2.6.07

ஏன் நிகழவில்லை, அதிசயம்?

இந்தியாவின் சிறந்த பொருளாதார மேதைகளில் ஒருவராக கருதப்படும், பிரதமர் மன்மோகன், இன்று தனிமையில் தனக்குள்ளே சிந்திக்கும் கேள்வி இதுவாகத்தான் இருக்க முடியும். இந்தக் கேள்விக்கு விடை காண முடியாத விரக்தியிலேயே, அவர் இந்திய தொழிலதிபர்களைப் பார்த்து ‘உங்கள் லாப விகிதத்தை கொஞ்சம் குறைத்துக் கொள்ள முடியாதா?’ ‘உங்கள் நிர்வாகிகள் தங்களுக்கு வானளாவிய சம்பளம் அளித்துக் கொள்ள வேண்டுமா?’ என்று கெஞ்சும் நிலைக்கு வந்திருக்கிறார்.

ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர், மக்கள் ஆதரவு என்ற எவ்வித கட்டுப்பாடுமின்றி தனக்கு கிடைத்த சுதந்திரத்தை அன்றைய பிரதமர் நரசிம்மராவ் இன்றைய பிரதமர் மன்மோகனுக்கு அளிக்க, பின்னவரோ ‘தேங்கிக் கிடக்கும் இந்தியாவின் பொருளாதாரத்தை முடுக்கிவிடும் ஒரே வழி ‘தாராளமயமாக்கலே’ என்று முடிவெடுத்ததற்கு உத்வேகமளித்தது, ‘புதிய பொருளாதாரத்தின் பலன்கள் இந்தியாவின் கடைசி குடிமகன் வரை சென்று அடையும்’ என்ற நம்பிக்கைதான். ஆனால், செல்வத்தின் அந்த கீழ் நோக்கி கசியும் தன்மை (trickling effect) இந்தியாவில் தேவையான வேகத்தில் நிகழவில்லை என்பதே இன்றைய நிலையில் பலரது கருத்தாக இருக்கிறது.

***

நான் கண்ணுற்றுணர்ந்த ஒரு உதாரணத்தைக் கூற முடியும். எனது உறவினர், நண்பர்கள் வீடுகளுக்கு செல்கையில் பத்தாண்டுகளுக்கு முன்பிருந்ததற்கு இன்று சலவைக்கல் பதித்த தரைகள், கார், ஏர் கண்டிஷனர் என்று வாழ்க்கை வசதிகளின் முன்னேற்றம் வெளிப்படையாக தெரிகிறது. ஆனால் விவசாயத்தை தொழிலாக கொண்டிருப்பவர்களைப் பார்த்தால் குறிப்பிடத்தக்க எந்த முன்னேற்றமும் தெரிவதில்லை, அவர்கள் எத்தனை ஏக்கர் நிலங்களுக்கு சொந்தக்காரர்களாக இருப்பினும் சரி!

மன்மோகன் நினைத்தது என்ன? செல்வத்தைப் பெருக்கும் தொழிலதிபர்களால் காகித பணத்தினை சாப்பிட முடியாது...ஆனால் பணம் பெருக பெருக தேவைகளும் பெருகும். அவற்றை பூர்த்தி செய்ய அந்தப் பணம் மற்றவர்களுக்கும் வந்துதானாக வேண்டும் என்பதுதான். தண்ணீரைப் போல செல்வமும் அதன் போக்கில் விட்டால் மேலிருந்து கீழே பாய்ந்துதானாக வேண்டும் என்று நினைத்தால், அது பெளதீக விதிகளை மீறி, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பிருந்தை விட இன்று இடைவெளிகள் அதிகரித்திருப்பது போல தோன்றுகிறது.

இந்தியாவில் இந்த பதினைந்து ஆண்டுகளில் மாபெரும் வளர்ச்சியடைந்துள்ள தொழிலதிபர்களின் செல்வத்தினையும் மறுபக்கம் நிகழ்ந்து கொண்டிருக்கும் விவசாயிகளின் தற்கொலைகளையும் பார்த்தால், இந்தியாவும், கட்டுப்பாடற்ற பொருளாதாரத்தை பின்பற்றும் சில லத்தீன், தென் அமெரிக்க நாடுகளைப் போல பொருளாதாரத்தின் இரு எல்லைகளையும் தொட்டு நிற்கும் நிலை வருமோ என்ற அச்சம் ஏற்ப்படுகிறது.

***

மன்மோகன், நல்லெண்ண அடிப்படையிலேயே பொருளாதாரத்தை தாரளமயமாக்கினார். ஆனால், அடிப்படையான சில இந்திய குணங்களை அவர் புரிந்து கொள்ளவில்லை என்றே நான் நினைக்கிறேன்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் பொருளாதார நிபுணர் சுவாமிநாத ஐயர் சுவராசியமான ஒரு கருத்தினை கூறினார். அதாவது அமெரிக்காவில் தொழிலதிபர்களின் வாரிசுகள், நிறுவனம் தங்கள் கைக்கு வந்தவுடன் செய்வது, பங்குகள் அனைத்தையும் விற்று உல்லாச படகுகள், பிரயாணங்கள் என வாழ்க்கையை அனுபவிக்க கிளம்பி விடுவார்களாம். நிறுவனமும், புதிய நிர்வாகிகளின் வேறுபட்ட ஐடியாக்களினால், மாறுபட்ட முயற்சிகளை மேற்கொள்ள முயலுமாம். இந்தியாவிலோ பிர்லா போன்ற நிறுவனங்கள் ஒரு குடும்பத்தின் பிடியிலேயே வளர்ச்சியில் தேக்க நிலையில் உள்ளதாம்.

ஏறக்குறைய இதே கருத்து, ஏன் செல்வம் இங்கு கீழிறங்கவில்லை என்பதையும் விளக்கலாம். செல்வத்தைப் பெருக்க வழிவகை செய்த மன்மோகன், ‘அந்த செல்வத்தை ஆள்வதற்கு நம் மக்கள் தயாராக இருக்கிறார்களா’ என்று சிந்திக்கவில்லை.

பொதுவாகவே இந்தியர்கள் பாதுகாப்பு உணர்வு மிக்கவர்கள். தனக்கு மட்டுமின்றி, தன் கண் முன்னே வாழப்போகும் தனது மகன், பேரன் வரை வருமானம் ஏதுமின்றி போனாலும், பொருளாதார வசதிக்குறைவு ஏற்படக்கூடாது என்று அவர்களுக்கும் சேர்த்து சேமிக்கும் குணம் உள்ளது. எத்தனை சிறுகச் சிறுக எனினும், அத்தனை வழியிலும் பணத்தினை சேமிக்கவே முயல்கிறார்கள்.

***

நான் சிறுவனாயிருக்கையில் எனது அம்மா, ஆச்சி போன்றவர்கள் எவ்வாறு பணத்தினை எண்ணி எண்ணி செலவழித்தார்கள் என்று பார்த்திருக்கிறேன். பணத்திற்கான முழு மதிப்பினை பெருவதில் (cost consciousness) நம்மவர்களின் ஆர்வம் தெரிந்த விடயம்தான். ஆனால், எழுபதுகளில் நிலவிய பொருளாதார தேக்கத்திலிருந்து விடுபட்டு வெகுதூரம் வந்து விட்டோம் என்று நாம் உணரவில்லை.

அமெரிக்காவில் பொறியாளராக இருக்கும் ஒருவரை வழியனுப்ப ரயில் நிலையம் செல்கையில், சாதாரண சம்பளம் பெரும் ஒரு இந்தியரைப் போலவே போர்ட்டரிடம் பேரம் பேசிக் கொண்டிருந்தார். ஐம்பது ரூபாயினை மிச்சப்படுத்தும் வேகத்தை விட, ‘விட்டா தலையில மொளகா அரைச்சுடுவானுங்க’ என்ற பழைய கோபமே இப்பொழுதும் பேரமாக வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.

அமெரிக்கா என்ன, தற்பொழுது இந்தியாவிலிலேயே வசதியான சம்பளம் பெற முடிகிறது. ஆனால், எத்தனை ஆயிரம் சம்பளம் பெற்றாலும், வீட்டில் தேங்கும் பழைய செய்தித்தாள்களை பெற்றுச் செல்ல வருபவருக்கு, இலவசமாகக் கூட அதைத் தர முடியும் என்பது இதுவரை நினைத்துக் கூட பார்க்கப்பட்டதில்லை!

இவ்வாறு உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போக முடியும்.

***

நடுத்தர வர்க்கத்தினரின் இக்குணாதியசங்களா இந்திய பொருளாதாரத்தை நிர்ணயிக்கின்றன? என்றால் எனது பதில், ‘கீழ் நோக்கி வடிய வேண்டிய செல்வம் மத்தியில் உள்ள இந்த பாறைத்திட்டோடு நின்று மன்மோகனின் நம்பிக்கையினை பொய்யாக்கியுள்ளது’ என்பதுதான்.

தாராளமயமாக்கலில் பயன் பெரும் ஒரு நிறுவனம், அதன் பலன்களில் ஒரு பகுதியினை தனது நிர்வாகிகளுக்கு சம்பளமாக அளித்தால், அடுத்த அடுக்குகளில் இருப்பவர்கள் அதற்கும் கீழ் அடுக்குகளுக்கு அதை கசியவிடும் மனநிலை இங்கு இல்லை.

முன்னர் ஆடம்பரம் என்று கருதிய வசதிகளையெல்லாம் நடுத்தர வர்க்கம் வாங்கிக் குமிக்கவில்லையா? உண்மைதான். தொலைபேசியே ஆடம்பரமாக கருதப்பட்ட காலத்தை விட்டு இன்று ஏர் கண்டிஷனர்கள் கூட சாதாரணமாகிப் போன கால கட்டத்திற்கு வந்துள்ளனர். ஆனால், இவ்வகையான செலவுகளும் செல்வத்தை தட்டையான பாதையில் செலுத்துகிறதே தவிர கீழே செலுத்துவதில்லை.

பத்தாண்டுகளுக்கு முன்னர் முப்பது ரூபாய்க்கு சாதாரண செருப்பினை வாங்கியவர்கள் இன்று மூவாயிரம் ரூபாய்க்கு ரீபோக் ஷூ வாங்குகிறார்கள். ஆனால், ரீபோக் கடையில் வேலை செய்யும் சிப்பந்தியின் சம்பளத்தை கேட்டுப் பார்த்தால், அது பண வீக்கத்திற்கு நிகரான முன்னேற்றமே அடைந்திருக்கும். ஒரு ஷூ வாங்குவதற்கு கொடுத்த மூவாயிரம் ரூபாயில் ஆகக் குறைந்த சதவிகிதம், தொழிலாளிக்கு போக செல்வம் முழுவதும் மீண்டும் தொழிலதிபரின் கையிலே சென்று சேர்கிறது. ஆக செல்வம் இந்த இரு மட்டங்களையும் தாண்டி வேறு நிலைகளுக்கு இங்கு கசிவதில்லை என்பதே உண்மை!

‘war is too serious to be left only with the generals’ என்று சொல்வார்கள். அதே போல ‘economy is too serious to be left with the people’ என்றும் கூறலாம்

மதுரை
01.06.07

எவ்வித பொருளாதார ஆதாரங்களும், அறிவுமின்றி பத்திரிக்கைகளில் வாசித்ததையும், சொந்த அனுபவங்களையும் வைத்து சில கருத்துகளை முன் வைக்கிறேன். தவறான புரிதல்களை சுட்டிக்காட்டவும். இது குறித்து மேலும் அதிகம் எழுத விரும்புகிறேன். நேரமின்மையால் பின்னர்.

12 comments:

மணியன் said...

மிகச்சரியாகவே எழுதியிருக்கிறீர்கள். வலது, இடது என்ற கொள்கை மயக்கமின்றி குமுகாயக் கண்ணோட்டத்தில் உள்ளது. மற்றொரு விதயம்: பங்குவணிகமாகட்டும் வீட்டு விலையாகட்டும் பணப்பெருக்கம் speculative ஆக இருப்பதால் உண்மையான உற்பத்தியால் ஏற்படவில்லை. இது ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்துகிறது. உழைப்பாளரின் பங்கு இன்றி பெறும் இந்த இலாபத்தினால் பணம் புழங்குபவருக்கு மட்டுமே, தரகை விட்டால், பலன் இருக்கிறது.

//அதே போல ‘economy is too serious to be left with the people’ என்றும் கூறலாம்//

'economy is too serious to be left with economists' என்று இருக்க வேண்டுமோ ?

தருமி said...

தெளிவான ஒரு பொருளாதாரக் கட்டுரையாக உள்ளது. இன்னும் நேரம் கிடைக்க வாழ்த்துக்கள்.

சிவபாலன் said...

Sir,

Good Post!

Kasi Arumugam said...

பிரபு, எளிமையாச் சொல்லி பெரிய விஷயத்தை விளங்கப் பண்ணியிருக்கீங்க. ஆனா வேடிக்கைதான் பாக்க முடியுது. வேறென்ன செய்வது?

துளசி கோபால் said...

ரொம்பச் சரியாத்தான் சொல்லி இருக்கீங்க.

மிடில் கிளாஸ் இப்ப பணக்காரங்க ஆகிட்டாங்க. ஆனா ஏழைகள் இன்னும்
கீழே இறங்கி ஏழைகளாகவே இருக்காங்கன்றதை நானும் கவனிச்சேன்.
காசி சொன்னது போல 'பார்க்கத்தான்' முடிகிறது(-:

Sridhar Venkat said...

நல்ல கட்டுரை. வெளிப்படையாக எழுதியிருக்கிறீர்கள்.

எந்தவொருவகை முன்னேற்ற திட்டங்களும் risc factor இல்லாமல் இருப்பது கிடையாது. அந்த அபாயங்களை எப்படி சரியாக் எதிர் கொள்ளப் போகிறோம் என்பதுதான் வளர்ச்சி திட்டங்களின் மிக முக்கியமான படி. தற்சமயம் வரை நம்முடைய அரசாங்கம் அபாயங்களை திறமையோடுதான் எதிர்கொண்டு வருகிறது.

அதிசயம் நிகழ்ந்து கொண்டிருக்கும்போது அதைப் பற்றி நாம் அறிவதில்லை.

சந்திரகுப்தரின் ஆட்சிக் காலத்தை 'golden age of India' என்று சரித்திர நூல்கள் சொல்வதுண்டு. ஆனால் அந்த ஆட்சி நடந்த காலத்தில் யாருக்கு அது தெரியும்?

வளர்ச்சி சிலரை சீக்கிரம் சென்றடைந்துவிடுகிறது. சிலருக்கு தாமதமாக செல்கிறது. ஆனால் அது பரவலாகி கொண்டுதானிருக்கிறது. அந்த தாமதத்திற்கு அரசு மட்டும் அல்ல பொதுமக்களும் (பயனீட்டாளர்களும்) ஒரு காரணிகளே.

(உ-ம்1) பெரிய நகரங்களில் வசிப்பவர்களுக்கு சில்லறை வணிகத்தின் அடுத்த படியான super market பற்றி ஓரளவுக்கு அறிவும் அதனால் ஒரு பயனீட்டாளரான தனக்கு என்ன இலாபம் என்பதையும் பற்றி அறிவும் ஓரளவுக்கு இருக்கிறது.

சிறு நகரங்களில் வசிப்பவர்களுக்கு இன்னும் அதனுடைய பயன்கள் புரியாமல்தான் இருக்கின்றன. பெரிய super market-களில் விலை சல்லிசு. அதனால் தரமும் குறைவு என்றுதான் அவர்கள் அர்த்தப் படுத்திக் கொள்கிறார்கள். தரத்தில் குறைவு ஏற்படுத்தாமல் supply-chain-management optimization மூலம் விலையை குறைக்க முடியும் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள நாட்களாகின்றன.

(உ-ம்2) - பாரத வங்கியின் இலக்குகளில் மிக முக்கியமானது வங்கி சேவையை கிராமப் பகுதிகளில் பரவலாக்குவது. இந்திய தேசமெங்கும் அதிக கிளைகளை வைத்திருக்கும் வங்கி பெருநகரங்களில் தனியார் வங்கிகளினால் கடும் போட்டியை சந்திக்கிறது. அதனால் சேவையின் தரத்தை உயர்வாக வைத்திருக்க வேண்டிய கட்டாயம். Citibank நமது நாட்டுக்கு நுழையாத வரை ATM என்ற சேவையை பற்றி பாரத வங்கி கண்டு கொள்ளாமல்தான் இருந்தது. தானியங்கி பணப் பட்டுவாடாவில் தனியார் வங்கிகள் புரட்சி செய்த பின் பாரத வங்கியும் அந்த சேவையை அதனுடைய வாடிக்கையாளர்களுக்கு வழங்கியது. இன்று பல கிராமப்புறங்களில் பாரத வங்கி ATM சேவை வழங்கி வருகிறது. இது பயனீட்டாளர்களுக்கு மிகப் பெரும் வசதிதான். வங்கி சேவை என்றாலே கால தாமதம் என்ற நிலையை மாற்றி பல பொது மக்களும் இப்பொழுது வங்கிசேவையை உபயோகப் படுத்த தூண்டுதலாக இருக்கிறது.

இதனால் கறுப்பு பணம் குறைகிறது. வருமான வரி அதிகரிக்கின்றது. நாட்டின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த முடிகிறது.

இதன் அடிப்படை காரணிகளை ஆராய்ந்தால், உலகமயமாக்கலின் நன்மைகளும் அதை நமது அரசாங்கம் எப்படி திறம்பட உபயோகபடுத்த முடியும் என்பது விளங்கும்.

நாம் வாழும் காலம் இன்னொரு golden age-ன் தொடக்கமாக இருக்க பிரகாசமான வாய்ப்புகள் இருக்கின்றன.

Voice on Wings said...

பிரபு, ஒரு அருமையான கட்டுரைக்கு நன்றி.

உங்கள் பதிவின் சாரம் இவ்வரிகளில்தான் அடங்கியுள்ளது என்று நினைக்கிறேன்:
"தாராளமயமாக்கலில் பயன் பெரும் ஒரு நிறுவனம், அதன் பலன்களில் ஒரு பகுதியினை தனது நிர்வாகிகளுக்கு சம்பளமாக அளித்தால், அடுத்த அடுக்குகளில் இருப்பவர்கள் அதற்கும் கீழ் அடுக்குகளுக்கு அதை கசியவிடும் மனநிலை இங்கு இல்லை."

இக்கருத்துடன் கொஞ்சம் வேறுபட விரும்புகிறேன். தாராளமயமாக்கலைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதற்கு ஒரு நிறுவனத்திற்கு அதன் நிர்வாகத்தினரின் நிபுணத்துவம் தேவைப்படுகிறது. ஆகவே, சந்தையில் குறைந்த அளவில் உள்ள அந்நிபுணத்துவத்தைப் பெற, நிறுவனம் அதிக விலை கொடுக்கத் தயராய் உள்ளது. அவ்வகையிலேயே, நிர்வாகிகளால் முன்பை விட அதிக சம்பளம் பெற முடிகிறது. நிறுவனத்தின் charitable குணத்தால் அல்ல.

ஆனால் தொழிலாளர்கள் / விவசாயம் என்று வரும்போதோ, supply exceeds demand. ஆகவே, தனது விலையை நிர்ணயிக்கும் நிலையில் ஒரு தொழிலாளியோ விவசாயியோ இன்று இல்லை. கிடைக்கும் வருமானத்தை பேசாமல் வாங்கிக் கொண்டு செல்லும் நிலைதான் அவர்களுடையது. பழைய பேப்பரை அவர்களுக்கு இலவசமாக வழங்குவதோ, அல்லது பேரம் பேசாமல் கூலி தருவதோ இதற்குத் தீர்வல்ல. அவர்களை நிபுணர்களாக்குவது, அவர்களுடைய உழைப்பின் மதிப்பைக் கூட்டுவது, unskilled ஆக இருக்கும் பெரும்பான்மையை, skilled மற்றும் specialized ஆக்குவது, இதில்தான் அவர்களுக்கான தீர்வு உள்ளது. அவர்களுடைய விலையை அவர்களே நிர்ணயிக்கும் நிலையை அப்போதுதான் அவர்களால் அடைய முடியும்.

கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவை ஒவ்வொரு குடிமகனுடைய அடிப்படை உரிமை என்று இவற்றை அரசே இலவசமாக வழங்கி ஒவ்வொருவரையும் மேம்படுத்தினால்தான் இது சாத்தியமாகும். பல ஐரோப்பிய நாடுகளில் நடைமுறையிலுள்ள கொள்கைதான் இது.

Aruna Srinivasan said...

பிரபு ராஜதுரை

// ஐம்பது ரூபாயினை மிச்சப்படுத்தும் வேகத்தை விட, ‘விட்டா தலையில மொளகா அரைச்சுடுவானுங்க’ .......ஆனால், எத்தனை ஆயிரம் சம்பளம் பெற்றாலும், வீட்டில் தேங்கும் பழைய செய்தித்தாள்களை பெற்றுச் செல்ல வருபவருக்கு, இலவசமாகக் கூட அதைத் தர முடியும் என்பது இதுவரை நினைத்துக் கூட பார்க்கப்பட்டதில்லை! ////

இந்த மன நிலைக்கு ஒரு காரணம் இருக்கிறது. இப்படி சேமிக்க நினைக்கிறவர்கள் / மிச்சம் பிடிக்க நினைக்கிறவர்கள் பெரும்பாலும் இளம் வயதில் பணத்தின் கஷ்டம் உணர்ந்து பின்னர் செல்வந்தர்களாக இருப்பார்கள்.

முதல் தலைமுறையில் பணம் /வசதி பார்த்தவர்கள். பணம் இல்லாத அந்தக் காயத்தின் வலி இன்னும் பசுமையாக இருப்பதால், தானோ அல்லது தன் அடுத்த தலைமுறையோ பணப் பற்றாக்குறையால் இனி என்றுமே கஷ்டப்படக் கூடாது என்று ஒரு வலுவான "பயம்" (insecurity) வந்து உட்கார்ந்து கொள்கிறது. மிச்சம் பிடித்தல் அல்லது அளவில்லாமல் சேர்த்து வைத்தலின் மனோதத்துவம் இதுதான்.

தாங்கள் பட்ட கஷ்டத்தினால், "அள்ள அள்ளதான் கிணற்றில் நீர் சுரக்கும்" என்ற இயற்கையின் அடிப்படையை உணராமல் அளவுக்கு மிஞ்சி மிச்சம் பிடிக்கிறார்கள்.

பணக் கஷ்டம் தெரியாமல் வளர்ந்த அடுத்த முறையினர் ஒரு வேளை நீங்கள் சொல்வதுபோல் "காலணா" அரையணா" மிச்சம் பிடிப்பதன் அர்த்தமின்மையை உணர்ந்து சற்று தாராளமாக இருக்கலாம். ஆனால் பணக்கஷ்டம் தெரியாமல் வளர்ந்த அடுத்த தலைமுறையினரும் பொறுப்புடன் உணர்ந்து செயல்படும்போதுதான் அங்கே பொருளாதாரத்தின் அடிப்படையான - trickle effect - எடுபடும். பணக்கஷ்டம் தெரியாமல் வளர்ந்த இந்தத் தலைமுறையினர் பொறுப்பை உணராமல் இருந்தால் அதுவே மகா அனர்த்தத்தில் போய் முடியும். இன்றைய நிலையில் இந்த இரண்டுவிதமான நோய்களுமே - ஒரு பக்கம் பணம் மிச்சம் பிடிக்கும் தலைமுறை; மறுபக்கம் பணக்கஷ்டம் தெரியாமல் வளர்ந்த ஆனால் இன்னும் பொறுப்பையும் உணராத தலைமுறை - நம்மிடையே இருக்கிறதோ என்றும் தோன்றுகிறது.

அடிப்படையில் "எனக்கு மட்டுமே வேண்டும்" என்ற மனோபாவம் சமுதாயத்தில் உள்ளவரையில் எந்தக் கொள்கையுமே ஏமாற்றம்தான் கொடுக்கும்.

ஆனாலும் பணக்கஷ்டம் தெரியாமல் வளர்ந்த தலைமுறையிலும் பொறுப்புள்ளவர்களும் உள்ளார்கள். இவர்கள் எண்ணிக்கை விரைவில் அதிகமாகும் என்று ஒரு நம்பிக்கையும் இருக்கிறது.

இப்படிப்பட்ட ஆக்கப்பூர்வமான உரத்த சிந்தனைகள் ஒரு சமுதாயத்தில் அடிக்கடி எழும்போது அங்கே சிந்தனைகளின் critical mass உருவாகி மாற்றங்கள் நிச்சயம் வரும். இதுவும் ஒருவிதத்தில் கசிவு - trickle effect - சித்தாந்தம்தான்.

நானும் பொருளாதாரம் படித்ததில்லை. கேள்வி ஞானம்தான். எனக்குத் தெரிந்தவரை, பொருளாதாரத்தின் இந்தக் கசியும் (trickle effect ) சித்தாந்தம் ஒரு அழகான சுழற்சி.

ஒரு செயல்பாடு அல்லது ஒரு உற்பத்தி ஏற்படும்போது அதனால் ஏற்படும் விளைவுகள் பலவிதங்களில், சமூகத்தில் பல மட்டங்களில் விளைவுகளை / பயன்களைத் தருகிறது. உதாரணமாகக் கட்டுமானப் பணிகள் நிறைய செயல்படும்போது அதற்குத் தேவையான / அந்தத் தொழில்களில் சம்பந்தம் உடையக் கச்சாபொருட்களுக்கும் இதர சாமான்களுக்கும் தேவை ஏற்படுகிறது. கச்சாப்பொருட்கள் தேவை ஏற்படும்போது அவற்றை உற்பத்தி செய்யும் இதர தொழில்களுக்கும் / உப தொழில்களுக்கும் தேவை ஏற்பட்டு அங்கே ஒரு " தேவை" (demand) சூழல் ஏற்படுகிறது. புதிய தொழில்களும் முளைக்கின்றன.

இப்படி, "தேவை" சூழல் ஏற்படும்போது அதை நிரப்ப, அங்கே உடனே ஒரு " தருவிப்பு" (supply) சூழல் ஏற்படுகிறது. இந்தத் தேவை மற்றும் அதைத் தொடர்ந்த தருவிப்பு சூழலின் சுழற்சியினால் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. வேலை வாய்ப்புக் கிடைக்கும்போது பரவலாக வருமானம் அதிகரிக்கிறது. வருமானம் அதிகரித்து சமூகத்தில் வாங்கும் திறன் அதிகரிக்கும்போது மீண்டும் விதம் விதமான "தேவை" சூழல்கள் அதிகரித்து "தருவிப்பு" அதிகரித்து என்று சுழல்கிறது சக்கரம். இந்தத் தேவை / தருவிப்பு குழாயில் அடைப்பு இல்லாமல் சுழன்று கொண்டிருக்கும்போது கசிவு சித்தாந்தம் சரியாக செயல்படுகிறது. தாராளமயமாக்கலும், உலகமயமாக்கலும் உற்பத்தியைப் பெருக்கி, இந்தக் கசிவு சித்தாந்தத்தை செயல்படவைத்து நம் பொருளாதாரத்தை இந்த இயற்கையான சுழற்சி மூலம் மேம்படச் செய்ய எடுத்த முயற்சிகள்தாம்.

ஆனால் இன்று நம்மிடையே பல காரணங்களினால் எங்கோ தேக்கம் ஏற்பட்டு, கசிவு சுழல் செயல்படவில்லை - அல்லது தாமதமாகிறது.

வெங்கட்ராமன் said...

பிரபு ராஜ துரை அவர்களே,சிறந்த அலசல் அருமையான பதிவு.

Rich get Richer
Poor get Poorer

Aruna Srinivasan said...

கரண் தாப்பர் விடுவதாக இல்லை :-)

விவரம் இங்கே.

http://aruna52.blogspot.com/2007/06/blog-post.html

ulagam sutrum valibi said...

எதாற்தமான பதிவு ,தொடர்ந்து எழுத வேண்டுகிறேன்.

Doctor Bruno said...

The service industry has become richer at the cost of Agriculture.....

This is good from a software engineers point of view and bad from a farmer's point of view

Whether this is good or bad for the nation as a whole ..... ?????