19.3.10

நாம் கொடுத்த கோடியும்...கிடைக்கப் போகும் லட்சமும்!

டாக்டர் சுரேஷ் மஹாஜன் இந்தியர். ஆனால், இந்தியாவில் ஆரம்பித்த தனது மருத்துவ தொழிலை அமெரிக்காவில் தொடர்ந்து, பின்னர் அமெரிக்க குடிமகனாக மாறியவர். அமெரிக்க பெண்ணான பட்ரீசியாவை மணந்து, மூன்று குழந்தைகளுக்கு தந்தையான மஹாஜன் தனது நாற்பத்தி ஏழாவது வயதில், ஒரு சாலை விபத்தில் இறந்து போனார்.

1995ம் வருடம் தனது பெற்றோர்களை காண இந்தியா வந்திருந்த மஹாஜன் பயணம் செய்த கார் மீது லாரி மோதிய விபத்தில் மஹாஜன் உயிரிழக்க நேரிட்டது.

பட்ரீசியா, மஹாஜனின் மரணத்திற்கு இழப்பீடு கோரி வழக்கு தாக்கல் செய்தார். விபத்தினை ஏற்ப்படுத்திய லாரியை காப்பீடு செய்திருந்த நிறுவனம், யுனைட்டட் இந்தியா இன்ஸுரன்ஸ் கம்பெனி (United India Insurance Co.Ltd.,)

விபத்து நடப்பதற்கு முந்தைய வருடமான 1994ம் வருடத்தில் மஹாஜனின் வருட வருமானம் 9லட்சம் அமெரிக்க லாடர்கள் என்று கூறப்பட்டாலும் அவரது நிகர வருமானம் (take home salary) 3,39,445 டாலர்கள் என்று கண்டறியப்பட்டது.

பலபடிகளைக் கடந்து, வழக்கு இறுதியில் சென்ற இடம் உச்ச நீதிமன்றம். அங்கு மஹாஜனனின் மரணத்திற்காக நிர்ணயிக்கப்பட்ட இழப்பீடு ரூ.6,78,89,100/- இந்த தொகையானது வ்ழக்கு தாக்கல் செய்த தேதியிலிருந்து 9% வருட வட்டியுடன் சேர்த்து வழங்கப்பட வேண்டியது.

மஹாஜன் குடும்பத்திற்கு ஆயுள் காப்பீடு மூலம் கிடைக்கும் 2,50,000 அமெரிக்க லாடர்கள் இந்த இழப்பீடு தொகையில் கழிக்கப்பட வேண்டும் என்ற யுனைட்டட் இன்ஸூரன்ஸ் நிறுவனத்தின் வாதம் நிராகரிக்கப்பட்டது. (United India Insurance Co.Ltd., Vs Patricia Jean Mahajan 2002 (6) SCC 281)

1995ம் ஆண்டு நிகழ்ந்த மரணத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட தொகை சுமார் 7 கோடி இந்திய ரூபாய்கள். இன்றைய பண மதிப்பில் சுமார் சுமார் 20 கோடி இருக்கலாம். மேலும் பத்து ஆண்டுகள் கழித்து சுமார் 30 கோடியை தொடலாம்.

***

அமெரிக்கரான பட்ரீசியாவிற்கு கொடுக்கப்பட்ட இழப்பீடு தொகைக்காக யுனைட்டட் இந்திய இன்ஸூரன்ஸ் நிறுவனத்தின் சம்பந்தப்பட்ட கிளையில் அதன் அனைத்து வாடிக்கையாளர்களும் செலுத்திய பிரீமிய தொகை பயன்படுத்தப்பட்டதாம்.

ஒரு வேளை மஹாஜனைப் போல பத்து அமெரிக்க மருத்துவர்கள் இறந்திருந்தால், வேறு வழியில்லை. பத்து கிளைகளின் பிரீமியத் தொகையை கொடுக்க வேண்டியிருக்கும்.

ஏனெனில், மோட்டார் வாகன விபத்துகளில் உயர்ந்த பட்ச இழப்பீடு என்பது கிடையாது. காப்பீடு நிறுவனங்களும் தாங்கள் கொடுக்க வேண்டிய அதிக பட்ச இழப்பீடு இவ்வளவுதான் என்று வரையறுக்க இயலாது.

எனவே, அமெரிக்கரான மஹாஜன் இந்தியாவில் ஏற்ப்பட்ட சாலை விபத்தில் இறந்ததால், வளரும் நாடான இந்தியாவின் நிறுவனம் ஒன்று அளித்த இழப்பீட்டு தொகை...1995ல் சுமார் 7 கோடி!

வருடம் 2020 என்றால் 30 கோடி இருக்கலாம்.

***

அதே 2020ம் ஆண்டு, அமெரிக்க நிறுவனம் ஒன்று இந்தியாவில் நிர்மாணித்து, இயக்கும் அணு உலையில் ஏற்ப்பட்ட விபத்து ஒன்றினால், மஹாஜன் அளவிற்கு சம்பாதிக்கும் இந்திய மருத்துவர் ஒருவர் இறந்து போனால்...அமெரிக்க நிறுவனம் அவரது மனைவிக்கு அளிக்கும் இழப்பீடு 30 லட்சம் கூட இல்லாமல் போகலாம். அணுக்கரு இழப்பிற்கான சிவில் கடப்பாடு சட்டம் (Civil Liability for Nuclear Damage Act) என்ற சட்டம் நமது பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டால்...

இந்தச் சட்டம் அணு உலை விபத்தால் ஏற்ப்படும் இழப்புகளுக்கு தர வேண்டிய அதிக பட்ச இழப்பீட்டினை நிர்ணயிக்கும். அதாவது மொத்த இழப்பீடு சுமார் 2000 கோடி. அதுவும் அணு உலையை நிர்மாணிக்கும்/ இயக்கும் நிறுவனம் தர வேண்டிய அதிக பட்ச தொகை சுமார் 500 கோடி மட்டுமே. மீதி, இந்தியர்களின் வரிப்பணத்திலிருந்து தரப்பட வேண்டும்.

உதாரணமாக, போபால் விசவாயு விபத்தில் உயிரிழந்தவர்கள் மட்டும் சுமார் 2500 நபர்கள். செர்னோபில்லில் அதிகம் இருக்கலாம். அப்படி ஒரு விபத்து இந்தியாவில் நடந்தால், அமெரிக்க நிறுவனம் இந்திய மஹாஜன்களுக்கு கொடுக்கும் இழப்பீடு சுமார் 20 லட்சத்தை தாண்டாது.

மேலிருந்து கீழ் நோக்கி எதுவும் பாயலாம்...பணம் மட்டும் பாயாது!

மதுரை
19/03/10