23.3.12

‘எ செப்பரேஷன்’ நம் கதை...


இன்று ஒரு சிறிய தவறு செய்து விட்டேன். ஒரு நல்ல திரைப்படத்திற்கு நாம் தரும் மரியாதை, எவ்வித இடையூறும் முக்கியமாக மின்விசிறி ஓடும் சத்தம் உட்பட வெளிப்புற சத்தம் ஏதுமின்றி, எவ்வளவு இருட்டு முடியுமோ அவ்வளவு இருட்டில் பார்ப்பதுதான். ஆனால், இவ்விதமான சூழலுக்கு எதிர்மாறான மத்தியான நேரத்தில் குடும்பத்தோடு ஆஸ்கர் விருது வாங்கிய ‘எ செப்பரேஷன் என்ற ஈரானிய திரைப்படத்தை பார்க்க நேர்ந்ததைத்தான் தவறு என்று சொல்கிறேன்.


ஈரானில் நிலவும் சூழலால், வெளிநாட்டில் சென்று குடியேற விரும்புகிறார் ‘சிமின்’. அவரது கணவரான ‘நாதர்க்கோ, அல்சீமியர் நோயால் பாதிக்கப்பட்ட அவரது தந்தையை விட்டு பிரிய இயலாத நிலை. அவர்களது பதினொரு வயது மகள் ‘தெர்மா யாரிடமிருப்பது என்ற பிரச்னையால் எழும் போராட்டம்தான் கதையென்றால், இல்லை அதையொட்டி எழும் வேறு பிரச்னைகள், அதன் சம்பவங்கள்தான் படம். மனைவி பிரிந்தவுடன் தந்தையை கவனித்துக் கொள்ள வேலைக்கு நியமித்த ‘ரெசியாவை அவர் செய்த தவறுக்காக, நாதர் பிடித்துத் தள்ள ரெசியாவின் வயிற்றில் இருக்கும் குழந்தை இறக்கிறது. தொடர்ந்த நீதிமன்றப் போராட்டம், ரெசியாவின் கணவரின் இயலாமையால் எழும் வெறுப்பு. அவர்களது குட்டிக் குழந்தை என எவ்வளவோ இருக்கிறது.

இப்படத்தின் கதையை விவரித்துக் கொண்டிருப்பதை விட, அதனை பார்ப்பவர்களின் அனுபவத்திற்கு விடுவதே சிறந்ததாயிருக்கும். ஏனெனில், கதை என்பதை விட படத்தில் வரும் சம்பவங்கள், நம் வீட்டில், குடும்பத்தில் நிகழ்வதைப் போலவே எளிதில் நம்மால் தொடர்புபடுத்திக் கொள்வதை தவிர்க்க இயலாது. பக்கவாதம் அல்லது மூப்பின் காரணமாக படுக்கையில் விழும் முதியவர்களைச் சமாளிக்க நேரும் குடும்பம் ஒவ்வொன்றிலும் எழும் போராட்டங்கள்தான் படத்தில் காட்சிகளாக விரிகிறது.

மகளுக்கு பாடம் சொல்லித் தரும் ‘நாதர்குறிப்பிட்ட வார்த்தைக்கு பெர்சிய மொழியிலான அர்த்தத்தைக் கேட்க, மகள் கூறும் வார்த்தை அரேபிய வார்த்தை என்று மறுத்து பெர்சிய வார்த்தையை சரியான பதிலாக சொல்லிக் கொடுக்கிறார். மகளோ ‘ஆசிரியை இப்படித்தான் சொல்லிக் கொடுத்திருக்கிறார், தந்தை கூறும் பதிலைக் கூறினால் ஆசிரியை மதிப்பெண்களை குறைப்பார் என்று சிணுங்க, இங்குள்ள எந்தத் தந்தையையும் போலவே, ‘மதிப்பெண் போனாலும் பரவாயில்லை, தான் சொல்வதைத்தான் மகள் கேட்க வேண்டும்என்று சீறும் காட்சி போதும்.

ஈரானின் அரசியலும், வளரும் நாடுகளின் நடுத்தரவர்க்க பொதுவான மனப்பான்மையும் ‘ஈரானில் நிலவும் சூழலால், வெளிநாடு போக விரும்புவதாகவிவாகரத்து நீதிபதியிடம் கூறும் ‘சிமினிடம் ‘என்ன வகையான சூழல்என்று நீதிபதி கேட்கும் ஒற்றைக் கேள்வியில் இருப்பதால், படத்தின் ஒவ்வொரு காட்சியும் முக்கியத்துவம் பெறுகிறது.

ஒவ்வொரு ஈரானியப் படம் பார்க்கையிலும் எழும் முக்கியமான கேள்வி இந்தப் படத்திலும் எழுந்தது. அது எப்படி ஈரானில் குட்டிக் குழந்தைகளை இப்படி இயல்பாக நடிக்க வைக்கிறார்கள்?

நான் முதலில் கூறிய சூழலில் படத்தினைப் படத்தினைப் பார்க்கையில் படம் முடிந்ததும், அதன் கருவை ஒட்டி அமைக்கப்பட்டிருக்கும் இசையை கேட்டபடியே உறங்கச் செல்கையில் படத்தின் பாத்திரங்கள் நம் ஆழ்த்தூக்கம் வரை நம்மைத் தொடர்வதை வைத்து படம் நம்மை பாதித்திருக்கும் அளவை உணர இயலும்.

ஆனால் ‘எ செப்பரேஷன்படம் முடிந்த வெப்பம் மிகுந்த மாலைச்சூழலில் அது சாத்தியமில்லை. ஆனாலும் ஒரு மணி நேர குட்டித்தூக்கம் போடலாமென்று தூங்கி பின் விழிக்கையில்தான் புரிந்தது படத்தின் தாக்கம்!


கனவா, இல்லை நினைவா என்ற நிலையில் படத்தின் ஒவ்வொரு பாத்திரங்களும் ஏதோ கலீடாஸ்கோப் தோற்றம் போல ஏதேதோ சம்பவங்களாக விரிய, இதனை எழுதும் இந்தக் கணம் வரை மனதை விட்டு அகல மாட்டேன் என்கிறார்கள். மூன்று வாசல்மணி, இரண்டு தொலைபேசி அழைப்பு இடையூறுகளையும் கடந்து படம் இந்த அளவிற்கு பாதிப்பினை ஏற்ப்படுத்தியிருக்கிறது என்றால், நான் இங்கு எழுதாத மற்றும் பல காட்சிகளும், பாத்திரங்களுமே காரணம்!

அதனை உணர, ‘எ செப்பரேஷன்படத்தைப் பார்ப்பதுதான் சரியான முறை!

மதுரை
23/03/12