29.7.06

ராமாயணத்தில் அரசியல்!

நிறுவன நிர்வாகம் சம்பந்தமான கூட்டங்களில் பங்கு கொள்ளும் வாய்ப்பைப் பெற்றவர்களுக்கு ஒரு அனுபவம் நேர்ந்திருக்கும். நிறுவன தலைவர்கள் பல சந்தர்ப்பங்களில் நிர்வாகம் சம்பந்தமாக மற்ற அலுவலர்களின் கருத்துக்களுக்கு தாம் மதிப்பளிப்பதாகவும் அவற்றை வரவேற்பதாகவும் கூறியிருந்தாலும், நிர்வாக கூட்டங்களில் ஒரு பிரச்னையை பற்றி விவாதிக்கையில் முதலில் வெளிவருவது அவரது கருத்தாகத்தான் இருக்கும். பல தலைகள் அவர் சொல்லி வருகையிலேயே, 'எஸ்..எஸ்' என்று மோதித்த வண்ணம் இருக்கும். சில சமயம் தலைவரது உரை முடிந்த பின்னர் ஒன்றிரண்டு அப்பாவி முந்திரி கொட்டைகள் ஏதாவது சொல்லி வைக்க, அவர்கள் பக்கம் இருந்தே சில 'உச்..உச்'கள் எழும். 'பாவி, சீக்கிரம் கூட்டம் முடிந்து வெப்பம் மிகுந்த இந்த அறையை விட்டு போக விட மாட்டான் போல இருக்கிறதே' என்ற ரகசிய அங்கலாய்ப்புகள்.

நிறுவன தலைவரோ அவரது மனநிலைக்கு ஏற்ப கோப பார்வையிலிருந்து... அனுதாப பார்வை வரை ஏதாவது பார்வையில் முந்திரிக் கொட்டைகளைப் பார்ப்பாரே தவிரமோதிக்கும் பார்வை நான் கேள்விப்பட்டது வரையிலும், தெரிந்த வரையிலும் இருக்காது. மிக நல்ல மனநிலையில் இருப்பவர் தன் கருத்துக்கு மாறுபட்ட கருத்தினை கடைசி வரையில் கேட்டாலும்...இறுதி முடிவு அவர் முதலில் எடுத்த நிலைதான் பெரும்பாலாக இருக்கும்.

பல சமயங்களில் மாறுபட்ட கருத்தினை சொல்பவரைப் பார்த்து 'ஏன் இப்படி?' என்று அவரை மடக்கிப் போடும் ஒரு கேள்வி கேட்கப்பட்டு அதை வைத்தே அவர் குடைந்தெடுக்கப்படுவார். ஆனால், எந்த ஒரு கூட்டத்திலும் 'ஆமாம் சாமி'களைப் பார்த்து 'ஏன் இந்த ஆமாம்?' என்று எந்த ஒரு நிர்வாகத் தலைவரும் கேட்கும் பக்குவத்தை எதிர்பார்க்க முடியாது. அப்படி ஒரு தலைவர் கேட்டால் அந்த ஆமாம் சாமி'யின் நிலை தர்ம சங்கடம்தான். அப்படி ஒரு சங்கடத்தினை சமீபத்தில் படித்து வியந்து போனேன்.

பௌதீகத்தில் எப்படி நியூட்டனின் முதல் விதி இரண்டாவதி விதி முக்கியமோ அதே அளவுக்கு முக்கியாமான சில கொள்கைகள் நவீன நீதிப்பரிபாலனத்திலும் அரசு சார்ந்த நிர்வாகத்திலும் உண்டு. 'எந்த ஒரு விசாரணையிலும் இரு தரப்பையும் விசாரித்த பின்னரே நீதி வழங்கப்பட வேண்டும்' என்பது முதல் விதி. இரண்டாவது விதி 'எந்த ஒரு தீர்ப்புக்கும் அது வழங்கப்பட்ட காரணம் விளக்கப்பட வேண்டும்' என்பது. நீதி வழங்குபவர் ஒரு சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகவே இருக்கலாம். ஆனால் அவர் தனது தீர்ப்புக்கான காரணத்தை விளக்க வேண்டும். நீதி மன்றங்கள் மட்டுமல்லாமல் அலுவலக மற்றும் எந்த விதமான நிர்வாக விசாரணை மற்றும் உத்தரவுகளுக்கும் இந்த விதிகள் பொருந்தும்.

முதல் விதி பின்பற்றப்பட்டிருந்தால் பாண்டியன் நெடுஞ்செழியனால் கோவலனை தண்டித்திருக்க முடியாது. இரண்டாவது விதி பின்பற்றப்பட்டிருந்தால் ரோம ஆளுஞர் பிலாத்துவால் இயேசு கிறிஸ்துவை தண்டித்திருக்க முடியாது. அவர்கள் மீது குற்றம் சொல்ல முடியாது. ஏனேனில் இத்தகைய சிறந்த கருத்துக்கள் நவீன யுகத்தின் கண்டுபிடிப்புகள். ஆங்கிலேயர் நம்க்கு அளித்த கொடைகள்...இல்லை அப்படி நாம் நினைத்துக் கொண்டு இருக்கிறோம்.

வால்மீகி ராமாயணத்தில் ஒரு காட்சி!

ஸ்ரீராமருக்கும் சீதாபிராட்டிக்கும் திருமணம் முடிந்து அயோத்தியில் வசித்து வருகையில், தசரதர் தனது மூத்த மகனாகிய ஸ்ரீராமரை யுவராஜாவாக முடிசூட்ட எண்ணம் கொண்டு ராஜசபையை கூட்டுகிறார்.

'எனது முன்னோர்களைப் போலவே நானும் இந்த நாட்டினை ஒரு தாய் தனது குழந்தையை பேணுவது போல அரசாண்டிருக்கிறேன். இப்போதோ நான் வயோதிகன். எனவே எனது மூத்த மகனை யுவராஜாவாக நியமித்து அவரிடம் ராஜ்ய பரிபாலனப் பொறுப்பை அளிக்க விருப்பம் கொண்டுள்ளேன்' என்று சபையிடம் கூறிய தசரதர், அதோடு நிறுத்தாமல் ஸ்ரீராமருடைய குணநலன்களையும் நிர்வாகத் திறமையையும் அந்தச் சபைக்கு விரிவாக எடுத்துரைத்து, இறுதியில் 'மேன்மைதாங்கிய இந்த ராஜசபை எனது விருப்பத்தை நிறைவேற்ற அனுமதிக்க வேண்டுகிறேன்' என்று முடிக்கிறார்.

எதிர்பார்த்தபடியே 'அப்படியே ஆகக்கடவது' என்ற மகிழ்ச்சி நிரம்பிய ஒன்றிணைந்த குரல்கள் ராஜசபையிலிருந்து எழுகிறது.

தசரதர் விடவில்லை, 'நீங்கள் என் கருத்தோடு ஒத்துப்போவது சரிதான். ஆனால் அதற்க்கான காரணத்தை யாரும் சொல்லவில்லை. அது நல்லதல்ல. எனவே அறிவார்ந்த இந்த சபை உறுப்பினர்கள் எதற்காக தாங்கள் என் விருப்பத்தை அங்கீகரிக்கிறீர்கள் என்பதனை கூறவேண்டும்' என்கிறார்.

சபை உறுப்பினர்கள் அதன்பின்னர் அசடு வழிந்தபடியே ஸ்ரீராமரின் தகுதிகளையும் திறமையையும் விவரிக்கையில் தசரதரின் மனம் மகிழ்கிறது.

ராமாயணம் முழுவதுமே ஸ்ரீராமரின் அரும்பெரிய குணநலன்களை விளக்கும் காட்சிகளும் உரையாடல்களும் நிறைந்திருப்பதால், இந்த ஒரு காட்சியின் முக்கியத்துவம் பெரிதாக உணரப்படவில்லை என்று தோன்றுகிறது. இந்த ஒரு நிகழ்ச்சியிலேயே தசரதர் ஒரு பெரிய மரியாதைக்குரியவராகிறார்.

அவர் அயோத்தி நாட்டின் மாமன்னர். கிணற்றில் குதிக்கச் சொன்னாலும் கேள்வி கேட்காமல் குதிக்கக் கூடிய நான்கு இளவரசர்கள். முதலில் தசரதர் ராஜசபையின் அனுமதியினை கோரவே வேண்டியதில்லை. மரபு மீறி எதுவும் அவர் செய்ய முயலவில்லை. ஸ்ரீராமர் பட்டத்து இளவரசர். மன்னராக முடிசூடுவது அவரது உரிமை. ஆனாலும் தசரதர் ராஜசபையை கூட்டி தனது விருப்பத்தைக் கூறுவதோடு நிற்காமல் அதற்கான காரணத்தையும் மன்னராக முடிசூடுவதற்கு ஸ்ரீராமருக்கு உள்ள தகுதிகளையும் எடுத்துரைக்கிறார். இதனை கூட நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், 'ஆமாம் சாமி' போட்ட சாமிகளிடம் 'ஏன் இந்த ஆமாம்?' என்று விளக்கச் சொல்கிறாரே அதுதான் அவரது புத்திசாலித்தனத்தின் உச்ச நிலை. வியக்க வைக்கிறார் தசரதர் தனது பெருந்தன்மை மற்றும் ராஜதந்திரத்தால்...

நவீன நிர்வாகத் தலைவர்கள் ராமாயணத்தில் கற்க வேண்டிய பாடம் நிறைய இருக்கிறது!

ராமாயணம் உண்மையில் நடைபெற்றதா? அதுவும் பல லட்சம் வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்திருக்க முடியுமா? என்ற சந்தேகங்கள் இருந்தாலும், வால்மீகி ராமாயணம் எழுதப்பட்டது குறைந்தது சுமார் 2400 வருடங்களுக்கு முன்னர் என்பது எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் உண்மை. இதே கால கட்டத்தில் கிரேக்கத்தில் தோன்றிய ஜனநாயக்கொள்கைகளுக்கு சற்றும் குறைவில்லாத உயரிய ராஜ்ய பரிபாலன முறை இந்திய துணைக்கண்டத்தில் சிந்திக்கப்பட்டு இருந்தது நமக்கு பெருமையளிக்கும் ஒரு விஷயம்.


மும்பை
20.12.02

27.7.06

மெளனத்தின் அலறல்...

'யுதனேஸியா' (euthanesia) என்ற ஆங்கில வார்த்தையை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? நற்கொலை என்று தமிழ்ப்படுத்தலாம். அதாவது தீராத வியாதிப்பட்டு கடுமையான உடல் வேதனைகளை நித்தம் நித்தம் அனுபவித்து வருபவர்களுக்கு நிரந்தரத்தீர்வாக மரணத்தை ஏற்படுத்தும் செயல். தற்போது உலகம் முழுவதும் மெல்ல மெல்ல அங்கீகரிக்கப்பட்டு வரும் இந்த தீர்வு சரியா? தவறா? என்று பல வாதங்கள் எடுத்து வைக்கப்படுகின்றன. நீங்களும் இந்த வாதத்தில் ஒரு கருத்து கொள்ள விருப்பம் கொண்டிருந்தால் 'அருணா ஷன்பாக்'கை பற்றித் தெரிந்து கொள்ளுதல் அவசியம்.

'சடக் சாந்தினி'. அருணாவை பார்க்கும் போதெல்லாம் தனக்கு இந்த வார்த்தைகளே ஞாபகத்துக்கு வந்ததாக மும்பை கேஇஎம் மருத்துவமனையில் (King Edward VII Memorial Hospital) அவருடன் பணியாற்றிய மூத்த செவிலி துர்கா மேத்தா குறிப்பிடுகிறார். 'சடக் சாந்தினி' என்பது குஜராத்தி பிரயோகம். 'தனது கிரகணங்களால் மின் அதிர்ச்சியை தரவல்ல சிறிய நிலா என்பதுதான்' அதன் அர்த்தம். உண்மையிலியே அருணாவுக்கு அந்த பிரயோகம் மிகப் பொருத்தம்.

இந்தியாவின் மேற்கு கடற்கரை கொங்கன் பிரதேசத்தைச் சார்ந்தவர் அருணா ஷன்பாக். கொடுமையான அந்த சம்பவம் நிகழ்ந்த போது 25 வயது நிரம்பிய அழகிய பெண். அவர் பணியாற்றிய மும்பை மாநகராட்சியால் நடத்தப்பட்ட கேஇஎம் மருத்துவமனையில் அருணா மிகப் பிரபலம். அவரது பிரபலத்துக்கு அவரது அழகு மற்றும் திறமை மட்டுமன்றி விதிகளை கடைபிடிப்பதில் அவர் காட்டிய உறுதியும் எதையும் துணிச்சலாக எதிர் கொள்ளும் சுபாவமுமே காரணமாக இருந்தது. படபடப்பாக அவர் பேசும் வார்த்தைகள் சிலறால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டாலும் அதே மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றிய சுந்தீப் சர்தேசாயை கவர்ந்ததில் அதிக ஆச்சர்யம் இல்லை. அருணா-சுந்தீப் காதல் அந்த மருத்துவமனை முழுவதும் அறியப்பட்டு, திருமணத்திற்கான நாளைத் இருவரும் தேடிக் கொண்டு இருந்தார்கள். 'அருணாவுக்கு என்ன கவலை? அதிஷ்டசாலி அவள்' என்றுதான் அவளுடன் பணியாற்றிய அனைத்து செவிலிகளும் நினைத்துக் கொண்டிருந்தனர்.


அருணா பணியாற்றி வந்தது 'நாய்கள் அறுவை மற்றும் ஆராய்ச்சிப் பிரிவி'ல். சில நாட்களாக அடிக்கடி நாய்களுக்கான இறைச்சி காணாமல் போய் வந்தது. அருணாவின் சந்தேகம் அந்தப் பிரிவில் துப்புரவுத் தொழிலாளியாக பணியாற்றிய சோகன்லால் பாரத வால்மீகி மீதுதான். ஏற்கனவே ஆராய்ச்சிக்கான நாய்களை இரக்கமில்லாமல் கொடுமையான முறையில் கையாளுவதற்காக அருணா சோகன்லாலை பலமுறை கண்டித்து இருக்கிறாள். காணாமல் போன நாய் உணவுகளைப் பற்றி கேட்டதற்கு, 'சிஸ்டர், எப்படியும் மருத்துவர்கள் கையால் சாகப் போகிற நாய்களைப் பற்றி ஏன் எப்போதும் கவலைப்படுகிறீர்கள். அவற்றிற்கு வலித்தால் என்ன? பட்டினி கிடந்தால் என்ன?' என்று திமிராக பதிலளித்தான். அதற்காக அருணா அவனை கடுமையான சொற்களால் கண்டிக்க வேண்டியிருந்தது, 'மறு முறை இவ்வாறு நடந்தால், அவன் வேலை உடனடியாக போய் விடும்' என்று எச்சரித்தாள்.

'அருணா இப்படித்தான். 'படார்' 'படார்' என பொரிந்து தள்ளி விடுவாள். மற்றபடி அவள் இதயம் தங்கம்' அருணாவின் சக செவிலிகள் இப்படி சொல்கின்றனர். 'அவன் ரொம்ப முரடன். நான் அவனை கவனித்துக் கொண்டு இருக்கிறேன். அடுத்த முறை இப்படி ஏதாவது நடந்தால், அவனைப்பற்றி கண்டிப்பாக முறையிடப் போகிறேன்' அருணா சோகன்லலைப் பற்றி தனது தோழிகளிடம் சொல்லிக் கொண்டிருக்க அங்கே அவனோ, ' அருணாவை மானபங்கப் படுத்தி பழி தீர்க்கப் போகிறேன்' என்று அவனது நண்பர்களிடம் கறுவிக்கொண்டு இருந்தான்.

அருணாவின் தோழிகள் பயந்த மாதிரியே ஒரு நாள் நடந்தது. அருணா இரவுப் பணியில் இருக்கும் போது ஒரு தனியறையில் சோகன்லால் 'சின்ன நிலா' என்று வியக்கப்பட்ட அருணாவை பலாத்காரப்படுத்திவிட்டான். அருணாவின் வாழ்க்கையையே ஒரு முடிவுக்கு கொண்டு வந்த அந்த சம்பவம் நடைபெற்றது நவம்பர் மாதம் 1973ம் ஆண்டு.

சம்பவம் உடனடியாக வெளியே தெரியவர, நடந்தது என்ன என்று விவரிக்கும் சக்தி அருணாவிடம் இல்லை. அருணா கத்தி யாரையும் உதவிக்கு கூப்பிட்டு விடக்கூடாது என்பதற்காக, சோகன்லால் நாய்களைக் கட்டிப்போடும் சங்கிலியால் அவளது கழுத்தை நெரித்து இருந்ததில் அவளது மூளைக்குப் போகும் ஆக்ஸிஜன் தட்டுப்பட்டு மூளையின் பல பாகங்கள் செயலிழந்து அருணா ஏறக்குறைய கோமா நிலையிலிருந்தார். பேசும் திறன் முற்றிலும் இல்லை.

முதலில் மறைக்க முயற்சிக்கப்பட்ட சம்பவம், 'தங்களுக்கு பணியிடத்தில் பாதுகாப்பு வேண்டி' மருத்துவமனை செவிலியர்கள் நடத்திய மூன்று நாள் வேலை நிறுத்தத்தால் பரபரப்பு அடைந்தது. அருணா தாக்குதலுக்காக 1973ம் வருடம் நவம்பர் மாதம் நடைபெற்ற் வேலை நிறுத்தம்தான் இந்தியாவின் செவிலியர்கள் நடத்திய முதல் வேலை நிறுத்தம். விஷயம் முதல்வர் வரை சென்று சோகன்லால் கைது செய்யப்பட்டு பாலியல் பலாத்காரத்திற்காக அல்லாமல் தாக்குதல் மற்றும் வன்திருட்டு ஆகிய குற்றங்களுக்காகத்தான் 7 ஆண்டுகள் தண்டிக்கப்பட்டான்.

ஏனெனில் அருணாவோ எந்தவித உணர்வும் செயல் திறனும் இன்றி நீதிமன்றம் செல்லவோ அல்லது சாட்சி எதுவும் சொல்வதற்கான நிலையிலோ இல்லை. தொடர்ந்த சிகிச்சைகளினாலும், மழிக்கப்பட்ட தலையினாலும் 'சின்ன நிலா' என்று வர்க்கப்பட்ட அருணா கசக்கி எறியப்பட்ட குப்பைக் காகிதம் போல உருக்குலைந்து போனார்.

அருணா தாக்கப்பட்டு 30 வருடங்கள் கடந்து விட்டன. இப்போதும் மும்பை கேஇஎம் மருத்துவமனைக்கு நீங்கள் சென்றால் அதே வார்டில் அருணாவின் கதறல்களை நீங்கள் கேட்கலாம். அருணா இன்றும் உயிரோடு இருக்கிறார். எந்தவித உணர்வும் இன்றி பற்கள் உட்பட அவயவங்களில் எவ்வித பயனுமின்றி! அவருக்கு கண்பார்வை கிடையாது. நினைவு கிடையாது. பேச முடியாது. ஆனால் 30 வருடங்களுக்கு முன்பு நடந்த அந்த கொடூரம் அவர் மனதின் ஆழத்திலிருந்து சகிக்க முடியாத அலறல்களாகவும் கதறல்களாவும் சில சமயங்களில் இதயத்தை சில்லிட வைக்கும் சிரிப்பாகவும் வெளிவருகிறது. அவர் மனதின் ஆளத்தில் உணர்வுகள் மிஞ்சி இருக்கின்றனவா? இல்லை ஆழ் மௌனம்தானா? என்பது யாருக்கும் தெரியாது.

அருணாவின் கணவனாக வேண்டிய சுந்தீப் சர்தேசாய் அருணாவுக்காக நான்கு வருடங்கள் காத்திருந்து நம்பிக்கை இழந்த நிலையில் இன்று வேறு எங்கோ மனைவி மக்களுடன் இருக்கிறார். சோகன்லால் தண்டனைக் காலம் முடித்து தில்லியில் தனது குடும்பத்துடன் வசிக்கிறார். அருணாவின் உறவினர்களும் நண்பிகளும் கொஞ்சங் கொஞ்சமாக கரைந்து போய் இன்று அருணாவின் சொந்தம் என்று சொல்லிக் கொள்ளுபவர்கள் மும்பை கேஇஎம் மருத்துவமனையில் அடுத்தடுத்து வேலைக்கு வந்து சேரும் மருத்துவர்களும், செவிலிகளும், பணியாளர்களும்தான். அவர்கள்தாம் இன்று அருணாவை தத்தெடுத்துக் கொண்டுள்ளனர். மும்பை கேஇஎம் மருத்துவமனையில் பயாற்றும் அனைத்து செவிலியர்களுக்கும் அருணா ஒரு காவல் தெய்வம் போல. செவிலியர்களின் தன்னலமற்ற சேவையின் அடையாளமாக அருணா ஷன்பாக் இந்த 53 வயதில், தாய் வயிற்றில் இருக்கும் கருவினைப் போல சுருங்கி இன்றும் மும்பை கேஇஎம் மருத்துவமனை வார்டில் படுத்திருக்கிறார்....

அருணாவுக்கு வேண்டியது வாழ்வா? இல்லை நற்கொலையா? என்பது மும்பையில் சிலசமயம் எழுந்து அடங்கும் ஒரு கேள்வி.

மும்பை
19.03.2003


Compliments to:-
Aruna's Story: The true account of a rape and its aftermath by Pinki Virani; Viking Penguin India, 1998

24.7.06

மும்தாஜும் பத்ரிநாத் ஐஏஎஸ்ஸும்!



'தமிழ் திரைப்பட நடிகை மும்தாஜ் சற்று குஜாலான பெயர்களைக் கொண்ட மூன்று பத்திரிக்கைகள் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு 11 லட்ச ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட்டதாக' நாளிதழ்களில் வெளியான ஒரு செய்தியை எண்ணங்கள் பத்ரி நாராயணன் தனது வலைப்பதிவில் வெளியிட்டு, 'இத்தனை விரைவாக நமது நீதிமன்றங்களில் அவதூறு வழக்குக்கு நீதி கிடைத்ததை சற்று சந்தேகத்தோடு பாராட்டியுள்ளார்.

அவரது சந்தேகம் நியாயமானதே! பொதுவாக இவ்வாறான வழக்குகளில் வழக்கு நடைபெற்று இறுதி தீர்ப்பு கிடைப்பதற்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் சாதாரணமாக இருபது வருடங்கள் காத்திருக்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்றத்தில் சுமார் பத்து ஆண்டுகளாவது கலாம் என்பது எனது யூகம். ஆனால் சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் இரண்டு மூன்று ஆண்டுகளுக்குள் வழக்கின் இறுதித் தீர்ப்பை பெற்றுவிட வாய்ப்புகள் அதிகம். ஆனால் சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்ய வழக்குத் தொகை பத்து லட்சத்துக்குள் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

அப்படி இருக்கையில் மும்தாஜுக்கு இது எங்ஙனம் சாத்தியமாயிற்று? ஒன்றும் பெரிதாக இருக்காது. பல சமயங்களில் பிரதிவாதியானவர்கள், அதுவும் இது போன்ற 'மஞ்சள் பத்திரிக்கை' மனிதர்கள் நீதிமன்ற அழைப்பினை ஏற்காமல் ஏமாற்ற முனைவர். 'நாம் போகாவிட்டால் என்னதான் நடக்கிறது பார்ப்போமே' என்ற அலட்சியமும் காரணமாக இருக்கும். எனவே நீதிமன்றத்தில் பிரதிவாதிகள் 'வராதவர்கள்' என உத்தரவிடப்பட்டு மும்தாஜுக்கு எக்ஸ்பார்ட்டி தீர்ப்பு கிடைத்திருக்கலாம். இத்தனை விரைவில் இவ்வாறு தீர்ப்பு கிடைக்க வேறு சாத்தியக்கூறுகள் இல்லை. பிரதிவாதிகள் இனி நீதிமன்றத்தை அணுகி எக்ஸ்பார்ட்டி தீர்ப்பை ரத்து செய்ய மனுப்போடலாம் அல்லது 'நீதிமன்ற தீர்ப்பு என்ன வெறும் தாள்தானே' என்றும் பேசாமல் இருக்கலாம்.

பத்ரியின் வலைப்பதிவை மேய்ந்தவுடனேயே அவருக்கு 'எக்ஸ்பார்ட்டி தீர்ப்பாக' இருக்கப் போகிறது என மடல் எழுதினேன். மனிதர் உடனே, 'இந்தியாவில் இப்படி லட்சக்கணக்கான ரூபாய்கள் அவதூறு வழக்குக்கு நஷ்ட ஈடாக வழங்கியதாக' தீர்ப்புகள் இருக்கிறதா? என்று கேட்க, முன்பு எப்போதோ இல்ல்ஸ்டிரேட்டட் வீக்லி (ஞாபகம் இருக்கிறதா?) பத்திரிக்கை மீதான நஷ்ட ஈடு தீர்ப்பு ஞாபகம் வர...'ஏகப்பட்டது இருக்கே' என்று சொல்லி விட்டாலும்...பின்னர் வலையில் தேடினால், ஏறக்குறைய எல்லோரும் எல்லோர் மீதும் அவதூறு வழக்கு தாக்கல் செய்த விபரம்தான் கிடைத்தது. தீர்ப்பான விபரம் எதுவும் இல்லை. ஆமாம், இதே மும்தாஜ் இருபது வருடம் கழித்து நீதிமன்றத்தில் வந்து சாட்சி சொல்லி....அவதூறு என வாதிட்டு அதை நீதிபதி தீர்க்கவா?

ஆனாலும் மனம் தளராத விக்ரமாதித்யனாக புத்தகங்களை மேய்ந்ததில்....கண்ணில் பட்டது எல்லாம் குற்றவியல் வழக்குகள். அது என்ன குற்றவியல் வழக்கு? ஆம், இந்திய தண்டனைச் சட்டப்படி அவதூறு செய்தல் இரண்டு வருட தண்டனைக்கேதுவான குற்றம். குற்றவியல் நீதிமன்றங்களில் தவறு செய்தவருக்கு தண்டனை மட்டுமே அளிக்க இயலும். அவர் மீது விதிக்கப்படும் அபராதத் தொகையும் பொதுவாக அரசுக்கே சென்றுவிடும். பாதிக்கப்பட்டவருக்கு அவருக்கு ஏற்பட்ட இழப்புக்கு ஈடு? அதற்காக பாதிக்கப்பட்டவர் பணமதிப்பினை நஷ்ட ஈடாக கேட்டு சிவில் வழக்கும் தொடரலாம். இதற்கு ஏதேனும் பாராளுமன்றத்தால் இயற்றப்பட்டம் சட்டம் உள்ளதா என்றால் இல்லை. ஆங்கிலத்தில் 'law of torts' என்றும் தமிழில் 'தீங்கியல் சட்டம்' என்றும் அழைக்கப்படும் சட்ட நியதிகள் இங்கிலாந்து அரசியலமைப்புச் சட்டம் போல எழுதப்படாதவை. ஒருவருக்கு மற்றவரது கவனக்குறைவான அல்லது தவறான செய்கையால் ஏற்படும் இழப்பிற்கு (damage) பணமதிப்பால் தகுந்த இழப்பீடு (damages) வழங்கப்பட வேண்டும் என்ற சட்டக் கோட்பாடு சமீப காலங்களில் மிகவும் விரைவாக வளர்ந்து, முன்னரே தீர்க்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையிலேயே புதிய வழக்குகளும் தீர்க்கப்படுகின்றன. இந்த வகையான சட்டத்தின் வளர்ச்சிக்கு அமெரிக்காவுக்கு நாம் நன்றி கூற வேண்டும். அங்கு சில சமயங்களில் நம்புதற்கரிய வகையில் வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. சரி, தீங்கியல் சட்டம் மிகவும் சுவராசியமான சட்டம். பின்னர் பார்க்கலாம். தற்போது என் கண்ணில் பட்ட நஷ்டஈட்டிற்கான அவதூறு வழக்கைப் பார்க்கலாம்.

திரு.சதுர்வேதி பத்ரிநாத் வரலாற்று அறிஞர். ஆனால் துரதிஷ்சவசமாக மூத்த இந்திய ஆட்சிப்பணி அலுவலர். அவரது வரலாற்றுப் பிரியமோ அல்லது அரசுக்கு அவர் மீதான கோபமோ, சென்னையிலுள்ள ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சிக்கான துறையின் ஆணையராக இருந்தார். 1973, செப்டம்பர் மாதம் ஏழாம் தேதி சென்னை மாநிலக் கல்லூரியிலுள்ள வரலாற்றுக் குழுமத்தில் பேச அழைக்கப்பட்டவர், சிறிது காலத்திற்கு முன்பு புதைக்கப்பட்ட காலப்பெட்டகத்தில் இருந்ததெல்லாம் வெறும் வரலாற்றுப் புரட்டு, அவை 'வரலாறுமல்ல புனைகதையுமல்ல' என்று ஒரே போடாக போட்டார்.

அரசின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஒரு அதிகாரியே இப்படிப் பேசியது அரசுக்கு பெரிய தர்மசங்கடத்தை ஏற்படுத்தி...விவகாரம் பாராளூமன்றத்திலும் வெடித்தது. புதைக்கப்பட்ட காலப்பெட்டகத்தைப் பற்றிய இந்த சந்தேகம், சர்வதேச அளவில் இந்தியாவுக்கு ஒரு அவமானம் எனக்கருதிய அரசு, பத்ரிநாத் மீது அரசு அலுவலர்கள் நடத்தை விதிகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை தொடர்ந்தது.

காலச் சுழற்சியில் ஆட்சிகள் மாறின. ஆகஸ்ட்'1977ல் தமிழக அரசு பத்ரிநாத் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்தது. ஆனால் அதற்கு முதல்நாள் இந்தியன் எக்ஸ்பிரள் நிருபர் சாஸ்திரி ராமச்சந்திரன் காலப்பெட்டக பிரச்னை பற்றி எழுதியிருந்தார். அந்தக் கட்டுரையில் 'பத்ரிநாத் அரசுப்பணியில் இருந்து கொண்டே அதனை சீர்குலைக்க முயன்றார்' என்று அரசு செய்தித் தொடர்பாளர் (spokesperson) கூறியதாக எழுதப்பட்டிருந்தது.

இதனால் மிகவும் மனவேதனையடைந்த பத்ரிநாத், 'அதனால் தான் மிகவும் மன வேதனையடைவதாகவும்...செய்தித் தொடர்பாளர் கூறிய அந்தக் கருத்து அரசின் கருத்தா' என வினவி அரசுக்கு கடிதம் எழுதினார். அதில் 'யார் அந்த அரசு செய்தித் தொடர்பாளர்' எனவும் வினவியிருந்தார். மறுநாள் அரசின் தலைமைச் செயலாளர் தனது பதில் கடிதத்தில், 'பத்ரிநாத் குறிப்பிட்ட விஷயத்தில் அவரிடம் சொல்வதற்கு அவரிடம் விபரங்கள் ஏதுமில்லை' என்று தெரிவித்தார்.

பத்ரிநாத் எக்ஸ்பிரஸ் செய்தியாளருக்கு கடிதம் எழுத, அவரோ தனது டிசம்பர்'14ம் தேதியிட்ட கடிதத்தில், தான் குறிப்பிட்ட செய்தித் தொடர்பாளர் தலைமைச் செயலாளரான கார்த்திகேயன்தான் என்று போட்டுடைத்ததோடு நில்லாமல், அவர் வேறு பல தகவல்களையும் தனது தொலைபேசி உரையாடலில் கூறியதாக' தெரிவிக்க பத்ரிநாத் வெகுண்டெழுந்தார். அடுத்த நாளே முதல்வரை நேரில் சந்தித்து தனது பிரச்னைகளை முறையிட வேண்டுமென்று கோரியும் எவ்வித பதிலும் இல்லை. எனவே 28ம் தேதி தலைமைச் செயலாளர் கார்த்திகேயன் மீது மானநஷ்ட வழக்கு தொடர வேண்டுமென்றும் அதற்கு அரசு அனுமதி வேண்டுமென்றும் கூறி வேண்டுகோள் விடுத்தார். எதிர்பார்த்தபடியே அரசு 1978' பிப்ரவரியில் 'பொதுநலத்தை' சுட்டிக்காட்டி பத்ரிநாத்தின் வேண்டுகோளை நிராகரித்தது. அரசின் முடிவை எதிர்த்து பத்ரிநாத் உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்ய, 1979' ஜனவரியில் அது தனி நீதிபதியால் நிராகரிக்கப்பட்டது. பத்ரிநாத் இரண்டு நீதிபதிகள் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் மேல் முறையீடு செய்தார். 1984' டிசம்பரில் டிவிஷன் பெஞ்ச் பத்ரிநாத்தின் மேல் முறையீடை அனுமதித்து, 'அரசினை அவருக்கு கார்த்திகேயன் மீது வழக்கு பதிவு செய்ய அனுமதிக்குமாறு வேண்டியது. அரசு விடவில்லை. உச்ச நீதிமன்றம் சென்றது. உச்ச நீதிமன்றம் அக்டோபர்' 1987ல் வழக்கை விசாரித்து, 'அடடா! கார்த்திகேயன் எக்ஸ்பிரஸ் நிரூபரிடம் பேசியதும் தனது கருத்தைக் கூறியதும் அவரது பணியின் நிமித்தமான காரியமல்ல. அவரது தனிப்பட்ட செயல். இதற்கு எதற்கு அனுமதி?' என்று கூறி வழக்கை ஏற்றுக் கொண்டது.

ஆக, பிரிலிமினரி ரவுண்ட் முடியவே பத்ரிநாத் வழக்கில் பத்து ஆண்டுகள் ஓடிக் கடந்திருந்தது. எம்ஜியாரும் உலகை விட்டு பிரிந்து கொண்டிருந்தார்...கார்த்திகேயன், பத்ரிநாத் ஆகியோரெல்லாம் தத்தமது அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றிருப்பர். பத்ரிநாத் தொடர்ந்து தனது வழக்கை (ஆரம்பித்து) நடத்தினாரா என்பது எனக்குத் தெரியவில்லை. வேறு யாருக்காவது தெரியுமா? 'காலப்பெட்டகத்தை தோண்டியெடுத்து மறுபரிசீலனை செய்யப் போகிறோம்' என்று ஜனதா ஆட்சியில் முழங்கினார்கள். அப்படியே அதுவும் என்னவாயிற்று என்று கூறினால் நலம்.

அமாவாசையையும் அப்துல்காதரையும் ஒரு பழமொழி இணைக்கும் பொழுது மும்தாஜையும் சதுர்வேதி பத்ரிநாத்தையும் ஒரு அவதூறு வழக்கு இணைக்கக் கூடாதா?

23.7.06

வயதுக்கு வரவில்லை...

1974ம் வருடம் தமிழகத்தில் இருந்து ராஜ்யசபைக்கான ஆறு இடங்களுக்கு தேர்தல் நடந்தது. எட்டு நபர்கள் போட்டியிட்டனர். தேர்ந்தெடுக்கப்படாத நபர்களில் ஒரு ஓட்டு கூட வாங்காத ஒருவர் வழக்கு தொடர்ந்தார். அதாவது ஆறு நபர்களில் ஒரு நபருக்கு முப்பது வயது பூர்த்தியாகவில்லை என்று.

வெற்றி பெற்றவர் கூறினார், 'எனது ஆரம்பப் பள்ளியிலிருந்து சட்டப்படிப்பு வரைக்குமான அனைத்து சான்றிதழ்களிலும் எனது பிறந்த தினம் 1946ம் வருடம் மே மாதம் பதினாலாம் என்று இருப்பது உண்மைதான். நானும் கூட அப்படித்தான் நினைத்து வந்தேன். ஆனல் சில காலம் முன்பு எனது கிராம மக்களோடு ஒரு பிரச்னை குறித்து விவாதித்துக் கொண்டிருக்கையில் சிலர் எனது சமுதாயம் சார்பாக நான் பாராளுமன்றம் செல்ல வேண்டும் என்று கூறினர். நான் 'விரைவில் ராஜ்யசபை தேர்தல் வருகிறது. ஆனால் எனக்கு முப்பது வயது பூர்த்தியாகவில்லையே என்று கூறினேன்'. உடனே அருகிலிருந்த என் அண்ணன், 'என்ன உளறுகிறாய். நீ பிறந்த வருடம் 1943 என்று கூறினார். அடுத்த நாள் நாங்கள் எங்களது தேவாலயத்தில் உள்ள ஞானஸ்னான பதிவேட்டினை பார்த்தால் எனக்கு 1943ம் வருடமே ஞானஸ்னானம் கொடுக்கப்பட்டதாக இருக்கிறது. பின்னர் நான் அந்த ஆதாரத்தின்படி சென்னையிலுள்ள தலைமை தேர்தல் அதிகாரியிடம் தேர்தல் வாக்காளர் பட்டியலில் எனது வயதினை மாற்றும்படி மனுச்செய்து எனது சரியான பிறந்த வருடமான 1943ம் வருடம் பதியப்பட்டது. எனவே நான் பிறந்த வருடம் 1943. எனக்கு முப்பது வயது பூர்த்தியாகி விட்டது' என்று கூறினார்.

அவரது ஊரிலுள்ள அரசு பிறப்பு-இறப்பு பதிவேட்டினை நீதிமன்ற அழைப்பாணையின் பேரில் வரவழைக்க முயன்றும் முடியவில்லை. தொலைந்து விட்டது எனபதுதான் பதில். அவர் அப்போதைய ஆளும் கட்சியை சார்ந்தவர் என்பதை கூற வேண்டியதில்லை. சம்பந்தப்பட்ட தேவாலயத்தின் பாதிரி ஞானஸ்னான பதிவேட்டுடன் வந்தார். ஆனால், கொண்டு வந்த பதிவேடோ அசல் அல்ல. கேட்டால், அசல் மிகவும் பழையதாகிவிட்டதால் அதனை புதிய பதிவேட்டில் நகலெடுத்து அசலை எரித்து விட்டதாக கூறினார். இவ்வாறு தேவாலய பதிவினை அழிப்பது இறைவிதி 777 (இது என்ன நம்பரோ?) க்கு முரணான புனிதமற்ற கொடுஞ்செயல் எனக்கூறப்பட்டது. இதற்காக அந்தப் பாதிரியாரை 'உண்மைக்கு எதிராகவும், கிறிஸ்தவத்துக்கு எதிராகவும் கீழ்மையாக நடந்து கொண்டுள்ளார்' என்று கடுமையான வார்த்தைகளால் சென்னை உயர்நீதிமன்றம் சாடியது. இது போதாதென்று, 1943ம் வருடம் அதே தேவாலயத்தில் பாதிரியாராக இருந்தவரையும் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்து, 'அவர் பிறந்து ஏழு நாட்களுக்குள் ஞானஸ்னானம் கொடுத்த ஞாபகம் இருப்பதாக' சாட்சி சொல்ல வைத்தார். நல்லவேளை தள்ளாத வயது காரணமாக அவர் நீதி மன்றத்தின் கண்டனங்களில் இருந்து தப்பித்தார். கடைசியில் பதவி பறி போனது. மனிதர் உச்ச நீதிமன்றம் சென்றார். அங்கும் தோல்விதான்....

வயது மட்டுமே அவருக்கு தகுதிக்குறைவு. மற்றபடி தனது சொல்லாட்சியாலும், பரந்த படிப்பறிவாலும் பாராளுமன்ற உறுப்பினராக தகுதி வாய்ந்த அவர் வேறு யாருமில்லை. கலைஞருக்கும், எம்ஜிருக்கும், ஏன் ஒரு காலத்தில் ஜெயலலிதாவிற்கும் பிடித்தமானவராக இருந்த 'இந்த நாள் இனிய நாள்' புகழ் வலம்புரி ஜான்தான் அப்படி பதவியிழந்தவர்....

(வேறு ஒரு வழக்கில் பத்தொன்பது வயதே நிரம்பியவர் என்று தெரிந்தாலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்ற காரணத்தாலேயே, பஞ்சாயத்து தேர்தலில் ஜெயித்து அதன் தலைவராகவும் 1970 வருடம் சேலத்தில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டது....உச்ச நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது)

21.7.06

தேவர் மகனும் பெயிலும்...

குடியரசு தினத்தை (26/01/2004) பெரும்பாலான தமிழர்களைப் போலவே சன் டிவியில் 'தேவர் மகன்' பார்த்து கொண்டாடினேன். ஏற்கனவே பார்த்த படமென்றாலும், மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் படம். முக்கியமாக, எனது எட்டு வயது மகளுக்கும் புரியக் கூடிய எளிய, சுவராசியமான திரைக்கதை என்பதால் இடையில் எங்கும் கவனம் சிதறாமல் பார்த்து முடித்தேன். மகள் பல தமிழ் வார்த்தைகளைக் கற்றுக் கொண்டதில் இரட்டிப்பு மகிழ்ச்சி!

முதல் மரியாதை பார்த்த பொழுது, 'ஆஹா சிவாஜிக்கு தேசிய விருது அளிப்பதற்கு இந்திய அரசுக்கான கடைசி வாய்ப்பு' என நினைத்தேன். இன்று தேவர் மகன் பார்க்கையில், 'அடடா, அடுத்த வாய்ப்பையும் அரசு நழுவ விட்டதே' என்று நினைத்தேன். என் கணிப்பில் தேவர் மகனின் மூலமான 'காட் பாதரில்' இதே வேடத்தில் நடித்த மார்லன் பிராண்டோவிற்கு ஆஸ்கார் விருது கிடைத்தது என நினைக்கிறேன். அமைதியாவின் பிராண்டோவின் நடிப்பிற்கு இணையான உணர்ச்சிகரமான நடிப்பு சிவாஜியின் நடிப்பு! சிறு உதாரணம் கூற வேண்டுமென்றால், ஊருக்கு புறப்படும் மகனின் காதலி காலில் விழுந்து வணங்கப் போகையில், காலை ஆட்டியபடியே உட்கார்ந்திருக்கும் சிவாஜி படீரென ஆனால் அதிகம் வெளித்தெரியாமல் காலை விலக்கியபடியே...'ம்ம்ம்ம்' என்று அதனை ஏற்றுக்கொள்வது போல ஏற்றுக் கொள்ளாத ஒரு உடல் அசைவு போதும். நஷ்டம் இந்திய அரசுக்குதான்...

படத்தின் ஒரு காட்சியில் ஏரிக்கரை வெடி வைத்து உடைக்கப்படுகிறது. பல வீடுகள் நாசம்! ஒரு குழந்தை இறந்து போகிறது!! வெடி வைத்ததில் ஒருவனைப் பிடித்து காவலரிடம் ஒப்படைக்கிறார் கமல். அவன் தான் மட்டுமே வெடி வைத்ததாக கூறுகிறான். வெடி வைக்க சொன்ன நாசர் ஒரு வக்கீலுடன் காவல் நிலையத்துக்கு வந்து பிடிபட்டவனை 'பெயிலில் (பிணையில்) எடுக்க வந்திருப்பதாக கூறுகிறார். காவலர் பெயில் தர முடியாது என்கிறார். வக்கீல், 'ஏன் நான் - பெயிலபிள்' (non bailable) என இழுக்க காவலர், 'இல்ல குற்றத்தை ஒப்புக் கொண்டான்' என்கிறார். வக்கீல் 'குற்றத்தை ஒப்புக் கொண்டாயா...போச்சு' என்கிறார்.

முதலில் நடந்தது கொலைக்குற்றம் அதுவும் வெடிப்பொருள் சம்பந்தப்பட்டது. தடாவோ பொடாவோ நிலுவையிலிருந்தால் அதற்கு கீழும் வரும். எப்படியினும் கொலைக் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டவரை காவலர் பிணையில் (bail) விட இயலாது. எந்த ஒரு வக்கீலும் இவ்வாறாக கொலைக்குற்றம் சாட்டப்பட்டவருக்கு பிணை வேண்டி காவலர் நிலையத்தை அணுக மாட்டார்கள். அடுத்து ஆயுள் தண்டனைக்கேதுவான குற்றம் இல்லாதிருப்பின் சில சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்டவரை பிணையில் விட காவலருக்கு சட்டப்படி அதிகாரமிருப்பினும் நடைமுறையில் இப்படி நிகழுவது சாத்தியமில்லை. காவலர்கள் ஏன் சிறு குற்றங்களை விசாரிக்கும் மாஜிஸ்டிரேட்டுகளே பெரிய குற்றங்கள் நிகழ்ந்திருப்பின் அதிகாரமிருப்பினும் பிணையில் விடுவதில்லை. அதற்காக அமர்வு நீதிமன்றங்களை (sessions court) அணுக வேண்டும். மிக மிகச் சிறிதான பப்ளிக் நியூசன்ஸ், போக்குவரத்து விதி மீறல்கள் போன்ற வழக்குகளில்தான் காவலர்கள் தாங்களாகவே, அதுவும் குற்றத்திற்கு தண்டனையான அபராதத் தொகையினை பிணைத் தொகையாக கட்டிய பிறகுதான் பிணையில் விடுவர். இதற்காக வக்கீல் யாரும் தேவையில்லை. பிணையில் விடுவது என்பது நடைமுறையில் நீதிமன்றங்களின் பணியே தவிர திரைப்படங்களில் காட்டப்படுவது போல காவல் நிலையத்தில் நடக்கும் நிகழ்வல்ல.

எனவே 'தேவர் மகனில்' குற்றத்தை ஒப்புக் கொண்டான் என்று காவலர் கூறும் காரணத்தை விட 'இது கொலைக்கேஸ்' என்ற காரணம் பொருத்தமாக இருக்கும். ஆனால், திரைக்கதையில் பிடிபட்டவன் 'குற்றத்தை ஒத்துக் கொண்டான்' என்று கூறப்படுவது தேவையாக இருக்கிறது. அடுத்து வளரும் வசனங்கள் அதையொட்டி அமையும். என்றாலும்...கொலைக்கேஸ் என்று காவலர் கூறுவதோடு, 'குற்றத்தையும் ஒப்புக்கொண்டான்' என்றும் கூறுவதாக அமைத்திருக்கலாம். பொதுவாக அனைத்து கொலை வழக்குகளிலும் இந்த 'குற்றத்தை ஒப்புக் கொள்தல்' உண்டு! ஆனாலும் அவர்களை பிணையில் விடுவதுமுண்டு!!

பின்னர் ஏதாவது சந்தர்ப்பத்தில் அதைப் பற்றி....அதற்குப் பதிலாக ஒரு கொசுறுத் தகவல்.

பிணையில் விடப்படுபவருக்கு இரு நபர்கள் ஜாமீன் (surety) கொடுக்க வேண்டியிருக்கும். அதாவது இத்தனை ரூபாய்க்கு ஜாமீன் என்று உத்தரவிடுவார்கள். தெரிந்தவர்கள் யாராவது கைது செய்யப்படுகையில் ஜாமீன் கொடுக்க தயங்காதீர்கள். ஏனெனில், பிணையில் விடப்பட்டவர் தப்பித்துச் சென்றால் ஜாமீன் கொடுத்தவரை பிடித்து உள்ளே போட மாட்டார்கள். அவர் ஜாமீன் கொடுத்த தொகையை அபராதமாக கட்டச் சொல்வார்கள். அவ்வளவுதான். எனவே ஜாமீன் தொகையைப் பொறுத்து ஜாமீன் கொடுக்க சம்மதிக்கலாம்.

17.7.06

அந்நியன்

இறுதியில் எனக்கும் 'அந்நியன்' திரைப்படம், அதுவும் முழுமையாகப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. படம் பார்த்து வெகுநேரமாகியும் விக்ரமின் பலப்பரிமாண நடிப்பின் தாக்கம் மனதை விட்டு அகலவில்லை. பொதுவாக தமிழ் திரைப்படங்கள், 'படம் பார்ப்பவர்கள் எங்கே நாலு விஷயம் தெரிந்து கொண்டால் அடுத்தப் படத்துக்கு வராமல் போய் விடுவார்களோ' என்ற பயத்தின் அடிப்படையிலேயே உருவாக்கப்படுகின்றன என்று நான் நம்பினாலும், அந்நியனும் அதற்கு விதிவிலக்கல்ல என்பது வியப்பாக இருந்தது. கதை எழுதியதோ அல்லது வசனமெழுதியதோ எழுத்தாளர் சுஜாதாவாம்!

படத்தின் தொடக்கத்தில் ஒரு குடித்தனத்தில் வாடகைக்கு குடியிருக்கும் ஒரு பெண்ணுக்காக வக்கீலான விக்ரம் குடித்தன உரிமையாளர் மீது வழக்குத் தொடருகிறார். அதாவது உரிமையாளர் அதிக வாடகை பெறுவதாகக் குற்றச்சாட்டு. அதிகமாகப் பெறும் வாடகைக்கான அத்தாட்சியாக ஒரு துண்டுச்சீட்டினை விக்ரம் நீதிபதி முன்பு வைக்க, அது நிராகரிக்கப்பட்டு வழக்கும் தள்ளுபடியாகிறது. வாடகைதாரப் பெண்மணியும் 'என் விதி' என்று பரிதாபமாகச் செல்கிறார்.

'வாடகைக் கட்டுப்பாடு' என்றெல்லாம் பிரத்யேக வார்த்தைகளை உபயோகிக்கும் அளவுக்கு வசனத்தில் கவனம் செலுத்திய இயக்குநர் சற்று சட்டப்பிரிவுகள் மற்றும் சட்டமுறைகளை ஆராய்ந்திருக்கலாம். திரைப்படத்தில் வாடகைதாரரான பெண்மணி ரூ.600 வாடகை எனக்கூற உரிமையாளர் 'இல்லை ரூ.300தான்' எனக் கூறுகிறார். பெண்மணி செய்யக் கூடியது என்ன? நல்லதாகப் போயிற்று என பேசாமல் அடுத்த மாதம் முதல் ரூ.300 கொடுத்தாலே போதுமே? உரிமையாளர் வாங்க மறுத்தால் பண அஞ்சலில் அனுப்பலாம். இல்லை நீதிமன்றத்தில் மனுச்செய்து வாடகையினை அங்கேயே வைப்பீடு (deposit) செய்யலாம். ஏன் உரிமையாளர் ரூ.600 வாங்குகிறார் என்று நிரூபிக்க மெனக்கெட வேண்டும்? திரைப்பட விக்ரம் ஒரு மோசமான வக்கீலாக இருக்க வேண்டும்.

திரைப்படத்தின் இறுதியில் வரும் நீதிமன்ற அபத்தக் காட்சியினை நான் குறை கூறவில்லை. ஏனெனில் பார்க்கும் எவருக்கும் இது தமிழ் திரைப்படங்களுக்கேயுரிய அபத்தம் எனப்புரியும். ஆனால் ஏதோ புத்திசாலித்தனமாக அமைக்கப்பட்ட காட்சி போன்ற ஒரு நிகழ்வு வாடகைதாரர்- உரிமையாளர் இடையேயான உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றி தவறான செய்தியினை படம் பார்க்கும் மக்களிடம் சென்று சேர்க்கிறது என்பதே எனது ஆதங்கம். ஒரு கட்டிடத்தின் வாடகை அதிகமானது என்று வாடகைதாரர் நினைக்கையிலோ அல்லது குறைவானது என்று உரிமையாளர் நினைக்கையிலோ, கட்டிடத்தின் 'நியாய வாடகை'யினை (fair rent) நிர்ணயிக்க வேண்டி நீதிமன்றத்தில் மனுச்செய்யலாம். விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றம் நிர்ணயிக்கும் வாடகையே, மனு தாக்கல் செய்த தேதியிலிருந்து வாடகைதாரர் கொடுக்க வேண்டிய வாடகையாகும். வாடகைதாரர் உரிமையாளர் பிரச்சினைகளில் பொதுவாக, உரிமையாளரே அடித்து துவைக்கப்படுபவராக (person at the receiving end) இருப்பதால் எனது அனுபவத்தில் உரிமையாளரே நியாய வாடகை மனு தாக்கல் செய்து வாடகையை உயர்த்திப் பெறுவதைப் பார்த்திருக்கிறேன். அதுவும் சென்னையில் பல சமயங்களில் நீதிமன்றம் நிர்ணயிக்கும் வாடகை உண்மையில் நிலவும் வாடகையினை (Market Rent) விடவும் அதிகம். ஏனெனில் குடியிருப்பு தவிர மற்ற காரணங்களுக்கான வாடகையினைப் பொறுத்தவரை நியாய வாடகை என்பது வருடத்திற்கு கட்டிடத்தின் சந்தை மதிப்பில் 9%. கட்டிட வயதினைப் பொறுத்த கழிவுகள் இருப்பினும் நியாய வாடகை சந்தை வாடகையினை மீறுவதுண்டு.

இறுதியில் கட்டிட வாடகை ஒப்பந்தங்கள் எழுத்தில் இருக்க வேண்டிய அவசியமில்லை. வாய்மொழியாகவும் இருக்கலாம். எனவே துண்டுச் சீட்டில் வாடகையினை குறித்துக் கொடுப்பது கூட ஆவணமாகலாம். படத்தில் உருவாக்கியுள்ளது போல அவ்வளவு எளிதில் நிராகரிக்க இயலாது.

தமிழ் திரைப்பட இயக்குநர்கள் யாருமே கொஞ்சமும் மூளையைக் கசக்க முன்வருவதில்லை. மூன்று ஸாங் இரண்டு ஃபைட்டுகளை எப்படி எப்படி எங்கெங்கு எடுக்க வேண்டும் என்று மட்டுமே சிந்திக்க முன்வருகிறார்களேயொழிய ஒரு பெண்மணி எப்படி வஞ்சிக்கப்பட்டும் நீதி கிடைக்காமல் தவிக்கிறாள் எனபதைக் காட்டும், சில நிமிடங்களே வரும் ஒரு சிறு காட்சியினை எப்படி புத்திசாலித்தனமாக அமைக்கலாம் எனச் சிந்திக்க முன்வருவதில்லை. ஜேம்ஸ்பாண்ட் திரைப்படங்களில் பாண்ட் வில்லனிடம் இருந்து தப்பிக்கும் ஒவ்வொரு காட்சியிலும், நடைமுறையில் இயலாததாயிருப்பினும் ரசிக்கத்தகுந்த வகையில் அவற்றில் ஒரு புத்திசாலித்தனம் இருக்கும். இங்கு ஒரு மண்ணும் இருக்காது... தப்பித் தவறி இருந்து விட்டால் அது எங்கோயிருந்து சுட்ட காட்சியாக இருக்கும். 'பிரேக் வயர் முழுவதும் உறுதியாக இருந்து எங்காவது ஒரு இடத்தில் பலகீனமாக இருந்தாலும் அறுந்து போகும்... தரமில்லாத பொருளை ஏண்டா தயாரிச்சேன்னு உறுமுற அந்நியன், தமிழ்த் திரை இயக்குநர்களைப் பார்த்து உறுமினால் நல்லது.

அது சரி, திருட்டுக் குறுந்தகட்டில் அந்நியன் பார்த்தால் கருட புராணத்தில் என்ன தண்டனை?


'அந்நியனில்' ஒரு காட்சி...
டாக்டர் நாசர்: அவருக்கு பிடித்துள்ளது மல்டிபிள் பெர்ஸனாலிட்டி டிஸாடர் என்கிற வியாதி...
மருத்துவ மாணவி சதா: அப்படீன்னா?

25.09.05

14.7.06

துணை


மூச்சுக்கு புகையை
காற்றாய் உள்ளிழுக்கும்
நகரத்து வானில்
நட்சத்திரங்கள் ஏது?

ஆனாலும் தப்பித்த
ஒற்றை நட்சத்திரமொன்று
சிலசமயம் கண்சிமிட்டும்

அனைவரும் தூங்கிப்போன
பின்னிரவு வேளையிலும்
ஜன்னல் வழியே
பேசப்பார்க்கும்

பிளசரு காரு எப்போதோ
வந்து போகும்
கிராமத்து வானத்தில்
கண்கொள்ளாக் காட்சியாய்
கண்சிமிட்டிய நட்சத்திரங்கள்
ஆயிரமாயிரம்!

ஆனாலும் எனக்கு
தூக்கம் இழந்த
இவ்விருட்டு வேளையிலும்
துணைக்கு நிற்கும்
ஒரு நட்சத்திரம் போதும்!!

11.7.06

யாரோ?

(மும்பையில் இன்று நடந்த பயங்கரம் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நான் எழுதிய கதையை நினைவுபடுத்தியது. மீண்டும் படிக்கையில் இன்றைய சம்பவம் கதைக்கு அருகில் வருகிறது. எனது அலுவலக நண்பர்களை தொடர்பு கொள்ள இதுவரை இயலவில்லை)

'தூம்...'

அலுவலகத்தின் கண்ணாடிக் கதவினை திறந்து கொண்டு வெளியேறியவனை அப்படியே உறைய வைத்தது, எங்கோ தொலைவில் இருந்து வந்த அந்தச் சத்தம். அலுவலகம் இருந்த முதல் மாடியில் இருந்து நேராக சாலைக்குள் இறங்கும் படிக்கட்டில் வைத்த கால் படியோடு ஒட்டிக் கொண்டது போல. சாலையிலும் அனைவரும் அங்கங்கே முகத்தில் சின்ன திகைப்பு காட்டி நின்றிருந்தார்கள். சில விநாடிகள்தான்....ஒன்றும் நிகழ்ந்து விடவில்லை என்ற நிம்மதி தந்த தைரியத்தில் முகமறியா நபர்கள் கூட சின்ன வெட்கத்தை புன்னகையாக பறிமாறிக் கொள்ள, சத்தம் வந்த திசையினை அனிச்சையாக பார்த்தபடியே படியிறங்கினேன்.

வழக்கமாகவே அலுவலக நேரம் முடிந்து தாமதமாகத்தான் வீட்டுக்கு கிளம்புவேன். வீடு அலுவலகத்துக்கு அருகிலேயே இருப்பது ஒரு காரணம். இன்று அருகில் நடக்கும் கைத்தறிக் கண்காட்சிக்கு போக வேண்டும் என்று மாதவி சீக்கிரமாக வீட்டுக்கு வரச் சொல்லியிருந்ததால் அலுவலகம் முடிந்து பதினைந்து நிமிடங்களுக்கெல்லாம் கிளம்பி விட்டேன்.

சாலையில் இரண்டு மூன்று பேராக பலர் கூடிப் பேசிக் கொண்டிருந்தார்கள். 'ஏதாவது பெரிய வெடியாக இருக்கும். எதுவானாலும் நாம் இங்கு இருந்து பயன் ஒன்றும் இல்லை' வலிய ஒரு இயல்புத்தன்மையை வரவழைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளை உதைத்தேன். ஆனாலும், 'பம்பாயில் எப்போதும் எங்காவது கேட்கும் வெடிச்சத்தம் போல இல்லை...இது வித்தியாசமாக இருக்கிறது' என்று உள்மனது கூறியது. இத்தனைக்கும் செவிப்பறை கிழியும்படியான பெரிய சத்தம் இல்லை. ஆனால், உடல் தசைகளைக் கடந்து இதயம் வரை ஒரு படபடப்பை இரு விநாடிகள் ஏற்படுத்தியது. இரண்டு வருடத்துக்கு முன்பு வந்த நில அதிர்வு கூட இப்படித்தான். குமிழ்த்து வைக்கப்பட்ட ஜெல்லியை லேசாக விரலால் குத்தினால் டுமே, அது மாதிரி சின்னதாக இரண்டு ஆட்டு.... ஆனால் அழுத்தமாக, 'இது வேறடா!' என்பது போல. தறிகெட்டுச் சுற்றும் மோசமான ராட்டினத்தின் ஆட்டம் கூட அப்படி என்னை பயமுறுத்தியிருக்காது, சில விநாடிகளில் மீண்டும் அது போல சின்ன அதிர்வுதான். என்னவென்று புரிந்து கொள்ளாத உணர்வில் முதலில் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்ட மாதவியும் நானும் இந்த இரண்டாவது அதிர்வில், அப்படியே போட்டது போட்டபடி தூங்கிக் கொண்டிருந்த மித்திரனை தூக்கிக் கொண்டு வெளியே ஓடினோம். இப்போது கூட அதே மாதிரி ஒரு உணர்வு. இல்லையெனில் இரண்டு வருடத்துக்கு முன்பு நடந்த நில அதிர்வை ஞாபகப்படுத்தியிருக்காதே!

'அட! சொன்னமாதிரி வந்திட்டீங்களே' மாதவிக்கு ஆச்சரியம் நினைத்தது நடக்கப் போகிறதே என்று. அவள் கவலை அவளுக்கு. இந்தக் கைத்தறி, கிராமியக் கலைப் பொருட்கள் என்றால் போதும். பொறுக்க முடியாது, உடனே போய் விட வேண்டும். அதற்காக கண்காட்சியில் வாங்கிக் குமித்து விடுவாள் என்று அர்த்தமல்ல. சும்மா! வலம் வர வேண்டும், புதிதாக வந்திருக்கும் பொருள்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அவ்வளவுதான் அவள் ஆசை. நானாக அவள் விருப்பத்தை புரிந்து கொண்டு, 'இதை வாங்கலாமா?' என்றால்தான் வாங்குவாள்.

மாதவியும் மித்திரனும் ஏற்கனவே தயாராக இருந்தனர். நான் முகம் கழுவி, உடை மாற்றிக் கொண்டு இருக்கையில் சாலையில் சில சைரன் சத்தங்கள். எனது வீட்டை ஒட்டிய சாலையில் சைரன் சத்தம் ஒன்றும் புதிதல்ல. அருகே பல மருத்துவமனைகள் இருக்கின்றன. ஆனாலும் அருகிலுள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு எதாவது விழாவை சாக்கு காட்டி வரும் வி.ஐ.பிகளின் சைரன் ஒலிதான் அடிக்கடி நிகழும்.. மாதவி யாரிடமோ கதவைத் திறந்து பேசிக் கொண்டிருப்பது கேட்டது.

'உங்களுக்குத் தெரியுமா? பாந்த்ரா ஸ்டேஷன்ல பாம் வெடிச்சுருச்சாம். நிறைய பேர் செத்துப் போயிட்டாங்களாம்' என்றவாறு உள்ளே ஓடி வந்தாள்.

"என்ன....பாமா, நான் வரும் போதே சத்தம் கேட்டுது. அப்பவே நினைச்சேன், பாம்தான்னு....யார் சொன்னா" சட்டையை கால்சாராய்க்குள் வலதுகையால் அமுக்கியவாறே முன்னறைக்கு வந்தேன்.

"அனிதா அம்மா சொன்னாங்க. அவங்க வெளியில ஆட்டோல ஏறிக்கிட்டு இருக்கும் போது உள்ளே வெடிச்சதாம். கையி காலுன்னு எல்லாம் வெளியேவே வந்து விழுந்துச்சாம். அலறியடிச்சுக்கிட்டு வந்திருக்காங்க"

அப்படியே சோபாவில் சரிந்தேன். 'கடைசியில இங்கேயே வச்சுட்டானுங்களா'. இப்படி ஒருநாள் நடக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டுதான் இருந்தேன். போன மாதம்தான் முலுண்ட்ல வெடிச்சது. அதுக்கு முன்னால சென்ட்ரலில். அலுவலக வேலையாக 'சர்ச் கேட்' போகும் போது கூட நினைப்பேன், 'இவ்வளவு கூட்டமா இருக்கே. இங்க ஒரு நாள் வைக்கப் போறானுங்கன்னு'. பாந்த்ராவில வெடிக்கும் என்று நினைக்கவில்லை. ஒரிரண்டு முறை ஏதோ தாதாக்கள் துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்கள். அவ்வளவுதான்.

அதற்குள் சாலையில் சைரன் ஓலி அதிகமாக கேட்கத் தொடங்கி விட்டது. மாதவி டி.வியில் ஒரு நாளும் பார்க்காத இன்கேபிள் சானலை தேடிக் கொண்டு இருந்தாள். சாலையில் ஆட்டோக்கள் கார்கள் என எல்லாமே விரைவாக போய்க்கொண்டிருப்பது போல தோன்றியது. 'அடிபட்டவர்களை எல்லாம் இங்கே பாபா ஹாஸ்பிட்டலுக்குத்தானே கொண்டு வருவார்கள். எங்க வெடிச்சுருக்கும். ஸ்டேஷன்லயா இல்லை ட்ரெயின்லயா?'

சடாரென மூளைக்குள் பொறி தட்டியது. 'வெடிச்சத்தம் கேட்ட போது ஆறு மணி அல்லது ஐந்து ஐம்பது இருக்குமே...... நம்ம மக்கள்ல்லாம் அப்பதானே ஸ்டேஷன்ல இருந்திருக்கணும்' எனது அலுவலகத்திலிருந்து ஒரு பத்து பதினைந்து நிமிட நடையில் ஸ்டேஷன் போய் விடலாம். ஐந்தரைக்கு அனைவரும் பெட்டியை மூடிவிடுவார்கள். அதுவும் நாயர் இன்னும் மோசம். அலுவலக நேரம் முடிய பதினைந்து நிமிடத்துக்கு முன்னரே கம்பியூட்டரை மூடி விட்டு பாத்ரூமுக்குள் நுழைந்து விடுவார். அலுவலக நேரத்துக்கு மேலாக ஒரு நிமிடம் கூட அலுவலகத்துக்குள் தங்கக் கூடாது என்பது அவரது கொள்கை. மத்தியானம் கூட சாப்பிட்டு முடித்ததும், மழையானாலும் சரி வெயிலானாலும் சரி வெளியே எங்காவது சுற்றி விட்டு சரியாக இரண்டு மணிக்குதான் மீண்டும் உள்ளே நுழைவார். 'நாயர் தப்பித்து இருப்பார். ஆனால் மற்றவர்கள்.....கடவுளே'

"மாதவி, அந்த மொபைலை எடு" என்று கத்தியவாறே நானே எழுந்து அவளுக்கு முன்னால் சென்று எனது ஃபோனை எடுத்தேன்.

"எங்க ஸ்டாஃப் எல்லாரும் அப்ப ஸ்டேஷன்ல இருந்துப்பாங்கம்மா" என்றவாறே நடுங்கும் கைகளால் பொத்தான்களை அமுக்கினேன்.

விட்டலிடம் மொபைல் கிடையாது. சோல்கரிடம் இருக்கு. இரண்டு பேரும் எனது டிபார்ட்மெண்ட். விட்டல் இந்தப் பக்கம் கோரேகான் போகணும். சோல்கர் தாணா போகணும். ஆனால், இரண்டு பேரும் சேர்ந்துதான் போனார்கள். சோல்கரின் பெயரைத் தேடி அழுத்தினேன். அடுத்த பக்கம் மணியடிக்கும் சத்தம் கேட்டதில் சின்ன நிம்மதி.

"ஹலோ"

"சோல்கர். சூர்யா....எங்கே இருக்கிறாய்" சோல்கருக்கு ஆங்கிலம் சரியாக வராது. ஹிந்தி அல்லது மராத்திதான். எனக்கு இரண்டும் தடுமாற்றம். எனினும் நாங்கள் இருவரும் சமாளித்து விடுவோம்.

தாணா வண்டியில். ஏன்? என்ன விஷயம்?"

"பாந்த்ரா ஸ்டேஷனில் பாம் வெடிச்சது தெரியுமா?"

"தெரியாதே. எப்போது?"

"ஆறு மணி இருக்கும். சரி விட்டல் போனது தெரியுமா?"

"நாங்கள் ஸ்டேஷனுக்குள் போகும் போதே விட்டலுக்கு ரயில் வந்து விட்டது. அவர் ஏறி இருப்பார்"

"ஓ.கே. நான் விட்டல் வீட்டுக்கு ஃபோன் செய்கிறேன்" என்றவாறு தொடர்பை துண்டித்தேன். அதிகமாக பேச சோல்கரிடம் எதுவும் இல்லை.

"சோல்கர், விட்டல் எல்லாம் போய்ட்டாங்களாம்" என்று எதுவும் பேசாமல் எனது முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்த மாதவியிடம் சொல்லியபடியே விட்டலில் வீட்டை தொடர்பு கொண்டேன்.

"ஹலோ! சூர்யா பேசுகிறேன். விட்டல் இருக்கிறாரா"

"இருங்க இப்பதான் வந்தார். கூப்பிடுகிறேன்" அவரது மனைவியாக இருக்க வேண்டும். நிம்மதியானது எனக்கு.

"விட்டலும் வீட்டுக்கு போய்விட்டார்" என்று மாதவிடம் கூறிக் கொண்டிருக்கும் போதே விட்டல் வந்து விட்டார்.

"விட்டல் தெரியுமா? இங்க பாந்த்ரா ஸ்டேஷன்ல ஒரு பாம் ப்ளாஸ்ட். நிறைய பேர் செத்துட்டதா சொல்றாங்க"

"அப்படியா, ரேஷ்மா டிவியை போடு" என்றவாறு விட்டல் தொடர்ந்தார், "எப்போ இப்பவா?"

"இல்லை. நீங்க அப்பதான் போயிருக்கணும். அதான் பயமாகி விட்டது. எங்கே நீங்க யாரும் மாட்டிக் கொண்டீர்களோ என்று" சிரித்தேன், கலவரத்தின் தீவீரத்தை தணிப்பதாக எண்ணி.

"சோல்கரும் ஓ.கே. இப்பதான் ஃபோன் செய்தேன்"

"தப்பிச்சுட்டானா! இவனுங்க எல்லாம் மாட்ட மாட்டேன் என்கிறார்களே" விட்டல் பெரிதாகச் சிரித்தார். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சோல்கரைப் பற்றி ஏதாவது சொல்லாமல் இருக்க மாட்டார். நானும் தயக்கத்துடன் சிரித்தேன்.

"நான், சோல்கர்...ராகவன் மூன்று பேரும்தான் வந்து கொண்டிருந்தோம். ராகவன், 'டி' வார்ட் பவாருடன் பேசிக் கொண்டு இருந்தான். நான் உடனே டிரெயின் ஏறி விட்டேன்"

"சரி, விட்டல் நாளை பார்க்கலாம்" போனை வைத்து விட்டு மாதவியைப் பார்த்தேன். அவள் முகத்தில் உற்சாகம் இல்லை. இன்று வெளியே செல்வது அவ்வளவுதான் என்று நினைத்திருக்கலாம். வெளியே சைரன்களின் சத்தம் இப்போது அதிகமாக கேட்டது.

"ராகவனுக்கும் போன் பண்ணுங்க" மாதவி சொன்னதும்தான் 'ராகவனை மறந்து விட்டேனே' என்று தோன்றியது. சொல்லப் போனால் ராகவன்தான் அலுவலகத்தில் எனது நண்பன். இன்றும் அவன் என்னை 'சார்' என்று கூப்பிட்டாலும் தமிழ் தெரிந்தவன் என்ற முறையில் ஏற்பட்ட அறிமுகம் பின்னாளில் என்னுடன் மிகவும் நெருக்கமாகி விட்டான். என் பிரச்னைகளைப் பற்றி அதிகம் அவனிடன் பேசுவதில்லையென்றாலும், அவனுடைய அனைத்துப் பிரச்னைகளுக்கும் நான்தான் வடிகால். என்னை விட வயதில் குறைந்தவன் மற்றும் அலுவலகத்தில் எனது மேலான தகுதி போன்றவை முழுமையான வகையில் நான் அவனிடம் பழகாகதற்கு காரணமாக இருக்கலாம்.

ராகவன் இருப்பது பம்பாய்க்கு வெளியே மீரா ரோட்டில். காத்தலீனை காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டு இருவரது வீட்டின் ஆதரவும் இல்லாமல், பம்பாய்க்குள் வீடு வாடகைக்கு பிடித்து குடியிருப்பது சாத்தியமல்ல. ராகவன் வீட்டில் ஃபோன் இல்லை. ஆனாலும் அலுவலகத்தில் கொடுத்த மொபைல் இருக்கிறது. ராகவன் பெயரைக் கண்டுபிடித்து அழுத்தினேன்.

"இந்த வாடிக்கையாளர் தனது மொபைலை 'சுவிட்ச் ஆஃப்' செய்துள்ளார் அல்லது அவர் தொடர்பு கொள்ளும் தூரத்தில் இல்லை" என்ற கொஞ்சும் ஆனாலும் எரிச்சலூட்டும் பெண் குரல் ஒலித்தது. நான் மொபைலை வைத்து விட்டு யோசனையில் ஆழ்ந்தேன்.

"என்ன கிடைக்கவில்லையா?" மாதவி கையில் காப்பி டம்ளருடன் வந்தாள்.

"ஃபோனை சுவிட்ச் ஃப் செய்திருக்கிறான்"

மாதவி காப்பிக் கோப்பையை கையில் கொடுத்தபடியே, "காத்தலீன் போன மாதம் அவங்க பக்கத்து வீட்டு நம்பரைக் கொடுத்தாள். இருங்க பார்க்கிறேன்" என்றபடியே தனது டைரியை தேடி எடுத்துப் புரட்டினாள். ராகவனுக்கு இரண்டு மாதம் முன்புதான் குழந்தை பிறந்தது. அப்போது மாதவிதான் கூட இருந்து எல்லா உதவியும் செய்து வந்தாள்.

"இங்க இருக்கு" என்றபடியே ஒரு கையில் டைரியை பிடித்துக்கொண்டு மறுகையால் நம்பரை டயல் செய்தாள். தோள்மீது தொலைபேசி ரிசீவர்.

"ஹலோ நான் காத்தலீனின் தோழி பேசுகிறேன். காத்தலீனைக் கூப்பிட முடியுமா?"

என் பக்கம் திரும்பி, "இங்கேதான் இருக்கிறாளாம்" என்று கிசுகிசுத்தாள்.

"இரு இரு நான் பேசுகிறேன்" பாய்ந்து ரிசீவரை வாங்கிக் கொண்டேன். மாதவி ஏதாவது சொல்லி அவளைக் கலவரப்படுத்திவாளோ என்று பயந்தேன். காத்தலீனின் 'ஹலோ' கேட்டது.

"காத்தி, நான் சூர்யா. ராகவன் இருக்கிறானா?"

"இன்னும் வரவில்லையே. என்ன விஷயம்?"

"ஒன்றும் இல்லை. அவன் மொபைல் ஆஃபாக இருக்கிறது. அதனால் வீட்டுக்கு வந்திருப்பானோ என்று நினைத்தேன்"

"ராகவன் வருகிற நேரம்தான். நான் கூட கொஞ்ச நேரம் முன்பு மொபைலில் கூப்பிட்டேன். ஹலோ என்று அவர் குரல் கேட்டது. உடனே ஏதோ சத்தம் கேட்ட மாதிரி இருந்தது. பின்னர் கட் கிவிட்டது. அதற்குப்பிறகு தொடர்பு கொள்ளவே முடியவில்லை" எனக்கு ஒரு நிமிடம் இதயம் நின்றது போல இருந்தது.

"எத்தனை மணிக்கு பேசினாய் என்று தெரியுமா?"

"ஆறு மணிக்கு பத்து நிமிடம் இருக்கும். அப்போ ஆபீஸ்ல இருந்தாரா?" எனக்கு என்ன பதில் சொல்வது என்று தோன்றவில்லை.

"தெரியவில்லை. ஓ.கே. அவன் வந்தவுடன் எனக்கு ஃபோன் செய். நான் வீட்டில்தான் இருக்கிறேன்" என்றபடி ஃபோனை வைத்தேன்.

மீண்டும் காபி கோப்பையை கையிலெடுத்துக் கொண்டு எதுவும் பேசாமல் நான் சோபாவில் அமரும் வரை எதுவும் பேசாமல் மாதவி என்னையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.

"என்னவாம்?"

"அவ சொல்றதைப் பாத்தா பயமா இருக்கு. பாம் வெடிச்ச அதே சமயம் அவனை மொபைல்ல கூப்பிட்டுருக்கா! ஆனா எதோ சத்தம் கேட்டு ஃபோன் கட்டாயிடுச்சாம்"

"ஹா! உடனே நீங்க கற்பனை பண்ண ஆரம்பிச்சுருவீங்களே. எங்கேயாவது டிரெயினை நிப்பாட்டியிருப்பாங்க. கொஞ்ச நேரம் கழித்து ஃபோன் பண்ணுங்க" மாதவி எப்போது நம்பிக்கையாகத்தான் பேசுவாள்.

மாதவி சொன்னது சரிதான். சில நிமிட நேரத்திலேயே 'ராகவன் உடல் சிதறி கிடப்பது போலவும், காதலீனின் அம்மா அவளை தன்னுடன் சேர்த்துக் கொள்வது போலவும், மீண்டும் காதலீன் வேலைக்கு வருவதைப் போலவும், ராகவன் கைகளை இழ்ந்து செயற்கை கை மாட்டித் திரிவதைப் போலவும் நூற்றுக் கணக்கான 'பிளாஷ்' அடித்து மறைந்தன. 'எதாவது நடக்கப் போகும் ஒரு விஷயத்தை இப்படி படமாக கற்பனை செய்து விட்டால் அது நடக்காது' என்பது அறுத்து தூர எறிய வேண்டும் என்று பலமுறை நினைத்தாலும் சிறுவயது முதலே என்னைத் தொடர்ந்து வரும் ஒரு மூடநம்பிக்கை. வேறு யாருக்கும் இப்படி ஒரு நம்பிக்கை இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள ஆசைதான் என்றாலும் கேட்க வெட்கப்பட்டு எனக்குள்ளேயே விருட்சமாக வளர்த்து வைத்த பழக்கம். ராகவனுக்கு ஏதாவது மோசமாக நடந்ததற்க்கான கஷ்டத்தை இப்போதே அனுபவத்து விட்டால் அப்படி நிஜத்தில் நிகழாது. நம்புகிறேன்.

'ராகவனுக்கு ஏதும் நிகழ்ந்து விடக்கூடாது. ராகவனுக்காக இல்லாவிட்டாலும், இப்போதுதான் பிறந்த அவனது குழந்தைக்காக...முக்கியமாக அவனை நம்பி வீட்டை விட்டு வந்த காதலீனுக்காக, குழந்தைக்காக வேலையை விட்ட அவளது துணிச்சலுக்காக. பெரிய அடிகிடி பட்டிருந்தால் என்ன ஆகும். மெடிக்கல் இன்ஸ¤ரன்ஸ் எதுவும் எடுத்திருக்கிறானா? அரசாங்கம் ஏதாவது உதவி தருமா? இல்லை ஒன்றும் கிடைக்காதா? அலுவலகத்தில் எவ்வளவு தருவார்கள் என்பது தெரியாது. பெரிய பாதுகாப்பு எல்லாம் கிடையாது. கம்பெனி நிர்வாகத்தின் தயவில்தான் எல்லாம் இருக்கிறது. செத்துகித்து போனால் காதலீனை வேலையில் சேர்த்துக் கொள்வார்கள்...இல்லாவிட்டாலும் சேர்த்துக் கொள்வார்கள். காதலீன் அம்மா என்ன சொல்வார்கள். என்னைத்தான் குறை சொல்வார்கள். ராகவனுக்கு நான்தான் எல்லாம் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்'

***


"என்ன தூங்கிட்டீங்களா? நியூஸ்ல போடுறாங்க பாருங்க....ராகவனுக்கு ஃபோன் பண்ணுங்க" மாதவி தோளைப் போட்டு குலுக்கினாள். ஆச்சர்யமாக இருந்தது, அரைமணி நேரம் கடந்திருந்தது. தூங்கிவிட்டேனா!

மொபைலில் மீண்டும் அதே தகவல். 'ராகவன் வீட்டு பக்கத்து வீட்டுக்கு ஃபோன் செய்யலாமா?' ஆனால் கொஞ்சம் தயக்கமாக இருந்தது. 'அடிக்கடி ஃபோன் செய்தால் எதுவும் தவறாக எடுத்துக் கொள்வார்களா?' இப்படியான தர்மசங்கட நேரங்களில் பொறுப்பினை மாதவியிடம் தள்ளி விடுவேன். கையில் மொபைலுடன் மாதவியை திரும்பிப் பார்க்க...டெலிபோன் மணி அடித்தது.

"சூர்யா...காதலீன் பேசுகிறேன். ராகவன் எங்கே? இன்னும் வீட்டுக்கு வரவில்லையே"

"இல்லையே எங்காவது போயிருக்கலாம்" எந்தவித கலவரத்தையும் குரலில் காண்பிக்கவில்லை.

"உங்களுக்குத் தெரியுமா? பாந்த்ரா ஸ்டேஷன்ல பாம் வெடிச்சுருக்காம். இவர் வருகிற நேரம். அதுவும் அவரது மொபைல் கூட அப்போதுதான் ஆஃப் னது. எனக்கு ரொம்பவும் பயமாக இருக்கிறது" படபட என்று பேசிக் கொண்டே இருந்தாள். அழவில்லை. கோவா கிறிஸ்டியன். தைரியமானவள். நம்ம பக்கத்து பெண்கள் போல எளிதில் அவர்கள் அழுவதுமில்லை.

"காதலீன், நீ குழந்தையை எடுத்துக் கொண்டு இங்கே வரமுடியுமா?" அவள் பேசிக் கொண்டே போனதில் மனதில் தோன்றியது வார்த்தைகளாக வெளிவந்தாலும், சில விநாடி அமைதிக்குப் பிறகு "ஏன்?" என்று ஒற்றை வார்த்தையில் காதலீன் கேட்டு நிறுத்திய கேள்வியில் ஆடிப்போய் விட்டேன்.

"இல்லை. இன்று இரவு இங்கு தங்கி நாளை போகலாமே? நாளைக்கு ஆபீஸ் விடுமுறை வேறு. ராகவன் வந்தவுடன் இங்கு வரச்சொல்லிவிட்டு வா. நானும் ராகவன் மொபைலுக்கு ஒரு எஸ்எம்எஸ் கொடுத்து வைக்கிறேன்"

"எனக்கும் இனிமேல் இங்கு இருக்க முடியாது. அவர் அதற்குள் தொடர்பு கொண்டால், அங்கே வரச்சொல்லுங்கள். மாதவிக்குதான் அதிக சிரமம்"

"அதெல்லாம் ஒன்றும் இல்லை. அவள்தான் உங்களை வரச்சொல்லிக் கொண்டு இருந்தாள். மித்திரனுக்கும் பாப்பாவுடன் விளையாட வேண்டுமாம். டாக்ஸியில் வந்து விடு. ரிக்க்ஷா வேண்டாம். எதுவும் பெரிதாக எடுக்க வேண்டும். உடனே வா"

'சரி' என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டாள். நான் மீண்டும் சோபாவில் சரிந்தேன்.

'காதலீனை ஏன் வரச் சொன்னேன்? அவள் எதுவும் பெரிதாக பயந்து விடக்கூடாது' மனதில் தோன்றியது. அதன் விபரீதம் புரியும் முன்னர் வார்த்தைகளாக வெளிவந்து விட்டது. 'சரி அவள் வருவதும் நல்லதுதான். எதையும் இப்போது எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. முன்பு இப்படித்தான் எனது நண்பன் ஒருவன் ஒரு விபத்தில் அடிபட்டு அரசு மருத்துவமனையில் தான் யார் என்று கூட சொல்ல இயலாத நிலையில் தகுந்த சிகிச்சையின்றி மரித்துப் போனான். அரசாங்க மருத்துவமனைகளில் நாம் சென்று பணத்தை வெட்டாத வகையில் எதுவும் நடக்காது. மாதவி எதுவும் பேசாமல் என்னையும் டி.வியையும் மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருந்தாள்.

"காதலீன் இங்கு வருகிறாள். நான் வேண்டுமானால் கொஞ்சம் வெளியே போய் வருகிறேன்" ஸ்டேஷன் வரை என்று வாயில் வந்த வார்த்தையை அடக்கிக் கொண்டேன்.

மாதவி வீட்டில் இருந்து நான் புலம்பிக் கொண்டிருப்பதை விட வெளியில் சென்றால் நல்லது என்று நினைத்திருக்கலாம். ஒன்றும் சொல்லவில்லை.

***

வீட்டிலிருந்து ஸ்டேஷனுக்கு நடந்தும் போகலாம். சாலையில் அதிகமான போக்குவரத்து இல்லை. ஆம்புலன்ஸ்களும், போலீஸ் ஜீப்புகளும் சைரன் அலற விரைந்து கொண்டிருந்தது. என் வீட்டிலிருந்து கொஞ்ச தூரத்தில் இருக்கும் பாபா ஹாஸ்பிட்டலுக்குதான் அடிபட்டவர்களை கொண்டு வருவார்கள் என நினைத்தது சரிதான். கடைகள் எல்லாம் அடைக்கப்பட்டிருந்தது சின்ன ஆச்சர்யம். அதனால் சாலை வெளிச்சம் மங்கிப் போய் ஒர் பயத்தன்மையை வெளிப்படுத்தியது. போகும் வழியில் வழக்கமாக் இரவு பத்து மணிக்குதான் மூடப்படும் எனது அலுவலகம் கூட வெளிக்கதவும் பூட்டப்பட்டு, நடந்திருப்பது பெரிய விபரீதம்தான் என்பதை உணர்த்த, வாசலில் நின்றிருந்த காவலாள், "சூர்யா சாப். எங்கே வந்தீர்கள்?" என்றான்

"என்ன ஆபீஸ் முடியாச்சு...இவ்வளவு சீக்கிரமாக. சாப் போயாச்சா" என்றேன்.

"என்ன தெரியாத மாதிரி கேட்கிறீங்க. பாம் வெடிச்சுருச்சு தெரியுமில்ல. கலவரம் வரப் போகுதுன்னு எல்லோரும் பேசிக்கிறாங்க. வீட்டுக்கு போங்க சீக்கிரமா" என்றான்.

'சரி சரி' என்று தொடர்ந்து நடந்தாலும் மனதில் ஒரு சின்ன பயம் படர்ந்து கொண்டது. கடை எல்லாம் அடைத்தது கலவர பயத்தாலா? பம்பாய் கலவரத்தில் பாந்த்ராவின் பங்கும் முக்கியமானது. கிறிஸ்தவர்கள் முதல் சகல மதத்தவரும் இங்கு சரி விகிதத்தில் அருகருகே நெருக்கமாக வசிப்பதால் கலவரம் வெடிக்கும் அபாயம் இங்கு அதிகம். அதி நவீன பிளாட்கள் ஒரு புறம் இருந்தாலும் மிகவும் மோசமான சேரிகளும் பாந்திராவை சுற்றி இருக்கிறது. அதுவும் ஸ்டேஷனை சுற்றியிருக்கும் 'பிஹரம்பாடா'. போன கலவரத்தில் அதிகமாக அடிபட்ட பெயர். இன்றும் மற்றவர்கள் செல்ல அஞ்சும் பகுதி. சாலையில் வெறுமே வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தவர்கள் கூட முகத்தில் கலவரச்சுமையை சுமந்து செல்வதாக மனதில் தோன்றியது. அடைக்கப்பட்ட கடைகளும், விடாமல் அலறும் சைரன்களும், சாலையில் இல்லாமல் போன தனியார் வாகனங்களும் மேலும் பயமுறுத்தியது.

எஸ்வி ரோட்டைத் தாண்டி ஸ்டேஷன் சாலையில் கால் வைத்த உடனே வெடிக் களோபரத்தை முழுமையாக உணர முடிந்தது. ஸ்டேஷனுக்கு முன்னர் பெரிய திடல் போல இருக்கும் இருவழி சாலைக்கும் முன்புறம் இருக்கும் மசூதிக்கு இந்தப் பக்கம் பெரிய கூட்டம். கூட்டத்தைப் பிளந்து அவ்வப்போது வெளிவரும் ஆம்புலன்ஸ்கள், ஆட்டோகள் மற்றும் டாக்ஸிகள். இரண்டு பெண்கள் பெரிதாக அலறியபடி என்னைக் கடந்து ஓடினர்.

மசூதி அருகிலேயே போலீஸ் அனைவரையும் தடுத்து நிறுத்தியிருந்தனர். பாந்திராவாசிகள் பேசும் சுமார் அரை டஜன் மொழிகளிலும் எதேதோ அலறல்களும், வசவுகளும் கேட்டது. என்ன் ஏது என்று எதுவும் விளங்கவில்லை. கிடைத்த இடைவெளியில் மற்றவர்கள் தோள்களையும் கரங்களையும் விலக்கிக் கொண்டு முன்னால் சென்றால், ஏதேதோ பெயர் சொல்லி அழும் மக்களை ஒரு கட்டுக்குள் வைக்க போலீஸ் படாத பாடுபட்டுக் கொண்டிருந்தனர்.

போலீஸார் எல்லோரையும் தடுத்து நிறுத்தியிருந்தாலும் ஸ்டேஷன் முன்னர் ஆங்காங்கே சிலர் நுழைந்து கூட்டம் இருந்தது. சில வாகனங்கள். காவித்துணியை தலையில் கட்டியபடி கோஷமிட்டுக்கொண்டு பல இளைஞர்கள் அங்குமிங்கும் ஓடி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தியும் அடிபட்டவர்களை வாகனங்களில் ஏற்றியபடியும் உதவி செய்தபடி இருந்தனர். நானும் மற்றவர்களை உதாசீனப்படுத்தி கொஞ்சம் முன்னால் சென்றால்....காலில் ஏதோ 'ப்ளக்' என்று விநோதமான உணர்ச்சி! குனிந்து பார்த்தால்...கீழே திட்டாக ரத்தம்...மனித ரத்தம், அதைத்தான் மிதித்திருகிறேன். நெருப்பில் பட்டது போல காலைத் தூக்கினால், அந்த இடம் மட்டுமல்ல ஸ்டேஷன் முன் உள்ள சாலை முழுவதுமே ரத்தத்தில் கால் தடங்கள் விளக்கொளியில் பளபளத்தன. பல இடங்களில் மிதித்து நசுக்கப்பட்ட தசைப்பகுதிகள்....கொஞ்ச நேரம் முன்பு குடித்த காப்பி தொண்டை வரை ஏறி...குமட்டிக் கொண்டு வர, பின்னால் இரண்டடி வைத்த எனது தோள்களை பின்புறம் இருந்து யாரோ அழுத்திப் பிடித்தனர். பரிச்சயமான குரல்.

"என்ன, சூர்யா சாப். இங்கே வந்து இருக்கிறீர்கள்?" திரும்பிப்பார்த்தால் எனக்கு மிகவும் தெரிந்த எங்கள் பகுதி கவுன்ஸிலர் நாயக். ஏதாவது உதவி வேண்டி அடிக்கடி எங்கள் அலுவலகம் வருவார். எப்போதும் அருகிலுள்ள சிவ்சேனா கட்சி அலுவலகம் தாண்டி போகும் போது யாருடனாவது பேசிக் கொண்டு இருப்பார். ஆனாலும் என்னைப் பார்த்து கையசைப்பார்.

"இல்லை நம்ம ஆபீஸல வேலை செய்யறாரே ராகவன், அவர் இன்னும் வீட்டுக்கு போய்ச் சேரவில்லை. அதுதான் ஒரு சின்ன சந்தேகம். வந்து பார்க்கலாமென்று...." என்று இழுத்தேன்.

"இங்கே நீங்க ஒன்றும் பார்க்க முடியாது. வேண்டுமானால் பாபா ஸ்பத்திரிக்கு போய்ப் பாருங்கள். இங்கு இருக்க வேண்டாம். நிலமை பதட்டமாக இருக்கிறது. எதுவும் நடக்கலாம். வதந்திதான். ஆனால், எதற்கும் நீங்கள் வீட்டுக்கு போவது நல்லது" என்று சொன்னபடியே அங்கு பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த காவிப்பட்டி தொண்டர்களை இயக்கியபடியே ஸ்டேஷனுக்குள் மறைந்தார்.

'ராகவன் இங்கு எங்காவது இருக்கிறானா?' என்ற சந்தேகம் உள்ளத்தைக் குடைய அங்கிருந்த ஒரு ரிக்ஷாவை நிறுத்தினேன்.

"ஹில் ரோடா....இருபத்தைந்து ரூபாய் வேண்டும்" எனது பத்து வருட பம்பாய் வாழ்க்கையில் ரிக்க்ஷாவில் ஏறுவதற்கு முன்னரே குறிப்பிட்ட தொகை முதன்முறையாக கேட்கப்பட்ட அதிர்ச்சியில் ஓட்டுநரின் முகத்தைப் பார்க்க, "சாப். பாருங்கள். ரொம்ப சிலரே இருக்கிறோம். எவ்வளவு ரிஸ்க் எங்களுக்கு" என்றார்.

எவ்வளவோ முறை பதினோரு ரூபாய்க்கு பத்து ரூபாய் கொடுத்து மீதி ஒரு ரூபாயை தேடிக்கொண்டிருக்கையில், 'பரவாயில்லை' என்று சொல்லிச் சென்ற ரிக்க்ஷாக்காரர்களை நினைத்து, 'சரி போ' என்றவாறு ஏறிக்கொண்டேன். அவருக்கு என்ன தோன்றியதோ, 'தவறாக நினைக்காதீர்கள்' என்ற வகையில் ஏதேதோ சொல்லிக் கொண்டே வந்தாலும் என் மனதில் ராகவனும் காதலீனும் தோன்றித் தோன்றி மறைந்தார்கள். 'நடந்தது நடந்து விட்டது. என்ன நடந்தது என்பது தெரியுமானால் அடுத்த விஷயத்தைப் பார்க்கலாம். இந்தக் காத்திருத்தல் வேதனை! நெஞ்சு நிறைய பயத்தை நிறைத்து...இறக்கி வைக்க முடியாமல், இது மஹாக் கொடுமை' என்று நினைத்துக் கொண்டே மாதவியிடம் பேசுவதற்காக மொபைலை எடுத்தால், 'வலைத்தொடர்பினை தேடி' என்ற எழுத்துக்கள் எரிச்சலை மூட்டின! என்னை ஒரு முறை பார்த்துக் கொண்ட ஓட்டுநர், 'மொபைலெல்லாம் ஆஃப் செய்துவிட்டார்கள் சாப்' என்றார்.

***

வீட்டிற்கு நான் போய்ச் சேரவும் காதலீன் வரவும் சரியாக இருந்தது. இரண்டு மாதத்துக்கு முன்பு பார்த்ததற்கு கொஞ்சம் குண்டாக இருந்தாள். அவள் போட்டிருந்த ஜீன்ஸையும் சட்டையையும் முழுக்க உடல் மறைத்திருந்தது. குழந்தையை கையில் வைத்த படியே எனது கைகளை இறுக பற்றிக் கொண்டாள். கண்களில் கண்னீர். அவள் கைகளை விலக்கியபடி, 'என்ன பெயர்?' என்றபடி குழந்தையை வாங்கினேன், வேறு எதுவும் பேசத் தோன்றவில்லை.

"என்ன ஏதாவது விபரம் தெரிந்ததா?" எனது கேள்விக்கு பதில் சொல்லும் நிலையில் அவள் இல்லை என்பது புரிந்தது. அழவில்லை என்றாலும், வரும் வழி முழுவதும் கலங்கிப் போய் வந்ததை முகம் காட்டியது. பாவம், அவளுக்கு யார் இருக்கிறார்கள் இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தில். அவள் அம்மாவுக்கு ஃபோன் செய்திருக்கலாம். 'என்னவாகப் போகிறாய் பெண்ணே' என்று கேட்டுக் கொண்டேன். குழந்தை சிரித்தபடி எனது கண்ணாடியை பிடுங்கியது.

"ஸ்டேஷன் வரை போய் வந்தேன். அங்கு எதுவும் பயனில்லை. எதற்கும் ஆஸ்பத்திரி வரை போய் பார்த்து விட்டு வருகிறேன். நீ மாதவியுடன் பேசிக் கொண்டிரு"

"இல்லை. இல்லை. நானும் வருகிறேன்" என்று எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கிளம்பினாள். மாதவியும் 'கூட்டிக் கொண்டு போங்க' என்ற வகையில் கண்ணசைக்க எனக்கு வேறு வழியில்லை.

***

பாபா ஸ்பத்திரியில் நிலமை ஸ்டேஷனை விட மோசம். ஆம்புலன்ஸ்கள் வருவதும் ஸ்டெரச்சர் என்று சொல்வதற்கு லாயக்கில்லாத முழுவதும் ரத்தம் படர்ந்த துயில் அள்ளி அடிபட்டவர்களை உள்ளே கொண்டு செல்வதுமாக ஒரே களோபரம். ஒவ்வொரு ஆம்புலனஸ் வரவும் அடித்துப் பிடித்து எட்டிப் பார்த்தபடி மக்கள் கூட்டம். காதலீன் தனது இரு கைகளாலும் எனது புஜத்தை இறுகப் பிடித்தபடி ஏறக்குறைய மயங்கிச் சாயும் நிலையில் என் மீது சாய்ந்து இருந்தாள். அங்கு பரபரப்பாக நின்று கொண்டிருந்த ஒவ்வொருவரும் ஒரு கதை சொல்லியபடி இருந்தனர். 'திங்கட்கிழமை அவளுக்கு கல்யாணம். அதற்கு தோழிகளுக்கு கார்டு கொடுத்துட்டு வரேன்ன்னு சொல்லிட்டுப் போன பொண்ணுங்க. இப்ப ஒரு கை இல்லாம உள்ள் இருக்கா' என்று அழுதபடி இருந்த ஒரு வயதான பெரியவரைச் சுற்றி பத்திரிக்கையாளர்கள் குறிப்பெடுத்தபடி இருந்தனர்.

'சின்னதா அடிபட்டவங்க எல்லோரும் ஓபிடி வராண்டால இருக்காங்க' யாரோ சொல்ல காதலீனை இழுத்துக் கொண்டு உள்ளே நுழைந்து ஒவ்வொரு முகமாக தேடியதில் பலனில்லை. அங்கு இருந்த ஒவ்வொருவரிடமும் மனித மனதின் அத்தனை உணர்வுகளின் வெளிப்பாடுகள். அழுகை, சிரிப்பு, புன்னகை, சோகம், கோபம் என்று ஒவ்வொருவர் முகத்திலும் வெவ்வேறு உணர்ச்சிகள்.

ஒரு வார்டு பாயை பிடித்து, 'கொஞ்சம் உள்ளே போய் பார்க்க முடியுமா?' என்று கெஞ்சியதில் பலனில்லை.

"பலர் மயக்கமாகவும் அதிர்ச்சியிலும் இருக்கிறார்கள். முடிந்தவரையில் ஒவ்வொருவரின் டிரெயின் பாஸை வைத்து பெயரை லிஸ்ட் எடுத்து போடுவார்கள். காலை வரை கூட கலாம். நீங்கள் எதற்கும் அதற்குள் கூப்பர் ஹாஸ்பிட்டல் வரை போய் பார்த்து விட்டு வந்து விடுங்கள். இறந்தவர்களை இங்கு எடுத்து வர மாட்டார்கள்" முகத்தில் எந்தவித உணர்வும் இல்லாமல் அவர் சொல்லிப்போக என்னைப் பிடித்த காதலீனின் பிடி லேசாக இறுகியது.

"காதலீன் எதற்கும் நாம் அங்கே போய் பார்த்து விட்டு வந்து விடுவோம். ஒன்றும் இருக்காது. ஆனால் அங்கே பார்த்து விட்டால் நிம்மதியாக இருக்கும்"

அவளிடம் இருந்து லேசாக 'ம்ம்...' என்ற பதில்தான் வந்தது. ரிக்ஷாவில் போகும் போதும் அவள் என் கைகளைப் பிடித்தவாறு இருந்தாள். சில வருடங்களுக்கு முன்னர் 'இந்தக் கரங்களைப் பிடித்துவிட மாட்டோமா?' என்று எங்கள் அலுவலக கடை நிலை ஊழியர்களிடையே பெரிய போட்டி இருந்தது ஞாபகத்துக்கு வந்து வேதனையான அந்த நேரத்திலும் அசிங்கமாக ஒரு புன்னகையாக, என்னை அறியாமல் முகத்தில் மலர்ந்தது. ஒரு நாள் தனியாக இருக்கும் போது ராகவன், 'சார், உங்களிடம் தனியாக ஒரு விஷயம் பேச வேண்டும்' என்று வீட்டுக்கே வந்து விட்டான். என்னடா விஷயம் என்றால் ஐயா, காதலீனை காதலித்து வந்திருக்கிறார். எப்படி சொல்வது என்று தெரியவில்லையாம்.

'உனக்கு ஏண்டா இந்த வம்பு? இதெல்லாம் ஒத்து வருமா?' என்று ஆயிரம் சொன்னாலும் மசியவில்லை. 'இல்லை சார், என் மனதில் நினைத்து விட்டேன். அவளிடம் கேட்க வேண்டும். அவள் இல்லை என்று சொன்னால், நீங்கள் சொல்கிற மாதிரி கேட்கிறேன்' என்று நிலையாக நின்று விட்டான். 'எப்படியோ போ! உனக்கு பன்னியும் மாடும் திங்கணும்னு இருக்கு. உங்க அத்தை கேட்டா துடிச்சுப் போயிடப் போறா' என்று முடித்து வைத்தால் 'அதெல்லாம் நான் சாப்பிட மாட்டேன். ஆனா, நீங்கதான் அவகிட்ட சொல்லணும். எனக்காக இந்த உதவியை நீங்க பண்ணனும்னு' கையைப் பிடித்து கெஞ்சினான். ஏறக்குறைய அழுதுவிட்டான். என்னால் மறுக்க முடியவில்லை. பாவம் அவனுக்கு யார் இருந்தார்கள். அம்மா, அப்பா, அண்ணன் தம்பியென்று யாரும் கிடையாது.

"சரி நீ நினைப்பதை எழுதிக் கொடு. நான் பார்த்துக் கொள்கிறேன்" ஏன் என்று கேட்கும் மனலையில் கூட அவன் இல்லை. அடுத்த இரண்டு நாட்களில் ராகவனின் காதல் கடிதம் பல முறை திருத்தப்பட்டு இறுதி வடிவம் பெற்றது. அடுத்த நாள் காதலீன் வருவதற்கு முன்னதாக அவளது கம்பியூட்டர் அருகில் டைப் செய்ய வேண்டிய காகிதங்களோடு ராகவனின் கடிதத்தையும் வைத்து விட்டேன். முதலில் காதலீன் எனது அறையில் வைத்து ஏறக்குறைய ராகவனின் சட்டையைப் பிடித்து விட்டாள். பின்னாள் எப்படியோ காதல் உருவாகி, காதலீன் அம்மா ராகவன் மதம் மாறத வரை கலியாணம் கிடையாது என்று உறுதியாக நிற்க...கடைசியின் நானும் மாதவியும் கையெழுத்துப் போட அவர்கள் கலியாணம் பதிவாளர் அலுவலகத்தில் நடந்தது. காதலீன் அம்மா இன்று வரை அவர்களை சேர்த்துக் கொள்ளவேயில்லை.

"ராகவனுக்கு எஸ்எம்எஸ் கொடுத்தீங்களா?" காதலீன் எனது சிந்தனையை கலைத்தாள்.

"கொடுத்தேன். ஆனால் இப்போ மொபைல் எல்லாம் ஆஃப் செய்து விட்டார்கள்" துணிந்து பொய் சொன்னேன். அட மறந்து விட்டேனே!

***

கூப்பர் ஸ்பத்திரியில் நாங்கள் பார்த்த காட்சி, 'இந்த உலகத்தில் பிறக்காமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்' என்று நினைக்க வைத்தது. இறந்தவர்களை வரிசையாக தரையில் கிடத்தியிருந்தார்கள். முகங்கள் பிய்ந்து, கை, கால்கள் இல்லாமல் ரத்த்தினை அள்ளிப் பூசியபடி பிணங்கள். வெட்கத்தினை மறந்து ஆண்களும் பெண்களும் அழுதபடி ஒவ்வொரு பிணமாக தலை கைகளை திருப்பி ஆராய்ந்தபடி இருந்தனர். நாங்களும் ராகவனின் முகத்தை தேடினோம். கோரம்! ஒன்றிரண்டு பிய்ந்தகைகள் கால்கள் கூட இருந்தன!

ஒரு கரும்பலகை வைக்கப்பட்டு அதில் ஒரு காவலர் அவ்வப்போது பெயர்களை எழுதிச் சென்றார். எழுத்துக் கூட்டி படிப்பதற்குள் போதும் போதும் என்று கிவிட்டது. ராகவனின் பெயர் இல்லை. ஆனாலும் அவ்வப்போது பட்டியலில் புதிய பெயர்கள் எழுதப்பட்டன. 'ரெண்டு பெட்டி அப்படியே பிய்ந்து ஒட்டிப் போய்விட்டது. நிறைய பயணிகள் இன்னும் சிக்கியிருக்கிறார்கள்' என்று சொல்லிக் கொண்டார்கள். 'இப்போதே பட்டியல் இருபத்தி ஐந்தை தாண்டுகிறதே'.

"காதலீன் மனம் தளர வேண்டாம். மீண்டும் பாபா ஆஸ்பத்திரி போய் அப்படியே வீட்டுக்கும் போய்ட்டு வந்துவிடுவோம்" என்றேன்.

"சரி" அந்தப் பலகையையே வெறித்துப் பார்த்தவாறு பின்னாலேயே வந்தவள் எதன் மீதோ தட்டி 'வீல்' என்று அலறி என்னை வந்து பிடித்துக் கொண்டாள். கீழே....ஒரு துணி கூட போர்த்தப்படாமல் அநாதரவாக நெஞ்சுக்கு கீழே எதுவுமில்லாத.....'இது ஸ்டேஷன் படிக்கட்டில் உட்கார்ந்து 'யா அல்லா! யா அல்லா!!' என்று மட்டுமே கூவிக் கொண்டிருக்கும் பிச்சைக் காரன் அல்லவா! இப்போது நிஜமாகவே எனக்கு வயிற்றைப் புரட்டிக் கொண்டு வந்தது. காதலீன் கைகளைப் பிடித்தவாறு வேகமாக அங்கிருந்து வெளியேறினேன்.

மீண்டும் பாபா ஆஸ்பத்திரி வந்து இறங்கும் வரை நாங்கள் இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. நான் முதலில் இறங்கி ரிக்ஷா ஓட்டுநரிடம் பணத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கையில், "சூர்யா சார்...சூர்யா சார்"

ராகவன் குரல்!!!

கூட்டத்தில் இரண்டு பெண்களைத் தள்ளிக் கொண்டு ராகவன் வேகமாக எங்களை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தான். காதலீன் கால் தடுமாற ரிக்ஷாவில் இருந்து குதித்து ஓடிச் சென்று அவனைக் கட்டிக் கொண்டாள். ஆங்கிலத்தில் நான் கேள்விப்பட்ட அனைத்து வசவுகளும் அவள் வாயில் இருந்து வர அவன் நெஞ்சில் ஓங்கி குத்தியவாறு இருந்தாள். உடல் முழுக்க ஏற்றி வைத்த பாரம் திடீரென ஒரு விநாடியில் இல்லாமல் போக அலுவலகம், வீடு, கடன்கள் என எந்த வித பிரக்ஞையும் இன்றி உள்ளமும் உடலும் லேசாக மிதப்பது போல உணர்ந்தேன்.

"ஒன்றுமில்லை. ஒன்றுமில்லை" என்று அவளிடம் கூறியவாறே பரிதாபமாக என்னைப் பார்த்தான்.

"நான் ஸ்டேஷனுக்குள்ளேயே போகவில்லை. அப்படியே டாக்ஸி எடுத்து பவாருடன் தாதர் போய் விட்டேன். திரும்பி வரும் போது டிரெயினை எல்லாம் நிப்பாட்டிட்டாங்க. என் மொபைலையும் எங்கேயோ தொலைச்சுட்டேன். அப்புறம் டிராக் வழியா நடந்து பஸ் புடிச்சு வீட்டுக்கு போனா...காதலீன் இங்க வந்துட்டா. மாதவி அக்காதான் நீங்க இங்க இருக்கிறதா சொன்னாங்க..." ஒரு கையால் காதலீனை அணைத்தவாறே பேசினான்.

"சரி சரி வா, வீட்டுக்கு போகலாம்" வேறு எதுவும் சொல்லத் தோன்றாமல் முன்னால் நடந்தேன்.

"நான் உங்களை மொபைல்ல கூப்பிட்டனே! அப்போ யாரு ஹலோ சொன்னது?" காதலீன் ராகவனிடம் கேட்டதில் நானும் பின்னால் திரும்பினேன்.

"நான்தான் அதைத் தொலைத்து விட்டேனே! அது யாரோ?" என்று சிரித்தான்.

'யாரோவா?'

"சார் என்ன நின்னுட்டீங்க. வாங்க போகலாம்" இப்போது என்னை அழைத்தது ராகவன்!

*******************

10.7.06

மரத்தடி...

வக்கீல்களில் சிவில் வக்கீல், கிரிமினல் வக்கீல் என்று கேள்விப்பட்டு இருந்தாலும் மரத்தடி வக்கீல்கள் என்று ஒரு வகுப்பு உண்டு. இந்த மரத்தடி வக்கீல்கள் சிறு குற்றங்களை விசாரிக்கும் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டுக்கு வெளியே மரத்தடியில் பார்க்கலாம். இப்போது பார்க்கலாமா என்றால் தெரியாது. மும்பை மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டுகளில் பார்த்திருக்கிறேன். அழகிய சூட், டை சகிதமாக கோர்ட்டில் நீங்கள் நுழையும் முன்னரே 'மே ஐ ஹெல்ப் யூ' என்று உங்களை அணுகுவர். இவர்களைப் பற்றி ஒரு நல்ல அபிப்பிராயம் இல்லை என்றாலும், ஏழை எளியவர்களுக்கு சகாயமான விலையில் நீதியை வாங்கித்தருபவர்கள். ஆனாலும், இவர்களது ஒரு நாள் வருமானம், பெரிய வக்கீல்களே பொறாமைப்படும் அளவுக்கு இருப்பதுண்டு. தமிழ் நாட்டில் இப்படிப் பார்த்ததில்லை. அதற்கு ஒரு காரணமும் உண்டு. அது உண்மை என்று நினைப்பதற்கு தகுந்த காரணங்களும் உண்டு.

நான் சொன்னது மாதிரியான ஒரு மேஜிஸ்ட்ரேட் கோர்ட்டு. நீதிபதி முன்னர் அந்த குற்றம் சாட்டப்பட்டவர் ஆஜர் படுத்தப்பட்டார்.

நீதிபதி கேட்டார்' 'உன் வக்கீல் எங்கே?'

'வக்கீல் இன்னும் வைக்கலய்யா'

'வக்கலயா!' நீதிபதிக்கு எரிச்சல், 'அங்க வெளிய போயி, மரத்தடியில யாரவது வக்கீல் இருப்பாங்க. போயி கூட்டிக்கிட்டு வா'

'சரிங்கய்யா'

வெளியே சென்ற நபர் சில நேரம் கழித்து திரும்ப வந்தார்.

'என்ன யாரயாவது கூட்டிக்குட்டு வந்தயா' நீதிபதி அத்ட்டினார்.

'அங்க ரெண்டு வக்கீல் பேசிக்கிட்டிருந்தாங்கையா. என்னன்னு கேட்டாங்க. அவங்ககிட்ட நீங்க சொன்னத சொன்னேன்'

'வரேன்னு சொன்னாங்களா?' ஜட்ஜ் அவசரப்படுத்தினார்.

'இல்லீங்கய்யா, அவங்க சொன்னாங்க...முன்னால அது மாதிரி மரத்தடி வக்கீல் அங்க இருந்தாங்களாம். பெறவு அவங்கெல்லாம் ஜட்ஜா வேலை கிடச்சு போய்ட்டாய்ங்களாய்யா. இப்ப யாரும் அப்படி இல்லயாம்'

(ஜட்ஜ்களை பற்றி எழுதினால் நீதிமன்ற அவமதிப்பு வருமாமே! இந்த ஜோக்கை சொன்னதே ஒரு ஜட்ஜ்தான்)

7.7.06

சலேம், மேலும்...



சில மாதங்களுக்கு முன்னர், குவைத்தில் வேலை பார்க்கும் இந்திய டிரைவர் ஒருவர், தான் வேலை பார்க்கும் வீட்டு பெண்ணைக் கூட்டிக் கொண்டு இந்தியா வந்து விட்டார். அவர்களை திருப்பி குவைத்துக்கு அனுப்புவதா? இல்லையா? என்ற பிரச்னை முதல் மந்திரி வரை சென்று, பின்னர் மக்களின் ஏகோபித்த விருப்பத்துக்கு ஏற்ப அவர்கள் திருப்பி அனுப்பப்படவில்லை. பாராளூமன்றத்தில் கூட இந்த விஷயம் பேசப் பட்டதாக ஞாபகம். நம் எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி. ஆனால் இதன் பின்னால் அரசுக்கு உள்ள பிரச்னைகளைப் பற்றி யாரும் பேசியதாக எனக்குத் தெரியவில்லை.

இப்போது லிஸ்பனில் கைது செய்யப்பட்டுள்ள அபு சலேம், முன்னர் ஒரு முறை துபாயில் கைது செய்யப் பட்டு அது பெரிய செய்தியானது. வழக்கம் போல இந்தியாவிலிருந்து அதிகாரிகள் துபாய் பறந்தனர். ஆனால் எதுவும் நடக்காமல் ஒரு வாரத்துக்குள்ளாகவே துபாய் போலீஸ் அவரை விடுதலை செய்து விட்டது. கைது செய்யப்பட்டவர், மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட அபுசலேம் என்று நிரூபிப்பதற்க்கான ஆவணங்கள் எதுவும் தாக்கல் செய்யப் படவில்லை என்று துபாய் அரசு சொன்னது. ஓரளவு அதில் உண்மை இருந்தாலும் அது ஒரு நொண்டிச் சாக்குதான் என்று இந்திய அரசு அறிந்தே இருந்தது. ஆனாலும் அதன் மீது பெரிய பிரச்னை கிளப்பாமல் நம்மை கட்டிப் போட்டது, குவைத்திலிருந்து ஓடி வந்த டிரைவர் போல இன்னும் சிலர்.

இந்தியாவில் அதிகமாக தேடப் படும் சில குற்றவாளிகள் மத்தியக் கிழக்கு நாடுகளில்தான் உள்ளனர், முக்கியமாக துபாய், சவூதி, குவைத் மற்றும் பகரைன் போன்ற நாடுகளின். இந்த நாடுகளுக்கும் நமக்கும் தூதரக உறவுகள் உள்ளன. எக்ஸ்ட்ராடிஷன் ஒப்பந்தமும் இருக்கலாம். மேலும் அவை இன்டெர்போல் ஒப்பந்தத்துக்கும் கட்டுப் பட்டவை. ஆனாலும் இந்தியாவால் தேடப் படுபவர்கள் இங்கு சுதந்திரமாக நடமாடுகின்றனர். wtc தாக்குதலுக்குப் பிறகு நிலமை சற்று முன்னேற்றமடைந்துள்ளது என்றாலும், எனக்குத் தெரிந்து மத்தியக் கிழக்கு நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு கைது செய்யப் பட்டு எவரேனும் திருப்பி அனுப்பப்படவில்லை.

எனவே உண்மையில் எக்ஸ்ட்ராடிஷன் ஒப்பந்தத்தினை அந்தந்த நாடுகள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டே செயலுறுத்த முடியும். பாகிஸ்தானில் பிடிபடும் தீவிரவாதிகளையெல்லாம் அமெரிக்காவுக்கு குண்டுக்கட்டாக அனுப்புவதற்கு பெரியதாக ஒப்பந்தம் எதுவும் தேவையில்லை. மேன்மையான பொருளாதாரமும், வலிமையான ராணுவமும் போதும்.

நியாயத்தின் அணுகுமுறை ஒன்றுதான். எவர் பலம் படைத்தவரோ, அவருக்கேதான் நியாயம்! ஏனெனில் அரசாங்கம் பலமுள்ளவர்களால்தான் ஆக்கப் படுகிறது. அவர்களால்தான் ஏதோ ஒரு முறையில் ஆளப்படுகிறது’ என்ற பிளோட்டோவின் வரிகள் உண்மையானவை. WTC தாக்குதலுக்குப் பின்னர், அமெரிக்காவும் அதன் மீடியாவும் போட்டி போட்டுக் கொண்டு 'அமெரிக்காவின் மீது போர்' என்ற வார்த்தைகளை உபயோகப்படுத்தியது காரணமின்றியல்ல. உண்மையில் அந்த தாக்குதல் ஒரு கிரிமினல் வேலை. அதற்கு ஓசாமா காரணமென்று தகுந்த ஆவணங்களுடன் அமெரிக்கா ஆப்கானிஸ்தானை அணுக வேண்டும். அத்தகைய கடினமான, அதே சமயம் பிரயோஜனமில்லாத சடங்குகளுக்குள் போக அமெரிக்கா விரும்பவில்லை. நடந்த தாக்குதல் அமெரிக்காவின் மீதான போர் என்று ஒரே போடாக போட்டது. பென்டகன் மீதான தாக்குதல் வேறு அதற்கு தோதாக அமைந்து விட்டது. அமெரிக்க மீடியா அதனை கெட்டியாக பிடித்துக் கொள்ள, உலகம் வேறு வழியின்றி வழி மொழிந்து விட்டது. இதன் மூலம் அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீது போர் நடத்த முழு உரிமை பெற்றது. இது புஷ் அரசின் ராஜதந்திரத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு. சர்வதேச சட்டங்கள் ஒரு நாட்டின் சட்டங்கள் போல அவ்வளவு வலிமையானதல்ல. எந்த ஒரு வலிமையான நாடும் தனது விருப்பத்துக்கேற்ப அதனை வளைத்துக் கொள்ளலாம். உதாரணமாக ஆப்கானிஸ்தானோடு நடந்தது போரென்றால், கைதிகளாகப் பிடிக்கப்பட்டு அடைக்கப் பட்டுள்ளவர்களை போர்க் கைதிகளாகவல்லவா நடத்த வேண்டும். சரி, அவர்கள் கிரிமினல்களென்றால் ஆப்கானிஸ்தானில் இருந்த சாதாரண போர் வீரர்கள் என்ன குற்றம் செய்தார்கள்? இதுவெல்லாம் விடை காணப் படமுடியாத பெரிய கேள்விகள். ஒன்றை மறந்து விடக்கூடாது. இவ்வாறான வலிமையான, தயவு தாட்சண்யமில்லாத நடவடிக்கைகளை எடுக்கவில்லையென்றால், உலகின் பல பாகத்திலும் வெறுப்பை சம்பாதித்துள்ள அமெரிக்காவின் பாதுகாப்பே கேள்விக் குறியாகிவிடும். மாஃபியா தாதாக்கள் உருவாவதற்கு ஆல்வின் டாஃப்ளர் தனது ‘பியூச்சர் ஷாக்’ புத்தகத்தில் கூறியுள்ள காரணங்கள், அமெரிக்காவின் எதிரிகள் உருவாவதற்கும் ஒரு காரணம்.

அபுசலேம் இப்போது போர்ட்சுகலில் பிடிபட்டுள்ளார். நல்லவேளை, சில வருடங்களுக்கு முன்னர்தான் போர்ட்சுகல் பழைய பிரச்னைகளை (கோவா) மறந்து நம்முடன் முழு அளவிலான நட்பு கொள்ளத் தெடங்கியுள்ளது. இரு நாடுகளுக்கிடையே எக்ஸ்ட்ராடிஷன் ஒப்பந்தமும் நிலுவையில் உள்ளது. இங்கிருந்து சென்ற இந்திய அலுவலர்களும் சலேமின் அடையாளத்தினை (identity) ரூபிக்க தகுந்த ஆதாரங்களை எடுத்துச் செல்வதாக கூறியுள்ளனர். எனினும் அநேக சிக்கல்கள் இதில் இருக்கின்றன. குல்ஷன் குமார் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான இசையமைப்பாளர் நதீமை இந்தியா கொண்டுவர முயன்று அதனை பிரிட்டன் நீதிமன்றங்கள் நிராகரித்ததோடு அல்லாமல், நதீமுக்கு இந்திய அரசு நீதிமன்ற செலவாக சுமார் 5 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்ற உத்தரவும் இட்டது. அந்த மாதிரி நாம் மறுபடியும் அவமானப் பட்டு விடக்கூடாது என்பதுதான் நமது ஆதங்கம்.
சலேம் பிடிபடுவதற்கு காரணம் நாங்கள்தானென்று இந்திய போலீஸ் மார் தட்டிக் கொண்டாலும், தாவூது கும்பலின் தகவலன்றி, போலீஸ் அவரை லிஸ்பனில் தேடியிருக்க முடியாது என்றுதான் மும்பையில் சொல்லிக் கொள்கிறார்கள். தாவூதின் முக்கிய தளபதிகள் ஷாகீலும், ராஜனும்தான். பின்னர் மும்பை குண்டு வெடிப்பை காரணமாக காட்டி சோட்டா ராஜன் பிரிய அந்த இடத்தினை நிரப்பியது சலேம். சலேம் தாவூதின் தம்பியுடன் நெருக்கம் அதிகம். ஷாகீலை பின்னுக்குத் தள்ளி சினிமா உலகை சலேம் கைக்குள் எடுத்தது ஆச்சர்யம். ஆனால் சலேம் விரைவிலேயே நம்பத்தகாத ஆளாக கட்டம் கட்டப் பட்டார். அதற்குள் சலேம் பல கோடி தனக்கென ஒதுக்கிக் கொண்டு கூட்டத்திலிருந்து ஒதுங்கிக் கொண்டார்.

இதற்கு வேறு ஒரு காரணமும் இருக்கலாம். எற்கனவே சொன்னபடி, சலேம் உத்தர பிரதேசத்துக்காரர். தாவூது, ஷாகீல் போன்ற மும்பை தாதாக்க்ள், சமூகத்தின் கீழ் மட்டத்திலிருந்து வந்தாலும் பதவிசாக நடந்து கொள்வதில் சமர்த்தர்கள். தாவூதின் அப்பா, ஒரு போலீஸ் கான்ஸ்டபிள். ஆனால் சலேம் அப்படியல்ல. திரைப்பட் நடிகைகள் மற்றும் நபர்களிடம் மிகவும் தரக்குறைவாக பேசுகிறார் என்று ஒரு குற்றச்சாட்டு. போலீஸ் ஷாகீல் மொபைல் போனை ஒட்டுக் கேட்டதில், சஞ்சய் தத் ஷாகீலிடம், சலேம் எப்படி ப்ரீத்தி ஜிண்டா மற்றும் சில நடிகைகளிடம் மோசமான வார்த்தைகளில் பேசுகிறார் என்று ஒரு பாட்டம் அழது தீர்த்து உள்ளார். அதே சலேம் தற்போது கைது செய்யப்பட்டுள்ளது ஒரு நடிகையுடன். இருவரும் கணவன் மனைவியாம்.

சலேமின் நடவடிக்கைகள் சற்று தடாலடியானவை. அது போல வெளியிலிருந்து குறைந்த விலைக்கு அடியாட்களை (hitmen) கொண்டு வந்ததில் சில அனுகூலங்கள். பல பாதகங்கள். உண்மையில் அவர்கள் 'ஹிட்மென்' இல்லை 'ஹிட்கிட்ஸ்' என்று பத்திரிகைகள் எழுதுகின்றன. நான் மும்பை வந்த புதிதில் நான் சட்ட ஆலோசனை கூறும் ‘பிளாட்கள் கட்டும் நிறுவன முதலாளி’யுடன் அடிக்கடி காரில் செல்ல வேண்டி வரும். அப்போது அதிகமான மாஃபியா தாக்குதல்கள் நிகழ்ந்து கொண்டிருந்த நேரம். பலர் என்னைப் பயமுறுத்தினார்கள். நான் பின்னர் அவருடன் காரில் செல்வதை தவிர்த்து விட்டாலும், ஒரு சமாதானம் சொல்லிக் கொள்வேன், 'எல்லா நேரமும் அவர்கள், யாரைக் கொல்ல வேண்டுமோ அவரை மட்டும் சரியாக அடிக்கிறார்கள். எனக்கு ஒன்றும் ஆகாது'. இது ஒரு போலிச் சமாதானம்தான். அனால் இதனைப் பற்றி நான் அப்போது வியந்ததுண்டு. எப்படி கூட செல்லும் டிரைவருக்கு ஒரு கீறல் கூட படவில்லையென்று. ஆனால் வெகு சீக்கிரமே பிரபலமாகிக் கொண்டு வந்த தாதா தளபதிகள் அனைவரையும் சுட்டுத்தள்ளி விட்டது மும்பை போலீஸ். இங்குள்ள 'என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்' என்று சொல்லப்படும் சில உதவி ஆய்வாளர் நிலையில் உள்ள சில போலீஸுக்கும் அவர்கள் குடும்பத்துக்கும், ஸ்டென் கன் சகிதம் விசேஷ போலீஸ் பாதுகாப்பு உண்டு. இந்த என்கவுண்டர்களால் நிலைமை சீக்கிரம் மாறிப் போனது. பல தாக்குதல்களில் தாக்கப்பட வேண்டிய நபரை விட்டு சாலையில் போய்க் கொண்டு இருந்த நபர்கள் மீது காயம் பட்டது. சிலர் மரித்தும் போனார்கள். இதற்கு போதுமான பயிற்சியின்மையும், அனுபவமின்மையும் காரணமாக கூறப்பட்டது சலேம்தான் இப்படி பல புதியவர்களை உத்தர பிரதேசத்திலிருந்து ஒரு வேலைக்கு ஐயாயிரம், பத்தாயிரமெல்லாம் பேசி கூட்டி வருகிறார் என்று கூறப்பட்டது. இதன் சாதகம், கொலையாளிகளின் அடையாளம் (identity) போலீஸை குழப்பியதுதான்.

தாவூதின் வெப்பம் தாங்காமல்தான் சலேம் மத்திய கிழக்கை விட்டு கிளம்பியிருப்பார் என நினைக்கிறேன். ஆனால் விதி விடவில்லை. தாவூதின் 'காபாரிகள்' அவரை பின் தொடர்ந்து விட்டார்கள். இன்பார்ம்ர்களை 'காபாரிகள்' என்கிறார்கள். தாவூது, அருண் காவ்லி போன்ற பெரிய கும்பல்களில் மாதச் சம்பளத்திற்கு 'காபாரிகள்' உண்டு. முன் பெல்லாம், நீங்கள் ஒரு கட்டிடம் கட்டுவதற்கு, அஸ்திவாரம் தோண்டியவுடனே இவர்கள் அந்த செய்தியினை சம்பத்தப் பட்ட தாதாவிடம் சொல்லி விடுவார்கள். சலேமையும் தாவூதின் காபாரிகள் காட்டிக் கொடுத்துவிட்டனர் என்றும் சொல்லப் படுகிறது.

சரி, நூற்றுக் கணக்கான மக்களை பலி கொண்ட மும்பை குண்டு வெடிப்பிற்கு காரணமானவருக்கு என்ன தண்டனை? உண்மையில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பவர்களெல்லாம் சின்ன மீன்கள். மரண தண்டனைதான் சரி என்பது எனது இப்போதைய எண்ணம். இங்குதான் பிரச்னை. போர்ச்சுகல் மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் மரண தண்டனையினை தடை செய்துள்ளன. மேலும் அதிக பட்ச தண்டனையும் 25 வருடம்தான். எனவே போர்ச்சுகலிடம், இந்தியா, குற்றம் நிரூபிக்கப்பட்டால் சலேமுக்கு மரண தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ கொடுக்கப் பட மாட்டாது என்று ஒரு வாக்குறுதி அளிக்க வேண்டிய நிலை வரலாம். ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முடியும் வரை சிறையில் வாடுவதுதான். அதிக பட்சம் 25 வருடம்தான், இறுதியில் சலேமுக்கும்.

சலேம் விஷயத்தில் இந்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பாவம் நம்ம வீரப்பருக்குத் தெரியாமல் போய்விட்டது. யாரவது எடுத்துச் சொன்னால், மெல்ல சத்தியமங்கலத்திலிருந்து நழுவி லிஸ்பன் சென்று விட மாட்டரா? என் மனதில் எழும் மற்றொரு கேள்வி இதுதான். ஒசாமா போர்ச்சுகலில் இருந்திருந்தால் அமெரிக்கா என்ன செய்திருக்கும்?
***
(அபு சலேம் கைது பற்றி நான் எழுதிய முந்தைய பதிவு கில்லியில் குறிப்பிடப்பட்டுள்ளது குறித்து மகிழ்ச்சி! எனவே அபுசலேம் குறித்து மேலும் நான் முன்பு மரத்தடியில் எழுதிய சில செய்திகள் இங்கு பதிவது பொறுத்தம் என நினைப்பதால் இந்த பதிவு)

5.7.06

அந்தரங்கம் புனிதமானது - III

பெண்பிள்ளைகள் வயதுக்கு வருவதைக் கூட 'மைக் செட்' வைத்து ஊருக்கே தெரிவிக்கும், வழக்கமுள்ள இந்தியாவில் 'அந்தரங்கத்தின் புனிதம்' என்பது எவ்வளவு தூரம் போற்றப்பட முடியும்? கூட்டுக் குடும்பம், அண்டை அயலாரோடு அதீதமாக பாராட்டும் உறவு என்று நமது சமுதாயத்தில் அந்தரங்கம் என்பது ஒரு சிறிய அறையின் சுவர்களுக்குள்ளேயே அடங்கிப் போகும் பண்பென்றாலும், நமது சட்டங்கள், வளர்ந்த நாடுகளின் சட்டங்கள் அம்மக்களுக்கு அளித்துள்ள உரிமைகளுக்கு சற்றும் குறைவில்லாத உரிமைகளை வழங்குகின்றன.

ஒரு குடிமகனின் மீது சாதாரண தருணங்களில் கட்டாய மருத்துவ சோதனை என்பது இங்கும் இயலாத கார்¢யம். ஆனால், குற்றம் செய்ததாக கருதப்படும் நபர் மீது கட்டாய மருத்துவ பரிசோதனை நீதிமன்ற உத்தரவின்றியே நடத்தப்படலாம். இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி கைது செய்யப்பட்ட நபரை, அவர் செய்துள்ள குற்றத்தை நிரூபிக்க தேவை எனும் பட்சத்தில் தகுந்த மருத்துவரை கொண்டு பரிசோதனை செய்யலாம். ஆனால் சோதனை நல்லெண்ணம் கொண்டு குற்றத்தினை நிரூபிக்க எந்த அளவு தேவையோ அந்த அளவு நடத்தப்பட வேண்டும். பொதுவாக இவ்வகை சோதனைகள் மோட்டார் வாகன விபத்துகளிலும் வன்புணர்வு வழக்குகளிலும் நடத்தப்படுகின்றன.

மேலும் ஒரு சந்தர்ப்பத்திலும் கட்டாய மருத்துவ பரிசோதனை கைது செய்யப்பட்டவரிடம் நடத்தப்படலாம். கவனக்குறைவாகவோ அல்லது கெட்ட எண்ணத்துடனோ ஒரு நோயைப் பரப்பும் வண்ணம் ஒருவர் ஒரு காரியம் செய்கையில் அவை தண்டிக்கப்பட வேண்டிய குற்றங்கள் என இந்திய தண்டனைச் சட்டம் கூறுகிறது. ஆக, இந்த இரு சந்தர்ப்பங்களிலும் ஒருவரை கட்டாய மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தலாம்.

அவ்வாறென்றால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அமெரிக்காவில் இருப்பது போல ஒருவரை தனக்குத் தானே சாட்சியாக பயன்படுத்துவதற்கு எதிரான பாதுகாப்பு இருக்கிறதா என்றால் இருக்கிறது. ஏற்கனவே கூறியபடி அமெரிக்க 'பில் ஆஃப் ரைட்ஸை' சுவீகரித்துதான் நமது அடிப்படை உரிமைகள் எழுதப்பட்டன. அவ்வாறென்றால், நான் மேலே கூறிய, கட்டாய மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தும் காவலர்களின் உரிமை இந்த அடிப்படை உரிமையை பாதிக்கிறதா என்றால், அவ்வாறுதான் தோன்றுகிறது. ஆனால் ஏற்கனவே அமெரிக்க நீதிமன்றங்கள் பாதிக்கவில்லை என்று தீர்ப்பு கூறியுள்ளதால் அதைப் பின்பற்றி இந்திய நீதிமன்றங்களும் தீர்ப்பளிக்க தயங்காது என்பதால், வழக்கு ஏதும் தாக்கல் செய்யப்படவில்லை என அறிகிறேன். ஆக இந்தியாவில் கட்டாய மருத்துவ பரிசோதனை என்பது கைது செய்யப்பட்டவரின் மீது செய்ய சாத்தியம். ஆனால் அந்தச் சோதனை நடந்த குற்றத்திற்கான சாட்சிகளை சேகரிக்கும் வண்ணம் மட்டுமே இருக்க முடியும்.

இதே கருத்தை நமது உச்ச நீதிமன்றம் ஒரு சமீபத்திய தீர்ப்பில் தனது கருத்தாக (obiter) கூறியுள்ளது. சாரதா எதிர் தர்மபால் (JT 2003 (3) SC 399) என்ற அந்த வழக்கானது ஒரு விவாகரத்து சம்பந்தமான வழக்கு. திருமணமாகி நான்கு வருடங்களில் கணவர் தனது மனைவி புத்தி சுவாதீனமில்லாதவர் என்று கூறி விவாகரத்து கோரினார். அவ்வாறு அவர் கூறியதால் மனைவி புத்தி சுவாதீனமில்லாதவர் என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு அவருடையது. எனவே அதற்காக தனது மனைவியை மருத்துவ சோதனைக்கு உட்படுத்த வேண்டுமென்று ஒரு மனு தாக்கல் செய்தால். நீதிமன்றத்துக்கு அவ்வாறு தன்னைப் பணிக்க அதிகாரமில்லை என்று மனைவி வாதிட்டார். நீதிமன்றம் அதை ஏற்காமல் அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தும்படி உத்தரவிட்டது. மனைவி உயர் நீதிமன்றத்தை அணுக அங்கும் அதே முடிவு. முடிவில் உச்ச நீதிமன்றத்திற்கு வழக்கு வந்தது.

உச்ச நீதிமன்றத்தில் மனைவியின் சார்பில், இவ்வாறு அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுமாறு உத்தரவிடுவது அவரது அடிப்படை உரிமையான 'வாழ்வதற்கான உரிமை'யை பாதிப்பதாக வாதிடப்பட்டது. நமது உச்ச நீதிமன்றத்தின் முந்தைய பல தீர்ப்புகள், இரு வேறுபட்ட நிலையினை பிரதிபலிப்பதாக இருந்தது. அந்த தீர்ப்புகளையும், வேறு பல நாடுகளின் தீர்ப்புகளையும் அலசிய உச்ச நீதிமன்றம் இறுதியில் அளித்த தீர்ப்பு....'இவ்வாறு உத்தரவிட சிவில் நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உள்ளது, அவ்வாறு உத்தரவிடுவது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமையை மீறியதாகாது' ஆனால் 'இத்தகைய உத்தரவிடுவதற்கு முன்னர் அதற்கு தகுந்த தேவையிருக்கிறதா' என்பதை ஆராய வேண்டும் என்று கூறும் உச்ச நீதிமன்றம் கடைசியில் முடிவாக கூறுவது கவனிக்கத்தக்கது. அதாவது, 'இந்த உத்தரவுக்கு ஒருவர் கீழ்ப்படியாவிட்டால்...அவருக்கு எதிர்மறையான யூகத்தினை (adverse inference) நீதிமன்றங்கள் வடித்துக் கொள்ளலாம்.

தெளிவாக கூறுவதென்றால், மனைவி இந்த உத்தரவிற்கு கீழ்ப்படியாவிட்டால் அவரை கட்டாயப்படுத்த முடியாது. நீதிமன்ற அவமதிப்பு என்றும் கூற இயலாது. மாறாக, அவரை ஒரு மனநோயாளி என்று நீதிமன்றம் யூகிக்கும். அவ்வாறாக நீதிமன்றம் யூகிக்கையில், 'அவர் ஒரு மனநோயாளி இல்லை' என்று நிரூபிக்கும் பொறுப்பு மனைவியைச் சேரும்...சுருக்கமாக, மனைவி அந்த வழக்கில் தோற்க நேரிடலாம். ஆனால், தனது அந்தரங்கத்தை மருத்துவ பரிசோதனைக்கு தன்னை உட்படுத்தாமல் பாதுகாத்துக் கொள்ள இயலும். அந்தரங்கம் என்பது இங்கும் புனிதமானதுதான்.

நிறைவடைகிறது

குறிப்பு: சமீப காலங்களில் ‘நார்கோ அனாலிஸிஸ்’ என்ற சோதனை பற்றி செய்தித்தாள்களில் படித்திருப்பீர்கள். அதாவது ஒருவரை வசிய மருந்து (narcotic substance) கொடுத்து அவரது மன உறுதியை குலைத்து காவலர்கள் விபரங்களைப் பெறும் முறை. இவ்வாறான சோதனைக்கு ஒருவரை உட்படுத்த நீதிமன்றத்தின் அனுமதி தேவை. தெல்கியை இவ்வாறு நீதிமன்ற அனுமதி பெற்று சோதனைக்குட்படுத்தியதை பலர் அறிவீர்கள். ஆனால், இவ்வாறு வசிய மருந்தினை தனது உடம்பினுள் செலுத்துவது தனது மத உரிமையினை பாதிப்பதாக ஒருவர் வாதிட்டால் என்ன ஆகும்? காத்திருக்கிறேன்...அவ்வாறான வாதம் வைக்கப்படும் வேளைக்காக!

4.7.06

அந்தரங்கம் புனிதமானது - II



நான் ஒரே ஒரு பெரிமேஸன் நாவல் படித்திருக்கிறேன். பல வருடங்களுக்கு முன்னர் என்பதால் கதை முழுவதும் மறந்து விட்டது என்றாலும், சிறு சிறு பொய்கள் கூறும் ஒரு பெண்ணிற்கு நேரிடும் சிக்கல்களைக் களைய பெரிமேஸன் முற்படுவார் என்பது நினைவிருக்கிறது. ஆனாலும் தெளிவாக குறிப்பிடக்கூடிய இரு அம்சங்கள் உண்டு. முதலாவது, பெரிமேஸன் நாவல்கள் எழுத்தாளர் சுஜாதாவை மிகவும் பாதித்திருக்க வேண்டும் என நான் நினைத்தது. இரண்டாவது, தெரியாத்தனமாக ஒரு குற்றம் நிகழ்ந்த இடத்தில் பெரிமேஸன் இருந்த விபரம் காவலர்களுக்குத் தெரியவர அந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட கைரேகையுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதற்காக, பெரிமேஸனின் கைரேகையை பெறுவதற்கு காவலர்கள் படாத பாடு படுவார்கள். காவலர் அவருக்கு காப்பி கொடுத்து உபசரிப்பார், கைரேகையை அதில் பெரிமேஸன் விட்டுச்செல்வார் என எதிர்பார்த்து அல்லது பெரிமேஸனை சம்பவ இடத்தில் இருட்டில் பார்த்த ஒரு சாட்சி பெரிமேஸனை இவர்தான் அவர் என காவலர்கள் முன்னிலையில் அடையாளம் காட்டுவதற்காக பெரிமேஸன் எழுந்து நிற்கும் வண்ணம் செய்ய முயலுவார்கள் என்றும் நினைக்கிறேன். அப்போதுதான் கல்லூரியில் அடியெடுத்து வைத்திருந்த எனக்கு இது ஏனென்று புரியவில்லை. 'பேசாமல் முட்டிக்கு முட்டி தட்டினால், பெரிமேஸன் எழுந்து நிற்க மாட்டாரா இல்லை கையைப் பிடித்திழுத்து கைரேகையை பதிக்க முடியாதா என்ன' என்று நினைத்தேன்.

பெரிமேஸன் அமெரிக்கரா அல்லது பிரிட்டிஷ்காரரா என்பது தெரியாது. ஆனால், பெரிமேஸன் மீது காவலர்கள் ஏன் வன்முறையை பயன்படுத்தவில்லை என்ற எனது சந்தேகத்துக்கு விடை அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் ஐந்தாவது சட்டத் திருத்தத்தில் பின்னர் கண்டேன். அதன்படி ஒரு மனிதன் ஒரு குற்ற வழக்கில் அவனுக்கு எதிரான சாட்சியாக இருக்கும்படி கட்டாயப்படுத்தப்படக் கூடாது. 'Protection against Self-incrimination' என்று இதைச் சொல்வார்கள். ஆக, பெரிமேஸனை அடையாளத்திற்காக எழுந்து நிற்க வேண்டுவது, அவரை ஒரு குற்ற வழக்கில் மாட்டுவதற்காக. அது அவருக்கெதிராகவே அவரை சாட்சியாக்கும் செயல். அதைப் போலவே நான்காவது சட்டதிருத்தமும் முக்கியமானது. அதன்படி ஒரு மனிதனின் உடல், உடமைகளை காரணமின்றி சோதனையிடுவதும், பறிமுதல் செய்வதும் கூடாது. இதற்கான ஆணையை அவ்வகையான சோதனைகளை மேற்கொள்வதற்கும் பறிமுதல் செய்வதற்குமான தகுந்த காரணங்களைக் காட்டி நீதிமன்ற உத்தரவினைப் பெற்ற பிறகே மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதாகும். எனவே பெரிமேஸனின் கைரேகையை பெறுவதும் அவரது உடலை சோதனையிடுவது மற்றும் பறிமுதல் செய்வது என்னும் வட்டத்துக்குள் வரும். காவலர்களின் அத்தகைய செயல்களுக்கெதிரான பாதுகாப்பை அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம் பெரிமேஸனுக்கு அன்று வழங்கியது.

ஆனால், இன்று பெரிமேஸன் காலத்திலிருந்து வெகுதூரம் வந்து விட்டோம். குற்றம் சாட்டப்பட்டவரிடம் இருந்து கைரேகை பெறுவது என்ன தேவைப்பட்டால் அவரது இரத்தத்தை எடுத்து அதனை சோதனையிடுவதே அரசியலமைப்புச்சட்டத்தின் நான்காம், ஐந்தாம் சட்டத்திருத்தத்தினை மீறியதாகாது என்று அமெரிக்க நீதிமன்றங்கள் தீர்ப்பளித்து விட்டன. பொதுவாக இதற்கு நீதிமன்ற உத்தரவு தேவையென்றாலும், சில சமயங்களில் அதற்காக காத்திருக்க முடியாது. உதாரணமாக ஒரு சாலை விபத்தில் வண்டியோட்டி மது அருந்தியிருக்கிறார் என்று நிரூபிக்க வேண்டுமென்றால் அவரை உடனடியாக சோதனையிட்டாக வேண்டும். ஆக இவ்வாறாக உடலிலிருந்து ஏதாவது கட்டாயப்படுத்தி எடுப்பதை சட்டபூர்வமாக அங்கீகரித்தாலும்....இரண்டு விதமான கருத்துகள் இன்றும் நிலவி வருகின்றன.

இந்த வகையில் தற்போது புதிதாக சேர்ந்திருப்பது டிஎன்ஏ சோதனை. வெளிப்படையாக சாம்பிள் எடுப்பது, சம்பந்தபட்டவரின் மயிரை வேண்டுவது. உள்ளார்ந்த சாம்பிள் வாயிலுள்ள எச்சிலிலிருந்து எடுக்கப்படுகிறது. இந்த முறையினைப் பற்றி பலத்த விவாதங்கள் நடைபெற்று வருகிறது. ஏனெனில் டிஎன்ஏ வெறும் உடலைப் பற்றி பேசுவதோடு நிற்காமல் சம்பந்தப்பட்டவரின் மனதையும் பற்றி பேசுகிறது எனவே இது நேரிடையாக ஐந்தாம் சட்டத்திருத்தத்தை மீறுகிறது என்று சிலர் கூறுகிறார்கள். மேலும், காவலர்கள் எந்த அளவில் ஒரு மனிதனின் டிஎன்ஏ மீதான சோதனையை நிறுத்துவார்கள் என்பதும் கேள்விக்குறியே!

இதனிடையில் பல நாடுகள் டிஎன்ஏ சோதனைகள் நடத்துவது குறித்தான சட்டப்பிரிவுகளை ஏற்படுத்தி உள்ளனர். நாட்டுக்கு நாடு இவற்றின் கடுமை வேறுபட்டாலும், காவலர்கள் மரபணு சோதனை மிகவும் அத்தியாவசியமான ஒன்று என்று அரசினை வலியுறுத்தி பெருகி வரும் குற்றங்களை தடுப்பதற்கான முக்கியமான யுதம் இந்த மரபணு சோதனை என்று அரசாங்கங்கள் கருத ஆரம்பித்து விட்டன. ஆயினும் பல நிகழ்வுகளை ஆய்ந்த பின்னர் எனது எண்ணமாக கூறுவது, குற்றம் சாட்டப்பட்டவர்களின் மீது கட்டாயமாக மரபணு சோதனை செய்வதை இனியும் தவறென்று கூற முடியாது. முக்கியமாக வன்புணர்வு குற்றங்களில் இது அவசியம் தேவைப்படுகிறது. ஆனால் மரபணு சோதனை என்பது உடனடியாக செய்யப்பட வேண்டியது அவசியம் இல்லை என்பதால் தகுந்த காரணங்களை விளக்கி நீதிமன்ற ஆணை பெற்ற பின்னரே மேற்கொள்ளப்பட வேண்டும். அடுத்து, எந்த காரணத்துக்காக சோதனை மேற்கொள்ளப்பட வேண்டுமோ அதைத் தவிர வேறு சோதனைகள் மேற்கொள்ளப்படக் கூடாது. உதாரணமாக, கொலை செய்யப்பட்டவரின் கைகளில் ஒரு மயிர் இருக்கிறது. அந்த மயிர் பிடிபட்டவரின் உடலில் உள்ளதா என்பதை அறிய எடுக்கப்பட்ட சாம்பிளை வைத்து அவருக்கு வேறு ஏதேனும் நோய் இருக்கிறதா என்பதை ஆராயக்கூடாது. பொதுவாக நீதிமன்ற உத்தரவு என்று வரும் பொழுது நான் குறிப்பிட்ட விஷயங்கள் நிச்சயம் ஆராயப்படும். நான் படித்த ஆஸ்திரேலிய நாட்டு வழக்கு ஒன்றில் இவ்வாறு மரபணு சோதனைக்கு அனைவரும் காணக்கூடிய வகையில் நீதிமன்றத்தில் வைத்து உத்தரவிடாமல் நீதிபதியின் அறைக்குள் வைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் உச்சநீதிமன்றம் அதை தள்ளுபடி செய்துள்ளது.

இவ்வளவு காரியங்கள் இருக்கையில் ஈராக்கில் பிடிபட்ட சதாமின் மீதான மரபணு சோதனை எவ்வளவு தூரம் சரியானது. ஈராக்கில் எவ்வித சட்டமும் இல்லை என எடுத்துக் கொள்வோம். அமெரிக்க ஈராக்கின் மீது படையெடுத்ததற்கான காரணம் நாளுக்கு நாள் மாறி வந்தாலும், 'வளைகுடா நாடுகளுக்கு 'நாகரீகம்' கற்பிக்கவும், மக்களாட்சியை ஏற்படுத்தவும்' என்றும் ஒரு காரணம் எடுத்து வைக்கப்படுகிறது. 'சட்டத்தின் முறை' (Due Processof Law) என்பது சதாம் மரபணு சோதனை விஷயத்தில் கடைபிடிக்கப்பட்டுள்ளதா? ‘சட்டத்தின் ஆட்சி நடைபெறாத ஈராக், பிடிபட்டவர் எந்த சட்ட முறையினையும் மதிக்காத சதாம்' என்றால் பின்னர் என்ன வகையான மக்களாட்சியை அமெரிக்கா ஏற்படுத்தப் போகிறது. சதாமின் கைதினை உலகம் பார்ப்பது இருக்கட்டும். ஈராக் மக்கள் உன்னிப்பாக பார்த்து வருகின்றனர். அதில் நாகரீகமான சட்டத்தின் முறையை அமெரிக்கா கடைபிடிக்குமானால் அதுவே ஈராக்கியர்களுக்கு ஒரு பாடமாக இருந்திருக்கும். ஆனால் அமெரிக்கா எப்போதுமே இப்படித்தான்....தனது தேவைகளுக்கேற்ப சட்டத்தின் எல்லைகளை விரிவுபடுத்திக் கொள்ளும்.

சதாம் விஷயத்தில் ஏன் மரபணு சோதனை? சதாமை அவர் ஒளிந்திருந்ததாக கூறப்பட்ட துளையிலிருந்து வெளியில் எடுத்ததும் அவர், 'நான் சதாம் ஹ¥சைன். ஈராக்கின் ஜனாதிபதி' என்று கூறியதாகவும் அமெரிக்க ராணுவ அதிகாரி, 'ஜனாதிபதி புஷ் தனது வாழ்த்துகளை உங்களுக்கு தெரிவிக்கிறார்' என்று பதிலுரைத்ததாகவும் அமெரிக்க ராணுவம் கூறுகிறது. ராணுவத்திடம் மாட்டியவர் தன்னை சதாம் என்று ஒப்புக்கொண்டவுடன் ஏன் சோதனை? அமெரிக்க நீதி ஒரு குற்றத்தினை ஒருவர் மீது நிரூபிக்க தேவையிருப்பின் மட்டுமே கட்டாயமான மரபணு சோதனையை அனுமதிக்கின்றன. இங்கு மரபணு சோதனை மூலம் எதை நிரூபிக்கப் போகிறார்கள். வெறுமே சதாமை அவமானப்படுத்துவது என்றால் அது 'மனித உரிமைக்கான உலகளாவிய பிரகடனம் (1948) மற்றும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச ஒப்பந்தம் (1966) ஆகியவற்றை மீறியதாகும். சதாம் எவ்வளவு கொடூரமான கொலைகாரராக இருக்கட்டும். அவர் ஒரு மனிதர். தனது உடல், தன்னைப் பற்றிய விபரங்களின் மீது முழு உரிமை உண்டு. உதாரணமாக அவருக்கு ஒரு நோய் இருக்கிறது. அதை மற்றவர்களுக்கு தெரிவிக்காமல் வைத்திருக்க அவருக்கு முழு உரிமை உண்டு. அமெரிக்கா தனது சோதனைகளை எந்த அளவில் நிறுத்திக் கொண்டது என்பது யாருக்குத் தெரியும்? சதாம் தன் உடலைப் பற்றி ரகசியமாக வைத்திருக்க விரும்பியிருக்கும் சில விஷயங்கள் தற்போது அவரது அனுமதியின்றியே ஜியார்ஜ் புஷ் கையில் இருக்கும் வாய்ப்பு உண்டு...

இதுவெல்லாம் என்ன யூகங்கள்தானே! எந்தவிதமான சட்டத்தின் ஆட்சியும் நடைபெறாத ஈராக்கில், அதுவும் யுத்த காலத்தில் இப்படியெல்லாம் உயரிய சட்டக்கருத்துகளை நடைமுறைப்படுத்த என்ன தேவை? இத்தனை காலம் சர்வாதிகார ஆட்சி புரிந்த சதாம் ஹ¥சைனுக்கு என்ன தனி மனித உரிமை பற்றியெல்லாம் கவலை? என கேள்வி எழலாம்...ஏற்கனவே கூறியபடி 'அமெரிக்கா, தானே தகுந்த நேரத்தில் அவ்வாறு நடந்து கொள்ளாத பட்சத்தில் நாகரீக தொட்டில் என வரலாற்றில் வருணிக்கப்பட்ட ஈராக்கிலும் பிற வளைகுடா நாடுகளிலும் என்ன வகையான நாகரீகத்தை அறிமுகப்படுத்தப் போகிறார்கள்?
தொடரும்...

3.7.06

அந்தரங்கம் புனிதமானது - 1

உலக வர்த்தக மையக் கட்டிடங்கள் மணல் கோபுரங்கள் போல பொலபொலவென விழுந்து மறைந்ததற்கு அடுத்தபடியாக உலகின் பெரும்பான்மையான மக்களால் மறக்க முடியாத ஒரு தொலைக்காட்சி நிகழ்வு, ‘பல்லாயிரக்கணக்கான மக்களின் சாவுக்கு காரணமான கொடூரன்’ என்று வர்ணிக்கப்படும் சதாம் ஹ¥சைன், ‘கையும் களவுமாக மாட்டிய நம்ம ஊர் சாமியார்கள்’ போன்ற அப்பாவித்தனமான முகபாவனையுடன் அமெரிக்க ராணுவ மருத்துவர்களின் மரபணு சோதனைக்கு தன்னை உட்படுத்திய காட்சியாகத்தான் இருக்க முடியும்.

சதாமின் இன்றைய தகுதி என்ன? அவரை இனி என்ன செய்வது என்பது அமெரிக்காவின் கவலை...பிபிசி போன்ற தொலைக்காட்சிகளில் பதில் சொல்வதற்காக அழைக்கப்படும் சர்வதேச சட்ட வல்லுஞர்களின் கவலை. எவ்வித படைபலமும் இல்லாமல் தனியாளாக மாட்டிக் கொண்ட சதாமை பற்றி உங்களுக்கும் எனக்கும் எவ்வித கவலையும் இருக்கப்போவதில்லை. னால், இத்தனை சட்ட சிக்கல்களுக்கு மத்தியில் இவ்வாறு ஒரு மனிதனை மருத்துவ பரிசோதனைக்கு அவரது அனுமதி இன்றி உட்படுத்துவதும் அதை உலகமெல்லாம் பார்க்கும் வண்ணம் படமாகக் காட்டுவதும் சட்டநெறியின்பாற்பட்டதா என்ற ஒரு கேள்வி எழுகிறது. சதாம் அனுமதியளித்தாரா இல்லையா என்பதல்ல பிரச்னை. நான் பொதுவாக கூறுகிறேன்.

குற்றவாளி என்று கருதப்படும் ஒருவர் அனுமதியின்றி அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவது ஒரு புறம் இருந்தாலும், அவ்வாறு தன்னை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளும் மனிதனை படமெடுத்து உலகமெல்லாம் காட்டுவது என்பது நாகரீகமான செயலாக எனக்கு தெரியவில்லை. அமெரிக்கா தனது வீரர்களின் இறந்த உடல்களை படமாக காட்டக்கூடாது என்று கூறியதில் இருக்கும் நியாயம் சதாமுக்கும் பொருந்தும். தர்மம், நியாயங்களை தவிர்த்துப் பார்த்தாலும் ‘இவ்வாறு படமாகக் காட்டியது அமெரிக்க அரசின் நோக்கம் பிடிபட்டவர் சதாம்தான் என்ற சாட்சியை பெறுவதற்காக அல்ல, மாறாக கெட்ட நோக்கம் (malafide act) கொண்டது’ என்ற வகையில் சட்டத்திற்கு புறம்பானது என வாதிடலாம்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மக்களின் அடிப்படை உரிமைகள் என்று ஒரு பிரிவு உண்டு. இப்பிரிவு அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கும் ‘பில் ஆஃப் ரைட்ஸ்’ என்ற பகுதியில் இருந்து உருவியது. அடிப்படை உரிமைகளின் முக்கியமான உரிமை ‘வாழ்வதற்கான உரிமை’ (right to life). இந்த வாழ்வது என்பது ‘கவுரவமான வாழ்க்கை’. எந்தவிதமான அத்தியாவசிய தேவையுமில்லாத நிலையில் ஒரு மனிதனை இவ்விதமாக அரசே படமெடுத்து வெளிடுவது அவனது கவுரவமான வாழ்க்கை வாழும் அடிப்படை உரிமையை பாதிக்கிறது என்று இந்தியாவில் வாதிட்டால் அதனை நமது நீதிமன்றங்கள் ஏற்றுக் கொள்ளும் வாய்ப்பு அதிகம்.

அடுத்தது, ஒரு மனிதனை அவனது அனுமதியின்றி மருத்துவ சோதனைக்கு உட்படுத்துவதில் உள்ள மனித உரிமைப் பிரச்னை. மனித உரிமை என்பது ஒரு பலூன் போல. ஒன்றுமேயில்லாமல் தொய்ந்து போய்க்கிடக்கும் அதை ஊதி அப்படியே நமது தேவைக்கு ஏற்ப பெரிதாக்கலாம். பின்னர் தேவையானால் கொஞ்சம் காற்றை இறக்கி சிறிதாக்கலாம். வேண்டுமென்றால் ஒரு ஊசியால் குத்தி ஒரேடியாக வெடித்துப் போகச் செய்யலாம். மக்களாட்சியோ, சர்வாதிகார ஆட்சியோ நாட்டின் தேவைக்கேற்ப ஆட்சியாளர்கள் இந்தப் பலூனை ஊதுவர் இல்லை உடைப்பர். எனவே, அமெரிக்கா உட்பட பல நாடுகளின் அரசும் நீதித்துறையும் இந்த மருத்துவ சோதனையிலுள்ள மனித உரிமைப் பிரச்னையை வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வகையில் அணுகுகின்றனர்.

குடிமக்களை இவ்வாறு மரபணு சோதனைக்கு உட்படுத்தி அதைப் பற்றிய விபரங்களை சேகரித்து வைக்கலாம் என்று பல நாடுகள், முக்கியமாக வளர்ந்த நாடுகள் பகீரதப் பிரயத்தனம் செய்து வருகின்றன. பொதுவாக அரசாங்கங்களுக்கு பொதுமக்களின் விபரங்களை தனது கைப்பிடியில் வைத்திருக்க வேண்டுமென்பது தணியாத ஆசை...அரசாங்கம் என்ன நண்பர்கள் பலர் நடத்தும் வலைப்பதிவுகளுக்கு சென்றாலே, ‘என்ன, உன்னோட வண்டவாளத்தையெல்லாம் நானே வச்சுக்கவா?’ என்று கேட்கிறார்கள். எனினும் அவசரத்தேவை ஏதுமில்லாத பொழுது கட்டாயப்படுத்தி பொதுமக்களிடம் மரபணு சோதனை நடத்தி விபரங்கள் சேமிப்பது சம்பந்தமாக சட்டமியற்றுவது கடினம்.

அடுத்தது அவசரத் தேவை. அதாவது 1997ம் வருடம் நியூசிலாந்தில் தொடர்ந்து வன்புணர்சியில் ஈடுபட்டு வந்த ஒரு மவோரி இனத்தை சேர்ந்த இளைஞனை காவலர்கள் தேடினர். அதற்காக 20லிருந்து 40 வயது வரையிலான மவோரி இன இளைஞர்களை மரபணு சோதனைக்கு தங்களை உட்படுத்திக் கொள்ளுமாறு காவலர்கள் வேண்டினர். “சோதனை முடிவுகள் வேறு எந்த ஒரு காரியத்திற்காகவும் உபயோகப்படுத்தப்படாது, பின்னர் சம்பந்தப்பட்டவர்கள் முன்னிலையிலேயே அழிக்கப்படும்” என்று உறுதியளித்தனர். பலர் சோதனைக்கு முன் வந்தனர். சிலர் தாங்கள் கட்டாயப்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டினர். முடிவில் காவலர்கள் தங்களது வார்த்தையை காப்பாற்றாமல் சோதனை முடிவுகளை தங்களது சேமிப்பில் வைக்க முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. பொதுவாக வன்புணர்ச்சி வழக்குகளில் இதே மாதிரி பிரச்னை ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவிலும் எழுந்துள்ளது. சோதனைக்கு முன் வருவது கட்டாயமில்லை என்று அறிவித்தாலும் ‘சோதனைக்கு முன் வராதவர்கள் மேல் உடனடியாக சந்தேகப் பார்வைகள் விழுவதே’ அவர்களை மறைமுகமாக கட்டாயப்படுத்தும் ஒரு செயல் என்று கூறப்படுகிறது. ஆனால் பயங்கரவாதம் உலகமெங்கும் தனது கரங்களைப் நீட்ட மனித உரிமைகளை தூக்கிப் பிடித்த நாடுகளும், நீதிமன்றங்களும் ‘விஞ்ஞானத்தின் பலன் நமக்கு கிடைக்கையில் அதை பயன்படுத்துவதில் தவறில்லை’ என்று இதுவரை தாங்கள் கொண்டிருந்த நிலையினை தளர்த்தி பொதுக் கருத்தோடு இசைந்து முடிவெடுக்க விழைந்துள்ளன. அமெரிக்காவில் சில மாநிலங்களிலும் உலகின் பல நாடுகளிலும் புதிய சட்டப்பிரிவுகளும் ஏற்படுத்தப்படுவதாக அறிகிறேன்.

இந்நிலையில் அமெரிக்க ராணுவம் சதாம் ஹ¥சைனின் பல்லை சோதித்தால் என்ன? அல்லது உடைத்தால்தான் என்ன? ஜியார்ஜ் புஷ் உலக வர்த்தக கட்டிட இடிபாடுகள் மீது நின்று ‘நாம் புகையடித்து அவர்களைப் பிடிப்போம்’ என்று எக்காளமிட்ட வார்த்தைகளை அமெரிக்க ராணுவம் சதாம் இருந்ததக ஒரு துளையைக் காட்டி நிறைவேற்றியுள்ளது...அது போதும்.
தொடரும்...

1.7.06

பத்திர பதிவு

'நிலம் கையகப்படுத்துதல்' சம்பந்தமாக சமீபத்திய உச்ச நீதிமன்ற தீர்ப்பு நியாயத்தை விட்டு சற்று விலகி இருப்பது எனக்குத் தோன்றுகிறது. அஹ¤ஜா இண்டஸ்டிரீஸ் லிமிடெட் எதிர் கர்நாடக அரசு (JT 2003 (3) SC 566) என்ற வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்புகளின் அடிப்படையில் அமைந்திருந்தாலும், நான் சட்ட ஆலோசனை வழங்கும் நிறுவனம் கூட இரு வருடங்களுக்கு முன்னர் இதே போன்ற ஒரு சட்டக் கூற்றினால் பாதிக்கப்பட்டாலும்....எனக்கு நீதிமன்றங்கள் இந்த விஷயத்தில் எடுத்துக் கொண்ட நிலையுடன் இசைய முடியவில்லை.

முதலில் நிலம் கையகப்படுத்துதல் என்றால் என்ன? அரசுக்கு பல சமயங்களில் தனியார் வசம் உள்ள நிலம் தேவைப்படுகிறது. அவ்வாறாக தேவைப்படும் சமயங்களில் அரசு 'நிலம் கையகப்படுத்துதல் சட்டம்' (Land Aquisition Act) மூலம் உரிமையாளருக்கு அறிவிப்பு கொடுத்து நிலத்தை தனக்கு உரிமையாக்கிக் கொள்ளும். நில உரிமையாளர்கள் பொதுவாக இதனை ஆட்சேபிக்க வேண்டுமானல், ஏதாவது நுட்பமான காரணங்களை வைத்துதான் ரிட் மனு தாக்கல் செய்ய இயலும். ஆனால் இவ்வாறு நிலத்தை கையகப்படுத்துவதற்கு அதன் உரிமையாளருக்கு நிலத்தின் சந்தை விலையை நஷ்ட ஈடாக தர வேண்டும். மேலும் இவ்வாறு கட்டாயமாக பிடுங்கிக் கொள்வதால் சந்தை விலையோடு மேலும் ஒரு முப்பது சதவீதம் சேர்த்து தரவேண்டும். (இதனை ஆங்கிலத்தில் solatium என்பார்கள்)

நிலத்தை கையகப்படுத்தும் முன்னர் அறிவிப்பு தரப்பட வேண்டும். அறிவிப்பினை பெற்ற உரிமையாளர் நிலம் கையகப்படுத்தும் அதிகாரியிடம் சென்று தனது ஆட்சேபங்களை தெரிவிக்கலாம். பொதுவாக அந்த அதிகாரி ஆட்சேபங்களை தள்ளுபடி செய்து கையகப்படுத்துதலுக்கான நஷ்ட ஈட்டினை நிர்ணயிப்பார். அந்தத் தொகை நிலத்தின் உரிமையாளர், அதிகாரியின் அலுவலகம் சென்று வந்த பேருந்து கட்டணத்திற்கு வேண்டுமானால் போதுமானதாக இருக்கும். உரிமையாளர் நஷ்ட ஈட்டினை ஆட்சேபித்தால், அதிகாரி அவராகவே பிரச்னையினை நீதிமன்ற விசாரணைக்கு அனுப்புவார். அங்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் அருகே சமீபத்தில் விற்கப்பட்ட, வாங்கப்பட்ட நிலங்களின் விலையை கருத்தில் கொண்டு கையகப்படுத்தப்படும் நிலத்தின் சந்தை விலையை நிர்ணயிப்பார்கள். இவ்வாறாக நீதிமன்றம் சென்று சந்தை விலையை நிர்ணயிக்காத பட்சத்தில்....அதிகாரி நிர்ணயிக்கும் நஷ்ட ஈட்டுடன் திருப்திப் பட்டுக்கொள்ள வேண்டியதுதான்.

அஹ¤ஜா இண்டஸ்டிரீஸ் என்ற நிறுவனம், 1993ம் வருடம் கர்நாடகத்திலுள்ள ஒரு கிராமத்தில் சுமார் ஒன்றரை ஏக்கம் நிலம் வாங்கியது. பத்திரமெல்லாம் எழுதி பதிவாளர் அலுவலகத்தில் பதிந்தாயிற்று. இவ்வாறு பதிவதை ஒருவர் நிலத்தை வாங்கியதை உலகம் முழுவதும் தெரியப்படும் அறிவிப்பு என சட்டம் கருதும். அதாவது, இன்னாருடைய நிலத்தை இன்னார் இன்ன தேதியில் கிரயத்திற்கு வாங்கியிருக்கிறார் என்பதை அனைவரும் அறிந்து கொள்கிறார்கள் என்று அர்த்தம். அந்த நிலத்தை வாங்க விரும்பும் வேறு எவரும் பத்திரப்பதிவு அலுவலகத்தில் மனுச் செய்து அந்த நிலம் யாருக்கு சொந்தம், யாருக்காவது அடமானம் வைக்கப்பட்டிருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என சட்டம் எதிர்பார்க்கிறது. இவ்வாறு தெரிந்து கொள்வதற்கு நாம் விண்ணப்பிக்கும் சான்றிதழைத்ததன் வில்லங்க சான்றிதழ் என்கின்றனர்.

ஆனால் அஹ¤ஜா இண்டஸ்டிரீஸ் இவ்வாறு நிலம் வாங்கும் பலர் செய்யும் ஒரு தவறினைச் செய்தது. அதாவது நிலவரி வசூலிப்பதற்காகவும், நில அளவைக்காகவும் (சர்வே) அரசாங்க வருவாய் துறை அலுவலகத்திலும் ஒரு ஆவணம் இருக்கும். அங்கும் நிலத்தின் உரிமையாளர் யார் என்ற விபரம் எழுதப்பட்டிருக்கும். பொதுவாக ஒரு சொத்தினை வாங்கியவுடன் வருவாய் துறை அலுவலகங்களிலும் மனுச் செய்து பழைய உரிமையாளர் பெயரை அடித்து புதிய உரிமையாளர் பெயரை பதிந்து கொள்ளலாம். இதனால் நிலவரி அறிவிப்புகள் புதிய உரிமையாளரின் பெயருக்கு வரும். அஹ¥ஜா இண்டஸ்டிரீஸ் இவ்வாறு வருவாய் அலுவலகத்தில் தனது பெயரினை பதியவில்லை. பட்டா என்று பலரால் விளிக்கப்படும் ஆவணம், இந்த வகையான வருவாய் துறையின் ஆவணம்தான். பட்டா என்பது நில வரியை வசூலிப்பதற்கான ஒரு ஆவணமே தவிர, சொத்துரிமைக்கான ஆவணம் அல்ல.

வருவாய் அலுவலகத்தில் தனது பெயரை பதியாமல் போனதற்காக அஹ¥ஜா இண்டஸ்டிரீஸையும் தவறு சொல்ல முடியாது. ஏனெனில் கர்நாடக வருவாய் துறை விதிகளின்படி பதிவாளர் அலுவலகமே ஒவ்வொரு பத்திர பதிவிற்கும் பிறகு அதன் விபரங்களை வருவாய் துறைக்கு அனுப்ப வேண்டும். பின்னர் வருவாய் துறை புதிய உரிமையாளரின் பெயரை பதிந்து அவர் பெயருக்கு அடுத்த நிலவரி அல்லது நிலவரி ரசீதினை தரும். அஹ¥ஜா இதனை கண்டுகொள்ளாமல் பழைய பெயரிலேயே ரசீதுகள் பெற்று வந்தது.

தொழிற்பேட்டை அமைப்பதற்காக கர்நாடக அரசு அஹ¥ஜாவின் நிலங்களையும் மற்றும் அருகிலுள்ள பல நிலங்களையும் 1997ம் ஆண்டு கையகப்படுத்த எண்ணி, அரசிதழில் (Government Gazettee) அறிவிப்பு கொடுத்தது. அதனை அஹ¥ஜா கவனிக்காமல் போனதில் வியப்பில்லை. பின்னர் அரசு, வருவாய் துறை வணங்களை சோதித்து பழைய உரிமையாளர் பெயருக்கு அறிவிப்பு அனுப்பியது. அதனை பெற்றுக் கொள்ள அவரும் அங்கில்லை. பின்னர் உரிமையாளர் வராதவராக கருதப்பட்டு நில கையகப்படுத்தல் அதிகாரி தானே நஷ்ட ஈடு தீர்மானித்து நிலத்தை கையகப்படுத்தி விட்டார்.

வெகுதாமதமாக கையகப்படுத்தலை தெரியவந்த அஹ¥ஜா இண்டஸ்டிரீஸ் உரிமையாளாரன தனக்கு அறிவிப்பு தராமல் நிலம் கையகப்படுத்துதல் தவறு என வழக்கு தொடர்ந்தது. அரசோ, ‘பத்திரப்படி அவர் உரிமையாளர் என்றாலும் தாங்கள் வருவாய்துறை ஆவணங்களில் யார் பெயர் காணப்படுகிறதோ அவருக்கே அறிவிப்பு அனுப்புவோம், எனவே அறிவிப்பில் தவறில்லை’ என வாதிட்டது. அஹ¥ஜா இண்டஸ்ட்ரீஸ், ‘வருவாய்துறை ஆவணங்கள் வெறுமே வரிவசூலிக்கத்தானேயொழிய உரிமையாளர் யார் என்பதை தீர்மானிக்க அல்ல. எனவே அரசு பதிவாளர் அலுவலகங்களில் நில விபரங்களை தேடியிருந்தால் தற்போதைய உரிமையாளரின் பெயர் கிடைத்திருக்கும்’ என வாதிட்டது. கடைசியில் பாவம், உச்ச நீதிமன்ற வருவாய்துறை ஆவணங்களை மட்டுமே பார்வையிட்டு கொடுக்கப்பட்ட அறிவிப்பு சரிதான். பத்திர அலுவலகங்கெளுக்கெல்லாம் நில ஆர்ஜித அதிகாரிகள் சென்று ஆய்வு நடத்த வேண்டியதில்லை என்று தீர்ப்புக் கூற அஹ¤ஷா இண்டஸ்டிரீஸின் நெற்றியில் பட்டை நாமம்!

எனது சொந்த கட்சிக்காரரே இதே போன்றதொரு வழக்கில் பாதிக்கப்பட்ட அனுபவத்தை வைத்து எனக்கு இந்தவகையான சட்டக் கருத்து உடன்பாடானது அல்ல. எது எப்படியோ, இனியாவது நிலம், கட்டிடம் கிரயம் முடிக்கையில் பத்திரம் பதிந்த கையோடு...சொத்துவரி, கிஸ்தி, நிலவரி, பட்டா அடுத்து என்ன என்னவோ அனைத்தையும் உங்கள் பெயருக்கு மாற்றி விடுங்கள். பின்னர் அனாவசிய பிரசனை இல்லையே!

மும்பை
20.12.2003

(சொத்து சம்பந்தமான பத்திரங்களை பதிவதற்கு இன்று முதல் சம்பந்தப்பட்டவரின் புகைப்படமும் தேவை. எனவே புகைப்படத்தினை எடுத்துச் செல்ல மறவாதீர்கள். வேறு சிலவும் முக்கியம் என்று சுட்டிக்காட்ட இக்கட்டுரை)