8.11.07

சின்னதாய், ஒரு மின்னல்!

ஏறக்குறைய 500 வருடங்களுக்கு முன்னர் நடந்த கதை. மார்ட்டின் கெரி பிரஞ்சு தேசத்தை சேர்ந்த பெரிய ஒரு நிலச்சுவாந்தாரின் மகன். மார்ட்டினுக்கும் பெட்ராண்டே டி ரால்ஸ் என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றதென்றாலும், திருமண வாழ்க்கை அவ்வளவு மகிழ்ச்சிகரமானதாக இல்லை. சில வருடங்களாகியும் அவர்களுக்கு குழந்தையில்லை. மார்ட்டினுக்கு பாலியல் ரீதியான குறைபாடுகள் இருந்ததே காரணம் என்று சொல்லப்பட்டது. ஒரு கிராம வைத்தியப் பெண்ணிடம் ஆலோசனை கேட்க, பின்னர் என்ன நிகழ்ந்ததோ மார்ட்டினுக்கு புத்திர பாக்கியம் அமைந்தது.

சில காலம் கழித்து, மார்ட்டினுக்கும் அவரது தந்தைக்கும் குடும்ப சொத்து விவகாரமாக சச்சரவு எழ, வீட்டை விட்டு தனியே வெளியேற்றப்பட்டார் மார்ட்டின். பின்னர் அவர் தனது தந்தையின் பூர்வீக நாடான ஸ்பெயின் தேசத்துக்கு சென்றதாகவும், அங்கிருந்த ராணுவத்தில் கூலிப்படையாக சேர்ந்து விட்டதாகவும் சொல்லப்பட்டது.

எட்டு ஆண்டுகள் ஓடி மறைந்தன. மார்ட்டினின் தந்தை மறைந்திருந்தார். அவருடைய அளப்பறிய சொத்துக்கள் அவரது உறவினர்களின் மேற்பார்வையில். பெட்ராண்டேவோ உறவினர்களின் பாதுகாப்பில் தனது குழந்தையுடன் தனியே அதே கிராமத்தில் வசித்து வந்தார்.

திடீரென ஒரு நாள் வாசலில் மார்ட்டின்! பெட்ராண்டேவையும் குழந்தையையும் தேடி!!

முதலில் அனைவருக்கும் சந்தேகம். பின்னர் வந்தவருக்கு உருவ ஒற்றுமை இருந்தது. முன்னர் நடந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் நினைவு கூறவும் முடிந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக பெட்ராண்டேவுக்கு வந்த மார்ட்டினை மிகவும் பிடித்து விட்டது, முக்கியமாக மார்ட்டினிடம் இந்த எட்டு ஆண்டுகளில் தென்பட்ட பெரிய மாற்றம். மார்ட்டினுக்கோ காதல் காத தூரம். வந்தவனோ அதில் வல்லவனாக இருந்தான். திருமணமான பின்னர் முதன் முறையாக மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள் பெட்ராண்டே.

மார்ட்டினின் வருகையும், மனைவியுடனான புதிய வாழ்க்கையும் மற்ற உறவினர்களை சங்கடப்படுத்தியது. அவர்கள் இத்தனை நாட்கள் அனுபவித்து வந்த சொத்துக்களுக்கல்லவா வேட்டு வந்து விட்டது. அவர்கள் பெட்ராண்டேவின் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக விஷம் விதைத்தனர். 'வந்தவன் அவளையும் சொத்துக்களையும் திருட வந்தவன்' என்று சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லி வந்தனர். பெட்ராண்டேவுக்கோ தர்ம சங்கடம். அவள் கஷ்டம் அவர்களுக்கு எங்கே தெரியப் போகிறது?

பெட்ராண்டே வந்தவனை மார்ட்டின் என்று நம்பினாலும், வேறு வழியில்லாமல் உறவினர்களுடன் சேர்ந்து விரும்பாத ஒரு வழக்கை தாக்கல் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார். ஆனால் நீதிமன்றம், வழக்கின் இறுதியில், வந்தவன் ஒரு போலி என்று நிரூபிப்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்ற நிலைக்கு வந்தது.

நீதிபதி தீர்ப்பினை 'வந்தவன் மார்ட்டின். அவர் அவருக்கு சொந்தமான சொத்துக்களை கையகப்படுத்தலாம்' என்ற தனது தீர்ப்பினை வாசிக்க ஆரம்பித்து விட்டார். பெட்ராண்டேவுக்கோ உள்ளுக்குள் மகிழ்ச்சி...

தீடீரென செயற்கையான கட்டைக் கால்களுடன் ஒரு நபர், நீதிமன்றத்திற்குள் வந்தார்....பார்த்தால் மார்ட்டின்!!!

வந்தவன், மார்ட்டினுடன் ஸ்பெயின் கூலிப்படையில் பணியாற்றிய பன்செட்டே. பல்குரல் மன்னன் மற்றும் சிறந்த நடிகன். மார்ட்டினை சிநேகம் பிடித்த அவன், மார்டினின் முழுக்கதையும் கேட்டு அறிந்து பின்னர் மார்ட்டினாக உருமாறியிருந்தான். இருவரும் நன்கு பரிசோதிக்கப் பட்டு, பன்செட்டே போலி என்பது உறுதியானது.

இறுதியில் பன்செட்டே தான் போலி என்பதை ஒத்துக் கொள்ள...சில நாட்களில் தூக்கிலிடப்பட்டான்.

(One Author named Natalie Zemon Davis has written this story into a book titled The Return of Martin Guerre (1983). This has also been made into a film)


(இதே போன்றதொரு இந்திய வழக்கினைப் பற்றி எழுதுவதற்காக, இணையத்தில் தேடியதில் கிடைத்த சுவராசியமான மற்றொரு சம்பவம் இது. இந்திய வழக்கு ‘நான் யார்?’ என்ற பதிவில்)


(குஜராத் படுகொலைகளில் மோடியின் பங்கு பற்றி தெஹல்கா ஆய்வுகளை படித்த, பார்த்த எனக்கு, முன்பு நான் எழுதிய ‘விஷம் கக்கிய பாம்பு’ என்ற அமெரிக்க வழக்கு ஒன்றும் ஞாபகம் வந்தது)

நீதிபதிகள் கடவுள் அல்ல!

‘நமது விமானப் பணிப்பெண்களில் பலர் மிகத் தடிமனாக இருக்கிறார்களே’

‘ஆம், அதனால்தான் அவர்கள் இருக்கைகளுக்கிடையே நடக்க சிரமப்படுகிறார்கள் போல’


சுமார் 15 வருடங்களுக்கு முன்னர், கேலியும் கிண்டலுமான மேற்கண்ட உரையாடலை நான் கேட்டது ஏதோ கேளிக்கை விடுதியிலில்லை! தங்கள் உரிமைகளின் கடைசிப்புகலிடமாக மக்கள் கருதும், சென்னை உயர்நீதிமன்றத்தில். அதுவும் பின்னர் உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றிய நீதிபதிக்கும், சென்னையின் முக்கியமான சட்ட நிறுவனம் ஒன்றின் வழக்குரைஞருக்கும் இடையே, திறந்த நீதிமன்றத்தில் நடைபெற்ற உரையாடல்.

பலர் இந்த உரையாடலில் மகிழ்ந்து சிரித்தாலும், உயர்நீதிமன்றத்தில் புதிதாக தொழிலை ஆரம்பித்திருந்த எனக்கு சற்று வியப்பாக இருந்தது!

ஆயினும் இந்த சொல்லாடல்கள் (comments) எனக்கு இன்றும் மறக்கால் இருப்பதற்கு ‘that’s what they find it difficult to walk between the aisles’ என்று நுனி நாக்கு ஆங்கிலத்தில் அந்த வழக்குரைஞர் கூறியதை வைத்து aisle என்ற வார்த்தையினை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று கற்றுக் கொண்டதும் ஒரு காரணம்.

***

இந்த உரையாடல் நடைபெற்ற காலகட்டத்தில் இந்தியன் ஏர்லைன்ஸ் மட்டும்தான் இருந்தது என்பதை விடவும், இன்று போல தனியார் தொலைக் காட்சிகள் இல்லை என்பது இங்கு முக்கியம். ஏனெனில், இவ்வாறு தொலைக்காட்சிகள் வந்த பின்னர்தான், நீதிமன்றத்தின் ஒவ்வொரு நடவடிக்கையும் தொலைக்காட்சி தவிர பிற அச்சு ஊடகங்களாலும் பெரியதொரு பூதக்கண்ணாடி கொண்டு பார்க்கப்படுகின்றன என்பது எனது அனுமானம்.

இன்றைய சூழ்நிலையில் இதே போன்றதொரு கிண்டலை திறந்த நீதிமன்றத்தில் கூற ஏதாவது நீதிபதி தைரியம் கொள்வாரா என்பது கேள்விக்குறியது. ஏனெனில், அடுத்த நாளே, ‘விமானப் பணிப்பெண்கள் தடிமனாக இருக்கிறார்கள் - சென்னை உயர்நீதிமன்றம் வருத்தம்’ என்று தலைப்புச் செய்தி வெளியாகி, அந்த நீதிபதி பின்னர் பத்திரிக்கை கடிதங்களில் கிழித்து எறியப்படும் சாத்தியக் கூறுகள் அதிகம்.

***

சில வருடங்களுக்கு முன்னர் மும்பையில் தொழில் புரிகையில், பரபரப்பான வழக்கு ஒன்றில் தினசரி நீதிமன்றத்தில் நடக்கும் வாத பிரதிவாதங்களோடு, நீதிபதிகளின் சொல்லாடல்களையும் (comments) பத்திரிக்கைகள் வெளியிட, அதனால் மக்களுக்கு தவறான செய்தி சென்று சேருவதாக புகார் செய்யப்பட, நீதிபதிகள் அந்த வழக்கில் நீதிமன்ற சொல்லாடல்களை வெளியிடக் கூடாது என்று தடை செய்தனர். ஆயினும், இந்த தடை சட்டத்திற்கு புறம்பானது என்பது எனது கருத்து.

***

நீதிமன்ற சொல்லாடல்கள் தீர்ப்புகள் அல்ல. பல சமயங்களில் அவை நாம் நினைப்பது போல, நீதிபதிகளில் மனதில் உள்ள கருத்தின் வெளிப்பாடும் அல்ல. எனது தனிப்பட்ட அனுபவத்தில், நீதிபதிகள் தங்களுடைய மனதினை என்னுடைய வழக்கின் பக்கம் திருப்பிய பின்னர், மேலும் வேகமாக என் வழக்கிற்கு எதிரான கேள்விகளை எழுப்புவதை பார்த்திருக்கிறேன். ஏனெனில், இருக்கும் கொஞ்ச நஞ்ச சந்தேகத்திற்கும் என்னால் பதில் அளிக்க முடிந்தால்...தீர்ப்பினை எவ்வித குறைபாட்டிற்கும் வழியின்றி எழுதலாம் என்ற ஆதங்கமே தவிர வேறல்ல!

ஆனால், வழக்கினை கவனித்துக் கொண்டிருக்கும் கட்சிக்காரருக்கோ, ‘என்ன நீதிபதி நம்முடைய வழக்குரைஞரை இப்படிப் போட்டு குடைகிறார். நம் பக்கம் சாதகமாக இல்லையோ?’ என்று கவலை ஏற்படுவதுண்டு!

சில அவசரகுடுக்கை கட்சிக்காரர்கள், நிலைமை புரியாமல் வேறு தவறான யூகங்களுக்கு உட்பட்டு முட்டாள்தனமான சில முடிவுகளுக்கு தங்களை இட்டுச் செல்வார்கள்.


***

சமீப காலமாக பொது நலம் சார்ந்த வழக்குகளில், இவ்வாறு நீதிமன்றங்களில் நடக்கும் சொல்லாடல்கள், ஊடகங்களால் பரபரப்பாக்கப்பட்டு, நீதிமன்றங்களின் நம்பகத்தன்மையினையே கேள்விக்குறியாக்கும் நிலமைக்கு இட்டுச் சென்றுள்ளன.

உதாரணமாக, சமீபத்தில் வாதப் பிரதிவாதம் முடிந்த இட ஒதுக்கீடு வழக்கில் நீதிபதிகள் எழுப்பும் கேள்விகள் ஏதோ, அவர்களின் தீர்ப்பு போல பத்திரிக்கைகளால் முன்னிலைப்படுத்தப்பட்டதாகவே உணர்கிறேன். நான் தவறாமல் படிக்கும் ‘இந்து’வில் இந்த செய்திகளுக்கு அளிக்கப்பட்ட தலைப்புகள் இவ்வாறான எண்ணத்தை என்னுள் தோற்றுவித்தது.

நீதிபதிகள் மனிதர்கள். அவர்களுக்கு தனிப்பட்ட வெறுப்பு விருப்புகள் (bias) உள்ளது உண்மைதான். அவ்வித விருப்புகள் அவர்களது நீதிமன்ற சொல்லாடல்களில் வெளிப்படுவதும் எதிர்பார்க்கக்கூடியதே! ஆயினும், அந்த விருப்பினை தீர்ப்பாக வடிப்பது கடினம். அவ்விதமான விருப்பு சார்ந்த தீர்ப்புகள், பிரபலப்படுத்தப்படுவதும், விமர்சிக்கப்படுவதும் தவறு இல்லை...தேவையானதும் கூட!

ஆனால், சொல்லாடல்கள் (comments) அவ்வளது தீவிரமாக எடுத்து அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராயப்பட வேண்டியவை அல்ல!

காலை முதல் மாலை வரை, மதிய இடை வேளை தவிர மற்ற நேரங்களில் ஒரு தேநீருக்காக கூட இருக்கையிலிருந்து எழ இயலாத ஒரு நீதிபதி, இறுகிய முகத்துடன் சேரியமாக ஒரு வழக்கினை கேட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது, சேடிஸம். நான்கு பேர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதால், அவர்கள் தங்கள் பணியில் இயல்புத் தன்மையற்று இருக்க வேண்டுமென்பது, சலிப்பூட்டும் ஒரு அலோசனன.

அசதி அதிகமானால், எழுந்து அல்லது உட்கார்ந்தபடியே கைகளை பின்னுக்கு தள்ளி சோம்பல் முறித்துக் கொள்வது ஒரு காவல்காரருக்கு கூட இயலுவது போல ஒரு உயர்நீதிமன்ற நீதிபதிக்கு இயலாது.

ஆயினும் ஊடகங்களை மட்டும் நான் குறை கூறவில்லை. நீதிபதிகளும் விஞ்ஞானத்தின் வளர்ச்சியினை புரிந்து கொண்டு தங்கள் வார்த்தைகளை சற்று கவனமுடன் தேர்ந்தெடுக்க வேண்டிய கால கட்டத்தில் உள்ளனர்.

‘தமிழக பந்த்’ வழக்கில் முதலில் நீதிபதி அவசரத்தில் தெளித்த வார்த்தைகளை, ஏதோ ‘ஆட்சியினைக் கலைக்கும் சர்வ அதிகாரம் அவரது கையில் இருப்பதைப் போலவும், தமிழக அரசு அதோ கதி’ என்ற ரீதியிலும் ஆங்கில தொலைக்காட்சி ஊடகங்கள் அன்று திரும்ப திரும்ப ஓட்டிக் கொண்டேயிருந்தன!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு என்பது அவ்வளவு எளிதல்ல. தகுந்த அறிவிப்பு வழங்கப்பட்டு, விசாரிக்கப்பட்டு பல்வேறு காரணிகளை கவனத்தில் கொண்டே பின்னர் தீர்ப்பு வழங்க முடியும். எனவே அன்று கூறிய வார்த்தைகள், அவரது பணியின் இடையே நடைபெற்ற தனிப்பட்ட சொல்லாடல் என்ற அளவிலேயே நாம் பார்க்க வேண்டும், என்பதே எனது கருத்து.

ஆனால், ஏதோ ஒரு தீர்ப்பினைப் போல பெரிய முக்கியத்துவம் அளித்து, நீதிமன்ற நடவடிக்கைகளை பெரிதும் அறிந்திராத மக்களிடம் தேவையற்ற விவாதத்தினை எழுப்பியதில் ஊடகங்களும் ஒரு காரணமாகி விட்டன!

‘Let the Judges be judged by their Judgements but not on their casual outbursts...they are after all humans like you and me’

பிரபு ராஜதுரை
08.11.07

3.11.07

கண்ணீர்த்துளி, கட்டிடமாக!


தாஜ்மகாலைப் பார்க்க வேண்டுமென்ற ஆர்வம், பெரிதாக எதுவும் எனக்கு இருந்ததில்லை. தாஜ்மகால் படங்களை சிறுவனாக இருக்கையில் காண்கையில், இதில் என்ன அப்படி உலக அதிசயம் இருக்க முடியும் என்று நினைப்பேன். பின்னாட்களில், தாஜ்மகால் சென்றவர்கள் கொணரும் புகைப்படங்களில், அதன் பீடத்தின் மீது நிற்கும் மனிதர்களின் உருவ அளவோடு ஒப்பிடுகையில், தாஜ்மகாலின் பரிணாமம் புரிய, ‘முழுவதும் சலவைக்கல்லிலான, பிரமாண்டமான ஒரு கட்டிடத்தினை நேரில் பார்க்கையில் வியப்பாகத்தானே இருக்கும்... அதுதான் அதன் சிறப்பு போல’ என்று நினைத்தேன்.

ஆயினும் இதே காலகட்டத்தில் எகிப்திய பிரமீடுகள், சீனப் பெருஞ்சுவர் ஆகியவற்றின் பிரமாண்டங்களைப் பற்றி மேலும் அறிந்ததில், தாஜ்மகால் எனது அதிசய பட்டியலில் இல்லை.

கடந்த வாரம், ஒரு வழக்கு விடயமாக தில்லி சென்ற பொழுது, கூட வந்த நண்பர் ‘தாஜ்மகாலினைப் பார்க்காமல் திரும்பக் கூடாது’ என்று கூறிய பொழுது, ஒரு நாள் தாஜ்மகாலுக்காகவா என்று சலிப்பாகத்தான் இருந்தது.

ஆனால், சிவப்புக் கற்களாலான முகப்புக் கட்டிடத்தை கடந்து உள்ளே செல்கையில் மெல்ல தன்னை வெளிக்காட்டிய தாஜ்மகால்...

சுற்றிலும் முரட்டுக் காவலர்கள் சூழ்ந்து நிற்க நடுவே மெளனமாக ஒரு பெண் நின்றிருப்பதை காண்பது போன்ற இனந்தெரியாத சோகம் என்னைக் கவ்வியது. ‘காலத்தின் கன்னத்தில் வழிந்த கண்ணீர்த்துளி’ என்று தாஜ்மகாலை தாகூர் கூறியதுதான் உடனடியாக நினைவுக்கு வந்தது.

கட்டிடங்களையும் ஆண் பெண் என பிரிக்க முயன்றால், நடுவே நிற்கும் சலவைக்கல் மாளிகையை பெண்ணாகவும், அதன் மூன்று பக்கங்களிலும் உள்ள சிவப்பு கட்டிடங்களை ஆணாகவும் எளிதில் கூற முடியும். எனக்கு அவ்வாறுதான் தோன்றியது!

உண்மையில் அன்று தாஜ்மஹாலினை காணும் வரை ஷாஜகானையும் அவன் காதல் மனைவியையும் நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. ஆனால், தாஜ்மஹாலினை கண்ட மாத்திரத்தில் ஷாஜகானும், மும்தாஜும் சோக சித்திரமாக என்னை நிறைத்திருந்தனர்.

காதலை, மனிதர்கள் கவிதையாகவும், நடனமாகவும், பாடலாகவும், இசையாகவும் ஏன் சித்திரமாகவும் வெளிப்படுத்தியிருக்கின்றனர். ஷாஜஹானோ கட்டிடக் கலைப் பிரியன். தன் மனைவி மீது கொண்ட அளவற்ற காதலையும், அதன் பிரிவுத் துயரையும் ஒருவன், கட்டிடமாக வெளிப்படுத்தினால்...தாஜ்மகாலை விட அழகாகவும், பொருத்தமாகவும் யாராலும் வெளிப்படுத்த முடியாது.

‘if one wants to express his love in the form of a structure, I am standing before it’ தாஜ்மஹாலின் பீடத்தின் அடியிலிருந்து என் மனைவியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட என்னை மறந்து கூறிய வார்த்தைகள்.


***

ஷாஜஹானின் காதலின் வெளிப்பாட்டிற்காக செலவழிந்தது எண்ணற்ற கலைஞர்களின் உழைப்பும், அளவற்ற பொருட் செல்வமும். அவுரங்கசீப்பிற்கு இவை எரிச்சலூட்டியிருக்கலாம். அவரது பார்வையில் அது நியாயமாக கூட இருக்கலாம்...

ஆனால், வாழ்வின் மகிழ்வுகள் வெறுமே உணவிலும், உடையிலும் மட்டும் இருப்பதில்லையே!

‘a thing of beauty is a joy for ever’ என்ற ராபர்ட் ப்ரோஸ்டின் வரிகள்தான் தாஜ்மஹாலின் தேவையினை நியாயப்படுத்துகின்றன!


***

பலர் என்னைக் கிண்டல் செய்தது போல தாஜ்மகால் நண்பரோடு போகக் கூடிய இடமல்ல. நான் கவனித்தவரை பெண்கள் தாஜ்மகால் மீது அதீத ஆர்வம் காட்டுகிறார்கள். பெண்களின் கண்களில் வியப்பு பொங்கி வழிய, கூட வரும் ஆண்களில் கண்களில் கொஞ்சம் பொறாமையிருந்தது!

மதுரை
03.11.07