25.12.09

எங்களுக்காக அழ வேண்டாம், ‘தி இந்து’வே!
நள்ளிரவு கிறிஸ்துமஸ் ஆராதனையை, ‘தூக்கம் வருகிறது என்று இந்த வருடம் தவிர்த்து விட்டாலும், காலை எட்டு மணிக்கு செல்ல வேண்டியதாயிற்று. ஆயினும் கோவிலுக்கு வெளியேதான் இடம்!

பாதிரியார் தனது கிறிஸ்துமஸ் செய்தியில் ‘வெளிநாட்டு பழக்கமான கிறிஸ்துமஸ் குடில் வைத்தல், மரம் வைத்தல்என்பவற்றின் காரணங்களைப் பற்றி கூறிக் கொண்டிருந்தார். சுவராசியமில்லாமல் கேட்டுக் கொண்டிருந்தேன்.

இறுதியில், அதனால்தான் இந்த வருடம் நமது கோவிலின் குடிலானது ஈழ மக்களின் துயரினை எடுத்துக் காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுஎன்று கூறியது உடனடியாக கவனத்தை ஈர்த்தது.

அந்த குடிலினை நோக்கி  நகர்ந்தேன்.......பின்னணியில் சிவப்பு நிறத்தில் ஈழ வரைபடத்துடன் ‘தூங்காதே தூங்காதே எங்கள் துயர் தீரும் வரை தூங்காதேஎன்று தொடங்கும் பாடல் வரிகளுடன் ‘பாலகன் இயேசுவைவாழ்த்தும் வாசகங்களால் அமைந்த குடில்.

இயேசு பிறந்த குடிசையின் கூரை கெரில்லாப் படைக்கான துணியில் வேயப்பட்டிருந்தது!

-oOo-

வருடா வருடம் கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருட ஆராதனையில் கண்டிப்பாக ஈழ மக்களின் துயர் ஏதேனும் ஒரு வகையில் பங்கு பெறும் மக்களிடம் நினைவூட்டப்படுகிறது என்று அப்பொழுதுதான் தோன்றியது.

கிறிஸ்தவத்தின் மற்ற பிரிவுகளில் உள்ள போதகர்கள், பொது விடயங்களில் தங்களது கருத்தினை எப்பொழுதேனும் வெளிப்படுத்துவதை பார்த்ததில்லையெனினும், கத்தோலிக்க பிரிவிலுள்ள பாதிரிகளில் சிலர் வெளிப்படையான மனித உரிமை ஆர்வலர்களாகவும், இடது சாரி சிந்தனையுள்ளவர்களாயும் இருப்பதை பார்க்கிறேன்.

நான் அவ்வாறு சந்தித்த பலர், தங்களது ஆழ்மனதில் இறைமறுப்பாளர்களாகவும் இருப்பார்கள் என்ற சந்தேகம் எனக்கு எழுவதுண்டு!

-oOo-

கிறிஸ்தவ அமைப்புகள், தங்களது ஆராதனையில் இவ்வாறு ஈழ மக்களின் துயரினை நினைவு கூறுகையில், இந்து மத அமைப்புகளுக்கு ஏன் அவ்வாறு தோன்றுவதில்லை.

சிதம்பரம், ஸ்ரீரங்கம் கோவிலை விடுங்கள்......முருகனின் அறுபடைவீடுகளில் முக்கியமான பழனி, திருச்செந்தூர் ஆலயங்களில் கூட ஈழ மக்களை முன்னிருத்தி வழிபாடு ஏதும் செய்யப்பட்டதாக செய்திகள் ஏதும் இல்லையே!

மனிதர்கள் கைவிடலாம்...கடவுளர்களும் கூடவா?

-oOo-

நான்காம் ஈழம் போர் உக்கிரமடைந்திருந்த பொழுது இந்த நாடு சிங்களர்களுக்கானது என்று நான் உறுதியாக நம்புகிறேன்என்றும் ‘சிறுபான்மையினர் எங்களுடன் இங்கு வாழலாம். ஆனால் சிறுபான்மையினர் என்ற போர்வையில் அவர்கள் தகுதியில்லாத உரிமைகளை கோர இயலாது என்றும் கூறினார். தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களை ‘கோமாளிக்கூட்டம்என்று வர்ணித்ததன் மூலம் தான் பணியாற்றும் அரசாங்கத்திற்கு ராஜரீக தர்மசங்கடத்தை ஏற்ப்படுத்தினார். சமீபத்தில் ‘தற்போதய சூழலில் மாநிலங்களுக்கு அதிகாரம் தரும் 13ம் சட்டத்திருத்தம் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்என்று கூறி அனைவரையும் திகைக்க வைத்துள்ளார்.

இவ்வாறு, சிரீலங்கா முன்னாள் படைத்தளபதி சரத் பொன்சேகாவின் ‘இனவாதத்தை குறிப்பிட்டு தலையங்கம் எழுதும் நாளிதழ்...
                                                  
‘தி இந்து’!

ஆனால் எழுதிய தேதிதான் முக்கியம். பொன்சேகா தனது இனவாதத்தினை, வார்த்தைகளில் விஷமாக கொட்டிக் கொண்டிருந்த காலத்தில், ‘தி இந்துஅதைக் கண்டித்து மூச்சு விடவில்லை. ஏனெனில் ‘alls fair in love and war’!

தற்பொழுது பொன்சேகாவால் ராஜபக்சேவிற்கு பிரச்னை என்றவுடன், ‘தி இந்து இறந்த காலத்திற்குச் சென்று தலையங்கம் எழுதுகிறது.

சரிதான், லங்க ரத்னாவின் ஆதங்கம் நியாயமானதுதான்!

-oOo-

இந்த தலையங்கம் வெளிவந்த அதே நாளில் ‘தி இந்துவின் முதல் பக்கம் முழுவதும் வெளிவந்த செய்தி என்னவென்று தெரிந்தால் இன்னமும் வே(தனை)டிக்கையாக இருக்கும்.

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர், காங்கிரஸ் முதல்வர் அசோக் சவானைப் பற்றி மராத்தி பத்திரிக்கைகளில் வெளிவந்த செய்திகளைப் போன்ற விளம்பரங்களைப் பற்றிய இந்துவின் புலனய்வு அறிக்கை!


விளம்பரத்தை செய்திகளைப் போல வெளியிடுவது தவறு என்று இது வரை தெரியாது. தெரியாமல், நான் ‘தி இந்துவில் வெளியாகும் இலங்கைச் செய்திகளை விளம்ப்ரம் என்று இதுவரை நினைத்து வந்தேன்...

மதுரை
25/12/09

3.12.09

நள்ளிரவு பூதங்களும் ஒர் அமெரிக்க பின் லேடனும்...இன்னும் இரு நாட்களில் துயரமான ஒரு சம்பவத்தில் முதல் வருட அஞ்சலி. ஏற்கனவே உலகின் கவனமும் முழுவதையும் நியூயார்க்கின் பக்கம் திருப்புவதற்கான ஏற்பாடுகள் துவங்கி விட்டது. யாரும் எதனையும் மறந்துவிடக்கூடாது என்னும் அமெரிக்காவின் ஆதங்கம் புரிகிறது. நாமும் மறக்கவில்லை. உயிரையும், உறவினர்களையும் இழந்த அனைவரும் உங்களையும் என்னையும் போன்ற வானரர்கள்தான். அவர்கள் அனைவருக்கும் நமது அஞ்சலி.

முஷாரஃபோடு போட்டி போட்டுக் கொண்டு அமெரிக்கா கிளம்பி விட்ட வாஜ்பேயி இன்றய செய்தித்தாளின் ஒரு மூலையில் சின்னதாக வந்திருக்கும் ஒரு பெட்டிச் செய்தியினை பார்த்திருக்க வாய்ப்பில்லை. பார்த்திருந்தாலும், பல வருடங்களுக்கு முன்னர் ஒரு இந்திய நகரத்து மக்கள் சந்தித்த துயரம், அமெரிக்காவின் துயரத்திற்கு எந்த விதத்திலும் குறைந்ததில்லை என்றும் ஆனால் சம்பந்தப்பட்ட பின் லேடன்கள் இன்னமும் வெளியே என்றும் ஒரு விநாடி சிந்தித்திருப்பாரா என்பதும் சந்தேகம்தான்.

அந்தச் செய்தியின் தலைப்பு 'Warren Anderson's Extradition: Government will make effort'. யார் இந்த வாரன் ஆண்டர்சன்? என்று உங்களில் யாரவது கேட்டால், உங்களை தவறு சொல்ல மாட்டேன். அது மூன்றாம் உலக நாடுகளின் தலைவிதி. ஒரு பதினெட்டு வருடங்கள் பின்னோக்கி செல்ல வேண்டியிருக்கிறது.

நான் சிறுவனாக இருக்கையில் கேட்ட கதைகளில் கொள்ளி வாய்ப் பிசாசுகள் நடு இரவில் முழித்துக் கொண்டு உலா வரும் என்று கூறப்படுவதுண்டு. அப்படி ஒரு நாள் நிஜமாகவே நடந்தது, போபாலில். ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்து நாலாம் வருடம், டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி, சரியாக நள்ளிரவு தாண்டி அரை மணி நேரத்தில் 'மெத்தில் ஐசோசயனைடு' என்ற ரூபத்தில் பிசாசுகளும், பூதங்களும், பேய்களும், யூனியன் கார்பைடு என்ற பன்னாட்டு நிறுவன தொழிற்சாலையில் இருந்த தொட்டியில் இருந்து கிளம்பி நகரம் முழுவதும் கோர தாண்டவம் ஆடியது.

காலை விடிவதற்குள் ஏற்கனவே 2500 உயிர்கள், பெரும்பாலும் குழந்தைகள் பலியாகியிருந்தது. இரண்டொரு நாட்களில் பலியான உயிர்கள் 4000. நிரந்தர ஊனமடைந்தோர் எண்ணிக்கை குறைந்தது 20,000. அதற்கு இரண்டு மடங்கு மற்ற பல வகைகளில் காயமடைந்தவர்கள். வரப் போகும் பின் விளைவுகளையும், ஊனமுடன் பின்னர் பிறந்த குழந்தைகளையும் நான் சேர்க்கவில்லை. இதுதான் 'போபால் விஷ வாயு விபத்து'. விபத்தினை விட அதற்குப் பின்னர் நிகழ்ந்ததுதான் கவனத்துக்கு குறியது. முதலில் நடந்தது விபத்தா?

விபத்து நடந்து சில நாட்களிலேயே, Ambulance Chasers என்று கேலியாக அழைக்கப் படும் அமெரிக்க விபத்து சம்பந்தமான வக்கீல்கள் இந்திய மண்ணில் குமிந்து விட்டனர். இங்கு ‘நீர்மாலை வக்கீல்கள்’ என்று கிண்டல் செய்யப் படும் வக்கீல்கள் இவர்கள்தான். ஆனால் இதையெல்லாம் மீறி, இவர்களால் சாதாராண மக்கள் அடைந்த பலன்கள் ஏராளம்.

அந்த வக்கீல்களின் செலவிலேயே நூற்றுக் கணக்கான வழக்குகள் பாதிக்கப்பட்டவர்களுக்காக அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டன. வெற்றி பெற்றால் கிடைக்கும் நஷ்ட ஈட்டுத்தொகையில் ஒரு பகுதி வக்கீலுக்கு கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில். அத்தகைய ஒரு ஏற்பாடு பிரிட்டிஷ் சட்டத்தினைப் பின்பற்றும் இந்தியாவில் குற்றம். இந்திய அரசாங்கம் சும்மா இருக்காதல்லவா? வழக்கம் போல Bhopal Gas Leak Disaster (Processing of Claims) Act என்ற சட்டம் கொண்டு வந்தது. அதன்படி எல்லா வழக்குகளையும் அரசுதான் நடத்த வேண்டும் என்று சொன்னது. பின்னர் தன் பங்குக்கு தானும் ஒரு வழக்கு அமெரிக்காவில் பதிவு செய்தது. எல்லா வழக்குகளும் ஒரே நீதிமன்றதின் முன்பு கொண்டு வரப்பட்டது.

யூனியன் கார்பைடு விபத்து இந்தியாவில் நடந்ததால் அமெரிக்க நீதிமன்றங்கள் அந்த வழக்குகளை விசாரிக்க கூடாது என்று வாதிட்டது. காரணம் அனைவரும் அறிந்தது. பாவம், இந்திய அரசாங்கம் தனது அட்டானி ஜெனரல் மூலமாக, 'இந்திய நீதிமன்றங்களை விட அமெரிக்க நீதிமன்றங்களில்தான் இத்தகைய விபத்து இழப்புகளுக்கு முழுமையான நீதி கிடைக்கும்' என்று வாதிட வேண்டிய இக்கட்டான சூழ்நிலை. இறுதியில் அமெரிக்க நீதிமன்றம் யூனியன் கார்பைடுக்கு சாதகமாக, 'வழக்கு இந்தியாவில்தான் நடக்க வேண்டும்' என்று தீர்ப்பளித்தது.

அது ஒரு தவறான தீர்ப்பு என்பது எனது கருத்து. அதோடு விட்டதா, இந்திய நீதித்துறை வழங்கப் போகும் தீர்ப்பை, 'சரியான நெறிமுறை கையாளப்படவில்லை' என்ற காரணத்தில் யூனியன் கார்பைடு பின்னர் அமெரிக்க நீதிமன்றத்தில் எதிர்க்கும் உரிமையினையும் அதற்கு தந்தது.

கொடுமை! இந்திய நீதித்துறையில் ஆயிரம் குறைபாடுகள் இருக்கலாம். ஆனால், சரியான நெறிமுறை இல்லை என யாரும் கூறி விட முடியாது. பிரதிவாதி மற்றும் குற்றம் சாட்டப் படுபவர்களுக்கும் இந்திய சட்டத்தில் கிடைக்கும் பாதுகாப்பு வேறு எங்கும் கிடையாது. கடந்த ஒரு வருடமாக அமெரிக்க அரசு செய்வது போல, எந்த வித வெளிப்புற தொடர்பும் இன்றி கைது செய்வதெல்லாம் இங்கு நடக்காது.

இந்திய மண்ணுக்கு வந்த பிறகு அமெரிக்க வக்கீல்களுக்கு வேலையில்லாமல் போய் விட்டது. இந்திய அரசுதான் ஒரே வாதி. வழக்குத் தொகையோ 3.3 பில்லியன் டாலர்!

-oOo-

ஐந்து வருடங்கப்ள் ஓடியது. டிரையல் கோர்ட் இடைக்கால வாரணமாக யூனியன் கார்பைடு 350 கோடி இந்திய ரூபாய்கள், தர வேண்டும் என உத்தரவிட்டது. யூனியன் கார்பைடு செய்த அப்பீலில், உயர்நீதிமன்றம் அதனை 250 கோடியாக குறைத்தது. யூனியன் கார்பைடு உச்ச நீதிமன்றம் சென்றது. இடைக்கால நிவாரணத்தை பற்றித்தான் மேல்முறையீடு.

மேல்முறையீடு நிலுவையில் இருக்கையில், திடீரென ஒரு சமரசம். யூனியன் கார்பைடுவுக்கும் இந்திய அரசுக்கும். பாதிக்கப் பட்ட யாருக்கும் இதில் சம்பந்தமில்லை. நீதிமன்றமும் அதனை ஒத்துக் கொண்டது. அதாவது யூனியன் கார்பைடு மொத்தமாக 470 மில்லியன் யு.எஸ் டாலர்கள் (1989-ல் ஒரு டாலர் 25 ரூபாய் என்று னைக்கிறேன்) வழங்க வேண்டும்.

இந்த சமரசம் பெரிய சர்ச்சையினை கிளப்பியது. தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டி மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டன. உச்ச நீதிமன்றமோ ஒன்றும் செய்ய இயலாது என்று கையை விரித்து விட்டது. அதாவது இந்த தீர்ப்பின் படி இறந்தவர்களுக்காக சுமார் 4000 முதல் 12000 டால்ர்கள் வரையும், நிரந்தர ஊனமடைந்தவர்களுக்காக சுமார் 2000 முதல் 8000 டாலர்கள் வரையும், காயமடைந்தவர்களுக்கு சுமார் 1000 முதல் 2000 டாலர்கள் வரை கிடைக்கும் என உச்ச நீதிமன்றம் கூறியது. ஈட்டுத் தொகையில் ஒரு தொகையினை பாதிக்கப் பட்டவர்களுக்காக ஒரு மருத்துவமனை கட்டவும் ஒதுக்கியது.

ஆனால் வருங்காலத்தில் பாதிக்கப் படபோகிறவர்களுக்காகவும், பாதிப்புடன் பிறக்கப் போகும் குழந்தைகளைப் பற்றியும் ஏதும் இல்லை. யூனியன் கார்பைடு இந்த தீர்ப்பினை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டது. ஏனெனில் இந்த சமரசம் இல்லையெனில், யூனியன் கார்பைடு திவாலாகி இருக்கும். இந்த திடீர் சமரசத்திற்கும், யூனியன் கார்பைடுவின் மகிழ்ச்சிக்கும் வேறு ஒரு காரணம் இருந்தது.

இந்த சமரசத்துக்கு சில தினங்கள் முன்பு, யூனியன் கார்பைடுவின் அமெரிக்க தொழிற்ச்சாலையினை சோதனையிட அனைத்து சட்ட நடவடிக்கைகளும் (legal formalities) முடிந்தது. இதில் என்ன யூனியன் கார்பைடுவிற்கு கவலை? அந்த சோதனை நடந்திருந்தால் யூனியன் கார்பைடுவின் அமெரிக்க தொழிற்சாலைக்கும் இந்திய தொழிற்சாலைக்குமான பாதுகாப்பு நெறிமுறைகளின் (safety standards) வித்தியாசம் வெட்ட வெளிச்சமாகியிருக்கும். இந்திய தொழிற்சாலையில் குறைவான பாதுகாப்பு நெறிமுறைகள் கையாளப் பட்டதாக (அதில் சந்தேகமும் இல்லை) ஆதாரம் கிடைத்தால் யூனியன் கார்பைடுவை அந்த ஆண்டவனே காப்பாற்றியிருக்க முடியாது. ஆனால் இன்றும் அது ஒரு சக்தி வாய்ந்த நிறுவனம்.

அத்தகைய ஒரு ஆதாரத்தின் விளைவு ஈட்டுத்தொகைக்கான சிவில் வழக்கினை விட யூனியன் கார்பைடு நிறுவன அதிகாரிகள், முக்கியமாக அதன் தலைவர், முதலில் கூறப்பட்ட வாரன் ஆண்டர்சன் மீதான கிரிமினல் வழக்கில் அதிகம். இந்த சமரசத்தில் இடம் பெற்றிருந்த ஒரு சாரம்சம் சம்பந்தபட்ட நபர்கள் மீதான அனைத்து கிரிமினல் வழக்குகளும் வாபஸ் வாங்கப்பட வேண்டுமென்பதுதான்.

இத்தகைய ஒரு சாரம்சம் இந்திய குற்றவியல் சட்டத்திற்கே மாறானது. சில சிறிய கிரிமினல் வழக்குகளைத்தான் வாபஸ் பெற முடியும். இதனை நமது சுப்ரீம் கோர்ட்டும் பின்னர் ஒத்துக் கொள்ள, மறு பரிசீலனை மனுவில் இந்தச் ஷரத்து நீக்கப்பட்டது. ஆனால் அதற்குள் அனைத்தும் வீணாகி விட்டது. அதன் பிறகு நடைபெற்றிருக்க வேண்டிய சோதனை நடந்ததாகத் தெரியவில்லை.

எனவேதான் நேற்று காலை வந்த செய்தியினை படித்ததும் எனக்கு சிரிப்பதா இல்லை அழுவதா என்ப்று தெரியவில்லை. ஆண்டர்சனிடம் இப்போது போய் கூறினால் போபாலா? அது எங்கிருக்கிறது? என்பார். எக்ஸ்ராடிஷன் எல்லாம் நடக்கிற சமாச்சாரமா? உலக வர்த்தக மைய தாக்குதலுக்குப் பின்னர் அமெரிக்கா என்ன எக்ஸ்ரடிஷன் நடவடிக்கையா எடுத்தது. ரஷ்யா முதல் எல்லாருக்கும் ஒரே கேள்விதான். நீங்கள் எங்கள் பக்கமா? இல்லை அவர்கள் பக்கமா? ஒசாமாவை, முல்லா ஓமர் ஒப்படைக்க மறுத்த போது ஜியார்ஜ் புஷ்ஷை விட சந்தோஷமடைந்தவர்கள் யாரும் இருக்க முடியாது. ஒரே கல்லில் பல மாங்காய்களென எல்லாவற்றையும் பொளந்து கட்டிவிட்டார். அவருக்கு தெரியுமா? அமெரிக்காவில் ஒரு பின் லேடன் இருக்கிறார் என்றும் பல்லாயிரக்கணக்கான உயிர்களுக்கு அவர் இங்கு பதில் சொல்ல வேண்டியிருக்கிறது என்றும்.

வாரன் ஆண்டர்சனின் நாய்க்குட்டியினைக் கூட இங்கு பிடித்து வர முடியாது.

பி.கு. எற்கனவே கிரிமினல் வழக்கின் கடுமையான சட்டப் பிரிவுகள், இந்த வழக்கில் இருந்து நீக்கப் பட்டு விட்டன. தற்போது வெறும் அஜாக்கிரதை (negligence) வழக்குதான் என்று நினைக்கிறேன். இதற்காக ஒரு மிகப் பெரிய நிறுவனத்தின் தலைவரைப் போய் தண்டிப்பதா என்றால், கையை பின்புறமாக கட்டி விலங்கிடப் பட்டு கூட்டிச்செல்லப் பட்டார்களே, என்ரான் நிறுவன அதிகாரிகள், அவர்களை கோவில் கட்டி கும்பிடலாம். அமெரிக்க மக்கள் என்ரான் ஷேர்களில் இழந்த பணத்தை விட இந்திய உயிர்கள் ஒன்றும் கேவலமானதல்ல...