31.1.13

கட்டபொம்மனும், முல்லா ஓமரும்


திருநெல்வேலியில் நான் தொழில் பழகிய சீனியர் மிகவும் சுவராசியமாக பழைய விடயங்களைப் பற்றிப் பேசுவார். அவரது சீனியரை பற்றி ஒரு நாள் பேசிக் கொண்டிருந்தார்…

அவரது சீனியர் திரைப்படங்களுக்கு செல்லும் வழக்கமில்லை என்பதால், அவரை வற்புறுத்தி ஒரு படத்திற்கு அழைத்துச் சென்றாராம்.

’வீரபாண்டிய கட்டபொம்மன்’

அடுத்த நாள், ‘படம் எப்படி?’ என்றதற்கு

‘…ம்ம்ம் நன்றாயிருந்தது. அந்த சிவாஜி கணேசன். நல்லா பேசுறான். ஆனா, அவனுக்கு ஒரு பிரிட்டிஷ் ஆபீசரிடம் எப்படிப் பேசணும்னு தெரியலை”

-oOo-

சிரித்துக் கொண்டு பேசாமலிருந்து விட்டாலும், இச்சம்பவம் உண்மையாயிருக்காது என்றுதான் இதுவரை நினைத்திருந்தேன். ஆனால் விஸ்வரூப பிரச்னையின் ஊடே ‘முல்லா ஓமர் எங்கிருக்கிறார் என்பதை அறிய கமலை கூப்பிட்டு விசாரிக்க வேண்டும்’ என்ற கோரிக்கையுடன் ஒரு வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்யப்பட்டு எதிர் தரப்பினருக்கு அறிவிப்பும் அனுப்பப்பட்டதாக ஒரு செய்தியை படித்ததும் இதுவே நம் கண் முன் நடக்கையில், சீனியர் சொன்ன சம்பவம் உண்மையாக இருக்க முடியாதா என்றிருக்கிறது.

எவ்விதமான தயக்கமுமின்றி, தள்ளுபடி செய்யப்பட்டிருக்க வேண்டிய ஒரு வழக்கில், அறிவிப்பும் அனுப்பப்பட்டிருக்கும் செயல் நீதித்துறையினை மக்கள் பார்வையில் கேலிக்குறியதாக்கி விடும் அபாயம் உள்ளது.

-oOo-


இன்று நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில், முதல்வர் எவ்வித தயக்கமுமின்றி, ‘மாநில அரசிற்கு தமிழ்நாடு சினிமா ரெகுலேஷன் ஆக்ட் பிரிவு 7ன் கீழ் ஒரு திரைப்படத்தினை தடை செய்யும் (ban) அதிகாரம் உண்டு’ எனவும் ‘ஆனாலும் தான் அந்தப் பிரிவில் தடை செய்யாமல் குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144ன் கீழ் தற்காலிகமாக தடை செய்துள்ளாதாக’ குறிப்பிட்டார். அதற்காக காங்கிரஸின் மனீஷ் திவாரி ‘ஹோம் வொர்க்’ செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

முதல்வர் கூறிய சட்டப்பிரிவிலும் ஒரு திரைப்படத்தை தடை செய்ய இயலாது. பிரிவு சிஆர்பிசி பிரிவு 144 போலவே சினிமா ரெகுலேஷன் சட்டப்பிரிவு 7ன் கீழும் பொது அமைதிக்கு பங்கம் விளையலாம் என்ற காரணத்தால் ஒரு திரைப்படத்தை காண்பிப்பதை தற்காலிகமாக தடுக்கலாம். உண்மையில் பிரிவு 144ன் கீழுள்ள அதிகாரங்கள் அதிகமானவை. எனவே பிரிவு 7ஐ பயன்படுத்தாதை ஏதோ கமலஹாசனுக்கு அளிக்கப்பட்ட கருணை போல முதல்வர் குறிப்பிட்டது சரியான கருத்தல்ல.


மதுரை
31/01/13

27.1.13

’விஸ்வரூப’ தரிசனம் நீதிமன்றத்திற்கு தேவையா?


’விஸ்வரூபம்’ திரைப்படத்திற்கான தடையினை நீக்க, ராஜ்கமல் நிறுவனம் உயர்நீதிமன்றத்தினை அவசரமாக அணுகிய சூழ்நிலையில், ’திரைப்படத்தை பார்த்த பின்னர்தான் வழக்கில் முடிவெடுக்க முடியும்’ என்ற நீதிபதியின் உத்தரவு தேவையானதுதானா, என்ற சந்தேகம் எனக்கு உள்ளது. அதற்கு இரு காரணங்கள் உள்ளன.

முதலாவது, அரசு முடிவு ஒன்றினை, சட்ட ரீதியில் அமைந்ததா (either legal or within the powers/jurisdiction) என்பதை ஆராய சட்டப்பிரிவுகளையும் முன் தீர்ப்புகளையும் (Precedents) ஆராய்வதுதான் நீதிமன்றத்தின் முக்கியப் பணி. அவ்வாறு ஆராயும் பொழுது பொருண்மை சார்ந்த விடயங்களை (Issues of fact) கருத்தில் எடுத்துக் கொள்ளாமல் ஒரேடியாக நிராகரித்து விடமுடியாதுதான். ஆனால், சம்பந்தப்பட்ட முடிவு எடுக்கப்படுகையில் அரசின் முன்னிருந்த தகவல்களை/காரியங்களை (Materials) மட்டுமே நீதிமன்றம் கருத்தில் கொண்டால் போதுமானது. அதாவது, அவ்விதமான முடிவினை எடுப்பதற்கு அரசின் முன்னிருந்த தகவல்கள்/காரியங்கள் சரியானவையா அல்லது போதுமானவையா என்று ஆராய்வது மட்டுமே நீதிமன்றத்தின் அடுத்த பணி.

விஸ்வரூபம் பிரச்னையில், திரைப்படத்தினை அரசு அதிகாரி எவரும் பார்க்கவில்லை. எனவே அரசு உத்தரவானது திரைப்படத்தைப் பார்த்து எடுக்கப்படவில்லை. எனவே அரசின் முன் இல்லாத ஒரு ஆவணத்தை நீதிமன்றம் பரிசீலிக்க ராஜ்கமல் நிறுவனம் தாக்கல் செய்த இந்த வழக்கில் பார்க்க தேவையில்லை என்றே கருதுகிறேன்.

இரண்டாவது காரணம், நீதிமன்றத்தின் முன் உள்ள வழக்கு விஸ்வரூபம் படத்திற்கு அளிக்கப்பட்ட தணிக்கை சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் என்றோ அல்லது எவரையேனும் அவமானப்படுத்துவதால் (Defame) அல்லது பிற காரணங்களுக்காக தடை செய்ய வேண்டும் என்றோ அல்ல. அப்படியான வழக்குகளில், நீதிமன்றம் திரைப்படத்தினை பார்க்கும் அவசியம் எழுகிறது.

ஆனால், தற்பொழுது உள்ள வழக்கு இத்திரைப்படம் வெளியிடப்பட்டால் எழும் சட்ட ஒழுங்கு பிரச்னைகளை தவிர்க்கும் வண்ணம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்க மாவட்ட ஆட்சித்தலைவர்களை அரசு கேட்டுக் கொண்ட உத்தரவு சரியானதுதானா என்பதை ஆராயும் வழக்கு. 144 தடை உத்தரவு என்பது தற்காலிகமானது.

ஏனெனில், நான் அறிந்தவரை திரைப்படத்தினை தடை செய்யும் அதிகாரம் மாநில அரசிற்கு இல்லை. விஸ்வரூபம் இஸ்லாமிய மத உணர்வுகளைப் புண்படுத்துவதாக இருந்தாலோ அல்லது இதன்மூலம் இரு சமுதாய மக்களுக்கிடையே பகைமை தூண்டிவிடப்பட்டாலோ, அதற்கான பிரிவுகளின்படி குற்ற வழக்கு தாக்கல் செய்து திரைப்படத்தின் பிரதிகளை கைப்பற்றலாம். ஆனால் அவ்விதமான தீவிர முடிவினை விஸ்வரூபம் பிரச்னையில் எடுக்க போதிய அடிப்படையோ, ஆதாரமோ இல்லை.

எனவே, அரசு உத்தரவிற்கு அடிப்படை இஸ்லாமிய அமைப்புகளின் புகார் மற்றும் அவர்களின் மிரட்டல். முக்கியமாக, அந்த மிரட்டலை செயல் வடிவம் கொடுத்து, மாநிலத்தில் சட்ட ஒழுங்கு பிரச்னையை ஏற்ப்படுத்தும் அவர்களது ஆற்றல் ஆகியவைதான். இம்மிரட்டலை செயலாக்கி அதனால் பொது அமைதி கெடக்கூடும் என்று கருதுவதற்கு அரசுத்தரப்பில் ஏதேனும் ரகசிய தகவல்கள் (Intelligence Report) போன்ற காரியங்கள் உள்ளனவா? அவை எவ்வளவு தூரம் நம்பத்தகுந்தவை? அப்படியே இருந்தாலும் அப்பிரச்னைகளை சமாளிக்க அரசிடம் போதிய வலு இல்லையா? என்பதைத்தான் நீதிமன்றம், என்னுடைய கருத்தின்படி, ஆராயத் தேவையே தவிர படத்தின் உள்ளடக்கத்தை வைத்து அல்ல.

திரைப்படம் இஸ்லாமியர்களை புண்படுத்துவதாக இல்லை என்று நீதிபதி கருதினாலும், இஸ்லாமிய அமைப்புகள் விடுத்த மிரட்டலை தக்க முறையில் சமாளிக்க போதிய நடவடிக்கை (to mobilize forces) எடுக்க நேரம் தேவைப்படுகிறது என்று அரசு கூறினால், நீதிமன்றம் பொது அமைதியை கருத்தில் கொண்டு அதனை ஏற்றுக் கொள்ளலாம்.

உதாரணமாக பொதுக்கூட்டம் நடத்துவது சட்டரீதியில் நமது உரிமைதான். ஆனால் தற்பொழுது பொது அமைதியை கருத்தில் கொண்டு இராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமுலில் உள்ளது. அதனால் அங்கு பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது. அதனை நீதிமன்றமும் ஏற்றுக் கொள்கிறது.

அதே போல, இஸ்லாமிய மத உணர்வுகளைப் புண்படுத்துவதாக நீதிபதி கருதினாலும், 144 தடை உத்தரவு அமுல்படுத்தும் அளவிற்கு சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்ப்படாது என்று நீதிமன்றம் கருதினாலும் பாதிக்கப்பட்ட அமைப்புகளுக்கு காவலர்களிடம் தகுந்த குற்றப் புகார் அளிக்கவோ மற்றும் தணிக்கைச் சான்றிதழை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கவோ உரிமையளித்து அரசு உத்தரவினை தள்ளுபடி செய்வதுதான், ராஜ்கமல் நிறுவனம் தாக்கல் செய்த இந்த வழக்கில் சரியான உத்தரவாக இருக்க முடியும் என்பது என்னுடைய கருத்து.

பல வழக்குகளில் நீதிமன்றங்கள், அதற்கே உரித்தான ஆர்வத்தில் (enthusiasm) அவ்வழக்கின் காரியங்களையும் மீறி மற்ற புறகாரணிகளையும் ஆராய முற்ப்படுகின்றன. அவை முழுமையான நீதியை (complete justice) வழங்க வேண்டுமென்ற நல்லெண்ணத்தின்பால் அமைந்தது என்றாலும் அநேகம் முறை வழக்கின் போக்கினை மாற்றி மேலும் குழப்பத்திற்குத்தான் வழி வகுக்கும் என்பது, நீதிபதிகளுக்கு தக்க மரியாதையுடன் நான் கருதும் எனது சொந்த கருத்து.

எது எப்படியெனினும், நீதிபதி அரசு உத்தரவினை ரத்து செய்வார் என்றே எண்ணுகிறேன்.

மதுரை
27/01/13 

17.1.13

தி ரோட் ஹோம் – பாரதிராஜாவின் உலகப்படம்

பள்ளிக்கூடம் இல்லாத கிராமத்திற்கு நகரத்திலிருந்து வருகிற ஆசிரியர். அவர் வந்த நாள் முதலே, ஆசிரியர் மீது காதல் கொள்ளும் 18 வயது கிராமத்துச் சிறுமி. அதுவரை உள்ளூர் மாப்பிள்ளைகளை நிராகரித்து வந்த, அக்கிராமத்திலிலேயே அழகிய அந்தப் பெண்ணுக்கு ஆசிரியர் மீது காதலென்றால் அப்படியொரு காதல். மெல்ல இருவருக்குமிடையே புரிதல் ஏற்ப்படுகையில் நகரத்திற்கு திரும்பிச் செல்லும் ஆசிரியர். அவருக்காக வழிமேல் விழி வைத்து காத்திருக்கும் காதலி. அதுவரை பெற்றோர் பார்த்து ஏற்ப்பாடு செய்யும் திருமணமே நடைமுறையாக இருந்த கிராமத்தில் இச்சிறுமியின் காதல் மெல்லத் தெரியவர, நம்ம படங்களைப் போல அருவாளைத் தூக்குவார்கள் என்றால்….இல்லை. ஆசிரியர் திரும்பி வந்து கல்யாணமாகிவிடுகிறது.

காதல் வயப்படும் பாரதிராஜா கதாநாயகிகளின் அதே படபடப்பு, ஆனால் கவித்துவமாக!

அப்பாவின் மரணச்செய்தி கேட்டு கிராமத்திற்கு வரும் மகன் வாயிலாக பெற்றோரின் கதை சொல்லப்படுகிறது. கணவரின் பிணத்தில் போர்த்துவதற்கு தன் கையால் துணி நெய்தாக வேண்டும் என்று சாதிப்பதிலும் வெளியூரில் இறந்து போனவரின் உடலை அவர்களது வழக்கப்படி கால்நடையாக தூக்கியபடி ஊருக்கு கொண்டு வந்தால்தான் ஆயிற்று கிழவி பிடிவாதம் பிடிக்கையில் நமக்கே எரிச்சல் ஏற்ப்படுகிறது. ஆனால் கதைப் போக்கில் அதே பிடிவாதம்தான் ரசிக்கத்தக்க வகையில் அவளது காதலின் அடிப்படையாக இருக்கிறது.

பிணத்தை கால்நடையாக கொண்டு வரும் வழக்கம் உட்பட படத்தில் வரும் பல கலாச்சார அடையாளங்கள் இன்னமும் சில ஆண்டுகளில் அழிந்து போகலாம். அவற்றை கதையினூடே ஆவணப்படுத்துவதில்தான் உலகப்படங்கள் தனிச்சிறப்பு பெறுகின்றன. அந்த வகையில், மதுரையில் இப்போது பெருமளவில் குறைந்து போன கோவில் திருவிழாக்களை ஆவணப்படுத்திய சுப்பிரமணியபுரம் தமிழில் முக்கியமான ஒரு திரைப்படம்.

தமிழ்ப்படங்களைப் போல எதிர்பாரத திருப்பங்கள் ஏதுமில்லாமல், மெதுவாக நகரும் கதை என்றாலும் தமிழர்கள் அனைவருக்கும் இப்படம் பிடிக்கலாம்.

மதுரை
17/01/13