31.8.06

'ஸ்ரீப்'... 'ஸ்ரீப்'...விடுமுறைத்தின மத்தியான வேளையில் ஏதாவது வேலை விஷயமாக வீட்டை விட்டு கிளம்புவதைப் போல துன்பம் வேறு எதுவும் இருக்கப் போவதில்லை. நெஞ்சு நிறைய எரிச்சலுடனும் உடல் முழுவதும் அசதியுடனும், இறுதியாக கண்ணாடியில் ஒரு முறை பார்த்துக் கொண்டு உள்ளறையிலிருந்து வெளியேறிய போதுதான், வார்த்தைகளில் வடிக்க முடியாத அந்த சிறு சத்தங்கள் என்னை ஒரு முறை எல்லாவற்றையும் மறந்து ஒரு கணம் அப்படியே நிற்க வைத்து விட்டது.

"ஸ்ரீப்" "ஸ்ரீப்"

சத்தம் வந்த பக்கம் முகத்தை பாதி திருப்புகையிலையே மீண்டும் "ஸ்ரீப்" "ஸ்ரீப்".

எனக்குப் புரிந்து போனது. கண்ணாடி வைத்த அந்த பீரோவுக்கு மேலே நெருக்கமாக மேற்கூரை வரை அடுக்கி வைக்கப்பட்ட பயணப் பெட்டிகளுக்கு பின்னே சில நாட்களுக்கு முன்னர் பொரித்த புறாக்குஞ்சுககளின் சத்தம்தான் அது.

அதற்கு மேலும் முகத்தை திருப்பவில்லை. கால்கள் என்னையறியாமல் வெளியே செலுத்த படியில் இறங்கிக் கொண்டிருந்தேன். அதுவரை என்னை நிறைத்திருந்த எரிச்சலும், அசதியும் பற்றிய நினைப்பே இல்லாமல், 'நான் ஏன் இப்படி அசடு போல புன்னகைத்துக் கொண்டிருக்கிறேன்' என்று வியப்பாக இருந்தது. தொடர்ந்து சாலையில் நடக்கையிலும், ஆட்டோவில் பயணிக்கையிலும், ரயிலின் நெரிசலிலும் ஏதோ சந்தோஷமாகவே உணர்ந்து கொண்டிருந்தேன். வழக்கமாக மும்பை வீதிகளிலும், ரயில் நிலையங்களிலும் இருந்து மனதை பிசையும் சில காட்சிகள் எதுவும் அன்று எதுவும் கண்ணில் பட்டதாக எனக்குத் தெரியவில்லை. என்ன வேலை விஷயமாக அன்று வெளியே போனேன் என்று கூட இப்போது ஞாபகம் இல்லை. மேலே இருந்து வந்த அந்த சிறு சத்தம் இன்னும் மனதில், மிட்டாயை தின்ற பிறகும் நாவில் ஒட்டியிருக்கும் இனிப்பினைப் போல சந்தோஷத்தை விதைத்துக் கொண்டு இருக்கிறது.

வீட்டிற்கு திரும்பியபின்னர் முதலில் நான் சென்றது பீரோவுக்கு அருகில்தான். னால் சத்தம் ஏதும் கேட்கவில்லை. கடந்த ஒரு மாதமாகவே அந்த பீரோவுக்கும் ஜன்னலுக்குமாக பறந்து கொண்டிருந்த புறாக்கள்தான் எங்களுக்கு வேடிக்கை. எனக்கு புறாக்கள் மீது அதிக பிரியம் இருந்ததில்லை. இரண்டொரு நாட்களுக்கு முன்னர் கூட, 'கொஞ்சம் இங்கே வந்து கேளுங்களேன் என்று ரகசியமாக குஞ்சுகளின் சத்தத்தைக் கேட்க அழைத்த போது, 'ஹாங்' என்று அசிரத்தையாக மறுத்தேன். மும்பையில் அங்கிங்கெனாதபடி எங்கும் புறாக்கள் நிறைந்திருப்பதால் இருக்கலாம். அல்லது ஜன்னலை ஒட்டிய மரம் முழுவதும் நிறைந்த காகங்கள் மீது நான் கொண்ட அபரிதமான காதலும் காரணமாக இருந்திருக்கலாம். பெரும்பாலான மக்களின் அன்பு புறாக்கள் மீதும் வெறுப்பு காகங்கள் மீதும் படிந்திருந்தது எனக்கு வழக்கம் போலவே ஒரு வேறுபட்ட நிலையை எடுக்க வைத்திருந்தது. சில நாட்கள் முன்பு ‘புறாக்கள் காகங்களை விட வன்முறை விரும்பிகள்’ என்று வேறு படித்துத் தொலைத்து விட்டேன்.

ஆறு மாதங்களுக்கு முன்னர் ஜன்னலை அடுத்து இருந்த மரத்தில் இரண்டு காகங்கள் குஞ்சு பொரிப்பதற்க்காக கட்டிய ஒரு கூடு எங்கள் பொழுது போக்காக இருந்தது. தினமும் குஞ்சுகள் பொரிப்பதற்காக காத்திருந்தோம்.

ஒரு நாள் என் மனைவி, "அந்த கூட்டில் பார்த்தீர்களா என்னவென்று?"

"என்ன குஞ்சு பொரித்து விட்டதா?"

"இல்லை. அங்கே பாருங்கள்"

கொஞ்சம் கவனமாக பார்த்ததில் அந்தக் கூட்டினை கட்ட உபயோகப்பட்ட மரக்குச்சிகளிடையே எனது அலுமினிய சட்டை தொங்க போடும் ஹாங்கர்!

"அட! இந்த ஜன்னல் கம்பி வழியா எப்படி எடுத்துட்டுப் போயிருக்கும்" என்று நான் வியந்து கொண்டிருந்ததில் அந்த திருட்டுக் காகங்களின் மீதும் கோபம் வரவில்லை.

ஆனால் தினமும் கவனித்துக் கொண்டிருந்தாலும் குஞ்சு பொரித்து விட்டதா இல்லையா என்று கணிக்க முடியவில்லை. எங்கள் திருட்டுப் பார்வையில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்கையில் மிகவும் கவனமாக இருந்து விட்டன அந்தக் காகங்கள். எனக்கும் காக்கா முட்டை எத்தனை நாளில் பொரிக்கும் என்ற விபரமெல்லாம் தெரியாது. விரைவில் கூடு கூட மெல்ல மெல்ல சிதிலமாகி வர, ஒரு நாள் அடித்த பெரிய காற்றில் அந்தக் கூட்டின் வடிவம் கூட மாறிப் போனது.

'என்னப்பா! குஞ்சு பொரிச்சுதா இல்லையா. என்ன பண்ணுது அந்தக் காக்கா?"

சற்றே கூட்டை உற்றுப் பார்த்த என் மனைவி, 'இல்லப்பா, அந்தக் காக்காதான் குஞ்சுன்னு நினைக்கிறேன். நல்லா வளர்ந்துட்டுது"

"என்ன சொல்ற அது ஏதோ கோழி சைசுக்கு இருக்குது" என்று சொன்னாலும் கொஞ்சம் கவனமாக பார்த்ததில் அதுதான் பொரித்த குஞ்சுவாக இருக்கும் என்று எனக்குத் தோன்றியது. வெட்கம்! கடைசியில் ஏற்கனவே குஞ்சு பொரித்து அதுவே பெரிய காக்கா மாதிரி எங்களுக்குத் தெரியாமலே வளர்ந்து விட்ட விஷயத்தை என் மகளிடம் சொல்ல தைரியம் இல்லை. அது வரை 'எங்கள் வீட்டில் எப்படி கோழிக்குஞ்சு பொரித்தது என்பதிலிருந்து காக்காக் குஞ்சு பொரிப்பது வரை ஏகப்பட்ட விஷயங்களை' அவளிடம் மேதாவி போல அளந்து வைத்திருந்தேன்.

இப்போது அந்தக் கூட்டின் ஏதோ ஒன்றிரண்டு குச்சிகளே மரத்தில் எஞ்சியிருக்கிறது. எனது ஹேங்கரை கூட காணவில்லை. நைசாக மீண்டும் எனது வீட்டிலேயே, அந்த காகங்கள் கொண்டு வந்து வைத்து விட்டதா என்பது தெரியவில்லை. திருப்பித் தரவிட்டாலும் பரவாயில்லை. அந்த ஹாங்கரை கூட்டில் பார்த்த போது மனதில் வந்து பரவிய ஒரு சந்தோஷ அலைக்கு என்ன விலை குடுத்தாலும் தகும்.

இந்த சந்தோஷமோ கஷ்டமோ நம் மனதில்தான் இருக்கிறது போல. பல வருடங்களுக்கு முன்னர் படித்த கி.ராஜநாராயணனின் கதை இப்படித்தான். மறக்கமுடியாத கதை. புழுக்கமான ஒரு மத்தியான வேளையில் அனல் அடிக்கும் கரிசல் காட்டு சாலையில் செல்லும் ஒரு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளைப் பற்றியது. அனைவரும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டும் எரிச்சல் பட்டுக்கொண்டும் பயத்துக் கொண்டிப்பர். ஒரு நிறுத்தத்தில் ஒரு கிராமத்துப் பெண் கைக்குழந்தையுடன் பேருந்தில் ஏற அந்தச் சூழ்லையே கொஞ்ச நேரத்தில் மாறிப்போகும். பின் இருக்கும் ஒருவரைப் பார்த்து அந்தக் குழந்தை சிரிக்க அவர் அதனுடன் விளையாட அந்த சந்தோஷம் அனைவரையும் விரைவில் தொற்றிக் கொள்ள அந்தப் பேருந்து முழுவதும் உற்சாக அலை வீசும். விரைவில் அந்தப் பெண் ஒரு நிறுத்தத்தில் பேருந்தினை விட்டு இறங்கிப் போக மீண்டும் பேருந்தில் சோர்வு சூழ்ந்து கொள்ளும்.

இந்தக் கதையினை பற்றி சிந்திக்கையில், ஒரு விஷயத்தில் எனது அபிமான எழுத்தாளர் கி.ர வுடன் வேறுபட வேண்டியிருக்கிறது. அதாவது அதன் முடிவு. கதையின் முடிவைப் போல நம்மை தொற்றிய சந்தோஷம் 'கப்' என்று திடீரென முடிந்து போவதல்ல. அது ஒரு ஒரு அலை போல. குளத்தில் எறிந்த கல் முழுகிப் போனாலும் அலை வளையங்கள் மெல்லத்தான் ஓய்ந்து போகின்றது. அதுவும் அலை ஓய்ந்த பின்னரும் மனதுக்குள் கற்பனைக் கல்லை எறிந்து அலைகளை அவ்வப்போது பரவச் செய்வதும் சாத்தியமே.

ஏனென்றால் இந்தக் கோபம், சந்தோஷம் போன்ற உணர்வுகளை நமது மூளைக்குள் சுரக்கும் ரசாயண வஸ்துக்களே தீர்மானம் செய்கின்றன. இதனை அடிப்படையாக வைத்தே ‘ப்ரோஸாக்’ (Prozac) போன்ற மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும் மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. ஆனாலும் இந்த மருந்துகளை விட மிகவும் உபயோகமானது, பின் விளைவுகள் எதுவும் இல்லாத 'மனசை லேசாக்கி என்னை அன்று வழியனுப்பிய "ஸ்ரீப்" ஓசை'.

சில வருடங்களுக்கு முன்னர் இது போலத்தான். அப்போது வேறு ஒரு வீட்டில் வசித்து வந்தோம். அதன் ஜன்னலருகே துரதிஷ்டவசமாக இப்போது உள்ளது போல மரம் இல்லை. னாலும் அருகிலிருந்த சுவற்றின் கீரலில் இருந்து முளைத்து போதிய பின்பலம் இல்லாதலால் அரையடி நீளத்துக்கு மேல் வளரவே முடியாமல், என்றும் பதினாறாக விளங்கிய ஒரு செடி ஜன்னலருகே நான் செல்லும் போதெல்லாம் என்னைப் பார்த்து புன்னகைக்கும்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை, எழும்ப மனமில்லாமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்த போது கேட்ட "தட்" என்ற சத்தம் என்னை அதிர்ந்து எழ வைத்தது. என்னவென்று புரிபட சிறிது நேரம் பிடித்தது. ஜன்னல் கம்பி வழியே வீட்டினுள் பாய்ந்த ஒரு சிட்டுக்குருவிதான் மின்விசிறியில் அடிபட்டு மூலையிலிருந்த மேஜைக்கு அடியில் தூக்கியெறிப்பட்டுக் கிடந்தது. அருகே சென்று பார்த்ததில் அதற்கு உயிர் இருந்தது புரிந்தது. என்னைப் பார்த்து பயந்து ஒரு மூலைக்குள் ஒதுங்க முயன்று தோற்றுப் போனதைப் பார்த்து ஒரு பெரிய நிம்மதி எனக்குள். மகளை வேகமாக எழுப்பினேன். கண்களை திறக்க முடியாமல் இருந்தவள் விஷயம் தெரிந்தவுடன் மிகவும் உற்சாகத்துடன் என்னுடன் சேர்ந்து கொண்டாள். மெல்ல அதன் அருகில் சென்று எனது கைகளில் அதை பதவிசாசக எடுத்தேன். உடல் முழுவதும் ஜன்னி கண்டது போல நடுங்கிக் கொண்டிருந்தது. எனக்கு புரிந்து போனது. அடி ஏதும் படவில்லை. அதிர்ச்சிதான் அதனை அப்படி கட்டிப் போட்டிருக்கிறது என்று.

மகள் வேகமாக உள்ளே போய் நீர் எடுத்து வந்தாள். மெல்ல அதற்கு ஊட்ட வேகமாக குடித்தது. உடல் நடுக்கம் நின்ற மாதிரி இருந்த போது அதனை கீழே விட்டால் அதற்கு நிற்க முடியவில்லை. 'பொத்' என்று விழுந்து கிடந்தது. இறக்கைகளை அடிக்கக் கூட அதற்கு தைரியமில்லை. மகளுடைய பிஞ்சுக்கைகளில் பின்னர் தஞ்சமாக, அதற்கு இதமாக இருந்திருக்க வேண்டும் போல. நன்றாக பொதிந்து அமர்ந்து கொண்டது.

இது வரை மரத்திலும் காயத்திலுமே பார்த்து வியந்திருந்த சிட்டுக்குருவியை கைகளில் கண்ட மகளுக்கு ஏகப்பட்ட சந்தோஷம். அவள் முகம் அப்படி மலர்ந்திருந்தது. சிறிது நேரத்தில் மெல்ல எழ முயன்ற அந்த சிட்டுக்குருவி சடாரென் எழும்பிப் பறந்து டி.விக்கு பின்னே மறுபடியும் விழுந்து ஒளிந்து கொண்டது. பறக்க முடியவில்லையோ என்று அருகே சென்று பார்த்தால், மீண்டும் அங்கிருந்து ஒரு எம்பு எம்பி ஜன்னல் கம்பியில் உட்கார்ந்து சில விநாடிகளில் வெளிக்காற்று பட்ட உற்சாகத்தில் எதுவுமே நிகழாதது போல ‘ஜிவ்’ என்று பறந்து போனது.

மகளுக்கு முதலில் ஏமாற்றமாக இருந்தது. 'ஏம்பா, அது இங்கருந்து போயிருச்சு' என்று கேட்டபடி இருந்தாள். பின்னர் அதையே ஒரு 'இப்படி அடிபட்டு அவளால் காப்பாற்றப்பட்ட ஒரு ஆண்குருவி தனது பெண்குருவியுடன் இணைந்த கதையாக' நான் சொல்ல புன்னகையுடன் கேட்டுக் கொண்டாள்.

எனக்கு இன்றும் நன்றாக நினைவிருக்கிறது. அந்த ஞாயிற்றுக் கிழமை முழுவதும், 'என்ன நடந்தது. ஏன் இப்படி மனம் லேசாக ஏதோ சந்தோஷமாக உணர்கிறேன்' என்று வியந்தவாறே இருந்தேன்...

மும்பை
10.12.02


24.8.06

மலை போல் நிற்கும் வசீம் ராஜா!

இன்று காலை செய்தித்தாள்களில் ‘வசீம் ராஜா’ என்ற பெயரைப் படித்ததும், இயல்பாக மனதில் தோன்றி என்னையறியாமல் நான் சொல்லிப்பார்த்துக் கொண்ட வாக்கியம்தான் ‘அங்கு மலை போல் நிற்கும் வசீம் ராஜா’. எந்த ஆண்டு என்று நினைவில்லை. ஆசீப் இக்பால் தலைமையில் வலுவிழந்த ஒரு பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு விளையாட வந்திருந்த பொழுது, சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் நமது வானொலியின் தமிழ் வர்ணனையில் அடிக்கடி உச்சரிக்கப்பட்ட வாக்கியங்கள் இவை...உச்சரித்தவர் நமது சாத்தை அப்துல் ஜப்பார் அவர்கள்!

வாசிம் ராஜா கவரில் நிற்பார் என நினைக்கிறேன். வலப்புறம் எழும்பி வரும் பந்துகளை கவனமாக நமது வீரர்கள் கவர் டிரைவ் செய்ய பந்துகள் வாசிம் ராஜாவை கடந்து செல்லும் தருணங்கள் அரிதானவையே!

பொங்கல் விடுமுறையும், சென்னையில் டெஸ்ட் போட்டிகளும் இணைந்து வரும் நாட்கள் பலருக்கு வாழ்க்கையின் மறக்க முடியாத தருணங்கள். முக்கியமாக அந்த தமிழ் வருணனை. சற்றே பெண்தன்மை வாய்ந்த குரலில் ஆற்றொழுக்கு நடையில் எப்பொழுது நிதானம் தவறாத திரு.ராமமூர்த்தியையும், உணர்ச்சி வெள்ளத்தில் வார்த்தைகள் கிடைக்காமல் திக்குமுக்காடிப் போய் ‘வல்லுநர் மணி அவர்களே’ என்று மற்றவரை துணைக்கழைக்கும் திரு.ஜப்பாரையும், திரு.கூத்தபிரானையும் கிரிக்கெட் விளையாட்டின் நுணுக்கங்களை என்னைப் போன்ற சிறு ஊர்காரர்களும் ஓரளவுக்கு விளங்கக்கூடிய அளவில் இடையிடையே கூறும் வல்லுநர் மணியினையும் மறக்க முடியுமா?

தற்பொழுது எனக்கு கிரிக்கட் நடப்பதும் தெரியாது...தமிழ் வருணனைகள் இருப்பதும் தெரியாது. ஆனால், சென்னையில் முதன்முதலாக கிரிக்கெட்டினை தொலைக்காட்சியில் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்த்த பொழுது, அங்கிருந்த பல வீடுகளில் தொலைக்காட்சியின் சப்தத்தினை குறைத்து வைத்து தமிழ் வருணனைகளை அருகே வைத்து கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

திருநெல்வேலி, தூத்துக்குடியில் கூட கிரிக்கெட் என்பது ஏதோ சென்னையிலிருந்து மாற்றலாகி வந்திருக்கும் ஒரு குடும்பத்திலுள்ள பையனை மையமாக வைத்து பீட்டர் விடும் சில பையன்கள் விளையாடும் விளையாட்டு என்பதிலிருந்து அனைவரும் ஒரு கை பார்க்க துணிந்ததற்கு 1983ல் இந்திய உலக கோப்பை வெற்றிக்கு முன்னதாகவே இந்த தமிழ் வருணனைகள் முக்கிய காரணம் என்பேன்! ஆயினும் பாளையங்கோட்டையில் இருந்து ஹாக்கி ஒழிந்து போனதில், இந்தியா உலக கோப்பையினை வெல்லாமல் இருந்திருக்கலாம் என்று பல்லைக் கடிப்பவர்களில் நானும் ஒருவன்.

அதுவரை ‘நியூபால்’ என்று மட்டுமே கூற பழக்கப்பட்டிருந்த எனக்கு, பள்ளியில், வேகமாக ஒரு பையன் ஓடி வந்து, இயல்பாக ‘புதுப்பந்து எடுத்தாச்சா?’ என்று கேட்கையில் புதுமையாக இருந்தாலும், தமிழ் வருணனைகளின் வீச்சு புரிந்தது. டெஸ்ட் போட்டி என்பதே ‘இந்தியன் எக்ஸ்பிரஸில் ஏதோ ஓரளவுக்கு தெரியும் படங்களும், எவ்வளவு ஓட்டங்கள் யார் யார் அவுட் என்பது மட்டுமே புரியும், கரகரவென்ற நிதானமான குரலில் கேட்கும் ஆங்கில வருணனைகள் மட்டுமே’ என்றிருந்த எங்களுக்கு ஏறக்குறைய நேரில் படம் போல பார்க்கும் அனுபவத்தினை அளித்தது தமிழ் வருணனைகள்தான் என்றால் மிகையல்ல...ஆசீப் இக்பால் விளையாட இறங்கி ஒரு நான்கினை அடித்ததுமே...’ஆஹா பெரிய வீரர்கள் என்றால் இப்படித்தான்...ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல இந்த ஒரு அடியே போதுமே’ என்று ஜப்பார் அவர்கள் புகழ்ந்ததிலேயே நான் ஆசிப் இக்பாலின் விசிறியாகிவிட்டேன். அவர் விளையாடுவதை நான் ஒரு முறை கூட எங்கும் பார்த்ததில்லை. ஆயினும் அவர் எப்படிப்பட்ட ஸ்டைலிஸ்ட் வீரர் என்று பத்திரிக்கைகள் வருணிப்பதை படிக்கையில் ஆனந்தமாயிருக்கும்.

அது ஒரு பொற்காலம் என்றால் இளையவர்களுக்கு பிடிக்காது...எனவே எனக்கு அது ஒரு கனாக்காலம்!

மால்கம் மார்ஷல், வாசீம் ராஜா போன்றவர்கள் இல்லை என்று நினைக்கையில் எனக்கு வயதாகிறது என்ற எண்ணம் மெலெழும்புகிறது...

21.8.06

அர்ச்சகர் பிரச்னையின் பயணம்...

கடந்த சில நாட்களாக ‘அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வண்ணம் தமிழக அரசு கொணர்ந்த அவரச சட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் அளித்த இடைக்கால தடையுத்தரவு’ குறித்த பல வலைப்பதிவுகளை கண்ணுற நேர்ந்தது. முக்கியமாக திரு.பத்ரியின் வலைப்பதிவில் அர்ச்சகர்கள் நியமனம் குறித்த உச்ச நீதிமன்றத்தின் இரு வழக்குகள் குறித்து எழுதியுள்ளார். பலரும் இவ்விரு வழக்குகள் பற்றியே குறிப்பிடுகின்றனர். இவ்விரு வழக்குகளுக்கிடையில் ஆந்திர மாநிலம் சம்பந்தப்பட்ட 1996ம் ஆண்டு வழக்கு ஒன்றும் உள்ளது. தமிழகம் (1972) ஆந்திரம் (1996) கேரளா (2002) வழக்குகளை ஆராய்ந்தால் எவ்வாறு உச்ச நீதிமன்றமும் கால வெள்ளத்தில் படிப்படியாக தன்னை இந்த பிரச்னையில் தளர்த்திக் கொள்கிறது என்பது புரியும். திரு.ரவி ஸ்ரீனிவாஸ் குறிப்பிடுவது போலவே 2002 வழக்கிலும் உச்ச நீதிமன்றம் முழுமையான உரிமையினை அளிக்கவில்லை. எனவே தற்போதய தமிழக சட்டம் எவ்வித பிரச்னையுமின்றி உச்ச நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு (judicial review) தப்பிவிடும் என்று அறுதியிட்டு கூற முடியாது. ஏனெனில் 1972 தமிழக வழக்கின் தீர்ப்பு இன்று வரை 2002 கேரள வழக்கின் தீர்ப்பு உட்பட எந்த தீர்ப்பினாலும் மேலாத்திக்கம் (overrule) செய்யப்படவில்லை. எனவே, 1972ம் வருட தமிழக வழக்கின் தீர்ப்பு உண்மையில் தற்போதைய சட்ட திருத்ததிற்கு எதிரானது என்றே நான் கருதுகிறேன். எனவே, உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததில் ஏதும் வியப்பில்லை!

அர்ச்சகர் நியமனம் குறித்த எந்த வழக்கிலும், குறிப்பிடப்படும் உரிமை அரசியலமைப்பு சட்டத்தின் 25 மற்றும் 26ம் பிரிவுகள் (Article 25 and 26). 25வது பிரிவு எந்த ஒரு மதத்தினையும் பின்பற்றும் உரிமையினை அளிக்கிறது. 26ம் பிரிவு மத நிறுவனங்களை நிறுவி அவற்றை நிர்வகிக்கும் உரிமையினை அளிக்கிறது. இவை அடிப்படை உரிமைகள். இந்த உரிமைகள் சில விதிவிலக்குகளுக்கு உட்பட்டவை. முக்கியமாக 25 வது பிரிவின் 2(b) உட்பிரிவு சமுக நலன் மற்றும் சீர்திருத்தம் அல்லது இந்து சமய நிறுவனங்களுக்குள் அனைத்து இன, பிரிவு இந்துக்களுக்கு உட்பிரவேசிக்கும் வண்ணம் சட்டமியற்ற அரசுக்கு முழு உரிமையளிக்கிறது (social welfare and reform or throwing open Hindu religious institutions of public character to all classes and sections of Hindus) இந்தப் பிரிவு கூற விரும்புவது வெறும் ஆலய பிரவேசமா அல்லது ஆலய பணிகளையும் மேற்கொள்வதா என்பதை அறிய இந்தப்பிரிவு குறித்து அரசியலமைப்புக்குழு (constituent assembly) என்ன விவாதித்தது என்பதை ஆராய வேண்டும். சமூக நலன் மற்றும் சீர்திருத்தம் என்பதை தனியே படிக்கையில் அரசின் சட்டதிருத்தம் சமூக சீர்திருத்தம் என்ற வட்டத்திற்குள் அடங்கிவிடும் என்றே நான் நினைக்கிறேன். ஆயினும், மேற்கூறிய மூன்று வழக்குகளிலும் இந்தப் பிரிவானது பெருமளவில் அரசினால் கையிலெடுக்கப்படவில்லை.

***

தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைய சட்டமானது 1959ம் ஆண்டு இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின் 55வது பிரிவின்படி கோவில் தர்மகர்த்தா (trustee) அர்ச்சகரை நியமிக்கும் உரிமை படைத்தவர். ஆனால் அர்ச்சகர் பரம்பரை அர்ச்சகராயிருக்கும் பட்சத்தில் தர்மகர்த்தாவிற்கு அந்த உரிமை கிடையாது. இந்தச் சட்டத்தினை செயலாக்குவதற்க்கான விதிகள் 1964ம் ஆண்டு (Madras Hindus Religious Institutions (Officers and Servants) Service Rules 1964) இயற்றப்பட்டது. இந்த விதிகளிலேயே சில சீர்த்திருத்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. முக்கியமாக, 12ம் விதியின் கீழ் எந்த ஒரு நபரும் அர்ச்சகராக வேண்டுமென்றால், மத நிறுவன தலைவரிடம் இருந்து ‘தகுதி சான்றிதழினை’ பெற வேண்டும். இதன் மூலம் தகுதியற்ற ஒருவர் பரம்பரை உரிமையில் அர்ச்சகராவது தடுக்கப்பட்டது. ஆக இன்றைய நிலைக்கு முதல் செங்கல் வைக்கப்பட்டது 1964ம் ஆண்டில்.

1969ம் ஆண்டு அரசினால் நியமிக்கப்பட்ட ‘அட்டவணை வகுப்பினரின் கல்வி பொருளாதார மேம்பாடு மற்றும் தீண்டாமைக்கான குழு’ அரசிடம் தனது அறிக்கையினை அளித்தது. அவ்வறிக்கை ‘இந்துக் கோவில்களில் உள்ள பரம்பரை அர்ச்சகர் முறையினை ஒழித்து அர்ச்சகர் மற்றும் இதர கோவில் பணிகளை அனைத்து ஜாதியினருக்கும் அளிக்க’ பரிந்துரை செய்தது. அந்த பரிந்துரையினை ஏற்ற அரசு 1970ம் ஆண்டு மேற்கூறிய சட்டத்தின் 55ம் பிரிவினை மாற்றியது. இதன்படி பரம்பரை அர்ச்சகர் முறை முற்றிலும் அகற்றப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தினை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குதான் சேஷம்மா வழக்கு என்று அழைக்கப்படும் 1972ம் வருட வழக்கு!

உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகளை கொண்ட மன்றம் தமிழக அரசின் இந்த சட்ட திருத்தமானது அரசியலமைப்பு சட்டத்தின் 25 மற்றும் 26ம் பிரிவுகளை மீறியதாகாது என்று கூறியது என்னவோ உண்மைதான். ஆனால் அவ்வாறு கூறியதற்கான காரணம் இன்றைய சட்ட திருத்தத்தின் முன் பிரச்னையாக உருவெடுக்கக்கூடும். தமிழக அரசு அப்போது உச்ச நீதிமன்றத்தின் முன் வைத்த வாதம் அப்படிப்பட்டது!

1972ல் வழக்கு தாக்கல் செய்தவர்கள் முன் வைத்த வாதம், ‘இந்து கோவில்கள் ஆகம நெறிப்படி நிர்வகிக்கப்படுகின்றன. ஆகம முறைப்படி குறிப்பிட்ட வகுப்பினர்தான் விக்ரகத்தை தொட்டு பூசை செய்ய இயலும். வேறு யாரும் அவர் எவ்வளவு பெரிய மதத்தலைவராயினும் சரி, மடாதிபதியாயினும் சரி ஏன் மற்ற பிராமணர்களே விக்ரகத்தை தொடுவது மட்டுமல்ல கர்பகிரகத்தில் பிரவேசித்தாலே விக்ரகம் தீட்டுப்பட்டதாகும்’ என்பதாகும். இந்த வாதத்தினை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள தமிழக அரசின் அட்வோகேட் ஜெனரல் சட்ட திருத்தத்தின் நோக்கத்திலிருந்து விலகி ‘இந்து சமய மற்றும் அறநிலைய சட்டத்தின் 28ம் பிரிவின்படி தர்மகர்த்தா கோவிலை அதனது வழக்கப்படிதான் (usage) நிர்வகிக்க முடியும், எனவே வழக்கம் ஒரு குறிப்பிட்ட வகுப்பினர்தான் அர்ச்சகராயிருக்க வேண்டுமென்றிருந்தால் அவர் அதற்கு கட்டுப்பட்டவர். திருத்திய 55ம் பிரிவிலும் அவர் வழக்கத்தினை மீற வேண்டும் என்று கூறப்படவில்லையே’ என்று பின் வாங்க ‘அப்படியாயின் பரம்பரையாக அர்ச்சகரை நியமிப்பதும் பழக்கம்தானே’ என்று வழக்கு தொடர்ந்தவர்கள் முன்னேறினர். தமிழக அரசு மேலும் இறங்கி வந்து ‘பரம்பரை அர்ச்சகர் முறைதான் ஒழிக்கப்படுகிறதே தவிர அர்ச்சகரின் மகன் அவருக்கு பின்னர் அர்ச்சகராவதற்கு தடையேதும் இல்லையே...நடைமுறையில் அவரையே தர்மகர்த்தா நியமிக்க போகிறார்’ என்று வாதிட்டு மேலும் ‘அர்ச்சகர் நியமனம் மதம் சாராத (secular) பணி, இறைப்பணியல்ல (religious)’ என்று கூற உச்ச நீதிமன்றமும் ‘ஆமாம், அர்ச்சகர் என்பவர் ஒரு மடாதிபதியினைப் போல நிறுவனத்தின் மதத்தலைவராக மாட்டார்’ என்று கூறி வழக்கினை தள்ளுபடி செய்தது. ஆனால் தனது தீர்ப்பில் தெளிவாக ‘பரம்பரை வழக்கப்படி அர்ச்சகரை நியமிக்கும் கடப்பாட்டிலிருந்து மட்டும், மட்டுமே (to that extent and to that extent alone) தர்மகர்த்தா கோவிலின் பழக்கத்திலிருந்து விலகமுடியும்’ என்று கூறியது. இறுதியில் ‘ஜாதி பேதமின்றி அனைவரும் அர்ச்சகராகும் வண்ணம் அரசு அர்ச்சகருக்கான தகுதி குறித்த விதிகளை எதிர்காலத்தில் மாற்றி விடும்’ என்ற அச்சம் வழக்கு தொடுத்தவர்களால் முன் வைக்கப்பட்டது. உச்ச நீதிமன்றாமோ அவ்வாறு கோவில் பழக்கத்திற்கும் வழிப்பாட்டு முறைகளுக்கும் மாறாக விதிகள் மாற்றப்பட்டால், கோவில் வழிபாட்டில் உரிமையுள்ளவர்கள் அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து கொள்ளலாம்’ என்று கூறி வழக்கினை முடித்து வைத்தது.

***

அடுத்த வழக்கு ஆந்திர அரசு 1987ம் வருடம் கொணர்ந்த இந்து சமய அறநிலைய சட்டத்தின் பிரிவுகளை எதிர்த்து. இங்கும் பரம்பரை அர்ச்சகர் முறை ஒழிக்கப்பட்டதே வழக்கிற்கான மூலம். வழக்கினை தொடுத்தது திருமலை திருப்பதியின் தலைமை அர்ச்சகர்களில் ஒருவர். வழக்குரைஞர் திரு.பராசரன். சேஷம்மா வழக்கில் திரு.நானி பல்கிவாலா!

நாராயண தீக்ஷிதுலு என்று அழைக்கப்படும் 1996ம் வருட ஆந்திர தீர்ப்பு சுவராசியமானது. நான் படித்த புத்தகத்தில் சுமார் 69 பக்கங்களுக்கு உள்ள இந்த தீர்ப்பின் 50 பக்கங்கள் சுவாமி விவேகானந்தர், அரவிந்தரிலிருந்து பல்வேறு மேல் நாட்டு அறிஞர்கள், இந்திய அறிஞர்கள் ஆகியோரின் எழுத்து, பேச்சிலிருந்து மேற்கோள்கள். தத்துவத்தை படிப்பதில் ஆர்வமிருப்பவர்களால் மட்டுமே முழுவதும் படிக்க இயலக்கூடிய தீர்ப்பு. உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் மட்டுமே அடங்கிய இந்த மன்றமானது சேஷம்மா வழக்கிற்கு எதிராக ஏதும் கூற இயலாது. ஆனால் குறிப்பிடத்தகுந்த ஒரு வித்தியாசம் உண்டு. சேஷம்மா வழக்கில் ‘மற்றவர்கள் தொடுவதால் விக்ரகம் தீட்டுப்படும்’ என்று கூறக்கூடிய ஒரு ஆகமத்திலிருந்து மட்டுமே மேற்கோள் காட்டப்பட்டது. தீஷிதுலு வழக்கிலோ மேற்கோள்களாக சமுதாய புரட்சியாளர்களான விவேகானந்தர், அரவிந்தர் ஆகியோரின் கருத்துகள்! நீதிமன்றம் பயணிக்கும் பாதையினை புரிந்து கொள்ள முடிகிறது.

ஆந்திர வழக்கின் இறுதியில் பரம்பரை அர்ச்சகர் முறையினை ஒழிக்கும் ஆந்திர சட்டத்தினை ஏற்றுக் கொண்டதோடு, சேஷம்மா வழக்கினைப் போல அர்ச்சகர் நியமனத்தில் பரம்பரை வழக்கம் மட்டுமே ஒழிக்கப்படுகிறது என்று வலுவாக கூறப்படவில்லை. மேலும், நியமனம் பழக்கத்திற்கு மட்டுமே உட்பட்டது என்றும் தெளிவாக கூறவில்லை என்றாலும் எவ்வாறும் இருக்கலாம் என்று கோடிட்டு காட்டப்படுகிறது. ஏனெனில் ஒரு குறிப்பிட்ட வகுப்பார்தான் (denomination) அர்ச்சகர்களாக இருக்கலாம் என்று வாதிடும் திரு.பராசரனைப் பார்த்து நீதிபதிகள், ‘அந்த குறிப்பிட்ட வகுப்பார்கள் அனைவரும் நன்கு கல்வி பயின்று மேல் நாடுகளுக்கு வேலைக்கு போய் வேறு யாருமே இல்லையென்றால் என்ன செய்வீர்கள்?’ என்று கேட்க திரு.பராசரன் வேறு வழியில்லாமல் ‘அப்படியென்றால் வெளியே தேட வேண்டியதுதான்’ என்று கூற வேண்டியதாயிற்று!

ஆக, தெளிவாக கூறவில்லை என்றாலும் இந்த வழக்கானது சேஷம்மா வழக்கிலிருந்து சமூகம் அதிக தூரம் பயணித்து விட்டதை குறிப்பால் உணர்த்தியது என்றே கூற வேண்டும்.

***
அர்ச்சகர்கள் தகுதி குறித்து அடுத்த அதே சமயம் ஓரளவுக்கு தெளிவான அடியினை எடுத்து வைத்தது ‘ஆதித்யன் வழக்கு’ என்று அழைக்கப்படும் கேரள வழக்கு!

திருவாங்கூர் தேவஸ்வம் போர்டின் கட்டுப்பாட்டில் உள்ள சிவன் கோவில் ஒன்றில் பணியாற்றிய சாந்திக்காரன் என்று அழைக்கப்படும் அர்ச்சகர் நிலையிலுள்ள ஒருவரின் நடத்தை குறித்து அதிக குற்றச்சாட்டுகள் எழ, பிராமணரல்லாத ஒருவர் சாந்திக்காரனாக நியமிக்கப்பட கோவிலின் தந்த்ரி அவரை பணியேற்க அனுமதிக்கவில்லை. ஆனால், தேவஸ்வம் ஆணையர் அவ்வாறு பிராமணர்கள் மட்டுமே சாந்திக்காரனாக பணியாற்ற இயலும் என்ற விதி ஏதும் இல்லை என்று சுட்டிக்காட்டவே, ‘அவ்வாறு மலையாள பிராமணரல்லாத ஒருவரை சாந்திக்காரனாக நியமிப்பது தன்னுடைய வழிபாட்டு உரிமையினை பாதிப்பதாக’ பக்தர் ஒருவர் வழக்கு தாக்கல் செய்ய இறுதியில் பிரச்னை உச்ச நீதிமன்றத்திற்கு வந்தது.

இந்த வழக்கில் இவ்வாறு மலையாள பிராமணர்கள் மட்டுமே சாந்திக்காரனாக நியமிக்கப்பட முடியும் என்பதற்கான பழக்கமோ அல்லது கோவிலை உருவாக்கியவரின் விருப்பம் குறித்தோ தெளிவான வாதம் வைக்கப்படவில்லை என்று கூரி வழக்கினை தள்ளுபடி செய்தாலும் இந்த தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கூறிய பல கருத்துகள் குறிப்பிடத்தகுந்தது. உதாரணமாக, ‘காலங்காலமாக பிராமணர்கள் மட்டுமே அர்ச்சகர்களாயிருப்பதால் மற்றவர்களுக்கு அர்ச்சகர்களாவதற்கு தடையிருக்கிறது என்று பொருளில்லை மாறாக அவர்கள் வேதங்களை கற்பதிலிருந்தும், புனித நூலினை அணிவதிலிருந்தும் தடுக்கப்பட்டார்கள் என்றுமே எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்று கூறியது கவனிக்கத்தகுந்தது. ஆயினும் இந்த வழக்கிலும் எந்தக் கோவிலிலும் யார் வேண்டுமானாலும் அர்ச்சகராக நியமிக்கப்பட முடியும் என்று இந்த தீர்ப்பிலும் கூறப்படவில்லை. ஐந்து நீதிபதிகளால் தீர்க்கப்பட்ட சேஷம்மா வழக்கு குறுக்கே நிற்பதுதான் காரணம் என்று நினைக்கிறேன். எனினும் நேரடியாக ஜாதி குறித்த பிரச்னையை அணுகியதிலிருந்து, இந்த தீர்ப்பினை அர்ச்சகர் பிரச்னையில் ஒரு திருப்புமுனை என்றே கருத வேண்டும்.

***

சேஷம்மா வழக்கின் தீர்ப்பு, இன்றளவும் நிலுவையில் உள்ளது. எனவே தமிழக சட்ட திருத்தம் குறித்த வழக்கு, ஐந்து நீதிபதிகளுக்கு மேற்பட்ட நீதிபதிகள் அடங்கிய மன்றத்திற்கு அனுப்பப்படும் என்று நினைக்கிறேன். அதுவரை இப்போதுள்ள நிலமை நீடிக்கும் வண்ணம், இடைக்கால தடை சட்ட முறைகளின்படி நியாயமானதுதான்.

மதுரை
21.08.06முழு தீர்ப்பு வேண்டுவோர்:
Seshammal Vs State of Tamilnadu 1972 (2) SCC 11
A.S.Narayana Deekshitulu Vs State of AP 1996 (9) SCC 548
N.Adithayan Vs Travancore Devsswom Board 2002 (8) SCC 106

18.8.06

சீக்கியரும் அர்ச்சகர் ஆகலாமா?

வலைப்பதிவு ஒன்றில் நண்பர் ஒருவர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில் ‘அனைத்துப் பிரிவினரும் அர்ச்சகராகும்’ சட்டம் நடைமுறைக்கு வந்தால் பெளத்த, சீக்கிய மதத்தினரை சார்ந்தவர்களும் இந்துக்கோவில்களில் அர்ச்சகராகும் அபாயம் இருக்கிறது என்று திரு.பராசரன் அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வாதாடியதாக திரு.பத்ரி அவர்களது வலைப்பதிவில் குறிப்பிட்ட செய்தியினை எடுத்துக்காட்டி அபத்தம்! என்று முடித்திருந்தேன். பின்னர்தான் இந்த சட்ட திருத்தம் பற்றியும், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் சாரம் பற்றியும் எதுவும் அறிந்திராத நான் அவ்வாறு ஒரு வார்த்தையினை உங்கள் முன் பயன்படுத்துவது தவறான ஒரு முன்னுதாரணமாக இருக்கக்கூடும் என்ற அச்சம் எனக்கு ஏற்ப்பட்டது. அதற்காக வருந்துகிறேன்!

ஆயினும் நான் அபத்தம் என்று குறிப்பிட்டது திரு.பராசரன் அவர்களது பரந்துபட்ட அறிவினை நோக்கியல்ல...மாறாக இந்த வாதத்திற்கு முக்கியத்துவம் அளித்த பத்திரிக்கைச் செய்தியின் மீதுதான். ஒரு வழக்கினை தாக்கல் செய்கையில் வலிமையாக நம் பக்கம் இருக்கும் வாதங்களோடு, சிறு துறும்பாக உள்ள எந்த ஒரு வாதத்தினையும் முன் வைப்பது வழக்கம். அனைத்தும் சேர்ந்து நீதிபதியின் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்ப்படுத்தும் என்ற நம்பிக்கையில். அது போலவே திரு.பராசரனும் இந்த வாதத்தினை வைத்திருப்பார் என எண்ணுகிறேன்.

அவ்வாறு நான் எழுதியதும், கேள்வி கேட்ட நண்பர் எனக்கு அனுப்பிய மின்னஞ்சலில், ‘அவ்வாறாயின் நமது சட்டங்கள்/ அரசியலமைப்பு சட்டம் போன்றவை ‘இந்து யார்’ என்பதை வரையறுக்கும் விளக்கத்தினை மாற்ற வேண்டுமோ என வினவியிருந்தார். தான் சட்டம் படித்தவரல்ல என்று கூறிக்கொண்டாலும், அவரது நுண்ணறிவு என்னை வியக்க வைத்தது. (அதிகம் வியக்கும் மற்றொருவர் திரு.ரவி ஸ்ரீனிவாஸ்) ஏனெனில் நமது அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 25(2)(b)ல் ‘இந்து சமய நிறுவனங்களில் அனைத்து இந்துக்களும் பங்கேற்கும் வண்ணம் அரசு சட்டமியற்றலாம்’ என்ற உரிமையினை வழங்கி பின்னர் இறுதியில் இந்துக்கள் என்பது சீக்கியர், பெளத்தர் போன்றோரையும் இந்து நிறுவனங்கள் என்பவை அவ்வாறான மற்ற நிறுவனங்களையும் குறிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இவ்வாறாக இந்து என்பது சீக்கியர், பெளத்தர் போன்றோரையும் குறிக்கும் என்பதால் அனைத்து இந்துக்களும் அர்ச்சகர் ஆக முடியுமெனில் சீக்கியர்களும் ஆகலாமே என்பதுதான் திரு.பராசரனின் வாதமாக இருக்க முடியும்.

சட்டம் ஒரு பதத்தினை விளக்குவது அகராதி விளக்கம் போல அல்ல. அந்தந்த சட்டத்திற்கே செல்லுபடியாகும். ஆயினும் அரசியலமைப்பு சட்டத்தின் இந்தப் பிரிவினை படித்தால் அனைத்து மதத்தினரையும் தனித்தனியே குறிப்பிட்டு சட்டப்பிரிவுகள் ஏற்ப்படுத்துவதற்கு பதிலாக ஒரே சட்டப்பிரிவாக இயற்றுவதற்கு வசதியாகத்தான் இவ்வாறு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ள முடியும். அதைப்போலவே திருமணம், சொத்துரிமை போன்ற இந்து சட்டங்களைப் படிக்கையிலும் அவற்றில் இந்து என்பது சீக்கியர், பெளத்தர் போன்றோரை குறிப்பிடும் என்றாலும் அது அவரவருக்கு தனியே சட்டமியற்றாமல் பொதுவான சட்டமாக இயற்ற வேண்டும் என்ற எண்ணத்தினால் மட்டுமே கூறப்படுவதாகும் என்பது எளிதில் விளங்கும்.

எனினும், இவ்வாறாக ஒரு விளக்கம் கொடுக்கப்பட வேண்டியிருப்பதால், திரு.பராசரனின் வாதத்தில் விஷயம் இருக்கிறதல்லவா என்று இன்னமும் நினைக்கத் தோன்றுகிறது. ஆனால், சட்டத்திருத்தம் ஏற்பட்டுள்ள இந்து அறநிலையத்துறை சட்டத்தினை (The Tamilnadu Hindu Religious and Charitable Endowments Act’1959) ஆராய்ந்தால் எவ்வித குழப்பமும் இல்லை என்பது புரியும். அரசு வேலைக்கான விண்ணப்பங்களை கவனித்து வந்தால் அவற்றில் இந்து அறநிலையத்துறை பொறுத்து மட்டும் ‘இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்கவும்’ என்று இருப்பதை பார்த்திருக்கலாம். இந்துக்கள் என்றிருந்தால் தவறு. ‘இந்து மதத்தினை பின்பற்றுபவர்கள்’ என்றிருக்க வேண்டும். ஏனெனில் இந்த சட்டத்தின் 10வது பிரிவில் ‘இந்த சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றும் எந்த ஒரு ஊழியரும் இந்து மதத்தினை பின்பற்றுபவர்களாக இருத்தல் வேண்டும் என்று உள்ளது. இந்து என்று மட்டுமே கூறாமல் இந்து மதத்தினை பின்பற்றுபவர் (person professing hindu religion) என்றிருப்பதால் குழப்பங்கள் இல்லை அல்லவா?

இந்தச் சட்டத்தின் 55ம் பிரிவின்படிதான் கோவில் ஊழியர்கள் நியமிக்கப்படுகிறார்கள். ஊழியர் என்பது அர்ச்சகர் மற்றும் பூஜாரிகளை உள்ளடக்கியதாகும் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே 10வது பிரிவோடு சேர்த்து படிக்கையில் அர்ச்சகர் இந்து மதத்தினை பின்பற்றுபவராக இருந்தல் வேண்டும். சீக்கியரோ அல்லது பெளத்தரோ இந்துவாக இருக்கலாம். ஆனால் இந்து மதத்தினை பின்பற்றுபவர் இல்லை.

இவ்வாறு ஏற்கனவே சட்டத்தில் தெளிவாக மத தகுதியினை கூறுவதோடு நிற்காமல் கோவில் ஊழியர்களை நியமிப்பது குறித்த விதிகளில் (The Tamilnadu Hindu Religious Institutions (officers and servants) Service Rules’1964 3வது விதியிலும் இந்து மதத்தினை பின்பற்றுபவராக இருத்தல் வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. மேலும் இந்து மதத்தினை பின்பற்றுபவர் என்று எவ்வாறான உறுதி மொழி எடுக்க வேண்டும் என்பதற்கும் அரசாணை எண் 4055/1961 மூலம் விதிமுறைகள் ஏற்ப்படுத்தப்பட்டுள்ளன.

எனவே ஏற்கனவே அறநிலையத்துறை சட்டத்திலும் விதியிலும் அர்ச்சகர் இந்து மதத்தினை பின்பற்றுபவராக இருத்தல் வேண்டும் என்று தெளிவாக இருக்கையில் சீக்கியரும், பெளத்தரும் அர்ச்சகராகலாம் என்ற வாதத்தில் கொஞ்சம் கூட வலு இருக்கப்போவதில்லை என்பது என் கருத்து...

மதுரை
18.08.06

13.8.06

சோனியா காந்தியின் தியாகம்?

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் இணையத்தினை பற்றி பத்திரிக்கைகளில் படிக்க நேர்ந்த நான், அதனை மற்றவர்களிடம் கூறுகையில், ‘உலகத்திலுள்ள அனைத்து விடயங்களையும் உள்ளடக்கிய பெரிய நூலகம்’ என்று கூறி வந்தேன். பின்னர் இணைய பரிச்சயம் நேரிடையாக ஏற்ப்பட்ட பின்னர் அது ஒரு ‘பெரிய குப்பைத்தொட்டி’ என்று தோன்றினாலும் தவறு என் பக்கமும்தான் என்று புரிய பல நாட்களானது. குப்பைத்தொட்டியினை கிளறுவது சில சமயங்களில் சுகம்தான். எப்போது எது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஒரு வகையில் சுவராசியமாக இருக்கும். ஆனால் தவறான முடிவுகளுக்கு பல சமயங்களில் நம்மை வழி நடத்துகையில் ஏமாற்றம் மிஞ்சுகிறது. அச்சுப் பத்திரிக்கைகளில் எழுதும் எழுத்தார்களுக்குறிய கடப்பாடு (accountability) ஏதும் இங்கு எழுதுபவர்களுக்கு இல்லை என்ற சுதந்திரம் பல தவறான செய்திகள் மக்களை சென்று அடைய இணையம் காரணமாக இருக்கக் கூடும் என்ற அச்சம் எனக்கு உண்டு!

இந்த அச்சத்தின் காரணமாகவே இணையத்தில் நான் எழுதும் ஒவ்வொரு பதிவிற்கும் என்னால் இயன்ற வரை அதிக நேரம் செலவழித்து எவ்வித தவறும் நேராத வரை பார்த்துக் கொள்ள முயல்கிறேன். சில சமயங்களில் சந்தேகம் இருக்கையில் கூடுமான வரை எனது எண்ணமாகவே பதிகிறேன். பெருமைக்காக கூறவில்லை, சட்டத்தினை பற்றி நான் மற்றவர்களுக்கு எழுதுவதற்கும் மேலாக ஒவ்வொரு பதிவிற்கும் எடுக்கும் முயற்சியில் நான் அதிகமாக கற்றுக் கொள்கிறேன்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வாறுதான் ஒரு இலக்கிய குழுமத்தில் செம்மொழி பற்றி நடை பெற்ற விவாதத்தில் திரு.இந்திரா பார்த்தசாரதி என்ற எழுத்தாளர் "தமிழ் செம்மொழி என்று ஆகிவிட்டால், அரசியல் சட்டம் எட்டாம் பிரிவின்படி, நவீன இந்திய மொழி என்று அதற்குக் கிடைத்து வரும் உரிமைகளும் சலுகைகளும் பாதிக்கப் பட மாட்டா என்பது என்ன நிச்சியம்? ஒரே மொழி இரண்டு தகுதிகளுக்கும் உரியது ஆகாது என்று மனித வள மேம்பாட்டுத் துறை கூறாது என்பது உறுதியா?" என்று ஒரு கேள்வியினை எழுப்பியிருந்தார். இதனைப் படிக்கும் யாருமே ‘நவீன இந்திய மொழி என்று ஒரு பிரிவு உண்டு எனவும், எட்டாவது அட்டவணையில் இடம் பெற்ற மொழிகளுக்கு சலுகைகள் உண்டு’ எனவும் புரிந்து கொண்டிருப்பார்கள். ஆனால் நவீன இந்திய மொழி என்று அரசியலமைப்பு சட்டப்படியோ அல்லது வேறு சட்டங்களிலோ எங்கும் ஒரு அங்கீகாரம் இல்லை. மேலும் அரசியலமைப்பு சட்டத்தின் எட்டாம் பிரிவில் ஒரு மொழி இடம் பெறுவதால் அதற்கு ரூபாய் நோட்டில் இடம் பெறுவதை தவிர வேறு எந்த பெரிய உரிமையும், சலுகையும் இல்லை என்பதும் இந்த எட்டாவது அட்டவணையே ஒன்றுக்கும் உதவாத, பயனற்ற அட்டவணை என்பதனையும் அவர் அறிந்திருந்தாரா என்பதும் தெரியவில்லை. ஹிந்திக்கும் சமஸ்கிருதத்திற்கும் அரசியல் அமைப்பு சட்டத்தின் வேறு பிரிவுகளில் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இந்த அட்டவணையிலும் மற்ற மொழிகளோடு ஹிந்தியும் சம்ஸ்கிருதமும் இடம் பெற்றுள்ளன! தமிழகத்தின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர் என்று அவர் அறிமுகப்படுத்தப்பட்டாலும், இந்த சிறு விடயத்தில் எவ்வித ஆராய்ச்சியும் செய்யாமல் போகிற போக்கில் எழுதியதற்கு காரணம், இணையம் தரும் சுதந்திரமே தவிர வேறில்லை!

இதனைப் போலவே குடியுரிமை பற்றிய சட்டப் பிரிவுகளை தனது வலைப்பதிவில் எழுத முயன்ற ஒரு வலைப்பதிவாளர், “ஒரு வெளிநாட்டவர் இந்திய குடியுரிமை பெற்று தேர்தலில் நின்று பிரதமர் ஆக முடியுமா? முடியும். அவர் பிறந்த நாட்டில் அதே சட்டமிருந்தால். இத்தாலியில் ஒரு குடியேற்ற உரிமை பெற்ற வெளிநாட்டவர் அமைச்சர் பதவிகளை பெற முடியாது. அதனால் தான் சோனியா காந்தி அம்மையார் இந்திய பிரதமர் ஆக முடியவில்லை. அவர் தியாகம் எல்லாம் ஒன்றும் செய்யவில்லை” என்று எழுதியிருந்தார்.

இந்த வாக்கியத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட தவறுகள் உள்ளதாக நான் கற்ற வரையில் அறிகிறேன். முதலில் இந்திய குடியுரிமை பெற்ற வெளிநாட்டவர் ஒருவர் இந்தியாவின் பிரதமராக ஆவதற்கு அவர் பிறந்த நாட்டின் சட்டத்திலும் அவ்வாறே ஒரு சலுகை இருக்க வேண்டும் என்று இந்திய அரசியலமைப்பு சட்டத்திலோ அல்லது இந்திய குடியுரிமை சட்டத்திலோ எங்கும் கூறப்படவில்லை. ஒருவர் இந்தியாவின் குடிமகனாவதற்கு பல வழிகள் உள்ளன. ஆனால் குடிமகனாக மாறி விட்ட நிலையில் அனைவருக்கும் ஒரே உரிமைதான். ஒரே ஒரு வித்தியாசம் பிறப்பு தவிர மற்ற வழிகளில் குடியுரிமை பெற்றவர்களின் குடியுரிமையினை அரசு சட்டத்தில் கூறப்பட்ட சில காரணங்களுக்காக பறிக்கலாம். அவ்வளவுதான். மற்றபடி, இத்தாலிய சட்டம் எப்படியிருப்பினும், இந்திய சட்டப்படி இந்திய குடியுரிமை பெற்ற பின்னர் சோனியா பிரதமராவதற்கு சட்ட ரீதியில் தடை ஏதுமில்லை.

அடுத்து இத்தாலிய அரசியல் சட்டம் மற்றும் இத்தாலிய குடியுரிமை சட்டத்தினையும் நான் ஆய்ந்த வரையில் இத்தாலிய குடியுரிமை பெற்ற வெளிநாட்டவர் அங்கு பிரதமர் ஆவதற்கு ஏதும் தடை இருப்பதாக தெரியவில்லை. இத்தாலிய சட்டங்கள் இந்திய சட்டம் போலவே குடிமகன் என்றுதான் கூறுகிறதே தவிர அவற்றில் பிரிவினை எதனையும் குறிப்பிடவில்லை. நான் வலையில் தேடிப்பிடித்த இத்தாலிய சட்டங்களில் பின்னர் ஏதும் திருத்தம் (amendment) ஏற்பட்டதா என்று தெரியவில்லை. ஏனெனில் சட்டங்களைப் படிப்பதில் இந்த ஆபத்தும் உள்ளது. நான் மேலே குறிப்பிட்ட வலைப்பதிவாளர் தனது பதிவில் ஆதாரமாக இந்திய உள்துறை அமைச்சகத்தின் வலைத்தளத்தின் சுட்டியினை அளித்துள்ளார். ஆனால், உள்துறை வலைத்தளத்தில் 2004ம் ஆண்டு வாஜ்பாய் அரசினால், இந்திய குடியுரிமை சட்டம் பெருமளவில் திருத்தப்பட்ட விபரங்கள் இல்லை. அதனாலாயே நண்பரும் சட்டப்படி இந்தியாவில் 12 ஆண்டுகள் வசிக்கும் ஒருவர் குடியுரிமை (by naturalisation) பெற முடியும் என்று கூறுகிறார். திருத்தப்பட்ட சட்டப்படி 14 ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும்!

சோனியாவின் குடியுரிமை பிரச்னை இரு முறை உச்ச நீதிமன்றத்தில் எழுப்பப்பட்டது. 1999ம் வருடம் அமேதி தொகுதியில் இருந்து அவர் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்தலில் தோற்றவர் அலகபாத் உயர் நீதிமன்றத்தில் மனு (election petition) செய்ய அந்த மனுவே முறையற்றது என்று கூறி சோனியா தரப்பு வாதாட எடுத்த எடுப்பிலேயே வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. எதிர் தரப்பினர் உச்ச நீதிமன்றம் செல்ல, உச்ச நீதிமன்றம் மேல் முறையீட்டினை தள்ளுபடி செய்தது (Hari Shanker Jain Vs Sonia Gandhi (2001) 8 SCC 233). இரண்டாவது முறை சோனியா 2004ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தலைவராக தேர்தெடுக்கப்பட்ட நிலையில் உச்ச நீதிமன்றத்தில் நேரிடையாக ஏறக்குறைய அதே காரணத்திற்காக ஒரு பொது நல வழக்கு தொடரப்பட்டது. ஏற்கனவே தீர்க்கப்பட்ட வழக்கினை சுட்டிக்காட்டி எடுத்த எடுப்பிலேயே அதனையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

முதலாவது வழக்கினை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததற்கு காரணம், மனுவிற்கு தேவையான தெளிவான விபரங்களை அளிக்காமல், பொத்தாம் பொதுவாக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன என்பதற்காகத்தான். முக்கியமாக வைக்கப்பட்ட ஒரு வாதம், இத்தாலிய சட்டப்படி சோனியா தனது இத்தாலிய குடியுரிமையினை துறக்க முடியாது என்பதாகும். இந்தியாவில் இத்தாலியச் சட்டங்களின் செல்லுபடித்தன்மை ஒரு புறம் இருந்தாலும், ‘எவ்வளவு கேட்டும் மனுதாரர்கள் சம்பந்தப்பட்ட இத்தாலிய சட்டத்தினை நீதிமன்றத்தின் முன் வைக்கவில்லை’ என்று தீர்ப்பில் கூறப்படுகிறது. மனுதாரர் இணையத்திலேயே கிடைக்கும் இத்தாலிய குடியுரிமை சட்டத்தினை நீதிபதி முன் வைத்திருக்கலாம். அதிலுள்ள ஷரத்துபடி ஒரு இத்தாலிய குடிமகன் வேற்று நாட்டு குடியுரிமை பெற்றாலும் இத்தாலிய குடியுரிமையினை இழக்க முடியாது. ஆனால் இதுவும் பலன் தராது. ஏனெனில், அதே ஷரத்தின் அடுத்த வரியில் ‘வெளிநாட்டில் குடியேறும் அல்லது வசிக்கும் ஒருவர் இத்தாலிய குடியுரிமையினை துறக்கலாம்’ (renounce) என்று அனுமதியளிக்கிறது. ஆனால் இரண்டுமே இங்கு தேவையற்றது. ஏனெனில் இந்த சட்டமே 1992ம் வருடம் இயற்றப்பட்டது. சோனியா இந்திய குடிமகனான 1983ம் வருடம் நிலுவையிலிருந்த இத்தாலிய குடியுரிமை சட்டப்படி ஒரு இத்தாலியர் வெளிநாட்டு குடியுரிமை பெற்றாலே இத்தாலிய குடியுரிமையினை இழப்பார் என்று செய்தித்தாள்களில் படித்துள்ளேன்.

எனினும் வெளிநாட்டவர் ஒருவர் இந்திய குடிமகனாக மாறுவதற்கு அவரது முந்தைய குடியுரிமையினை துறக்க (renounce) வேண்டும். ஏனெனில் இந்திய குடிமகன் ஒருவர் வேற்று நாட்டின் குடிமகனாக இருத்தல் இயலாது. 2004ம் ஆண்டு வாஜ்பாய் அரசு கொண்டு வந்த சட்ட திருத்தத்தின்படி சில நாடுகளைச் சேர்ந்த இந்திய வம்சாவழி வெளிநாட்டவருக்கு மட்டும் வெளிநாட்டு குடிமகன் (overseas citizen) என்ற தகுதி வழங்கப்படுகிறது. இத்தகைய குடிமகன்களைப் பொறுத்து மட்டுமே உரிமையின்மை என்பது கூறப்படுகிறது. உதாரணமாக இவர்கள் இந்தியாவில் வாக்காளர்கள் ஆக முடியாது.

ஆக, சோனியா இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்பதாக தனது இத்தாலிய குடியுரிமையினை துறந்திருக்க வேண்டும். (2004 சட்ட திருத்தத்தின்படி இந்திய குடியுரிமை கிடைக்கும் பட்சத்தில் துறப்பதாக உறுதி (undertaking) அளித்தாலே போதுமானது). சோனியா அவ்வாறு துறக்கவில்லை என்று வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கு பதில் இல்லை. இத்தாலிய குடியுரிமை சட்டம் (Citizenship Act) மட்டுமே நான் பார்த்தது. விதிமுறைகளில்தான் (Citizenship Rules) எவ்வாறு துறக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கும். உதாரணமாக இந்திய விதிமுறைகளின்படி அதற்கென உள்ள படிவத்தினை நிரப்பி உள்துறை அமைச்சகத்திடம் கொடுக்க வேண்டும். இத்தாலியர்கள் தாங்கள் வசிக்கும் நாட்டில் உள்ள தூதரகத்திற்கு சென்று குடியுரிமையினை துறப்பதாக வாக்குமூலம் அளித்து கையெழுத்திட்ட வேண்டும் என்றும் படித்தேன். 1992க்கு முந்தைய இத்தாலிய சட்டப்படி இந்திய குடியுரிமை பெற்ற பின்னர் தனது இத்தாலிய குடியுரிமையினை அவர் இழந்தாலும் 2004க்கு முந்தைய இந்திய விதிமுறைப்படி அதற்கு முன்னதாகவே ஏதாவது ஒரு முறையில் அவர் தனது இத்தாலிய குடியுரிமையினை துறந்திருக்க வேண்டும். சோனியா எவ்வாறு இத்தாலிய குடியுரிமையினை துறந்தார் என்பது தெரியாது. ஆனால், நான்கு ஆண்டுகள் உள்துறையினை தனது கையில் வைத்திருந்த லால் கிருஷ்ண அத்வானிக்கு தெரியாமல் இருக்காது. எனவே அது முறையானதுதான் என்பது எனது கணிப்பு.

இறுதியாக, எதன் அடிப்படையில் ‘இத்தாலியில் அவ்வாறு சட்டமிருந்தால் இந்திய குடியுரிமை பெற்ற இத்தாலியர் பிரதமராகலாம்’ என்ற கருத்து கூறப்படுகிறது என்பதை ஆராய்ந்தால், அதற்கு விடை ஓரளவுக்கு இந்திய குடியுரிமை சட்டம் பிரிவு 12ல் கிடைக்கலாம். அதாவது வேறு ஒரு நாடு தனது சட்டத்தில் இந்திய குடிமகன்களுக்கு ஒரு சலுகை அளிக்கும் பட்சத்தில் இந்தியாவும் அந்த நாட்டு குடிமகன்களுக்கு அதே சலுகையினை அளிக்க முன்வரலாம் என்பதாகும். அதாவது இந்திய பொறியாளர்களை இத்தாலிய அரசு நிறுவனங்களில் வேலைக்கு அமர்த்த அவர்கள் சலுகை அளிக்கும் பட்சத்தில் இந்திய அரசு நிறுவனங்களில் இத்தாலியர்களை வேலைக்கு அமர்த்த சலுகையளிக்கலாம். இந்தப் பிரிவு இங்கு பொறுத்தமில்லை. முதலாவது ‘லாம்’தான். சலுகை அளிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. இரண்டாவது சலுகை வேற்று நாட்டு குடிமகன்களுக்கு. இந்திய குடிமகனாக மாறியவர்களுக்கில்லை. மூன்றாவதும் முக்கியமானதுமான காரணம் 2004ம் ஆண்டு சட்ட திருத்தத்தில் இந்த சட்டப் பிரிவே முற்றிலும் நீக்கப்பட்டுவிட்டது (repealed). ஆனால் இந்திய உள்துறை அமைச்சகத்தின் வலைத்தளம் அளிக்கும் இந்திய குடியுரிமை சட்டத்தினை படிப்பவர்களுக்கு சட்டத்தில் இந்த மாற்றங்கள் ஏற்ப்பட்டது தெரிய வாய்ப்பில்லை!

மெய்ப்பொருள் காண்பதறிவு!!


மதுரை
130806

11.8.06

தலாக்...தலாக்...தலாக்...

(எச்சரிக்கை: சிறுகதைகளை முழுவதும் படித்து முடிக்கும் திறமையும் பொறுமையும் உள்ளவர்களுக்கு மட்டும்...)“கொஞ்சம் உள்ளே வா. ஒரு வேலை இருக்கு” வண்டியிலிருந்து இறங்கிய சீனியர், தனது வேட்டியை இன்னும் இறுக்கமாக கட்டியபடி வீட்டிற்குள் அழைத்தார். ‘என்னடா இது சோதனை, ராத்திரி பத்து மணியாகியும் வீட்டுக்குப் போகவிடமாட்டாரா?’ என்ற சலிப்பினை முகத்தில் தேக்கி நோக்கிய என் திகைப்பு அவருக்கு புரிந்திருக்க வேண்டும். “இல்ல நம்ம பாய் ஒருத்தரைக் கூட்டிட்டு வர்றாரு. ஏதோ பேசணுமாம்” என்றவாறு எனது பதிலைக் கூட எதிர்பார்க்காமல் உள்ளே சென்றுவிட்டார்.

தினமும் அலுவலகம் முடிந்து இரவு, சீனியரை அவரது வீட்டிற்கு கூட்டிச் செல்வது எனது வேலை. பல நாட்களில் அங்கேயே சாப்பிட வேண்டுவார். எனக்கும் ஹோட்டல் சாப்பாடு வெறுத்துப் போகும் போதெல்லாம், அங்கேயே சாப்பிடுவதுண்டு. னால் அதில் ஒரு பிரச்னை. தனியே சாப்பிட வேண்டும். சீனியர், நான் வாங்கிக் கொடுத்த விஸ்கியுடன் உட்கார்ந்து விடுவார். சாப்பிட்டு கிளம்பும் போது அவருடன் உட்காரச் சொல்லிவிட்டால் மேலும் பிரச்னை! ‘மரடோனா ஒன்றும் நான் சொல்லிய மாதிரி பிரமாதமாக இல்லையே என்பதிலிருந்து எம்.எஸ்.எஸ் போல உண்டா’ என்பது வரையான ஏற்கனவே நான் அவரிடம் கேட்ட விஷயங்களை திரும்பவும் கேட்க வேண்டும். ஆனாலும், பல சமயங்களில் அவரது வாழ்க்கையில் நேரிட்ட ரசமான சில நிகழ்ச்சிகளை பேச்சிலேயே நம் கண்முன் கொண்டுவருவார். நான் சந்தித்த சில சுவராசியமான மனிதர்களில் அவருக்குதான் முதலிடம்.

‘பாய்’ என்று அவர் குறிப்பிட்டது அவரது வீட்டிற்கு அருகில் வசிக்கும் ஒரு இஸ்லாமியர். சில சமயம் தனது தொழில் சம்பந்தமாக ஏற்படும் சட்டப்பிரச்னைகள் குறித்து கேட்க வருவார். பல சமயங்களில் வெறும் உரையாடலுக்காக, விஸ்கியுடன் வருவார். நாங்கள் வருவதை அவர் பார்த்திருக்க வேண்டும். சில நிமிடங்களிலேயே வந்து விட்டார். கூடவே, ‘பயத்தாலா இல்லை ஏதாவது சந்தேகத்தாலா’ எனப் புரிந்து கொள்ளவியலாத தவிக்கும் கண்களுடன் ஒல்லியான தேகத்தில் இளைஞர் ஒருவர்! திரைப்படங்களில், வில்லனது குகைக்குள் மாட்டிக்கொள்ளும் காமெடி நடிகரைப் போல அவரது கண்கள், அச்சூழ்நிலையின் மீதே சந்தேகம் கொண்டது போலவே அங்குமிங்கும் அலைந்தாலும் சந்தேகப்படும்படியாக எங்களிடம் ஒன்றுமில்லையாதலால், பயம்தான் என யூகித்துக் கொண்டேன். வசீகர முகம் படைத்த அந்த இளைஞருக்கு வயது இருபத்தெட்டுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

“இவர் என்னோட அக்கா பையன்” என்று மற்ற விசாரிப்புகள் முடிந்து நாங்கள் அனைவரும் நாற்காலியில் அமர்ந்த பின்னர் பாய் ஆரம்பித்தார். கூட வந்தவரோ முகத்தில் எவ்வித சலனமும் இல்லாமல் நாற்காலியின் விளிம்பில், கைகள் இரண்டையும் சேர்த்துப் பிடித்து கால்களுக்கு நடுவில் வைத்தபடி அமர்ந்திருந்தார்.

“திருச்சியில டாக்டராயிருக்காரு” வந்தவர் பேசாமல் இருக்க பாய்தான் தொடர்ந்தார். “போன வருஷத்துக்கு முந்தின வருஷம் இவருக்கு நிக்கா ஆச்சு. பொண்ணுக்கு தஞ்சாவூர். அங்கே அவங்க வாப்பா பெரிய டாக்டர். அண்ணன்ங்க கூட டாக்டர்கள்தான். நல்லாத்தான் இருந்தாங்க. ஆனா, இவரைப் போட்டு ஏதோ தொந்தரவு பண்ணி, போன வாரம் போலீஸ்ல கம்பெளைண்டு குடுத்துட்டாங்க”

சீனியர் பொறுப்பை என்னிடம் தள்ளியவாறு நாற்காலியில் சரிந்து உட்கார்ந்திருந்ததாலும், நானும் அசுவராசியமாக ஒரு பிஸ்கெட்டை எடுத்து கடித்துக் கொண்டிருந்ததாலும் ‘என்ன கம்பிளைண்டு’ என்று கேட்கத் தோன்றவில்லை. மேலும் மனைவி வீட்டில் கணவன் மீது என்ன புகார் கொடுப்பார்கள் என்பது புரியாமல் வக்கீலாக குப்பை கொட்டுவதில் அர்த்தமில்லை!

“ஏதோ, இவரு ஒரு லட்ச ரூபாய் வரதட்சணை கேட்டு சண்டை போட்டதாக சொல்லி, விசாரணைக்கெல்லாம் இழுத்துட்டாங்க. திங்கக்கிழம, போலீஸை வச்சு கட்டாயப்படுத்தி ‘தலாக்’ பண்ணிட்டாங்க”

“தாலாக்கா...” என்று நான் நிமிர்ந்து முகத்தை சரியாக கேட்காதது போன்ற பாவனையில் முன்னே நீட்டினேன். ‘பிறகு என்ன பிரச்னை, வக்கீலைத் தேடி வருவதற்கு’ என்ற வியப்பு எனக்கு வந்ததில் ஆச்சரியமில்லை. வழக்கமாக கணவன் மணமுறிவுக்கு துடிக்க மனைவி அந்த முயற்சியை முறியடிக்க போராடுவதைத்தான் பார்த்திருக்கிறேன். புகார் கொடுத்த மனைவி வீட்டிலேயே, மணமுறிவும் செய்வது எனக்குப் புதிது!

“ஆமாம், நான் தலாக்நாமா கொடுக்கலைன்னா, கேஸ் போட்டு உள்ளே தள்ளிடுவேன்னு மிரட்டினாங்க. இன்ஸ்பெக்டரும் எழுதிக் கொடுக்கலைன்னா நான் வீட்டுக்கு போக முடியாது...நேரா ஜெயிலுக்குதான் போகணும்னு சொன்னாரு. எனக்கு வேற வழியில்லை” வந்தவர் இப்போது முதன் முறையாக பேசினார்.

“சரி, இப்போ என்ன? வரதட்சணை வாங்கிட்டு வேற பொண்ண கலியாணம் பண்ணிக்க வேண்டியதுதானே” சீனியரிடம் இருந்து சன்னமாக வந்தது குரல். மனிதன், இரண்டாவது ‘பெக்’கில் இருந்திருக்க வேண்டும்.

“நான் வரதட்சணையே கேட்கவில்லை. நிக்காவுக்கு அவங்க கொடுத்த அவ்வளவு ஜாமானையும் அவங்ககிட்டயே ஒன்னு விடாம அப்படியே திருப்பிக் கொடுத்துட்டேன்” குரலில் ஒரு எரிச்சல் தொனித்தது. புதிய சூழ்நிலையின் பயம் போயிருக்க வேண்டும். அல்லது சீனியரின் கிண்டல் உறைத்திருக்க வேண்டும். ஆனால், இன்னும் நாற்காலி விளிம்பில் இருந்து உள்ளே செல்லவில்லை.

“சரி, இப்போ என்ன பண்ணனும். கேஸ் எதும் போடலல்ல” நேரடியாக அவரது முகத்தைப் பார்த்துக் கேட்டேன்.

“அவங்களுக்கு வேற நிக்காவுக்கு ஏற்பாடு செய்யிறாங்க. அதத்தடுக்கணும்”

“தடுத்து...”

“என் வொய்ஃப் என்னோட வரணும்னு ஆர்டர் வாங்கணும்”

“சரி, உங்களுக்கிடையே என்ன பிரச்னை. இந்த மாதிரி கேஸெல்லாம் சமரசமாகத்தான் முடிக்கணும்” என்று சொல்லி வந்தவரது முகத்தைப் பார்க்க, “அதெல்லாம் எங்களுக்கிடையிலே ஒன்னும் பிரச்னையில்லை” என்றார் அப்பாவியாக.

பிரச்னை எதுவுமேயில்லை என்று கூறிக்கொண்டே விவாகரத்து வரை செல்லும் பல தம்பதிகளை எனது அந்த சிறு அனுபவத்திலேயே பார்த்திருந்தாலும்...அவரை மேலும் மேலும் துருவியதில் இறுதியாக சில விஷயங்களைத்தான் அனுமானிக்க முடிந்தது. அதாவது டாக்டர் அவரது பெற்றோருக்கு ஒரே பிள்ளை. மிதமான வசதி படைத்த குடும்பம். டாக்டர், அரசு வேலைக்கு ஏதும் முயலாமல் தனியே கிளினிக் வைத்து பொது மருத்துவராக பணியாற்றுகிறார். அவரது மனைவியின் குடும்பமோ வசதி நிறைந்தது. மேலும் அவரது அப்பா, அண்ணன்கள் தஞ்சாவூரில் பெரிய மருத்துவமனை நடத்துகின்றனர். இந்தச் சூழ்நிலையில் மகளின் கணவரையும் தன்னுடன் வந்து மருத்துவமனையில் பணிபுரிய வேண்டுவது பல தந்தைகள் எதிர்ப்பார்ப்பதுதான். ஆனால், அந்த ஒரு பிரச்னையில் இத்தனை சிறிய காலத்தில் விவாகரத்து வரை செல்வார்களா என்பது ஆச்சரியமாக இருந்தது. மேலும் டாக்டருக்கு ‘குழந்தைகள் யாரும் இல்லையென்பது’ காரணம் அதுவாக இருக்கமுடியாது என்று, டாக்டர் மறுத்தாலும் உணர்த்தியது.

எனது சீனியருக்கோ எதிலும் பொறுமை கிடையாது. அதுவும், நோயில் விழுந்து எழுந்து வந்ததாலோ என்னவோ...அவர் விரும்பும் வண்ணம் பதில் வரவில்லையென்றால் எரிச்சல் எரிச்சலாக வரும். டாக்டரிடமோ, நமக்கு வேண்டிய ஒரு பதிலைப் பெறுவதற்கு பத்து கேள்விகளாவது கேட்க வேண்டியிருக்கிறது. எனவே சீனியரை கையமர்த்தி நானே டாக்டரைக் கையாண்டதில் அவருக்கு எந்தவித ஆட்சேபமுமின்றி, பாயுடன் விஸ்கியின் பிரதாபங்களை ராய்ந்து கொண்டிருந்தார்.

“சார், கொஞ்சம் சிக்கலா இருக்கிறது. இஸ்லாமிக் லாவில் தலாக் பண்ணிவிட்டால் ரத்து பண்ண முடியாதுன்னு படிச்சுருக்கேன்...ம்ம்ம் காலேஜில படிச்சதோடு சரி! இவர் வொய்ஃப் வேற கலியாணம் பண்ணக்கூடாதுன்னு இஞ்ஜக்ஷன் வாங்கச் சொல்றார். எதுக்கும் நாளைக்கு வரச் சொல்லுங்க. இந்த டாக்குமெண்ட்ஸையெல்லாம் முதல்ல படிக்கணும்” என்று சீனியர் பக்கம் திரும்பினேன். சீனியர், அவர்களிடம் எதுவும் கேட்காமலேயே அனுமதிப்பதாக தலையாட்டினார். டாக்குமெண்ட்ஸ் என்று நான் குறிப்பிட்டது அப்படியொன்றும் பெரிய ஆவணமல்ல. டாக்டர் தனது மனைவி எழுதிதாக என்னிடம் காட்டிய சில கடிதங்கள். அவற்றை அங்கேயே படித்திருக்க முடியும். ஆனால், எனக்கு கொஞ்சம் அவகாசம் தேவைப்பட்டது. தூக்கம் வேறு கண்ணைச் சுழட்டியது.

***

படுக்கையில் படுத்தபடியே ஏதாவது படித்தால், பாடல் கேட்டால்தான் தூக்கம் வரும். சில முறை விளக்கை அணைக்காமலேயே தூங்கியிருக்கிறேன். டாக்டர் தந்த கடிதங்களில் இருந்த சீரான ஆங்கில எழுத்துக்கள், என்னை அதை படிக்கத் தூண்டியது. கோடு போடாத வெள்ளைத் தாளில் அவ்வளவு நேரான அதே சமயம் அழகான ஆங்கில எழுத்துகளை நான் பார்த்ததில்லை. இரண்டு பாராக்களிலேயே புரிந்து போனது...கையெழுத்து மட்டும் சீரானதல்ல.....ஆங்கில வார்த்தைக் கட்டுகளும்தான். வாக்கியங்கள் மட்டுமல்ல...அதன் விஷயங்கள்! நான் காதல் கடிதங்கள் எதுவும் படித்ததில்லை. ஆனால், அந்தக் கடிதங்களில் காதல் ரசம் சொட்டச் சொட்ட டாக்டருக்கும் அவரது மனைவிக்குமான அந்தரங்க விஷயங்கள்...அதுவும் அத்தனை நேர்த்தியான முறையில் எழுதப்பட்டிருந்தது. ஆங்கில நாவல்கள் படிக்க ஆரம்பித்து சில வருடங்களே கழிந்திருந்தாலும்...நான் அதுவரை படித்திருந்த ஆங்கில நாவல்களில் விவரிக்கப்பட்டிருந்த காதல் காட்சிகளுக்கு சற்றும் அழகில் குறைவில்லாத் வரிகள்! எனக்கு அப்படியே வியர்த்து விட்டது. காதல் என்பது இதுதானா? தூக்கமெல்லாம் அப்படியே காணாமல் போய்...முதல் முறையாக என்னிடம் வந்த ஒரு கட்சிக்காரன் மீது பொறாமையாக வந்தது. இவனது காதல் மீது எவ்வளவு அன்பும், பிரியமும் கொண்டிருந்தால் ஒரு பெண்ணால் இப்படி எழுத முடியும்? மண வாழ்க்கையில் இவர்களுக்கிடையே உடல்ரீதியிலான பிரச்னன ஏதும் இருப்பதாக இனி அனுமானிப்பது அபத்தம் என்று பட்டது.

தூக்கம் எங்கோ ஓடிப்போனது என்று உணர்ந்ததாலோ, படித்த கடிதங்கள் மனதில் ஏற்படுத்திய தாக்கத்தாலோ, வீட்டிலிருந்த இஸ்லாமிய சட்டங்கள் பற்றிய புத்தகத்தை பிரித்து படித்தவாறு இருந்தவன் எப்போது தூங்கினேன் என்பது தெரியவில்லை.

***

“சார், டாக்டருக்கும் அவரது பொண்டாட்டிக்கும் ஏதும் பிரச்னை இருப்பது போலத் தெரியவில்லை. இப்பதான் ஒரு மாசத்துக்கு முந்தி எழுதுன கடிதம்தான். இப்படி இவர் மேல உருகி உருகி எழுதியிருக்கு. சும்மா, அவங்க அப்பா இல்ல இவர் அம்மா, அப்பாதான் ஏதோ காரணமாயிருக்கும். அந்தப் பொண்ண கோர்ட்டுக்கு வரவச்சுட்டா..சரியாடும்னு நினைக்கிறேன்” டாக்டரை வெளியறையிலேயே உட்கார்த்தி வைத்துவிட்டு சீனியரிடம் கிசுகிசுத்துக் கொண்டிருந்தேன். வெளியே பெஞ்சில் டாக்டர், அப்பாவித்தனமாக எதன் மீதும் எந்தவித சுவராசியமும் இல்லாத மாதிரி கை நகங்களை ஆராய்ந்து கொண்டிருந்தார்.

“கிறுக்கன் மாதிரி இருக்கான்” நெஞ்சு நிமிர்த்தி தோரணையாக பேசாத எவரும் சீனியருக்கு கிறுக்கன்தான். ‘இந்த ஊர், இங்க உள்ளவனெல்லாம் கால்ல கிடக்கற மாதிரி ஒரு திமிர் இருக்கும்’ என்று அவரே சொல்லிக் கொள்ளும் பழைய திமிர் அவரிடம் இன்னமும் மிஞ்சியிருந்தது.

“சரிடா, ஆனா என்னன்னு கேஸ் போடுவே! தலாக் பண்ணியாச்சே!!” என் கண்களை நேரடியாக பார்த்து கேட்டார்.

“வேடிக்கைய பாருங்க. இன்ஸ்பெக்டரும் சாட்சி மாதிரி தலாக்நாமாவிலே கையெழுத்து போட்டிருக்காரு. அவங்க கொடுத்த கம்பிளைண்டு ஸ்டேஷன்ல இருக்கும். எல்லாத்தையும் வச்சு...டாக்டரை மிரட்டியிருக்காங்க..அதனால அவர் மனதால ‘தலாக்’ எழுதிக் கொடுக்கலன்னு புரூவ் பண்ண முடியும்”

“மடையா, அதான் கம்பல்ஷன்ல வாங்குனாலும் தலாக் செல்லுமே” உண்மைதான். வற்புறுத்தி வாங்கப்பட்டாலும் சரி, மனதார அன்றி வேறு நபர்களின் தூண்டுதலின் பேரில் தலாக் செய்தாலும் அது செல்லும். பாகிஸ்தானில், ஒரு நாடக மேடையிலும் கணவன் மனைவியாக நடித்தவர்கள் ‘த்லாக்’ சொல்ல ‘வேடிக்கைக்காக சொன்னாலும் தலாக், தாலாக்தான்’ என்று குரல்கள் எழுந்தன என்று செய்தித்தாளில் படித்த ஞாபகம்.

“இதை நல்லா படிங்க” புத்தகத்தை அவரிடம் தள்ளிவாறு தொடர்ந்தேன், “கம்பல்ஷன்ல கொடுத்த தலாக் செல்லணும்னா...தலாக்குக்கு யூஸ் பண்ற வார்த்தைகள் நேரிடையா (express words) இருக்கணும்னு இருக்கு”

“சரி, அதனால...”

“இங்க பாருங்க. தலாக்ல இரண்டு வகை இருக்கு. வாய்மொழியா சொல்றது. எழுதிக் கொடுக்குறது” அவர் கைகளில் இருந்த புத்தகத்தின் பக்கங்களை புரட்டியபடி தொடர்ந்தேன், “ எழுதிக் கொடுக்குறதிலியும் ‘மானிஃபெஸ்ட்’ அல்லது ‘கஸ்டமரி’ (manifest or customary) அப்புறம் ‘அன்யூஷ¤வல்’னு (unusual) இரண்டு முறை இருக்கு பாருங்க. அதாவது கணவர் நேரிடையா மனைவிக்கு அட்ரஸ் பண்ணி இரண்டு பேரோட பெயர், விலாசம் எழுதி தலாக் பண்ணிட்டேன்னு சொல்றது கஸ்டமரி. அப்படியில்லாம தலாக்நாமா, மனைவிக்கு சொல்றது மாதிரி இல்லாம ஏதோ டிக்லரேஷன் மாதிரி இருந்தா அது ‘அன்யூஷ¤வல்’ தலாக்” நான் உற்சாகமாக சொல்லிக் கொண்டு வந்தாலும், சீனியர் ஏதோ புரியாதது போல ஒரு அசுவராசியம் காட்டினார்.

“இப்ப டாக்டர் எழுதிக் கொடுத்த தலாக்நாமாவைப் பாருங்க. அவர் மனைவியை நேரிடையாக குறிப்பிட்டு எழுதவில்லை. தேர்ட் பெர்ஸனில் (third person) எழுதியிருக்கு. அதனால இத அன்யூஷ¤வல் தலாக்னு சொல்லுவோம். அன்யூஷ¤வல் தலாக்ல, தலாக் பண்றதுக்கு விருப்பம் இருக்கணும். அது மாதிரி மிரட்டி வாங்குன தலாக்கும் செல்லாது சொல்றதும் இங்க அப்ளை ஆகாது” என்று நிறுத்தி ஒரு பெருமிதத்தோடு சீனியரைப் பார்த்தேன். அவரோ எந்தவித உணர்ச்சியும் காட்டவில்லை. பல சீனியர்களுக்கு ஜூனியர்கள் சட்டத்தை விளக்க (interpret) வேண்டும். ஆனால் அதை பெரிதாக கருத்தில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். எனது சீனியர் அப்படியல்ல. எனக்கு பின்னர் வழக்கு தயாரிப்பிலும் முழு சுதந்திரம் கொடுப்பார். சொத்துப் பிரச்னைகளுடன் அல்லாடி வரும் வழக்கறிஞர்களுக்கு, திருமணம் சம்பந்தபட்ட வழக்குகளில் கிடைக்கும் பணம் தேவையாயிருந்தாலும் ஒரு ஏளனம் இருக்கும், அவர்களது திறமைக்கு அதில் ஏதுமில்லை என்பது போல.

“சரியா பாருடா...அதுல கம்பல்ஷன்ல வாங்குன தலாக் செல்லனும்னா, தலாக் எக்ஸ்பிரஸ் வோர்ட்ஸ்ல இருக்கணும்னு இருக்கு. நீ மானிஃபெஸ்டையும் எக்ஸ்பிரஸையும் போட்டுக் குழப்பிக்கற” இப்போதுதான் எனக்கு அது உறைத்தது. அது வரை நான் கட்டிய கோட்டை ஆட்டம் காண்பது போல இருந்தது.

“எப்படியோ, இது அன்யூஷ¤வல் தலாக்தான். அதனால விருப்பம் இருக்கணும். விருப்பம் இல்லைன்னு நிரூபிக்க முடியும். அந்தம்மா எழுதின கடிதம் இருக்கு. போலீஸ் ஸ்டேஷன்ல கொடுத்தது பொய் கம்பிளைண்டுன்னு புரூவ் பண்ணிடலாம். தலாக் பண்ணுற இடத்துல இன்ஸ்பெக்டருக்கு என்ன வேலை” சீனியர் ஒன்றும் பேசாமல் இருக்கவே, நானே தொடர்ந்தேன், “சார், யோசிக்காதிங்க கேஸ் போட்டப்புறம் செட்டில் யிடும்”

“சரி, அவங்கள கூப்பிடு” என்று என்னிடம் கூறினாலும் அவரே எட்டி, “பாய் கொஞ்சம் உள்ளே வாங்க” என்றார்.

***

திருச்சியில் எனது நண்பன் சலித்துக் கொண்டான், “என்னடா இது, இப்படி ஒரு கேஸைக் கொண்டாந்திருக்கே. பொண்ணுக்கு கல்யாணம் ஆகக்கூடாதுன்னு ஆர்டர் தருவானாடா?”

“இரண்டாவது கல்யாணம்” திருத்தினேன். “அதெல்லாம் நான் பாத்துக்கிறேன். நாளைக்குப் ஃபைல் செய்து மத்தியானம் ஹியரிங்குக்கு கொண்டு வந்திரணும். கிளையண்ட் ரொம்ப பயந்து போய் இருக்கார்”

“சரி, எங்க கிளையண்ட், யாரோ டாக்டருன்னு சொன்னே”

“இங்கதான் பக்கத்துல கிளினிக்காம். முடிச்சுட்டு வந்துடறேன்னு சொன்னார். இதப் பாரேன்...இந்த லிஸ்ட. கிடைச்சாலும் இப்படி மாமனார் கிடைக்கணும்டா”

“ஆமாம், அதான் பொண்ணை கூட்டிட்டு போய்ட்டார்” என்றபடி டாக்டர் என்னிடம் கொடுத்து வழக்கில் வணமாக சேர்த்திருந்த ஒரு பட்டியலைப் மேய்ந்தான். அதில் டாக்டருக்கு திருமணத்தில் போது கொடுத்த ஒரு டஜன் கைக்குட்டையிலிருந்து...வீட்டிலிருக்கும் குளிர்ப்பெட்டி வரைக்கும் போததற்கு தங்க, வெள்ளி நகை வகைகளில் என்னின்ன உண்டோ அதெல்லாம் இருந்தது. நான் கேள்விப்படாத பாத்திர பண்ட வகைகள், நகைகள் சிலவும் இருந்தன. முழுத்தாளில் பல பக்கங்களில் இருந்த அந்த பட்டியலில் கண்களை ஓட்டிய நண்பனின் கண்கள் விரிந்தன.

“லிஸ்ட் போட்டு இத்தனை வாங்கியிருக்காரு. ஒரு லட்சம் கேட்க மாட்டாரா?”

“போடா...இத்தனையும் அப்படியே திருப்பிக் கொடுத்திருக்காரு. அடியில எழுதி எல்லோரும் கையெழுத்துப் போட்டிருக்கிறதைப் பாரு. அதுவும்...ஒரு லட்சம் தூசுடா, முக்கியமா பொண்ணோட அப்பாவுக்கு”

“கலியாணம் ஆகி ஒரு வருசமாச்சுன்னு சொல்றே...இதென்னடா ஸ்பூன், கஃப் பின் அப்புறம் கர்சீஃப் கூட திருப்பிக் கொடுத்தாரா? என்னடா இது, யாருகிட்ட பூச்சுத்துற”

“நீ அவரப் பாத்தா நம்புவ. அதுவும் அப்படிக் கொடுக்காம கையெழுத்துப் போடுறாங்களாக்கும்”

சிறிது நேரத்தில் டாக்டர் வந்து நண்பனுடனும் சகஜமானாலும் பட்டியல் மீது நம்பிக்கையில்லாத நண்பன், டாக்டரின் ஒரு செயலில் ‘நான் சொன்னது சரிதான்’ என்பது மாதிரி கண்ணடித்தான். எல்லாம் முடிந்து டாக்டரிடம் நண்பனுக்கு வழக்கை தாக்கல் செய்வதற்கான கட்டணம் மற்றும் செலவுகளை கொடுக்க வேண்டினேன். எல்லாவற்றையும் கணக்கிட்ட நண்பன், ‘எண்ணூற்றி அறுபத்தியெட்டு ரூபாய்’ என்றான். டாக்டர் தான் வைத்திருந்த தோலினாலான பையை மெல்லத் திறந்து அதற்குள்ளிருந்து அதே நிறத்திலான மற்றொரு சிறிய தோல் கைப்பையை எடுத்தார். இடது உள்ளங்கையில் அப்பையை நிறுத்தி வலது கையால் மெல்லத் திறந்தார். பக்கத்திலிருந்த நான் பை முழுவதும் பணம் என உணர்ந்தேன். ஒரு பெண்ணிற்கே உரிய நளினத்துடன் லாவகமாக ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் பைக்குள் செலுத்தி, முதலில் நூறு நூறு நோட்டுகளாக எடுத்தார். வெட்கம் துறந்து மேலும் நன்றாகப் பார்த்தேன். அந்தப் பைக்குள் அனைத்து டினாமினேஷனிலும் ஒரு ரூபாய்த் தாள்கள் வரை வரிசையாக அடுக்கப்பட்டிருந்தது. அது போதாதென்று தனியான ஒரு பகுதியில் சில்லரைகள் சலசலத்தது. நண்பன் கேட்ட பணத்தை ஒரு ரூபாய் அங்கே இங்கேயின்றி டாக்டர் எண்ணி வைத்தார். அந்த ஒரு நாள் மட்டுமல்லாமல் டாக்டரை பின் நான் வழக்கு சம்பந்தமாக சந்திக்க நேர்ந்த பல நாட்களில், அவர் அப்படி இரு விரல்களை செலுத்தி பைக்குள் இருந்து பணத்தை சரியான சில்லறையில் எடுப்பதை, சில சமயம் ‘சாலைகளில் செருப்புத் தைப்பவன் வேலை செய்வதை’ பார்க்கும் அதே ஆர்வத்துடன் பார்ப்பேன். எங்கும் எந்தவித சந்தர்ப்பத்திலும் அவரிடம் சரியன சில்லறை இருக்கும்.

நண்பர் கடைசியில் டாக்டரைப் பார்த்து “சரி, நீங்க கேஸ் போடுறது அவங்க யாருக்கும் தெரியாம நாளை வரை பார்த்துக்கோங்க. இல்லைன்னா காரியம் கெட்டுடும்” என்றான். ‘ஏன்?’ என்பது போல விழித்த டாக்டரிடம் நான், “அது ஒன்றுமில்லை. ‘மிகவும் அவசரம், அதனால் எதிராளிக்கு அறிவிப்பு கொடுக்க முடிய நேரமில்லை. அவர்கள் வந்து பின்னாளில் வழக்கில் கலந்து கொள்ளும் வரை இண்டரிம் ஆர்டர் கேட்கப் போகிறோம். அவர்கள் நாளை கோர்ட்டுக்கு வந்துவிட்டால் அவர்கள் எழுத்துபூர்வமான பதில் தாக்கல் செய்த பிறகுதான் ஆர்டர் கிடைக்கும். அதற்குள் பல நாட்கள் கிவிடும். எனவே நாளை நாம் கோர்ட்டுக்கு போவது அவர்களுக்கு தெரியக்கூடாது” என்றேன்.

தஞ்சாவூரில் வசிக்கும் பெண் வீட்டாருக்கு டாக்டரின் வழக்கு விபரம் தெரியும் சாத்தியக் கூறு ஏதும் இல்லையெனினும், டாக்டர் இந்த எச்சரிக்கையில் மிகவும் கலவரப்பட்டு போனார். ‘சரி நீங்க வாங்க. நான் உங்களை கொண்டு போய் ஹோட்டலில் சேர்க்கிறேன்’ என்று என்னை வற்புறுத்திக் கூட்டிக் கொண்டு போனவர் அடுத்து ஸ்கூட்டரை நிறுத்திய இடம், காவிரிப் பாலத்தின் நட்ட நடுவில். இரவு ஏற்கனவே மணி பத்தை தாண்டி விட்டது. என்னை இறங்கச் சொல்லியவர் அங்கிருந்த கைப்பிடிச்சுவரில் சாய்ந்து, ‘சொல்லுங்க’ என்றார். நான் புரியாமல் விழிக்க அவரே தொடர்ந்தார், ‘இங்கதான் நாம் வசதியா நிதானமா பேசலாம், கேஸ் பத்தி’ என்றார். ‘என்ன விளையாடுறீங்களா?’ என்று பொங்கி வந்தது கோபம். ஆனால் அவர் ஒரு டாக்டர், என்னை விட வயதில் சிறிது மூத்தவர்! மறுப்பு ஏதும் சொல்லாமல் கேட்கிற பீஸை தருகிறார். முக்கியமாக தொழிலை அப்போதுதான் ஆரம்பித்த ஒரு வக்கீல் நான். கோபப்பட முடியுமா? அதனால், “டாக்டர், கேஸ் பத்தியெல்லாம் ஒன்னும் இல்லை. நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம்” என்றேன். மனிதர் விடாமல் பத்து நிமிடம் பேசிய பிறகே அழைத்துச் சென்றார். கடைசியில் எனது ஹோட்டலில் இறக்கிவிட்டவரிடம், “நாளை காலை சீக்கிரம் வந்து விடுங்கள்” என்றபடி விட்டால் போதும் என்று திரும்பிப் பார்க்காமல் ஓடிவிட்டேன்.

***

அடுத்த நாள் ஆறு மணிக்கெல்லாம் கதவை யாரோ தட்டுவதைக் கேட்டு, ‘யார் இது இந்த நேரத்தில்?’ என்று கதவைத் திறந்தால்...டாக்டர்! கொட்ட கொட்ட முழித்துக் கொண்டு!! ‘என்ன இந்த நேரத்தில்’ என்றால் ‘நீங்கள்தான் காலையிலேயே வரச் சொன்னீர்கள்’ என்றார். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. ‘கோர்ட் பத்தரைக்குதான். நாம பதினொரு மணிவரை ஃபைல் செய்யலாம். நீங்கள் வீட்டுக்குப் போகும் போதே மணி பன்னிரண்டு இருக்குமே’ என்றேன். ‘நான் ரொம்ப தூங்கெல்லாம் மாட்டேன். சமயங்களில் இரண்டு மணியாகிவிடும்’ என்றார் அப்பாவியாக. அந்தக் களைப்பே தெரியாமல் மனிதர், நன்றாகக் குளித்து புதிய உடைகளுடன் இருந்தார். ‘சரி நானே கோர்ட்டுக்கு வந்து விடுகிறேன். நீங்கள் கோர்ட் பக்கம் வர வேண்டாம். அந்த சாலை முனையில் உள்ள கடையில் எனக்காக ஒரு மணிக்கு வெயிட் செய்யுங்கள். நான் கேஸ் நம்பர் ஆனவுடன் உங்களுக்கு வந்து சொல்கிறேன். வழக்கு மத்தியானம் ரெண்டேகாலுக்குதான் எடுப்பார்கள்’ அப்போது வந்தால் போதும் என்றேன். விடாமல் உள்ளே வந்து ஒரு அரை மணி நேரம் பேசிச் சென்றார்.

நான் கூறியபடியே ஒரு மணிக்கு டாக்டரை சந்தித்தேன். “சார் நான் வந்தால் யாராவது பார்த்துவிடுவார்கள்” எனவே நீங்கள் வழக்கு முடிந்து என்னிடம் ஆர்டர் கிடைத்ததா என்று மட்டும் வந்து சொல்லுங்கள் என்றார். ஏதோ, ஆங்கில திரைப்படங்களில் நான் பார்த்த ரஷிய ஒற்றர்கள் பேசிக் கொள்வதைப் போல இருந்தது அந்தச் சந்திப்பு. நண்பனின் எச்சரிக்கை பலமாக வேலை செய்திருக்கிறது. எனினும், அவர் அருகில் இல்லாமல் இருந்தால் நல்லது என்று எண்ணி நானும், ‘அதுவும் சரிதான்’ என்றேன்.

என் நல்ல காலம். நீதிபதி கருணைமிக்கவராக இருந்தார். அதுவும் இளவக்கீல் ஒருவன் வந்து போராடுகிறானே என்ற கனிவான பார்வை அவரிடம் வெளிப்பட்டது. எனக்கும் முதல் அனுபவம். னால், ‘அது எப்படி நான் கல்யாணம் செய்யக் கூடாது என்று ஆர்டர் தருவது. இன்று கூட கல்யாணம் இருக்கலாம்’ என்று யோசித்தார். அதுவரை குரலை உயர்த்தி பேசியவன் கடைசியில் கெஞ்சும் நிலைக்கு வந்துவிட்டேன். பின்னாலிருந்த நண்பன், ‘டேய், ஸ்டேடஸ் குவோ (status quo) ஆர்டர் கேளு’ என்றான். நீதிபதியின் தன்மை அறிந்தவன் அவன். உடனே நான், “அவ்வாறென்றால் தாங்கள் ஸ்டேடஸ் குவோ உத்தரவிடுங்கள்’ என்றேன். நீதிபதி உடனே, ‘ஹாங். ஸ்டேடஸ் குவோ உத்தரவு தருகிறேன்’ என எங்கள் முகங்களில் மலர்ச்சி! பின்ன, எல்லாம் ஒன்றுதான். ‘ஸ்டேட்ஸ் குவோ’ என்றால் அந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் பொழுது என்ன நிலையோ அது நீடிக்க வேண்டும் என்பதுதான். ஆக அன்று அப்பெண்ணுக்கு திருமணம் நடந்திருக்கவில்லையென்றால் அந்த உத்தரவு நீக்கப்படும்வரை திருமணம் செய்யவியலாது. உடனடியாக வெளியே ஓடிச் சென்று காத்திருந்த டாக்டரிடம் உத்தரவை விளக்க அவருக்கும் மகிழ்ச்சி!!

***
உத்தரவை எதிராளி விலாசத்துக்கு அனுப்பிய சில நாட்களிலேயே எதிர்பார்த்தது நடந்தது. அவர்கள் உடனடியாக நீதிமன்றத்தை அணுகி, இடைக்கால உத்தரவை விலக்க வேண்டுமென மனுப் போட்டிருந்தார்கள். டாக்டர் கூறிய மாதிரியே, ‘அவர் வரதட்சணை கேட்டு வற்புறுத்தியதாக’ மனுவில் கூறியிருந்தாலும் ‘தலாக் கூறியது கூறியதுதான். எக்காரணத்தாலும் அது செல்லாமல் போகாது’ என்று சட்ட விளக்கம் வேறு.

குறிப்பிட்ட நாளில் மீண்டும் திருச்சி நீதிமன்றம். அதற்கு முன் நாள் முன்பு போலவே காட்சிகள் அரங்கேறியது. நண்பன் அலுவலகத்துக்கு இரவு தனது கிளினிக்கை முடித்து வந்த டாக்டர் என்னை மீண்டும் காவிரிப் பாலத்தில் நிறுத்தியது...பின் ஏறக்குறைய நான் அவரைத் திட்டி எனது ஹோட்டல் அறையிலிருந்து வெளியேற்றியது என்று. நீதிமன்றத்தில், ‘இப்படி ஒரு தடை உத்தரவு வழங்கப்படவே முடியாது’ என எதிர்ப்பக்க வக்கீல் ஒற்றைக் காலில் நிற்க ‘உத்தரவை நீக்கினால், உடனடியாக பெண்ணுக்கு திருமணம் முடித்து விடுவார்கள். பின்னர் எங்களது வழக்கு விசாரணையில் நாங்கள் வெற்றி பெற்றாலும் பிரயோசனமில்லை’ என்று நானும் இடை மறித்தேன். பின்னர் இருவருக்கும் பொதுவாக, வழக்கையே இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதி கூற அதை அனைவரும் ஏற்றுக் கொண்டோம். பொதுவாக இடைக்கால உத்தரவு வாங்கியவுடன் வழக்கு விசாரணைக்கு வர சில வருடங்கள் ஆகும். சீக்கிரம் வரும் வழக்கையும் தள்ளிப் போட சில வழிமுறைகள் உண்டு. ஆனால், இந்த வழக்கை கிடப்பில் போட எங்களுக்கே மனதில்லை. ஏனெனில் டாக்டருடன் பழகிய சில நாட்களில் அவர் கூறியதை வைத்து, அவர் மனைவி அவரைப் பார்க்கையில் மனம் மாறிவிடுவார் என்றே தோன்றியது. அவர் பெற்றோர்களுக்காகத்தான் அப்பெண் பயந்து கொண்டு இருப்பதாக அனுமானித்தேன். ஏனெனில் மனுஷன் விவாகரத்து வரை போகக் கூடிய எந்த ஒரு காரணத்தையும் கூறவில்லை. எதிர்ப்பக்கத்து வக்கீல் நல்லவர். நான் அவரிடம், டாக்டர் அவர்கள் விரும்பினால் அவர்கள் வீட்டிலேயே வந்து இருக்க சம்மதம் தெரிவிக்கிறார் என்றதற்கு எதுவானாலும் அவர்களிடம் பேசுங்கள். தான் குறுக்கே நிற்கப் போவதில்லை என்றார். நானும் டாக்டரிடம், இப்போதைக்கு மாமனார் வீட்டுக் கண்டிஷனுகெல்லாம் சம்மதியுங்கள் என்று கூறி வைத்திருந்தேன். அவர்கள் வக்கீல் அப்பெண்ணுடன் கூட நாங்கள் பேசலாம் என்று கூறினார். எனக்கு நம்பிக்கை வந்தது.

***

விசாரணை நாளும் வந்தது. எனது சீனியரோ ‘நீயே எதுவும் செய்து கொள்’ என்று என்னிடமே வழக்கை விட்டுவிட்டார். முதலில் டாக்டரின் முதல் விசாரணை. அது எளிது. நாம் மனுவில் எழுதியிருப்பதை அவர் அப்படியே கூற வேண்டும். டாக்டரும் நல்லபடியே கூறினார். எதிர் வக்கீல் தனது குறுக்கு விசாரணையில் டாக்டரிடம் இருந்து எவ்வித சாதகமான பதிலும் பெறமுடியவில்லை. டாக்டர் ‘வரதட்சணை என்ற பேச்சுக்கே தன் வாழ்வில் இடமில்லை, தனது மனைவியை தலாக் செய்யும் எண்ணம் தனக்கு துளியும் இல்லை’ என்றும் அடித்துக் கூறினார். எங்கள் பக்க சாட்சி முடிய அடுத்து அவர்கள் பக்கம் டாக்டரின் மனைவியை விசாரிக்கப் போவதாக அவர்கள் வக்கீல் கூற எனக்கு ஆச்சரியம்...தொடர்ந்து பயம்!

எவ்வித பிரச்னையும் திருமண வாழ்வில் இல்லாத நிலையில், அப்பெண்ணை குறுக்கு விசாரணைக்கு உட்படுத்துவது அவர்களுக்கு புத்திசாலித்தனமான காரியமா என்பது புரியவில்லை. னாலும் நாங்கள், இல்லை நான் எதைத் திட்டமிட்டேனோ அதன்படியே காரியங்கள் நடப்பது குறித்து மகிழ்ந்தேன்.

டாக்டருக்கு கை கால் இருப்புக் கொள்ளவில்லை. அவரைப் பார்த்தால் மிகவும் பாவமாக இருந்தது. மறுபடியும் எங்கள் அலுவலகத்தில் வைத்து பெரியதொரு ஆலோசனை. சீனியர், ‘நான் த்¢ருச்சி வரை வரணுமா?’ என்று இழுத்தார். ‘நீயே போய் கிராஸ் பண்ணிடேன்’ என்று என்னிடம் கூறியவர் டாக்டரிடம், ‘அவனே பாத்துக்குவான். ஒன்றும் பயப்படாதீங்க’ என்றார். டாக்டருக்கு நானே வருகிறேன் என்றது உண்மையில் நிம்மதியாகப் போய் விட்டது. பின்னே...சீனியரைக் கூட்டிக் கொண்டு இரவு பத்து மணிக்கு மேல் காவிரிப் பாலத்துக்கு போக முடியுமா? சீனியரிடம் அவருக்கிருந்த பயம் இன்னமும் குறையவில்லை. கடந்த இருமாத காலங்களில் ஒருமுறை கூட சீனியரின் கண்களை நேருக்கு நேராக பார்த்து பேசாதவர் என்னிடம் ஏதோ ஒருவித நட்புணர்வு பாராட்ட ஆரம்பித்துவிட்டார். அந்த நட்புணர்வின் நெருக்கத்தில் வழக்கில், ‘எப்படியாவது ஜெயிச்சுரணும், எப்படியாவது ஜெயிச்சுரணும்’ என்று என்னை மந்திரித்துக் கொண்டிருந்தார். நீதிமன்ற முடிவுகளை ஆண்டவே கூட அனுமானிக்க முடியாது. இவர் என்னவென்றால் வழக்கில் வெற்றியைத் தவிர வேறு முடிவுகளுக்கே தன்னை தயார்ப்படுத்தியவராக தெரியவில்லை. அவர் சுமந்து வந்து முழுப்பாரமும் என் தோள் மீது விழுந்து மிகவும் கனமாக உணர ஆரம்பித்தேன். அந்தப் பெண்ணின் மீது முக்கியமாக டாக்டரின் மாமனார் மீது கோபம் கோபமாக வந்தது. இப்படி மனைவிக்காக எதையும் செய்யத் தயாராக ஒருவன் இருக்கும் போது வேறு என்னதான் தேவை அவருக்கு?

“கவனி, ஜோரா... அழகா... ஒரு பொண்ணு வந்து நிக்கும். பாத்து அசந்துராதே...அது ஒரு சாட்சி அவ்வளவுதான். உன் வேலையில கவனமாயிரு. தைரியமா செய்” கிளம்புவதற்கு முன்னர் தனியாக என்னிடம் சீனியர் கூறிய வார்த்தைகள் அவை. ஏன் அப்படி கூறினார் என்று தெரியாவிட்டாலும், அவர் அனுமானித்தபடியே மிகவும் அழகுள்ள ஒரு இளம்பெண். டாக்டரின் தவிப்பின் அர்த்தம் எனக்கு ஓரளவுக்கு விளங்கியது. சேலையணிந்து வந்திருந்தாலும் ஒரு கறுப்பு துணியை தோளைச் சுற்றி மூடி, மிகவும் அடக்கத்துடன் அமர்ந்திருந்ததைப் பார்த்தால் ‘மிகவும் சிநேக மனப்பான்மையுள்ள, எவ்வித கர்வமும் இருக்க முடியாத பெண்’ என்று தோன்றியது.

முன்னாள் இரவுதான் டாக்டரிடம், ‘உங்களுக்குள் வேறு ஏதாவது பிரச்னை இருக்கிறதா’ என்று நூற்றி எழுபத்து இரண்டாவது தடவையாக கேட்டேன். அவரும் வழக்கம் போலவே, ‘இல்ல சார்’ என்றார். அப்போதெல்லாம் மனதில், ‘பணக்காரத் திமிர் புடித்த பெண்ணாக இருக்கும் போல’ என்று ஒரு எண்ணம் மின்னல் போல தோன்றி மறைவதுண்டு. அதுவும் நேற்று இரவு எனது கடைசி சந்தர்ப்பம். டாக்டரை நான் எனது அறையிலிருந்து அனுப்புவதற்கு வெகு நேரம் கிவிட்டது. வழக்கு தாக்கல் செய்கையில் அவரிடம் கொடுத்திருந்த குறைந்தபட்ச உத்திரவாதம், ‘அவரது மனைவியை நீதிமன்றத்திற்கு அழைத்து, அவருடம் பேச டாக்டருக்கு ஒரு சந்தர்ப்பம் ஏற்படுத்தித் தர இயலும்’ என்பதுதான். மனிதர் என்னைப் போட்டு அழுத்திய அழுத்தத்தில் எனக்கு சட்டமுறைகளெல்லாம் மறந்து ‘டாக்டரைப் பார்த்தால் அவரது மனைவி அப்படியே ஸ்லோ மோஷனில் ஓடி வந்து அவரைக் கட்டிக் கொள்வார்கள்’ என்று சினிமாத்தனமான நம்பிக்கைதான் இருந்தது. அப்படித்தான் அவரிடமும் கூறி வைத்திருந்தேன். ‘உங்கள் வொய்ஃபையே பாருங்கள். என்ன செய்கிறார்கள் என்று பார்க்கலாம். ஒரு வக்கீல் வைக்கக்கூடாத நம்பிக்கை!

‘உங்க கிளையண்டும் என் கிளையண்டும் பேசிக் கொள்ள முடியுமா?’ என்று வழக்கு ஆரம்பிக்கும் முன்னர் எதிர்த்தரப்பு வக்கீலிடம் கேட்டதில் பலனில்லை. கூட வந்திருந்த டாக்டரின் மாமனார், ‘அதெல்லாம் பின்னர் பார்த்துக் கொள்ளலாம்’ என்றுவிட்டார். அவரைப் பார்த்ததில் எவ்வித சமரசத்திற்கும் உட்படாதவர் போலத் தோன்றியது. அவரும் சரி, அவரது பெண்ணும் சரி...டாக்டர் அங்கிருப்பதையே பொருட்படுத்தியவர்களைப் போலத் தெரியவில்லை. நான் மனம் தளரவில்லை.

என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் குறுக்கு விசாரணையை ஆரம்பித்த சிறிது நேரத்தில் சுற்றிலும் பார்த்தால் நீதிமன்றம் இவ்விநோத வழக்கில் கவரப்பட்டு நிரம்பியிருந்தது. பின்னே எனது நண்பன் அடுத்து என்ன கேட்கலாம் என்று எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தான். ஆனால் அந்தப் பெண்ணோ எனது எண்ணங்களை தவிடு பொடியாக்கி, எவ்வித பதட்டமும் இன்றி மிகச் சாதாரணமாக பதிலளித்தார். நல்ல வேளை, அவர் எழுதியதாக நாங்கள் வைத்திருந்த கடிதங்களை ஒத்துக் கொண்டதோடு, டாக்டருக்கும் அவருக்குமான மணவாழ்க்கையில் எவ்வித பிரச்னையும் இல்லை என்று கூறினாலும் ‘அதனலென்ன’ என்ற புத்திசாலித்தனமான தோரணையிலிருந்தார். அரைமணி நேரம் கழித்து சிறிது சுவாசப்படுத்தியவன் பின்னால் திரும்பினால் அங்கே...டாக்டர் நின்றபடி இடுப்பில் கையூன்றி சாட்சிக் கூண்டிலிருக்கும் பெண்ணை கண்களை அகல விரித்தவாறு உற்றுப் பார்த்தபடி இருந்தார். பார்ப்பதற்கு ஏதோ சாட்சியை அச்சுறுத்திக் கொண்டிருப்பது போல இருந்தது. நீதிபதி அவரைக் கவனிக்கிறாரா என்று ஒருமுறை கவனித்தவன் டாக்டரருகே சென்று, ‘என்ன இங்க நிக்கிறீங்க’ என்றேன் எரிச்சலுடன். அப்பாவித்தனமாக ‘நீங்கதானே அவளையே பார்க்கச் சொன்னீர்கள்’ என்றாரே பார்க்கலாம். எனக்கு சிரிப்பதா அல்லது கோபப்படவா என்பது தெரியவில்லை. அருகிலிருந்த என் நண்பனிடம், ‘டேய் இவரைக் கூட்டிட்டுப் போய் உட்கார வையுடா. இவர் பார்க்கிற பார்வையில இறங்கி வந்து அடிக்கப் போறா’ என்றபடி தொடர்ந்தேன். கடைசியில் எனது சினிமாக் கற்பனைகள் தவிடுபொடியானது. ‘நிஜத்துக்கும் நிழலுக்கும் வித்தியாசங்கள் உண்டு’ என்ற முதல் பாடத்தை அன்று கற்றேன்.

அவர்களது அடுத்த சாட்சி, டாக்டரை மிரட்டியதோடு மட்டுமல்லாமல் தலாக்நாமாவில் கையெழுத்திட்ட காவல்துறை ஆய்வாளர். எங்களுக்கு நம்பிக்கையளித்த சாட்சி! ஏனெனில் குறுக்கு விசாரணையில் டாக்டர் வரதட்சணை ஏதும் கேட்டு மனைவியை மிரட்டவில்லை. மனைவியின் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்பதை ஒத்துக்கொண்டார். டாக்டரின் மனைவியும் அவரது தகப்பனாரும் எப்போது நீதிமன்றத்தை விட்டு வெளியேறினர் என்பதை நாங்கள் கவனிக்கவில்லை...நாங்கள் எங்களது கட்டுகளை அடுக்கியபடி பார்த்தால் அவர்கள் பக்கத்திலிருந்து யாரும் இல்லை. டாக்டரைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.

***

இனி உணர்வுகளை நம்பி பலனில்லை. நீதிபதியே துணை! டாக்டரின் சார்பில் வாதம் செய்ய எனது சீனியரே வந்தார். ஆய்வாளரின் ஒப்புதலை சுற்றியே எங்களது வாதம் அமைந்தது. அவர்கள் பக்கமிருந்து எதிர்பார்த்தபடி பெரிதாக வாதம் ஏதும் இல்லையெனினும், ‘மிரட்டிப் பெற்றலும் தலாக் செல்லும்’ என்று ஏதோ ஒரு உயர்நீதிமன்றம் எத்தனையோ மாமாங்களுக்கு முன்னர் எழுதிய பழங்கால தீர்ப்பை ஒட்டி அமைந்திருந்தது. டாக்டரோ வழக்கில் வெற்றியைத் தவிர வேறு எதையும் நினைத்துக் கூட பார்ப்பவராக தெரியாதது, எனக்கு மேலும் கவலையளித்தது.

தீர்ப்பு நாளன்று மாலையில் எனது நண்பன்தான் திருச்சியிலிருந்து தொலைபேசினான், ‘வழக்கு தள்ளுபடியாகிவிட்டதாக’. எனக்கு சிறிது அதிர்ச்சி. கொஞ்சம் கவலை. எனது சீனியர், பெரிய வழக்கறிஞர்களுக்கேயுரிய அலட்சியத்துடன் அதை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. இரவு நானும் சீனியருடன் சிறிது விஸ்கியுடன் அமர்ந்து விட்டேன். சிறிது நேரத்தில் டாக்டர், பக்கத்து வீட்டு பாயுடன் வந்தார். தீர்ப்பு முழுவதையும் கையால் எழுதிக் கொண்டு வந்திருந்தார். முகத்தில் எவ்வித சலனமுமில்லை. சீனியர் சைகை காட்ட எதுவும் பேசாமல் அதை வாங்கிப் படித்தேன். படிக்கப் படிக்க வியப்பில் என் கண்கள் விரிந்தன. வரிக்கு வரி நீதிபதி ஒவ்வொரு பொருளிலும் எங்களுக்கு சாதகமாக எழுதியிருந்தார். நம்பவே முடியவில்லை. முழுவதையும் படிக்கும் முன்னரே உற்சாகம் பொங்க, “என்ன சார், ஜட்ஜ் எல்லா இஷ்யூலயும் நமக்கு சாதகமாகவே எழுதியிருக்காரு” இதில் பெரிய கவனமில்லாமல் சீனியர், ‘முழுதும் படி பார்க்கலாம்’ என்று பாயுடன் பேச்சைத் தொடர்ந்தார். டாக்டரோ என் முகத்தை பார்த்தபடியே இருந்தார். அப்படியே படிக்க பொறுமையில்லாமல் கடைசிப் பக்கத்துக்கு போனால்...’இது என்ன கேஸை டிகிரி பண்ணியிருக்கு?’

“டாக்டர் தீர்ப்பு நமக்கு சாதகமா இருக்கு. தோத்துருச்சுன்னு சொன்னீங்க”

ஒருமுறை ஒன்றுமே விளங்காதது போல என்னைப் பார்த்து விழித்தவர், ‘இது நான் எழுதியது’ என்றார்.

“நீங்கன்னா...சரி. கோர்டிலுள்ள தீர்ப்பைப் பார்த்துதானே எழுதினீங்க?”

“ஆமாம்”

“பிறகு, நமக்கு சாதகமா இருக்கே” இதற்குள் சீனியரும், பாயும் தங்களது பேச்சை நிறுத்தி எங்களை கவனிக்க ரம்பித்தனர்.

“இல்லை. தீர்ப்பைப் பார்த்து, ஜட்ஜ்மெண்ட் இப்படித்தான் இருக்கணுமுன்னு நானே எழுதியது இது. கோர்ட் ஜட்ஜ்மெண்ட் காப்பி கிடைக்க இன்னும் இரண்டு நாட்கள் குமாம்”

சீனியர் ஒரு கையால் தலையைச் பரபரவென்று சொரிந்தபடி, “என்ன நீதிபதி இப்படி எழுதியிருக்கணும்னு நீங்களே எழுதினீங்களா? சரியாப் போச்சு” என்றார். என்னால் வியப்பை அடக்க முடியவில்லை. ‘என்ன மாதிரி மனிதன் இவன். கோர்ட்டில் உட்கார்ந்து சுமார் இருபது பக்க தீர்ப்பைப் பார்த்து படித்து அதை அப்படியே மாற்றி எழுதியிருக்கிறானே!’

சீனியருக்கு டாக்டரின் திறமையை வியப்பதற்கெல்லாம் இது நேரமல்ல. எதுவும் பேசாமல் பாய்க்கு ஒரு கிளாஸில் விஸ்கியை ஊற்றியவர் அதை தூக்கிப் பிடித்தபடியே, “டாக்டர் உங்களுக்கு” என்றார்.

“இல்லை எனக்குப் பழக்கமில்லை”

மேலும் வற்புறுத்தாமல் தனது கிளாஸை வாய்க்கருகே கொண்டு சென்றவர், ஏதோ நினைத்தவராக சிறிது நிறுத்தி, “டாக்டர் இதெல்லாம் மேன்லி வைசஸ் என்பார்கள். பொண்டாட்டி இருக்கணுன்னா இதெல்லாம் கொஞ்சம் வேணும்” என்றார்.

சீனியரின் முகத்தில் தோன்றிய புன்முறுவல் ‘குரூரமான ஏளனமா’ அல்லது அவரின் ‘வார்த்தைகள் உண்மையா பொய்யா?’ என்ற சிந்தனையெல்லாம் இன்றி டாக்டர் முகத்தில் அதே ஏகாந்த நிலை...

அன்று இரவு எனக்கு தூக்கமேயில்லை. எதிர்பாராமல் குடித்த விஸ்கி அதற்கு காரணமில்லை...

மும்பை
21.09.03


பி.கு. இன்று இதே வழக்கு நடைபெற்றிருந்தால் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும். ஏனெனில் முஸ்லீம் பெண்கள் பாதுகாப்பு சட்டம் அமுலுக்கு வந்த பிறகு, பெண்கள் ஜீவனாம்சம் கோரினாலே ஆண்கள் முத்தலாக்கு முறையில் விவாகரத்து செய்வது பழக்கமாகிப் போனது. அண்மையில் மும்பை உயர்நீதிமன்றம், ‘தலாக்கு மறுக்கப்பட்டு வழக்கு தொடரப்படுகையில் தலாக் செய்ததற்கான தகுந்த காரணம் கூறப்படவேண்டும். அவ்வாறில்லாத தலாக்குகள் செல்லாது’ என்று தீர்ப்பு கூறியுள்ளது. எனவே தற்போது இஸ்லாமியர்களும் முன்பு போல எளிதாக எவ்வித காரணமுமின்றி விவாகரத்து செய்தல் கடினமான காரியம்.

7.8.06

இயேசு 'டீ' விக்கிறார்

நகைச்சுவை உணர்வு என்பது சிலருக்கு இரத்தத்திலேயே ஊறியிருக்கும். நகைச்சுவையினன இரசிக்கும் உணர்வினை கூறவில்லை... பேச்சிலும் செயலிலும் இயல்பாகவே சிலருக்கு குறும்பும் நக்கலும் வெளிப்படும். அத்தகைய நபர்களை நண்பர்களாக பெற்றவர்கள் பாக்கியசாலி.கள். எனக்கும் அப்படி ஒரு நண்பர் உண்டு. அவரது நக்கல்களை எழுத்தில் வடிப்பது கடினமான செயல். அந்தந்த சூழ்நிலைகளில்தான் அவரது குறும்புகள் அர்த்தம் பெறும்.

அவரது வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். வீட்டிலிருந்து ஒரு சொம்பினை எடுத்து அங்கிருந்த ஒரு சிறுவனிடம் கொடுத்து மிகச் சாதாரணமாக, ‘இந்தா, போய் பக்கத்து கடையில் நாலை ஆறா போட்டு நான் சொன்னேன்னு டீ வாங்கிட்டு வா’ என்றார். பையனும் பேசாமல் காசை வாங்கிக் கொண்டு போனான். பின்னர் சிறிது நேரம் கழித்து டீயுடன் திரும்பி வந்தவன், ‘என்னண்ணே நீங்க...நீங்க சொன்னதை அப்படியே சொல்லி கடையில எல்லாரும் கிண்டல் பண்றாங்கண்ணே’ என்று சலித்துக் கொண்ட பின்னர்தான் எங்களுக்கே அவரது குறும்பு புரிந்தது.

ஒரு முறை என்னிடம் வந்தார், 'என்னடா, உங்க இயேசு தச்சர் மகன்னு சொன்ன! டீக்கடை வைச்சிருந்தத சொல்லலயே'

எனக்கு விளங்கவில்லை, ' என்ன சொல்ற, எங்க பாத்தே'

'பின்ன, நேத்து தமுக்கதுல உங்க மீட்டிங். போனா எல்லாரும் 'டீ விக்கிறார், இயேசு டீ விக்கிறார்னு பாடிக்கிட்டுருந்தாங்களே'

கொஞ்ச நேரம் கழித்துதான் எனக்குப் புரிந்தது, 'ஜீவிக்கிறார்தான் நண்பருக்கு டீ விக்கிறார்' ஆகி விட்டார் என்று.

ஆனாலும் அவர் விடவில்லை, 'ரியல் எஸ்டேட் கூட நடத்றார் போல' என்றார் ஒரு கண்ணடிப்புடன்.

அடுத்த குறும்பு என்று தெரிந்தாலும், நண்பர் எங்கு வருகிறார் என்று தெரியவில்லை. பரிதாபமாகப் பார்த்தேன்.

'இல்ல! அங்க ஃபுல்லா 'இயேசு வீடு விக்கிறார்'னு போஸ்டர் ஒட்டியிருக்கு. அதான் கேட்டேன்' சிரிக்காமல் சீரியஸாக ஜோக்கடிப்பது அவரது கை வந்த கலை.

இந்த முறை எனக்கு விளங்கிப் போனது. 'இயேசு விடுவிக்கிறார்தான், வீடு விக்கிறவராக நண்பருக்கு மாறிப் போனது என்று'

இயேசு ‘must be crazy’ பின்ன இப்படிப்பட்ட நபர்களை படைத்திருக்கிறாரே!

3.8.06

பிரிகேடியர் ஷெரீப்...

ஒரு நபருக்காக நூலகத்தில் காத்திருந்த வேளையில், தற்செயலாக இன்று கண்ணில் பட்ட அந்த செய்தியினை பார்த்திருக்காவிட்டால், ஐந்து நாட்களுக்கு முன்னர் தனது 92வது வயதில் மரித்துப் போன பிரிகேடியர் ஷெரீபை எனக்கு தெரியாமலே போயிருக்கும். யார் யாரைப் பற்றியெல்லாம் அநாவசியத்துக்கு தெரிந்து வைத்திருக்கும் நாம் இந்த மண்ணில் வாழ்ந்து மறைந்து போன சில சிறந்த மனிதர்களை எப்படி உதாசனப்படுத்தி விடுகிறோம்.

1947ம் ஆண்டு. இந்தியப் பிரிவினையை அடுத்து, வட இந்தியா கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த நேரம். பூனாவிலிருந்த இளம் லெஃப்டினண்ட் கானல் முகமது கலியுல்லா ஷெரீப் டெல்லிக்கு அவசரமாக அழைக்கப் பட்டார். டெல்லியில் ஊரடங்குச் சட்டம். அமுல் படுத்த ராணுவம் ஈடுபடுத்தப்பட்டு, ஷெரீப் பணியில்.

பதற்றமாக ஒரு ஜவான் ஷெரீபிடம் வந்து, "சார், ஒரு கார் சாலையில் அனுமதியின்றி வருகிறது"

அவர் முடிக்கும் முன்னே ஷெரீப், "கண்டதும் சுட உத்தரவு. காரை முதலில் சுடு"

"இல்லை சார், அதில் வைசிராயின் இலைச்சினை! லார்ட் மவுண்ட் பேட்டனின் கார்!"

"வைசிராய் இங்கு வருவதாக எனக்குத் தகவல் இல்லை. அனுமதியின்றி யாரும் காரில் வர உத்தரவில்லை. முதலில் நீ சுடு"

ஆங்கிலேயர் இந்தியாவில் ஆட்சி புரிந்த அந்த இருநூறு ஆண்டுகளில் முதல் முறையாக வைசிராயின் காரை நோக்கி ஒரு துப்பாக்கி உயர்த்தப் பட்டதும் அல்லாமல்...சுடவும் பட்டது. ஆனால் குண்டு அதில் படவில்லை.

வைசிராயின் கார் சுடப்பட்டதற்காக ஒரு விசாரணை நடத்தப்பட்டு, ஜவான், ராணுவ நீதிமன்றத்தில் (court martial) நிறுத்தப் படும் நிலை எழுந்தது. இன்றைக்கு அவ்வப்போது குற்றச்சாட்டுக்குள்ளாகும் ராணுவ அதிகாரிகளைப் போல ஜவானில் பின்னே மறைந்து கொள்ளவில்லை ஷெரீப். 'ராணுவ நீதிமன்றத்தில் குற்ற விசாரணையென்றால் அது என் மீதுதான் தொடரப்படவேண்டுமேயல்லாமல், வெறுமே எனது கட்டளைக்கு கீழ்ப்படிந்த ஜவான் மீது எந்த குறையும் இல்லை' என்றார். மேலும் தான் தண்டிக்கப் படும் பட்சத்தில் தனது பிரிவில் கிளர்ச்சி ஏற்படும் வாய்ப்பு உள்ளதையும் அரசுக்கு தெரியப்படுத்தினார்.

நடந்த விஷயங்களை கேள்விப் பட்ட வைசிராய் மவுண்ட் பேட்டன் தைரியம் மிகுந்த அந்த ராணுவ அதிகாரியை கூப்பிட்டனுப்பினார். ஷெரீபின் பதிலினால் ஈர்க்கப்பட்ட வைசிராய் "கர்னல். உங்களது ஜவானுக்கு குறி பார்த்து சுடத் தெரியவில்லை. அத்தோடு நாம் இந்த விஷயதை விட்டு விடுவோம்" என்று பேட்டியினை முடித்துக் கொண்டார். ஹூம்....மவுண்ட் பேட்டனின் பெருந்தன்மை மற்றும் நகைச்சுவை உணர்வு. இப்போதுள்ள அரசியல் தலைவர்களுடன் ஒப்பிடுகையில் நாம் பெருமூச்சுதான் விட முடியும்.

1948ல் நடந்த போரில் ஷெரீப் அவராலாயே உருவாக்கப் பட்ட 164பிரிகேடு மூலம் பாகிஸ்தானால் கைப்பற்றப்பட்ட ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த தேரா பாபா நானக் பாலத்தை மீண்டும் கைப்பற்றினார்.

இதற்கிடையில் 1947 கலவரத்தில் காயம் பட்டவர்களை காண லேடி கார்டின்கே மருத்துவமனைக்குச் சென்ற கர்னல் ஷெரீப் அங்கிருந்த இளம் மருத்துவர் சாந்தி மீது காதல் வயப்பட, எல்லோரும் 'நாடே இந்து முஸ்லீம் பிளவு பட்டுக் கிடக்க ஒரு இந்துவை காதல் புரிய உனக்கென்ன பைத்தியமா?' என்றார்கள்.

சாந்தியின் பெற்றோரோ ஷெரீபை கொலை செய்யக் கூட ஏற்பாடு செய்தனர். இறுதியில் சாந்தி பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி ஷெரீபுடன் ஓட...இல்லை பறக்கத் தயாரானார். 1950ல் ராணுவ விமானத்தில் டெல்லியிலிருந்த சாந்தி ஷெரீப் இருந்த குர்தாஸ்பூருக்கு அழைத்துவரப்பட பொதுவான முறையில் இருவருக்கும் திருமணம்.

தனது தீரச் செயல்களுக்காகவும் தைரியத்துக்காகாவும் இரட்டை பதவி உயர்வு பெற்ற பிரிகேடியர் லைக்கு உயர்ந்த ஷெரீப் 1958 ல் ராணுவத்தில் அரசின் தலையீட்டைப் பொறுத்து பாதுகாப்பு மந்திரி திரு.கிருஷ்ண மேன்னுடனான கருத்து வேறுபாடு காரணமாக ராணுவத்தை விட்டு ராஜினாமா செய்தார்.

பின்னர் சவூதி அரேபியாவுக்கான தூதராகும் வாய்ப்பு ஷெரீபை தேடி வந்தது. அதற்கு இடைஞ்சலில்லாத வகையில் அவரது மனைவி இஸ்லாமியராக மதம் மாறுவது நலம் என்று இந்திய அரசு அறிவுரைத்த போது, 'எனது மனைவி மதம் மாறி இருந்தால் எனது மனைவியாகவே இருந்திருக்க மாட்டார்கள். எனது மதம் எனக்கு. அவளது மதம் அவளுக்கு. அவள் மதம் மாறமாட்டார்கள்' என்று சொல்லி வந்த சந்தர்ப்பத்தை நழுவ விட்டவர் ஷெரீப்.

1931ம் ஆண்டு பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் அதிகாரியாக சேர்க்கப்பட்ட ஷெரீப், ஆங்கிலேய ஆட்சியின் போது பிரிட்டிஷ் துருப்புகளை வழி நடத்திய மிக அரிதான இந்திய அதிகாரிகளில் ஒருவர்.

இப்படிப்பட்ட பிரிகேடியர் முகமது கலியுல்லா ஷெரீப்பின் உடல் நவம்பர் 27ம் தேதியன்று நியுதில்லியில் அவரது விருப்பப்படி இஸ்லாமிய மௌல்விகளும் இந்து பண்டிதர்களும் சேர்ந்து இறைத்துதி பாட இ.ஆ.ப. அதிகாரியான அவரது மகனால் ஈமக்கிரியை செய்யப் பட்டது.

சொல்ல மறந்து விட்டேன். பிரிகேடியர் ஷெரீப் நம்ம வேலூரைச் சேர்ந்த தமிழர்!


மும்பை
30.11.02