3.5.09

சு.சுவாமியின் வெற்றி!

ஸ்ரீதரன் : இதுவரை உச்ச நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் நீங்கள் எத்தனை வழக்குகள் தாக்கல் செய்துள்ளீர்கள்?

சுசுவாமி : எண்ணிலடங்காதது (I have lost count). ஆனால் அவையனைத்திலும் நான் வென்று விட்டேன். அவையனைத்தும் பொதுநல வழக்குகள்
. சுப்பிரமணியன் சுவாமி, சிபி (sify) இணையதள அரட்டையில்...

-oOo-

ஆமாம் வென்றுதான் விட்டார்...

22/12/03 தேதியிட்ட ஏசியன் டிரிபியூன் (Asian Tribune) இதழில் வெளிவந்த ‘சுவாமி, சிறீலங்கா தமிழ் அகதிகளுக்காக மற்றொரு வழக்கினை வென்றெடுத்துள்ளார் (Swamy wins another legal battle for Sri Lankan Tamil Refugees)’ என்ற தலைப்புச் செய்தியின்படி, வென்றுதான் விட்டார்.

அட! இலங்கைத்தமிழ் அகதிகளுக்காக அப்படியென்ன சட்ட சிக்கலை தீர்த்து விட்டார் என்ற ஆர்வம் ஏற்படாமல், வெறுமே செய்தியை மட்டும் படித்தால் சுவாமி தனது எண்ணிலடங்கா பொதுநல வழக்கு வெற்றிகளில், இந்த ‘வெற்றி’யையும் சேர்த்துக் கொள்வது நியாயமாகத்தான் இருக்கும்.

ஆனால் உண்மை நிலவரம் என்ன என்பது, அதே செய்தியில் கொடுக்கப்பட்டிருக்கும் வழக்கின் தீர்ப்பினையும் படித்தால்தான் புரியும்.

வழக்கம் போலவே இந்த முறையும் சுவாமி தன்னை ஒரு ‘நன்கு அறியப்பட்ட அரசியல்வாதியாகவும், ராஜதந்திரியாகவும் (statesman)’ மதராசு நீதிமன்றம் முன்பு அறிமுகப்படுத்திக் கொண்டு, ‘2003-04ம் ஆண்டிலும் அனைத்து உயர் கல்வி நிலையங்களிலும் (கல்லூரிகள்) தமிழகத்திலுள்ள சிறீலங்கா தமிழ் அகதி மாணவர்களுக்காக தனியே இடங்களை உருவாக்கி, அவர்களுக்கு உயர்கல்வி பயிலும் வாய்ப்பினை உருவாக்கித் தர வேண்டும்’ என்ற பரிகாரம் வேண்டி, பேராணை மனு எண் 26463/03 என்ற வழக்கினை தாக்கல் செய்கிறார்.

அதாவது தமிழக அரசு தானாகவே 1996ம் ஆண்டு முதல் கல்லூரிகளில், அவைகளில் அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கும் அதிகமாக இடங்களை உருவாக்கி அவற்றை சிறீலங்கா தமிழ் அகதிகளுக்கு ஒதுக்கி வந்ததாகவும், 2003ம் ஆண்டிலிருந்து அந்த ஒதுக்கீடு (reservation) நிறுத்தப்பட்டதால் அதனை தொடர வேண்டுமென்று தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டுமென்றும் வழக்கு.

எந்த ஒரு சட்டரீதியிலான அல்லது நிர்வாக ரீதியிலான ஆய்வினையும் மேற்கொள்ளாமல், வெறுமே இந்துவிற்கு எழுதும் ஆசிரியருக்கான கடிதம் பாணியில் அமைந்த சுவாமியின் மற்றொரு பேராணை மனு!

முக்கியமாக, அரசியலமைப்புச் சட்டப்படி இம்மாதிரியான விடயங்களில் முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உண்டு என்ற சிறிய கவனம் கூட இன்றி, மாநில அரசு மீது வழக்கினை தாக்கல் செய்த அலட்சியம் குறிப்பிடத்தக்கது. பின்னர், நிதிமன்றம் இந்த தவறினை சுட்டிக் காட்டியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். தனியே ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டு மத்திய அரசாங்கம் பேராணை மனுவில் எட்டாவது எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டது.

சரி, மத்திய அரசினை எதிர்மனுதாரராக சேர்த்த பின்னர் என்ன நடந்தது?

பெரிய வாதப் பிரதிவாதம் எல்லாம் இல்லை. ‘இந்த விடயத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் ஏற்கனவே கூறியபடி மத்திய அரசிடம் உள்ளது. மாநில அரசு விரும்பினால், கல்லூரிகளில் இடங்களை அதிகரித்து சிறீலங்கா தமிழ் அகதிகளுக்கு ஒதுக்கீடு செய்ய மத்திய அரசினை வேண்டிக் கொள்ளலாம்’ என்பதுதான் உத்தரவு.

பல சமயங்களில், வழக்கு தள்ளுபடி என்று கூறினால் வழக்காடிகள் வருத்தப்படுவார்களே என்பதால், அவர்கள் மீது மனமிரங்கும் நீதிமன்றம் தள்ளுபடி என்ற வார்த்தையை பயன்படுத்தாமல், இவ்வாறு சட்டப்புத்தங்களில் ஏற்கனவே உள்ளதை மீண்டும் உறுதிப்படுத்தி வழக்கினை முடித்து வைக்கும்.

ஆனால் தற்பொழுது இந்த வகையான உத்தரவுகளை ‘வெற்றி’ என்று வழக்குரைஞர்களை அணுகும் படிக்காத பாமரர்களே ஏற்றுக் கொள்வதில்லை. ஏசியன் டிரிபியூன் தனது வாசகர்களின் தரம் பற்றி கொண்டிருக்கும் மதிப்பீடு வியப்பளிக்கிறது!

-oOo-

சரி, தீர்ப்புக்கு பின்னர் என்னதான் நடந்தது. ஒன்றும் நடக்கவில்லை.

சுவாமிக்கு இந்த விடயத்தில் உண்மையான ஆர்வம் இருந்திருந்தால், மத்திய மாநில அதிகார மையங்களில் தனக்குள்ள வலிமையை (influence) பயன்படுத்தி, அது கூட வேண்டாம் தமிழக முதல்வரை பொதுவில் வேண்டுவதன் மூலம் எளிதில் இதனை முடித்திருக்கலாம்.

அரசின் கொள்கை முடிவுகளில், நீதிமன்றங்கள் தலையிடுவது இல்லை என்றாலும் கூட அவருக்கு வேண்டியது, நீதிமன்றம் என்ற பொது மேடை, அதைப் பயன்படுத்த ஒரு வழக்கு, ஒன்றுக்கும் உதவாத தீர்ப்பு என்றாலும் ‘சுவாமிக்கு வெற்றி’ என்ற பத்திரிக்கைச் செய்தி...

செய்தி உண்மைதான்....சுவாமிக்கு வெற்றிதானே!

மதுரை
03.05.09