Showing posts with label World Cinema. Show all posts
Showing posts with label World Cinema. Show all posts

17.1.13

தி ரோட் ஹோம் – பாரதிராஜாவின் உலகப்படம்





பள்ளிக்கூடம் இல்லாத கிராமத்திற்கு நகரத்திலிருந்து வருகிற ஆசிரியர். அவர் வந்த நாள் முதலே, ஆசிரியர் மீது காதல் கொள்ளும் 18 வயது கிராமத்துச் சிறுமி. அதுவரை உள்ளூர் மாப்பிள்ளைகளை நிராகரித்து வந்த, அக்கிராமத்திலிலேயே அழகிய அந்தப் பெண்ணுக்கு ஆசிரியர் மீது காதலென்றால் அப்படியொரு காதல். மெல்ல இருவருக்குமிடையே புரிதல் ஏற்ப்படுகையில் நகரத்திற்கு திரும்பிச் செல்லும் ஆசிரியர். அவருக்காக வழிமேல் விழி வைத்து காத்திருக்கும் காதலி. அதுவரை பெற்றோர் பார்த்து ஏற்ப்பாடு செய்யும் திருமணமே நடைமுறையாக இருந்த கிராமத்தில் இச்சிறுமியின் காதல் மெல்லத் தெரியவர, நம்ம படங்களைப் போல அருவாளைத் தூக்குவார்கள் என்றால்….இல்லை. ஆசிரியர் திரும்பி வந்து கல்யாணமாகிவிடுகிறது.

காதல் வயப்படும் பாரதிராஜா கதாநாயகிகளின் அதே படபடப்பு, ஆனால் கவித்துவமாக!

அப்பாவின் மரணச்செய்தி கேட்டு கிராமத்திற்கு வரும் மகன் வாயிலாக பெற்றோரின் கதை சொல்லப்படுகிறது. கணவரின் பிணத்தில் போர்த்துவதற்கு தன் கையால் துணி நெய்தாக வேண்டும் என்று சாதிப்பதிலும் வெளியூரில் இறந்து போனவரின் உடலை அவர்களது வழக்கப்படி கால்நடையாக தூக்கியபடி ஊருக்கு கொண்டு வந்தால்தான் ஆயிற்று கிழவி பிடிவாதம் பிடிக்கையில் நமக்கே எரிச்சல் ஏற்ப்படுகிறது. ஆனால் கதைப் போக்கில் அதே பிடிவாதம்தான் ரசிக்கத்தக்க வகையில் அவளது காதலின் அடிப்படையாக இருக்கிறது.

பிணத்தை கால்நடையாக கொண்டு வரும் வழக்கம் உட்பட படத்தில் வரும் பல கலாச்சார அடையாளங்கள் இன்னமும் சில ஆண்டுகளில் அழிந்து போகலாம். அவற்றை கதையினூடே ஆவணப்படுத்துவதில்தான் உலகப்படங்கள் தனிச்சிறப்பு பெறுகின்றன. அந்த வகையில், மதுரையில் இப்போது பெருமளவில் குறைந்து போன கோவில் திருவிழாக்களை ஆவணப்படுத்திய சுப்பிரமணியபுரம் தமிழில் முக்கியமான ஒரு திரைப்படம்.

தமிழ்ப்படங்களைப் போல எதிர்பாரத திருப்பங்கள் ஏதுமில்லாமல், மெதுவாக நகரும் கதை என்றாலும் தமிழர்கள் அனைவருக்கும் இப்படம் பிடிக்கலாம்.

மதுரை
17/01/13

10.6.12

அஜாமி (Ajami)


ஈரானிய அணு குண்டினை விட, இஸ்ரயீல் அஞ்சும் ஒன்று இருக்குமென்றால் அது, அதன் சொந்த மக்கள் தொகைதான். இஸ்ரயீலின் மக்கள் தொகை ஒன்றும் இந்திய மக்கள் தொகை போல கட்டுப்படுத்த இயலாமல் பெருகிக்கொண்டிருப்பதல்ல. ஆனால், அதன் மக்கள் தொகையில் தற்பொழுது சுமார் 20% அளவிற்கு இருக்கும் அரபு மக்களின் தொகையானது யூத இனத்தவரின் மக்கள் தொகையை விட வேகமாக கூடிக்கொண்டிருப்பதுதான்.

சில வருடங்களுக்கு முன்னர் பாலஸ்தீன தலைவர் ஒருவர், ‘இப்படி சண்டையிட்டு சாவதை விட மக்கள் தொகையை யூதர்களை விட அதிக அளவில் பெருக்குவதன் மூலம் இஸ்ரயீலில் யூதர்களை சிறுபான்மையினராக  மாற்றிவிட்டால், யூத நாடு என்பது மீண்டும் காணமல் போய்விடும்என்று எச்சரித்து இஸ்ரயீலர்களுக்கு கிலியூட்டினார்.

இது வெற்று எச்சரிக்கையல்ல! தனி நிர்வாகம் நடைபெற்றாலும், இஸ்ரயீல் ஆளுமையில் உள்ள வெஸ்ட் பாங்கு, காசா பகுதிகளை இஸ்ரயீலுடன் சேர்த்தால், இப்பொழுதே அரபு மக்கள் தொகை யூதர்களுக்கு இணையாக வந்துவிடும்.

அவ்வாறு இஸ்ரயீலுக்குள்ளே, அரபு மக்கள் பெருவாரியாக வ்சிக்கும் வரலாற்றுமுக்கியத்துவம் வாய்ந்த பகுதிதான் ’அஜாமி’. அஜாமியில் வசிக்கும் இரு அரபு சகோதரர்களின் கதையோடு தொடங்கும் இஸ்ரயீல் நாட்டுப் படத்தி பெயரும் ‘அஜாமிதான். தற்செயலாககண்ணில்பட்டு இஸ்ரயீல் படமாக உள்ளதே, என்ற ஆர்வத்தில் பார்க்கத் தொடங்கிய படம். படம் முடிந்து மூன்று நாட்களாகி விட்டாலும் படத்தின் பாத்திரங்கள் ஏதோ நாம் பழகியவர்கள் போல கண் முன்னே நடமாடிக்கொண்டிருக்கிறார்கள்.

இரு இஸ்ரயீல் அரபு சகோதரர்கள், மூத்தவன் கார் ஓட்டுநராக வேலை செய்யும் உணவகத்தை நடத்தும் கிறிஸ்தவ உரிமையாளர், அவரது மகள். உணவக சமையலாராக இருக்கும் இஸ்ரயீல் அரபு முஸ்லீம், அவரது யூத காதலி, சட்டவிரோதமாக இஸ்ரயீலுக்குள் நுழைந்து உணவகத்தில் வேலை செய்யும் பாலஸ்தீனப் பகுதி சிறுவன், யூத காவல்துறை அதிகாரி ஒருவர் என ஐந்து முக்கிய பாத்திரங்களில் குடும்பத்தில் நடக்கும் வெவ்வேறு செயல்களால், அவர்கள் அனைவரையும் ஒரே புள்ளியில் வந்து சேர்க்கும் கச்சிதமான திரைக்கதை.

படம் ஆரம்பித்து சிறிது நேரத்திலேயே, இணையத்தில் அதிகமாக பேசப்பட்ட ‘சிட்டி ஆஃப் காட்போல உள்ளதே என்ற எண்ணம் வந்தது. பின்னர் ‘அஜாமி பற்றி படிக்கையில் ‘சிட்டி ஆஃப் காட்பற்றிய குறிப்பு தவறாமல் இடம் பெறுகிறது.

முதலாளி வீட்டில் உதவி கேட்க தனது தாயாரோடு போகும் உமர், முதலாளி மகளான ‘ஹதிரிடம், அவளை பெண் கேட்கத்தான் தாயாரோடு வந்திருப்பதாக கூறி ஷாக்கொடுக்கும் காட்சிக்கு நமது தமிழ்படங்களின் நூறு டூயட் பாடல்களை தியாகம் செய்யலாம்.

படம் முழுக்கவே, நாம் பல இடங்களில் சந்தித்த மனிதர்கள் பார்த்த காட்சிகள் போலவே இயல்புத்தன்மை கொண்டிருப்பினும், பண்டிகையின் பொழுது தெருவோரத்தில் உட்கார்ந்து ஹூக்கா பிடித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கும் அப்பகுதியில் வ்சிக்கும் யூதர் ஒருவருக்கும் இடையே உருவாகும் இயல்பான பேச்சு, வாக்குவாதமாகி கொலையில் முடிவது எத்தனை முறை பார்த்தாலும் ஏதோ அந்தச் சம்பவத்தில் இருப்பது போல மீண்டும் ஒருமுறை பார்க்க வேண்டும் போல உள்ளது.
சிட்டி ஆஃப் காட் நான் பார்த்ததில்லை. பார்த்த ஒரு நண்பர், ‘அஜாமி அதை விட நன்றாக இருப்பதாககூறினார்.



இன்று ஞாயிறு செய்தித்தாள்களில், இணைய கட்டுப்பாட்டிற்கு எதிரான போராட்டங்களைப் பற்றிய செய்தியில் ‘அனானிமஸ் என்ற வார்த்தை அதிகம் இடம் பெற்றிருந்தாலும், எனக்கு அனானிமஸ் என்றதும் போன வாரம் பார்த்த ஆங்கில படம்தான் நினைவுக்கு வந்தது. ஆங்கில இலக்கிய பாடம் என்றாலே ‘ஷேக்ஸ்பியர்தான் என்ற அளவில் நம்மால் விரும்பப்படும் ஒரு நபரை இப்படி கிழித்து கூறாக்கி ஒரு படம், அதுவும் பார்ப்பவர்களின் முழுக்கவனத்தையும் அதன் பக்கம் மட்டுமே ஈர்க்கும் காட்சிகளுடனும், நம்பகத்தன்மையுடனும் இப்படி ஒரு படமா, என்று ஆச்சரியத்தில் வாயைப் பிளந்து கொண்டிருந்ததில், ஷேக்ஸ்பியரை கேவலப்படுத்தியது ஒரு பொருட்டாகவே இல்லை!
வால்மீகியையோ, பாரதியாரையோ இந்தளவிற்கு சித்தரித்து, இங்கு ஒரு படம் சாத்தியமாகுமா?


ஜூலியா ராபர்ட்ஸ் வில்லியாக நடிக்க, ‘ஸ்நோ ஒயிட்கதை ‘மிரர் மிரர்என்று உருப்பெற்று உள்ளது. வழக்கமான தேவதைக்கதை படமென்றாலும், இறுதியில், ‘ஐ பிலீவ் இன் லவ்என்று இளவரசி பஞ்சாபிய இசையில் நடனமாடத் தொடங்கியதும், முதலில் ஒன்றும புரியவில்லை. ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ பாதிப்பா என்றுபார்த்தால் இயக்குஞர் இந்திய வம்சாவளியாம்.
இந்தியா தொடர்பில் ‘மிசன் இம்பாசிபில் இறுதிக்காட்சி, தற்பொழுது மிரர் மிரர்! பெருமையாக இருந்தாலும், நடன அசைவுகளும் இசையும் படத்தோடு ஒட்டவில்லை என்பதையும் கூற வேண்டும்!

மதுரை
10/06/12