30.6.09

வாமனன்...


இன்று காலை தினகரன் நாளிதழில் கண்ட விளம்பரம்....
நான் மேலே ஒரு வரி எழுதினால், பதிவர் சுரேஷ் கண்ணன் திரைப்பட விளம்பரத்தை எப்படி ரசிக்க வேண்டுமென்று ஒரு பக்கத்திற்கு வகுப்பெடுப்பார்.... :-)

18.6.09

‘ஈழ’த்தமிழர்களுக்கு உண்டு, இந்தியாவில் உயர்கல்வி!

இலங்கையிலிருந்து சுமதி இந்தியாவிற்கு குடி பெயர்ந்த பொழுது, அவளது வயது எட்டு. இலங்கையில் நிகழ்ந்த போர்ச்சூழலுக்கு பயந்து, அவளது பாட்டிதான் முதலில் ‘வாழ்ந்தது போதும்’ என்று சுமதியை அழைத்து கொண்டு அவளது பூர்வீக ஊரான புதுக்கோட்டைக்கு வந்தார்.

பின்னர் சுமதியின் தாயும், தந்தையும் இலங்கையின் ஞாபகங்களை மட்டுமே சுமந்து கொண்டு இந்தியாவிற்கு வந்து விட்டனர்.

வரும் பொழுது அவர்கள் அனைவரும் இலங்கை குடிமக்கள் (citizens). அவர்களிடம் இருந்த கடவுச் சீட்டினை (Passport) வைத்து அப்படித்தான் முடிவு செய்ய வேண்டியிருந்தது.

1920ம் ஆண்டு வாக்கில் இந்தியாவிலிருந்து, இலங்கைக்குச் சென்று குடியேறிய சுமதியின் தாத்தா, இலங்கை சுதந்திரம் பெற்றதும் அதன் குடியுரிமையைப் பெற்றார். சுமதியின் பெற்றோர்கள் அங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள்.

-oOo-

இந்திய குடிமக்கள் இல்லை எனினும், சுமதியின் பெற்றோர்களுக்கு இங்கு குடியேறவோ, தங்களுக்கென்று ஒரு தொழிலை அமைத்துக் கொண்டு வாழ்க்கையை ஓட்டவோ, முக்கியமாக சுமதிக்கு நல்லதொரு பள்ளியில் தனது கல்வியை தொடரவோ ஏதும் பிரச்னை இல்லை.

பொறியியற் கல்லூரியில் சேரும் பொழுது தேவைப்பட்ட பிறப்பிட சான்றிதழ் (Nativity Certificate) கூட சுமதி புதுக்கோட்டையில் சுமார் 12 ஆண்டுகளாக வசித்து வந்த சூழலில் தாசில்தார் வழங்கியிருந்தார்.

-oOo-

பொறியியற் கல்லூரியில், முதல் செமஸ்டர் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த பொழுதுதான் சுமதி மேலும் தனது கல்வியை தொடர முடியாது என்ற செய்தி வந்தது. சுமதியின் பள்ளி ஆவணங்களில் அவளது மதமாக ‘சிறீலங்கன் கிறிஸ்டியன்’ என்று குறிப்பிடப்பட்டிருந்ததை காரணமாக வைத்து தமிழக தொழில்நுட்ப கல்வித் துறை (Department of Technical Education) சுமதி வெளிநாட்டினைச் சேர்ந்தவர் (Foreign National) என்பதால் அவர் பொறியியற் கல்லூரியில் சேர தகுதியில்லாதவர் (ineligible) என்று கூறி அவரது சேர்க்கைக்கான அனுமதியை ரத்து செய்துள்ளது.

கல்வியை தொடர அனுமதி வேண்டி, சுமதி நீதிமன்றங்களின் கதவுகளை தட்டிக் கொண்டிருக்கிறார்.

தொழில்நுட்ப கல்வித் துறையோ, ‘மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பிலேயே ‘Foreign National’ஆக இருப்பவர்கள் சேரத்தகுதியில்லாதவர்கள் என்று குறிப்பிடப்பட்டு உள்ளதே’ என்று கூறுகிறது.

சுமதிக்கு இந்தியாவில் உயர்கல்வி மறுக்கப்படுவது சரிதானா? என்ற எனது சிறிய ஆய்வில் கிடைத்த பதில் ‘அவ்வளவு தூரம் இந்திய சட்டங்கள் இரக்கமற்றுப் போகவில்லை’ என்பதுதான்.

சுமதியைப் போன்று மேலும் பலர், அச்சத்தில் இருக்கலாம் என்பதால், சுமதியின் வழக்கு நிலுவையில் உள்ள பொழுதே இதனை இங்கு பதிந்து வைப்பதில் தவறில்லை என்று நினைக்கிறேன்.

-oOo-

1950ம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த இந்திய அரசியலமைப்புச் சட்டம் அதன் பண்பட்ட தன்மையில், உலகின் எந்த ஒரு அரசியலமைப்புச் சட்டத்திற்கும் குறைந்தல்ல என்பதற்கு சாட்சியாக அதன் பிரிவு 14 மற்றும் 21ஐ குறிப்பிடலாம்.

பிரிவு 14 அரசு இந்திய எல்லைக்குள் அனைவரையும் சட்டத்தின் முன் சமமாக நடத்த வேண்டும் என்றும், சட்டம் அளிக்கும் பாதுகாப்பினை அனைவருக்கும் சமமாக அளிக்க வேண்டும் என்று கூறுகிறது.

பிரிவு 21 எந்த ஒரு மனிதனுடைய உயிரும், தனிப்பட்ட சுதந்திரமும் சட்டம் ஏற்ப்படுத்தியுள்ள நடைமுறையை கைக் கொள்ளாமல் பறிக்கப்பட முடியாது என்று கூறுகிறது.

இவை இரண்டும் அரசியலமைப்புச் சட்டம் அளிக்கும் பல்வேறு அடிப்படை உரிமைகளில் முக்கியமானவை. இந்த உரிமைகளில் அடங்கியுள்ள உயரிய கோட்பாடுகளால் மட்டும் இந்த முக்கியத்துவம் ஏற்ப்படவில்லை.

மாறாக, சில அடிப்படை உரிமைகள் இந்த குடிமகன்களுக்கு மட்டுமே உரியதாகும். இந்த இரு உரிமைகள் மற்றும் பிரிவு 20, 22ல் கூறப்பட்ட உரிமைகள் மட்டும் ‘அனைவருக்கும்’ உரியதாகும். அதாவது, இந்திய குடிமகனாக இல்லாத (non-citizen) இல்லாத ஒருவருக்கும் இந்த உரிமைகளை மறுக்க முடியாது.

குடியுரிமை பெற்றிருந்தாலும், சிலருக்கு அமெரிக்க ஐக்கிய நாடுகளில் அதிபராகும் தகுதி கிடையாது. பாக்கிஸ்தானில் முஸ்லீம் அல்லாத ஒருவர் அதிபராக முடியாது. 1962 வரை சுவிட்சர்லாந்தில் பெண்களுக்கு ஓட்டுப் போடும் உரிமை கிடையாது. சமீபகாலம் வரை தென்னாப்ரிகாவின் பூர்வ குடிகளுக்கு ஓட்டுப் போடும் உரிமை கிடையாது. இந்த நிலையில் நமது அரசியலமைப்புச் சட்டம் உறுதிப்படுத்தும் மேற்கண்ட உரிமைகள், நாம் பெருமை கொள்ளத்தக்கவை!

எனவே சுமதி வெளிநாட்டினர் என்பதால், தனக்கு கல்வி மறுக்கப்படுவது, அரசியலமைப்புச் சட்டம் தனக்கு உறுதிப்படுத்தும் சம உரிமையை பாதிப்பதாகும் என்று இந்திய குடிமகளாக இல்லையெனினும், நமது நீதிமன்றங்கள அணுக முடியும்.

ஆனால், சம உரிமையினை பாதிக்கும் வண்ணம் அரசு சட்டமியற்ற இயலும். அவ்வகையான பாகுபாடு ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் இருப்பின் அவற்றை நீதிமன்றங்கள் ஏற்றுக்கொள்ளும். உதாரணமாக, மருந்து தயாரிப்பதற்கு வரி (excise tax) கிடையாது. ஆனால் சிகரெட்டிற்கு உண்டு என்றால் அதை ஏற்றுக் கொள்ளத்தக்க பாகுபாடு (reasonable classification) என்று நீதிமன்றங்கள் ஏற்றுக் கொள்ளும்.

எனவே, இந்திய குடிமகன் அல்லாதவர் இந்தியாவில் கல்வி பயில இயலாது என்று ஒரு சட்டம் இயற்றப்பட்டால், அதனை இந்தவிதமான அடிப்படையில் நீதிமன்றங்கள் ஏற்றுக் கொள்ளும். ஏனெனில் தகுதியுள்ள இந்திய குடிமகன்கள் அனைவருக்கும் உயர்கல்வியளிக்க நமது பொருளாதாரம் இடம் கொடுக்காத சூழ்நிலையில் இந்திய குடிமகன் அல்லாதவருக்கு பாகுபாடு காட்டும் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்தின் 14வது பிரிவினை பாதிக்காது என்றே நீதிமன்றங்கள் கருதும்.

எனவே இந்திய குடிமகன் அல்லாதவருக்கு உயர்கல்வியினை மறுக்கும் ஏதாவது சட்டம் உள்ளதா என்று ஆராய வேண்டியுள்ளது.

-oOo-

வெளிநாட்டினர் சட்டம் (Foreigners Act’1946) என்ற சட்டத்தின் பிரிவு 2(a) ‘வெளிநாட்டினர் என்பது இந்திய குடிமகன் அல்லாதவரை குறிக்கும்’ என்று விளக்கமளிப்பதை வைத்து இந்திய குடிமகன்கள் அல்லாதவரின் உரிமைகள் மற்றும் கடமைகளைப் பற்றி இயற்றப்பட்டுள்ள ஒரு சட்டம் என்பதை அறியலாம்.

இதன் பிரிவு 3(2)(e)(vii) குறிப்பிட்ட சில நடவடிக்கைகளில் வெளிநாட்டினர் ஈடுபடுவதை தடைசெய்து மத்திய அரசானது உத்தரவு பிறப்பிக்கலாம் என்று அனுமதியளிக்கிறது.

ஆனால் மத்திய அரசு இதுவரை ‘வெளிநாட்டினருக்கு இங்கு பொறியியல் கல்வி பயில தடை’ என்று ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரியவில்லை.

இந்தியா முழுவது பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வியை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் மத்திய அரசால் தோற்றுவிக்கப்பட்டுள்ள அமைப்பான ‘தொழில்நுட்பக் கல்விக்கான அகில இந்திய கழக’மும் (AICTE) அவ்வாறான ஒரு அறிவிப்பை வெளியிட்டதாக தெரியவில்லை.

மாறாக தொழில்நுட்ப கல்விக் கழகம் 21.01.04 அன்று வெளியிட்ட அறிக்கையின் மூலம் நடைமுறைப்படுத்திய விதிமுறைகளின்படி (Regulations) வெளிநாட்டைச் சேர்ந்தவர் (Foreign Nationals), இந்திய வம்சாவழியினர் (Person of Indian Origin) மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் வேலை பார்க்கும் தொழிலாளிகளின் குழந்தைகள் ஆகியோருக்கு தொழிநுட்ப கல்லூரிகளில் தனியே இட ஒதுக்கீடு அளிக்க வழி செய்கிறது.

கவனிக்கவும். இந்த விதிமுறைகளின்படி அனுமதிக்கப்படுவது இட ஒதுக்கீடு. எனவே பொது ஒதுக்கீட்டில் வெளிநாட்டினர் இடம் பெறுவதற்கு எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை என்று எடுத்துக் கொள்ளலாம்.

எனவே இந்திய குடிமகன்களாக இல்லாதிருப்பவர்கள் தகுதியிருப்பின் மற்ற இந்திய குடிமகன்களோடு இந்தியாவில் உயர்கல்வி பெற தடை ஏதும் மத்திய அரசோ அல்லது அதன் அமைப்பான தொழில்நுட்ப கல்விக்கழகமோ விதிக்காத வகையில், சுமதி இங்குள்ள பொறியியற் கல்லூரிகளில் இடம் பெற உரிமை உண்டு.

இந்திய அரசு 1983ம் ஆண்டு, சுகாதார அமைச்சம் அனுமதியளித்தால் (clearance) மட்டுமே மருத்துவ கல்லூரிய்களில் வெளிநாட்டினரை சேர்க்க முடியும் என்று உத்தரவிட்டது. கீர்த்தி தேசுமனாகர் எதிர் யூனியன் ஆப் இந்தியா ((1991) 1 SCC 104) என்ற வழக்கில் உச்ச நீதிமன்றம் கல்லூரியில் சேருவதற்கு முன்பு அவ்விதமான தடையின்மைச் சான்றிதழை சுகாதார அமைச்சகத்திடம் இருந்து பெற்றுக் கொடுத்து, தேவையான மதிப்பெண்களை பெற்றுள்ள வெளிநாட்டினர் மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்றுக் கொள்ளலாம் என்று தீர்ப்புக் கூறியுள்ளது இங்கு கவனிக்கத்தக்கது.

சுமதியின் வழக்கிலோ, தமிழக தொழிநுட்பக் கல்வித் துறை (DTE) தனது அறிவிப்பில் (Prospectus) வெளிநாட்டினைச் சேர்ந்தவருக்கு (Foreign national) பொறியியற் கல்லூரில் இடம் வேண்ட தகுதியில்லை என்று கூறியுள்ளது. அது ஏற்றுக் கொள்ளத்தக்கதான வாதமா என்பதையும் அடுத்து ஆராய வேண்டியுள்ளது.

-oOo-

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் (Seventh Schedule) மூன்று முக்கியமான பட்டியல்கள் (Lists) உண்டு. அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 246ன் படி முதலாவது பட்டியலில் (Union List) குறிப்பிடப்படும் விடயங்களைப் பற்றி மத்திய அரசு மட்டுமே சட்டமியற்ற முடியும். உதாரணமாக வருமான வரி. இரண்டாவது பட்டியலில் (State List) கூறப்படும் விடயங்களில் மாநில அரசு மட்டுமே சட்டமியற்ற முடியும். உதாரணமாக விற்பனை வரி. மூன்றாவது பட்டியலில் (Concurrent List) கூறப்படும் விடயங்களைக் குறித்து இரு அரசுகளும் சட்டம் இயற்ற முடியும். உதாரணமாக கல்வி.

வெளிநாட்டினர் பற்றிய சட்டமியற்றும் அதிகாரம் முதலாவது பட்டியலில் 17வது இலக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளதால், வெளிநாட்டினரை பாதிக்கும் சட்டம் எதுவும் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை.

மாநில அரசுக்கு சட்டமியற்றும் அதிகாரமே இல்லை என்ற பொழுதில், மாநில அரசின் அங்கமான தொழிற்நுட்ப கல்வித் துறைக்கு (DTE) வெளிநாட்டைச் சேர்ந்தவர் (Foreign National) தமிழக தொழிற்நுட்பக் கல்லூரிகளில் இடம் கோர தகுதியற்றவர்கள் என்று கூறும் அதிகாரம் கிடையாது.

எனவே, பொறியியற் கல்லூரி சேர்க்கை கையேட்டில் (Prospectus) கூறப்பட்டுள்ள நிபந்தனை செல்லுபடியாகாது. அந்த நிபந்தனையை காட்டி சுமதிக்கு இடம் மறுக்க முடியாது.

இந்த கருத்திற்கு ஆதரவாக நமது உயர்நீதிமன்றத்தின் இரு தீர்ப்புகளை சுட்டிக் காட்ட முடியும். முதலாவது செவந்திநாத பண்டாரசன்னதி எதிர் தமிழ்நாடு அரசு ((2006) 1 MLJ 134) என்ற வழக்கில் தமிழக அரசு, இந்து சமய அறநிலைய சட்டத்தில் (Hindu Religious and Charitable Endowment Act) “இந்து சமய நிறுவனங்களில் இந்திய குடிமகன் அல்லாதவர் அறங்காவலராக (Trustee) இருக்க முடியாது” என்று ஏற்ப்படுத்திய சட்டத்திருத்தம் செல்லுமா என்று ஆராயப்பட்டது. நீதிபதி கே.பி.சிவசுப்ரமணியம் அவர்கள், அரசியலமைப்புச் சட்டத்தின் மூன்றாவது பட்டியலில் கூறப்பட்டிருப்பதால், சமய நிறுவனங்களை பாதிக்கும் சட்டமியற்றும் அதிகாரம் மாநில அரசுக்கும் இருந்தாலும், மேற்கண்ட சட்ட திருத்தமானது அடிப்படையில் வெளிநாட்டினரின் உரிமை சம்பந்தப்பட்டதாக இருப்பதால், மாநில அரசுக்கு இவ்விதமான சட்ட திருத்தம் கொண்டு வர அதிகாரம் இல்லை’ என்று தீர்ப்புக் கூறியுள்ளார்.

இந்த தீர்ப்பின் 16 பத்தியில் நீதிபதி கூறும் ஒரு கருத்து கவனிக்கத்தகுந்தது. “This can be elucidated further by posing a question as to whether a State can bar the admission of a foreigner into an educational institution or a professional institution, in view of the fact that education falls under Entries 25 and 26 of the Concurrent List”

அடுத்த தீர்ப்பு நீதிபதி கற்பகவிநாயகம் ரவிக்குமார் எதிர் சுரேஷ் குமார் (2002 (3) CTC 616) என்ற வழக்கில் கூறியது. போதிய பணமின்றி காசோலை கொடுத்த குற்றத்திற்காக காசோலைகள் குறித்தான சட்டத்தின் (Negotiable Instruments Act) கீழ் தண்டிக்கப்பட்ட ஒரு நபர், தமிழக அரசு அளித்த தண்டனை தள்ளுபடியினால் (remission) விடுதலை செய்யப்பட்டார். அது முறையானதா என்று விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழக அரசுக்கு குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின் கீழ் தண்டனை தள்ளுபடி அளிக்க அதிகாரம் இருந்தாலும், குற்றவாளிக்கு தண்டனையானது காசோலைகள் குறித்தான சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. காசோலைகள் குறித்தான சட்டம் இயற்றுவதற்கு மத்திய அரசிற்கு மட்டுமே அதிகாரம் உள்ளபடியால், மாநில அரசு அந்தச் சட்டத்தின் கீழ் அளித்த தண்டனையில் தலையிட முடியாது என்று தீர்ப்பு கூறியுள்ளது.

மேற்கண்ட இரு தீர்ப்புகளிலிருந்து, வெளிநாட்டினருக்கு இங்கு கல்வி பயில தடை என்று சட்டமியற்ற/ உத்தரவிட தமிழக அரசிற்கு அதிகாரம் இல்லை என்பது தெளிவாகும். எனவே தமிழக தொழில்நுட்ப கல்வித் துறை, மத்திய அரசோ அல்லது அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகமோ ஏதும் கூறாத நிலையில், தன்னிச்சையாக இவ்வாறு ஒரு தடையை விதிக்க நமது அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் அதிகாரம் இல்லை.

இந்தக் கருத்தினை ஒட்டியே சனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசுவாமி தொடர்ந்த ஒரு வழக்கிலும், சென்னை உயர்நீதிமன்றம் 21.11.03 அன்று தீர்ப்புக் கூறியுள்ளது. அந்த வழக்கில் (WP No.26463 / 2003) இலங்கையிலிருந்து இங்கு குடிபெயர்ந்தோரின் குழந்தைகளுக்கு உயர்கல்வியில் இட ஒதுக்கீடு அளித்து இடம் கொடுக்க உத்தரவிட வேண்டுமென்று கோரப்பட்டது. அகதிகளைப் பொறுத்து அவ்வாறு உத்தரவிட மத்திய அரசிற்குதான் அதிகாரம் உண்டு என்று கூறி வழக்கினை முடித்து வைத்தது.

-oOo-

அடுத்து வெளிநாட்டினருக்கு இங்கு உயர்கல்வியினை மறுக்க, மத்திய அரசிற்கு அதிகாரம் இருப்பினும், அவ்வாறான ஒரு தடையினை உருவாக்குவது தார்மீக ரீதியில் முறையான ஒரு செயலாக இருக்காது. ஏனெனில் ‘கல்வியில் பாகுபாட்டிற்கு எதிரான அறிக்கை’ (Convention against Discrimination in Education) என்று பாரீசுவில் 14.02.60 அன்று நடைபெற்ற யுனெஸ்கோ (UNESCO) கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட அறிக்கையில் இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளது.

அந்த அறிக்கையின் Article 3(e) கூறுவதாவது:
“In order to eliminate and prevent discrimination within the meaning of this Convention, the states Parties thereto undertake:

(e) To give foreign nationals resident within their territory the same access to education as that given to their own nationals”


வெளிநாட்டினருக்கும், இந்தியருக்கு இணையாக கல்வியில் வாய்ப்பு வழங்குவதாக உறுதியளிக்கும் ஒரு அறிக்கையில் கையெழுத்திட்ட இந்தியா எவ்வாறு வெளிநாட்டினருக்கு உயர்கல்வியில் தடை விதிக்க முடியும்?

-oOo-

அடுத்தது, தமிழக தொழிற்நுட்ப கல்வித்துறை வெளிநாட்டினருக்கு (Foreign Nationals) இங்கு கல்வி பயில தடை என்று கூறியுள்ளது முறையானது என்று ஒரு வாதத்திற்கு வைத்துக் கொண்டாலும், சுமதியை அந்தத் தடை பாதிக்குமா என்று ஆராய்ந்தால், பாதிக்காது என்பதுதான் பதிலாக இருக்க முடியும்.

முதலில் சுமதியை வெளிநாட்டினர் என்பதற்கு ஆதாரமாக அவளது பள்ளி ஏடுகளில் அவள் ஒரு ‘சிறீலங்கன் கிறிஸ்டியன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது ஆதாரமாக கூறப்படுகிறது. ஒருவர் தன்னை சிறீலங்கன் கிறிஸ்டியன் என்று கூறிக்கொள்வதால் அவரை வெளிநாட்டினர் என்று கருத முடியாது. இந்தியாவில் சிரியன் கிறிஸ்டியன் என்பவர்கள் இருக்கின்றனர். அதற்காக கள் சிரியா நாட்டினை சேர்ந்தவர்கள் இல்லை. கத்தோலிக்கர்கள் தங்களை ரோமன் கத்தோலிக்கர் என்றுதான் அழைத்துக் கொள்கின்றனர்.

இலங்கை கடவுச்சீட்டுடன் இந்தியாவிற்கு வந்த சுமதி இலங்கை குடிமகள்தானே? அவ்வாறு என்றால் அவர் வெளிநாட்டினர்தானே? என்ற கேள்வி எழலாம்.

கடவுச்சீட்டு என்பது ஒருவரின் குடியுரிமையை யூகிக்கும் ஒரு ஆவணமே தவிர அதை வைத்து மட்டுமே அவரது குடியுரிமையை முற்றாக தீர்மானிக்க முடியாது என்றாலும், நமது வாதத்திற்காக சுமதி இந்திய குடிமகள் இல்லை என்று வைத்துக் கொள்ளலாம்.

குடியுரிமையை வைத்து மட்டுமே ஒருவரின் தேசியத்தை தீர்மானிக்க முடியாது என்பதுதான் இதற்கு பதிலாக இருக்க முடியும். ஏனெனில் பலர் நினைப்பது போல, பலமுறை சட்டம் இயற்றுபவர்களாலும், ஏன் நீதிமன்றங்களாலும் ஒன்றுக்கொன்று இணையாக பயன்படுத்தப்பட்டாலும் Citizenship மற்றும் Nationality என்ற பதங்கள் வெவ்வேறானவை.

இந்த இரு பதத்திற்கும் உள்ள வேற்றுமையை உணராமல், சுமதியின் வழக்கில் நீதிமன்றத்தில் அரசுத்தரப்பில் எழுப்பப்படும் கேள்வி, சுமதி இலங்கை குடிமகளாக இருக்கும் பட்சத்தில் அவள் வெளிநாட்டினர்தானே என்பதுதான்.

அதற்கு பதில் தொழிற்நுட்ப கல்வித்துறை உயர்கல்வியை தடுத்தது Foreign Citizensக்கு அல்ல மாறாக Foreign Nationalsக்கு. எனவே குடியுரிமை என்பது இங்கு ஒரு பொருட்டே அல்ல!


இதற்கு ஆதாரமாக நமது உச்ச நீதிமன்றம் ஸ்டேட் டிரேடிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிட் எதிர் வர்த்தக வரி அலுவலர் (AIR 1963 SC 1811) என்ற வழக்கில் கூறியுள்ள தீர்ப்பில் கூறப்படும் சில கருத்துரைகளை (observations) எடுத்துக் கூறலாம். ஒன்பது நீதிபதிகள் அடங்கிய பெஞ்சால் தீர்மானிக்கப்பட்ட இந்த வழக்கில், நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் பிளவுபட்டாலும் (divided) இந்த கருத்தினைப் பற்றி ஏதும் வேற்றுமை இல்லை. இந்த தீர்ப்பின் பல்வேறு இடங்களில் citizenship என்பதும் nationality என்பதும் வேறு வேறு என்று எடுத்துக் கூறும் நீதிபதிகள் அதன் 18வது பத்தியில்,

‘Hence all citizens are nationals of a particular state but all nationals may not be citizens of the State. In other words citizens are those persons who have full political rights as distinguished from nationals who may not enjoy full political rights and are still domiciled in that country’
என்று கூறுவதை வைத்து சுமதியின் வழக்கில் சுமதி இந்திய குடிமகளாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதை மட்டும் வைத்து அவள் இந்திய தேசிய இனத்தை சேர்ந்தவர் இல்லை என்று கூற முடியாது என்று வாதிட வழி இருக்கிறது.

எது எவ்வாறாக இருப்பினும், வெளிநாட்டு தேசிய இனத்தை (Foreign National) சேர்ந்தவரா? இல்லையா? என்பது, பொருண்மை சார்ந்த ஒரு கேள்வி (Question of fact). அதனை சுமதியின் கடவுச்சீட்டினை மட்டுமே வைத்து கணிக்க இயலாது என்பதையும் பார்த்தோம். எனவே, அவ்வாறான நிலையில் முதலில் சுமதி, தான் இந்திய தேசிய இனத்தை சேர்ந்தவர் என்று நிரூபிக்கும் வண்ணம் அவளுக்கு தகுந்த வாய்ப்பளித்து, அதற்குப் பின்னரே அரசு, சுமதி இங்கு உயர்கல்வி பெற தகுதி உள்ளவரா? இல்லையா? என்று தீர்மானிக்க இயலும்.

மாறாக, எவ்வித அறிவிப்பும் இன்றி, எவ்விதமான விசாரணையும் நடத்தப்படாமல், திடுமென ஒரு நாள், ‘உனக்கு தொழிற்கல்வி பயில தகுதியில்லை’ என்று கூறுவது சட்டத்திற்க் புறம்பானதாகும்.

-oOo-

தேசிய இனம் என்பது வேறு, குடியுரிமை என்பது வேறு என்பதற்கு பல்வேறு அரசியல் விஞ்ஞான (Political Science) விளக்கங்கள் இருப்பினும், மேலே கூறியபடி ஒரு விசாரணையானது நடத்தப்பட்டால், சுமதியால் தான் ‘foreign national’ இல்லை என்று நிரூபிக்க முடியுமா என்றால், அரசியல் விஞ்ஞானப்படி எப்படியோ ஆனால், தமிழக தொழிற்கல்வித் துறையினை கட்டுப்படுத்தும் வண்ணம் சுமதியால் எளிதாக நிரூபிக்க முடியும் என்றே நான் நினைக்கிறேன்.

நாம் மேலே பார்த்தபடி, தொழிற்கல்வியினை முழுவதுமாக கட்டுப்படுத்துவது தொழிற்கல்விக்கான அகில இந்திய குழுமம் (AICTE) என்ற அமைப்பு.

அதன் ‘The All India Council for Technical Education (for Admission under Foreign Nationals/ Persons of Indian Origin category/ quota in AICTE approved institutions) Regulations 2000 என்ற விதிமுறைகளில் Foreign National என்பதற்கான விளக்கம் இவ்வாறு கூறுகிறது
“3.12 Foreign National in this context means an individual having citizenship of a foreign country (citizens of all countries other than India) and not having the status of NRI and/or Persons of Indian Origin (PIO)”

இந்த விளக்கத்தின் மூலம் ஒருவர் வெளிநாட்டு குடிமகனாக இருப்பினும், இந்திய வம்சாவழியினராயிருப்பின் foreign citizen என்று கருதப்படமாட்டார் என்று அறியலாம்.

அதே விதிமுறைகளில் இந்திய வம்சாவழியினர் (PIO) என்பதற்கான விளக்கமாவது:
“3.11 Persons of Indian Origin in this context means a person having foreign citizenship without NRI status, but who holds a Foreign Passport at the time of sending application, consideration for admission and during the period of study and he or anyone of his parents or anyone his grandparents is (or was) citizen of India.

சுமதியின் தாத்தா/ பாட்டி முன்னொரு காலத்தில் இந்திய குடிமகனாக இருந்திருக்கும் பட்சத்தில் சுமதி இந்திய வம்சாவழி என்று கோர முடியும்.

ஏஐடிசியின் விதிமுறைகள் தமிழக தொழிற்கல்வித்துறையினை கட்டுப்படுத்தும்.

ஆக, சுமதி எல்லாவகையிலும் தனது வழக்கில் வெற்றி பெற நல்ல வாய்ப்பு இருக்கிறது.

-oOo-

தமிழக அரசின் தொழிற்கல்வித்துறை சுமதியின் துர்பாக்கியமான நிலையை கருதியாவது, இப்படிப்பட்ட ஒரு உத்தரவினை பிறப்பிக்காமல் இருந்திருக்கலாம்.

சற்றும் சிந்திக்காமலும், எவ்வித விளக்கத்தினை பெறாமலும் கூறப்பட்ட ஒரு உத்தரவின் மூலம், இன்று ஒரு அப்பாவிச் சிறுமியின் எதிர்காலமே கேள்விக்குறியாக நிற்கிறது!

மதுரை
17.06.09