28.10.07

கலைஞர், ஞாநி மற்றும் சுந்தரமூர்த்தி

நேற்று டிவியில் சேகர் குப்தாவின் வாக் த டாக் நிகழ்ச்சி...கருணாநிதி வாக்காமல் சோபாவில் சாய்ந்தபடி பேசினார். கனிமொழி மோசமாக கருணாநிதி கூறுவதை சேகருக்கு மொழிபெயர்த்தார். முதலாம் பகுதி போன வாரம் வெளிவ்ந்ததாம். எப்படியோ நான் பார்த்தவரை புரிந்தது, கருணாநிதி இல்லாமல் திமுக அவ்வளவுதான் என்று!

பலமுறை பலர் கூறியதுதான்...தனது சாதுரியம், முக்கியமாக நகைச்சுவை உணர்வால் பேட்டியின் இறுக்கமான சூழ்நிலையினை எளிதில் அவரால் தளர்த்த முடிகிறது. மேலும், பேட்டியாளரையே வசியப்படுத்துவதன் (charm) மூலம், அவரால் சங்கடப்படுத்தக்கூடிய கேள்வியினை தவிர்க்க முடிகிறது. தமிழகத்தின் வேறு எந்த அரசியல் தலைவருக்கும் இல்லாத ஒரு திறமை அவரிடம் உள்ளது. இவ்விஷயத்தில் திமுகவில் வேறு யாரையும் அவருக்கு அருகில் கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை!

கனிமொழி மீது எனக்கு இருந்த நம்பிக்கை கூட அவரது சமீபத்திய அரசியல் நடவடிக்கைகளாலும், இந்தப் பேட்டியில் அவர் தடுமாறியதை வைத்தும் போய் விட்டது. தயாநிதிக்கும் இனி திமுகவில் எதிர்காலம் இருக்கிறதா என்று புரியவில்லை!


***

தமிழக அரசியலில் கலைஞர் இல்லாமல் போவது அவரது எதிரிகளுக்கு மகிழ்ச்சியளிக்கலாம். ஆனால், அதன் விளைவுகள் அவர்களுக்கு சாதகமாக இருக்கப் போவதில்லை! தமிழகத்தில் தீவிரவாதத்தினை நோக்கி சென்றிருக்க வேண்டிய பல இளைஞர்களை, மட்டுப்படுத்தி ஜனநாயக பாதைக்கு இழுத்ததில் முழுப்பங்கு திராவிட இயக்கங்களுக்குத்தான் என்பது என் எண்ணம்.

இன்றும் கலைஞர் மட்டுமே, தடுமாறும் உள்ளங்களை மட்டுப்படுத்தும் ஒரு காரணியாக இருக்கிறார். கலைஞரை விட்டால், திமுகவில் அதன் ஆதர்ச கொள்கைகளான இறை மறுப்பையும், இட ஒதுக்கீட்டினையும், பார்ப்பனீய எதிர்ப்பினையும் பற்றிப் பேசுவதற்கு யார் இருக்கிறார்கள்?

கலைஞருக்குப் பின் இவ்வகையான கொள்கைகளில் ஈர்க்கப்படும் படித்த இளைஞர்கள் ம.க.இ.க போன்ற தீவிர இயக்கங்களில் தஞ்சமடையப்போகிறார்கள் என்பது எனது அனுமானம்.


***

அரசியலுக்காக பல சமரசங்களைச் செய்து கொண்ட கலைஞரிடம், மனதின் ஆழத்தில் பழைய உணர்வுகள் பதுங்கியிருக்கின்றன என்று ராமர் விஷயத்தில் அவரிடம் தோண்டித் தோண்டித் துருவிய சேகரிடம், உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இரு முறை ‘சடார்’ என அவர் பதிலளித்ததில் புரிந்தது. எவ்வித ஜாக்கிரதை உணர்வுமின்றி மனதில் இருந்து வெளிப்பட்ட பதிலாக இருந்தது.

டிப்ளோமேட்டிக்காக பதிலளித்து வந்தவரிடம் துருவித் துருவி, ‘இது பெரியார் நாடு. இங்கு பிஜேபிக்காரர்கள் கூறுவதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்’ என்று கூற வைத்த சேகரை பாராட்ட வேண்டும்.

கொல்லன் தெருவில் ஊசி விற்பதைப் போல, ‘நீங்கள் ராமாயணம் படித்திருக்கிறீர்களா?’ என்று சேகர் ஆச்சரியமாக வினவ...’வால்மீகி ராமாயணம் மட்டுமல்ல. ஆறு வகையான ராமாயணத்தையும் படித்திருக்கிறேன்’ என்று கூறி வாயடைக்க வைத்தார்.

அடுத்த கட்ட திமுக தலைவர்கள் கடந்த வார குமுதம் படித்திருந்தாலே ஆச்சரியம்!

மதுரை
28.10.07

(எனது வலையக நண்பர் சுந்தரமூர்த்தியின் பதிவுக்கு எதிர்வினையாக எழுதியது. கொஞ்சம் அதிகமானதால் தனிப்பதிவாக இங்கு)

26.10.07

கட்டாய திருமணப் பதிவு!

பொதுநலம் குறித்த விடயங்களில் நமது நீதிமன்றங்களின் செயல்பாடு ‘படித்த நடுத்தர மக்கள்’ என்று வகைப்படுத்தப்படும் மக்கள் கூட்டத்தின் பொதுவான கண்ணோட்டத்திலேயே அமைகிறது என்ற எண்ணம், எப்போதுமே எனக்கு உண்டு. ஒடுக்கப்படும் மக்களுக்காக அரசு கொணரும் நலத்திட்டங்களின் பலன்கள், இறுதியில் மத்தியதர மக்களால் அபகரிக்கப்படுவதைப் போலவே நீதிமன்றத்தின் முன் தங்களின் குரல்களை ஒலிக்கவியலா மக்களுக்காக ஏற்றுக் கொள்ளப்பட்ட பொதுநல வழக்குகள், இன்று மத்தியதர மக்களால், தங்கள் ஆதங்கங்களை கொட்டும் ஒரு ஊடகமாக கைப்பற்றப்பட்டுள்ளது.

அரசின் மற்ற இரு அங்கங்களான நிர்வாகம் (executive) சட்டமியற்றுதல் (legislature) ஆகியவற்றின் முன் வைக்கப்பட வேண்டிய அனைத்து கோரிக்கைகளும் இன்று, பொதுநல வழக்குகளாக நீதிமன்றத்தின் முன் தாக்கல் செய்யப்படுவதில் எரிச்சலுறும் நீதிபதிகள் சமயங்களின் அடித்தட்டு மக்களின் (voiceless people) பிரச்னைகளை தாங்கி வரும் வழக்குகளையும் தூக்கிக் கடாசி விடுகின்றனர்.

திருமணங்களை கட்டாயமாக பதிவு செய்வது சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவும், இன்றைய சூழ்நிலையில் அத்தியாவசியமான ஒன்றா என்பது கேள்விக்குறியதே!


***

பெரும்பான்மையான திருமணங்கள் இங்கு பதிவு செய்யப்படாமல் போவதால், பின்னர் ஏற்படும் பிரச்னைகளை கவனத்தில் கொண்டு உச்ச நீதிமன்றம், திருமணங்களை கட்டாயமாக பதிவு செய்யும் வண்ணம் குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் விதிகளை (Rules) வகுக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

வழக்கம் போலவே, முஸ்லீம் பெர்ஸனல் லா போர்டு (Muslim Personal Law Board) தனது மெல்லிய எதிர்ப்பினை தெரிவித்துள்ளது. விடயம் என்னவென்று புரியாமலே, மீண்டும் தனிநபர் சட்டம் (Personal Law) பொது சிவில் சட்டம் போன்ற பிரச்னைகளை கிளப்பப்படும் அபாயம் உள்ளது.


***

பத்திரிக்கைச் செய்திகளை படிக்கையில், உச்ச நீதிமன்றா உத்தரவு ஏதோ இஸ்லாமியர்களின் உரிமையில் தலையிடுவது போன்ற பயத்தினை (apprehension) ஏற்ப்படுத்துகிறது என்றாலும் இப்படி ஒரு விதியினால் பிரச்னை இஸ்லாமியர், கிறிஸ்தவர் அல்லாத மற்றவர்களுக்கே உள்ளது.

கிறிஸ்தவர்களில் திருமணங்கள் தேவாலயங்களில் பதிவு செய்யப்படுகின்றன. இஸ்லாமியர்களின் திருமணங்களும் அவர்கள் சார்ந்திருக்கும் ஜாமாத்தில் பதிவு செய்யப்படுகின்றன. பிறப்பு, இறப்புகள் எவ்வாறு சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் மூலம் உள்ளாட்சி அமைப்புகளிடம் தெரிவிக்கப்பட்டு பதிவு செய்யப்படுகின்றனவோ, அவ்வாறே தேவாலயங்களும், ஜமாத்துகளும் பதிவாளர் அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டலாம்.

ஆனால் மற்றவர்கள்?

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நடத்தப்படும் திருமணங்களை பதிவு செய்ய அங்கேயே ஏற்பாடு செய்யலாம். எழுதப்படிக்கவே தெரியாதவர்கள் பூசாரிகளாக இருக்கும் குக்கிராம கோவில்களில், திருமணங்களை எப்படி பதிவது? கூடி வாழ்வதற்கு கோவில்களை கூட நாட முடியாத மக்களை என்ன செய்வது?

படித்த நடுத்தர மக்களை திருமணங்களை பதிவு செய்ய கட்டாயப்படுத்தலாம். பெருவாரிய மக்கள் கூட்டம் இங்கு அன்றாட உணவுக்கே அல்லல்படுகையில், திருமணப் பதிவிற்காக அவர்கள் மெனக்கெடப் போவதில்லை!

***

திருமணப் பதிவினை எப்படி கட்டாயப்படுத்துவது?

சொத்துப் பத்திரம் என்றால், பதியாவிட்டால் சொத்து உங்களுடையதில்லை எனலாம். திருமணம் செல்லாது என்று கூற முடியாது. இவ்வாறாக திருமணங்களை கட்டாயமாக பதிவு செய்ய விதிகளை வகுக்க கூறும் இந்து திருமண சட்டத்தின் பிரிவு 8ல், பதிவு செய்யாவிட்டால் ‘இருபத்தி ஐந்து’ ரூபாய் அபராதம் விதிக்கலாம் என்று இருக்கிறது. அவ்வளவுதான் முடியும்.

இருபத்தி ஐந்து ரூபாய் அபராதம் விதிப்பதற்காக வழக்கு தொடருவதற்கு, அரசு இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் செலவு செய்ய வேண்டியிருக்கும்.

***

கடந்த வாரம் தில்லியிலிருந்து ஆக்ராவிற்கு காரில் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. போகும் வழியில் நான் பார்த்த எந்த ஒரு டிராக்டருக்கும் முன்னாலும் சரி, பின்னாலும் சரி பதிவு எண்...இல்லை பதிவு எண் எழுதியிருக்கும் போர்டு கூட இல்லை!

எந்த டிரைலரிலும் பின்னால் சிவப்பு விளக்கு வேண்டாம், சற்றே தெளிவாக தெரியும் பெயிண்ட் கூட அடிக்கப்பட்டிருக்கவில்லை!

சூப்பர் ஹைவேயான தில்லி-ஆக்ரா சாலையில் இரவில் சற்று கவனக்குறைவாக இருந்தாலும், முன்னால் செல்லும் டிராக்டருடன் மோதக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம். பொதுமக்களின் உயிரோடு விளையாடும் இவ்வகை சட்ட மீறல்களை, நாட்டின் தலைநகருக்கு அருகிலேயே நம்மால் தடுக்க முடியவில்லை. திருமண பதிவை கட்டாயப்படுத்துவதாவது!

மக்களால் கேலிக்கூத்தாக்கப்படும் ஒரு விதியினை இயற்றுவதற்கு பதிலாக, அரசினை உச்ச நீதிமன்றம் வேறு உருப்படியான வேலைகளை பார்க்க உத்தரவிட்டிருக்கலாம்.

மதுரை
26.10.07