6.4.09

கேவலமான நடத்தையுள்ள ஒரு பெண்!
சரசுவதி பாய், கணவனால் கைவிடப்பட்ட பின்னர் அமோல் சிங் என்பவருடன் மத்திய பிரதேசத்திலுள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்தார். ஆனாலும் அமோல் சிங்கின் எதிரியான ராஜு சேத் என்பவரிடம் கூட்டுக் குத்தகைக்கு நிலம் விவசாயம் செய்து வந்ததால், அமோல் சிங் அவரிடம் சண்டையிட்டு வந்தார்.

சம்பவம் நடந்த 17.03.92 அன்று இரவு 8.00 மணிக்கு சரசுவதியின் அலறல் சத்தம் கேட்டு, அருகில் வசித்தவர்கள் பலர் அவரது வீட்டை நோக்கி ஓடினர். அவர்களில் சிலர், சரசுவதியின் வீட்டிலிருந்து கோபால் ஓடி வருவதைப் பார்த்தனர்.

வீட்டினுள் சென்று பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி!

அங்கு சரசுவதிபாய், தீக்காயங்களோடு விழுந்து கிடந்தார். ‘கோபாலும், அமோல் சிங்கும் தன் மீது கெரோசின் ஊற்றி தீ வைத்ததாக’ விசாரித்தவர்களிடம் சரசுவதி கூறினார்.

சம்பவ இடத்துக்கு விரைந்த உதவி ஆய்வாளர், சரசுவதியின் மரண வாக்குமூலத்தை மற்ற சாட்சிகளின் முன்னிலையில் பதிவு செய்தார். நிலம் விவசாயத்துக்கு எடுத்த பிரச்னையில் அமோல்சிங்கும், கோபாலும் தன் மீது தீ வைத்து கொளுத்தியதாக சரசுவதி கூறினார்.

பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சரசுவதியின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதை உணர்ந்த, மருத்துவர் சரசுவதியின் மரண வாக்குமூலத்தை (Dying Declaration) பதிவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு காவலருக்கு கூறவே, தாசில்தார் (Executive Magistrate) அதிகாலை 4.30 மணிக்கு பதிவு செய்தார். பின்னர் காலை 9.10 மணிக்கு சரசுவதி இறந்து போக, வழக்கு கொலை வழக்காக மாறியது.

இறக்கும் பொழுது சரசுவதி மூன்று மாத கர்ப்பிணி!


-oOo-


எதிரிகள் (Accuseds) இருவரும் கைது செய்யப்பட்டனர். அமோல் சிங்கின் உடலில் தீக்காயங்கள், மருத்துவரால் கண்டறியப்பட்டது. அமர்வு நீதிமன்றம் (Sessions Court) அனைத்து சாட்சிகளையும் விசாரித்த பின்னர் எதிரிகள் குற்றம் புரிந்ததாக கூறி தண்டனையளித்தது. உயர்நீதிமன்றமும் (High Court) அந்த தீர்ப்பினை உறுதி செய்தது.

வழக்கு உச்ச நீதிமன்றம் சென்றது.

உச்ச நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்ட வாதம், ‘சரசுவதி அளித்த இரு மரண வாக்குமூலங்களும் முரண்படுகின்றன’ என்பதுதான். ஏற்கனவே இந்த வாதம் உயர்நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டு இரண்டுக்குமிடையில் உள்ள முரண்பாடுகள் பெரிய அளவிலில்லை (insignificant) என்பதால், கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பில் தவறில்லை என்று கூறப்பட்டிருந்தது.

உச்ச நீதிமன்றம் ‘இரு மரண வாக்குமூலங்கள் வேறுபட்டால், வழக்கின் மற்ற சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு அவற்றை நீதிமன்றம் ஆராய வேண்டும்’ என்ற சட்ட கருத்தினை வலியுறுத்தி சரசுவதியின் வழக்கில் இரு மரண வாக்குமூலங்களிலும் கொலைக்கான காரணங்கள் மாறுபடுவதாகவும், எவ்வாறு சரசுவதியின் மீது கெரோசின் ஊற்றப்பட்டு தீ வைக்கப்பட்ட முறையிலும், வித்தியாசங்கள் இருப்பதாகவும் அவ்வகையான வித்தியாசங்கள், சரசுவதியின் வழக்கில் முக்கிய காரணிகள் என்று கூறி எதிரிகளை விடுதலை செய்துள்ளது.

பிற சந்தர்ப்ப சாட்சிகளைப் (circumstantial evidence) பற்றி அதிகம் ஆராயாமல், இந்த ஒரே காரணத்திற்காக இரு நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்த முறையில் சில விமர்சனங்கள் இருப்பினும், முழுமையான வழக்கின் விபரங்கள் இல்லாத நிலையில் அவ்வாறான விமர்சனம் பொறுப்பான ஒன்றாக இருக்காது.


-oOo-

ஆனால் பிரச்னை என்னவென்றால், தீர்ப்பின் முதலாவது பத்தியை படித்ததுமே, முடிவு எப்படியிருக்கும் என்று என்னையறியாமலேயே யூகிக்க முடிந்தது. சில நாட்களுக்கு முன்னர்தான் மற்றொரு வலைத்தளத்தில், நீதிபதிகள் தங்களது தீர்ப்பினை ஆரம்பிப்பதை வைத்தே, எவ்வாறு அதன் போக்கை கணிக்க முடிகிறது என்பதைப் பற்றி அலசியிருந்தனர்.

தீர்ப்பை நீதிபதி பசாயத் இவ்வாறு ஆரம்பிக்கிறார், ‘நீதி விசாரணையில் விவரிக்கப்பட்ட அரசுத் தரப்பு வழக்கானது : இறந்து போன சரசுவதி பாய் தகாத நடத்தையுள்ள ஒரு பெண். தனது கணவனால் கைவிடப்பட்ட பின்னர், அமோல் சிங் என்பவருடன் தகாத உறவு கொண்டு, அவருக்கு ஆசை நாயகியானார்’ (Prosecution version as unfolded during trial is as follows: Saraswati Bai-deceased was a woman of questionable character)


-oOo-


எனக்குப் புரியாதது, ‘இறந்தவர் அரசின் பார்வையில் நடத்தை கெட்டவராகவே இருக்கட்டும், வழக்கின் சாரத்திற்கும் அதற்கும் என்ன சம்பந்தம் இருக்கக் கூடும்’ என்பதுதான். குற்றம் நடைபெற்றது, சுயமாக ஒரு பெண்மணி விவசாயம் செய்ய விழைந்ததின் காரணமாகவே தவிர, அவரது நடத்தை கெட்டுப் போனதால் அல்ல.

அரசுத் தரப்பும் அதை வலியுறுத்தியிருக்க வேண்டாம். நீதிபதியும் அதனைக் குறிப்பிட்டிருக்க வேண்டாம். துரதிஷ்டம் பிடித்த சரசுவதிக்கு செய்யப்பட்ட ‘இறுதி’ மரியாதையாகவாவது அது இருந்திருக்கும்.


-oOo-


சரி, வருண்காந்தி வழக்கு ஒருவேளை உச்ச நீதிமன்றம் சென்றால், தீர்ப்பு எப்படி ஆரம்பிக்கும். ‘The detenue is the great grand son of a man of questionable character’ என்றா?


மதுரை
060309