26.9.09

யாருமற்ற ஒருவனும், மோடியும்!

சோம்பேறித்தனம் கெட்ட குணம்தான். ஆனால் ஒரு நன்மை இருக்கிறது. திரையரங்குகளுக்கு செல்லாமல் இருப்பது. ஆக, ‘உன்னைப் போல ஒருவ’னையும் பார்க்கவில்லை.

முன்பெல்லாம் திரைப்படம் பார்க்காவிட்டாலும், தொலைக்காட்சிகளில் துண்டு துண்டாக பார்த்து மனதில் கதையை ஒட்டிக் கொள்ளமுடியும். தற்பொழுது அந்த வசதியும் இல்லை. ஆனாலும், ‘உன்னைப் போல ஒருவ’னைப் பொருத்தவரை வலைப்பதிவுகளில் எழுதிக் குவிப்பவற்றைப் படித்து படித்து, ஏதோ படம் பார்த்தது போலவே இருக்கிறது.

கமல்ஹாசனின் ஆழ்மனதில் இருப்பதை பிய்த்துப் பிடிங்கி வெளியே எடுத்து, ‘பார், இந்துத்வா’ என்று ஒரு பக்கமும், ‘இல்லை, இல்லை முற்போக்குத்தனம்’ என்று இன்னொரு பக்கமுமாக நின்று பதிவர்கள் விவாதித்து வருவது என்னைப் போல வாசகர்களின் மனதை பெண்டுலம் போல இங்கேயும் அங்கேயும் அல்லாட வைக்கிறது!

‘இந்துத்வாவும் இல்லை, முற்போக்குத்தனமும் இல்லை. கமல் ஒரு வியாபாரி. அவருக்கென்று பெரிய கருத்து எல்லாம் அவரிடம் இல்லை. அவ்வப் பொழுது சந்தையில் எந்தக் கருத்து விலை போகுமோ, அதை வைத்து படமெடுப்பது அவரது தந்திரம்’ என்றும் சிலர்.

கலப்பு மணத்தை ஆதரிக்கும் எவரும், வகுப்புவாதியாக இருக்க முடியாது என்று நான் கருதுவதாலும், கமல் ஹாசன் என்றுமே ஒரு கருத்தினை தெளிவாக வெளிப்படுத்தியது இல்லை என்பதாலும்...நான் ‘வியாபாரி’ வகுப்பில் சேர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

கமல் திரைப்படங்களை வைத்து, பெரிதாக சொத்து சேர்க்க நினைக்கவில்லை என்றால், ஒரு வியாபாரி தனது வெற்றியை வெறுமே தான் பெறும் பண லாபத்தை வைத்து மட்டுமே கணக்கிடுவதில்லை என்பதுதான் என்னுடைய பதில்.

‘கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்...’ என கமல் எப்பொழுதெல்லாம் வேறு மொழித் திரைப்படமோ அல்லது காட்சியோ அவரை பாதிக்குமோ, உடனே அதனை தமிழில் எடுக்க முயலுவார். அப்படியே ‘வெட்னஸ்டே’ படக் கருத்தால் அல்ல, படத்தால் பாதிக்கப்பட்டே உபோஒ தயாரித்துள்ளார் என்று, பாவம் ஒரு பெனிபிட் ஆப் டவுட் கொடுத்து விடலாமே!

-oOo-

‘காமன் மேன்’ என்ற பொதுப்புத்திக்கு செலக்டிவ் அம்னீஷியா என்றும் அதற்கு வெடிகுண்டு வைத்த பயங்கரவாதம்தான் தெரியும் என்றும் அதற்கு முன் நடந்த பயங்கரவாதங்கள் தெரியாது என்றும் வாதிடுபவர்கள் கூறுவதைத்தானே, திரைக்கதையிலும் சொல்லப்படுகிறது. நடைமுறையில் என்ன இருக்கிறதோ, அதை மாற்றாமல் கமல் எடுத்திருக்கிறாரே!

-oOo-

தீவிரவாதிகளாக, இஸ்லாமியர்களை காட்டியுள்ளாராம். குண்டு வைத்த குற்றத்திற்காக, இஸ்லாமியர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டதே இல்லையா? இல்லாத ஒன்றை  படமெடுக்கவில்லையே. நிசத்தை பிரதிபலிப்பதுதானே திரைப்படமும்.

ஆனால் இந்த வாதத்திற்கு எதிராக ‘இஸ்லாமியர்கள் எல்லாம் தீவிரவாதிகள் இல்லை. ஆனால் தீவிரவாதிகள் அனைவரும் இஸ்லாமியர்கள்’ என்று ஒரு சந்திராயன் கண்டுபிடிப்பு எடுத்து வைக்கப்படுவதுதான் விந்தை!அரசிடமும், நிலுவையிலுள்ள சட்ட அமைப்புகளிலும் தங்களுக்கு நியாயம் கிடைக்காது என்று (தவறாக) நினைப்பவர்களால்தான், மற்றவர்களின் கவனத்தை கவர பயங்கரவாதம் முன்னெடுக்கப்படுகிறது.

‘அந்நியனி’ல் இருந்து ‘உபோஒ’ வரை இதைத்தானே சொல்கிறார்கள். ஏன், கமலே ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் வரும் பாடல் காட்சியில் ‘டுமீல் டுமீல்’ என்று சும்மா நிற்பவர்களைக் கூட போட்டுத் தள்ளுகிறாரே.

வேடிக்கை என்னவென்றால், காமன் மேனை, படத்தில் ஒரு இந்து என்று அந்தப்பக்கமும், இல்லை முஸ்லீம் என்று இந்தப்பக்கமும் வாதிடுகிறார்கள். ஆனால், மயிரினைப் பிளப்பது போல் ஆராய்ந்து, ‘...ம் காமன் மேன் குண்டு வைக்குமளவுக்கு துணிவதால்தான் அவரை முஸ்லீமாக காட்டியுள்ளார்கள்’ என்ற அளவிற்கு வாதம் வளரவில்லை!

எனவே படம் யதார்த்தத்தை பிரதிபலிப்பதுதான்...

-oOo-

அப்படியாயின், படத்தில் வரும் முஸ்லீம் தீவிரவாதிக்கு மூன்று மனைவிகளாமே? இங்கு இடிக்கிறது.

படத்திலுள்ள காமன் மேனுக்கு குண்டு வைப்பது மட்டுமே தீவிரவாதமாக தெரிந்தது யதார்த்தம். அவரது கேரக்டரை சிதைக்க கதாசிரியருக்கு உரிமை இல்லை. ஆனால் கதையில் வரும் ஒரு முஸ்லீம் பாத்திரத்திற்கு மூன்று மனைவியை உருவாக்குவது கதாசிரியர். ‘ஹம் பாஞ் அவுர் ஹமேன் பச்சீஸ்’ என்று குஜராத் முதல்வர் மோடியால் உருவாக்கப்பட்ட பொதுப்புத்தியால் கட்டமைக்கப்பட்டவர்தான் கதாசிரியர் என்று யாராவது வாதிட்டால்...என்னிடம் எதிர்வாதம் இல்லை.

வசனம் எழுதியவர் எனக்குத் தெரிந்தவரை அப்பழுக்கு இல்லாத மனிதாபிமானி. அவருக்குதான் முஸ்லீம் நண்பர்கள் நிறைய இங்கு உண்டே...கொஞ்சம் கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கலாம். எத்தனை முஸ்லீம்கள் இங்கு மூன்று, வேண்டாம் இரண்டு மனைவியாவது வைத்திருக்கிறார்கள் என்று.

எனக்குத் தெரிந்து இரண்டு மனைவிகள் கட்டியவர் எழுத்தாளர் பாலகுமாரன். ஆனால் அவர் இந்து. கலைஞர் இஸ்லாமியர் இல்லை.

கமல்?

அவர் யாருமற்றவர்

-oOo-

உபோஒனில் ஒரு நாளில் தீவிரவாதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று கமல் கேட்டு அவர்கள் கமலிடம் ஒப்படைக்கப்படுவதாக கதை செல்கிறது என்று அனுமானிக்கிறேன்.

ஒரு நாளில் அது சாத்தியமில்லை. காந்தகாரில் பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்த விமான பயணிகளை மீட்க இந்திய சிறையில் இருந்த தீவிரவாதிகள் நாம் விடுவிக்கவில்லை. ஏனெனில் இவ்வாறு விடுவிப்பதற்கு சட்டம் இடம் கொடுக்காது. அவர்களுக்காக மனு தாக்கல் செய்யப்பட்டு பின்னர் விடப்பட்டார்கள். எதையும் சட்டப்படி செய்ய வேண்டுமே!

பொதுவாக தீவிரவாதிகளோடு பேரம் பேசுவது ஒரு கலை. அந்தக் கலையின் வெற்றி தீவிரவாதிகளோடு பேசி எவ்வளவு நேரம் வாங்க முடியுமோ அவ்வளவு நேரம் வாங்குவதில் இருக்கிறது. காந்தகார் விமான நிலைய கடத்தலில் அவர்களோடு தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருந்த உரையாடல்களை படித்திருக்கிறேன்.

மோகன்லால் சட்டச்சிக்கலை எல்லாம் கமல்ஹாசனிடம் எடுத்துச் சொன்னாரா என்பது தெரியவில்லை. அதற்காக படத்தை பார்க்கலாம் என நினைக்கிறேன். ஆனால் ரவி சிரீனிவாஸ் இங்கு அமைப்புகள் எவ்வாறு இயங்குகின்றன என்பது புரியாமல் எடுக்கப்பட்ட படம் என்று வாரியிருப்பதிலிருந்து, ஏமாற்றம்தான் மிஞ்சும் என நினைக்கிறேன்.

மதுரை
26/09/09


பி.கு. ‘அவர் யார் என்ற கேள்விக்கு யாருமற்றவர் என்பதுதான் பதிலாக இருக்க முடியும்என்று யார் யாரைப் பற்றி குறிப்பிட்டார் என்ற கேள்விக்கு பதில் யாரிடமாவது உள்ளதா?

க்ளூ: ஈழத்தமிழர்களும் இந்த போட்டியில் பங்கு கொள்ளலாம். 

20.9.09

பிரபலங்களும், சங்கடங்களும்...நீதிபதி கண்ணன் தனது வலைப்பக்கத்திற்கு மூடு விழா நடத்திக் கொண்டிருக்கிறார். வலையுலகம், பிரபலமானவர்களுக்கு என்று தனி இருக்கை தருவதில்லை. அங்குதான் தர்மசங்கடமே!

பிரபலமானவர்கள், சாமான்யர்களை விட்டு விலகியிருப்பதே நல்லது. இல்லை, சசி தரூர் மாதிரி ஏடாகூடமாக மாட்டிக் கொள்ள வேண்டியதுதான். ஏதோ டிப்ளமோட் என்கிறார்கள். எதிரிலிருப்பவரின் மனநிலையினை படித்து, அவரை வசியம் செய்யும் வகையில் பேசும் திறமை வேண்டும் என்கிறார்கள். இவர்களது டிப்ளமோடிக் திறமை இவ்வளவுதானா என்று இருக்கிறது.

முன்பு ஒரு ‘டிப்ளமேட்’ தலையறுந்த கோழிகள் (headless chicken) என்று கூறி மாட்டிக் கொண்டார். இந்த ‘டிப்ளமேட்’ மாட்டுத் தொட்டில் (cattle class) என்று கூறி சிக்கலில் உள்ளார்.

மொழி அறிவு என்பது அவரவர் மனதிற்குள் பேசி மகிழ்வதற்கு அல்ல. மாறாக மற்றவர்களோடு தொடர்பு கொள்ளும் சாதனம் அல்லவா? எனவே இந்த வார்த்தைகள் யாரை சென்று அடையப் போகிறது என்பதை தீர்மானித்து அதற்கு ஏற்ற மொழியினை பயன்படுத்துவதே சிறந்தது.

மாறாக என்னுடைய அகராதியில் இந்த பதத்திற்கு அர்த்தமே வேறு என்று எவ்வளவுதான் உரக்கக் கூறினாலும், யார் காதில் விழப் போகிறது?

தினகரன் போன்ற பத்திரிக்கைகளில், ‘சசி தரூர் விமான எகனாமி கிளாஸில் பயணிப்பது, மாட்டுத் தொழுவத்தில் இருப்பது போன்றது’ என்றார் என்று தலையங்கம் எழுதிக் கொண்டிருக்கின்றனர்.


-oOo-

தினகரனின் மொழி பெயர்ப்பு குயுக்தியானதா என்று தெரியாது. ஆனால், நீதிபதி தினகரன் மீது சென்னை வழக்குரைஞர்கள் சிலர் அளித்த ஒரு புகாரில் குயுக்தியான (mischievous) மொழி பெயர்ப்பு ஒன்றினை கண்டேன்.

அந்த புகார் நகல் ஏதோ வலைப்பக்கத்தில் படிக்க நேர்ந்தது. அதில் ஒரு இடத்தில், அவரது நிலத்திற்கு செல்லும் சாலைக்கு ‘Emperor of Justice P.D.Dinakaran Road’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக கண்டேன். என்னடா, இவ்வளவு அருவெறுக்கத்தகுந்த பெருமை கொண்டவரா அவர் என்று நினைத்தேன். மீண்டும் ஒரு இடத்தில் அவ்வாறாக குறிப்பிடப்பட்டு அடைப்புக்குறிக்குள் ‘Needhi Arasar’ என்று இருந்தது.

ஐஸ்டிஸ் என்ற ஆங்கில வார்த்தைக்கு ‘நீதி அரசர்’ என்று இங்கு குறிப்பிடுகிறார்கள். அவலட்சணாக உள்ள அந்த பட்டத்தினை நீதிபதிகள் எவ்வாறு ஏற்றுக் கொள்கின்றனரோ? ஈழத்தில் ‘நீதி நாயகம்’ என்று ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் குறிப்பிடுகிறார்கள். எனினும், நீதி அரசர் என்பதை தமிழ் நன்கு அறிந்த அந்த வழக்குரைஞர்கள் ‘Emperor of Justice’ என்று தங்களது புகாரில் மொழி பெயர்த்து இருந்தது, அவர்களது நோக்கத்தினை கேள்விக்குள்ளாக்குகிறது.

ஏனெனில் அந்தப் புகாரினை படிக்கும் தமிழ் தெரியாத எவருமே, இப்படிப்பட்ட அகங்காரம் கொண்டவரா, இந்த தினகரன்’ என்று நினைக்க வைக்கும். படிப்பவர்களின் மனதில் தினகரனைப் பற்றிய எண்ணம் ஒன்றினை ஏற்றி விட்டால், பின்னர் மற்ற விடயங்கள் அந்த எண்ணப்பாட்டுடனே அணுகப்படும்.

புகார் எழுதியவர்கள் சற்று கவனமுடனிருந்திர்க்கலாம்!

-oOo-

ஆனாலும் நமது நீதிபதிகள் பலரின் படோடாபகம் பற்றி குறிப்பிட்டாக வேண்டும். ஆனால், வெளிப்படையாக இங்கு எழுதுவதற்கு நான் ஒன்றும் சசி தரூர் அல்ல!

மதுரை
20/09/09

நீதிபதிகள், அச்சங்கள்...நீதிபதிகளைப் பற்றி என்க்குள் எழுந்த அச்சங்களில், எனது முந்தைய வலைப்பக்கங்களில் தெரிவித்திருந்த சில விடயங்கள் உண்மையாகி வருகிறது என்றாலும், அவை மகிழ்ச்சியளிப்பதாக இல்லை!


சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னர், தேர்தலில் நிற்கும் அரசியல்வாதிகள் தங்களது சொத்துக் கணக்கினை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்புக் கூறிய பொழுது, மத்தியதர வர்க்கம் முழுவது எழுந்து நின்று கை தட்டியதில், உச்ச நீதிமன்றம் பெருமிதப்பட்டது. ஆனால், அத்தகைய விபரங்கள் வெறுமே வெட்டிப் பேச்சு (gossip) பேசுவதற்கு மட்டுமன்றி வேறு யாதொன்றுக்கும் பலனளிக்காத ஒரு கட்டுப்பாடாக மட்டுமே இருக்கப் போவதல்லாமல், வேறொன்றுக்கும் உதவப் போவதில்லை என்று உணர்ந்த நான், அந்த தீர்ப்பினை விமர்சித்து ஒரு கட்டுரை எழுதினேன்.
-oOo-


கடந்த வருடம் உச்ச உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களில் வெளிப்படையான அணுகுமுறை (Transparency) வேண்டும் என்ற கோரிக்கை பற்றி குறிப்பிட்ட நான், ‘ஆனால், மேலும் மேலும் நீதிபதிகளைப் பற்றிய தர்ம சங்கடமான செய்திகள் வெளி வர நேரிட்டால், நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் முறை மாற வேண்டும் என்ற பொதுக்கருத்து வலுப்பெறலாம்.’ என்று கூறியிருந்தேன்.


தற்பொழுது நீதிபதி. தினகரன் அவர்களைப் பற்றிய சர்ச்சையில், நீதிபதிகள் நியமனத்தில் கொலேஜியம் முறை தோற்று விட்டது. நீதிபதிகள் ஆணையம் (Judicial Commission) ஒன்றினை ஏற்ப்படுத்தி நீதிபதிகள் நியமிக்கப்படும் வண்ணம் அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுப்பப்படுகின்றன!


-oOo-


நமது மத்தியதர வர்க்க ‘அம்பி’கள் எப்பொழுதும் ‘அந்நியனை’ தேடிக் கொண்டேயிருப்பார்கள். அவ்வப் பொழுது சில அந்நியன்கள் தோன்றி பின்னர் மறைந்து போவார்கள். பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்ற நீதிபதி கண்ணன் அப்படி ஒரு அந்நியனாக சமீபத்தில் முன்னிறுத்தப்பட்டார்.


விளைவு......அதற்கு முன்னர் வெளியே பலர் அறிந்திராத அவரது வலைப்பக்கத்தின் ஹிட்டுகள் எகிறியது. நான் சில மாதங்களுக்கு முன்னர் ‘வலைபதியும் நீதிபதிகள்’ என்ற எனது வலைப்பதிவில் "ஆயினும் குடிமக்களாகிய உங்களுக்கும் எனக்கும் உள்ள பேச்சுரிமை, அதை நமக்கு உறுதிப்படுத்தும் நீதிபதிகளுக்கு இல்லை, பாவம்!' என்று அச்சப்பட்டபடியே, தர்மசங்கடங்கள்


இறுதியில் ‘தொடர்ந்து வலைப்பதிவதா? வேண்டாமா?’ என்று ஹாம்லெட் குழப்பத்தில் இருக்கிறார்.


மதுரை
200909