14.1.10

இஸ்லாமிய வங்கியும் வம்பு வழக்கும்...

இஸ்லாமிய வங்கியும் வம்பு வழக்கும்...


சுப்பிரமணிய சுவாமி மறுபடியும் கோல் அடித்திருக்கிறார். இந்த முறை கேரள உயர்நீதிமன்றத்தில்!

ஆனால், இதுவும் சுவாமியின் வழக்கமான ‘ஆஃப் சைட் கோல்’தான். இந்த வழக்கு எதிர்காலத்தில், தங்களுக்கே எதிராக திரும்பும் சாத்தியக்கூறுகளை அறியாமலேயே, அவரை தற்பொழுது சுற்றியுள்ள ‘இந்துத்வா’வாதிகள் இதனை ஒரு வெற்றியாக கொண்டாடுகின்றனர்.

எப்படியோ சுவாமி மீண்டும் பொதுநல வழக்கு ஒன்றின் மூலம், அரசியலில் தன்னுடைய இருப்பிடத்தினை மேலும் உறுதிப்படுத்தியுள்ளார்.

-oOo-

தற்பொழுதுதான் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பத்திரிக்கைச் செய்திகளின் மூலமே வழக்கின் சாரம் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது. கேரள அரசு தொழில் மேம்பாட்டு நிறுவனம் (KSIDC) என்ற நிறுவனம் கேரள மாநில அரசினால் தோற்றுவிக்கப்பட்டுள்ள ஒரு அரசு நிறுவனம். தொழில் முனைவோருக்கு கடன் வழங்குவதன் மூலம், கேரள மாநிலத்தில் தொழில் வளத்தினைப் பெருக்கும் நோக்கத்துடன் இயங்கி வருகிறது.

சமீபத்தில் இந்த நிறுவனம், இஸ்லாமிய ஷரியா விதிகளுக்கு உட்பட்டு இயங்கக்கூடிய கடன் வழங்கும் நிறுவனம் (Financial Institution) சுமார் 20 தனியார் முதலீட்டாளர்களுடன் இணைந்து தொடங்கப் போவதாக அறிவித்தது. KSIDC முதலீட்டில் 11 சதவீதம் அளிக்கும். வங்கியின் பங்குகளில் 51 சதவீதம் முதலீட்டாளர்களுக்கும், 49 சதவீதம் பொதுமக்களுக்கும் அளிக்கப்படும் என்ற முடிவும் எடுக்கப்பட்டது.

கேரள அரசு இதற்காக ஒரு அரசாணையை வெளியிட அதனை எதிர்த்து, சுவாமி கேரள உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார்.

சுவாமியின் வாதம்?

இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி, நமது அரசு ஒரு மதச்சார்பற்ற அரசு (secular state). அவ்வாறான ஒரு அரசு இஸ்லாமிய வங்கி என்ற மதரீதியிலான நிறுவனத்தை தொடங்குவது, அரசின் மதச்சார்பின்மை கொள்கைக்கு எதிரானதாகும். இவ்வாறு ஒரு குறிப்பிட்ட மதக் கோட்பாட்டை பின்பற்றி இயங்கும் ஒரு வங்கியினை நடத்துவதன் மூலம், கேரள அரசு இஸ்லாமிய மதத்திற்கு சார்பாக நடந்து கொள்கிறது. அரசுப் பணமானது ஒரு தனிப்பட்ட மதத்திற்கு ஆதரவாக பயன்படுத்தப்படும் இந்த செயல் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்பதே!

மேற்கண்டவை தவிர, இவ்விதமான வங்கி நமது வங்கி கட்டுப்பாட்டுச் சட்டம் (Banking Regulation Act) மற்றும் மைய வங்கியின் வழிகாட்டுதல்கள் (Reserve Bank Regulations) ஆகியவற்றையும் மீறுகிறது என்ற காரணங்களும் கூறப்பட்டாலும், மதச்சார்பின்மை வாதம் மட்டுமே முன்னணியில் வைக்கப்படுவதால், அவற்றை ஆராய்வது அவசியம் என்று கருதுகிறேன். ஏனெனில் மற்ற விதிமீறல்களை சட்டத்தினை (Act) திருத்துவதன் (amendment) மூலமும், விதிகளை (Rules) தளர்த்துவதன் மூலமும் சரி செய்து விடலாம்.

மேலும், இந்த நிறுவனம் வங்கி சாராத ஒரு அமைப்பு (Non Banking Financial Company NBFC). வங்கி அல்ல!

ஆனால், மதச்சார்பின்மை என்பது நமது அரசியலமைப்பின் அடிப்படைக்கூறு (basic feature). அதற்கு எதிரான எந்த செயலையும் நேர் செய்துவிட முடியாது!

-oOo-

இஸ்லாம் மதக் கோட்பாடான ஷரியா, வட்டி பெறுதலை அனுமதிப்பதில்லை. ஆனால் ஒரு தொழிலினை புரிவதன் மூலம் லாபம் ஈட்டுவதை அனுமதிக்கிறது. மாறாக நவீன பொருளாதாரம் கடனை அடிப்படையாக கொண்டே இயங்குகிறது. நவீன வங்கிகளும் கடன் வழங்கி, அதற்கான வட்டியில் இருந்து லாபம் ஈட்டுகின்றன.

எனவே நடைமுறையிலுள்ள வங்கியின் செயல்பாடுகள் இஸ்லாத்திற்கு எதிரானது என்ற கருத்து நிலவுகிறது.

இஸ்லாம் தடை செய்துள்ள வட்டியினை வைப்பீடுகளுக்கு (deposits) வழங்காமலும், தொழில்களுக்கு அளிக்கப்படும் கடன்களுக்கு வட்டி வசூலிக்காமலும் செயல்படும் வண்ணம், நடைமுறையிலுள்ள வங்கிகளுக்கு மாற்றாக செயல்படும் நிறுவனங்கள்தாம் ‘இஸ்லாமிய வங்கி’ எனப்படும் அமைப்புகள்.

வட்டியில்லாமல் ஒரு வங்கி செயல்படுவது நடைமுறையில் சாத்தியமா? சுவாமி இதனை கொதிக்க வைக்கப்பட்ட ஐஸ்கிரீம் (boiled ice cream) என்று கிண்டலடிக்கிறார்.

ஆனால், வட்டியில்லா வங்கி முறையை அவ்வளவு எளிதாக புறம் தள்ள முடியாதபடி உலக பொருளாதாரத்தில் அவற்றின் வளர்ச்சி உள்ளது என்பதுதான் உண்மை!

-oOo-

நவீன இஸ்லாமிய வங்கி 1963ம் ஆண்டு எகிப்து நாட்டில் ஆரம்பிக்கப்பட்டது. அதாவது கடனுக்கு வட்டி வழங்காமலும், அவற்றை தொழிலில் முதலீடு செய்து அதனால் கிடைக்கும் லாபத்தினை வாடிக்கையாளர்களுடன் பகிர்ந்து கொள்ளும் முறைதான் இஸ்லாமிய வங்கி முறை.

முதன் முறையாக தொடங்கப்பட்ட வங்கி சில ஆண்டுகள்தான் செயல்பட்டது என்றாலும் இன்று அமெரிக்க ஐக்கிய நாடுகள் உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பட்டு வருகின்றன. ஆண்டுக்கு 10-15% வேகத்தில் வளர்ந்தும் வருகின்றன.

சமீப காலத்தில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை (global recession) இஸ்லாமிய வங்கி முறைக்கு சாதகமாக அமைந்து அதன் மொத்த சொத்துகளின் வளர்ச்சி கடந்த ஆண்டு 29%ஐ தொட்டு சுமார் 822 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

பல ஐரோப்பிய நாடுகளில் இஸ்லாமிய வங்கி முறை வேர்விட்டுள்ளது. பிரான்சு கூட சமீபத்தில் இஸ்லாமிய வங்கி முறையினை அமுல்படுத்துவதற்காக பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையில் தனது சட்டத்தினை திருத்தியுள்ளது. பிரெஞ்சு உச்ச நீதிமன்றம் சட்டதிருத்தம் தவறு என்று கூறியிருப்பினும் அது ஒரு நடைமுறை காரணத்திற்காகத்தான் (technical reason) என்பதால், மீண்டும் சட்ட திருத்தம் கொண்டு வரப்படும் வாய்ப்புகள் உள்ளன.

புகழ் பெற்ற சந்தை குறியீட்டு நிறுவனமான டெள ஜோன்ஸ் (Dow Jones) கடந்த பத்து ஆண்டுகளாக இஸ்லாமிய சந்தை குறியீடு (Dow Jones Islamic Market Index DJIMI) என்பதின் மூலம் இந்த சந்தையின் போக்கினை கணித்து வருகிறது.

முக்கியமாக, ‘மேற்கத்திய வங்கிகள் இஸ்லாமிய வங்கி முறையினை தங்களது செயல்பாட்டில் புகுத்துவதன் மூலம், தங்களது வாடிக்கையாளர்களின் நெருக்கமான நம்பிக்கையினை பெற முடியும்’ வாடிகன் வேறு இஸ்லாமிய வங்கி முறைக்கு நற்சான்றிதழ் வழங்கியுள்ளது.

எனவே இஸ்லாமிய வங்கி என்பது, இஸ்லாம் மதக் கோட்பாடுகளுக்கு பாதகமின்றி செயல்படும் ஒரு வர்த்தக கோட்பாடே (commercial concept) தவிர இஸ்லாம் மதம் என்று எடுத்துக் கொள்ள முடியாது. இந்த வங்கினை நடத்துபவர்களோ, வேலை செய்பவர்களோ, வாடிக்கையாளர்களோ அல்லது கடன் பெறுபவர்களோ இஸ்லாமியராக இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை.

உதாரணமாக, ஆயுர்வேதம் என்பது இந்திய வேதங்களில் குறிப்பாக அதர்வண வேதத்தில் சொல்லப்பட்டவற்றை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ஒரு மருத்துவ முறை. இதனை எந்த மதத்தை சேர்ந்தவரும் கற்று மருத்துவராக தொழில் புரிய முடியும். இந்து வேதத்தில் நம்பிக்கையுள்ளவர்கள் மட்டும்தான் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொள்ள இயலும் என்பதில்லை.

அலொபதி மருத்துவத்திற்கு மாற்றாக ஆயுர்வேதம், சித்தா, யுனானி, ஹோமியோபதி மருத்துவ முறைகளில் மக்களிடையே உள்ள நம்பகத்தன்மையினை விட கூடுதலான நம்பகத்தன்மையினை இஸ்லாமிய வங்கி முறை பெற்றுள்ளது என்று உறுதியாக கூற முடியும்.

-oOo-

தீவிர வலதுசாரி கொள்கையுடைய அரசு நடக்கும் பிரெஞ்சு நாட்டிலேயே எதிர்ப்புகளுக்கிடையிலேயும் இஸ்லாமிய வங்கி முறையினால் கிடைக்கும் லாபத்தினையும், முதலீட்டையும் கருத்தில் கொண்டு சட்டத்திருத்தம் ஏற்ப்படுகின்றது என்றால், இந்தியா மட்டும் பின் தங்கி விட முடியுமா?

எனவேதான் வங்கிச் செயல்பாடுகளில் செய்யப்பட வேண்டிய சீர்திருத்தம் பற்றி ஆராய்ந்த ‘ரகுராம் ராஜன் குழு’வும் இஸ்லாமிய வங்கிகள் இந்தியாவில் ஏற்ப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது.

முக்கியமாக, கேரளாவில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் பலர் இஸ்லாமியர்கள். இஸ்லாமிய வங்கி தொடங்குவதன் மூலம், இவர்களது கோடிக்கணக்கான டாலர் மதிப்புள்ள முதலீட்டினை பெற்று பெருமளவில் இங்கு பல தொழில்களிலும், நலத்திட்டங்களிலும் பயன்படுத்த முடியும். உலக பொருளாதார தேக்க நிலையில் அதிகளவில் பாதிக்கப்படாத இந்தியா போன்ற நாடுகளில் முதலீடு செய்யவும் மற்ற நாடுகளில் முக்கியமாக மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள முதலீட்டாளர்கள் ஆர்வமாக உள்ளனர்.

ஏன், லாபகரமாக இயங்கினால் யார் வேண்டுமானாலும் இவ்விதமாக வங்கிகளில் முதலீடு செய்ய முன்வருவார்கள்.

எனவே இஸ்லாமிய வங்கி முறை இந்திய சூழ்நிலையில் சோதித்து அறியப்பட வேண்டிய ஒன்று. ‘கொதிக்கும் பனிக்குழைவு’ என்று எளிதாக தூக்கி எறிந்து விட முடியாது.

-oOo-

கேரள தொழில் முதலீட்டு நிறுவனம், இந்த வங்கிக்கான தலைமை செயல் அதிகாரி (CEO) மற்றும் மேலாளர்கள் (Managers) தேவை என்று தனது வலைப்பதிவில் செய்துள்ள விளம்பரத்தை, சுவாமி தனக்கு சாதகமாக பயன்படுத்தி இடைக்கால உத்தரவினை பெற்றுள்ளார் என்றே நினைக்கிறேன்.

இஸ்லாமிய வங்கி என்பது ஏதோ மத அமைப்பு போன்ற தோற்றத்தை உருவாக்கியுள்ள சுவாமி, மேற்கண்ட விளம்பரத்தில் அதன் தலைமை செயல் அதிகாரி வங்கியின் இயக்குஞர் குழுவிற்கும், ஷரியா ஆலோசனைக்குழுவிற்கும் பதிலளிக்க கடமைப்பட்டவர் (He will report to the Board of Directors and Shariah Advisory Board) என்ற வாசகத்தினை வைத்து, ‘மத அமைப்பு ஒன்றிற்கு கட்டுப்பட்ட முஸ்லீம் தலைமை செயல் அதிகாரியினை கொண்ட வங்கி மதச்சார்புடைய அமைப்பு’ என்று வாதிட்டுள்ளார்.

விளம்பரத்தில் தலைமை செயல் அதிகாரி இஸ்லாமியராக இருக்க வேண்டும் என்று கட்டுப்பாடு இல்லை. ஏற்கனவே கூறியபடி இஸ்லாமிய வங்கி முறை என்பது ஒரு வர்த்தக கோட்பாடே தவிர மதத்தை பின்பற்றுவதல்ல.

ஷரியா ஆலோசனைக் குழு?

வாடிக்கையாளர்களிடம் இருந்து வைப்பீட்டினைப் பெறுவதோடு மட்டும் வங்கியின் பணி முடிவடையாது. பெற்ற பணத்தினை தொழில்களில் முதலீடு செய்ய வேண்டும். பிரச்னை, இஸ்லாம் தடை செய்வது வட்டியினை மட்டுமல்ல. சில தொழில்களையும் கூடத்தான். எனவே, இஸ்லாமிய வங்கி மற்ற வங்கிகளைப் போல அனைத்து தொழில்களிலும் முதலீடு செய்து விட முடியாது.

ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் முதலீடு செய்வது லாபகரமாக இருக்குமா என்ற முடிவினை ஒரு வர்த்தக மேலாளரால் எடுக்க இயலும். ஆனால் அந்த நிறுவனம் நடத்தும் தொழிலை இஸ்லாம் அனுமதிக்கிறதா என்ற கேள்வி எழுந்தால், அந்த முடிவினை ஒரு ஷரியா சட்டத்தினை அறிந்த அறிஞரால் எடுக்க முடியும்.

எனவே, இஸ்லாமிய வங்கிகள் ஷரியா ஆலோசனைக் குழு என்ற அமைப்பு ஒன்றினை ஏற்படுத்திக் கொண்டு அதன ஆலோசனையின் படி தொழில் முதலீடுகளில் ஈடுபடுகின்றன.

ஷரியா கோட்பாடுகளை கற்றுத் தெரிந்த யாரும் இவ்வகையான ஆலோசனைக் குழுக்களை அமைத்து செயல்பட முடியும். ஐ எஸ் ஓ (ISO) தரம் நிர்ணயம் செய்யும் தனிப்பட்ட ஒரு அமைப்பு போல இவையும் செயல்படுகின்றன. இஸ்லாமிய மெளல்வி அல்லது இஸ்லாமியர்கள்தான் அந்த அமைப்பில் இருக்க வேண்டும் என்ற விதி எதுவும் இருப்பதாக தெரியவில்லை.

ஷரியா கூறுவதை வைத்து, இஸ்லாமியர்களுக்கிடையேயான வழக்குகளில் தீர்ப்பு கூறும் இந்து நீதிபதிகளையும், இந்து ஆகமம் கூறுவதை ஆராய்ந்து இந்து கோவில் நிர்வாகப் பிரச்னையில் தீர்ப்பு கூறும் இஸ்லாமிய நீதிபதிகளையும் நாம் இங்கு பார்க்கவில்லையா? அது போலத்தான் இதுவும்.

முக்கியமாக, இஸ்லாம் அனுமதிக்கும் அல்லது தடை செய்யும் தொழில்களைக் குறித்து இஸ்லாமிய அறிஞர்களுக்கிடையே கூட பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவுவது நாம் அறிந்ததே!

இஸ்லாமிய வங்கியோ வேறு வங்கியோ, ஷரியா கோட்பாடுகளுக்கு பாதகமில்லாமல் எந்த ஒரு வங்கியும் இயங்க முடியாது என்ற கருத்தினையும் சிலர் முன் வைக்கிறார்கள். வங்க தேசத்தின் முகமது யூனிஸ் கூட தனது ‘கிராமீன் வங்கிகள்’ ஜாமீன் சொத்து இல்லாதது (Collateral Security) மற்றும் குறைந்த வட்டியில் இயங்குவது போன்றவற்றால் இஸ்லாம் மதக் கோட்பாடுகளுக்கு உட்பட்டது என்றுதான் கூறுகிறார்.

எனவே வைப்பீடு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அவர்களது வைப்பீடானது ஷரியா கோட்பாடுகளுக்கு உட்பட்டே முதலீடு செய்யப்படுகின்றன என்று ஓரளவிற்கு ஒரு உத்தரவாதத்தினை தருவதற்காக இப்படிப்பட்ட குழுக்களின் ஆலோசனைகளின்படி இவ்விதமான வங்கிகள் செயல்பட முன்வருகின்றன.

எனவே ஷரியா ஆலோசனைக் குழு என்பது ஒரு மத அமைப்பாகத்தான் இருக்க வேண்டும் என்று நான் கருதவில்லை.

-oOo-

தனது வாதத்திற்கு வலு சேர்க்க சுவாமி நமது அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 27ஐ சுட்டிக் காட்டுகிறார். அந்தப் பிரிவு

27. Freedom as to payment of taxes for promotion of any particular religion.- No person shall be compelled to pay any taxes, the proceeds of which are specifically appropriated in payment of expenses for the promotion or maintenance of any particular religion or religious denomination.

இந்தப் பிரிவினை ஒரு வழக்கில் ஆராய்ந்த 7 நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்சு கூறிய ஒரு தீர்ப்பில் ‘எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தின் நிறுவனங்களை முன்னிறுத்துவதற்காக பொதுப் பணத்தை உபயோகிக்க முடியாது’ என்று கூறியதை மேற்கோள் காட்டுகிறார்.

உண்மைதான். ஆனால் இந்து அறநிலையத்துறை ஆணையர், சென்னை எதிர் ஸ்ரீ லஷ்மீந்திர ஸ்வாமியார் மடம் என்ற வழக்கில் 7 நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற தீர்ப்பு (AIR 1954 SC 282) சுப்பிரமணிய சுவாமியின் வழக்கிற்கு பாதகமாக அமைந்துள்ளது என்றே நினைக்கிறேன்.

1951ம் ஆண்டு தமிழக அரசு இந்து அறநிலையத்துறை சட்டத்தினை இயற்றியது (Madras Hindu Religious & Charitable Endowments Act’ 1951). அந்த சட்டத்தின் பல பிரிவுகள் அரசியலமைப்புச் சட்டம் நமக்கு அளிக்கும் மத உரிமைகளுக்கு பாதகமாக இருப்பதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் அடங்கிய மன்றத்தால் விசாரிக்கப்பட்டது.

இந்த சட்டத்தின்படி இந்து ஆலயங்களின் நிர்வாகத்தை கண்காணிக்கும் அதிகாரம் அரசின் கைகளில் வந்தது. அதற்காக அரசு இந்து அறநிலையத்துறை என்ற தனித் துறையினை உருவாக்கி அதனை நடத்துவதற்கு ஒரு ஆணையாளரின் (Commissioner) தலைமையில் பல்வேறு அலுவலர்களை நியமிக்க வேண்டியிருந்தது. அவர்களுக்கு சம்பளம் போன்ற செலவினங்களை ஈடுகட்ட அந்த சட்டத்தின் பிரிவு 76(1)ன் கீழ் இந்து மத நிறுவனங்கள் அவற்றின் வருமானத்தில் 5% அளிக்க வேண்டும்.

இந்த சட்டப்பிரிவினை எதிர்த்த மடம், மேற்கண்ட அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 27ல் ‘ஏதேனும் மதத்தை முன்னேற்றுவதற்காக அரசு வரி எதுவும் வசூலிக்க முடியாது’ என்று கூறப்பட்டுள்ளதால் ‘இந்து மத நிறுவனங்களை பாதுகாக்கவும் முன்னேற்றுவதற்குமாக’ இவ்வாறு வரி வசூலிக்க அரசிற்கு அதிகாரம் இல்லை என்று வாதிட்டது.

அரசு சார்பில் பிரிவு 76ன் கீழ் செலுத்த வேண்டியது கட்டணம் (fee) வரி (tax) இல்லை என்று வாதிடப்பட்டது. உச்ச நீதிமன்றம் அது வரிதான் என்று கூறி அந்தப் பிரிவு அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்று தீர்ப்பு கூறியது. ஆனால் காரணம், அத்தகைய வரி வசூலிப்பதற்கு அதிகாரம் மத்திய அரசிடம் உள்ளது, மாநில அரசிடம் இல்லை என்பதுதான்.

அது மட்டுமல்ல...மத நிறுவனங்களை கண்காணிக்கும் பணி மத ரீதியிலான நடவடிக்கை இல்லை என்று கூறி அதற்காக செலவிடப்படும் பணம் அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 27ஐ பாதிக்காது என்றும் கூறியது.

“The purpose is to see that religious trusts and institutions, wherever they exist, are properly administered. It is a secular administration of the religious institutions that the legislature seeks to control and the object, as enunciated in the Act, is to ensure that the endowments attached to the religious institutions are properly administered and their income is duly appropriated for the purposes for which they were founded or exist. There is no question of favouring any particular religion or religious denomination in such cases. In our opinion, Art. 27 of the Constitution is not attracted to the facts of the present case”

இதன்படி இந்து அறநிலையத்துறை என்ற துறை மூலம் அரசு இந்து கோவில் நிர்வாகங்களை கட்டுப்படுத்துவதும், கண்காணிப்பதும் மத ரீதியிலான ஒரு செயல் அல்ல. ஆயினும் இந்து அறநிலையத் துறை கண்காணிப்பாளர் முதல் கீழ்மட்ட அலுவலர்கள் வரை இந்துக்களாகத்தான் இருக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்து கோவில்களை நிர்வாகம் செய்யும் ஒரு பணி இந்து மதத்தினை முன்னேற்றுவதான அல்லது பாதுகாப்பதான (promote or maintain) பணி இல்லை என்றால், இஸ்லாமிய மதக் கோட்பாடு வலியுறுத்தும் ஒரு வர்த்தகக் கொள்கையினை பின்பற்றி நடத்தப்படும் ஒரு வங்கிக்காக அரசு செலுத்தும் முதலீடு மேற்கண்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பினை மீறியது ஆகாது என்பதே என்னுடைய எண்ணம்.

ஏனெனில் கேரள அரசின் செயல் ஒரு புத்திசாலித்தனமான வர்த்தக செயல்பாடு (prudent business idea). இஸ்லாமிய மதத்தினை முன்னேற்றும் செயலல்ல. இப்படி ஒரு சோதனை முயற்சியில் இறங்குவது புத்திசாலித்தனமான வர்த்தகமல்ல என்றாலும், முதலில் தனியாருக்கு அந்த வாய்ப்பை ஏற்ப்படுத்திக் கொடுத்து பொதுமக்கள் ஏமாற்றப்படுவதை தடுக்கும் ஒரு புத்திசாலித்தனமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

எப்படியாயினும் இந்த வங்கி சுவாமி கூறுவது போல முஸ்லீம் வாக்காளர்களைக் குஷிப்படுத்துவதற்காக (placate) கேரள கம்யூனிஸ்டு அரசு எடுக்கும் முயற்சியாகக் கூட இருக்கலாம். ஆனால், அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது அல்ல.

மற்றபடி சுவாமி கூறுவது போல என்றால், ஆயுர்வேத மருத்துவமனைகளை அரசு செலவில் நிறுவுவதும், அங்கு பணிபுரியும் மருத்துவர்களுக்கு சம்பளமும், ஆராய்ச்சிக்கு உதவி செய்வதும் தவறு. ஜோதிட படிப்பு (Astrology) படிக்க அரசு நிறுவனமான யுஜிசி (Universities Grants Commission) நிதி அளிப்பதும் தவறுதான்.

எந்தவொரு அரசு திட்டப்பணியும் இந்து முறைப்படி அமைந்த பூசையுடன் ஆரம்பிக்கப்படுவதும் தவறுதான்.

வெள்ளிக்கிழமையினை தவிர்த்து ஞாயிற்றுக் கிழமையை பொது விடுமுறையாக அறிவிப்பதும் தவறுதான்.

ஏன், உயர்நீதிமன்ற வளாகத்தை பயன்படுத்தி அதன் அலுவலர்கள் வருடா வருடம் சரஸ்வதி பூசை நடத்துவதும் கூட அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதம்தான்.

சுப்பிரமணிய சுவாமி தனது சுய முன்னேற்றத்திற்காக தேவையின்றி ஒரு வம்பு வழக்கினை ஆரம்பித்து உள்ளார். இந்தியாவிற்கோ அல்லது இந்துக்களுக்கோ இந்த வழக்கினால் ஏதும் நன்மை விளையப் போவதில்லை.

மாறாக வளர்ச்சிக்கான சாதாரண ஒரு வர்த்தக முயற்சி இந்த வழக்கின் மூலம் இஸ்லாமியர்களிடையே தேவையற்ற ஒரு அவநம்பிக்கையினை தோற்றுவித்து தேசிய நீரோட்டத்திலிருந்து அவர்களை ஒரு சிறு அளவேனும் விலக்கி வைக்க ஏதுவாக இருக்கும் என்பதே என் அச்சம்!

மதுரை
14/01/10