14.7.12

மூன்று பிரபலங்களும், வெட்டிப் பேச்சும்...


மூன்று பிரபலங்களைக் குறித்து சமீபத்தில் வந்த வதந்தி, விசாரித்தால் ஓரளவிற்கு உண்மையிருக்கலாம்

முதலாமவர் திரைப்பட இயக்குஞர். அவர் இயக்கிக் கொண்டிருக்கும் ஒரு திரைப்படத்திற்காக, உல்லாசத்திற்கு பெயர் பெற்ற நாடு ஒன்றில் சில நாட்கள் தங்க நேர்ந்தது. தினமும் படப்பிடிப்பிற்கு செல்வதும், பின்னர் விடுதி அறையில் வந்து நல்ல பிள்ளையாக தங்குவதுமாக இருந்தவரை, அந்த விடுதி வரவேற்பறை பெண்மணி கவனித்துக் கொண்டே இருந்தார். இயக்குஞர் விடுதியிலிருந்து விடைபெறும் சமயம் அந்தப் பெண், ‘திரைப்படம் எடுப்பதற்காகவோ அல்லது வேறு வேலைகளுக்கோ இங்கு பலர் வந்து தங்குகிறார்கள். அனைவரும் மற்ற நேரங்களில், மதுக்கூடத்தையோ அல்லது வேறு கேளிக்கைகளையோ தேடி போவார்கள். ஆனால், நீங்கள் அப்படி ஏதும் இல்லாமல் உங்களது அறைக்கு திரும்பி விடுகிறீர்கள். உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கிறது. நானும் உங்கள் மதம்தான்,  நாம் திருமணம் செய்து கொள்ளலாமா?என்றாரார்.

இயக்குஞரோ, ‘தனக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பதாகவும், அந்தப் பெண்ணுக்கு வேறு நல்ல கணவன் கிடைப்பார் என்று வாழ்த்தி‘ விடை பெற்றாராம்.


இரண்டாமவர், அரசின் முக்கியதுறை ஒன்றில் மிக உயர்ந்த பதவியிலிருப்பவர். சில மாதங்களுக்கு முன்னர், வேறு ஒரு உயர்ந்த பதவி வகிப்பதற்காக பிரச்னைக்குறிய ஒரு இடத்திலிருக்க நேரிட்டது. குடியரசு தினத்திற்கு முன்பு, கொடியேற்று விழாவை எப்படி நடத்துவது என்று விவாதிக்க தனது சகாக்களை அழைத்தார். இவரது ஆர்வத்தில் சகாக்கள் அதிர்ந்து போய் விட்டனராம். ‘ஏன் நாமெல்லாம் பிரச்னையில்லாமல் தொடர்ந்து செய்ல்படவேண்டாம் என்று நினைக்கிறீர்களா? இல்லாத வழக்கத்தை ஏற்ப்படுத்தி, வம்பில் சிக்கிக் கொள்ள வேண்டாம்என்றார்களாம். இவருக்கும் ஆச்சரியாமாம்...

மூன்றாமவர், நாடறிந்த அரசியல்வாதி முதன்மையான பொறுப்பிலிருப்பவர். தனக்கு அந்த பொறுப்பு கிடைப்பதற்கு முக்கிய காரணம் என்று நினைக்கும் ஒரு விடயத்தில் அவர் எடுத்த நடவடிக்கை, நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட அதிக கோபத்திலிருந்தவரை பார்க்க இளம் அதிகாரி ஒருவர் சென்றிருந்தார். வெறுப்பில், தன் முன் இருந்த காகிதத்தில் கோட்டுப்படங்களை கிறுக்கிக் கொண்டே இருந்தவர், அதிகாரி பேச்சை எடுத்ததும், நீதிபதிகளை ‘இவர்களைப் பற்றி தெரியாதா?‘ என்ற ரீதியில் திட்டித் தீர்த்தாராம். அப்படி திட்டியதில் சில வார்த்தைகளை அச்சில் ஏற்ற இயலாதாம்...

-oOo-

கிரேக்க மூலத்திலிருந்து ட்ரிவியல் (Trivial) என்ற் ஆங்கில வார்த்தை உருவானதற்கு ஒரு கதை உண்டு. அந்தக் காலத்தில் பெண்கள் தத்தம் வீடுகளில் இருந்து பொருட்கள் வாங்க சந்தைக்கு செல்வார்கள். அப்படி மூன்று வழியில் (Tri + Via) இருந்து வரும் பெண்கள் சந்தைக்கு செல்லும் வழியில் ஒன்றாக கூடுகிறார்கள். ‘அப்படி செல்லும் வழியில் பெண்கள் என்ன பேசுவார்கள்?, அதுதான் ட்ரிவியல் பேச்சுஎன்று நான் சொன்னால், பெண்கள் அமைப்பு வைத்து என்னை கண்டிப்பார்கள்.
எனவேதான், ஆண்களும் இதற்கு விதிவிலக்க என்று விளக்கவே இந்தப் வெட்டிப் பேச்சு பதிவு!

சென்னை
14/07/12

11.7.12

அகிலேஷ் யாதவின் கொடை!



‘உத்திரப்பிரதேச முதல்வர் அம்மாநில சட்டமன்ற பிரதிநிதிகளுக்கு, மகிழுந்து வாங்குவதற்காக ரூ.20 லட்சம் அளிக்கப் போவதாக’ செய்தி வெளிவந்தவுடனேயே, ஊடகங்களில், முக்கியமாக ஆங்கில ஊடகங்களில் எதிர்ப்பு எழுந்தது. எதிர்ப்பு என்பதை விட, அந்த விமர்சனங்களில் மறைந்திருந்த கிண்டல்களும் புரிந்து கொள்ளக்கூடியதாகவே இருந்தது.

‘டாக்ஸ்பேயர் மனியிலிருந்து எம் எல் ஏக்களுக்கு காரா?’ என்ற எதிர்ப்பினை சமாளிக்க முடியாமல், அறிவித்த வேகத்திலேயே அகிலேஷ் அதனை திரும்ப பெற்றுக் கொண்டார்.

ஊடகங்கள் கிளப்பிய விமர்சனப் புழுதியில் ‘அந்த தொகை ஒன்றும் ‘பொனாசா’ இல்லை. பெரிய மகிழுந்து தேவைப்படும் உறுப்பினர்கள், அவர்களது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.20 லட்சம் வரை செலவழித்து மகிழுந்து வாங்கிக் கொள்ளலாம் எனவும் பின்னர் அவர்களது பதவிக்காலம் முடிந்ததும் தேய்மானத்திற்காக கழித்தது போக, மீதி கிரயத் தொகையை கொடுத்து வண்டியை தாங்களே சொந்தமாக்கிக் கொள்ளலாம் என்ற அந்த திட்டத்தின் சாராம்சங்கள்’ விவாதிக்கப்படாமலேயே போயின.

சட்டமன்ற பிரதிநிதிகள் என்ன, பல தனியார் நிறுவனங்களே தங்களின் இடைநிலை நிர்வாகிகளைக் கவர, இதே வகையான திட்டங்களை செயல்படுத்துகிறார்கள். அநேக நிறுவனங்களில் இளநிலையில் இருக்கும் பொறியாளர்கள் முதற்கொண்டு அனைவருக்கும் மகிழுந்து வாங்குவதற்கான படிகள் அளிக்கப்படுகையில் லட்சக்கணக்கான மக்களின் பிரதிநிதியாக சட்டமன்றத்தில் பதவி வகிக்கும் நபருக்கு ரூ 20 லட்சம் என்பது பெரிய தொகையல்ல.

ஆயினும் பழைமைவாத உடைகளோடும், நாட்டுப்புறத்தன்மையோடும், முரடர்களாக நம்முன் உருவகப்படுத்தப்பட்டுள்ள எம் எல் ஏக்களுக்கு மகிழுந்து என்பதால், நம்முடைய ஆழ்மனதில் ஏற்ப்படும் ஒவ்வாமையே இந்த எதிர்ப்பின் மூல காரணம் என்றே நான் நினைக்கிறேன்.

எம் எல் ஏக்களுக்கு இவ்வாறு பலன்கள் அளிக்கப்படுகையில் நம்மால் உணரப்படும் அசூயையான உணர்வு, பொருளாதார மந்தநிலையிலும் சில நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளுக்கு கோடிக்கணக்கில் அளிக்கப்படும் பலன்களை காண்கையில் வியப்பாக மாறுகிறது.

சர்வதேச பணச்சந்தையிலும், பங்கு வர்த்தகத்திலும் பல்லாயிரக்கணக்கான எண்களோடு உறவாடும் ஐஐஎம் நிர்வாகிகள், அதே திறமையினை பயன்படுத்தி ஒரு சட்டமன்ற தொகுதியிலாவது வெற்றி பெற்றதில்லை. ஏன், ஊடகங்களின் பெரிய ஆதரவு இருந்தும், சென்னையில் சில ஐஐடி தொழில்நுட்பவாதிகளால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி ஒன்று ஒரே தேர்தலோடு உடைந்து போனது.

மகிழுந்து ஒரு நிறுவனத்தின் நிர்வாகிக்கு தேவைப்படுவதை விட மக்கள் பிரதிநிதிக்கு அதிகம் தேவைப்படுகிறது. நகர்ப்புற சாலைகளை கடந்து பட்டி தொட்டியிலும் சுலபமாக சென்று வர பெரிய வகை மகிழுந்துகள் (SUV) ஏற்றதாக இருக்கும் என்று அகிலேஷ் நினைத்ததில் தவறில்லை.

நாடு இருக்கும் பொருளாதார நிலையில், இவ்வகையான செலவினங்கள் தேவையா என்பதும் வெற்று வாதமே! ஏனெனில், இதே பொருளாதார நிலை வேறு எந்த நிறுவன நிர்வாகிக்கும், மகிழுந்தினை மறுக்கவில்லை. மேலும் நாட்டின் பொருளாதார நிலை, நாட்டில் செயல்படும் நிறுவனங்களின் ஒட்டுமொத்தமான பொருளாதார நிலையோடு நேரடி தொடர்புடையதாகும்.

பல பிரதிநிதிகள் கோடீசுவரர்களாம். கோடீசுவரராக பணியில் சேருபவர் அவரது கோடிகளைக் கொண்டு வந்து கொட்ட வேண்டுமா. அதுவும், இந்த திட்டமானது சாதாரண நிலையிலிருக்கும் உறுப்பினர்களை மனதில் கொண்டே அறிவிக்கப்பட்டதாக அகிலேஷ் கூறுகிறார்.

வசதியாக உள்ள பிரதிநிதிகளை பார்க்கும் நாம், நடுத்தர நிலையில் இருந்து இயங்கும் பல பிரதிநிதிகளை மறந்து விடுகிறோம். திருநெல்வேலியில் நான் வழக்குரைஞராக பணியினை தொடங்கிய பொழுதில் நேரில் கண்டு பழகிய மூன்று பிரதிநிதிகளை இந்தக் கணத்தில் என் நினைவுக்கு வருகிறார்கள்.

ரமணி நல்லதம்பி என்ற பெயரை இன்று நெல்லையிலேயே யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. 1989லும் 1991லும் இருமுறை காங்கிரசு கட்சியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். குறுகிய காலத்திலேயே தனது துணிச்சலான அரசியல் மற்றும் சட்டமன்ற செயல்பாட்டினால் கருணாநிதி, செயலலிதா ஆகிய இருவரின் கவனத்தையும் கவர்ந்தவர். ஆனால் அதே வேகத்தில் அரசியலிலிருந்து காணாமல் போனார். சில காலம் கழித்து ‘நக்கீரன்’ அட்டையில் புற்றுநோயால் தாக்கப்பட்டு சாகும்தறுவாயிலிருந்த ரமணியின் புகைப்படத்தை கண்டவர்கள் அதிர்ந்து போனார்கள். ரமணியும், வழக்குரைஞராக பணியாற்றிய அவரது கணவராகிய நல்லதம்பியும் தங்களது சொற்ப வருமானத்தையும் ரமணியின் சிகிச்சைக்காகவே செலவிட்டு வறுமையில் தள்ளப்பட்டு நிற்கையில், அவர் சார்ந்திருந்த கட்சியே அவரை கைவிட்டு விட்டதுதான் கொடுமை!

இதே காலகட்டத்தில் அதிமுகவிலிருந்து நெல்லை பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட வேலையா என்பவரையும் நான் அறிவேன். அரசு வழக்குரைஞராக இருக்கையிலேயே அவரது நேர்மைக்கும் கண்ணியத்துக்கும் பெயர் பெற்றவர். ஓரளவு வசதியானவராயினும்,  ஐந்து வருடம் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியதை வைத்து, எவ்விதத்திலும் தமது செல்வத்தையோ, செல்வாக்கையோ விரிவுபடுத்தியவரல்ல. இவரும் இளம்வயதிலேயே இறந்து போனதுதான் துரதிஷ்டம். முதல்வரின் காலில் கட்சிக்காரர்கள் அனைவரும் ‘பொத்’ ‘பொத்’ என்று விழுந்து கொண்டிருக்கையில், ‘வேலையா அண்ணன் விழுந்தாரா, இல்லையா?’ என்பதுதான் எங்களிடையே அப்பொழுது புதிராக உலவிய சந்தேகம்!

1967லிருந்தே திமுக பிரதிநிதியாக பலமுறை பணியாற்றிய ஏ.எல்.எஸ் என்று அழைக்கப்படும் ஏ.எல்.சுப்பிரமணியன் பற்றி கூட ஏதும் கடுமையான குற்றச்சாட்டுகள் இல்லை. நான் அறிந்தவரை அரசியலுக்காக தனது சொத்துக்களை இழந்தவர் என்றுதான் இவரைப் பற்றியும் கூறுவார்கள்.

இவர்களில் ரமணி நல்லதம்பி கொஞ்சம் பயர்பிராண்ட். ஆனால் மற்ற இருவரும் அதிர்ந்து பேசி கூட நான் எப்பொழுதும் பார்த்ததேயில்லை. சட்டமன்ற உறுப்பினர் என்றதும், எனக்கு இவர்கள்தாம் நினைவுக்கு வருகிறார்கள்.

இவர்களைப் போன்று, எத்தனையோ சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழகம் முழுவதும் இருக்கலாம். உத்திர பிரதேசத்திலும் இருக்கலாம். தங்களது அரசியல் செயல்பாட்டிற்காகவும், மக்கள் பிரச்னைக்கான உழைப்பிற்காகவும், அரசு செலவில் ஒரு மகிழுந்து கிடைக்குமாயின், அது ஒரு பொருத்தமான பலனாகத்தான் இருக்க முடியும்.

ஏற்றுக்கொள்ள இயலாத வகையில் அகிலேஷின் திட்டத்தில் ஏதும் குறைகளை என்னால் காண இயலவில்லை.

மதுரை
11/07/12

22.6.12

தலைவன் செயல் தவறாகாது!



முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கட்ஜு, அதிபர் சர்தாரி மற்றும் பிரதம்ர் கிலானி விடயத்தில் பாக்கிஸ்தான் உச்சநீதிமன்றம் நடந்து கொண்டதை விமர்சித்து எழுதிய கட்டுரை, ‘தி ஹிந்து ‘டைம்ஸ் ஆப் இந்தியா ஆகிய இரு நாளிதழ்களிலும் ஒரே நாளில் வெளியாகியுள்ளது.

அந்த கட்டுரையில், நடைமுறைச்சிக்கல்களால் அதிபர், பிரதமர் போன்றவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கைகள் தவிர்க்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள கட்ஜுவின் கருத்து கவனிக்கத் தகுந்தது. குற்றவியல் நடவடிக்கைகளில் இருந்து, அதிபரை பாதுகாக்கும் பாக்கிஸ்தான் அரசியலமைப்பு சட்டப்பிரிவினை எடுத்துக் காட்டி, பாக்கிஸ்தான் உச்சநீதிமன்றம் அதிபர் சர்தாரி விடயத்தில் சற்று அதிகப்படியாக நடந்து கொண்டுள்ளதாக குற்றம் சாட்டும் கட்ஜு, தனது வாதத்திற்கு ஆதரவாக அரசனின் எந்த செயலும் குற்றமாகாது (King can do no wrong) என்ற ஆங்கில சட்டக்கருத்தினை முன் வைக்கிறார்.

இன்று இங்கிலாந்திலேயே வலுவிழந்து போன இந்த சட்டக்கருத்து ஆங்கில நீதிதுறை வரலாற்றில் பல்வேறு காலகட்டத்தில் கையாளப்பட்ட வரலாறு சுவராசியமானது.

-oOo-

கட்ஜுவின் கட்டுரையினை படிக்கும் பொழுதே, எனக்கு இரண்டு நாட்களுக்கு முன் பார்த்த ப்ரோஸ்ட்/நிக்சன் என்ற திரைப்படத்தில் ‘வாட்டர்கேட் விவகாரத்தில் தனது செயலை நியாயப்படுத்துவதற்காக நிக்சன் கூறும், ‘அதிபர் ஒரு செயலைச் செய்தால், அது குற்றமாகாது’ (When the President does it, that means it's not illegal) என்ற கருத்தினை நினைவுபடுத்தியது.

பதவி விலகிய ஒரு அதிபரை, தொலைக்காட்சி நிரூபர் ஒருவர் பேட்டி கண்டதைப் பற்றி ஒரு படமா, என்று அசுவராசியமாகவே எவ்விதமான அறிமுகமும் இல்லாமல்தான் படத்தினைப் பார்த்தேன். வியப்பாக இருந்தது, கொஞ்சம் கூட தொய்வில்லாமல் ஏதோ ‘த்ரில்லர்ரக படத்தினைப் பார்ப்பது போன்ற அனுபவம். ஒரு அரசியல் பேட்டியைக் கூட திரைக்கதையாக்குவதற்கு தனித்திறமை வேண்டும்.

அரசியலில் ஆர்வம் இல்லாதவர்களுக்கு படம் எப்படியிருக்கும் என்று தெரியவில்லை. ஆனால், தமது இளமைக்காலத்தில் கென்னடி/ நிக்சன் நாட்களைக் கடந்து வந்தவர்களுக்கு அருமையான நாஸ்டல்ஜிக் அனுபவத்தைக் கொடுக்கலாம்.

-oOo-

படத்தில் நிக்சன், ப்ரோஸ்ட் அணிந்திருக்கும் ‘ஸ்லிப் ஆன்ரக ஷூவைக் கண்டு வியப்பது எனக்கு வியப்பாக இருந்தது. அவ்வகையான லேஸ் இல்லாத ஷூக்கள் அமெரிக்காவில் அறிமுகமானது, 70களுக்கு பின்னர்தான் எனபது புதிய தகவல்.

‘ஆனால் லேஸ் வைத்து கட்டப்படும் ஷூக்கள்தான் ஆண் தன்மையோடு இருக்கும்என்று நிக்சன் கூறுவது முதன் முதலில் கியர் இல்லாத அல்டிஸ் காரை ஓட்டிய பொழுது எனக்குள் எழுந்த எண்ணத்தை நினைவுபடுத்தியது. ஒரு கையில் கியரைப் பிடித்துக் கொண்டு கார் ஓட்டுவதில் உள்ள ‘கிக்கியர் இல்லாத காரில் இல்லை!

‘மோட்டர் பைக்குகளை கிளப்ப விரல் நுனியில் சுவிட்ச் வைத்தாலும், கால்களால் உதைத்து கிளப்பவே ஆண்கள் விரும்புகிறார்கள்என்று ஒரு மார்க்கெட்டிங் நிறுவன சர்வே அறிக்கை தெரிவித்ததாக படித்திருக்கிறேன்.

கொஞ்சம் கொஞ்சமாக இந்தப் பதிவு ஆணாதிக்க சிந்தனையை வெளிப்படுத்துவது போல இருப்பதால், ‘நான் எப்பொழுதும் ஸ்லிப் ஆன் ரக ஷூக்களையே அணிகிறேன்என்பதையும் சொல்லி வைக்கிறேன். ஆனால் காரணம், தினமும் லேஸை கட்டும் பொழுது ஆள்காட்டி விரலில் உரசி அலர்ஜியாகிறது என்பதுதான்.

கேஸ் கட்டுகளை நாடா கொண்டு கட்டி வைப்பதில் ஆரம்பித்த ஒவ்வாமை. தற்பொழுது, கேஸ் கட்டுகளையும் நானாக கட்டுவதை பொதுவாக தவிர்ப்பேன். ஆக்குபேஷனல் ஹஸார்ட்!

மதுரை
22/06/12

10.6.12

அஜாமி (Ajami)


ஈரானிய அணு குண்டினை விட, இஸ்ரயீல் அஞ்சும் ஒன்று இருக்குமென்றால் அது, அதன் சொந்த மக்கள் தொகைதான். இஸ்ரயீலின் மக்கள் தொகை ஒன்றும் இந்திய மக்கள் தொகை போல கட்டுப்படுத்த இயலாமல் பெருகிக்கொண்டிருப்பதல்ல. ஆனால், அதன் மக்கள் தொகையில் தற்பொழுது சுமார் 20% அளவிற்கு இருக்கும் அரபு மக்களின் தொகையானது யூத இனத்தவரின் மக்கள் தொகையை விட வேகமாக கூடிக்கொண்டிருப்பதுதான்.

சில வருடங்களுக்கு முன்னர் பாலஸ்தீன தலைவர் ஒருவர், ‘இப்படி சண்டையிட்டு சாவதை விட மக்கள் தொகையை யூதர்களை விட அதிக அளவில் பெருக்குவதன் மூலம் இஸ்ரயீலில் யூதர்களை சிறுபான்மையினராக  மாற்றிவிட்டால், யூத நாடு என்பது மீண்டும் காணமல் போய்விடும்என்று எச்சரித்து இஸ்ரயீலர்களுக்கு கிலியூட்டினார்.

இது வெற்று எச்சரிக்கையல்ல! தனி நிர்வாகம் நடைபெற்றாலும், இஸ்ரயீல் ஆளுமையில் உள்ள வெஸ்ட் பாங்கு, காசா பகுதிகளை இஸ்ரயீலுடன் சேர்த்தால், இப்பொழுதே அரபு மக்கள் தொகை யூதர்களுக்கு இணையாக வந்துவிடும்.

அவ்வாறு இஸ்ரயீலுக்குள்ளே, அரபு மக்கள் பெருவாரியாக வ்சிக்கும் வரலாற்றுமுக்கியத்துவம் வாய்ந்த பகுதிதான் ’அஜாமி’. அஜாமியில் வசிக்கும் இரு அரபு சகோதரர்களின் கதையோடு தொடங்கும் இஸ்ரயீல் நாட்டுப் படத்தி பெயரும் ‘அஜாமிதான். தற்செயலாககண்ணில்பட்டு இஸ்ரயீல் படமாக உள்ளதே, என்ற ஆர்வத்தில் பார்க்கத் தொடங்கிய படம். படம் முடிந்து மூன்று நாட்களாகி விட்டாலும் படத்தின் பாத்திரங்கள் ஏதோ நாம் பழகியவர்கள் போல கண் முன்னே நடமாடிக்கொண்டிருக்கிறார்கள்.

இரு இஸ்ரயீல் அரபு சகோதரர்கள், மூத்தவன் கார் ஓட்டுநராக வேலை செய்யும் உணவகத்தை நடத்தும் கிறிஸ்தவ உரிமையாளர், அவரது மகள். உணவக சமையலாராக இருக்கும் இஸ்ரயீல் அரபு முஸ்லீம், அவரது யூத காதலி, சட்டவிரோதமாக இஸ்ரயீலுக்குள் நுழைந்து உணவகத்தில் வேலை செய்யும் பாலஸ்தீனப் பகுதி சிறுவன், யூத காவல்துறை அதிகாரி ஒருவர் என ஐந்து முக்கிய பாத்திரங்களில் குடும்பத்தில் நடக்கும் வெவ்வேறு செயல்களால், அவர்கள் அனைவரையும் ஒரே புள்ளியில் வந்து சேர்க்கும் கச்சிதமான திரைக்கதை.

படம் ஆரம்பித்து சிறிது நேரத்திலேயே, இணையத்தில் அதிகமாக பேசப்பட்ட ‘சிட்டி ஆஃப் காட்போல உள்ளதே என்ற எண்ணம் வந்தது. பின்னர் ‘அஜாமி பற்றி படிக்கையில் ‘சிட்டி ஆஃப் காட்பற்றிய குறிப்பு தவறாமல் இடம் பெறுகிறது.

முதலாளி வீட்டில் உதவி கேட்க தனது தாயாரோடு போகும் உமர், முதலாளி மகளான ‘ஹதிரிடம், அவளை பெண் கேட்கத்தான் தாயாரோடு வந்திருப்பதாக கூறி ஷாக்கொடுக்கும் காட்சிக்கு நமது தமிழ்படங்களின் நூறு டூயட் பாடல்களை தியாகம் செய்யலாம்.

படம் முழுக்கவே, நாம் பல இடங்களில் சந்தித்த மனிதர்கள் பார்த்த காட்சிகள் போலவே இயல்புத்தன்மை கொண்டிருப்பினும், பண்டிகையின் பொழுது தெருவோரத்தில் உட்கார்ந்து ஹூக்கா பிடித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கும் அப்பகுதியில் வ்சிக்கும் யூதர் ஒருவருக்கும் இடையே உருவாகும் இயல்பான பேச்சு, வாக்குவாதமாகி கொலையில் முடிவது எத்தனை முறை பார்த்தாலும் ஏதோ அந்தச் சம்பவத்தில் இருப்பது போல மீண்டும் ஒருமுறை பார்க்க வேண்டும் போல உள்ளது.
சிட்டி ஆஃப் காட் நான் பார்த்ததில்லை. பார்த்த ஒரு நண்பர், ‘அஜாமி அதை விட நன்றாக இருப்பதாககூறினார்.



இன்று ஞாயிறு செய்தித்தாள்களில், இணைய கட்டுப்பாட்டிற்கு எதிரான போராட்டங்களைப் பற்றிய செய்தியில் ‘அனானிமஸ் என்ற வார்த்தை அதிகம் இடம் பெற்றிருந்தாலும், எனக்கு அனானிமஸ் என்றதும் போன வாரம் பார்த்த ஆங்கில படம்தான் நினைவுக்கு வந்தது. ஆங்கில இலக்கிய பாடம் என்றாலே ‘ஷேக்ஸ்பியர்தான் என்ற அளவில் நம்மால் விரும்பப்படும் ஒரு நபரை இப்படி கிழித்து கூறாக்கி ஒரு படம், அதுவும் பார்ப்பவர்களின் முழுக்கவனத்தையும் அதன் பக்கம் மட்டுமே ஈர்க்கும் காட்சிகளுடனும், நம்பகத்தன்மையுடனும் இப்படி ஒரு படமா, என்று ஆச்சரியத்தில் வாயைப் பிளந்து கொண்டிருந்ததில், ஷேக்ஸ்பியரை கேவலப்படுத்தியது ஒரு பொருட்டாகவே இல்லை!
வால்மீகியையோ, பாரதியாரையோ இந்தளவிற்கு சித்தரித்து, இங்கு ஒரு படம் சாத்தியமாகுமா?


ஜூலியா ராபர்ட்ஸ் வில்லியாக நடிக்க, ‘ஸ்நோ ஒயிட்கதை ‘மிரர் மிரர்என்று உருப்பெற்று உள்ளது. வழக்கமான தேவதைக்கதை படமென்றாலும், இறுதியில், ‘ஐ பிலீவ் இன் லவ்என்று இளவரசி பஞ்சாபிய இசையில் நடனமாடத் தொடங்கியதும், முதலில் ஒன்றும புரியவில்லை. ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ பாதிப்பா என்றுபார்த்தால் இயக்குஞர் இந்திய வம்சாவளியாம்.
இந்தியா தொடர்பில் ‘மிசன் இம்பாசிபில் இறுதிக்காட்சி, தற்பொழுது மிரர் மிரர்! பெருமையாக இருந்தாலும், நடன அசைவுகளும் இசையும் படத்தோடு ஒட்டவில்லை என்பதையும் கூற வேண்டும்!

மதுரை
10/06/12

18.5.12

மக்களவை உறுப்பினர்களுக்கு நன்றி!



இன்று டைம்ஸின் ஒரு மூலையில் “Loss for road accident victims, gain for insurers: Oppositionஎன்ற தலைப்பிலான செய்தி பலரால் கண்டு கொள்ளப்படாமலேயே போயிருக்கலாம். ஆனால், இந்தச் செய்தியில் நம்மில் சிலருடைய எதிர்காலத்தையே புரட்டிப் போடக்கூடிய பயங்கரம் ஒன்று இருப்பதும், விழிப்பான மக்களவை உறுப்பினர்கள் சிலரால் அந்த பயங்கரம் தள்ளிப் போடப்பட்டுள்ளது என்பதும் நம்மை அதிர்ச்சியடைய வைக்கலாம்.

அதீத சம்பளம் கிடைக்கும் ஒரு வேலையில் நீங்கள் இருக்கலாம். உங்கள் சேமிப்பும் வங்கிக் கடனுமாக சென்னையில் ஒரு வீடு வாங்கியிருக்கலாம். பெரிய கார் கூட வைத்திருக்கலாம். இனி எனக்கென்ன, என்று எதிர்காலம் பிரகாசமாகத் தெரிகையில் உங்கள் சொத்துகள் அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டால்?

அப்படிப்பட்ட ஆபாயத்திலிருந்துதான் நாம் தற்காலிகமாக காப்பாற்றப்பட்டுள்ளோம்.

நீங்களோ அல்லது உங்களுடைய ஓட்டுநரோ, எவ்வளவு சிறந்த முறையில் வண்டியை ஓட்டினாலும், எதிர்பாராதவிதமாக, விபத்து நடைபெறும் சாத்தியக்கூறு உள்ளது. உங்களது வாகனம் சம்பந்தப்பட்ட விபத்தில் காயம்படும் நபருக்கு / உயிரிழக்கும் நபரை நம்பியிருப்பவர்களுக்கு வாகன உரிமையாளராகிய நீங்கள் நஷ்டஈடு தரவேண்டும். ஆனால், நஷ்ட ஈடானது பாதிக்கப்படுபவரின் வயது, வருமானம், மருத்துவ செலவு ஆகியவற்றைப் பொறுத்து பல லட்சங்களில், ஏன் கோடியில் கூட இருக்கலாம். அதனை நீங்கள் கொடுக்க இயலாது என்பதால்தான், வாகனங்கள் கட்டாயமாக காப்பீடு செய்யப்படுகின்றன. அதனாலேயே, வாகன உரிமையாளர்கள் நிம்மதியாக தூங்க முடிகிறது.


வாகன உரிமையாளர்கள் என்ன, விபத்தில் சிக்கி சின்னாபின்னமாகும் நபர்களுக்கும் அவர்தம் குடும்பங்களுக்கும் உள்ள ஒரே ஆறுதல், அவர்களுக்கு ஏற்ப்பட்ட இழப்புக்கு ஈடான பண மதிப்பு காப்பீடு நிறுவனங்களால் தரப்படுவதாகும். தண்டுவடத்தில் ஏற்ப்படும் பாதிப்பால், வாழ்நாள் முழுவதும் படுக்கையிலேயே கழிக்க நேரிடும் ஒருவரின் குடும்பத்தினர் படும்பாடு சொல்லி மாளாது. பிற பாடுகளோடு பொருளாதார ரீதியிலான கஷ்டமும் சேர்ந்து கொண்டால் தற்கொலை எண்ணம்தான் மிஞ்சும் என்பதால், காப்பீடு நிறுவன நஷ்டஈடு முக்கியத்துவம் பெறுகின்றன.


இதுவரை அரசுடமையாக்கப்பட்ட காப்பீடு நிறுவனங்கள் மட்டுமே இயங்கி வந்த சூழ்நிலையில், மோட்டார் வாகன காப்பீட்டில் லாபம் ஏதுமில்லையென்றாலும், அவற்றின் பிற காப்பீடுகளில் கிடைக்கும் அபரிதமான லாபம், மோட்டார் வாகன காப்பீட்டில் அவற்றை தாராளமாக இருக்க உதவியது. ஆனால், தற்பொழுது தனியார் காப்பீடு நிறுவனங்கள் பெருகியுள்ள சூழலில் இப்படிப்பட்ட ஒரு சட்டதிருத்தம், நம்மை கவலை கொள்ள வைக்கிறது.

புதிய சட்டதிருத்தத்தின்படி காப்பீடு நிறுவனம் ஒரு குறிப்பிட்ட அளவிற்குத்தான் நஷ்டஈடு தரும். அதற்கு மேலான தொகையை வாகன உரிமையாளரிடம் வாங்கிக் கொள்ள வேண்டியதுதான். எத்தனை உரிமையாளர்களிடம் லட்சக்கணக்கில் நஷ்டஈடு தர வசதியிருக்கும்?

ஒரு எலும்பு முறிவினை நேர்ப்படுத்தவே இரண்டு மூன்று லட்சம் செலவாகும் நிலையில், சட்டதிருத்தம் அமுலுக்கு வந்தால் காப்பீடு நிறுவனம் அதிகபட்சம் ரூ.50,000/-ம்தான் தரும். பெரிய அளவில் காயமேற்ப்பட்டு பத்து, இருபது லட்சம் செலவானால், எந்த லாரி உரிமையாளரை துரத்தி நஷ்ட ஈட்டினைப் பெறுவது?

மாதம் ரூ.50,000/- சம்பளம் பெறும் 30 வயதுடைய இளம் கணவர் ஒருவர் உங்களது வாகனத்தில் அடிபட்டு இறந்தால், அவருக்கு நீங்கள் தர வேண்டிய இழப்பீடு 75 லட்சத்தை தாண்டலாம். சட்ட திருத்தம் அமுலுக்கு வந்தால், காப்பீடு நிறுவனம் தரும் தொகை 20 லட்சம் அளவில் இருக்கும். மீதியை நீங்கள்தான் தர வேண்டும். 1995ம் ஆண்டு மஹாஜன் என்ற அமெரிக்கமருத்துவரின் மரணத்திற்கு ஈடாக அவரது மனைவிக்கு அளிக்கப்பட்ட தொகை சுமார் 7 கோடி!

நினைத்துப் பாருங்கள், அந்த மஹாஜன் உங்களுடைய காரில் அடிபட்டு இருந்தால் 7 கோடி ரூபாய் கொடுப்பதற்கு போதிய சேமிப்பு/ சொத்து உங்களிடம் இருக்கிறதா என்று. பயமாக இருக்கிறதல்லவா?

ஆனால் இவ்விதமான அச்ச உணர்வு ஏதுமின்றி நமது மத்திய அமைச்சரவை இந்த சட்டதிருத்தத்திற்குஒப்புதல் அளித்துள்ளதுதான் சோகம். மேல் சபையிலும் நிறைவேற்றப்பட்டு, ஏதோ சில மக்களவை உறுப்பினர்கள் விழித்துக் கொண்டதன் பலன், நாம் தப்பித்தோம்.

ஆயினும், எவ்விதமான சமரசத்திற்கும் இடமில்லாமல் எதிர்க்க வேண்டிய கட்டாயத்தில் இந்த சட்டத்திருத்தம் நம்மை வைத்துள்ளது.

மதுரை
17/05/12

23.3.12

‘எ செப்பரேஷன்’ நம் கதை...


இன்று ஒரு சிறிய தவறு செய்து விட்டேன். ஒரு நல்ல திரைப்படத்திற்கு நாம் தரும் மரியாதை, எவ்வித இடையூறும் முக்கியமாக மின்விசிறி ஓடும் சத்தம் உட்பட வெளிப்புற சத்தம் ஏதுமின்றி, எவ்வளவு இருட்டு முடியுமோ அவ்வளவு இருட்டில் பார்ப்பதுதான். ஆனால், இவ்விதமான சூழலுக்கு எதிர்மாறான மத்தியான நேரத்தில் குடும்பத்தோடு ஆஸ்கர் விருது வாங்கிய ‘எ செப்பரேஷன் என்ற ஈரானிய திரைப்படத்தை பார்க்க நேர்ந்ததைத்தான் தவறு என்று சொல்கிறேன்.


ஈரானில் நிலவும் சூழலால், வெளிநாட்டில் சென்று குடியேற விரும்புகிறார் ‘சிமின்’. அவரது கணவரான ‘நாதர்க்கோ, அல்சீமியர் நோயால் பாதிக்கப்பட்ட அவரது தந்தையை விட்டு பிரிய இயலாத நிலை. அவர்களது பதினொரு வயது மகள் ‘தெர்மா யாரிடமிருப்பது என்ற பிரச்னையால் எழும் போராட்டம்தான் கதையென்றால், இல்லை அதையொட்டி எழும் வேறு பிரச்னைகள், அதன் சம்பவங்கள்தான் படம். மனைவி பிரிந்தவுடன் தந்தையை கவனித்துக் கொள்ள வேலைக்கு நியமித்த ‘ரெசியாவை அவர் செய்த தவறுக்காக, நாதர் பிடித்துத் தள்ள ரெசியாவின் வயிற்றில் இருக்கும் குழந்தை இறக்கிறது. தொடர்ந்த நீதிமன்றப் போராட்டம், ரெசியாவின் கணவரின் இயலாமையால் எழும் வெறுப்பு. அவர்களது குட்டிக் குழந்தை என எவ்வளவோ இருக்கிறது.

இப்படத்தின் கதையை விவரித்துக் கொண்டிருப்பதை விட, அதனை பார்ப்பவர்களின் அனுபவத்திற்கு விடுவதே சிறந்ததாயிருக்கும். ஏனெனில், கதை என்பதை விட படத்தில் வரும் சம்பவங்கள், நம் வீட்டில், குடும்பத்தில் நிகழ்வதைப் போலவே எளிதில் நம்மால் தொடர்புபடுத்திக் கொள்வதை தவிர்க்க இயலாது. பக்கவாதம் அல்லது மூப்பின் காரணமாக படுக்கையில் விழும் முதியவர்களைச் சமாளிக்க நேரும் குடும்பம் ஒவ்வொன்றிலும் எழும் போராட்டங்கள்தான் படத்தில் காட்சிகளாக விரிகிறது.

மகளுக்கு பாடம் சொல்லித் தரும் ‘நாதர்குறிப்பிட்ட வார்த்தைக்கு பெர்சிய மொழியிலான அர்த்தத்தைக் கேட்க, மகள் கூறும் வார்த்தை அரேபிய வார்த்தை என்று மறுத்து பெர்சிய வார்த்தையை சரியான பதிலாக சொல்லிக் கொடுக்கிறார். மகளோ ‘ஆசிரியை இப்படித்தான் சொல்லிக் கொடுத்திருக்கிறார், தந்தை கூறும் பதிலைக் கூறினால் ஆசிரியை மதிப்பெண்களை குறைப்பார் என்று சிணுங்க, இங்குள்ள எந்தத் தந்தையையும் போலவே, ‘மதிப்பெண் போனாலும் பரவாயில்லை, தான் சொல்வதைத்தான் மகள் கேட்க வேண்டும்என்று சீறும் காட்சி போதும்.

ஈரானின் அரசியலும், வளரும் நாடுகளின் நடுத்தரவர்க்க பொதுவான மனப்பான்மையும் ‘ஈரானில் நிலவும் சூழலால், வெளிநாடு போக விரும்புவதாகவிவாகரத்து நீதிபதியிடம் கூறும் ‘சிமினிடம் ‘என்ன வகையான சூழல்என்று நீதிபதி கேட்கும் ஒற்றைக் கேள்வியில் இருப்பதால், படத்தின் ஒவ்வொரு காட்சியும் முக்கியத்துவம் பெறுகிறது.

ஒவ்வொரு ஈரானியப் படம் பார்க்கையிலும் எழும் முக்கியமான கேள்வி இந்தப் படத்திலும் எழுந்தது. அது எப்படி ஈரானில் குட்டிக் குழந்தைகளை இப்படி இயல்பாக நடிக்க வைக்கிறார்கள்?

நான் முதலில் கூறிய சூழலில் படத்தினைப் படத்தினைப் பார்க்கையில் படம் முடிந்ததும், அதன் கருவை ஒட்டி அமைக்கப்பட்டிருக்கும் இசையை கேட்டபடியே உறங்கச் செல்கையில் படத்தின் பாத்திரங்கள் நம் ஆழ்த்தூக்கம் வரை நம்மைத் தொடர்வதை வைத்து படம் நம்மை பாதித்திருக்கும் அளவை உணர இயலும்.

ஆனால் ‘எ செப்பரேஷன்படம் முடிந்த வெப்பம் மிகுந்த மாலைச்சூழலில் அது சாத்தியமில்லை. ஆனாலும் ஒரு மணி நேர குட்டித்தூக்கம் போடலாமென்று தூங்கி பின் விழிக்கையில்தான் புரிந்தது படத்தின் தாக்கம்!


கனவா, இல்லை நினைவா என்ற நிலையில் படத்தின் ஒவ்வொரு பாத்திரங்களும் ஏதோ கலீடாஸ்கோப் தோற்றம் போல ஏதேதோ சம்பவங்களாக விரிய, இதனை எழுதும் இந்தக் கணம் வரை மனதை விட்டு அகல மாட்டேன் என்கிறார்கள். மூன்று வாசல்மணி, இரண்டு தொலைபேசி அழைப்பு இடையூறுகளையும் கடந்து படம் இந்த அளவிற்கு பாதிப்பினை ஏற்ப்படுத்தியிருக்கிறது என்றால், நான் இங்கு எழுதாத மற்றும் பல காட்சிகளும், பாத்திரங்களுமே காரணம்!

அதனை உணர, ‘எ செப்பரேஷன்படத்தைப் பார்ப்பதுதான் சரியான முறை!

மதுரை
23/03/12

26.2.12

வேளாச்சேரியும், ப்ரமக்குடியும்…


முதலில் சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற கொடூரனில் ஆரம்பிக்கும். பின்னர் பெண்ணை பலாத்காரம் செய்து கொன்ற கொலைகாரனை போட்டுத் தள்ளினால் என்ன என்ற எண்ணம் பிறக்கும். அடுத்து கொள்ளைக்காரன்

கோவையில் கடந்த வருடம் நடைபெற்ற ‘மோதல்சாவு பற்றிய எனது கட்டுரையொன்றில்தான் இவ்வாறு நான் குறிப்பிட்டேன். நான் கூறியது போல கடந்த வாரம் கொள்ளைக்காரர்களையும் சுட்டுத்தள்ளியாயிற்று. இனி தனிப்பட்ட நபர்களின் சொத்துப் பிரச்னையில் தலையிட்டு துப்பாக்கியை காட்டி மிரட்ட வேண்டியதுதான் பாக்கி.

ஆனாலும், நம்பிக்கையளிக்கும் ஒரு விடயம், காவல்துறை இந்த முறை நடந்து கொண்ட முறை. பத்திரிக்கைச் செய்திகளைப் பார்க்கும் பொழுது, தனது ‘ஈகோவுக்கான சவாலாக வங்கிக் கொள்ளையை எடுத்துக் கொண்ட காவல்துறை அவசரகதியில் செயல்பட்டு பல ஓட்டைகளை விட்டுள்ளது. இம்மோதல் சாவுகள் குறித்து நாளை நீதிமன்றத்தில் அல்லது மனித உரிமை ஆணையத்தில் நடக்கப் போகும் விசாரணையில், காவல்துறை பல தர்ம சங்கடமான கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும்.

முக்கியமாக, தேவையில்லாமல் ஊடகங்களின் வாயிலாக கசியவிடப்படும் ‘வட இந்தியர்கள்தாம் இங்கு பெரிய கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள்என்பது போன்ற கருத்துகள் கொள்ளையர்களின் மாநிலமான பீகாரில் தமிழகத்திற்கு எதிரான பொதுக்கருத்தினை உருவாக்கி, மோதல்சாவு குறித்து நடக்கவிருக்கும் விசாரணையில் காவலர்களுக்கு எதிரான நிலையை பீகார் அரசே எடுக்க வேண்டிய சூழல் கூட ஏற்ப்படலாம்.

இத்தாலியர் ஒருவர் இந்தியாவில் சிறைபிடிக்கப்படுகையில், இத்தாலிய அரசு அவருக்கான சட்டப்பாதுகாப்பினை முழுமையாக அளிக்க முன் வருகையில், பீகார் அரசு அப்படிச் செய்யாது என்று எப்படி எதிர்பார்க்க முடியும்.

மோதல் சாவு நிகழ்வுகளில் காவலர்களின் பாதுகாப்பு அரசுத்தரப்பில் கிடைக்கும் ஆதரவு. ஆனால் தேவையில்லாமல் ‘வட இந்தியர்கள் என்ற ரீதியில் பிரச்னையை கொண்டு செல்வதன் மூலம், ஒரு மாநில அரசு காவலர்களுக்கு எதிரான நிலைப்பாட்டினை எடுத்தால், சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு பிரச்னை ஏற்ப்படலாம்.

இதனை எதிர்பார்த்துதான் நேற்று, ‘கொள்ளையர்களுக்கு நக்ஸலைட் தொடர்பு என்ற செய்தி கசியவிடப்பட்டது என்று நினைக்கிறேன்.

சைலேந்திரபாபுவுக்கு சமர்ப்பித்த முதலில் குறிப்பிட்ட எனது பதிவினை திரிபாதிக்கும் சமர்ப்பிக்கிறேன்.

-oOo-

பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் கூட இப்படித்தான். முதலில் சம்பந்தப்பட்ட காவலர்கள் ‘கெத்தாகத்தான் இருந்தார்கள். உயர்நீதிமன்ற உத்தரவிற்கு பின்னர் தற்பொழுது சிபிஐ விசாரணையை துவக்கியுள்ளது. முறையாக புலன் விசாரணை நடத்தப்பட்டால் சிலருக்கு பிரச்னை ஏற்ப்படலாம் என்பதால், சம்பந்தப்பட்டவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

முக்கியமாக, மரணமடைந்த ஐவரில் இருவரின் மரணம் பிரச்னை ஏற்ப்படுத்தலாம். கலவரத்தை ஒடுக்க நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஐவர் பலியானார்கள் என்பது காவல்துறையின் வாதம். அப்படியானால் இருவர் மரணமடைந்தது கைகள் மற்றும் கால்களின் எலும்புகள் முறியும் வண்ணம் தாக்கப்பட்டதால் என்று அவர்களின் பிணக்கூறாய்வு அறிக்கை கூறுகிறது. யார் இவர்களை இவ்வாறு தாக்கினார்கள் என்று ஆராயப்பட்டால், சம்பந்தப்பட்டவர் சிறைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்ப்படலாம்.

-oOo-

நேற்று ஹெராயின் பற்றிய நேஷசனல் ஜியாகிரபி ஆவணப்படம் பார்த்துக் கொண்டிருந்தேன். இடையே எனது எட்டு வயது மகள் கேட்ட கேள்வி, ‘டிரக்ஸ் அவங்க பெர்சனல் பிராப்ளம், அதுக்கு எதுக்கு போலீஸ் அவங்களை புடிக்கணும்

தூக்கி வாரிப் போட்டது எனக்கு!

மதுரை
26/02/12

17.2.12

ஏன் ஆ.ராசா, கடவுள்?


‘மிதிவண்டியில் வீடுவீடாக சென்று பால் விற்கும் பால்காரர் ஒருவருக்கு அலைபேசி அழைப்பு வரும். தலையில் கட்டியிருக்கும் முண்டாசிலிருந்து அலைபேசியை எடுக்கும் அவர், ‘ஹலோ’ ‘ஹலோ’ என்று கத்திவிட்டு வெறுப்பாக காலி சட்டியில் அலைபேசியை வீசி எறிவார்’

தற்போதய சூழ்நிலையில் எவ்விதமான சுவராசியமுமில்லாத இத்திரைப்பட காட்சியமைப்பு, சில ஆண்டுகளுக்கு முன்னர் தொலைக்காட்சியில் அடிக்கடி காண்பிக்கப்பட்டு நம் மனதில் உறைந்து போன நகைச்சுவைக் காட்சி!

ஆனால், அந்த நகைச்சுவையின் பின்னே ஒளிந்திருக்கும் குரூரமான மனநிலைதான் இன்றும், ‘விலைமதிப்பற்ற அலைக்கற்றையை இலவசமாக சிலர் கொள்ளையடிப்பதா? வாங்கிக் கொள்ளட்டும் அதனை வசதியிருப்பவர்கள்’ என்று தர்ம அடிக்கும்பல் (lynching mob) போல ‘பொது ஏலம்’ ‘பொது ஏலம்’ என்று வலியிறுத்தும் ஊடகங்களை ஆட்டுவிக்கிறது.

சமூகத்தில் நடுநிலையில் இருப்பவர்களான பால் விற்பனையாளர்களையெல்லாம் தாண்டி அலைபேசிகள் இன்று அடிமட்டம், ஏன் எந்தமட்டத்திலும் இல்லாத பிச்சைக்காரர்கள் வரை புழக்கத்திற்கு வந்து விட்டது என்றால், அலைக்கற்றை ஏறக்குறைய இலவசம் என்ற அரசின் கொள்கையன்றி வேறெதுவும் இல்லை.

-oOo-

வளர்ச்சிக்கான முக்கியத் தேவை, தொலைதொடர்பும், போக்குவரத்தும் என்பது நமது நாட்டில் பல ஆண்டுகளாக உணரப்படவே இல்லை. தொலைபேசி என்பது ஆடம்பரமாகவே கருதப்பட்டு, சமூகத்தின் நடுத்தர வர்க்கத்தினருக்கே அவ்வசதி மறுக்கப்பட்டு வந்ததை நாற்பது வயதை கடந்தவர்கள் நன்கு அறிவார்கள்.

தொலைபேசி வசதியில்லாத ஒருவன், தான் நிற்கும் சமூக அடுக்கிலிருந்து இருந்து மேல் அடுக்கிற்கு செல்ல முன்பு எடுத்த முயற்சியில் இன்று தன் கையில் அலைபேசியை வைத்திருக்கும் ஒருவன், நூற்றில் ஒரு பங்கு முயன்றால் போதும். அதே வளர்ச்சியை எட்ட முடியும்.

வசதி வாய்ப்பு அற்றவர்களின் வளர்ச்சியில் அலைபேசி எவ்வாறு பங்கெடுக்க முடியும் என்பதை நான் அடிக்கடி நினைவு கூறும் ஒரு உதாரணத்தைக் கொண்டே விளக்க முடியும். மும்பையில் இருக்கையில் பல இளம் வழக்குரைஞர்கள் அலைபேசியை மட்டும் வைத்துக் கொண்டு தங்கள் கட்சிக்காரர்களுடன் அனைத்து தொடர்புகளையும் ஏற்ப்படுத்திக் கொண்டு தங்கள் தொழிலை புரிவதை கவனித்திருக்கிறேன். இவர்கள், வழக்குரைஞர் குடும்பங்களில் பிறந்தவர்கள் இல்லை. அலுவலகம் வாடகைக்கு பிடிக்கும் அளவுக்கு வசதியான குடும்பங்களில் பிறந்தவர்களும் இல்லை. பெரிய சட்ட நிறுவனங்களில் இணைந்து பணியாற்ற இவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது. வேறு ஒரு வழக்குரைஞரின் அலுவலகத்தில் போதிய வருமானம் இன்றி இளைய வழக்குரைஞராக பணியாற்றுவதற்கு அவர்களது குடும்ப சூழ்நிலை இடம் கொடுக்காது.

சமூகத்தின் கடைக்கோடியில் நிற்கும் இவர்களைப் போன்ற வழக்குரைஞர்களும், வசதிமிக்க எதிர்காலம் குறித்த நம்பிக்கையுடன் மற்ற வழக்குரைஞர்களுக்கு நிகராக தொழில் செய்ய முடிகிறதென்றால், அதற்கு காரணம் ஏறக்குறைய இலவசமாக கிடைக்கும் தொலைத் தொடர்பு வசதிதான்.

இந்த உதாரணம் அனைத்து தொழிலுக்கும் பொருந்தும். ஏன், இன்று எழுத ஆர்வமுள்ள எவருக்கும் தமது கருத்தினை இணையத்தில் பதிந்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடிகிறது. இதன் மூலம் கிடைக்கும் பிரபல்யத்தால், தங்களது ஆக்கத்தை புத்தகமாகவும் பதிப்பித்து அடுத்த கட்டத்துக்கு போவது எளிதாக உள்ளது. பெரிய எழுத்தாளர்கள் என்று அறியப்படுபவர்களோடும் சரிக்கு சரியாக நின்று வாசகர்கள் விவாதம் செய்கின்றனர். பத்து ஆண்டுகளுக்கு முன்னர், சென்னையில் இயங்கும் பத்திரிக்கை நிறுவனங்களோடு அறிமுகமில்லாத ஒரு எளிய எழுத்தாளருக்கு கிடைக்காத வாய்ப்பு தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள எழுத்தாளன் ஒருவனுக்கும் இன்று கிடைக்கிறது என்றால், அதற்குக் காரணம் தொலைத்தொடர்பு வசதியை மக்களிடமே விலை பேசும் கொள்கையை அரசு கை விட்டதினால்தான்.

-oOo-

தொலைபேசி நிறுவனங்களுக்கு விற்க்கப்படும் அலைக்கற்றை இறுதியில் விற்க்கப்படுவது நாட்டின் வளர்ச்சியில் தங்களின் பங்கினைப் பெற நம்பிக்கையுடன் காத்திருக்கும் சாதாரண மக்களிடம்தான். அலைபேசி சேவை கட்டணங்களை தீர்மானம் செய்ய ‘டிராய்’க்கு (TRAI) அதிகாரமுண்டு. தற்பொழுது நிலவும் போட்டியின் காரணமாக, விலை குறைவாக இருப்பதை கவனத்தில் கொண்டு விலை நிர்ணயிக்கப்படவில்லை. ஆயினும், எந்தக் காலத்திலும் டிராய் சேவையின் அதிகபட்ச விலை அல்லது குறைந்தபட்ச விலை ஆகியவற்றை நிர்ணயிக்கலாம். அவ்வாறு நிர்ணயிப்பது, சேவை நிறுவனம் அந்த சேவைக்காக செய்துள்ள முதலீட்டிற்கான நியாயமான வட்டி விகிதத்தின் அடிப்படையில் இருக்க வேண்டுமென டிராய் நெறிமுறைகள் கூறுகின்றன.

அவ்வாறான நிலையில், அலைக்கற்றையை பெறுவதற்கு ஒரு நிறுவனம் அரசிற்கு செலுத்தும் தொகையையும் அதன் முதலீடாக கணக்கில் எடுக்கப்படும். அலைக்கற்றை இலவசமாக அளிக்கப்படும் பட்சத்தில், சேவை நிறுவனத்தின் செலவினங்கள் மட்டுமே முதலீடாக கணக்கில் எடுக்கப்படும். எனவே, 1.75 லட்சம் கோடிக்கு அலைக்கற்றையை விற்று இருக்க முடியும் என்றால், அந்த கோடியை இறுதியில் செலுத்தப் போவது, சேவையை பயன்படுத்தும் சாதாரண மக்கள்தான்.

டிராய் இவ்வாறு சேவைக்கட்டணத்தை நிர்ணயிக்கையில், அலைக்கற்றையை குறைந்த விலைக்கு பெற்ற நிறுவனம், தான் லஞ்சமாக செலுத்திய பணத்தை முதலீடாக காண்பிக்க முடியாது. ஏன், உரிமம் பெற்ற நிறுவனம் தனது பங்குகளை வேறு நிறுவனத்திற்கு அதிக விலைக்கு விற்றதையும் செலவுத் தொகையாக காட்ட முடியாது. அனைத்தும் விதிப்படி நடக்கும் என்ற ஒரு சட்டக் கற்பனையில் (legal fiction), அலைக்கற்றைக்கு கொடுக்கப்படும் லஞ்சமானது, சேவை நிறுவனங்களின் லாபத்திலிருந்து கொடுக்கப்படும் பங்குதானேயொழிய வாடிக்கையாளர்களின் பணமல்ல, என்பதுதான் உண்மை!

பேருந்து வழித்தட உரிமங்களையே எடுத்துக் கொள்வோம். மதுரையிலிருந்து தேனி, கம்பம் செல்லும் வழித்தடத்தின் மதிப்பு ஒரு கோடியை எட்டுகிறது. ஆனால், வழித்தடமானது இலவசமாகவே அரசால் முதலில் வருபவருக்கு முன்னுரிமை அடிப்படையில் அளிக்கப்படுகிறது. வழித்தட உரிமையை ஏலம் விட்டால், அரசுக்கு பல கோடி கிடைக்கும்தான். ஆனால், இதுதான் பேருந்து கட்டணம் என்று அரசு நிர்ணயிக்க முடியாது.


தற்பொழுது, எனக்குள்ள பயம் அலைக்கற்றை வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் யாராவது, தமிழகத்தில் வழங்கப்பட்டுள்ள பேருந்து வழித்தட உரிமங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கு தொடர்ந்து விடுவார்களோ என்பதுதான்!

மதுரை
17/02/1

4.2.12

சோனியா தேசத்துரோகியா?


Sonia's govt has not only looted the nation, it has also brought disrepute to a non-controversial Army and its general - the greatest treason” S.Gurumurthy in Twitter

தினம் தினம் இந்தியாவின் அனைத்து உயர்நீதிமன்றங்களிலும் எழுப்பப்படும் ஒரு சாதாரண சட்டப்பிரச்னை எப்படி சோனியா மீதான தேசத்துரோக குற்றமாக உருப்பெருகிறது என்பதை பார்க்கும் பொழுது, இந்தியாவில் கவலைப்படுவதற்கும், நீதிமன்றங்கள் தங்களது பொன்னான நேரத்தை செலவழிப்பதற்கும் வேறு பிரச்னைகளே இல்லையா, என்று தோன்றுகிறது.

இன்று ஆங்கில பத்திரிக்கைகளின் முதல் பக்கத்தில் பெரிய எழுத்துக்களில், மத்திய அரசு ஏதோ படுகொலை செய்து விட்டு உச்ச நீதிமன்றத்தின் முன் கையைப் பிசைந்து கொண்டு நிற்பதைப் போலவும், நீதிபதிகள், ’இத்தோடு நீ தொலைந்தாய் போ’ என்று எச்சரித்துக் கொண்டிருப்பதைப் போலவும் தலைப்புச் செய்திகள்!



இந்திய ராணுவத்தின் தலைமை தளபதி வி.கே.சிங், 1951ம் ஆண்டில் பிறந்தவர். ஆனால் தேசிய பாதுகாப்பு கல்லூரி (National Defence Academy) சேர்வதற்கான தனது மனுவில் தனது பிறந்த வருடத்தை 1950 என ‘தவறுதலாக’ அளிக்க அந்த வருடமே அவர் பிறந்த வருடமாக அவரது பணிப்பதிவேட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் பணியில் சேர்வதற்கு முன்னரே, பிறந்த வருடத்தை சரி செய்வதற்காக மனு கொடுக்கப்பட்டதாகவும், ஆனால் இது நாள் வரை தவறு சரி செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டதால் வி.கே.சிங் இந்த வருடமே பணிமூப்பு அடைந்து விடுவார்.

சரி செய்யப்பட்டால் அடுத்த வருடம்தான் பணிமூப்பு அடைவார். அவ்வாறு அவருக்கு மேலும் ஒரு ஆண்டு கிடைக்கும் பொழுதில் அவருக்கு பின்னே ‘இதோ அடுத்து நாம்தான் தலைமை தளபதி’ என்று காத்திருக்கும் நபர் முதல் அவருக்கு பின்னே மற்றவர் என சங்கிலித் தொடர் போல நின்று கொண்டிருக்கும் பலரின் எதிர்பார்ப்பில் மண்!

முன்னரே இந்தப் பிரச்னை தீர்க்கப்பட்டிருந்தால், பலர் இவ்வளவு ஆர்வமுடன் இருந்திருக்க மாட்டார்கள். ஆனால், கடைசி நேரத்தில் செய்யப்படும் மாற்றம் ராணுவத்தின் மற்ற தளபதிகளிடையே அதிருப்தியை ஏற்ப்படுத்தலாம் என்பதால் அரசு கையை பிசைந்து கொண்டு நிற்கிறது.

இந்தப் பிரச்னை அனைத்து அரசு அலுவலகங்களிலும் இருப்பதுதான். உச்ச நீதிமன்றமும் சமீபத்தில் இப்படி கடைசி நேரத்தில் பிறந்த தேதியை மாற்றி பணிக்காலத்தை நீட்டித்துக் கொள்வதை தடுத்து பல தீர்ப்புகளைக் கூறியுள்ளது.

வி.கே.சிங் பிரச்னையில் ’அவர் உடனடியாக தேதியை மாற்ற மனு கொடுத்து விட்டார். ஆனால், ராணுவம்தான் அதனை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டது’ என்ற வாதம் அவருக்கு சாதகமாக இருந்தாலும், இவ்வளவு நாட்கள் கழித்து நீதிமன்றத்தை அணுகியதால் (Latches) பரிகாரம் ஏதும் அளிக்க இயலாது என்று கூறும் வண்ணமும் பல நீதிமன்ற தீர்ப்புகள் உள்ளன.

எனவேதான், அரசு தலைமை வழக்குரைஞர் வாஹனாவாட்டி அவர்கள், தற்சமயம் சிங் அவர்களின் பிறந்த தேதியை அவரது பணிப்பதிவேட்டில் மாற்ற இயலாது என்று சட்டக்கருத்தினை அரசுக்கு தெரிவித்துள்ளார்.



வாஹனவாட்டியின் சட்டக்கருத்தினை ஏற்றுக் கொண்ட அரசும் தளபதியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

இரண்டு வருடம் தலைமை தளபதியாக பணியாற்ற கிடைத்த வாய்ப்பை ஒரு பெருமையாக ஏற்றுக் கொண்டு தளபதி கெளரவமாக பதவி மூப்பு அடைந்திருக்கலாம். ஆனால், நீதிமன்றத்தை அணுகி விட்டார்.

எது எப்படியிருப்பினும், ராணுவ சேவை விதிகளில் கூறியுள்ளபடியும் ஏற்கனவே பிறந்த தேதி மாற்றுவது குறித்து உச்ச நீதிமன்றம் கூறியுள்ள பல்வேறு தீர்ப்புகளின் அடிப்படையில் ஒரு சட்டப்பிரச்னையாக தீர்க்க வேண்டிய ஒரு விடயம், ஊடகங்களின் அளவுக்கு மீறிய ஆர்வத்தாலும், பாரதீய ஜனதா கட்சி தலைவர்கள் சிலரின் பொறுப்பற்ற பேச்சுகளாலும் அரசியலாக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், இதே பிஜேபி அரசுதான், இந்தியாவின் அறிவுஜீவி அட்மிரல் என்று போற்றப்பட்ட கப்பற்படை தலைமை தளபதியான (Chief of Naval Staff) விஷ்ணு பகவத்தை அவரது பணிக்காலத்திலேயே பதவி நீக்கம் (Dismiss) செய்தது. சிறீகிருஷ்ணா கமிஷன் முன்னர் கம்யூனிஸ்ட் கட்சிக்காக ஆஜரான அவரது மனைவியான நிலோபரை ‘அரை-முஸ்லீம்’ என்று தேவையின்றி குறிப்பிட்டு அரசுக்கு கடிதமெழுதிய தளபதிக்கு பதவி உயர்வும் கொடுத்தது!



ராணுவத்தை அரசியலாக்கியதில் காங்கிரசை விட பிஜேபிக்கு பெரும் பங்கு உண்டு.  

-oOo-

நேற்று கூட நீதிமன்றத்தில் நடைபெற்றது ஒரு சாதாரண விடயம். தளபதியின் மனுவை தள்ளுபடி செய்வதற்கு அரசு தன்னுடைய காரணத்தை கூறியிருக்க வேண்டும். மாறாக, தலைமை அரசு வழக்குரைஞரின் ஆலோசனையின்படி தள்ளுபடி செய்ததாக குறிப்பிட்டுள்ளார்கள். வழக்குரைஞர் கூறுவது ஆலோசனை. அதன் அடிப்படையில் ஏன் தளபதியின் மனுவை ஏற்றுக்கொள்ள முடியாது எனக்கூற வேண்டும். இல்லையென்றால், அரசு வழக்குரைஞர் ஏதோ முடிவெடுக்கும் அதிகாரம் படைத்தது போல ஆகி விடும்!

அப்படி ஒரு விரும்பத்தகாத நிலையினை ஏற்றுக் கொள்ளாத நீதிபதிகள், ‘இந்த உத்தரவை திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள்’ என்று கூறியுள்ளனர். திரும்பப் பெறவில்லையென்றாலும், அந்த உத்தரவை தள்ளுபடி செய்யும் நீதிபதிகள், அரசை மீண்டும் மனுவை பரிசீலித்து புதிய உத்தரவு பிறப்பிக்க கோர வேண்டும். அப்படியான சூழலில் தளபதி புதிய உத்தரவை எதிர்த்து மீண்டும் ஒரு பேராணை மனுவுடன் நீதிமன்றத்தை அணுக வேண்டும். வீண் கால விரயம்.

எனவேதான் நீதிபதிகள் தங்களது எரிச்சலை காட்டினர். வேறு ஒன்றும் இல்லை!

நீதிமன்றமே, இந்தப் பிரச்னையை மற்றுமொரு சட்டப்பிரச்னையாக தீர்க்கட்டும் என மற்றவர்கள் ஒதுங்கிக் கொள்வதுதான், நாட்டின் நன்மைக்கான செயலாக இருக்கும்.

மதுரை
04/02/12