28.12.06

அரசியல் சேட்டைகள்...

(அதுக்கு யாராவது முதல்ல அந்தத் தப்பை செய்யணும்னு நினைக்கிறேன். யார் அந்த சேட்டையைச் செய்யப் போறாங்களோ. ஆனாலும் செம ஜாலி இது)

சில வருடங்களுக்கு முன்னர் இணையத்தில் நடந்த ஒரு விவாதத்தில், நான் கூறிய கருத்தினை ஒட்டி கூறப்பட்டதுதான் மேற்கூறிய வாசகம். தொடர்ந்து நான் எழுதியதை இங்கு பதிவது, பயனுள்ளது என நினைக்கிறேன்!


நேற்று எழுதும் பொழுதே நினைத்தேன். முதலாவது அந்த சேட்டையை செய்தவர் யார் என்று கண்டுபிடித்துவிடுவீர்கள் என்று. ஆனால், உங்களுக்கு நமது அரசியல்வாதிகள் மீது அதீத நம்பிக்கை. அப்படிப்பட்ட சேட்டையெல்லாம் செய்யாமல் அவர்கள் விடுவதில்லை.

"அரசியலமைப்புச் சட்டத்தில் சட்ட மன்ற உறுப்பினர்களுக்கான தகுதி கூறப்பட்டுள்ளது. ஆனால் முதல்வருக்கான தகுதி கூறப்படவில்லை. இதன் அர்த்தம் ஆளுஞர் மக்களுடைய விருப்பத்தை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். முதல்வரால் நிலையான அரசினை அமைக்கமுடியுமா என்பதை மட்டுமே அவர் கவனத்தில் கொள்ள வேண்டும். மக்கள் தங்களுடைய விருப்பத்தினை சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் தெரியப்படுத்துகையில், அவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் நபர் முதல்வராக நீடிக்க அனுமதிக்கப்பட வேண்டும். ஏனெனின் மக்களே சகலவல்லமை பொறுந்தியவர்கள்"

"அவ்வாறெனில், இந்திய குடிமகனாக இல்லாத அல்லது 18 வயது கூட நிரம்பாத ஒருவரை பெரும்பான்மை கட்சியினர் தேர்ந்தெடுக்கையில் ஆளுஞர் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டுமா?"

"ஆம். ஏனெனில் ஆளுஞருக்கோ அவர்கள் அவ்விதம் தகுதிக் குறைவானவர்களா என்று தீர்மானிக்கும் தகுதியில்லை. சட்டமன்றம் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றியே அப்படிப்பட்டவர்களை தகுதி நீக்கம் செய்ய இயலும்"

என்னவொரு ஜாலியான அல்லது முட்டாள்தனமான விவாதம் என நினைக்க வேண்டாம். சில வருடங்களுக்கு முன்னர் நமது உச்ச நீதிமன்றத்தில் வைக்கப்பட்ட வாதமும் அதையொட்டிய நீதிபதியின் கேள்வியும் அதற்கு அளிக்கப்பட்ட பதிலும்தான் நான் மேலே எழுதியவை. இந்த வாதத்தினை வைத்தவர் அந்நியர் பிரதமர் ஆகலாமா? என்று தமிழகம் முழுவதும் கேள்வியெழுப்பிய ஜெயலலிதாவின் வழக்குரைஞர்! நீதிபதியின் கேள்விக்கு பதிலளித்தது அவர் தலைமையிலான தமிழக அரசின் வழக்குரைஞர்!!

தற்பொழுது புரிந்திருக்கும் என நினைக்கிறேன். சில வருடங்களுக்கு முன்னர் ஜெயலலிதாவுக்கு கிரிமினல் நீதிமன்றம் மூன்று ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது (பின்னர் மேல்முறையீட்டில் விடுதலையடைந்தார்) இவ்வாறு சிறைத்தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர்களாக முடியாது. இருந்தும் அவரது மேல்முறையீடு நிலுவையிலிருந்த நிலையில் 2001ல் நடந்த தேர்தலில் நான்கு தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்தார். அவையனைத்தும் தகுதிக் குறைவுக்காக நிராகரிக்கப்பட்டன. ஆனால் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற அதிமுக 14/15/2001ல் அவரையே தனது தலைவராக தேர்ந்தெடுக்க அதே தினம் ஆளுஞரால் தமிழக முதல்வராக பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டார். ஆக நான் முன்பு குறிப்பிட்ட ஓட்டையை பயன்படுத்தி, சட்டமன்ற உறுப்பினராக தகுதியில்லாத ஒருவர் முதல்வராக பதவியேற்ற முதலாவது சேட்டை ஏற்கனவே நடைபெற்று முடிந்து விட்டது.

ஆனால் உச்சநீதிமன்றம் இந்த சேட்டையை ஜாலியாக பார்த்துக் கொண்டிருக்கவில்லை. இப்படிப்பட்ட சேட்டைகளின் விபரீதத்தை உணர்ந்த நீதிமன்றம் 'மந்திரியாக நியமிக்கப்படுபவர் அவர் நியமிக்கப்படும் வேளையிலிலேயே சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கான தகுதியை பெற்றிருக்க வேண்டும்' என்று கூறி ஜெயலலிதா முதல்வராக நீடிக்க தகுதியில்லாதவர் என்று கூறியது. ஜெயலலிதாவும் பதவி விலகி பின்னர் வழக்கில் விடுதலையடைந்து தேர்தலை சந்தித்து முறைப்படி முதல்வராக பின்னர் பதவியேற்றது நாம் அறிந்தது.

சரி, உச்ச நீதிமன்றம் தலையிடாமல் ஜெயலலிதாவின் மேல்முறையீடும் கேட்கப்படாமல் ஆறு மாதங்கள் முடிந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? அப்போது ஜெயலலிதாவிடம் ஒரு யோசனை வைக்கப்பட்டது. அதாவது ஆறு மாதம் முடிவதற்கு முன்னர் அவர் ராஜினாமா செய்ய வேண்டும். பின்னர் மீண்டும் சட்டமன்ற உறுப்பினர்கள் அவரை தேர்ந்தெடுக்க மேலும் ஆறு மாதங்கள் ஓட்ட வேண்டும் என்பதுதான் அது.

ஆனால் அந்த சேட்டையை ஏற்கனவே பஞ்சாபில் ஒருவர் அதே வருடம் செய்து நீதிமன்றம் அவரது நியமனம் செல்லாது என்று உத்தரவிட்டது. டி.பி.சிங் என்ற அந்த மந்திரியின் வழக்கு அவ்வளவு மோசமில்லை. அவருக்கு தகுதிக் குறைவு ஏதுமில்லை. ஆனால் அவரது ஆறுமாத கால அவகாசம் முடிவதற்குள் முதல் மந்திரி மாற்றப்பட்டார். புதிய முதல் மந்திரியும் அவரை மந்திரியாக மீண்டும் நியமித்தார். ஆக அவருக்கு மேலும் ஆறு மாதகாலம் அவகாசம் கிடைத்தது...ஆனால் நீதிமன்றம் அதை அனுமதிக்கவில்லை.

(ஆனா பொதுவா சட்டம் இயற்றும் போது, எந்த ஓட்டையும் வராத மாதிரி தேவைக்கு அதிகமாவே எல்லா கண்டிஷனும் போட்டு, வார்த்தைகளால ரொப்பிதான் எழுதுவாங்கன்னு நினைச்சேன்)

வார்த்தைகளால் ரொப்புவது மட்டுமே முக்கியமல்ல. கவனமாக வார்த்தைகளை தேர்ந்தெடுப்பது அவசியம். 'பொடா' சட்டத்தினை பற்றி முன்பு எழுதிய ஒரு கட்டுரையின் கடைசியில் அது எவ்வளவு மோசமாக வரையப்பட்டுள்ளது என்று குறிப்பிடுகையில் 'இந்திய தண்டனைச் சட்டம்' ஒரு கவிதையைப் போல எவ்வளவு அழகாக எழுதப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டேன்.

நேற்று படித்த புத்தகத்தில் இருந்த ஒரு வாசகத்தை தர விரும்புகிறேன். "இந்திய தண்டனைச் சட்டம் 1834 முதல் 1838ம் ஆண்டு வரை இந்தியாவின் சட்ட அமைச்சராக பணியாற்றிய லார்ட் மெக்காலேவால் அவரது பணிக்காலத்தில் வரையப்பட்டதாகும். இந்தியாவில் இருக்கும் சட்டங்களிலிலேயே மிகக் குறைவாக திருத்தப்பட்ட சட்டம் என்ற பெருமையே அவரது மிகச்சிறந்த சட்டவரைவுப்பணிக்கு நற்சான்றிதழாகும்" என்று கூறுபவர் இந்தியாவின் மிகச்சிறந்த சட்டமேதை நானி பல்கிவாலா.

அதற்காக நமது அரசியலமைப்புச் சட்டத்தினை குறைத்து மதிப்பிட வேண்டாம். அதுவும் மிகச்சிறந்த முறையில் வரையப்பட்ட ஒரு ஆவணம். ஆனால், உலகில் பல நாடுகளின் அரசியலமைப்புச் சட்டத்தின் அனைத்து சிறந்த அம்சங்களும் இடம்பெற வேண்டும் என்று எல்லாவற்றையும் பொறுமையாக எடுத்தாண்டு, உலகிலேயே மிகப் பெரிய அரசியலமைப்புச் சட்டமாக இயற்றப்பட்டது. சமீபத்தில் யூகஸ்லோவியா நாட்டு அரசியலமைப்புச் சட்டம் நமது ரிக்கார்டை முறியடித்து விட்டது.

ஆனால், ஒரு அரசியலமைப்புச் சட்டத்தில் இப்படி அனைத்தையும் இழுத்துப் போட்டு எழுத வேண்டும் என்பதில்லை. அமெரிக்க சட்டம் மிகச் சிறியது. இங்கிலாந்திற்கு எழுதப்பட்ட சட்டமே இல்லை. ஏனெனில், பல வழக்குகளை ஆராய்ந்து இதுதான் சட்டம் என்று நீதிமன்றம் பல சமயங்களில் வரையறுக்கிறது......ஜெயலலிதா வழக்கில் நடந்தது போல.

நமது அரசியலமைப்புச் சட்டத்தின் ஒவ்வொரு பிரிவினையும் ஏற்பதற்கு அரசியலமைப்பு சட்டவரைவுக் குழு உறுப்பினர்களுக்கிடையே சிறந்த விவாதம் நடைபெற்று அந்த விவாதங்கள் ஆவணங்களாக நம்மிடம் இருக்கின்றன. ஏதாவது ஒரு சட்டப்பிரிவினைப் பற்றி சந்தேகம் வருகையில் நீதிமன்றங்கள் இந்த விவாதங்களை ஆராய்ந்து, அரசியலமைப்புச் சட்டத்தினை இயற்றியவர்கள் என்ன காரணத்திற்காக இவ்வாறு பிரிவினை ஏற்படுத்தியுள்ளார்கள் என்பதை அறிய முயலும். ஜெயலலிதா வழக்கில் கூட விவாதங்கள் ஆராயப்பட்டன. அதில் அரசியலமைப்புச் சட்டவரைவுக் குழுவின் தலைவரான அம்பேத்கர் பேசியது குறிப்பிடத்தக்கது.

"இந்தப் பிரிவில் முதலாவது திருத்தம் திரு. முகமது தாகிருடையது. அவருடைய யோசனை சட்டமன்றத்தில் உறுப்பினராக இல்லாத ஒருவர் மந்திரியாக நியமிக்கப்படக்கூடாது என்பதாகும். இந்தப் பிரிவில் கூறப்பட்டுள்ளபடி சட்டமன்றத்தில் உறுப்பினராக இல்லாத ஒருவர், மந்திரியாக நியமிக்கப்பட்டு ஆறு மாத காலத்துக்குள் தேர்தல் மூலம் தன்னை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்பதின் விளைவுகளை அவர் ஒப்புக் கொள்ள மறுக்கிறார். பேராசிரியர் கேடி ஷா மேலும் இரு தகுதிகளை முன் வைக்கிறார். அதாவது மந்திரி பெரும்பான்மை பொருந்திய கட்சியினை சார்ந்தவராக இருக்க வேண்டும் மற்றும் குறைந்தபட்ச கல்வித் தகுதி கொண்டவராக இருத்தல் வேண்டும் என்பது. மந்திரியாக நியமிக்கப்பட முழுத்தகுதி வாய்ந்த ஒரு நபர் தேர்தலில் தோற்றுப் போக நேரிடலாம். ஏதோ ஒரு காரணத்துக்காக, அது நல்ல செயலாகவே இருந்தால் கூட தனது தொகுதியினை பகைத்துக் கொண்டிருக்கலாம். அப்படிப்பட்டவர் மந்திரியாக நியமிக்கப்பட்டு அதே தொகுதியில் அல்லது வேறு ஒரு தொகுதியில் தன்னை தேர்ந்தெடுத்துக் கொள்ள மீண்டும் ஒரு வாய்ப்பு ஏன் ஏற்படுத்தக்கூடாது. மேலும் நிரந்தரமாகவா உறுப்பினர் அல்லாது இருக்கப் போகிறார்கள். ஆறுமாதத்திற்குள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமே!"

ஆக தகுதி வாய்ந்த ஒருவர் தேர்தலை சந்திக்க முடியாத அல்லது தோற்றுப் போகும் வேளையில் அவரது நிர்வாகத் திறனை அரசு இழக்கக் கூடாது என்பதுதான் சட்ட வரைவாளர்கள் எதிர்பார்த்த நோக்கம். இதன் அடிப்படையிலேயே அரசியலமைப்பு சட்ட பிரச்னைகளுக்கான கேள்விகளுக்கு நீதிமன்றங்கள் பதிலளிக்கின்றன...

24.12.06

வெடி!

வெளியே எங்காவது உணவருந்தலாம் என்று குழந்தைகளுடன் அமெரிக்கன் கல்லூரி வழியாக நேற்றிரவு செல்கையில் உள்ளிருந்து சிதறிய உற்சாகம், ‘அடடா, ஏதோ கேரல்ஸ் போல இருக்கே’ என்று மனதில் உரசியது. வலிய இவ்வாறு நினைவுக்கு கொண்டு வந்தால்தான் இன்னும் பத்து நாட்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதை உணர முடிகிறது. குழந்தைகளுக்கோ, வருடத்திற்கு ஒரு முறை வரும் பர்த்டே பார்ட்டி அளவிலேயே கிறிஸ்மஸ் பற்றிய எதிர்பார்ப்புகள். அவர்களுக்கு எல்லாமே எப்பொழுதுமே கிடைக்கிறது என்பதில் கிடைக்காமல் போனது கிறிஸ்துமஸ் எதிர்பார்ப்புகள் போல...

எங்கள் வீட்டிலெல்லாம் கிறிஸ்மஸ் ஏற்பாடுகள் தீபாவளிக்கு முன்னரே ஆரம்பித்து விடும். அம்மா அலுவலகத்தில் தீபாவளிக்கு முன்னரே கொடுக்கப்படும் போனஸ் மட்டும் காரணமில்லை. தீபாவளிக்கு கோ-ஆப்டெக்சில் துணி வாங்குவதற்காக அலுவலகத்தில் கிடைக்கும் வட்டியில்லாக் கடனும் ஒரு காரணம். ஆனால் இதையெல்லாம் மிஞ்சி, என் அம்மாவின் அலுவலகத்தில் தீபாவளிக்கு அவர்களது சொசைட்டியில் மொத்தமாம் வெடி வாங்கி 5 ரூபாய், 10 ரூபாய் மற்றும் 25 ரூபாய்க்கான பண்டல்களாக கட்டி விற்பார்களே அதுதான் முக்கிய காரணம்.

எப்பொழுதும் 10 ரூபாய் பண்டல் வாங்கியதாகத்தான் ஞாபகம். 25 ரூபாய் பண்டல் ஒரு முறை வாங்கினோம் என்று நினைக்கிறேன். அந்த பண்டல்கள் தீபாவளியின் போதுதான் கிடைக்கும் என்பதால் அப்போதே வாங்கி ஒரு மஞ்சள் பையில் போட்டு அடுப்புக்கு மேலே மாட்டி வைத்து விடுவார்கள். அப்போது விறகு அடுப்பு அல்லது ஸ்டவ்தான். அடுத்த ஒரு மாதமும் தினமும் காலை எழுந்ததும் ஒரு முறை அந்த மஞ்சள் பையினை தரிசிக்க தவறுவதில்லை. யாரும் இல்லாத சமயத்தில் லேசாக அதை தடவி, கொஞ்சம் குத்திப் பார்ப்பதும் உண்டு.

பள்ளிக்கூடத்திலோ, நண்பர்களிடத்தில், 'பார், எங்கள் கிறிஸ்மஸ”க்கு எவ்வளவு வெடி வெடிக்கிறோம் என்று சவால் வேறு. திருநெல்வேலி மாவட்டத்தில் மற்ற மாவட்டங்களை விட கிறிஸ்தவ மக்கள் கொஞ்சம் அதிகம்.

டிசம்பர் நெருங்க நெருங்க அடுத்த மாதம் இதே நாள் என்று ஆரம்பித்து, கடைசியில் அடுத்த வாரம் இதே நாள் கிறிஸ்மஸ் என்று வருகையில் அரை வருட பரீட்சையும் முடிந்திருக்கும். பரீட்சை பயம் போனவுடன், அடுப்புக்கு மேலே தொங்கும் மஞ்சள் பையினைப் பார்க்கும் நேரமும் அதிகரித்திருக்கும். இன்னும் நாள் நெருங்க நெருங்க அதன் மீதான உரிமையும் அதிகரிப்பதாக ஒரு எண்ணம் தோன்றி விடும். அம்மாவின் அதட்டலையும் மீறி அந்த பைக்கு ஒரு செல்ல குத்து. பண்டலுக்குள் இருக்கும் சமாச்சாரங்களைப் பற்றி யூகம், அனுமானங்கள் மற்றும் விவாதங்கள் சகோதரர்களுக்குள் நடக்கும். பண்டலைத்திறக்க விட மாட்டார்கள், நமத்துப் போய் விடுமென்று...அதற்காகத்தான் அடுப்புக்கு மேலே தொங்க விடுவது.

24ம் தேதி மாலை மஞ்சள் பை அங்கிருந்து அம்மாவால் அகற்றப் பட்டு அண்ணனது கைக்கு வரும். கண் கொத்திப் பாம்பு போல நானும், சின்ன அண்ணனும் பார்த்துக் கொண்டிருப்போம். எதுவும் மிஸ் ஆகி விடக்கூடாதல்லவா? அதற்குப் பின் நடக்கப் போவதுதான் முக்கியமான கட்டம்.

தரையில் அண்ணன், அவனைச் சுற்றி நாங்கள் இரண்டு பேரும் கண்களில் விளக்கெண்ணை விட்டுக் கொண்டு கவனித்துக் கொண்டிருப்போம். நடுவில் வெடி பண்டல். அக்கா சுவராசியமில்லாமல் நின்று கொண்டு எட்டிப் பார்ப்பாள். அவளுக்கு கவலையில்லை. அவளுக்கு வேண்டியது சரியாக வந்து விடும். பிரச்னை சகோதரர்களுக்குள்தான்.

பண்டலை பிரிக்க பிரிக்க, சத்தம் போடாத வத்திச் சமாச்சாரங்கள் பெரிய ஏமாற்றத்தைத் தரும், 'இந்த ஆபிஸ்ல வாங்கினா இப்படித்தான். மத்தாப்பாய் வச்சுருவானுங்க' என்று பண்டல் கட்டிய மகானுபாவனுக்கு சில சாபங்கள் கிடைக்கும். அக்காவுக்கு சிரிப்பு சிரிப்பாக வரும். பின்ன அந்த சமாச்சாரங்க ளெல்லாம் அவளுக்கெல்லவா. ஆனாலும் எங்கள் நிலையினை னைத்து பரிதாமகத்தான் அவள் சிரித்தாள் என்று எனக்கு படுகிறது!

அந்த பத்து ரூபாய் பணத்துக்கும் கணிசமாக வெடி இருக்கும். இப்போது பத்து ரூபாயினை வைத்துக் கொண்டு வெடிக்கடையினை வேடிக்கை பார்க்கக் கூட அனுமதிப்பார்களா என்பதே சந்தேகந்தான். சிறிது அதிஷ்டம் இருந்தால் ஒரு பாக்கட் 'ஆட்டம் பாம்' கூட இருக்கும். அடுத்து அண்ணன் சரவெடியினை எல்லாம் மெல்ல தனித் தனி வெடியாக பிரிப்பான். ரொம்ப நேரம் வெடிக்க வேண்டுமல்லவா? அதனால் சர வெடியினைத் தியாகம் செய்ய வேண்டியதிருக்கும். இப்போது வெடிகள் மூன்று பங்காக பிரிக்கப் படும். ஒவ்வொன்றும். ஒன்று கூட பிசகக் கூடாது. எண்ணி எண்ணி, அண்ணன் வைக்கும் போது கண் இமைக்க மறுத்து பார்த்துக் கொண்டிருப்போம். இங்கே அங்கே ஒன்று கூடினால், பெரிதாகக் கத்துவேன். முடிந்தது. மத்தாப்புகள் தனியாக அக்காவுக்கு. வெடிகள் மூன்று சம பங்காக எங்களுக்கு. வெடிக்கம்பெனிக்காரனுக்குத் தெரியுமா, இங்கு மூன்று பேர் இருக்கிறோம் என்று. சில சம்யம் ஒன்று, இரண்டு தனியாகி விடும். அதனை அண்ணன் உரிமையாக எடுத்துக் கொள்வான் எனினும், நாங்கள் அதற்காக சலித்துக் கொள்ளத் தவறுவதில்லை.

எனது பங்கினை தனியாக ஒரு பாக்கெட்டாக, மற்றவர்கள் கண்ணில் படாமல் கட்டிலுக்கு அடியில் வைத்து விடுவேன். 'கையை கழுவிக் கொண்டு வந்து தொடுடா' என்று சட்டியில் மிஞ்சியிருக்கும் கேக் மாவினை எடுக்கப் போனவனை அம்மா திட்டுவார்கள்.

விடிகாலைக் குளிரில் எழுப்பி விட்டவுடன், முதலில் போய்ப் பார்ப்பது வெடியினைத்தான். 'சரியாக இருக்கிறது' என்று திருப்தியுடன் பல் தேய்க்கப் போவோம். கோவிலில் தூக்கம் தூக்கமாக வந்தாலும், விழிப்புடம் இருக்கச் செய்வது வீட்டுக்கு போனவுடன் சாப்பிடப் போகும் கேக்கும் வெடிக்கப் போகும் வெடியும்தான். நமது புதுச் சட்டையினை பக்கத்திலுள்ளவன் சட்டையுடன் ஒப்பிடுவதும் நடக்கும் என்றாலும் அதில் அதிக நாட்டமிருக்காது. எங்கள் மூன்று பேருக்கும் ஒரே துணியில் சட்டை என்பதால், பெரிய அண்ணன் எங்களுடன் உட்கார கூச்சப் பட்டு தனியாக இருப்பான். தூத்துக்குடிக்கு போன பிறகு இந்தப் பழக்கத்தை, 'ஒரே மாதிரி என்னால் சட்டை போட முடியாது' என்று முதன் முதலில் உடைத்தது அவன்தான்.

வீட்டிற்கு வரும் போதே நாங்கள் ஒரு மாதமாக கற்பனை செய்து வைத்திருந்தது மாதிரி பெரிய வெடிச்சத்தம் இருக்காது. 'இந்த வருஷம் ரொம்ப வெடியில்லையே' என்று சொல்லிக் கொள்வோம்.

வீட்டில் இன்ன பிற சமாச்சாரங்கள் முடிந்த பிறகு அல்லது நடந்து கொண்டிருக்கும் போதே அண்ணன் ஆரம்பித்து விடுவான். அக்காவும் சேர்ந்து கொள்வாள் மத்தாப்புடன். ஆனால் எங்களுக்கு மத்தாப்பு பார்க்கும் ஆசையே இருக்காது. அண்ணன் அவன் வெடியெல்லாம் வெடித்து முடிக்க விடிந்து சாப்பாடு நேரம் வந்து விடும். கிரவுண்டுக்கு தாண்டி அந்தப் பக்கம் இருக்கும் வீட்டில் நிறைய வெடிச் சத்தமும், எங்களுக்கு அப்போது எட்டாக் கனியாக இருந்த ராக்கெட்டும் எங்களைக் கவரும். 'பிரேக் இன்ஸ்பெக்டர் வீட்டிலிருந்து அது' என்று சொல்லிக் கொள்வோம். பிரேக் இன்ஸ்பெக்டர் வீட்டில் ஏன் அவ்வளவு வெடி வெடித்தார்கள் என்று, ஏறக்குறைய பன்னிரண்டு ஆண்டுகளுக்கு பின்னர்தான் புரிந்தது.

சாப்பிட்ட பின்னர் சின்ன அண்ணனும் நானும் வெடிகளை எடுத்துக் கொள்வோம். பெரிய அண்ணனும் கூட இருப்பான். நாங்கள் ஒவ்வொரு வெடியாக எடுத்து அவனிடம் கொடுக்க அவன் போடுவான்!! எங்களுக்கு போட பயம்!!!

இப்படி வெடி எடுத்துக் கொடுக்கத்தான் இத்தனை ஆர்ப்பாட்டமும். ஆனாலும் அதற்கும் சில எழுதப்படாத விதிகள் உண்டு. வெடி எங்கள் கண் பார்வையில் போடப் பட வேண்டும். நாங்கள் சொல்லும் இடத்தில் வைத்து பற்ற வைக்க வேண்டும்.

கொஞ்சம் மிச்சம் வைத்து விட்டு தெருவில் நண்பர்களுக்காக பார்த்திருப்போம். அக்கா அதற்குள் தட்டில் பலகாரத்தை எடுத்துக் கொண்டு எல்லார் வீட்டுக்கும் போய் வருவாள். 'நீயும் வாடா' என்பாள். நான் அதனைக் கவனிக்காமல் குட்டி கொண்டு வந்த சில்வர் ஷாட் வெடியினையும் அவன் அதன் அருமை பெருமைகளை விவரிப்பதையும் வாயைப் பிளந்தபடி கேட்டுக் கொண்டிருப்பேன்.

மத்தியானம் அவ்வளவுதானா என்று இருக்கும். எல்லோரும் உட்கார்ந்து பேசுகையில், வெடி அவ்வளவுதான் என்றால் அப்பா, 'என்னடா, ராத்திரி போய் எல்லா வீட்டு வெடிக் குப்பையும் அள்ளி இங்க வந்து போட்டுக்கோ. ந்ம்மதான் எல்லாம் வெடிச்சோம்னு போய்ச் சொல்லு' என்பார்.

வெளியில் சிரித்தாலும், 'தீபாவளிக்கு மாதிரி நம்மால வெடிக்க முடியலயே' என்ற ஏக்கம் இருக்கும்.

'இந்த கிறிஸ்மஸும், தீபாவளியும் ஒரே நாளில் வந்தால் எவ்வளவு நல்லா இருக்கும். எல்லோரோட சேர்ந்து நாமும் வெடிக்கலாமே' என்று எண்ணிக் கொண்டிருப்பேன்.

23.12.06

கேள்விகள்?

எனக்கு பத்து வயதிருக்கலாம், இரவில் அனைவரும் படுத்திருக்கையில் திடீரென கிளம்பிய அந்த சந்தேகத்தை, அந்த இருட்டிலேயே மற்றவர்களிடம் கேட்டேன். ஆனால் யாராலும் எனது கேள்வியினை புரிந்து கொள்ள முடியவில்லை. அல்லது எனக்கு சரியாக விளக்கத் தெரியவில்லை. ஆயினும் அந்த கேள்வியினை நான் வெகு நாட்கள் சுமந்து திரியவில்லை!



விரைவிலேயே அதற்கு பதில் கிடைத்தது, மலிவு விலையில் அப்பா வாங்கி வந்து தந்த யா.பெரல்மான் என்ற சோவியத் ஆசிரியர் எழுதிய ‘பொழுது போக்கு பொளதிகம்’ என்ற புத்தகத்தில். என்னை குடைந்த கேள்வி ‘இப்படியே புவியில் துளையிட்டுக் கொண்டே சென்றால் அடுத்த பக்கம் வழியாக வெளியேற முடியுமா?’ என்பதுதான்.



பெரல்மானைப் பற்றி இணையத்தில் முன்பு குறிப்பிட்டதில், முல்லை தங்கராசனின் இரும்புக்கை மாயாவிக்கு இணையாக ரசிகர் பட்டாளம் இருப்பதை அறிந்து கொண்டேன்.



ஆனால், அதே வயதில் எனக்குத் தோன்றிய மற்றுமொரு சந்தேகத்தினை வீட்டில் யாரிடமும் கேட்கவில்லை. ஆனால் அதை வைத்து நண்பன் ஒருவனிடம் கடவுள் இருப்பதற்கு அதுதான் ஆதாரம் என வாதிட்டிருக்கிறேன். அந்த வாதம், ‘பாத்தீயா, கல்யாணமானவர்களுக்குத்தான் குழந்தை பிறக்கிறது. இது அதிசயம்தானே!’



இதில் வியப்படைய வைத்தது என்னவென்றால், சுமார் நான்கு வருடங்களுக்கு முன்னர் எனது மகளும் ஒரு நாள், ‘அது எப்படிப்பா, கல்யாணமானா அவங்களுக்கு குழந்தை பிறக்கிறது?’ என்று ஒரு போடு போட்டாள்! என்னிடம் விடையில்லை!!



இவ்வாறாக கேள்வி கேட்கவே பிறந்தவர்களுக்காக, எழுத்தாளர் சுஜாதா முன்பு ஜூனியர் விகடன் பத்திரிக்கையில் பதில் எழுதிக் கொண்டிருந்தார். நானும், கல்லூரியில் படிக்(காத)கும் பொழுதில் பல கேள்விகளை எழுதிப் போட்டேன். மற்ற அனைத்து கேள்விகளையும் தள்ளிவிட்டு அசட்டுத்தனமான ஒரு கேள்வியை மேலும் அபத்தமாக ‘எடிட்’ செய்து அதற்கு பத்தாம் பசலித்தனமாக அவரும் பதிலளித்திருந்தார்.



அந்தக் கேள்விகள் அனைத்தும் வாழ்க்கையின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட ஒரே ஒரு கேள்வி மட்டும் அடிக்கடி நினைவுக்கு வந்து அதுவும் மறைந்து போனது.



ஆனால் நேற்று ஆச்சரியம்!



அதே கேள்வியை அட்சரம் பிசகாமல் எனது மகள் கேட்கிறாள். ‘ஏன், கலர் துணியில் தண்ணீர் பட்டால் ‘டார்க்’ கலராக மாறுகிறது?’



விஞ்ஞானத்தை விட்டு வெகு தூரம் வந்து விட்ட என்னிடம் பதிலில்லை. உங்கள் யாருக்காவது தெரிந்தால் கொஞ்சம் உதவினால், நன்றியுடையவனாக இருப்பேன்.

20.12.06

Dost அல்லது உடல் மண்ணுக்கு!

கடந்த ஞாயிறு (இதுவும் மூன்று வருடங்களுக்கு முன்னர்தான்) சன் தொலைக்காட்சியில் 'தோஸ்த்' என்ற சரத்குமார் படம். இடையில் சில காட்சிகள் பார்க்க நேர்ந்தது. ரகுவரன் லாட்டரிப் பிரியராக ஒரு காட்சியில் நன்றாக நடித்திருந்தார். அவரது நண்பரான சரத்குமார் இரவில் அவரை ஒரு படகில் அழைத்துச் செல்ல காலையில் எழுந்து பார்த்தால் ரகுவரனைக் காணவில்லை. ஆனால் படகில் இரத்தம்! படகில் கிடக்கும் ரத்தம் தோய்ந்த கத்தியில் சரத்குமாரின் கைரேகை!!

ரகுவரனின் மனைவியுடன் உள்ள தொடர்பால் அவரைக் கொலை செய்து விட்டார் என்று கூண்டில் ஏற்றப்படுகிறார் சரத்குமார். அவருக்கும் அவரது நண்பரான ரகுவரனின் மனைவிக்கும் தொடர்பு என்று கூறும் அரசு வழக்குரைஞரை குற்றவாளிக்கூண்டின் கட்டையை உருவியெடுத்து தாக்க முயலுகிறார். பின்னர் நீதிபதி சரத்குமாருக்கு ரகுவரனை கொன்றதற்காகவும், நீதிமன்ற அவமதிப்புக்காகவும் ஏழு ஆண்டு தண்டனை விதிக்கிறார்.

அதன் பின்னர் படத்தினைப் பார்க்கவில்லையெனினும் 'ரகுவரன் கடைசிக் காட்சியில் உயிருடன் வந்து விடுவார்' என்று பல தமிழ்ப்படங்களை பார்த்தவன் என்ற முறையில் எளிதில் யூகிக்க முடியும். இல்லையெனில் சோகத்தை பிழியும் ஒரு பாடலைப் பாடியபடியே ரகுவரனின் சவத்தை சரத்குமார் எரியூட்டும் காட்சி இருந்திருக்கும்.

முன்பு கூட ஒருமுறை இறந்தவரின் உடல் என்னவாயிற்று என்பது தெரியாமலே கொலைக்குற்றத்திற்கு பிரபுதேவா தண்டிக்கப்படும் படம் பார்த்திருக்கிறேன். இது சாத்தியமா?

திரைக்கதைகளில் நிகழும் அதே நிகழ்ச்சி நிஜத்திலும் நடைபெறும் அதாவது இறந்தவர் உயிருடன் வரும் வாய்ப்பு இருப்பதால் ஒரு கொலை நடைபெற்றுள்ளது என்பதற்கு முதல் முக்கிய ஆதாரம் உயிரற்ற ஒரு உடல். உடல் முழுவதும் கிடைக்காமலே மற்ற சாட்சிகள் இறுக்கமாக இருக்கையில் ஒருவரை தண்டிக்கலாம் என மிக மிக அரிதான வழக்குகளில் நீதிமன்றம் கூறியிருந்தாலும், அவ்வழக்குகளில் கொலையில் ஈடுபட்ட யாராவது ஒருவர் அப்ரூவராக இருந்திருப்பார்.

இந்த உடலை மறைக்கும் விஷயங்களில் கொலையாளிகள் கிரியேட்டிவிட்டி சொல்லி மாளாது. பாக்கிஸ்தானில் ஒரு டாக்டர் தனது மனைவியின் உடலை அமிலத் தொட்டியில் வைத்து ஊற வைத்து கரைத்து 'பிளஷ்' செய்ய அதையும் பின்னர் காவல்துறையினர் நோண்டி எலும்புத் துணுக்குகளை சேகரித்துவிட்டனர். சென்னையில் எழுபதுகளில் பாய்லரில் வைத்து இறந்தவர்களின் உடலை சாம்பலாக்கிய வழக்கில் அப்ரூவரின் சாட்சியத்தால் குற்றம் நிரூபிக்கப்பட்டது.

நான் படித்த ஒரு கற்பனைக் கதையில் இதே போல தோஸ்த் ஒருவனைக் கொன்று உடலை முதுகில் சுமந்து கொண்டு, விடிகாலை ஓதத்தில் (Tide) நீர் வடிந்து போயிருக்கும் கடலுக்குள் வெகுதூரம் தூக்கிச் செல்வான் ஒருவன். நடந்து சென்றே நடுக்கடலில் வீசிவிடலாம் என்பது அவனது எண்ணம். போதிய தூரம் சென்றபின் பிணத்தை இறக்கப் பார்த்தால் முடியாது. பிணத்தின் கை, கால்கள் 'Rigor Mortis' என்று அழைக்கப்படும் தன்மையால் இறுகி அவனால் விலக்கவே முடியாது. திரும்பி வருவதற்குள் கடல் நீர் மெல்ல மெல்ல எழும்பி பிணத்தோடு சேர்த்து அவனையும் விழுங்கிவிடும்!

இதனால் நாம் அறியும் நீதி. உயிரை மேலே அனுப்புவது எளிது. உடலை அனுப்புவது கடினம். எனவேதான் அரசியல்வாதிகள் முதல் சினிமா நடிகர்கள் வரை 'உயிரை தனக்கும் உடலை மண்ணுக்கும்' கேட்கிறார்களோ?


***

ஒரு தகவல்: தோஸ்த் பட நீதிபதியின் தீர்ப்பில் ஒரு தவறு இருக்கிறது. கொலை வழக்கு நடப்பது மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில். அவரால் ஒரு கொலையாளியை தூக்குமேடைக்கு கூட அனுப்ப முடியும். ஆனால் 'நீதிமன்ற அவதூறுக்காக' யாரையும் தண்டிக்க இயலாது. ஏனெனில் அந்த அதிகாரம் உயர் நீதிமன்றத்திற்கு மட்டுமே உள்ளது.

அடுத்த தகவல்: கோபல்ல கிராமம் நாவலில் இருந்து உருவி முதல்மரியாதை படத்தில் பயன்படுத்தப்பட்ட காட்சியில் வருவது 'rigor mortis' அல்ல. அது 'cadaverous spasm'.

18.12.06

வருங்கால முதல்வரின் திரைப்ப(பா)டம்!

சென்ற வார இறுதியில் (அதாவது மூன்று வருடங்களுக்கு முன்னர்) தொலைக்காட்சி அலைவரிசைகளில் அகப்பட்ட இரு படங்களிலும் நீதிமன்ற காட்சிகள். முதலாவது படம் பெயர் தெரியவில்லை. ஆனால் இளமையான தோற்றத்துடன் விஜயகாந்த், வன்புணர்வு குற்றம் சாட்டப்பட்ட நபர் சார்பாக ஆஜராகி, அரசு சாட்சியான நிரோஷாவை குறுக்கு விசாரணை செய்து கொண்டிருந்தார். அதாவது தமிழ் திரைப்படங்களில் குறுக்கு விசாரணை என்று படம் பிடிக்கப்படுபவை ஒரு வழக்குரைஞரின் பார்வையில் பட்டி மன்ற விவாதம்!

அபத்தமாக கேள்வி கேட்டபடியே வாதம் செய்யும் விஜயகாந்தைப் பார்த்து இறுதியில் அரசு வழக்குரைஞர், 'இவரை குற்றவாளியில்லை என்று கூறுகிறீர்களே. அதற்கான ஆதாரம் இருக்கிறதா?' என்று வினவ, விஜயகாந்த், 'ஆதாரம்தானே, இதோ' என்று தனது கோட்டு பையிலிருந்து ஒரு ஊசியையும், நூலையையும் எடுக்க எனக்கு ஒன்றும் விளங்கவில்லை! ஆனாலும், புத்திசாலித்தனமாக ஏதோ செய்யப்போகிறார் என்று பார்த்தால்....அடுத்து நிகழ்ந்ததை இங்கு எழுத எனக்கு கூசுகிறது. நூலை அடுத்தவரிடம் கொடுத்து தன் கையிலுள்ள ஊசியில் கோர்க்கச் சொல்லுகிறார். அவர் நூலை கொண்டு வர கொண்டு வர இவர் ஊசியை நகர்த்துகிறார். அதாவது, 'ஊசி இடம் கொடுத்தால்தான் நூல் நுழைய முடியுமாம்'!

ஒன்று புரிந்தது. கல்வித்துறைக்கு ஏன் ஆட்சியாளர்கள் போதிய நிதி உதவி ஒதுக்குவதில்லை என்பதற்கு ஒரு காரணம் கூறுவார்கள். அதாவது, 'மக்கள் கல்வியறிவு பெற்று விட்டால், மோசடி அரசியல்வாதிகளை இனம் கண்டு கொள்வார்களாம்' அரசியல்வாதிகளுக்கு இருக்கும் அதே நோக்கம் அரசியல் கனவுகளுடன் வளைய வரும் நடிகர்களுக்கும் இருக்குமோ என்ற சந்தேகம் எம்ஜிஆர் முதல் ரஜினிகாந்த், விஜயகாந்த் படங்களை பார்க்கையில் வலுப்படுகிறது.

ஆட்டுப்பால் குடிச்சால் அறிவழிஞ்சு போகுமோ இல்லையோ அடுத்த முதல்வர் நாந்தான் என்று கனவு காணும் நடிகர்களின் படங்களை பார்த்தால் நிச்சயம் அழிந்து போகும்!

மும்பை

15.12.06

அப்சலும், க்ரீமி லேயரும் - 6 (இறுதி)

சமீப காலமாக, ‘இட ஒதுக்கீடு அல்ல, இடப் பங்கீடு என்பதே சரியான வார்த்தை, என்ற கருத்து முன் வைக்கப்படுகிறது. கவர்ச்சிகரமாக இருக்கிறது என்ற அளவிலேயே, இவ்வாதத்தினை கண்ணுற்ற நான் பின்னர் இட ஒதுக்கீடு சம்பந்தமாக அரசியலமைப்பு சட்டக்குழுவில் நடைபெற்ற விவாதத்தினை படிக்கையில் இடப்பங்கீடு என்ற கருத்தில் மிகவும் வலு இருப்பதாக உணருகிறேன். இந்த வகையான ஒரு விவாதம் துரதிஷ்டவசமாக இது வரை உச்ச நீதிமன்றத்தின் முன் நடந்த எந்த வழக்கிலும் வைக்கப்பட்டதாக தெரியவில்லை. ஏனெனில், கிரீமி லேயர் குறித்தான உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் எவற்றிலும் இவ்வகையான வாதம் பற்றி குறிப்பு இல்லை.

கிரீமி லேயர் பாகுபாட்டினை உச்ச நீதிமன்றம் வகுத்ததில், எனது சிற்றறிவிற்கு பட்ட வகையில் சட்ட ரீதியிலான காரணம் இல்லை என்றே தோன்றுகிறது. உச்ச நீதிமன்றம் இந்தப் பிரச்னையினை நம்மிடையே நிலவும் ‘இட ஒதுக்கீட்டின் பலன்களையெல்லாம், பிற்ப்படுத்தப்பட்டவர்களில் முற்ப்படுத்தப்பட்டவர்களே எடுத்துக் கொண்டு கீழ் மட்டத்தின் அதன் பலன்கள் சென்று சேராமல் தடுக்கிறார்கள்’ என்ற சாதாரண நடுத்தர வர்க்கத்து பொதுக்கருத்தினை வைத்தே அணுகியுள்ளது. இந்த ஒரு காரணத்தினை தவிர வேறு வலுவான காரணங்கள் எதுவும் இது வரை க்ரீமி லேயர் குறித்தான தீர்ப்புகளில் இல்லை!

இந்த பொதுக்கருத்திற்கு ஒரு சட்ட முலாம் பூசும் வண்ணம், மண்டல் கமிஷன் வழக்கில் பிற்ப்படுத்தப்பட்டவர்களில் முற்ப்படுத்தப்பட்டவர்களான ‘க்ரீமி லேயர்’ ஒரு தனி வகுப்பாக கருத்தப்பட்டு அந்த வகுப்பு ‘சமூக மற்றும் கல்வியில் பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பு’ என்பதின் விளக்கத்திற்குள் வராத வகுப்பாக கருதப்பட வேண்டும் என்று விளக்கம் மண்டல் கமிஷன் வழக்கில் கூறப்படுகிறது.

‘இட ஒதுக்கீடு என்பது காலம் காலமாக பிற்ப்படுத்தி வைக்கப்பட்டவர்களை உயர்த்தும் ஒரு முறை அல்லது முற்ப்படுத்தப்பட்டவர்களுடன் போட்டியிட முடியாத வகுப்பினரை கை தூக்கி விடும் ஒரு கருவி’ என்ற பரவலான கருத்து சரியாக இருக்குமிடத்து இவ்வாறு ‘க்ரீமி லேயரையுமா கை தூக்கி விட வேண்டும்?’ என்ற கேள்வி எழுவது இயல்பே! ஆனால், இட ஒதுக்கீடு என்பது இவ்வாறு ‘கை தூக்கி விடும்’ கருவி மட்டுமல்ல. மாறாக இந்த நாட்டில் வசிக்கும் பல்வேறு மக்கள் குழுக்கள் அனைத்தும், போதுமான அளவில் அரசின் அதிகாரத்தில் பங்கேற்க வைக்கும் ஒரு ‘இடப் பங்கீடு’ என்று கூறப்பட முடியுமானால் அவ்வாறான ஒரு கேள்வி எழாது.

அரசியலமைப்பு சட்டக்குழு உறுப்பினர்களில் சிலர் ‘இட ஒதுக்கீடு’ என்ற அளவிலேயே இந்தப் பிரிவினை உணர்ந்து தங்களது கருத்தினை வைத்தாலும் அனைவரும் அவ்வாறு கருதவில்லை. உதாரணமாக மதறாஸ் இஸ்லாமிய உறுப்பினரான முகமது இஸ்மாயில் சாகிப் தனது உரையின் இறுதியில் கூறுவது கவனிக்கத்தக்கது,
‘Reservation in services is one of the measures we can adopt to bring about contentment among people. You can then say to the people, “Look here, you have your proper share in the services and you have nothing to complain” When people themselves find that they are given as good an opportunity as others, harmony will be there and so called communalism will not come at all ..... Therefore, I say that one of the ways of removing disharmony and producing harmony, is to make provision for the people’s representation in the services and to make them feel that they have got a real share and an effective share in the governance of the country’

குழுவில் உரையாற்றிய அனைவருமே, அரசுத்துறையில் போதுமான அளவில் அனைத்து வகுப்பினரும் பிரநிதித்துவம் பெற வேண்டும் என்ற அளவிலேயே இப்பிரச்னையினை அணுகியுள்ளதாக தெரிகிறது. இட ஒதுக்கீட்டிற்கு வழிகோலும் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 16(4) கூறுவதும் அவ்வாறானதாகவே உள்ளது. அதாவது,
‘Nothing in this article shall prevent the state from making any provision for the reservation of the appointments or posts in favour of any backward class of citizen, which in the opinion of state, is not adequately represented in the services of the state’

எனவே இட ஒதுக்கீடு என்பது ஒவ்வொரு தனிப்பட்ட வகுப்பும் அரசு துறைகளில் போதுமான பிரநிதித்துவம் பெற வேண்டும் என்பதற்காகவே தவிர தகுதி குறைந்தவர்களை தூக்கி விடும் செயலல்ல என்ற கருத்து வலுவானதாகவே படுகிறது.

பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பு (backward class) என்றால் என்ன என்ற கேள்வி குழுவின் விவாதங்களில் முக்கியமாக எழுப்பப்பட்டாலும், அதனை ஒரு வரையறைக்குள் கொண்டு வரவில்லை. ஏனெனில், சிறுபான்மையினர் இவற்றில் வருவார்களா என்ற சந்தேகம், சிறுபான்மை இன உறுப்பினர்களுக்கு இருந்தாலும், அவர்களையும் இந்த வரையறைக்குள் கொண்டு வர வேண்டுமென்பதாற்கவே ஜாதி (caste) என்று கூறாமல் வகுப்பு (class) என்று கூறப்பட்டதாக மண்டல் கமிஷன் வழக்கில் கூறப்பட்டது. மேலும், மார்க்சிய சிந்தனையிலான பொருளாதர அடிப்படையிலான வர்க்கம் என்று அர்த்தப்படவே படாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.

எனவே ஒரு வகுப்பினை முன்னேற்றுவது என்பதனை விட அனைத்து வகுப்பிற்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதே இந்தப் பிரிவின் நோக்கம் என்றே நான் நினைக்கிறேன். எனெனில், விவாதத்தின் இறுதியில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையிலும், விவாதத்தினை முடித்து வைக்கும் வகையிலும் அம்பேத்கர் அவர்கள் பேசியது முக்கியமானதாகும்.
‘firstly, that there shall be equality of oppertunity, secondly that there shall be reservation in favour of certain communities which have not so far had a ‘proper look in’ so to say into the administration ..............................we had to reconcile this formula with the demand made by certain communities that the administration which has now- for historical reasons-been controlled by one community or a few communities, that situation must disappear and that the others also must have an opportunity of getting into public services’

இந்த விளக்கத்திற்கு பின்னரே அம்பேத்கர், மண்டல் கமிஷன் வழக்கில் பயன்படுத்தப்பட்ட 70 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கப்பட முடியுமா என்ற கருத்தினை எடுத்து வைத்து, எது பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பு என்பதை அரசே தீர்மானிக்கட்டும் என்று கூறி விவாதத்தினை முடித்து வைத்தார். அம்பேத்கரின் இந்த விளக்கத்திற்கு பின்னரே இந்தப் பிரிவு அரசியலமைப்பு சட்டக்குழுவால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

நாம் ஏற்றுக் கொள்கிறோமோ இல்லையோ, நமது நாட்டில் ஜாதி ரீதியிலாகவோ, மத ரீதியிலாகவோ அல்லது மொழி ரீதியிலாகவோ தனித் தனி மக்கள் குழுக்கள் உள்ளன. காரணம் எதுவாக இருப்பினும், அரசு அதிகாரத்தில் ஒரு குழுவின் பங்கு மொத்த மக்கள் தொகையில் அதன் சதவிகிதத்திற்கு வெகுவான அளவில் குறைவாக இருக்கையில், அரசு அதிகாரத்தில் தமக்கு பங்கில்லை என்று கருத வாய்ப்பிருக்கிறது. அவ்வகையான பிளவினை தவிர்க்கவே இட ஒதுக்கீடு. இவ்வாறான நிலையில், ஒரு மக்கள் குழுவினை மொத்தமாக கணக்கில் எடுத்தல் மட்டுமே அரசியலமைப்பின் நோக்கத்தினை செயல்படுத்த ஏதுவாக இருக்கும்.

எனவே க்ரீமி லேயர் கொள்கை என்பது, சட்ட ரீதியிலானது அல்ல என்பதே எனது தாழ்மையான கருத்து. இட ஒதுக்கீட்டினை மேற்போக்காக அணுகுபவர்களுக்கு மட்டுமே, இது ஏதோ வலுமிக்க ஒரு கருத்து போல தோற்றமளிக்கும். உச்ச நீதிமன்றம் எவ்வாறு பொதுக்கருத்தினை ஒட்டி தனது க்ரீமி லேயர் சட்டத்தினை வகுத்துள்ளது என்பதற்கு சமீபத்திய உதாரணங்களை கூற முடியும்.

பிற்ப்படுத்தப்பட்டவர்களுக்கு, க்ரீமி லேயர் என்ற வகையில் உச்ச நீதிமன்றமானது எவ்வித விமர்சனத்துக்கும் ஆளாகாமல் தப்பித்துக் கொண்டது. ஏனெனில், பிற்ப்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு என்பதே, நான் ஏற்கனவே கூறியபடி தமிழகத்தினை தவிர பிற மாநிலங்களில் ஏதோ குற்ற உணர்வுடனே ஏற்றுக் கொள்ளப்படும் ஒரு கருத்தாக உள்ள நிலையில் க்ரீமி லேயர் கொள்கையினை எதிர்த்து யாரும் வாயை திறக்கக் காணோம். ஆனால், நாகராஜ் வழக்கில் உச்ச நீதிமன்றம் அட்டவணைப் பிரிவினரிடையும் க்ரீமி லேயர் கொள்கையினை வலியுறுத்துகிறது என்று கூறப்பட்டதுமே, க்ரீமி லேயர் கொள்கைக்கு எதிரான கருத்துகள் வைக்கப்பட்டன. எதிர்வினைகள் பலமாக இருந்தது. உடனடியாக அட்டார்னி ஜெனரல் மிலன் பானர்ஜி ‘நாகராஜ் வழக்கின் முடிவு இந்திரா சஹானி வழக்கிற்கு மாறாக உள்ளது, எனவே அது ஏற்றுக்கொள்ளப்படாது’ என்கிறார் (இதனை எடுத்துக்காட்டி திரு.பத்ரி தனது வலைப்பதிவில் பிரச்னை முடிவுக்கு வந்ததாக எழுதுகிறார். பத்ரி அவர்களை இவ்விதமான கருத்தாங்களுக்கு ஒரு அடையாளமாக கொண்டால், ‘அப்பாடா, இதை இனி யாரும் கிளற வேண்டாம்’ என்ற தொனி புரியும்).

இந்துவில் உச்சநீதிமன்ற வழக்குரைஞர் விஸ்வநாதன், நாகராஜ் வழக்கில் அட்டவணைப்பிரிவினருக்கு க்ரீமி லேயர் என்பதாக கூறப்படவில்லை என்று எழுதுகிறார். உடனே ‘ அட்டவணைப் பிரிவினருக்கு ஆபத்தில்லை. யாரும் கலவரப்படத் தேவையில்லை’ என்ற வகையில் இது குறித்த விவாதத்தினை அமர்த்தும் வண்ணம் ஒரு கருத்தாக்கம் உருவாக்கப்பட்டது. இதற்கு முன்னதாக ஆந்திர அரசு அட்டவணைப் பிரிவினருக்குள் ‘உள் இட ஒதுக்கீட்டினை’ அமுல்படுத்தும் ஒரு சட்டம் கொண்டு வந்தது. உச்ச நீதிமன்றம், பிற்ப்படுத்தப்பட்டவர்களுக்குள் BC, MBC என்று பிரிப்பதைப் போல அட்டவணைப்பிரிவினரை பிரிக்க இயலாது என்று கூறிய தீர்ப்பினை எடுத்துக் காட்டி பிற்ப்படுத்தப்பட்டவர்களைப் போல அட்டவணைப்பிரிவினரை கருதுதல் இயலாது என்றும் கூறப்பட்டது. இப்போது இந்த பிரச்னை முழுவதுமாக அமுக்கப்பட்டு விட்டது.

ஆனால், நாகராஜ் வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவாகவே க்ரீமி லேயரை சுட்டிக்காட்டுகிறது. ஏனெனில், அந்த வழக்கில் எடுத்துக் கொள்ளப்பட்ட பிரச்னை தாழ்த்தப்பட்டவர்களுக்கு பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு கொடுக்கப்படவேண்டும் என்ற அரசியலமைப்புச் சட்ட திருத்தத்தினைப் பற்றியது. அந்த திருத்தத்தினை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் தெளிவாகவே கூறுகிறது
‘These impugned amendments are confined only to SCs and STs. They do not obliterate any of the constitutional requirements, namely, ceiling-limit of 50% (quantitative limitation), the concept of creamy layer ...................................We reiterate that the ceiling-limit of 50%, the concept of creamy layer ................... are allconstitutional requirements’

உச்ச நீதிமன்றத்தின் கருத்தினை எவ்வாறு எடுத்துக் கொண்டாலும், நான் கூற வருவது என்னவென்றால், தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடானது நாடு தழுவிய அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றான கருத்தாக இருக்கையில், க்ரீமி லேயர் குறித்தும் வலுவான எதிர் கருத்து இல்லை. எனவே, பத்திரிக்கைகள் நாகராஜ் வழக்கில் க்ரீமி லேயர் பற்றிக் கூறப்பட்டதை பெரிய அளவில் செய்தியாக்க தேன் கூட்டினை கலைத்தது போல ஆவேசமான எதிர்ப்புகள் எழுந்தன. அதனை மட்டுப்படுத்தும் வண்ணமே, ஏற்கனவே கூறிய சப்பைக்கட்டுகள்!

இக்கட்டுரை முழுவதும் நான் எடுத்து வைத்த எனது அனுமானங்கள் சரியாக இருப்பின், அட்டவணைப் பிரிவினருக்கும் க்ரீமி லேயர் கொள்கை பொருந்தும் என்று தெளிவாக ஒரு தீர்ப்பினை தர உச்ச நீதிமன்றம் தயங்கும். தொடர்ந்து நடக்கும் செய்திகள் எனது அனுமானம் சரியே என உணர்த்துகிறது.

இறுதியாக, பிற்ப்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டுமே க்ரீமி லேயர், தாழ்த்தப்பட்டவர்களுக்கல்ல. க்ரீமி லேயர் கொள்கையினை வரையறுத்த மண்டல் கமிஷன் வழக்கு அட்டவணைப் பிரிவினருக்கல்ல என்று பிரச்னையினை தணிக்கும் எவருமே, ஏன் அவ்வாறு பொருந்தாது என்று கூறுவதில்லை. ஏனெனில், க்ரீமி லேயருக்கு ஏன் இட ஒதுக்கீடு கூடாது என்ற பொதுக்கருத்தினை சட்டக் கருத்தாக வைத்த உச்ச நீதிமன்றத்தின் காரணங்கள் அப்படியே அட்டவணைப் பிரிவினருக்கும் பொருந்தும். பிற்ப்படுத்தப்பட்டவர்களுக்கு க்ரீமி லேயர் என்றால், அட்டவணைப் பிரிவினருக்கும் அப்படியே!

ஆனால், அவ்வாறில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறுமானால், ‘பொதுக்கருத்துகளும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை பாதிக்கும் ஒரு காரணி’ என்ற எனது அனுமானம் உண்மையாகும். அப்படி ஒரு நிலையில் அது அப்சல் வழக்கானாலும் சரி, இட ஒதுக்கீடு பிரச்னையானாலும் சரி......நீதிமன்ற தீர்ப்பினைப் பொறுத்து ஆர்ப்பாட்டங்கள் கூடாது என்று கூறுவதில் நியாயம் இல்லை, ஏனெனில் ஆர்ப்பாட்டம் என்பது பொதுக்கருத்தினை உருவாக்கும் முக்கியமான கருவிகளில் ஒன்றுதானே!
முடிந்தது...

(இந்த தொடர் கட்டுரை, நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து ஆர்ப்பாட்டம் கூடாது என்று ‘எண்ணங்கள்’ பத்ரி நாராயணன் தனது பதிவில் எழுதியதால், உந்தப்பட்டு எழுதியது. இட ஒதுக்கீட்டின் நியாயங்களை வலியுறுத்தியோ அல்லது அப்சலுக்கு அளிக்கப்பட்ட தண்டனையினை குறித்ததோ அல்ல. அது குறித்து எழுதுவதாயின்.......மேலும் விளக்கமாக சிலவற்றை எழுத வேண்டியிருக்கும்)