23.12.12

நீதியை குலைக்கும் நியதிகள்…


 

தபேதார், அலுவலக உதவியாளர்கள், துப்புரவு தொழிலாளர்கள் போன்ற கடைநிலைப் பணியாளர்களும் அரசு ஊழியர்கள் என்பது உண்மைதான். தகுதியும் விருப்பமும் உள்ள இந்தியக் குடிமகன்கள் அனைவருக்கும் சம வாய்ப்பளித்து அவர்களில் சிறந்தவர்களைத்தான் பணியமர்த்த வேண்டும் என்பதும் சட்டப்படியான கோரிக்கைதான். முக்கியமாக, மற்ற ஊழியர்களைப் போலவே, இவர்களது பணியிடங்களும் இடஒதுக்கீட்டின் அடிப்படையிலேயே நிரப்பப்பட வேண்டும். சவுக்கு வலைத்தளத்தின் குற்றச்சாட்டு சட்டத்தின்படியும் நியாயத்தின் அடிப்படையிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதே!

ஆயினும் வேறொரு கோணத்தில், இப்பிரச்சினையை ஆராய்ந்தால் போட்டியின்றி இவ்வாறு நீதிபதிகளின் பரிந்துரையின் அடிப்படையில் இக்கடைநிலை ஊழியர்களை நியமிப்பதில் பெருத்த அநீதி விளைந்துவிடவில்லை என்பதாகவே தோன்றுகிறது.

-oOo-

உயர்நீதிமன்ற பணியாளர்கள் அனைவருமே, வேறு அரசுத்துறை தலையீடு ஏதும் இல்லாமல், உயர்நீதிமன்றத்தால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்படுகிறார்கள். தனது ஊழியர்களை தானே தேர்ந்தெடுக்கும் உரிமை, உயர்நீதிமன்றம் சுதந்திரமான அமைப்பாக செயல்பட தேவையான ஒன்றாக கருதப்படுகிறது.

ஆயினும், உயர்நீதிமன்ற பணியாளர்கள் ‘சென்னை உயர்நீதிமன்ற சரிவீஸ் விதி’களின் அடிப்படையிலேயே நியமிக்கப்பட முடியும். இவ்விதிகளின்படி பணியாளர் நியமனங்களில் இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்பட வேண்டும். மற்றபடி இன்ன முறையில் பணியாளர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் என்று இல்லை. எனவே எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவது சட்டரீதியிலான அவசியம்.

ஆனால் கடைநிலை ஊழியர்களின் தேர்வு?

நான் அறிந்தவரை தமிழ்நாடு அரசு அடிப்படை ஊழியர்களுக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி வரையறுக்கப்பட்டு இருந்தாலும், உயர்நீதிமன்ற விதிகளில் கடைநிலை ஊழியர்களுக்கான கல்வித் தகுதி வகுக்கப்படவில்லை.

எவ்வாறு இருப்பினும், கடைநிலை ஊழியத்திற்கு தகுதியானவரா என்று எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு நடத்தி எவ்வாறு நிர்ணயிப்பது? அவ்வாறு நிர்ணயித்தாலும், அங்கும் இதே நீதிபதிகள்தான் நேர்முகத் தேர்வின் முடிவை தீர்மானிக்கப் போகிறார்கள்.

-oOo-

ஒவ்வொரு முறையும் சத்துணவு கூடங்களில் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படும் பொழுது, பல நியமனங்களை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் பேராணை மனுக்கள் தாக்கல் செய்யப்படும். முக்கியமாக சத்துணவு கூட பணியாளர்கள் அரசு ஊழியர்கள் அல்ல. திட்ட பணியாளர்கள்தாம். மேலும் மாவட்ட ஆட்சித்தலைவரால் இட ஒதுக்கீட்டினை பின்பற்றி நேர்முகத் தேர்வு நடத்திதான் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஆயினும் ஒன்றிரண்டு நியமனங்கள் நீதிமன்றத்தால் நீக்கம் செய்யப்படுவதுண்டு. சமீபத்தில் ஒரு நீதிபதி, சத்துணவு பணியாளர்கள் தமிழகம் முழுமைக்குமான பொதுவான ஒரு தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று கூற, பிரச்னை டிவிஷன் பெஞ்சில் நிலுவையில் உள்ளது.

சத்துணவுக்கூட சமையலரையும், ஆயாவையும் எந்த பொதுத்தேர்வு நடத்தி தேர்ந்தெடுக்கப் போகிறார்கள் என்று புரியவில்லை

சத்துணவு கூட பணியாளர் நியமனம் பற்றிய வழக்குகள் நீதிமன்றத்தில் வருகையில் ‘அந்த கலெக்டர் நினைக்க மாட்டாரா? தான் ஒரு மாவட்டத்திற்கே கலெக்டர். எனக்குப் பிடித்த ஒரு சத்துணவு பணியாளரைக் கூடவா நான் நியமிக்கக் கூடாது’ என்று எனக்குத் தோன்றும்.

-oOo-

ஒருவர் கடைநிலை ஊழியம் சிறப்பாக செய்வாரா என்று நேர்முகத் தேர்வு நடத்தி ஒரு நீதிபதி தேர்ந்தெடுக்காமல், தானறிந்த ஒருவரை, தனது நம்பிக்கைக்கு பாத்திரமான ஒருவரை நேரிடையாக பரிந்துரைத்தால் குடிமக்களின் சம உரிமையானது (Right to Equality) நடைமுறையில் பாதிக்கப்படுவதில்லை என்றே நான் எண்ணுகிறேன்.

சம உரிமை என்பதே இங்கு ஒரு கானல் நீர்தான். அனைத்துப் பாடங்களுக்கும் தனியே பயிற்சி எடுக்கும் வசதிமிக்க ஒரு மாணவனுக்கும், எந்தவித பின் உதவிகளும் அற்ற அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவனுக்கும் இடையே என்ன சமநிலை இங்கு இருக்கிறது. ஆயினும் அவர்கள் இருவரும் சமமாகவே பாவிக்கப்படுகின்றனர். குறைகளற்ற வேறு வழிகள் தெரியாத சூழ்நிலையில் நமது தேர்வுகளில் சமநிலை இருப்பதாக நம்மை நாமே பலமுறை சமதானப்படுத்திக் கொள்கிறோம். அவ்வளவுதான்!

கடைநிலை ஊழியம் புரிய முன்வரும் அனைவருமே, ஏழை அல்லது கீழ் மத்தியதர வர்க்கத்திலிருந்து வருகிறார்கள். அந்த வேலையை புரிய தகுதியுள்ள அவர்களிலிருவரில் ஒருவருக்கு அந்த வேலை கிடைப்பதில், பெரிய அநீதி ஏதும் விளைவதில்லை. உயர்நீதிமன்ற நீதிபதி நிலையில் யாரும், இந்த வாய்ப்பினை துஷ்பிரயோகம் செய்வதில்லை. மாறாக, தம்மைச் சுற்றியுள்ள துயரப்படும் குடும்பங்களில் ஏதோ ஒரு குடும்பத்தின் கஷ்டத்தைப் போக்கவே பெரும்பாலும் இவ்வாறு பரிந்துரைக்கிறார்கள்.

உயர்நீதிமன்ற நீதிபதியொருவரை, அவரது ஊரினைச் சேர்ந்தவர்கள், உறவினர்கள் அண்டை அயலார்கள் என்று பலர் இவ்வாறு கடைநிலைப் பணியினைப் பெற அணுகும் வாய்ப்பு உண்டு. இன்றைய சூழலில் நீதிபதி பதவி வகிப்பதாலேயே, சமூகத்திலிருந்து முற்றிலும் அந்நியப்பட்டு நிற்க வேண்டுமென்பது ஒரிருவரைத் தவிர மற்றவர்களுக்கு சாத்தியமில்லை. இரண்டு நிமிட நேர்முகத் தேர்வில் ஒருவரின் தகுதி, தேவையை அறிவதை விட இரண்டு வருட பரிச்சயத்தில் ஒருவரை தேர்ந்தெடுப்பதை ’அநீதி’ என்று என்னால் நிராகரிக்க முடியவில்லை.

அப்படியாயின் நீதிபதியைத் தெரிந்திராத மற்றவருக்கு அநீதியில்லையா என்றால், இருவரில் யாராவது ஒருவர் வேலையின்றி நிற்க வேண்டியதைத்தான் சுட்ட வேண்டியிருக்கிறது. ஏன், தனியார் நிறுவனங்கள் பலவற்றிலும், கடைநிலை ஊழியர்கள் அங்குள்ள மேலதிகாரிகளின் பரிந்துரைப்படிதான் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். நிர்வாகம் அதனால் ஏதும் பாதிப்படைவதில்லை.

உயர்நீதிமன்றத்தில் கடைநிலை ஊழியம் செய்வதை யாரும் லட்சியமாக கொள்ளாத வரையில், நீதிபதியை அறிந்திராத ஒருவர் தான் அறிந்திருக்கும் வேறு ஒரு நிறுவனத்தை அணுகுவதுதான் இங்கு நிதர்சனம்!

-oOo-

உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய ஒருவரின் மரணத்திற்கு சென்றிருந்தேன். சிறிய கிராமம். அவர் பணியாற்றிய சொற்ப வருடங்களில் ஒரிருவரை பணியிலமர்த்தியிருக்கலாம். ஆனால், ஊர்க்காரர்கள் அனைவரும் ஏதோ அவர் ஊருக்கே வேலை வாங்கித் தந்ததை மாதிரி பேசினார்கள். இதனை நாம் சாதாரணமாக, உயர்பதவி வகித்த வேறு எவருடைய மரணத்தின் பொழுதும் கேட்கலாம்.

கண்டிப்புக்கு பெயர் பெற்ற வேறு ஒரு நீதிபதியைப் பற்றி அவரது ஜூனியராக இருந்த மூத்த வழக்குரைஞர் ஒருவர், இன்னார் அவ்வளவு நாள் அவர் வீட்டில் வேலை செய்தார் ஆனா, ஜட்ஜ் ஆன பிறகு பிள்ளைக்கு வேலை கேட்டா ‘போடா போடா’னுட்டாரு என்றார்.

நியாயத்தின் கோட்டினை, உலகம் சற்று கோணலாக வரையும் பொழுது நாமும் கோணி நடந்து கொள்ள வேண்டுமா அல்லது கோட்டினை விட்டு விலகிச் செல்ல வேண்டுமா?

இவ்வளவு எழுதிய பின்னரும் என்னிடம் பதில் இல்லை!

மதுரை
23/12/12