது.

முதலில் ஷாருக் கான் விளையாடுவதாக காட்டப்படும் காட்சிகள் தவிர மற்ற அனைத்து ஹாக்கி காட்சிகளையும் மிகவும் உண்மைத்தன்மையுடன் (authentic) அமைத்திருப்பது.

காதல், கத்தரிக்காய் என்று எதுவுமில்லாததால், கதையின் ஓட்டத்தையே குலைக்கும் டூயட் என்ற அருவருப்பு இல்லாமலிருப்பது. ஆயினும் இரு பாடல்களை பின்னணியில் இணைத்து சிறிது சமசரசம் செய்யப்பட்டுள்ளது.

சந்தர்ப்பம் இருந்தும் தேசபக்தியை தூண்டாமலிருந்தது. இறுதியில் கொடியைத் தூக்கிக் கொண்டு கூட யாரும் ஓடுவது போன்று காட்டாத தைரியம்.

முக்கியமாக, மிகவும் முக்கியமாக இப்படிப்பட்ட வித்தியாசமான திரைக்கதையினை கையாண்ட இயக்குஞர், தயாரிப்பாளரின் துணிச்சல்.

படத்தில் உருத்திய விடயம் ஒன்றுதான். கிரிக்கெட்டில் இந்தியா தோற்றால் ‘ஒழிஞ்சுது சனியன்’ என்று மகிழும் எனக்கே, கிரிக்கட் மட்டையுடன் தாக்க வருபவரை தடுத்து ‘பின்னிருந்து அடிப்பது கோழைகளின் செயல்’ என்று ஷாருக் சொல்வது. மற்றும் காதலராக வரும் கிரிக்கட் வீரரை இறுதியில் சிறுமைப்படுத்தியிருப்பது. ஆயினும் இயல்பான கோபம்தானே! சரி, வயிற்றெரிச்சல் என விட்டு விடலாம்.

இயல்பான முகங்கள், சாதாரண உடைகள். பார்ப்பது ஹிந்திப்படம்தானா என்ற ஆச்சரியத்தினை ஏற்படுத்திய இவ்வித முயற்சிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.


***

சக் தே பார்த்த பாவத்திற்காக நேற்று குழந்தைகளுடன் ‘பில்லா’ பார்த்து புண்ணியம் தேடிக் கொண்டேன். குட்டிப் பெண் ஒரு வாரமாக ‘பிக் டிவி’யில் (Big TV) சினிமா பார்க்க வேண்டும் என்று வேண்டியதால், சரி போவோமே என்று திருமணமான புதிதில் எடுத்த ‘குருதிப்புனல்’ முயற்சிக்கு பின்னர் மீண்டும் மனைவியுடனான, தமிழ்ப்பட முயற்சி.

கஷ்டம் அனுபவிக்கும் சில நேரங்களில் ‘அப்படியே செத்துப் போய் விட மாட்டோமா’ என்றிருக்குமே அந்த எண்ணம் நேற்று வந்தது. யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை செவியில் ‘இனிமே இங்க வருவியா, வருவியா’ என்று கேட்பது மாதிரி தொடர்ந்து அறைய படத்தில் நடி(ட)க்கும் அனைவரும் சிக்கென்ற உடையில் இறுதி வரை ஸ்லே மோஷனில் நடந்து கொண்டே இருந்தார்கள்.

தமிழில் இது ஹிட் படமாம்.

முன்பு ரஜினியின் பில்லாவை ‘துக்ளக்’கில் மூளையைக் கழற்றி பக்கத்தில் வைத்துக் கொண்டு பார்க்க வேண்டிய படம் என்று விமர்சனம் எழுதி பாலாஜியிடம் வசமாக வாங்கிக் கட்டினார்கள். நான் தயாராக இல்லை!


***

‘பில்லா! இது இவனது சொந்தப் பெயரா?’ என்று படத்தில் ஒருமுறை குழம்புகிறார்கள். பில்லா, எண்பதுகளில் பிரபலமான ஒரு கிரிமினல். பில்லாவும் அவரது கூட்டாளியான ரங்கா என்பவரும் பணத்திற்காக இளம் வயது பெண்ணையும் அவரது சகோதரரையும் கடத்திச் சென்று கொன்றதற்காக தூக்கிலிடப்பட்டனர். பில்லி (பூனை) என்ற ஹிந்தி வார்த்தையிலிருந்தே இவருக்கு பில்லா என்ற பட்டப்பெயர் சூட்டப்பட்டது.

பில்லாவின் வெற்றிக்குப் பின்னர் ரஜினிகாந்த் பின்னர் ரங்கா என்ற பெயரிலும் ஒரு படத்தில் நடித்தார்.


Big Temple, Tanjore

பில்லாவை மோசமான ஒரு நடிப்புடன் பிரபு துரத்துவதை விட வேட்டையாடு விளையாடு கமலை அனுப்பியிருந்தால் இந்திய பீனல் கோடு பற்றிய பயம் இல்லாமல், ‘பொட்’ ‘பொட்’ என போட்டுத் தள்ளியிருப்பார். அந்தளவுக்கு பயங்கரமான கிரிமினல் கொலைகளை செய்கிறார் சூப்பிரண்டண்ட் ஆப் போலீஸ் ராகவன். ஆனாலும் கடைசியில் எவ்வித தண்டனையுமின்றி ஜோதிகாவை கல்யாணம் செய்கிறார்.

வேடிக்கை என்னவென்றால், இறுதியில் பல காவல்துறை அதிகாரிகளுக்கு நன்றி என்று எழுத்து போடுகின்றனர்.

நன்றிக்குண்டானவர்கள் நெளிந்திருப்பார்களோ?

***

இல்லை என்கிறார் சாமி விக்ரம். நேற்று அவரது பட பேட்டியில் சாமி பட காட்சியினை காட்டினார்கள். ஊர்வலத்தை சமாளிக்க கத்தி, கபடாவுடன் இறங்குகிறார். படத்தைப் பார்த்து காவலதிகாரிகள் பாராட்டினார்கள் என்று கூறினார்.

நமது காவல்துறையை கேவலப்படுத்த வீரப்பன் தேவையில்லை...இரண்டு மூன்று தமிழ்ப் படங்கள் போதும்.

பில்லாவில் அதுதான் ஆறுதலிக்கும் விடயம். மலேசிய போலீஸை கேவலப்படுத்தியிருப்பார்கள்.


மதுரை
16.01.08


படத்திற்கும் பதிவிற்கும் சம்பந்தமில்லை...நம்ம பதிவில் நாம எடுத்த படத்தைத்தானே போடணும்

5 comments:

Anonymous said...

//நமது காவல்துறையை கேவலப்படுத்த வீரப்பன் தேவையில்லை...இரண்டு மூன்று தமிழ்ப் படங்கள் போதும்.

பில்லாவில் அதுதான் ஆறுதலிக்கும் விடயம். மலேசிய போலீஸை கேவலப்படுத்தியிருப்பார்கள்.//


:-))))வக்கீலய்யா, பின்னிட்டீங்க போங்க. மனசு நொந்து போகும்போது வர்ற நகைச்சுவைதான் தூக்கலா இருக்கும்க்றது எவ்வளவு சரியா இருக்கு? :-)

சாத்தான்குளத்தான்

தருமி said...

:-))))வக்கீலய்யா, பின்னிட்டீங்க போங்க. மனசு நொந்து போகும்போது வர்ற நகைச்சுவைதான் தூக்கலா இருக்கும்க்றது எவ்வளவு சரியா இருக்கு? :-)//

ரிப்பீட்டேய்!!

ஆனாலும் நம்ம படங்களைப் பார்த்து இந்த அளவு மனசை விடக்கூடாது. தேத்திக்கங்க...

Anonymous said...

அசத்திட்டீங்க அட்வகேட் அய்யா.. தமிழ்ப்படங்களுக்கு உங்கள மாதிரி ஒர்த்தர் நிச்சயம் தேவை

Boston Bala said...

சக்தே எனக்கும் பிடித்திருந்தது

Doctor Bruno said...

பில்லா: Raymonds கூலிங்க்லாஸ் மற்றும் Reid & Taylor க்கு மூன்று மணி நேர விளம்பரம் என்று யாரோ கமெண்ட் அடித்தார்கள்...