14.1.08

சல்லிக்கட்டு வழக்கும் நானும்!

இன்று தமிழகத்தின் முக்கிய செய்திகளில் ஒன்றாக அலசப்படும் சல்லிக்கட்டு வழக்கு, கடந்த 2006ம் ஆண்டு மாட்டு வண்டிப் பந்தயத்திற்கு (Rekla Race) அனுமதி கிடையாது என்று காவல்துறை வெளியிட்ட ஒரு சுற்றறிக்கையில் தொடங்கியது.

தொண்ணூறுகளில் கோவாவில், சூதாட்டத்திற்காக மாடுகளை மோதவிட்டு நடைபெறும் காளை சண்டையினை (bull fight) எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அதனை தடை செய்து மும்பை உயர்நீதிமன்றத்தின் கோவா கிளை உத்தரவிட்டிருந்ததை, சுற்றறிக்கைக்கு காரணமாக கூறப்பட்டிருந்தது.

இதனால் தமது கோவில் குடமுழுக்கு விழாவில் நடத்த உத்தேசித்திருந்த மாட்டு வண்டி பந்தயத்திற்கு அனுமதி வேண்டி, ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்த கரிசல்குளம் பஞ்சாயத்து தலைவர் நமது உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையினை அணுகினார். வழக்கினை விசாரித்த நீதிபதி.பானுமதி விலங்குகள் பால் அன்பு கொண்டவர். விலங்குகள் குறித்தான சட்டங்களைப் பொறுத்து மேனகா காந்தி அவர்கள் தொகுத்துள்ள புத்தகம் ஒன்றினை துணைக்கு வைத்துக் கொண்டு மாட்டு வண்டிப் பந்தயம் என்ன சல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு மற்றும் விலங்குகளை துன்புறுத்தும் அனைத்து வகையான போட்டிகளையும் அரசு தடை செய்ய மார்ச்’2006ல் உத்தரவிட்டார்.

ஆனால், இந்த வழக்கில் நீதிபதி தான் வழங்கும் தீர்ப்பானது ஏறக்குறைய பொதுநல வழக்கினை ஒத்திருப்பதாக உணரவில்லை. அவ்வாறு உணர்ந்திருந்தால், வழக்கினை அதன் முக்கியத்துவம் கருதி ஒன்றுக்கும் மேற்ப்பட்ட நீதிபதிகள் விசாரிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதியினை வேண்டியிருப்பார். மேலும், இதே போன்றதொரு வழக்கில் மற்றொரு நீதிபதி அனுமதி அளித்து உத்தரவிட்டதை நீதிபதி அறிந்திருந்தும், அதற்கு எதிர்மாறான தீர்ப்பினை அளித்தது சட்டப்படி சரியல்ல. அவ்வாறான நிலைமையிலும் அவர் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட நீதிபதிகளால் வழக்கு விசாரிக்கப்பட வேண்டும் என்றே கூறியிருக்க வேண்டும்.

முக்கியமாக, அரசு தரப்பு எவ்வித வாதத்தினையும் வைக்காத நிலையிலும் மனுதார் தரப்பிலும் பெரிய அளவில் எவ்வித வாதமும் புரியப்படாத நிலையிலும், வழக்கின் எல்லைகளை மீறி, நீதிபதி ஏறக்குறைய தனது சொந்த எண்ணங்களை தீர்ப்பாக எழுதியது எவ்வளவு தூரம் சரியென்று தெரியவில்லை.

a judge is entitled to have his own opinion on an issue before him but the same will become a judgment only if the same is placed before the court and tested by an adverse opinion’ என்று பின்னர் இரு நீதிபதிகள் முன் நடந்த வாதத்தில், இதனை மனதில் வைத்தே நான் குறிப்பிட்டேன்.

***

2006 டிசம்பர் வரை தூங்கிய பிரச்னை, பொங்கல் நெருங்கவும் விழித்தது. சல்லிக்கட்டு நடத்தும் பலரும் அனுமதி வேண்டி பொதுநல வழக்காக இரு நீதிபதிகள் முன்பு வழக்கு தாக்கல் செய்ய, அலங்காநல்லூருக்காக நானும் ஒரு வழக்கு தாக்கல் செய்தேன். இதே வேளையில் சம்பந்தப்பட்ட மக்களின் நாடித்துடிப்பை உணர்ந்த அரசு, சல்லிக்கட்டு நடத்த வேண்டி தானும் உதவ முன் வந்தது. இந்தக் கால கட்டம் வரை சல்லிக்கட்டு என்பது, நீதிபதிகள், வழக்குரைஞர்கள் அனைவராலும் எதிர்மறை உணர்விலேயே அணுகப்பட்டு, சல்லிக்கட்டினை நீதிமன்றத்தினால் அனுமதிக்கவே முடியாது எண்ணமே இருந்தது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல!

ஆயினும் இவ்வித பின்வாங்கும் (defensive) எண்ணத்தினை கைவிட்டு முன்னேறும் (offensive) எண்ணத்தினை என்னுள் விதைத்தது, சுமார் இருபது வருடங்களுக்கு முன்னர் எனது நண்பரின் ஊரில் நான் பார்த்த சல்லிக்கட்டும், ராஜநாராயணனின் ‘கோபல்ல கிராமம்’ நாவலும்.

***

முதன் முதலில் சல்லிக்கட்டினை பார்த்த எனக்கு ‘இவ்வளவுதானா’ என்றிந்தது. சல்லிக்கட்டானது திரைப்படங்களாலும், ஊடகங்களாலும் காட்டப்படும் வகையில் மாட்டின் கொம்பினைப் பிடித்து அதனை சாய்ப்பதல்ல...யதார்த்தமாக திரைப்படம் எடுப்பதாக கூறப்படும் கமல்ஹாசனின் விருமாண்டி படத்திலேயே அவர் மாட்டினை அடக்கும் காட்சி நகைப்பிற்குரியதாக இருக்கும்.

மாறாக திட்டி வாசலில் இருந்து அவிழ்த்து விடப்படும் மாடானது சுமார் 30 முதல் 50 அடி அகலமுள்ள மைதானம் வழியாக ஓட வேண்டும். அவ்வாறு ஓடும் மாட்டின் கொம்பினை ஒரு கையாலும், திமிலை மற்றொரு கையாலும் அணைத்துப் பிடித்தவாறு மாடுபிடி வீரர் குறிப்பிட்ட தூரம் (சுமார் 50 அடி) ஓட வேண்டும். இதனை அணைவது என்கிறார்கள்.

பொதுவாக மாட்டின் கொம்பில் பரிசினை கட்டுவதில்லை. திட்டி வாசலிலேயே அறிவிப்பாளரின் கையில் மாட்டிற்கான பரிசானது கொடுக்கப்படும். மாட்டினை அணைந்த வீரர் திரும்பி ஓடி வந்து பரிசினை பெற்றுக் கொள்கிறார். பல சமயங்கள் மாட்டினை அணைய முடியாது. அப்பொழுது மாடு வென்றதாக அறிவிக்கப்பட்டு பரிசு மாட்டின் உரிமையாளரிடம் கொடுக்கப்படும்.

சில மாடுகள் ஓடாமல், சடக்கென திரும்பி ‘வா ஒரு கை பார்க்கலாம்’ என்றவாறு திரும்பி நிற்கும். அப்பொழுது மட்டுமே விளையாட்டு சூடு பிடிக்கும்.

இந்த சமயத்தில்தான் ‘கோபல்ல கிராமம்’ நாவலில் ஒரு இடத்தில் தங்களது கிராமத்தினை ஏற்ப்படுத்திய பின்னர், நாயக்கர்கள் காடுகளில் திரியும் மாடுகளை பிடித்து வர வாலிபர்களை அனுப்புவார்கள் என்று படித்தது நினைவுக்கு வந்தது. ஆக, அணைவது என்பது மாட்டினை பிடித்து தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதுதானே தவிர காளையோடு சண்டையிடுவது அல்ல என்று அனுமானித்தேன்

***

இதற்குப் பின்னர் வழக்கினை எடுத்துச் செல்வது சிரமமாக இருக்கவில்லை. விரைவில் பொங்கல் வருவதால், வழக்கினை இடைக்கால உத்தரவிற்காக நீதிமன்றம் எடுத்துக் கொண்டது. அரசும் நிலைமையின் தீவிரம் கருதி விளக்கமாக, எங்களது மனுவினை ஒட்டி மேலும் பல தகவல்களுடன் தனது எதிர்மனுவினை தாக்கல் செய்திருந்தது.

எங்களது வழக்குகளோடு, சல்லிக்கட்டினை படம் வரையப் போய் மாட்டினால் குத்தப்பட்டு இறந்து போன ஒரு ஒவியரின் தந்தை இதனை தடை செய்ய வேண்டும் என்று தாக்கல் செய்த வழக்கும் எடுத்துக் கொள்ளப்பட்டது. திடீரென, விலங்குகள் நல வாரியம் (Animal Welfare Board) வழக்கில் தன்னை இணைத்துக் கொண்டு, மடிக்கணணி, புகைப்படங்கள், பத்திரிக்கைச் செய்திகள் முதலியவற்றுடன் சல்லிக்கட்டினை தடை செய்ய வேண்டும் என்று கோரியது. அவற்றை பரிசீலிக்கும் எவருக்கும் ‘ஆஹா இத்தனை ரத்தம் சிந்துதலா’ என்று இருக்கும்.

***

விலங்குகள் நல வாரியத்தின் வாதம், ‘ சல்லிக்கட்டிற்காக மாடுகள் சாராயம் கொடுக்கப்பட்டும், மிளகாய் பொடி தூவப்பட்டும், வால்கள் முறுக்கப்பட்டும் வெறியேற்றப்படுகின்றன. திட்டிவாசலில் இருந்து கிளம்பும் மாடும் உதைக்கப்பட்டும் அடிக்கப்பட்டும், வால்கள் பிடித்து இழுக்கப்பட்டும் துன்புறுத்தப்படுகின்றன. எனவே, விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் (The Prevention of Cruelty to Animals Act’1960) பிரிவு 11 (a) மீறப்படுகிறது என்பதாகும். அந்தப் பிரிவு கூறுவதாவது...
If any person beats, kicks, over-rides, over-drives, over-loads, tortures or otherwise treats any animal so as to subject it to unnecessary pain or suffering or causes or being the owner permits any animals to be so treated........he shall be punishable

***

எங்களது தரப்பு வாதம் அரசின் வாதத்தை ஒட்டியே அமைந்திருந்தது. எத்தனையோ நூற்றாண்டுகளாக எங்கள் கலாச்சாராத்தோடு ஒட்டியுள்ள இந்தப் போட்டியினை முழுவதுமாக தடை செய்வது தேவையற்றது. ஆதிகாலத்தில் மாடுகளை தன்னுடன் இசைந்து வாழும் நோக்கத்துடன், அதனை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் திறமையினை வெளிப்படுத்தும் ஒரு போட்டியானது, இன்று மனிதர்களை காவு வாங்கும் ஒரு வருடாந்திர நிகழ்ச்சியாக போனது உண்மைதான். ஆனால் அரசு மட்டும் மனது வைத்தால், தகுந்த கட்டமைப்பு வசதிகளை (infrastructure facility) ஏற்ப்படுத்தி தர முன் வந்தால் தமிழர்களின் நாகரீகத்தினையும், கலாச்சாரத்தினையும் பறைசாற்றும் ஒரு நிகழ்ச்சியாக உலகின் முன் வைக்க முடியும்.

‘பலரும் நினைப்பது போல சல்லிக்கட்டில் உயிரிழப்பவர்கள், பெரும்பாலும் பங்குபெரும் வீரர்கள் அல்ல. வீரர்கள் மாடுகளோடு பழகி தகுந்த பயிற்சி பெற்றவர்கள். மாட்டின் கொம்பிலிருந்து தப்பிக்கும் லாவகம் அறிந்தவர்கள். போட்டி நடைபெறும் இடத்திற்கும் பார்வையாளர்களுக்கும் இடைவெளி ஏதும் கிடையாது என்பதால் பார்வையாளர்களே பெரும்பாலும் குத்தப்படுகிறார்கள். இவ்வாறாக மைதானத்திற்குள் குவிபவர்கள், ஜாலிக்காக சரக்கடித்து வரும் கிராமத்து இளைஞர்கள். இவர்களே பய உணர்வு ஏதும் இன்று மாடுகளின் மீது விழுபவர்கள். இவர்களை விலக்கி, மாடுபிடி வீரர்களுக்கு தகுந்த மைதானத்தினை ஏற்ப்படுத்திக் கொடுத்தால் உயிரிழப்புகளை தவிர்ப்பது இயலும்’

அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட உயர்நீதிமன்றம் 2007 பொங்கலை ஒட்டி சல்லிக்கட்டு நடத்த அனுமதி கொடுத்தது. எங்களது வாதத்தினை ஒட்டி பார்வையாளர்களுக்கு தடுப்புச் சுவர் (barricade) கட்டப்பட்டது. இதனால் கடந்தமுறை அலங்காநல்லூரில் உயிரிழப்பு ஏதும் இல்லை. போட்டியாளர்களுக்கு தனி உடை வழங்கப்பட்டது. ஆயினும், இதுவும் போதாது என்பது எனது எண்ணம். குறிப்பிட்ட எண்ணிக்கையில் முறை வைத்து போட்டியாளர்களை அனுமதிக்கலாம். ஏனெனில் அதிகமாக போட்டியாளர்கள் இருப்பதும் குழப்பம் விளைவிக்கிறது.

***

எங்களது முக்கியமான மற்றொரு வாதம், ‘சல்லிக்கட்டு அதன் உண்மையான வடிவில் நடத்தப்பட்டால், உலகில் விலங்குகள் சம்பந்தப்படுத்தி மனிதன் நடத்தும் அனைத்து போட்டிகளிலும் நாகரீகமிக்கது’ என்பதாகும்.

‘குறிப்பாக, காளைகள் சம்பந்தப்படுத்தி நடைபெறும் அனைத்து போட்டிகளிலும் காளைகள் கொல்லப்படுகின்றன அல்லது காயப்படுத்தப்படுகின்றன. ஸ்பெயினில் மனிதர்களை குறுகலான சந்துகள் வழியாக காளைகள் துரத்தும் போட்டிகளிலேயே சிமிண்ட் தரையில் ஓடுவதால் காளைகள் விழுந்து கால்களை முறித்துக் கொள்கின்றன.

ஆனால், சல்லிக்கட்டின் இன்றைய நிலையிலேயே காளைகளுக்கு காயம்படுவதில்லை. காளைகளுக்கு சாராயம் கொடுப்பதும், துன்புறுத்தி தயார்ப்படுத்துவதும் மாடுகளை தகுந்த மருத்துவரின் சோதனைகளுக்கு உட்படுத்துவதன் மூலம் தடுக்க முடியும். குதிரைப் போட்டிகளில், குதிரைகளுக்கு ஸ்டெராய்ட் கொடுக்கப்பட்ட நிகழ்ச்சியும் நடந்ததே!

மற்றபடி போட்டியாளர்கள் மட்டுமே மைதானத்தில் அனுமதிக்கப்படுகையில் மற்ற அடித்தல், உதைத்தல் மாட்டின் மீது கும்பலாக பாய்ந்து அமுக்குதல் அனைத்தையும் தடுப்பது சுலபம். விதிகளை மீறி மாட்டினை பிடிக்கும் வீரர்களை வெளியேற்றலாம்.

மாட்டினை அணைவதும், விலங்குகளை துன்புறுத்துதல் என்று கூறமுடியுமா? சட்டமே தேவையற்ற வலி என்றுதானே கூறுகிறது.’.

இதற்கு பதிலளித்த விலங்குகள் நல வாரிய வழக்குரைஞர், ‘துன்புறுத்துதல் (cruelty) என்பது ஒரு விலங்கானது தனது இயற்கையான சூழலில் செய்யாத ஒரு செயலை செய்ய வைப்பது’ என்றார். போனவாரம் நான் சந்தித்த உச்ச நீதிமன்ற வழக்குரைஞர்களும் ‘எந்த மாடு தன்னை இவ்வாறு திட்டிவாசலில் இருந்து ஓட வைப்பதை விரும்பும்?’ என்றார்.

அன்று நான் ‘எந்த நாய் தன்னை ரிப்பன் கட்டி அலங்கரிக்க விரும்புகிறது. எந்த குதிரை தன் மீது ஒரு மனிதன் அமர்ந்திருக்க ஓட விரும்புகிறது. ஏன், The Performing Animals (Registration) Rules’2000 பந்தயத்தில் ஒரு குதிரையினை எட்டு முறை அடிக்கலாம் (whip) என்று அனுமதிக்கிறதே, அது துன்புறுத்துதல் இல்லையா? விலங்கு நல வாரியம் வேண்டுமானால் நகரங்களுக்கு சென்று குதிரைப் பந்தயம், நாய்க்காட்சி போன்றவற்றை நிறுத்தட்டுமே பார்க்கலாம்’ என்றேன்.

வருந்த வைத்த ஒரு விஷயம், விலங்கு நல வாரிய வழக்குரைஞரிடம் இருந்து உச்ச நீதிமன்றத்தில் எங்களுக்காக வாதாடிய வழக்குரைஞர் வரை, சல்லிக்கட்டில் மத உரிமை அடங்கியுள்ளதை ஒத்துக் கொள்ளவே மாட்டோம் என்பதுதான்.

‘சல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்று கீதையிலும் சொல்லவில்லை, பைபிளிலும் சொல்லவில்லை, குரானிலும் சொல்லவில்லை’ என்று மதுரையில் வாதிடப்பட்டதுதான் வேடிக்கை!

***

ஒரு நாள் முழுவதும் வாதங்களை கேட்ட நீதிபதிகள் 2007ம் வருடம் சல்லிக்கட்டினை அனுமதித்து இடைக்கால அனுமதி வழங்கினர். பின்னர் இறுதி விசாரணையிலும் அதே வாதமே புரியப்பட்டது. நீதிபதிகள் சல்லிக்கட்டின் தற்பொழுதைய நிலையில் துன்புறுத்துதல் இருப்பது உண்மைதான் எனினும், இதனை கட்டுப்படுத்த இயலும் என்று கூறி இதற்கான விதிமுறைகளை வகுக்க அரசினை பணித்தது. வழக்கம் போல இதனை கிடப்பில் போட்ட அரசு இன்று.... உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு (review) மனு தாக்கல் செய்து கொண்டு ஒரு அதிசயம் நிகழுமா என்று பார்த்தவாறு இருக்கிறது. தீர்ப்பின்படி அரசு விதிகளை வகுத்திருந்தால், இன்று அலங்காநல்லூரில் சல்லிக்கட்டு நடத்த முடியாத சூழல் ஏற்ப்பட்டிருக்காது.

***

யாரும் எதிர்ப்பார்க்கவில்லை, வாரியம் உச்ச நீதிமன்றம் செல்லும் என! ஆனால், அவர்கள் இப்படி செய்திருக்கக் கூடாது. சம்பந்தப்பட்ட யாரையும் எதிர்மனுதாரர்களாக சேர்க்காமல் அரசினையும், சல்லிகட்டு வேண்டாம் என்று கூறியவரையும் மட்டுமே சேர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஒரு மேல் முறையீடு! அதில் ஒரு எக்ஸ்பார்ட்டி இடைக்கால தடை!!

எனவே வழக்கில் தங்களை இணைத்துக் கொள்ளவே சம்பந்தப்பட்டவர்கள் ஒரு மனு தாக்கல் செய்ய வேண்டி வர, அரசு மட்டுமே தடையை நீக்க மனு செய்ய வேண்டிய நிலை!

சல்லிக்கட்டின் வரலாற்றினை எடுத்து வைக்க யாரும் இன்றி, ‘காட்டுமிராண்டித்தனம்’ என்று தலைமை நீதிபதி கூற என்னுடன் வந்த அலங்காநல்லூர் நண்பர் கொதித்துப் போனார். மீண்டும், இத்தனை நபர்கள் இறந்து போனார்கள் என்ற தகவல் மட்டுமே வைக்கப்பட தடையை நீக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். கவனமாக வளர்த்த மரம் சடாரென வெட்டப்பட்டது போல உணர்ந்தோம்.

இனி, இறுதி விசாரணையில் மட்டுமே, சல்லிக்கட்டினை ஒரு முறையான போட்டியாக மாற்றி, அதன் பாரம்பரியத்தினை காப்பாற்ற இயலும் என்ற வாதத்தினை நீதிபதிகள் புரியும் வண்ணம் வைத்தல் இயலும்.

வேடிக்கை, வழக்கின் முடிவில் திடீரென தலமை நீதிபதி, ‘வேண்டுமானால், மாட்டு வண்டி பந்தயம் நடத்திக் கொள்ளுங்கள்’ என்று கூறி வழக்கில் சம்பந்தமே இல்லாத ரேக்ளா பந்தயத்திற்கு ஒரு வரியில் அனுமதி கொடுத்து விட்டார்.

உண்மையில் ரேக்ளா பந்தயத்தில், மாடு படும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல. அங்கே மேனகா காந்தி தீர்ப்பினைப் பார்த்து பொறுமிக் கொண்டிருக்கிறார்.

ரேக்ளா பந்தயத்தின் முடிவில் மாடுகள் நாக்கு தள்ளிப் போய், மரணத்தை எட்டிப் பார்த்து திரும்புகின்றன. மஞ்சுவிரட்டில், மாடுகளை ஊருக்குள் அவிழ்த்து விட்டு அவற்றை வாலிபர்கள் துரத்துகிறார்கள். துரத்துபவர்கள் களைப்படைந்தால், வேறு குழு தொடர்ந்து துரத்தும். இங்கும் மாடு முழுமையாக களைப்படைந்து, கடுமையான துன்பம் அனுபவிக்கும்...

ஆனால் சல்லிக்கட்டினை திறமையை வெளிப்படுத்தும் ஒரு கிராமப் போட்டியாக உருவாக இயலும் என்பது எனது தனிப்பட்ட கருத்தும் கூட!

மதுரை
14.01.08


விலங்கு ஆர்வலர்களுக்கு மேனகா காந்தியின் பின் செல்லும் ஆபத்து புரியவில்லை. மும்பையில் இருக்கையில் குஜராத்தி அமைப்பு ஒன்றின் விருதினை மேனகா அவர்கள் பெரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரிட்டது. மேனகா தனது பேச்சின் நடுவே, ‘பசுவின் பாலைக் குடிப்பது அதன் இரத்தத்தை அருந்துவது போன்றது. நான் எனது மகனுக்கு இதுவரை பசும் பாலோ, பால் பொருட்களோ கொடுத்ததேயில்லை’ என்றார்

அமுல் மாநிலத்தவர்களுக்கு மயக்கமே வந்து விட்டது!

34 comments:

Anonymous said...

பசுவின் பாலைக் குடிப்பது அதன் இரத்தத்தை அருந்துவது போன்றது. நான் எனது மகனுக்கு இதுவரை பசும் பாலோ, பால் பொருட்களோ கொடுத்ததேயில்லை’ என்றார்


They are called vegans.They shun
milk and dairy products and leather
products.There are substitutes for milk like soyamilk. In fact soyamilk is much better than
milk in terms of proteins.In India
soyamilk is expensive and hence
it is not popular. In Europe and
USA it is affordable.

Anonymous said...

சல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்று கீதையிலும் சொல்லவில்லை, பைபிளிலும் சொல்லவில்லை, குரானிலும் சொல்லவில்லை’ என்று மதுரையில் வாதிடப்பட்டதுதான் வேடிக்கை!

Funny indeed, btb do they say anything against Jallikattu. There
is more to a culture than what
scriptures and holy books say
and dont say.I think Animal
Welfare Board has acted smartly
in this case.

Gopalan Ramasubbu said...

இந்த வழக்கை உதாரணமாக வைத்து பட்டுப் பூச்சிகளைக் கொல்லக் கூடாது என்று வழக்குப்போட முடியுமா? வழக்குப் போட்டு பட்டு உற்பத்தியை நிறுத்த முடியுமா? இறைச்சிக்காக மாடுகளையும் மற்ற உயிரினங்களையும் வெட்டுகின்றனர்..ஏன் மீன் பிடித்தொழிலை எடுத்துக் கொள்ளுங்கள்.. மீன் என்ன தானாகவா வந்து வலையில் மாட்டுகிறது?இவை குறித்தான உச்ச நீதி மன்றத்தின் அனுகுமுறை என்னாவாக இருக்கும்?

எரிச்சலாக இருக்கிறது.

Gurusamy Thangavel said...

Sorry for not typing in Tamil. The current genere of socalled gentle men game - cricket - evolved overtime. It is the duty of tamils, especially learned people like you, to make the SC judges to understand 'Sallikattu'. Thank you for sharing your first hand experience with this issue.

Voice on Wings said...

//ரேக்ளா பந்தயத்தின் முடிவில் மாடுகள் நாக்கு தள்ளிப் போய், மரணத்தை எட்டிப் பார்த்து திரும்புகின்றன. மஞ்சுவிரட்டில், மாடுகளை ஊருக்குள் அவிழ்த்து விட்டு அவற்றை வாலிபர்கள் துரத்துகிறார்கள். துரத்துபவர்கள் களைப்படைந்தால், வேறு குழு தொடர்ந்து துரத்தும். இங்கும் மாடு முழுமையாக களைப்படைந்து, கடுமையான துன்பம் அனுபவிக்கும்...//

நன்றி.

TBCD said...

எப்போதும்மே தும்பை விட்டு வாலைப் பிடிப்பதே வேலையாகி விட்டது, தமிழக அரசுக்கு

தகவலுக்கு நன்றி. !!

சல்லிக்கட்டு தான் இன்று ஜல்லிக்கட்டாக இருக்கிறது. முன்பு, மாட்டின் கொம்பில், நகை, காசுகள் முடிந்து வைத்து, போட்டிக்கு அனுப்புவார்களாம்..

Kasi Arumugam said...

பல விசயங்கள் இப்போதுதான் புரிந்ததன. எளிமையாக விளக்கியதற்கு நன்றி, பிரபு ராஜதுரை.

Kasi Arumugam said...

சல்லிக்கட்டு சம்பந்தமான பல விசயங்களை இப்போதுதான் முழுமையாகப் புரிந்துகொண்டேன். நன்றி வக்கீல்சார்.

முனைவர் மு.இளங்கோவன் said...

வணக்கம்.
தமிழர்கள் வாழ்க்கையில் மாடுபிடித்தல்
வழக்கம் நீண்ட காலமாக இருப்பதை
என் பதிவில் இட்டுள்ளேன்.அன்பு
கூர்ந்து காணவும்.தங்கள் பதிவு சிறப்பு.
மு.இளங்கோவன்
www.muelangovan.blogspot.com

மு. சுந்தரமூர்த்தி said...

பதிவுக்கும், வழக்கில் உங்கள் பங்குக்கும் நன்றி பிரபு. விரிவான பின்னூட்டம் அல்லது தனிப்பதிவுடன் பிறகு வருகிறேன்.

மு. சுந்தரமூர்த்தி said...

பதிவுக்கும், வழக்கில் உங்கள் பங்குக்கும் நன்றி பிரபு. விரிவான பின்னூட்டம் அல்லது தனிப்பதிவுடன் பிறகு வருகிறேன்.

அரை பிளேடு said...

தடை நீக்கப்பட வேண்டும். பாரம்பரிய ஜல்லிக்கட்டு பாதுகாப்பாக நடத்தப் பெறுதலை அரசு உறுதி செய்ய வேண்டும்.

நல்ல கட்டுரை.
நன்றி.

Doctor Bruno said...

மனிதனின் உயிருக்கு ஆபத்து என்றால் - கார் ரேஸ், பைக் ரேஸ், பங்கி ஜம்ப் போன்ற விளையாட்டுக்கள் மிகவும் ஆபத்தானவை....

ஏன் விமானப்படை சாகஸம் (அதுவும் கடற்கரையில் ஆயிரக்கணக்கில் மக்களை வைத்துக்கொண்டு) ஆபத்தில்லையா ???

மாடுகளின் மேல் அக்கறை என்றால் --> ஜல்லிக்கட்டு மாடுகளை எவ்வளவு பிரியத்துடன் (?? பக்தியுடன்) வளர்க்கிறார்கள் ..... இது தடை செய்யப்பட்டால் இந்த மாடுகள் கொல்லதிற்கு லாரியில் (அதுவும் ஒரே லாரியில் 50 மாடுகள்) அனுப்ப பட வாய்ப்பு உள்ளதே
-----
தாங்கள் கூறியது போல் பார்வையாளர்களை பத்திரப்படுத்தினால் போதும்
-----

வீரர்களுக்கு காயம் பட வாய்ப்புள்ளது. ஆனால் முறையான சிகிச்சை அளித்தால் உயிர் இழப்பை தவிர்க்கலாம்.

------
நான் மதுரையில் எலும்பு முறிவு துறையில் இருந்தபோது கவனித்ததில்
மாடு குத்தி உடன் இறப்பவர்கள் குறைவு..(உடனடியாக / முறையான வைத்தியம் பார்க்காததால்) அந்த புண் செப்டிக் ஆகி சீழ் வைத்து அவதிப்படுபவர்களே அதிகம்

வீரர்கள் 6 மாதங்களுக்கு முன்னர் tetanus toxoid + போட்டிக்கு முன்னர் prophylactic anaerobic,G+ve,G-ve antibiotics ஊசி / மாத்திரை கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும் என்று விதி கொண்டு வந்தால் பெறும்பாலான உயிர் இழப்புக்களை தவிர்க்கலாம்.

-/சுடலை மாடன்/- said...

பல தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது. சட்டப்பூர்வமான உங்களது அணுகுமுறையையும், பங்கையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

நன்றி - சொ. சங்கரபாண்டி

cheena (சீனா) said...

நல்லதொரு பதிவு. நல்லதொரு முடிவினை எதிர் பார்க்கிறோம்.

தமிழ் சசி | Tamil SASI said...

நல்ல பதிவு. பல விடயங்களை தெளிவுபடுத்தியது.

ஜல்லிக்கட்டு என்றில்லாமல் மாட்டுப்பொங்கல் அன்று எல்லா ஊர்களிலும் மாடுகளுக்கு பொங்கலிட்டு பிறகு மாடுகளை துரத்துவார்கள். சிறிய வயதிலேயே இந்த முரண்பாடு என்னை உறுத்தும். மாடுகளுக்கு நன்றி செய்யும் பொருட்டு மாட்டுப் பொங்கல் கொண்டாடி விட்டு பிறகு மாடுகளை துரத்துவதில் இருக்கும் முரண்பாடு குறித்து யாரும் கவலைப்பட்டதில்லை. மாடுகளை ஊர்வலமாக அழைத்து செல்வது போன்ற ஏதேனும் இருந்தால் மாட்டுப்பொங்கலுக்கு ஒரு அர்த்தம் இருக்கும்.

மாடுகளை துரத்துவது கூட நம் பழக்க வழக்கங்கள் காலப்போக்கில் சிதைந்து போனதன் அடையாளம் என்று தான் எனக்கு தோன்றுகிறது.

ஜல்லிகட்டு மீதான தடையை எதிர்த்தாலும், நம் பழக்க வழக்கங்களை மறுபடியும் சீர்தூக்கி கொள்ளும் வாய்ப்பாகவும் வைத்துக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது. சில மாற்றங்களுடன் ஜல்லிக்கட்டு தொடர வேண்டும். ஜல்லிக்கட்டு என்றில்லாமல் மாடுகளை துரத்தும் பழக்கங்களும் மாற்றம் பெற வேண்டும்.

பாரதிய நவீன இளவரசன் said...

மிக நல்ல பதிவு.

பசுவின் பாலைக் குடிப்பதாகட்டும் மாட்டைத் துரத்துவதாகட்டும் எல்லாவற்றையுமே blue cross கண்களில் பார்த்தால் வேறுவிதமாகத்தான் தெரியும்.

தடை நீங்கி, ஜல்லிக்கட்டு பாதுகாப்பாக நடைபெறுதலையே எல்லோரும்போல நானும் விரும்புகிறேன்.

இராம.கி said...

சல்லிக் கட்டு / மஞ்சு விரட்டு பற்றிச் சரியான புரிதல் இல்லாமல் பலரும் எழுதிக் கொண்டு இருக்கிறார்கள். உச்ச நயன்மை மன்றமும், இன்னதென்று விலங்காமலேயே தீர்ப்புச் சொல்ல முற்படுகிறது.

தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் போக்கு தமிழனுக்கும், தமிழக அரசுக்கும் விரவிக் கிடக்கிறது.

நுணுக்கங்களைப் புரிய வைத்ததற்கு நன்றி. மஞ்சு விரட்டு நடைமுறையில் ஓர் ஒழுங்கைக் கொண்டு வந்து அதை நடத்த வைக்கலாம்.

செய்ய விடுவார்களோ?

அன்புடன்,
இராம.கி.

PRABHU RAJADURAI said...

எதிர்வினைகளுக்கு நன்றி!

இங்கு என்னை மிகவும் கவர்ந்த விடயம், உயர்நீதிமன்றத்தில் எங்களது வாதத்தின் சாரம் முத்து தமிழினி, தமிழ்சசி மற்றும் முனைவர் இளங்கோவன் ஆகியோரின் பதிவில் கூறப்பட்ட விடயங்களைப் பொறுத்தே அமைந்தது.

எனது சல்லிக்கட்டு அனுபவம் தமிழினி முத்துவின் அனுபவத்தை ஒத்திருந்தது...

உச்ச, உயர்நீதிமன்றத்தில் வாதிட்டவர்கள், நீதிபதிகள் ஆகியோர்களில், நானறிந்த வரை என்னைத்தவிர யாரும் சல்லிக்கட்டினை பார்த்ததும் கிடையாது. அணைவது என்றால் என்னவென்றும் தெரியாது!

பிரச்னை, அநேக கிராமங்களில் காவலர்களால் கட்டுப்பாடு ஏதுமின்றி சல்லிக்கட்டு நடத்தப்பட்டு உயிர்ச்சேதம் ஆகிறது. எனவே தகுந்த சட்டம் மூலம் தடுக்கப்பட வேண்டும்.

இந்த நிமிடம் உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு விசாரிக்கப்பட்டு வருகிறது. அலங்காநல்லூர் மற்றும் பாலமேட்டில் இந்த வருடம் அனுமதிக்கப்படும் என பட்சி கூறுகிறது:-))

முத்துகுமரன் said...

விரிவான தகவல்களுடன் எழுதி இருக்கிறீர்கள். மிகவும் நன்றி. பட்சி சோன்னது போல்சில கட்டுபாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது :-)

ராஜ நடராஜன் said...

நல்ல தகவல்.ஆனால் நமது சட்டங்கள் நமது வாழ்க்கையின் ஒரு அங்கம்.பல்முனைப் பார்வையில்லா தீர்ப்பு வருத்தமே அளிக்கிறது.

ராஜ நடராஜன் said...

தடை நீக்கம் தகவல் அறிந்தேன்.உங்கள் பதிவின் நேர்,எதிர் விவாதங்களின் பார்வைக்கு மீண்டும் நன்றி.

Sridhar Narayanan said...

நல்ல பதிவு. தடை நீக்க உத்தரவும் வந்து விட்டது.

ஆச்சர்யம் என்னவென்றால், அரசு தனது சார்பான விவாதத்தில் 'பாதுகாப்பான நடவடிக்கைகளுடன்' இதை தொடர்ந்து நடத்துவதை பரிந்துரைத்ததா என்று தெரியவில்லை. பாதுகாப்பான நடைமுறைபடுத்தலுக்கு பொறுப்பேற்றிருந்தால் இன்னும் வலுவாகவும் நியாயமாகவும் இருந்திருக்கும் என்று படுகிறது.

உங்கள் பதிவுக்கு நன்றி

Sundar Padmanaban said...

அண்ணாத்தே,

விவரங்களுடன், அருமையான பதிவு. மிக்க நன்றி.

மாடு அணையும் விளையாட்டை கண்ட இடங்களில் வைத்துக் கேவலமான முறையில் நடத்தாமல் - அரசு செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்காமல் - மக்கள் குழு அமைத்து தனியார் நிதி பங்களிப்புடன் - விளையாட்டு மைதானம் போன்ற இடங்களில் பாதுகாப்பான முறையில் அனைத்து வசதிகளுடன் (பொதுமக்கள் மைதானத்தில் அனாவசியமாக இறங்காவண்ணம் தடுப்பு, மாடுகளை மைதானத்திற்குப் பாதுகாப்பாகக் கொண்டுவந்து திரும்ப அவற்றின் இடங்களுக்குக் கொண்டுபோய்விட போக்குவரத்து வசதி, மருத்துவ பரிசோதனை - மாடுகளுக்கும் அணைபவர்களுக்கும் - சீரான முறையில் மாடுகளை மைதானத்தில் திறந்து விட ஏற்பாடும், போட்டியாளர்களுக்குத் தேவையான உடை, பாதுகாப்பு ஏற்பாடுகளும் - கிரிக்கெட் விளையாடுபவர்கள் பேண்ட்டுக்குள் அப்டமன் கார்ட் வைத்துக்கொள்வது போல அணைபவர்களின் குடல் சரிவைத் தடுக்க அடிவயிற்றை மறைத்துப் பாதுகாக்க ஏதாவது பைபர் சாதனத்தைக் கண்டுபிடிக்கலாம் - பரிசு, வெற்றி பெற்றவர்கள் குறித்த முறையான அறிவிப்புகள், விபத்து ஏற்பட்டால் உடனடி செயற்பாட்டில் இறங்கி மாட்டையும் காயம் பட்டவர்களையும் உடனடியாகப் பிரித்து மைதானத்திலிருந்து அப்புறப்படுத்தி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல ஆம்புலன்ஸ் வசதியுடன் ஒரு மருத்துவக்குழு, ஊடகங்களின் பார்வை - என கிட்டத்தட்ட ஒரு நாள் கிரிக்கெட் பந்தய அளவுக்குத் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்புடன் நடத்தினால் தமிழர்களின் சல்லிக்கட்டு உலகளாவிய அளவில் கவனமும் பெருமையும் பெறும்.

மாடுகளுக்கும் அணைபவர்களுக்கும் வயது, உடல் தகுதி நிர்ணயிக்கப்படவேண்டும், கன்றுக்குட்டி, நோஞ்சான் மாடுகளை ஆட்டத்தில் சேர்க்கக்கூடாது. அதேபோல உடல் தகுதியற்ற ஆர்வக்கோளாறு, ஆர்வக்குட்டிகளையும் மாடு அணைய விடக்கூடாது.

'ஏறுகொண்டான்' போன்ற பட்டங்களை வெற்றிபெற்றவர்களுக்கு வழங்கி கெளரவம் செய்யவேண்டும்.

ரொம்பவே பேராசைப் படறேனோ?

நன்றி.

enRenRum-anbudan.BALA said...

பிரபு,
ஒரு வழக்குரைஞருக்கே உரித்தான (ஒரு விஷயத்தை) நோக்கும் திறனுடனும், நல்ல நடையுடனும் தாங்கள் எழுதிய பதிவின் வாயிலாக தெளிவான புரிதல் ஏற்பட்டது. நிறைய தகவல்கள் தந்துள்ளீர்கள் ! நன்றி.

சமயம் கிடைக்கும்போது, நான் எழுதிய பாமரத்தனமான பதிவை வாசிக்கவும் :)
http://balaji_ammu.blogspot.com/2008/01/412.html

பி.கு: உங்களது பல பதிவுகளை வாசித்திருந்தாலும், இது தான் எனது முதல் பின்னூட்டம் !
எ.அ.பாலா

மு. சுந்தரமூர்த்தி said...

பிரபு
எங்க ஊர்ப் பக்கம் "எருதுக்கட்டு" என்ற மாடுகளின் ஓட்டப்பந்தயம் தான் நடக்கும் (போன ஆண்டு எங்கள் பக்கத்து ஊரில் நடந்த மாடுவிடும் திருவிழாவில் ஒரு நண்பர் எடுத்தனுப்பிய படங்கள் சில இங்கே). ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நேரில் பார்த்ததில்லை . ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை மிகவும் நுணுக்கமாக விவரிக்கும் சி. சு. செல்லப்பாவின் 'வாடி வாசல்' குறுநாவலை வாசித்தால் நேரில் பார்ப்பதைப் போன்ற உணர்வு கிடைக்கும். எத்தனை முறை வாசித்தாலும் சலிப்பேற்படுவதில்லை. இதில் உங்கள் வாதத்துக்குத் தேவையான தகவல் ஏதாவது கிடைத்தாலும் கிடைக்கலாம்.

//இதற்கு பதிலளித்த விலங்குகள் நல வாரிய வழக்குரைஞர், ‘துன்புறுத்துதல் (cruelty) என்பது ஒரு விலங்கானது தனது இயற்கையான சூழலில் செய்யாத ஒரு செயலை செய்ய வைப்பது’ என்றார். போனவாரம் நான் சந்தித்த உச்ச நீதிமன்ற வழக்குரைஞர்களும் ‘எந்த மாடு தன்னை இவ்வாறு திட்டிவாசலில் இருந்து ஓட வைப்பதை விரும்பும்?’ என்றார்.//

இதை வாசிக்கும்போது, இன்குலாபின் கவிதை வரி ஒன்று நினைவுக்கு வந்தது: "எந்த கன்றுக்குட்டியும் பிறக்கும்போதே கழுத்தில் நுகத்தடியோடு பிறப்பதில்லை". மனிதனின் பயன்பாட்டுக்காக மாடுகளை இயற்கையிலிருந்து எவ்வளவு பிரிக்கமுடியுமோ அவ்வளவு தூரம் பிரித்தாகிவிட்டது. இனவிருத்திக்காக இயற்கையாக கிடைக்கவேண்டிய புணர்ச்சியின்பம் கூட முற்றிலும் மறுக்கப்பட்டுள்ள விலங்கினம் மாட்டினம். வேலைகளுக்கு பயன்படுத்தப்படும் காளைகள் காயடிக்கப்படுகின்றன. பசுக்கள் செயற்கை முறையில் கருத்தரிக்கவைக்கப்படுகின்றன. கன்றுக்குட்டியின் உரிமையான பாலையும் திருடிக்கொண்டு "பசு பால் கொடுக்கிறது" என்று கதைவிடுகிறோம். மனிதனைத் தவிர வேறெந்த விலங்கும் தன் தாய்ப்பாலைத் தவிர வேறு விலங்குகளின் பாலைக் குடிப்பதில்லை. பூனை, நாய் போன்ற வளர்ப்புப் பிராணிகளும் பசும்பால் குடிக்க மனிதனாலேயே பழக்கப்படுத்தப்பட்டுள்ளன. பாம்பும், பிள்ளையாரும் பால்குடிப்பது கதைகளில் மட்டும்தான். இந்த லட்சணத்தில் மாடுகளை துன்புறுத்துவது பற்றியும், அவற்றின் இயற்கையான சூழல் பற்றியும் பேசுவது வேடிக்கையாக உள்ளது.

Anonymous said...

//மனிதனின் பயன்பாட்டுக்காக மாடுகளை இயற்கையிலிருந்து எவ்வளவு பிரிக்கமுடியுமோ அவ்வளவு தூரம் பிரித்தாகிவிட்டது. இனவிருத்திக்காக இயற்கையாக கிடைக்கவேண்டிய புணர்ச்சியின்பம் கூட முற்றிலும் மறுக்கப்பட்டுள்ள விலங்கினம் மாட்டினம். வேலைகளுக்கு பயன்படுத்தப்படும் காளைகள் காயடிக்கப்படுகின்றன. பசுக்கள் செயற்கை முறையில் கருத்தரிக்கவைக்கப்படுகின்றன. //

state of american pet dogs much worse. neutered in 3 months.

சிறில் அலெக்ஸ் said...

இந்த வழக்கில் உங்கள் பங்களிப்பை பகிர்ந்ததற்கு நன்றி. வாழ்த்துக்கள்.

சன் டிவி செய்தியில் அன்றைக்கு கொஞ்சம் காண்பித்தார்கள் நீங்க சொல்றது போல கொஞ்ச நேரம் அணைபவர் மாட்டின் மீது தொங்குகிறார் மைக்கில் அனௌன்சர் 'ஆங்.. அடக்கியாச்சுப்பா' என்றார். இவ்வளவுதானா என்றிருந்தது.

சினிமா நம் கலாச்சாரங்களை ஒன்று காண்பிப்பதில்லை அல்லது தவறாகக் காண்பிக்கின்றன.

பழைய கலாச்சாரம் என்பதற்காகவே ஒரு பழக்கத்தை தொடர வேண்டும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. இவையெல்லாம் ஒழுங்காக்கப்டட்டால் இன்னும் சிறப்பாயிருக்கும்.

நம்ம ஊர் ப்ளூ கிராஸில் ஆபீஸ் பாய்க்கு என்ன மதிப்பு இருக்குமோ தெரியல.

Unknown said...

விரிவான உங்கள் பதிவுக்கும் வழக்கில் தங்களின் பங்களிப்புக்கும் நன்றி. சல்லிக்கட்டை முறைப்படுத்துவதே இப்போதைக்குத் தேவை. தடை செய்தல் முட்டாள்தனம்.

மேனகா காந்தியின் பால் பற்றிய கருத்து நகைப்புகுரியது!

Mani - மணிமொழியன் said...

//சல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்று கீதையிலும் சொல்லவில்லை//

"கீதை" மட்டுமே இந்து மதத்தின் நூல் என பேசுவது எரிச்சல் தருகிறது. கீதை ஒரு நல்ல நூல் அதற்காக, கீதையில் உள்ளது மட்டுமே இந்து கலாச்சாரமாகிவிடாது. இந்தியாவில் உள்ள ஆயிரக்கணக்கான கலாச்சாரங்கள் அத்தனையும் கீதையில் அடங்காது. கீதையில் இல்லாத மற்ற பழக்ககங்களும், பண்டிகைகளும் இந்து மதத்தில் உள்ளன. அதற்காக அதனையும் தடை செய்ய வேண்டுமா?

Anonymous said...

எனக்கு ஒரே ஒரு கேள்வி

ஏறு தழுவுதல் காலப் போக்கில் சல்லிக்கட்டு ஆகிவிட்டது.

எனக்கு ஒரே ஒரு கேள்வி, எனக்குத் தெரிந்தவரை ஏறு தழுவுதல் - ஒரு மனிதன் ஒரு காளையை அடக்குவது. இன்று நடப்பதோ ஒரு காளையை அவிழ்த்துவிட்டு அதன் மேல் அத்தனை பேர் பாய்ந்து பிடிக்க முற்படுகின்றனர்.

ஏறு தழுவுதல் வீரம், சல்லிக்கட்டு வீரமா? இதைப் போய் வீரம் என்று சொன்னால் தமிழனின் வீரத்தைக் கண்டு பார் சிரிக்காதா?

Boston Bala said...

ஞாநி: குமுதம் ஓ பக்கங்கள்!- இல் இருந்து:

ஜல்லிக்கட்டைப் பாதுகாப்பாக நடத்துவது என்பது முடியாத விஷயம் என்று நிரூபணமாகிவிட்டது. கடந்த இரு மாதங்களாகப் பல்வேறு ஊர்களில் ஏராளமான இளைஞர்கள் படுகாயமடையவும் உயிரிழக்கவும் நேரிட்டுள்ளது. ஒரு ஜல்லிக்கட்டில் காவலுக்குச் சென்ற போலீஸ் அதிகாரி கூட படுகாயமடைந்திருக்கிறார். ஜல்லிக்கட்டு போட்டிகளை பத்திரமாக நடத்துவதாக உச்ச நீதிமன்றத்தில் வாக்குறுதி கொடுத்து அனுமதி பெற்ற தமிழக அரசு, சொன்னபடி செய்யாததற்காக அதன் மீது நீதி மன்ற அவமதிப்பு வழக்கை இதுவரை யாரும் போடாமல் இருப்பது ஏன்?

Anonymous said...

இந்த வருட ஜல்லிகட்டு முடிந்து விட்டது. தென் மாவட்ட மக்கள் ஜல்லிகட்டில் பிடிபடாத காளைகளை பற்றியும் நின்று விளையாடிய காளைகளைப் பற்றியும் அவற்றை அடக்க முயன்ற மாடுபிடி வீரர்களின் வீரத்தைப் பற்றியும் ஆவலுடன் பேசிகொண்டிருக்கின்றனர். ஆனால் ஒரு தடவை கூட ஜல்லிகட்டை நேரில் பார்க்காத சிலர் டி.வியில் மட்டும் பார்த்துவிட்டு எப்படியாவது ஜல்லிகட்டை தடை செய்துவிட வேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறார்கள். வரைமுறைப்படுத்திய பிறகு இப்பொழுது ஜல்லிக்கட்டு ஒழுங்காகதான் நடந்து வருகிறது. பிறகும் ஏன் தடை செய்ய கோருகிறார்கள் என்று புரியவில்லை?

அவர்கள் ரேகா என்ற 12 வயது சிறுமி ஜல்லிக்கட்டு காளையை கொண்டு வந்ததை பார்த்திருந்தால் மதுரை மண்ணின் வீரம் புரிந்திருக்கும். வெண்மை புரட்சியின் விளைவால் அயல் நாட்டு ஜெர்சி இனம் நம் நாட்டு மாடுகளுடன் கலந்து கலப்பின கன்றுகள் தோன்றி விட்டன. இன்று காங்கயம் காளைகள் விரல் விட்டு எண்ணி விடும் எண்ணிக்கையில் தான் உள்ளன. காங்கேயம் பட்டக்காரர்களிடம் ஒரு டஜன் காளைகள் மட்டுமே உள்ளன. கிராமத்தில் இருப்பவர்கள் கூட தரமான நாட்டு காளைகளை காண முடியவில்லை.

பெரிய திமிலுடன் சிறிய குன்று போல கரிய நிறத்தில் அசைந்து வரும் காளைகளை பார்ப்பதே தனி அழகு. ஜல்லிகட்டு அன்றுதான் இவைகளை பார்க்க முடிகிறது. நாட்டு மாடுகளின் எஞ்சியிருக்கும் தரமான வீரியம் மிக்க ஜீன்கள், ஜல்லிகட்டு காளைகளின் வடிவத்தில்தான் உள்ளது. விலங்கின ஆர்வலர்கள் நல்லது செய்கிறேன் பேர்வழி என்று காளைகளின் அழிவுக்கு வழிசெய்கிறார்கள். ஜல்லிகட்டை தடை செய்து விட்டால் யாரும் மாடு வளர்க்க முன்வர மாட்டார்கள். மீதமிருக்கும் 1000க்கும் குறைவான மாடுகள் அடிமாடாக கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டு விடும்.

உலகில் அதிக கால்நடைகளை கொண்டிருக்கும் இந்தியாவில் பூர்விக தமிழ் நாட்டு மாட்டினங்கள் அழிந்து விடும். தாய்ப்பாசமே இல்லாத கலப்பின மாடுகள்தான் எஞ்சி இருக்கும். நாட்டு மாடு ஒரு நாள் கூட தன் கன்றை பிரிந்து இருப்பதில்லை. அவற்றின் தாய்ப்பாசம் நம் நாட்டுக்கே உரியது. ஜெர்சி பசுக்கள் பிறந்த அன்றைக்கே கன்றை பிரித்தாலும் 'தேமே' என்று சாப்பிட்டு கொண்டிருக்கும்.

- தினந்தோறும் ஆயிரக்கணக்கான மாடுகள் கேரளாவுக்கு இறைச்சிக்காக கடத்தப்படுகின்றன. லாரிகளில் மிகவும் நெருக்கமாக அடைத்து வைத்து கொண்டு செல்கிறார்கள்.
- அகமதாபாத்தில் பட்டம் விடும் விளையாட்டில் 9 பேர் இறந்தனர். 3000க்கும் மேற்பட்ட பறவைகள் செத்து மடிந்துள்ளன..
- கொடைக்கானல் மலையில் காட்டெருமைகள் கொல்லப்பட்டு கேரளாவுக்கு கடத்தப்பட்டு விற்கப்படுகின்றன.
- இந்திய யானைகள் கொல்லப்பட்டு தந்தம் ஜப்பானுக்கு கடத்தப்படுகிறது.
- அரிய விலங்கினங்கள் தினமும் கொல்லப்படுகின்றன.

இவற்றையெல்லாம் தட்டிக் கேட்டால் நன்றாக இருக்கும். அதை விடுத்து BLUE CROSS அமைப்பினர் ஜல்லிக்கட்டை மட்டும் விடாமல் துரத்துகிறார்கள். அனைத்து மாடுகளும் செத்து மடிந்த பிறகுதான் இவர்கள் சும்மா இருப்பார்கள் போலும்.

முஸ்லிம்கள் குர்பானி கொடுப்பதற்காக ஒட்டகங்களை ராஜஸ்தானில் இருந்து நடந்தே கொண்டு வருகிறார்கள். அதை யாராவது கேட்பார்களா?

ஆகவே அனைவரும் ஒன்று பட்டு தமிழ் நாட்டின் கலாசாரத்தையும், வீரத்தையும் அதன் பெருமை மிகுந்த காளைகளையும் காப்பாற்ற முன் வர வேண்டும்.
அப்படி இல்லையென்றால் அழகான கம்பீரமான காளைகள் அழிந்துபோய் விடும். அவற்றை வருங்கால சந்ததியினர் காகிதத்தில் மட்டும்தான் காண முடியும்.

ந. நவநீதன்
பெரியகுளம்
whynotnaveen@gmail.com

Unknown said...

முதல் தடவை பார்க்கும்போது 'இவ்வளவுதானா' என்பது போல் இருந்தது என்று எழுதி இருக்கிறீர்கள். சினிமாவில் ஒல்லியான கதாநாயகன் 10 குண்டர்களை பந்தாடுவது போல் காட்டுகிறார்கள். நிஜத்தில் அவ்வாறு நடப்பதில்லை. அதே போல் ஜல்லிகட்டையும் காண்பித்து விட்டார்கள்.

ஜல்லிகட்டை பார்க்க போவதற்கே தைரியம் வேண்டும். அப்படி போனாலும் கீழே நின்று பார்க்க தனி தைரியம் வேண்டும். திமிலை பிடித்து அணையும் வீரருடைய மன தைரியத்தை பற்றி சொல்லவே தேவையில்லை. மாட்டை தனி ஒருவராக அணைபவர்கள் முன்னர் இருந்திருக்கலாம்.

சீவலப்பேரி பாண்டி பண்ணையாருடைய மாட்டை தனியாக அணைந்ததாக சொல்வார்கள். ஆனால் இந்த நவீன காலத்திலும் நம்முடைய வீரர்கள் எவ்வளவு லாவகமாக மாடு பிடிக்கிறார்கள். அதை பார்க்கும்போது நமக்கு புல்லரிக்கத்தான் செய்கிறது.

ந. நவநீதன்
பெரியகுளம்
whynotnaveen@gmail.com