6.4.10

மதன், நீங்களுமா?
ஆனந்த விகடன் வார இதழில் ‘ஹாய் மதன்என்ற தலைப்பில் கார்டூனிஸ்ட்டும் வரலாற்று எழுத்தாளருமான மதன் வாசகர் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார். பல வருடங்களுக்கு முன்னர் ஜூனியர் விகடனில், எழுத்தாளர் சுஜாதா ஏன்? எதற்கு? எப்படி? எனறு பதிலளித்து வந்த அதே முறையில்தான் இந்த தொடரும் அமைந்துள்ளது.

இந்த வார இதழில், என்ன கேள்வி என்று தெரியவில்லை. ஆனால் ஒரு கேள்விக்கான பதிலில் நிலவுக்கு முதன் முதலில் மனிதர்கள் சென்ற பொழுது ஆல்ட்ரின்தான் முதலில் நிலவில் காலடி வைப்பதாக இருந்ததாகவும், அதனை ஆம்ஸ்டிராங் படம் பிடிப்பது என்றும் ஏற்ப்பாடாகியிருந்தது என்றும் ஆனால் ஆல்ட்ரின் நிலவில் மெத்தென்று இருந்து புழுதியில் கால் வைக்க தயங்கியதால் ஆம்ஸ்டிராங் முதலில் இறங்கியதாகவும், பின்னர் வாழ்நாள் முழுவதும் ‘தவற விட்ட வாய்ப்புக்காக வருந்திஆல்ட்ரின் மதுவுக்கு அடிமையாகிப் போனதாகவும் எழுதியிருக்கிறார்.


(பேருந்தில் செல்கையில் கையில் கிடைத்த விகடனில் ஹாய் மதனில் படித்தது என்று நினைக்கிறேன். தவறு என்றால் திருத்திக் கொள்கிறேன்)

அப்பல்லோ 11 நிலவுப் பயணம் குறித்து அநேக தகவல்கள் உள்ளது. அல்ட்ரின் எழுதிய புத்தகமும் உள்ளது. இப்படி ஒரு தகவலை நான் படித்ததில்லை.

பொதுவாக இவ்வாறான பயணங்களில், அறியாத பிரதேசங்களில் பயணக் கலத்தின் தலைவர் முதலில் கால் வைப்பது மரபு இல்லை. எனவே ஆல்ட்ரின் முதலில் கால் வைக்கலாமா என்று விவாதிக்கப்பட்டது. ஆயினும், மனிதகுல வரலாற்றில் ஒரு மைல்கல்லாக விளங்கப் போகும் ஒரு நிகழ்வின் பெருமையினை தலைவருக்கு தர வேண்டும் என்ற கருத்து ஏற்றுக் கொள்ளப்பட்டு மரபை மீறி ஆம்ஸ்டிராங்கிற்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டது.

இத்தகைய முடிவுகள் விண்கலம் இங்கிருந்து கிளம்பும் முன்பே எடுக்கப்பட்டு விட்டது. ஒவ்வொரு நொடியும் திட்டமிடப்படாமல், இவ்விதமான பயணங்கள் மேற்கொள்ளப்படாது.

ஆல்ட்ரின் குடிப்பழக்கத்துக்கு ஆளானது உண்மை. ஆனால் நழுவ விட்ட வாய்ப்புக்காக என்பது தவறு.

அடுத்தது, நிலவில் ஆம்ஸ்டிராங் இருப்பது போல படமே எடுக்கப்படவில்லை என்று கூறியிருப்பதும் தவறு. சில படங்களே எடுக்கப்பட்டது என்பதுதான் சரியான் தகவலாய் இருக்கக் கூடும்.

***இதே இதழில், எப்படி நேருவின் மகள் இந்திரா காந்தியானார் என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் இந்திராவின் கணவரான பெரோஸ் காந்திக்கும் குஜாராத் ‘காந்திக்கும் சம்பந்தமில்லை என்பதையும் விளக்கியிருந்தால் வாசகர்கள் மேலும் தெளிவு அடைந்திருப்பார்கள்.

ஞாநி, சாரு நிவேதிதாவைத் தொடர்ந்து மதனும் இவ்வாறு தகுந்த ஆய்வின்றி ஒரு சம்பவத்தினை எழுத முற்ப்படுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

தனது தவறினை ஏற்றுக் கொண்டு வாசகர்களுக்க்கு நிலவுப் பயணம் குறித்து சரியான தகவல்களைத் தர வேண்டிய பொறுப்பு மதனுக்கு உள்ளது. பார்க்கலாம்...

மதுரை
060410