25.10.08

நன்றி, அஞ்சா நெஞ்சர்களுக்கு...

மும்பையிலிருந்து மதுரைக்கு வருவதற்கு முன்பு, நாங்கள் எடுத்த ஒரு முக்கிய முடிவு, தொலைக்காட்சிக்கு கேபிள் இணைப்பு ஏதும், ஒரு வருடத்திற்காகவது பெறக்கூடாது. தொலைக்காட்சி இல்லாத வீடு எப்படித்தான் இருக்கிறது என்று பார்த்து விடலாம் என்று.

உண்மையிலேயே இனிமையான காலம் அது! காலை பாடலைக் கேட்டபடியே அலுவலகம் கிளம்ப முடிந்தது. விடுமுறை தின இரவுகளில், குறுந்தகடுகளில் நல்ல திரைப்படங்களை பார்த்து முடித்ததும், அதே நினைவுடன் படுக்கைக்கு செல்ல முடிந்தது.

முக்கியமாக வீட்டுக்கு வருபவருடன் முகம் பார்த்து பேச முடிந்தது...

-oOo-

டிசம்பர் மாதம் தமிழகத்தை தாக்கிய சுனாமி எங்களை அண்டவில்லை. பத்திரிக்கையில் படித்த செய்திகளோடு நின்று போனது சுனாமியின் தாக்கம். மனதைப் பிசையும் காட்சிகள் கண் முன்னே நிற்கவில்லை.

ஆனாலும் சுமார் ஒரு வருடம் கழித்து தற்செயலாக எடுத்த முடிவுதான்...கேபிள் இணைப்பு பெறலாம் என...மீண்டும் வந்து உட்கார்ந்து கொண்டது, சனியன்!

-oOo-

நேற்று மாலை வீடு திரும்புகையில், சுற்றுச்சுவர் கதவும் பூட்டியிருந்தது.

“ஆமா, ராயல் கேபிள் விஷனில் இருந்து வருகிறோம், இனி அவர்களிடம்தான் இணைப்பு பெற வேண்டும் என்று தொந்தரவு செய்தார்கள். அதான்”

“நம்ம ஆட்கள் என்ன சொல்கிறார்கள்”

“அவங்கல்லாம் இப்பத்தான், ரிமாண்ட்ல இருந்து வந்தாங்களாம். எல்லோரையும் போலீஸ் புடிச்சுக்கிட்டு போயிட்டாங்களாம். நீங்க டிடிஹெச் வாங்கிட்டீங்கன்னு சொல்லுங்கன்னு சொல்றாங்க”

“ஆமா, அப்படியே சொல்லிடு”

-oOo-

சிறிது நேரம் கழித்து, வேகமான வந்த மனைவி, ‘வெளியே நிறுத்தி வச்சிருந்த ஸ்கூட்டரில் என்னோட பர்ஸ வச்சிட்டு வந்திட்டேன். இப்ப காணோம்...மொபைல் போனும் போச்சி...அந்த ராய்ல் டிவிகாரங்கதான் தூக்கிட்டு போயிருக்கணும்”

உண்மைதான், எங்கள் வீடு டெட் எண்ட். வேறு யாரும் வருவதில்லை.


-oOo-

“கேபிளை கட் பண்ணிட்டாங்க. இனிமேல் நமக்கு வராது. அவங்கதான் ராயல்காரங்கதான்...”

இது வரை பத்திரிக்கையில் படித்தும், மற்றவர்கள் சொல்லக்கேட்டதுமான அராஜகம் இதோ என் கண் முன்னே எழுந்து நிற்க, ஏதும் இயலாதவனாகிப் போனவன் போல உணர்ந்ததில், பிறந்த அசதியிலும் அந்த வைராக்கியம் பிறந்தது.

“நமக்கு ஒருத்தனும் வேண்டாம்”

மதுரை
261008

Eravikulam National Park, Munnar

வைகோ கைது - அன்றும், இன்றும்...


ஏன் இவ்வாறு ஒரு நாட்டின் பிரதமரில் இருந்து கடைசிக் குடிமகன் வரை சட்டத்தை மீறும் நிலை ஏற்படுகிறது? ஏன் ஒரு மத்திய அமைச்சரே 'நான் தடை செய்யப்பட்டுள்ள இயக்கத்தினை இருபத்தைந்து முறை ஆதரித்துள்ளேன்' என்று கூற தைரியம் கொள்கிறார்?”

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிப்பதை சட்டம் போட்டு தடை செய்ய முயலும் அரசு ஒன்றினை மறந்து விட்டது. ஏதோ இந்த சட்டம் போட்டதால் மக்கள் ஆதரவளிப்பதிலிருந்து விலகவில்லை. அதற்கு முன்னரே நடந்த ராஜீவ் காந்தி கொலையே பெருமளவு காரணம். அந்த கொலையால் மக்களிடம் தோன்றிய பொதுக்கருத்தின் விளைவே விடுதலைப்புலிகள் இயக்கம் இங்கு தடை செய்யப்பட்டது. அந்த மக்களுக்கு தங்களது சிந்தனையில் அதே நிலையில் நீடிப்பதற்கும் காலப்போக்கில் மாற்றிக் கொள்வதற்கும் உரிமை இருக்கிறதுவைகோ தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ள சூழ்நிலையில், நான்கு வருடங்களுக்கு முன்னர் இட்லி வடை என்ற பதிவர் தனது வலைப்பதிவில் எழுதிய கருத்துகளுக்கு பதிலாக எழுதிய ஒரு கட்டுரையை மீண்டும் எடுத்துப் படித்தால்...இன்றைய சூழ்நிலையில் ஏதும் மாற்றம் இல்லை.......மக்களிடையே நான் கணித்த மனமாற்றம் தவிர...

அந்த பழைய கட்டுரை எனது வலைப்பதிவிலும் உள்ளது
http://marchoflaw.blogspot.com/2006/10/ii.html
http://marchoflaw.blogspot.com/2006/09/i.html


மதுரை
251008

24.10.08

நளினிக்கு கருணை, கானல் நீர்தானா? - 4


அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளுக்கு மன்னிப்பு (pardon) அளிப்பதற்கு குடியரசுத்தலைவர் மற்றும் மாநில அளுனர்களுக்கு உள்ள அதிகாரம் தவிர, அரசாங்கத்திற்கு தண்டனையைக் குறைக்கும் (commute) அதிகாரம் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 433ன் கீழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரத்தினை பயன்படுத்தி, அரசு நினைக்கையில் நளினிக்கோ அல்லது சராதானந்தாவுக்கோ தண்டனனயை குறைக்கலாம். இங்கு நாம் விவாதிக்கும் தீர்ப்பு, அரசின் இந்த அதிகாரத்தின் குறுக்கேயும் நிற்க முடியாது. ஏனெனில், நீதிபதிகள் அரசின் இந்த அதிகாரத்தினைப் பற்றி தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டாலும், அரசு இந்தப் பிரிவு அளிக்கும் அதிகாரத்தினைப் பயன்படுத்தி தண்டனையை குறைக்க இயலாது என்றும் கூறவில்லை.


குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள இதே அதிகாரம் இந்திய தண்டனன சட்டம் பிரிவு 54 மற்றும் 55ன் கீழும் அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது.


ஆனால் பிரிவு 433Aன் படி ஒருவரின் மரணதண்டனையானது ஆயுள் தண்டனையாக இந்தப் பிரிவின்படி குறைக்கப்பட்டால், அவர் குறைந்தபட்சம் 14 ஆண்டுகள் சிறையில் கழிக்காமல் விடுதலை பெற முடியாது. இந்த 14 ஆண்டு கட்டுப்பாடே ஆயுள் தண்டனை என்றால் 14 ஆண்டுகள்தான் என்ற தவறான எண்ணம் சாதாரண மக்களில் மனதில் தோன்ற காரணம்.


-oOo-


குற்றவாளிக்கு மன்னிப்பு மற்றும் தண்டனை குறைப்பு தவிர தண்டனை தள்ளுபடி (remission) என்பதும் உள்ளது. குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 432ன் படி குற்றவாளியானவர் தனது தண்டனையினை தள்ளுபடி செய்ய கோரலாம். இந்த தள்ளுபடியானது, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் மட்டுமல்லாமல், சிறை விதிகள், மற்றும் பிற விதிமுறைகளின்படியும் கோரலாம்.


இவ்விதமான தள்ளுபடிகளை கணக்கிட ஒருவரது சிறைக்காலம் அறுதியிட்டாலே இயலும். உதாரணமாக, ஒருவருக்கு ஐந்தாண்டுகள் தண்டனை என்றால், ஆண்டுக்கு இத்தனை நாட்கள் என அவருக்கு விதிகளின்படி கிடைக்கும் தள்ளுபடியினை கணக்கிட்டு விடலாம்.


ஆனால் ஆயுள்தண்டனை என்பதில் தள்ளுபடி அளித்தாலும், ஆயுள் தண்டனை ஆயுள் தண்டனையாகவே இருக்கும். கணிதத்தில் ‘இன்பினிட்டி’ (infinity) போல. இதைத்தான் நீதிபதிகள் சுட்டிக்காட்டி ஆயுள் தண்டனைக்கு தள்ளுபடி என்பது கிடையாது என்று குறிப்பிடுகிறார்கள்.


பொதுவாக, அரசு ஆயுள் தண்டனையினை 20 ஆண்டு காலம் என்று கருதி ஒரு உத்தரவு பிறப்பித்து பின்னர் 20 ஆண்டுகளுக்கான தள்ளுபடிகளை கணக்கிடுகிறது. 20 ஆண்டுகளுக்கு சுமார் 6 காலம் அதிகபட்சம் தள்ளுபடி கிடைக்கும். இவ்வாறான முறையில்தான் அரசு ஆயுள் தண்டனை பெற்ற நபர்களை 14 ஆண்டுகளில் விடுதலை செய்கிறது. அதனால்தான் கோட்சே, நளினி போன்றவர்கள் தாங்கள் 14 ஆண்டு காலம் சிறையில் கழித்து விட்டதால் விடுதலை செய்ய வேண்டும் என்று கோருகிறார்கள்.


இந்த முறையினையே உச்ச நீதிமன்றம் சராதானந்தாவின் வழக்கில் தவறு என்று கூறுகிறது. அதாவது அரசு எவ்விதம் இவ்வாறு ஆயுள் தண்டனை என்பது 20 வருடம் என கருதுகிறது என்ற கேள்வியினை எழுப்பி அதற்கு சட்டபூர்வமான அதிகாரம் இல்லை என்கிறது.


இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 57ல் தண்டனையை வகுக்கும் தேவை நேர்ந்தால் ஆயுள் தண்டனையை 20 ஆண்டுகள் என கணக்கிடலாம் என்று உள்ளது. உதாரணமாக பிரிவு 511ன் படி ஏதாவது குற்றத்தினை செய்ய முயன்றால் அந்த குற்றத்திற்கான தண்டனையில் பாதி தரலாம் என்று உள்ளது. அதே போல ஒருவர் குற்றம் செய்ய தூண்டி (abet) பின் அந்த குற்றம் செய்யப்படாமல் போனாலும், தூண்டியவர் அந்தக் குற்றத்திற்கான தண்டனையில் கால் பகுதி தரலாம் என்று பிரிவு 116 கூறுகிறது. இம்மாதிரி காரணங்களுக்காகவே 20 வருட கணக்கே தவிர ஆயுள் தண்டனை 20 ஆண்டு என்று எடுத்துக் கொள்வதாக உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளதை நீதிபதிகள் சுட்டிக்காட்டுகின்றனர். அந்தக் கருத்து சரியானதே!


ஆயினும் நீதிமன்றம் கவனிக்கத் தவறிய ஒரு விடயம், இன்றுள்ள நிலையிலேயே, அரசு குற்றவாளியின் ஆயுள் தண்டனையினை 20 ஆண்டு கால தண்டனையாக கருதி (deem) அரசு ஒரு உத்தரவு பிறப்பித்தாலொழிய குற்றவாளி மேலும் தள்ளுபடி பெற்று வெளிவர இயலாது. எனவே அவ்வாறு இல்லாமல் அரசு ஆயுள் தண்டனையினை 20 ஆண்டுகால தண்டனையாக குறைத்தால், தள்ளுபடி சாத்தியமாகலாம். இரண்டு உத்தரவிற்கும் அரசு மனது வைக்க வேண்டும்.


இதன் விளைவு, அவ்வாறு ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டுமென்று ஒருவர் அரசை நிர்பந்திக்க முடியாது. அரசு மனது வைத்தால்தன் இவை இயலும். எனவே ஆயுள் தண்டனை பெற்றவர் மன்னிப்போ அல்லது தண்டனை குறைப்போ பெறுவது அவரது உரிமையல்ல என்பது போலவே தோன்றுகிறது.


அவ்வாறு என்றால், அடிப்படையில் சராதனந்தாவின் தீர்ப்பு புதிதாக எதனையும் கூறவில்லை என்றுதான் கூற வேண்டும். சாகும் வரை வெளியில் விடக்கூடாது என்ற கட்டளையும் தேவையில்லாத ஒன்று. ஏனெனில், குற்றவாளியை விடுதலை செய்ய அரசு நினைக்கையில் தனது மன்னிக்கும் அல்லது தண்டனைக்குறைப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்து விடலாம்.


அதே போல வழக்கில் நீதிபதிகள் முக்கிய பிரச்னையாக எழுப்பிய மரண தண்டனைக்கு மாற்றாக வழங்கப்படும் ஆயுள் தண்டனையை சாதாரண ஆயுள் தண்டனையிலிருந்து வேறு படுத்த முடியுமா? என்ற கேள்வியும் அர்த்தமற்றதாகி விடுகிறது. எந்த ஒரு ஆயுள் தண்டனைக்குமே, நீதிபதிகளின் கருத்துப்படி தள்ளுபடி வழங்க இயலாது என்பதால், அனைத்து ஆயுள் தண்டனைகளும் அரசு மனது வைக்கும் வரை ஆயுள் வரைக்குமே!


-oOo-


ஆயுள் தண்டனை என்பது 20 ஆண்டு காலம் என்பது அல்ல என்றாலும், பல முறை உச்ச நீதிமன்றம் குற்றவாளியை குறைந்தது 20 ஆண்டு காலமாவது சிறையில் வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அவற்றை தங்களது தீர்ப்புக்கு ஆதரவாக நீதிபதிகள் எடுத்துக் கொள்கின்றனர். ஆயுள் தண்டனை என்பது ஆயுள் வரை என்று கூறிய பிறகு, நீதிமன்றம் சாகும் வரை என்பதோ அல்லது 20 ஆண்டு காலம் என்பதோ, அரசுக்கு ஒரு அறிவுறுத்தல் என்றே எடுத்துக் கொள்ள இயலும்.


உச்ச நீதிமன்றம் ஏற்கனவே சாகும் வரை விடுவிக்கக் கூடாது என்று இரு வழக்குகளில் கூறியுள்ள தீர்ப்புகளும் சுட்டிக்காட்டப்படுகிறது. முதலாவது வழக்கில் குற்றவாளிக்கு மரணதண்டனைதான் என்று நீதிபதிகள் மனதளவில் தீர்மானித்து விட்ட நிலையில், அவர் சாகும் வரை சிறையிலேயே இருக்க தயாராக இருக்கிறார் என்ற வாதம் வைக்கப்பட அதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் ஏறக்குறைய ஒரு சமரசத்தீர்வு போல அவருக்கு எவ்வித தள்ளுபடியோ அல்லது தண்டனைக் குறைப்போ தரக்கூடாது என்று தீர்ப்புக் கூறியுள்ளது (சுபாஷ் சந்தர் எதிர் கிருஷ்ணன் லால் (2001) 4 SCC 458). தள்ளுபடி சரி தண்டனைக்குறைப்பு பற்றி நீதிமன்றம் கூறியுள்ளது எவ்வளவு தூரம் சரியானது என்று தெரியவில்லை. ஏனெனில், தண்டனைக்குறைப்பு அளிக்க அரசு குற்றவாளியின் அனுமதியை பெற வேண்டியதில்லை. எனவே அவர் தனக்கு தண்டனைக் குறைப்பு தேவையில்லை என்று கூறியுள்ள போதிலும் அரசு தனது அதிகாரத்தினை பயன்படுத்தலாம். இன்னும் ஒரு பத்தாண்டுகள் கழித்து கிருஷ்னலால் தீராத நோயினால் பெரும் அவதிப்படுகிறார். அவரை விடுதலை செய்வதே மனிதாபிமானம் என்று அரசு நினைக்கையில் நீதிமன்ற தீர்ப்பு அதற்கு எவ்வளவு தூரம் தடையாக இருக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.


ஆயினும் இவ்வாறான உத்தரவு மனித உரிமைக்கு எதிரானதா என்ற கேள்வி ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் எழுப்பப்பட்டுள்ளது. ஜெயவந்த் தத்தராய சூர்யராவ் எதிர் மகராச்டிரிய அரசு (2001) 10 SCC 109 என்ற வழக்கிலும் இவ்வாறு ஒரு தண்டனை வழங்கப்பட, தூக்கிலிருந்து தப்பித்தாயிற்று என்று அப்பொழுது தண்டனையினை ஏற்றுக் கொண்ட சுபாஷ்சிங் தாக்கூர் தற்பொழுது அந்த தண்டனை தவறு என்று நீதிப்பேராணை (writ) மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகையில் மீண்டும் இந்தப் பிரச்னைகள் மறு ஆய்வு செய்யப்படும்.


-oOo-


ஆனால் இங்கு முக்கியமான வித்தியாசம், நளினிக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதிக்கவில்லை. குடியரசுத் தலைவரின் மன்னிப்பு! சராதானந்தா உட்பட மற்றவர்களுக்கு நீதிமன்றம் தண்டனை வழங்குகையிலேயே இவ்வாறு தள்ளுபடி கிடையாது என்று கூறியுள்ளது. நளினிக்கு அவ்வாறான எவ்வித கட்டுப்பாடும் கிடையாது...


ஆயினும், தள்ளுபடி என்பது எந்த ஆயுள்தண்டனைக்கும் கிடையாது என்பதுதான் சராதானந்தாவின் தீர்ப்பில் இருந்து நாம் அறிவது. எது எப்படியோ, நளினி வெளியே வர வேண்டுமென்றால் அரசு மனது வைக்க வேண்டும். தள்ளுபடி என்பது மேற்கண்ட தீர்ப்பின் மூலம் பிரச்னைக்குறிய ஒன்று. அரசு அவரது தண்டனையை குறைப்பதுதான் வழி...


இல்லை, நளினிக்கு காட்டப்பட்டதாக கூறப்படும் கருணை, உண்மையில் ஒரு கானல் நீரே!


மதுரை
24.10.08

16.10.08

நளினிக்கு கருணை, கானல் நீர்தானா? - 3


ஆயுள் தண்டனைக்கான அர்த்தம், குற்றவாளியின் ஆயுள் வரைதான் என்பதில் யாருக்கும் எவ்வித சந்தேகமும் இல்லை. இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 45 ஆயுள் என்பது ஒரு மனிதனின் ஆயுளைக் குறிக்கும் என்று விளக்கமளிப்பதிலிருந்து ஆயுள் தண்டனை என்பதற்கு வேறு எவ்வித விளக்கமும் கூற இயலாது.

இதையே மகாத்மா காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கோபால் கோட்சே தன்னை 14 ஆண்டு சிறைவாசத்திற்குப் பிறகு விடுவிக்க வேண்டுமென்று கோரிய பொழுது உச்ச நீதிமன்றம் கூறியது. (கோபால் விநாயக் கோட்சே எதிர் மகாராஷ்டிர அரசு AIR 1961 SC 400). ஆனால் உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையில் தள்ளுபடி (remit) அளிப்பதற்கு அரசிடம் உள்ள அதிகாரத்தினை ஒத்துக் கொண்டே அந்த தீர்ப்பினை அளித்தது.

கோபால் கோட்சே அடுத்த ஆண்டே அரசால் விடுதலை செய்யப்பட்டார் என்பது வேறு கதை!


-oOo-


ஆனால் தற்பொழுது சக்கீராவின் வழக்கில், கோபால் கோட்சே வழக்கின் தீர்ப்பினைப் பற்றி ஆய்ந்த நீதிபதிகள், சில வகையான ஆயுள் தண்டனைகளுக்கு இவ்வாறு அரசு தண்டனையிலிருந்து தள்ளுபடி செய்யும் அதிகாரத்தினை செலுத்தவிடாமல் உண்மையிலேயே ஆயுள் முழுமைக்கும் என்று மாற்ற வேண்டும் என்ற ஆவலை வெளிப்படுத்துகின்றனர். அதாவது, மரண தண்டனைக்கு மாற்றாக வழங்கப்படும் ஆயுள் தண்டனைகளுக்கு அவ்வாறு தள்ளுபடி வழங்குதல் கூடாது என்கின்றனர்.

மரணதண்டனைக்கு மாற்றான ஆயுள் தண்டனை என்று ஒன்று குற்றவியல் சட்டங்களில் இல்லை எனலாம். இந்த தீர்ப்பின் ஆரம்பத்திலேயே, நீதிபதிகள் மரண தண்டனைக்கு மாற்றாக வழங்கப்படும் ஆயுள் தண்டனையினை மற்ற சாதாரண ஆயுள் தண்டனையிலிருந்து வேறு படுத்த இயலுமா என்பதுதான் இந்த வழக்கில் உள்ள் பிரச்னை என்றே ஆரம்பிக்கின்றனர்.

தவறு இங்கேயே ஆரம்பிக்கிறது. ஒரு குற்றத்திற்கு மரண தண்டனை என்றால் மரண தண்டனைதான். மரண தண்டனை வழங்க வேண்டிய வழக்கில் ஆயுள் தண்டனை வழங்க இயலும் என்றால், அது அனைத்து மரண தண்டனை கைதிகளுக்கும் வழங்கப்பட வேண்டும். இல்லை அம்னெச்டி இண்டர்நேசனலின் ‘மரணதண்டனன என்பது இங்கு ஒரு லாட்டரி’ என்ற குற்றச்சாட்டை உச்ச நீதிமன்றமே ஒத்துக் கொள்வது போல ஆகிவிடும்!

கீழமை நீதிமன்றத்தில், ஆயுள் தண்டனை வழங்க வேண்டிய குற்றத்திற்கு மரண தண்டனை தவறுதலாக வழங்கப்பட்டு அதனை உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக மாற்றுவது ஏதோ கருணைப் பிச்சையல்ல. மாறாக அது குற்றவாளியின் உரிமை!

கீழமை நீதிமன்றம் செய்த தவறுக்காக, குற்றாவாளிக்கு உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்படும் ஆயுள் தண்டனையினை மற்ற ஆயுள் தண்டனையிலிருந்து வேறுபடுத்திப் பார்ப்பது என்பது தர்க்க ரீதியில் மட்டுமல்ல, தார்மீக ரீதியிலும் சரியான ஒரு செயலல்ல என்பதே எனது கருத்து.


-oOo-


நீதிபதிகள், இவ்வாறு தள்ளுபடி இல்லாமல் ஒருவரை ஆயுள் முழுமைக்கும் சிறையில் வைத்திருப்பதற்காக கூறும் மற்றொரு கருத்தும் கவனிக்கத்தகுந்தது. அதாவது, ஒரு குற்றத்தின் தன்மையானது மரண தண்டனை வழங்குவதற்கு சற்று குறைவாக இருக்கிறது. அவ்வாறான சூழ்நிலையில் 14 ஆண்டுகள் என்பது மிகக் குறைவான தண்டனையாக கருதும் நீதிபதி, மரண தண்டனை அளிக்க தூண்டப்படலாம். எனவே இவ்வாறு 14 ஆண்டுகளுக்கும் மேலாக குற்றவாளியினை சிறையில் வைத்திருக்கும் வண்ணம் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

ஆனால், இங்கு நீதிபதிகள் கவனிக்க தவறுவது, ‘மக்களாட்சி அமைப்பில், நாகரீகமான குற்றவியல் முறையில், நீதிமன்றத்தின் பணியானது குற்றவாளி செய்த குற்றத்திற்கு அதிகபட்சம் இந்த அளவிற்கு தண்டிக்கலாம் என்று நிர்வாகத்திற்கு அனுமதி வழங்குவதோடு நின்று விடும்’ என்பதே!

குற்றத்திற்கு தண்டனை வழங்குவது என்பது, சமூகத்தின் ஒழுங்கினை குற்றச்செயல்களில் இருந்து பாதுகாப்பதற்கே!. அதற்காக குற்றவாளியை எவ்வளவு தூரம் தண்டிக்கலாம் என்பது மக்களோடு நேரடித் தொடர்பில் உள்ள நிர்வாகம் மற்றும் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சியாளர்களின் மனக்கவலை.

எனவே நீதிமன்றங்கள் இவ்வளவு தூரத்திற்கு நீங்கள் தண்டித்துக் கொள்ளலாம் என்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற வகையில்தான் குற்றவியல் நடைமுறைச்சட்டம் இயற்றப்பட்டுள்ளது.


-oOo-


சில குற்றவாளிகளை நீதிமன்றம் அனுமதித்த அதிகபட்ச அளவில் தண்டிக்கவும், சில குற்றவாளிகளை விடுதலை செய்வதிலும் அரசிற்கு உள்ள தேவைகளை உணர்ந்தே, நமது அரசியலமைப்புச் சட்டத்திலேயே குடியரசுத் தலைவருக்கும், மாநில ஆளுநருக்கும் குற்றவாளிகளை மன்னித்து விடுதலை செய்யும் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. (பிரிவு 72 மற்றும் பிரிவு 161).

இந்த அதிகாரமானது, அரசியலமைப்புச் சட்டத்திலேயே கொடுக்கப்பட்டுள்ளதால், இவற்றை உச்ச நீதிமன்றம் பறிக்க இயலாது. ஷக்கீரா தீர்ப்பிலும் நீதிபதிகள் ‘இந்த தீர்ப்பானது அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்ட அதிகாரத்தினைப் பற்றியதல்ல (Here it needs to be made absolutely clear that this judgment is not concerned at all with the Constitutional provisions that are in the nature of the State's sovereign power) என்று 56ம் பத்தியில் தெளிவாக குறிப்பிடுகிறார்கள்.

எனவே அரசியலமைப்புச் சட்டம் அளிக்கும் அதிகாரத்தினைப் பயன்படுத்தி நளினியை அல்லது சராதானந்தாவை விடுதலை செய்ய அரசு முடிவெடுக்கையில் உச்ச நீதிமன்றத்தினால் அதனை தடுக்க இயலாது.

அரசியலமைப்பு சட்டம் சரி, குற்றவியல் நடைமுறை சட்டத்தில் அரசிற்கு உள்ள அதிகாரத்தினை இந்த தீர்ப்பின் மூலம் பறிக்க முடியுமா என்பது அடுத்த கேள்வி...


-oOo-


மதுரை
16.10.08

12.10.08

நளினிக்கு கருணை, கானல் நீர்தானா? - 2
சக்கீராவின் கொலை, மனதைத் தைப்பதாக இருந்தாலும் இந்தியா முழுவதும் அவ்வப்பொழுது நிகழக்கூடிய சாதாரண ஒரு குற்றம்தான். சக்கீரா கொலையில் திவான் என்ற இடத்தில் தாசில்தார் அலுவலக எழுத்தர் எனவும், பெங்களூரு என்ற இடத்தில் மதுரை எனவும், தூதர் என்ற இடத்தில் வங்கி காசாளர் எனவும், கோடி என்ற இடத்தில் ஆயிரம் எனவும், லண்டன் என்ற இடத்தில் சென்னை என்றும் நிரப்பினால், தண்டனைக்காக நீதிபதிகள் இவ்வளவு தூரம் குழம்பியிருக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.

எனவேதான், இதனினும் கொடூர கொலைகாரர்கள் ஆயுள்தண்டனையோடு தப்பிக்கையில், சாரதானந்தாவுக்கு மரணம்தான் தண்டனை என்ற முடிவுக்கு நீதிமன்றங்கள் வந்திருக்கலாம்.

கொலை செய்யப்படுபவர்களின் தகுதியும் இங்கு பல சமயங்களில் தண்டனையினை, குறிப்பாக மரண தண்டனையினன நிர்ணயித்திருக்கின்றன என்ற எனது சந்தேகத்திற்கு வலு சேர்க்கும் மற்றும் ஒரு வழக்கு சக்கீராவின் கொலை.

மேலும், அடுத்தவரின் மனைவியை அபகரிக்கும் ஒரு செயல், கொலைக்கான தண்டனையை நிர்ணயிக்கும் முக்கிய காரணியாக இங்கு கருதப்படுகிறது. நானாவதி, குறைந்த தண்டனையோடு தப்பித்ததற்கும், சாரதானந்தா தூக்கு மேடை அருகே சென்று திரும்பியதற்கும், இதுவே முக்கிய காரணி!


-oOo-


சக்கீராவின் வழக்கினைப் படிக்கும் எவருக்கும், முக்கியமாக ஆண்களுக்கு சாரதானந்தாவின் மீது கோபம் எழுவது இயல்பான ஒன்றே...அது பொறாமையால் விளைந்ததாக கூட இருக்கலாம்.

ஆயினும், அவரை தூக்கிலிடுவது தவறான ஒரு முன்னுதாரணமாகி விடுமோ, என்ற குற்றவுணர்வு நீதிபதிகளை, முக்கியமாக தண்டனையை பற்றி தீர்மானிக்க வேண்டிய மூன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும் எழுந்திருக்கலாம்.

சரி, தூக்கு இல்லை என்றால்...ஆயுள் தண்டனை. ஆனால் ஆயுள் தண்டனை கைதிகள் 14 ஆண்டுகளில் வெளியே வந்து விடக்கூடிய ஆபத்து உள்ளது. சாரதானந்தா ஏற்கனவே பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்தாகி விட்டது. அவ்வளவுதானா தண்டனை?

இது என்ன, மரண தண்டனை இல்லையென்றால் 14 ஆண்டுகள்தான. இரண்டு வகை தண்டனைக்களுக்குமான இடைவெளி இவ்வளவு தூரமா, என்ற நீதிபதிகளின் மனவோட்டத்தின் வெளிப்பாடுதான்...சாரதானந்தாவை அவரது ஆயுட்காலம் வரை சிறையில் வைத்திருக்க வேண்டும் என்ற தண்டனை.


-oOo-


இதற்காக, சாதாரண ஆயுள் தண்டனை, மரணதண்டனைக்கு மாற்றாக வழங்கப்படும் ஆயுள் தண்டனை என்று ஆயுள் தண்டனையை, சட்டத்தில் அவ்வாறு இல்லையெனினும் இரண்டு வகையாக பிரிக்கும் முயற்சியில் நீதிபதிகள் ஈடுபட்டு பல்வேறு முன் தீர்ப்புகளை ஆராய்ந்து, எவ்வாறு சாரதானந்தாவை ஆயுள் வரை சிறையில் வைத்திருக்க இயலும் என்றும் தீர்ப்பு கூறியுள்ளனர்.

ஆனால், தங்களது தீர்ப்பு அரசியலமைப்புச் சட்டப்படியும், குற்றவியல் நடைமுறைச் சட்டப்படியும் சாத்தியமானதுதானா என்றும் முழுமையாக ஆராயவில்லை என்றே நினைக்கிறேன்.

தங்களது தீர்ப்பினை அவ்வாறு செய்ல்படுத்துவது சாத்தியமா? அதன் பின் விளைவுகள் என்ன என்று ஆராயாமல் விட்டது கூட முக்கியமல்ல...அப்படியே ஒருவரை ஆயுள் முடியும் வரை, வெளியே வருவதற்கு எவ்வித வாய்ப்பின்றியும் சிறையில் வைத்திருப்பதன் கொடூரத்தைப் பற்றி கொஞ்சம் கூட தங்கள் தீர்ப்பில் கவலைப்படாமல் போனதுதான்.....அதிர்ச்சியளிக்கும் ஒரு விடயம்.

தன் வாழ்நாள் முழுவதும் இனி இந்த நான்கு சுவர்களுக்குள்தான் என்ற நினைப்பில் ஒருவன் வாழ்வது, மரண தண்டனையை விட கருணை மிக்கதா என்ன?

இந்தச் சூழ்நிலையில் நளினிக்கு காட்டப்பட்டது உண்மையிலேயே கருணையா என்ற கேள்வி எழுகிறது.

பதினெட்டு ஆண்டுகளுக்கு மேலாக சிறையே தனது வசிப்பிடமாக கொண்டுள்ள பேரறிவாளனும், இதே கேள்வியைத்தான் கேட்கிறார், ‘ஒன்று என்னை தூக்கில் போடுங்கள்...அல்லது என்று விடுதலை என்று என்றாவது சொல்லுங்கள்’.


-oOo-


மதுரை
11.10.08

10.10.08

நளினிக்கு கருணை, கானல் நீர்தானா? - 1

ராசீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி, பேரறிவாளன் மற்றும் சில குற்றவாளிகள் தங்களது விடுதலைக்காகவும், தண்டனைக்குறைப்புக்காகவும் தமிழக அரசின் ‘கருணை’யை மட்டுமே எதிர் நோக்கியுள்ள நிலையில்...அவர்களது, மற்றும் அவர்களுக்காக களமிறங்கியுள்ளவர்களது நம்பிக்கைக்கு குறுக்கே நிற்கப்போவதாக கூறப்படுவது, சமீபத்தில் பெங்களூருவைச் சேர்ந்த சக்கீரா கொலை வழக்கில் நமது உச்ச நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பு!

முதலில், கொலைக்குற்றவாளிகளுக்கு தண்டனை விதிப்பதில் நீதிபதிகளுக்குள்ள மனவோட்டத்தினை அறிய, அந்த வழக்கின் தன்மையினை தெரிந்து கொள்வது அவசியம்.


-oOo-


சக்கீரா (Shakereh) மைசூர் சமஸ்தானத்தின் திவானாக இருந்தவரின் பேத்தி.. பல கோடி சொத்துக்களின் அதிபதி. முக்கியமாக, பெங்களூரு ரிச்மாண்டு சாலையில் இருந்த 38,000 சதுர அடியில் மற்றும் வெல்லிங்டன் வீதியில் 40,000 சதுர அடியில் கட்டப்பட்டுள்ள பங்களாக்களை கூறலாம். சக்கீராவின் கணவர் இந்திய அயலுறவுத்துறை அதிகாரி (IFS). நான்கு பெண் குழந்தைகள்.


1983ம் வருடம் ராம்பூர் நவாபின் விருந்தாளியாக சென்றிருந்த பொழுது, சக்கீராவுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட நபர்தான் முரளி மனோகர் மிசுரா என்ற சுவாமி சாரதானந்தா (Swamy Shraddananda). சக்கீராவுக்கு தனது நிலங்களை நிர்வகிப்பதில் பிரச்னை இருக்கவே அதில் உதவி புரிவதற்காக பெங்களூருவுக்கு வந்த சாரதானந்தா, ரிச்மாண்டு சாலை பங்காளிவிலேயே குடும்ப உறுப்பினர் போல தங்கினார்.

ஈரான நாட்டு தூதராக நியமிக்கப்பட்ட சக்கீராவின் கணவர், குடும்பத்தை பெங்களூருவிலேயே விட்டுச் செல்லும் நிலை ஏற்ப்பட்டது. தனது மாந்திரீக சக்தியினால் சக்கீராவுக்கு ஆண் வாரிசினை உருவாக்க முடியும் என்று அவரை நம்ப வைத்த சாரதானந்தா, பின்னர் சக்கீராவை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.

விரைவிலேயே சக்கீராவின் திருமணம் விவாகரத்தில் முடிய சாரதானந்தாவை மணமுடித்தார். மகள்கள் அனைவரும் வெளிநாட்டிலேயே தங்கி விட, சக்கீராவும் சாரதானந்தாவும் மட்டும் பெங்களூரிலேயே வசித்தனர்.

சக்கீரா தனது அன்பினை மட்டுமல்லாமல், சொத்துக்கள் அனைத்தையும் சாரதானந்தாவின் மீது கொட்டினார். தனது சொத்துக்களை குறித்த முகவராக (Power of Attorney) சாரதானந்தாவை நியமித்தது மட்டுமில்லாமல், அனைத்தையும் அவரது பெயரிலேயே உயில் எழுதினார். பல்வேறு வங்கி கணக்குகள், லாக்கர்கள் மற்றும் வியாபாரம் இருவரது கூட்டுப் பெயரில் ஆரம்பிக்கப்பட்டது.

ஆயினும், சக்கீரா மகள்கள் மீதான தனது தொடர்பினை துண்டிக்கவில்லை. அவ்வப்பொழுது அவர்கள் சந்தித்துக் கொண்டிருந்தனர்.


-oOo-


1991ம் வருடம் மே மாத இறுதியில் சக்கீரா திடீரென தனது 40வது வயதில் காணாமல் போனார். ஏப்ரல் மாதத்தில் அவரது மகளுடன் தொலை பேசியதுதான், குடும்பத்துடனான அவரது தொடர்பு.

வேலைக்காரன் ராசு அவரை இறுதியாக மே 28ம் தேதி சாரதானந்தாவுடன் பார்த்ததாக பின்னர் கூறினார்.

சக்கீராவின் மகள் சாபா (Sabah), சாரதானந்தாவை தனது அம்மா எங்கே என்று வினவும் பொழுதெல்லாம், அவர் ஐதராபாத் சென்றுள்ளதாகவும், கட்ச்சுவிற்கு (Kutch) வைர வியாபாரி ஒருவரின் திருமணத்திற்கு சென்றுள்ளதாகவும் சாக்கு கூறிவந்தார். பின்னர் வருமான வரிப் பிரச்னைகளுக்கு பயந்து வெளி வராமல் இருப்பதாகவும் கூறினார்.

வெறுப்படைந்த சாபா, பெங்களூருவுக்கு நேரில் வந்தால் சக்கீராவை காணவில்லை. இந்த முறை சாரதானந்தா, சக்கீரா பிரசவத்திற்காக அமெரிக்கா சென்றுள்ளதாக கூறினார். அமெரிக்க மருத்துவமனைக்கு தொடர்பு கொண்டால், அவ்வாறு யாரும் அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை!

சாரதானந்தா தளரவில்லை. சக்கீரா லண்டன் சென்றிருப்பதாகவும், அவரது இருப்பிடத்தை ரகசியமாக வைத்துள்ளதாகவும் கூறினார். ஆனால், சாரதானந்தாவை மும்பை விடுதி அறையில் சந்திக்க சென்ற சாபா, அங்கு தற்செயலாக சக்கீராவின் கடவுச் சீட்டை (Passport) காண நேரிட்டது.

உடனடியாக சாபா, பெங்களூரு அசோக் நகர் காவல் நிலையத்தில் தன் தாயார் காணாமல் போனதாக ஒரு புகார் அளித்தார். சாரதானந்தாவோ, முன் பிணை மனு (anticipatory bail) தாக்கல் செய்து, பிணை பெற்றார். பிணை மனுவில் தனது உறவினர்களுடன் ஏற்ப்பட்ட வழக்குகள் நிமித்தம் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான, சக்கீரா கோபத்துடன் வீட்டை விட்டு வெளியே சென்றதாக குறிப்பிட்டார்.

அசோக் நகர் காவல் நிலைய விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்ப்படவில்லை. ஆயினும் சாபாவின் முயற்சியில் வழக்கானது மத்திய குற்றப்பிரிவிற்கு மாற்றப்பட்டு அவர்களது தீவிர விசாரணையில், சாரதானந்தா தான் சக்கீராவை கொன்று தங்களது பங்களாவிலுள்ள படுக்கையறைக்கு கீழே புதைத்து வைத்ததை ஒத்துக் கொண்டார்.


-oOo-


விசாரணையில், சக்கீராவின் கொலைக்கு பின்னர் அவர் அளித்த முகவர் அதிகாரத்தினை பயன்படுத்தி அவரது பல்வேறு சொத்துக்களை விற்றதும் தெரிய வந்தது. மட்டுமல்லாது, கொல்லப்படுவதற்கு முன்னரே, சக்கீராவின் உடலை புதைப்பதற்காக கவனமாகவும் நிதானமாகவும் அவர் திட்டமிட்ட விபரமும் தெரிய வந்தது.
பெங்களூரு நகர அமர்வு நீதிமன்றம் (Sessions Court) திட்டமிட்ட கொலைக்காக, சாரதானந்தாவுக்கு மரண தண்டனை அளித்தது. அமர்வு நீதிமன்றம் மரண தண்டனை அளிக்கையில் குற்றவியல் நடைமுறை சட்டம் (Criminal Procedure Code) பிரிவு 366ன் உயர்நீதிமன்றம் தண்டனையினை உறுதி செய்ய வேண்டும்.

உயர்நீதிமன்றம் மரண தண்டனையை உறுதி செய்தது.

உச்ச நீதிமன்றத்தில் சாரதனந்தா மேல் முறையீடு தாக்கல் செய்தார். சாரதானந்தா குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால் ஒரு நீதிபதி குற்றவாளிக்கு மரண தண்டனை எனவும் மற்ற நீதிபதி ஆயுள் காலம் முழுவதும் வெளி வர இயலாத ஆயுள் தண்டனை எனவும் கூறினர்.

எனவே, தண்டனை குறித்து மட்டும் தீர்ப்பு கூற வழக்கானது மூன்று நீதிபதிகள் அடங்கிய மன்றத்தின் முன் வைக்கப்பட்டது.

அவ்வாறு மூன்று நீதிபதிகள் அடங்கிய மன்றம் அளித்த தீர்ப்புதான், தற்பொழுது பிரச்சினையாக எழப்போகிறது.

-oOo-


மதுரை
10.10.08மேலே படத்தில் மீண்டும் 'Shimla Mall' தான். அங்கு சுவராசியமான இடம் இந்த கடைத்தெரு ஒன்றுதான்.

4.10.08

நீதிபதிகள், சாருநிவேதிதா மற்றும் தவறுகள்!


நேற்று கணணியில் எனது பழைய குப்பைகளை மேய்ந்து கொண்டிருக்கையில் ஐந்து வருடங்களுக்கு முன்னர் எழுதிய ஒரு கடிதம் கண்ணில்பட்டது.

‘சமீபத்தில் மும்பை உயர்நீதிமன்ற கட்டிடம் தனது 125வது பிறந்த நாளைக் கொண்டாடியது. 125வது என்பதை விட முதலாவது எனவும் கூறலாம். எனெனில் இக்கட்டிடம் கொண்டாடும் முதல் பிறந்தநாள் இது!


இந்தக் காலத்தைப் போல எவ்வித படோடபகமும் இன்றி எவ்வித விழாவும் கொண்டாடப்படாமல் ஏன், சாதாரண ரிப்பன் வெட்டுதல் கூட இல்லாமல் வெறுமே நீதிபதிகள் தங்களது அறைகளை ஏற்றுக் கொண்டனராம்.

இக்கட்டிடம் திறப்பதற்கு முன்னர் 9 ஆண்டுகள் மும்பை உயர் நீதிமன்றம் வேறு கட்டிடத்தில் இயங்கி வந்தது. முதல் தலைமை நீதிபதி சர். மாத்தியூ சாவ்ஸே. இவரை 'சாவ்ஸே தி சைலண்ட்' அதாவது அமைதியான சாவ்ஸே என்று அழைத்தார்களாம். இவரை 'பேசாமடந்தை எனவும் மந்தகாசமானவர்' என்றும் பலர் அழைத்தனர். சிலர் 'இறுக்கமானவர் (cold, frigid and stern) என்றனர்.

இவர் யாருடனும் பழகுவதில்லை. எந்த விழா, சடங்கிலும் பங்கெடுப்பதில்லை. யாரையும் சந்திப்பதும் இல்லை. முக்கியமாக செய்தித் தாள்களைப் படிப்பதேயில்லை. அவரது ஒரே பொழுது போக்கு அப்பொழுது ஓவல் மைதானம் வரை சதுப்பு நிலமாக பரவியிருந்த கடற்கரையில், நீதிமன்ற நேரம் முடிந்த பிறகு தனியே நடப்பதுதான்.

ஞாயிற்றுக் கிழமை கிர்காம் தேவாலயத்தின் பிரார்த்தனை மட்டும்தான் அவரை பொதுவில் காண முடியும் ஒரே நேரமாம்..

இங்கு நாம் கவனிக்க வேண்டியது, அவர் செய்தித்தாள்களைப் படிப்பதில்லை. நீதிபதியானவர் முக்கியமாக அரசுக்கு எதிரான நீதிப் பேராணை (writ) மனுக்களை விசாரிக்கக் கூடிய அல்லது பெரிய குற்றங்களை விசாரிக்கக்கூடிய நீதிபதியானவர் செய்தித்தாள்களை படிப்பது நல்லதல்ல என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் நடைமுறையில் சாவ்ஸே மற்றும் மிக அரிதான சில நீதிபதிகளுக்கே அது சாத்தியம்.’


-oOo-


நீதிபதியானவர் ஒரு முற்றும் துறந்த முனிவரைப் (ascetic) போல இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற தீர்ப்பு கூறுகிறது. ஆனால் நடைமுறையில்?

சில நீதிபதிகளின் செயல்பாடுகள் குறித்து சமீபத்தில் நாம் படிக்க நேரிடும் செய்திகள், நீதித்துறையில் மாண்பையும் மதிப்பையும் கேள்விக்குறியதாக்குகின்றன. உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் முறையில் எவ்விதமான வெளிப்படையான பாங்கும் (transparency) கிடையாது. அதற்கு தனிப்பட்ட காரணங்கள் கூறப்படுகின்றன.

எனவே, அந்தப் பணி, உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கைகளிலும் ஓரளவிற்கு அரசின் கையிலும் முழு நம்பிக்கையுடன் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால், மேலும் மேலும் நீதிபதிகளைப் பற்றிய தர்ம சங்கடமான செய்திகள் வெளி வர நேரிட்டால், நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் முறை மாற வேண்டும் என்ற பொதுக்கருத்து வலுப்பெறலாம்.


-oOo-


நீதிபதிகள் நியமனத்தில் வரவேற்கத்தகுந்த ஒரு மாற்றம் தற்பொழுது ஏற்ப்பட்டுள்ளது. நமது உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளாக நியமிக்கும் வண்ணம் உச்ச நீதிமன்றத்திற்கு 14 பெயர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றமோ, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நபர்கள், தங்களைப் பற்றிய விபரங்களை அளிக்க வேண்டுமென்று கோரியுள்ளது. அதற்காக தங்களது பணியில் அவர்கள் வெளிப்படுத்திய திறமை உட்பட பல விபரங்களை கோரும் வண்ணம் கேள்விகளை வடிவமைத்துள்ளது.

பெரிய அளவில் வெளிப்படையான பாங்கினை இங்கும் எதிர்பார்க்க முடியாது எனினும், இது ஒரு வழக்குரைஞரின் பார்வையில் பெரிய மாற்றம் எனலாம்.

இவ்வாறு கேள்விகளுக்கு பதிலாக தரப்படும் விபரங்கள், சம்பந்தப்பட்ட வழக்குரைஞர் சங்கங்கள் மற்றும் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு, ஏதேனும் ஆட்சேபணை இருந்தால் அதனை தெரிவிக்கவும் கோரலாம். ஆனால் அவ்விதமான மாற்றம் வருவதற்கு அதற்கு இன்னும் சில காலம் பிடிக்கலாம்.

நீதிபதிகள் மேலும் மேலும் தவறு புரிந்தால், விரைவில் சாத்தியமாகலாம்.


-oOo-


தமிழ்மணத்திலிருந்து சுட்டியினைப் பிடித்து உயிர்மை என்ற பத்திரிக்கையில் சாருநிவேதிதா எழுதிய “ஒலிம்பிக்ஸ்: துரோகங்களும் அவமானங்களும்” என்ற கட்டுரையினை படிக்க நேரிட்டது.

ஒரு கட்டுரை போல இல்லாமல், நண்பர்கள் குழுவாக அமர்ந்து ஒலிம்பிக் பற்றி அரட்டை அடித்தால் எப்படியிருக்குமோ அப்படி எங்கோ ஆரம்பித்து எங்கோ முடிகிறது.

ஆனால் பிரச்னை கட்டுரையில் கூறப்படும் சில விபரங்கள் பற்றியது.

1986 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் சார்பாக பதக்கம் வாங்கிய ஒரே நபர் பி.டி.உஷா என்கிறார் கட்டுரை ஆசிரியர். தவறு. இந்தியா ஐந்து தங்கப் பதக்கம் பெற்றது. பி.டி.உஷா வென்றது நான்கு தங்கம் மட்டுமே! ஐந்தாவது தங்கம் வென்றது கர்தார் சிங் என்ற குத்துச் சண்டை வீரர். மற்றபடி பதக்கம் என்று பார்த்தால் இந்தியா மேலும் 9 வெள்ளி, 23 வெண்கலம் வென்றது.

அடுத்து 1960 ரோம் ஒலிம்பிக்ஸில் மில்கா சிங் பக்கத்தில் ஓடுபவர் எங்கு இருக்கிறார் என்று திரும்பிப் பார்த்ததில் அவரது தங்கம் பறி போனதாக குறிப்பிடுகிறார். மில்கா சிங் தவற விட்டது, வெண்கலம். அதுவும் 1/10 வினாடி நேரத்தில். பி.டி.உஷா 1/100 வினாடி நேரத்தில்!

மில்கா சிங் ஓடிய பொழுது அவர் உட்பட முதலில் வந்த நான்கு வீரர்களும் அது வரை இருந்த உலக சாதனையினை முறியடித்தார்கள்...அல்லது அது ஒலிம்பிக்ஸ் சாதனையா?

ஆனால் மில்கா சிங் திரும்பிப் பார்த்ததாக நான் படித்ததில்லை!

திரும்பிப் பார்த்தவர் பென் கிங்ஸ்லி.. ஆயினும் அதற்காக அவர் வெற்றி வாய்ப்பையும் உலக சாதனையையும் இழக்கவில்லை. இழந்தற்கான காரணம், தடை செய்யப்பட்ட அனபாலிக் ஸ்டிராய்ட் உட்கொண்டது.

இப்பொழுது எனக்கு, சாருநிவேதிதா தன்னுடைய கட்டுரைகளில் சும்மா வாயில் நுழையாத பெயர்களாக அடித்து ஆடுகிறாரே...உண்மையாக இருக்குமா, என்ற சந்தேகம் வந்து விட்டது!


-oOo-

மதுரை
031008
மேலே படத்தில் நீங்கள் காண்பது 'சிம்லா கடைத்தெரு'