25.12.11

முப்பது வெள்ளிக்காசுக்காய்…நேற்று (24/12/11) தினகரன் நாளிதழைப் பிரித்த எனக்கு ஏதோ வித்தியாசமாக இருந்தது. கடந்த சில நாட்களாக, அதன் இரண்டு பக்கங்களில் வெளியிடப்பட்டு வந்த முல்லைப் பெரியாறு போராட்டம் சம்பந்தமான் புகைப்படங்களைக் காணவில்லை. இரண்டு பக்கம் என்ன, ஒரு பக்கம் இல்லை ஒரு புகைப்படம் கூட காணவில்லை!

ஆனால், தெளிவாக கண்ணில் பட்டது, கேரள முதல்வர் உம்மன்சாண்டியின் புகைப்படங்கள், செய்திகளில் அல்ல. கேரள அரசு விளம்பரங்களில். இரண்டு பக்கங்களில் அரை, அரைப்பக்க அளவில் ‘எதுவும் முக்கியத்துவம்இல்லாத, குறிப்பாக தமிழகத்துக்கு எவ்விதத்திலும் சம்பந்தமில்லாத கேரள அரசு விழாக்களைப் பற்றிய விளம்பரங்கள்.

Splendid Coincidence?

தற்செயலானதா, என்று நான் கூற வருவது, புகைப்படங்கள் இல்லாமல் போனதற்கும், கேரள விளம்பரங்கள் இடம் பிடித்தற்கும் இல்லை. இந்த பதிவினை தட்டச்சிக் கொண்டிருக்கையில், பின்புலத்தில் பதிவர் ரோசாவசந்த கூறிய சுட்டியினை பிடித்து ஓடிக்கொண்டிருக்கும் ‘கேளுங்கள் தரப்படும்பாடலில் ‘யூதாஸ் முப்பது வெள்ளிக்காசுக்காய் காட்டிக் கொடுத்தானேஎன்ற டேப் ராஜமாணிக்கத்தின் கணீர் வரிகள்!

-oOo-


அதாவது, ‘என்ன இந்தப் பிரச்னை இப்படி போய்க்கொண்டேயிருக்கிறது. அரசு காவல்துறை மூலம் நடவடிக்கை எடுத்து இதனை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும்என்ற வகையில் தெரிவிக்கப்பட்ட கருத்து பலரின் கவனத்திலிருந்து தப்பி விட்டது என்றே நினைக்கிறேன். அந்த கருத்து எழுதப்பட்ட தொனியிலிருந்தே, மூர்க்கத்தனமான ஒரு நடவடிக்கைக்கு காவல்துறையை தூண்டி விடுவது போல இருந்தது. மேலும், கம்பம் பகுதியில் நடப்பதை, எதோ அரசியல் கட்சிகளும், மொழி வெறியர்களும் தூண்டி விட்டு நடப்பது போலத்தான் சித்தரித்துள்ளது. உண்மையிலேயே, அரசியல் கட்சிகளோ அல்லது பிற இயக்க தூண்டுதலோ இல்லாமல் மக்கள் சுயமாகவே போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளார்கள் என்றால் அது முல்லைப் பெரியாறு போராட்டமும், கூடங்குளம் போராட்டமும் ஆகும். போராட்டத்தின் தீவிரம் உணர்ந்து அரசியல் கட்சிகள் மற்றும் பிற இயக்கங்கள் தங்களை அதனோடு இணைக்க முயலுகின்றன. அவ்வளவுதான்.

முல்லைப் பெரியாறு பிரச்னையில் பல ஆண்டுகளாக குரல் கொடுத்து வரும் வைக்கோவிற்கே பெரிய அளவில் ஏதும் ஆதாயம் இந்தப் போராட்டத்தில் இருப்பது போலத் தோன்றவில்லை!

ஆனால், இதே டைம்ஸ் குழுமம் தில்லியில் அன்னா ஹசாரேவின் போராட்டத்தை ஏறக்குறைய ஸ்பான்ஸர் செய்தது. அன்னா ஹசாரேவின் போராட்டம் தில்லியை ஸ்தம்பிக்க வைத்தது என்று பெருமையடித்த டைம்ஸ், அப்போதும் இதைப் போலவே, காவல்துறை வேகமாக செயல்பட்டு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று கூறியிருந்தால், இரண்டு நாட்கள் முன்பு அதன் முதல் பக்கத்தில் வெளிப்படுத்திய கருத்துக்கு உள்நோக்கம் உண்டு என்று கூறியிருக்க மாட்டேன்.

போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கும்பல் (mob) குறிப்பிடுவது எனது அனுமானத்தை வலுப்படுத்துகிறது.

டைம்ஸ் சரி, ஹிந்து கூட இன்னமும் முல்லபெரியார் என்றுதானே கூறுகிறது?

மதுரை
24/12/11Times View 
For a government which listed law and order as its primary responsibility, the continued unrest and violence along the Tamil Nadu-Kerala border over the Mullaperiyar dam, is a poor reflection of the AIADMK regime’s administrative abilities. Day after day, for more than two weeks, the police force here has been grappling with protesters driven by regional jingoism whipped up through political statements and rallies. The stir has crippled interstate trade and travel, besides affecting the livelihood of thousands in both states. It is time the governments in both states joined hands to restore normalcy and sobriety

15.12.11

டைம்ஸ் ஆப் கேரளா = 100 கோடி = முன்னாள் நீதிபதி!


தலைவலியும் வயித்து வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும், என்பது எத்தனை அருமையான பழமொழி!

சமீபத்தில்தான் கபில் சிபல், மற்றவர்களது மத உணர்வுகளை புண்படுத்தும் வகையிலும், சோனியா, மன்மோகன்சிங் ஆகியோர் பற்றி அவதூறாகவும் இணையம் எங்கும் பரவிக்கிடக்கும் விடயங்களை கட்டுபடுத்த முயற்சிக்கையில் அனைத்து இணைய பயன்பாட்டார்களாலும், பத்திரிக்கைகளாலும் விளாசித் தள்ளப்பட்டார்.

அவ்வாறு பேச்சு சுதந்திரத்திற்கு (freedom of expression) கொடி பிடித்து வந்ததில் டைம்ஸ் ஆப் இந்தியாவும் முன்னணியில் இருந்தது.

ஆனால், அந்த சூடு ஆறுவதற்கு முன்னதாகவே, டைம்ஸ் ஆப் இந்தியா தான் அவதூறு செய்யப்பட்டுள்ளதாக கூறி, 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு ஸ்டேட்ஸ்மென் பத்திரிக்கையின் சிறப்பு நிருபராகிய ராதிகா கிரி என்பவருக்கும் சம்பந்தப்பட்ட அவரது கட்டுரை வெளியான ‘வீக் எண்ட லீடர்’ என்றவலைத்தளத்திற்கும் அறிவிப்பு அனுப்பியுள்ளது.


ராதிகா கிரி தனது கட்டுரையில், சென்னையில் செயல்படும் ஆங்கிலப்பத்திரிக்கைகளில் முக்கியமாக டைம்ஸ் ஆப் இந்தியாவில் எப்படி மலையாளிகளின் ஆதிக்கம் கொடி கட்டிப் பறக்கிறது என்றும், அதனால் அவை முல்லைப் பெரியார் பிரச்னையில் கேரள அரசு சார்பாக செயல்படுகின்றன என்றும் எழுதியுள்ளார். முல்லைப் பெரியாரை ‘முல்லபெரியார்’ என்ற மலையாளஉச்சரிப்பில் ஆங்கில் ஊடகங்கள் எழுதுவதை ஒரு எளிய உதாரணமாக குறிப்பிடும் ராதிகா,டைம்ஸ் ஆப் இந்தியா அலுவலம் ‘ஓண’த்திற்காக அலங்கரிக்கப்பட்டாலும், தமிழ் புதுவருடம்கொண்டாட அனுமதிக்கப்படவில்லை என்பதிலிருந்து பல்வேறு சந்தர்ப்பங்களை தனது கட்டுரைக்குஅடிப்படையாக குறிப்பிடுகிறார்.

ஒரு அலுவலகத்தில் நிலவும் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு ஒரு பத்திரிக்கையாளரின் மனதில் எழும் எண்ணப்பாட்டினை (perception) கட்டுரையாக வடித்துள்ளார், ராதிகா கிரி.

இதுதான், தம்மை அவதூறு செய்துள்ளதாகவும், இந்திய ஒருமைப்பாட்டிற்கு உலை வைத்துள்ளதாகவும், இரு மாநில மக்களிடையே விரோதத்தை தூண்டியதாகவும் கூறி முதலில் ஒரு கோடி கேட்டு அறிவிப்பு அனுப்பிய டைம்ஸ்தனது இரண்டாவது அறிவிப்பில் 100 கோடி கேட்டுள்ளது.

பேச்சு சுதந்திரத்தை தூக்கிப் பிடித்துள்ளதாக கூறும் பத்திரிக்கையாலேயே, இந்த ஒரு சாதாரண அவதூறை தாங்க முடியவில்லை என்றால், தனது கட்சியின் தலைவியை கீழ்த்தரமாக சித்தரிக்கும் வலையெழுத்து மீது, ஒரு அரசியல்வாதி கபில் சிபல் நடவடிக்கை எடுப்பேன் என்று மிரட்டுவதை எப்படி நாம் விமர்சிக்க முடியும்!

-oOo-

டைம்ஸ் ஆப் இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு ஒரே ஒரு விளக்கம்தான் (justification) கொடுக்க முடியும். அதற்கு உடனடியாக ரூ.100 கோடி தேவைப்படுகிறது. தான் அவதூறு (?) செய்த வேறு ஒரு நபருக்கு நஷ்ட ஈடாக டைம்ஸ் 100 கோடி கொடுக்க வேண்டியுள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் முதற்கொண்டு பல்வேறு நீதிபதிகளுக்கு பங்கிருப்பதாக சொல்லப்பட்ட புராவிடண்ட் பண்டு ஊழல் பற்றிய செய்தியொன்றில், டைம்ஸ் குழும தொலைக்காட்சியான டைம்ஸ்நவ், முன்னாஸ் உச்ச நீதிமன்ற நீதிபதியும், பிரஸ் கவுன்சில் தலைவராக பணியாற்றியவருமான பி.பி.சாவந்த் படத்தினை சில விநாடிகள், தவறுதலாகத்தான் ஓட விட்டது.


அதனால் தான் அவதூறு செய்யப்பட்டதாக கூறி சாவந்த் வெகுண்டெழுந்தார். டைம்ஸ் நவ் அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு அதனை தனது தொலைக்காட்சியிலும் தெரிவித்தது. சாவந்த பெருந்தன்மையாக விட்டிருக்கலாம். டைம்ஸ் குழுமம் மீது புனே நீதிமன்றத்தில் 100 கோடி கேட்டு வழக்கு தொடர்ந்தார்.

புனே நீதிமன்றம், வழக்கின் இறுதியில் டைம்ஸ் குழுமத்தை சாவந்திற்கு 100 கோடி நஷ்ட ஈடாக கொடுக்கச் சொல்லி உத்தரவிட்டுள்ளது. இவ்வளவு பெருந்தொகை, சட்டமுறை அறிந்த அனைத்து நியாய் உணர்வுகளுக்கும் எதிரானது என்பதுதான் சட்ட வல்லுஞர்களின் கருத்தாக இருக்க முடியும். புனே நீதிமன்றம்தான் இப்படியென்றால் அதற்குப் பின்னர் ந்டந்ததுதான் வேடிக்கை!


டைம்ஸ் மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்துள்ளது. மேல்முறையீடு முடியும் வரை புனே நீதிமன்ற தீர்ப்பினை இடைக்கால தடை செய்ய வேண்டிய மனுவில், உய்ர்நீதிமன்றம் 20கோடியை தொகையாக வைப்பீடு செய்ய வேண்டுமென்றும் மீதி 80 கோடிக்கு வங்கி உத்தரவாதம் (Bank Gurantee) கொடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. வங்கி உத்தரவாதம் என்பது, அந்த தொகையை வைப்பீடு செய்வது போலத்தான். வேறு வழியில்லாமல் டைம்ஸ் உச்ச நீதிமன்றம் சென்றால், மும்பைஉயர்நீதிமன்றம் கூறியது சரிதான் என்று மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் மூன்று நீதிமன்றங்களுமே, இதுவரை பழக்கத்தில் உள்ள சட்ட நடைமுறைகளின்படி நடந்து கொள்ளவில்லை என்பது உரிமையியல் வழக்குகளில் பரிச்சயமுள்ள யாரும் கூறுவர். அவதூறுக்கு இத்தனை பெரிய இழப்பீடு என்பது, நீதிமன்ற தீர்ப்புகளை கேலிக்கூத்தாக்கி விடும். ராஜீவ் கொலை வழக்கில் 26 குற்றவாளிகளுக்கும் தூக்குத்தண்டனை கொடுத்தது போலத்தான்.

தொடர்ந்து மும்பை உயர்நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் நடந்து கொண்டுள்ள முறைகள், மக்கள் ‘முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி என்றால் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் நஷ்ட ஈடா என்று கேள்வி கேட்கும் நிலையை உருவாக்கலாம்.

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர், டைம்ஸ் குழுமத்திற்கு வேறு வழியில்லை. 100 கோடி ரூபாய் பணத்தை கட்டித்தான் ஆக வேண்டும். அதற்குத்தான் சாதாரண ஒரு வலைத்தளம் மீது பாய்ந்துள்ளார்கள் போல!

மதுரை
15/12/11

13.12.11

அரசற்ற நிலை நோக்கி வழிநடத்துகிறதா, இணையம்?


டேம் 999 படம் தடை செய்யப்பட்ட பொழுது, அதனை எதிர்த்து எழுந்த லிபரல் குரல்கள், சுப்பிரமணியன் சுவாமிக்கு ஹாவர்டு பல்கலைக்கழகம் அனுமதி மறுத்துள்ள விடயத்தில் அதே வேகத்தில் எழவில்லை. உண்மையில், சுப்பிரமணியன் சுவாமியை சரியாக புரிந்து கொள்ள உதவிய அவரது டிஎன்ஏ கட்டுரையை வரவேற்று, பரவலான மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்வதுதான் சரியான செயலாக இருக்கும். மாறாக அதனை தடை செய்ய முயல்வதுதான் தவறு!

ஹாவர்டு பல்கலைக்கழகம், தனது அதீதமான எதிர்வினை மூலம் சுப்பிரமணியன் சுவாமிக்கு தேவையற்ற அனுதாபத்தை பெற்றுத் தந்துள்ளது.

இழப்பு சுவாமிக்கு அல்ல!

-oOo-

ஆனால், நமது நாட்டில் கருத்துச் சுதந்திரத்தை போற்றுபவர்கள் எங்கிருந்தெல்லாம் எழுகிறார்கள் என்பதை நினைக்கும் பொழுது, தலை சுற்றுகிறது. கபில் சிபல், ‘இணையத்தில் கட்டுப்பாடு வேண்டும் என்று ஆரம்பித்த பொழுது, அதனை எதிர்த்து அவரது வீட்டிற்கு முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னால் நிற்பது, ‘காஷ்மீர் கருத்துக்காக பிரஷாந்த் பூஷனை உச்ச நீதிமன்றத்திற்குள்ளாகவே சென்று தாக்கிய நபர்!


அடுத்து ‘Babasaheb Ambedkar enshrined Freedom of Expression in the Constitution & on his nirvan diwas, UPA seeks to snatch it! என்று துவிட்டியிருப்பது, நரேந்திர மோடி!!

-oOo-

கபில் சிபல் என்றதும் போட்டி போட்டிக் கொண்டு வந்து அனைவரும் அவரை மொத்தினார்கள். நேற்று மார்கண்டேய கட்ஜுவும் இணையத்தில் நிலவும் கட்டுக்கடங்காத சுதந்திரம் பற்றி பேசியுள்ளார். பெரிய எதிர்வினை, இதுவரை இல்லை. ஆனால் வரும் காலத்தில் பாதிக்கப்படுபவர்கள் ஒவ்வொருவராக, எதிர்ப்பு தெரிவிக்கும் பொழுது இணைய கட்டுப்பாடு வேண்டும் என்ற குரல்கள் வலுப்பெறலாம்.

இணையத்தில் கட்டுப்பாடு உள்ளதோ இல்லையோ, நமது நாட்டில் நிலவும் சட்டப்படி இணையத்தில் எழுதப்படும் விடயங்களுக்காக, குற்றவியல் நடவடிக்கை யார் மீதும் எடுக்கப்படலாம் என்று மீண்டும் வலியுறுத்துகிறேன். நமது குற்றவியல் சட்டப்பிரிவுகளை பரந்த அளவில் அர்த்தம் கொண்டால் (on a broader definition) அவ்விதமான விடயங்களுக்கு தளம் அமைத்துக் கொடுக்கும் முகநூல், துவிட்டர் போன்ற இணையதளங்களை நடத்தும் பொறுப்பில் உள்ளவர்களையும், குற்றத்திற்கு உடந்தையானவர்கள் என்று பொருள் கொள்ளலாம். எதற்கு இந்த வேண்டாத வேலை என்பதால், யாரும் கண்டு கொள்வதில்லை. ஆனால், எதிர்காலத்தில் இணைய பயன்பாடு மக்களிடையே மேலும் மேலும் பெருகும் பொழுது, பல பிரச்னைகளை இணையம் எதிர் கொள்ள நேரிடலாம்.

-oOo-


எது எப்படியிருப்பினும், இணையம் தரும் கட்டற்ற சுதந்திரமே, அரேபிய எழுச்சி முதல் முல்லைபெரியாறு கிளர்ச்சி வரை அடிநாதமாக இருப்பது போல எனக்கு ஏனோ தோன்றுகிறது. அன்னா ஹசாரே, கூடங்குளம் மற்றும் கடந்த மூன்று நாட்களாக கம்பத்தில் ஏற்ப்பட்டுள்ள மக்கள் எழுச்சியில் பொதுவான ஒரு வடிவம் (Pattern) இருக்கிறது. மூன்றுமே, அரசியல்கட்சிகளின் கட்டுப்பாட்டினை மீறி கிளர்ந்தவை. அவர்களது கோரிக்கை நிறைவேறக்கூடிய சாத்தியக்கூறுகள் இல்லை என்று பரவலாக கருதப்பட்டாலும், அதைப் பற்றிய கவலை கிஞ்சித்தும் இல்லாமல், இதுதான் வேண்டும் என்று பெருத்த நம்பிக்கையுடன், போராட்டம் தொடர்ந்து தன்னை நடத்திக் கொண்டிருத்தல்.


முக்கியமாக, மிக முக்கியமாக, நாம் அடிக்கடி பார்த்து பழகிய மற்ற் போராட்டங்களைப் போல இல்லாமல், இம்மூன்று போராட்டங்களிலும் பங்கு பெருபவர்கள் மிகுந்த உற்சாகத்துடன், ‘இந்தப் போராட்டமில்லையென்றால் என் நிலை அதோ கதிதான் என்ற கலக்கம் ஏதுமின்றி இருப்பது. திடீரென வேலை பறிக்கப்பட்ட ஊழியர்களின் போராட்டங்களில் அவரவர்களின் தனிப்பட்ட எதிர்காலம் கேள்விக்குறியாக நிற்கும். ஆனால் இம்மூன்று போராட்டங்களும் பங்கு பெறுபவர்களின் பொதுவான எதிர்காலம் பற்றியது. எனவேதான் சோர்வில்லாமல் இப்போராட்டங்கள் சுயமாகவே, தங்களை முன்னெடுத்து சென்று கொண்டிருக்கிறது.


இப்போராட்டங்களுக்கான அடித்தளம், இணையமே என்றால், முல்லை பெரியாறுமா என்று தோன்றலாம். ஆனால் அதுதான் உண்மை என அனுமானிக்கிறேன். உலகளாவிய வகையில், அரசற்ற (Anarchy) ஒரு நிலை நோக்கி இணையம் மக்களை வழிநடத்துகிறது.

அறுபதுகளில் தொடங்கி பின்னர் எழுபதுகளில் தேய்ந்து போன ஹிப்பி இயக்கம் போல, இவ்விதமான தன்னெழுச்சி போராட்டங்களும் ஒரு நாள் சலித்துப் போகலாம்...

மதுரை
13/12/11

11.12.11

சில்லறை வணிகமும், பொருளாதார ஆரூடங்களும்!


டைம்ஸ் ஆப் இந்தியா, மதுரைப் பதிப்பு (உண்மையில் திருச்சிப் பதிப்பு) வெளிவருகிறது என்றவுடன் நான் மிகுந்த ஆர்வம் கொண்டதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.

முதலில் ‘தி இந்துவிற்கு ஒரு மாற்று. இரண்டாவது, பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் பற்றிய சுவாமிநாத ஆ.அய்யர் மற்றும் குருசரண் தாஸ் ஆகியோரின் வாராந்திர பத்திகள். முக்கியமாக அய்யரின் தர்க்க ரீதியில் அமைந்த தீர்வுகள் எப்பொழுதுமே சுவராசியமானவை!

கடந்த ஞாயிறு அன்று இருவருமே, சில்லறை வணிகத்தில் (ஐந்து முதல் ஐம்பது வரையிலான நோட்டுக்ளே புழக்கத்தை விட்டுப் போன பின்னர் இன்னமும் சில்லறை வணிகம் என்பது சரியா? என்பது ஒரு புறம் இருக்கட்டும்) அந்நிய முதலீடு பற்றி  தங்களது பத்திகளை எழுதியுள்ளனர்.


அய்யரைப் பொருத்தவரை இணையவழி வர்த்தகம் கொஞ்சம் கொஞ்சமாக வால்மார்ட் போன்ற பெருங்கடை வணிகத்தை முழுங்கிக் கொண்டிருக்க கவலைப்பட வேண்டியது பெருங்கடைகளே தவிர இந்தியாவில் தற்பொழுது செயல்படும் சிறுவர்த்தகர்கள் அல்ல என்கிறார்.

முக்கியமாக அவர் கூறவருவது, அநியாயத்திற்கு இங்கு  அதிகரித்துள்ள நிலமதிப்பால், பெருங்கடைகள் நகர எல்லைக்கு வெளியேதான் நிறுவப்பட முடியும் என்பதாலும், சிறுகடைகள் போல அல்லாமல் பெருங்கடைகள் ஒழுங்காக தனது கணக்குகளை பராமரித்து அதற்கான வரிகளை தவறாமல் கட்ட வேண்டிய தேவை இருப்பதால், சிறுகடைகளுக்கு அவை போட்டியாக இருக்க முடியாது என்பதும்தான்.

பெருங்கடைகள் வரிகளை கட்டுவதோடு, தனது வேலையாட்களுக்கு ஊக்கத்தொகை, போனஸ், புராவிடண்ட் பண்ட், கிராஜுவிடி போன்ற பணிப்பலன்களை சிறுகடைகள் போல அல்லாமல் வழங்க வேண்டிய தேவை இருப்பதை அய்யர் குறிப்பிடவில்லையெனினும், அவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

இறுதியில், சிறுகடைகளால் பெருங்கடைகளை தடுக்க முடிந்தது போல இணையவழி வர்த்தகத்தை தடுக்க முடியாது என்று முடிக்கிறார்.

அய்யரின் பத்தி மூலம் நான் புரிந்து கொண்டது, சிறுகடைகளை விட் விலையினை குறைப்பது பெருங்கடைகளுக்கு இந்திய சூழ்நிலையில் சாத்தியமல்ல என்றால் குருசரண் தாஸ் தனது முக்கிய வாதமாக, அந்நிய முதலீட்டால் சில்லறை வணிகத்தில் இடைத்தரகர்களின் தலையீடு தடுக்கப்பட்டு விலைகள் பெருமளவில் குறையும் என்று கூறுவது குழப்பத்தை ஏற்ப்படுத்துகிறது.

எது உண்மை?

விலைகள் குறையாது என்று அய்யர் மறைமுகமாக கூறுவதா அல்லது விலைகள் குறையும் என்று தாஸ் உறுதியாக வலியுறுத்துவதா?

இன்று டைம்ஸ் நடுப்பக்கத்தில் சில்லறை வ்ணிகத்தில் அந்நிய முதலீட்டின் தேவையை வலியுறுத்தும் மற்றுமொரு கட்டுரை. அந்நிய முதலீட்டால் விவசாய உற்பத்தி பெருகும், அதனால் கிராமப்புற செல்வம் அதிகரிக்கும் என்ற ரீதியில். பொதுவாக இந்தக் கருத்தினை அனைவருமே எடுத்து வைக்கின்றனர்.

இதைப் போலவே, அந்நிய முதலீடு சிறுகடைகளை பாதிக்காது என்பதை, அரசியல்ரீதியில் அமைந்த கோஷ்ம் போல அந்நிய முதலீட்டிற்கான அனைத்து ஆதரவாளர்களும் சற்று உரக்கவே சொல்கின்றனர். அப்படியாயின் பெருங்கடைகளுக்கான வாடிக்கையாளர்கள் இனி புதிதாக தோன்றப் போகிறார்களா? ஏற்கனவே இருக்கும் வாடிக்கையாளர்கள்தானே பெருங்கடைகளுக்கு செல்ல வேண்டும்? அப்படியாயின் அது சிறுக்டைகளுக்கு பாதிப்பு ஏற்ப்படுத்தும் என்பதுதானே உண்மையாக இருக்க முடியும். ஆனால், பாதிப்பு என்பது அவரக்ளால் உணரக்கூடிய வகையில் இல்லாமல் மெல்ல மெல்ல நிகழும் என்றே நினைக்கிறேன்.

உதாரணமாக, ஐம்பது வருடங்களுக்கு முன்னர் இப்போதிருப்பது போல பெரிய நகைக்கடைகள் இல்லை. நகைத்தொழிலாளர்களிடம் நேரிடையாக நகை செய்யச் சொல்லி வாங்குவார்கள். பின்னர் சிறுநகைக்கடைகள், தற்பொழுது பெருங்கடைகள் தோன்றியுள்ளன. நகைத்தொழிலாளர்கள் இன்னமும் உள்ளனர். கடை வாடகையின்றி, விற்பனையாளர், குளிர் சாதனம், விளம்பரம், கணக்கு, வரி ஏதுமின்றி அவர்களும் நகை செய்து கொடுக்கின்றனர். ஏதோ ஒருவகை கணக்கும், குறைந்த சம்பளத்தில் விற்பனையாளரைக் கொண்ட, விளம்பரமே செய்யாமல் சிறுகடைகளும் உள்ளது.

ஆனால் பெருவாரியான நகைத்தொழிலாளர்கள் பெருங்கடைகளுக்காக சம்பளத்திற்கு உழைக்கின்றனர். பெருவாரியான வாடிக்கையாளர்கள் சிறுகடைகளை நாடுவதில்லை!


இந்தச் சந்தடியில் ‘இடைத்தரகர்களை ஒழிப்போம்என்ற வாதத்திலிலுள்ள குரூரத்தையும் யாரும் உணரவில்லை. ஏன், அவர்களும் இந்தியாவின் குடிமகன்கள்தானே, தரகுத்தொழிலும் சட்டபூர்வமானதுதானே என்ற கேள்வி கேட்க யாருமில்லை. குருசரண் தாஸ் கணக்குப்படி விவசாயிக்கும் நுகர்வோருக்கும் இடையில் இரு இடைத்தரகர்கள் இருக்கிறார்கள். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கான வேலைவாய்ப்பு?

வேலையிழக்கும் ஒவ்வொரு இந்திய குடிமகனையும் பராமரிக்க வேண்டிய பொறுப்பு வேலையிலிருக்கும் பிற குடிமகன்களின் தலையில் வரிச்சுமையாக விழுகிறது என்பதை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.


பெருங்கடைகள் உருவாக்கும் வேலைவாய்ப்பு இடைத்தரகர்களின் வேலையிழப்பினை சரிகட்ட உதவலாம். அப்படியாயின், மீண்டும் வட்டத்தின் முதலிலேயே வந்து நிற்கிறோம். ஆக, தாஸ் கூறுவது போல தற்பொழுது ஐந்து ரூபாய்க்கு விவசாயி விற்பது இருபது ரூபாய்க்கு நுகர்வோருக்கு கிடைப்பது ஒழிந்து விவசாயிக்கு பத்து ரூபாயும் நுகர்வோருக்கு பதினேழு ரூபாயும் கிடைக்கும் என்பது, அனைத்து பொருளாதார கோட்பாடுகளைப் போலவே வெற்று ஆரூடமாகத்தான் இருக்கப் போகிறது.

The chances of a prediction to become reality are sadly more in astrology than in economics!

மதுரை
12/12/11

6.11.11

சாருநிவேதிதாக்களை காப்பது எப்படி?ஏ.கே.ராமனுஜன் அவர்களின் '300 ராமாயணங்கள்' என்ற கட்டுரை, இந்து மதஉணர்வுகளை புண்படுத்துவதாக கூறப்பட்டு தில்லி பல்கலைக்கழக வரலாற்றுப் பிரிவு பாடத்திட்டத்திலிருந்து சமீபத்தில் நீக்கப்பட்டது, பெரிய அளவிலான விவாதத்திற்கு வகுத்துள்ளது.

இதனைப் பற்றி கருத்து தெரிவித்த எண்ணங்கள் பத்ரி,'எந்தப் புத்தகத்தையும் தடை செய்யக் கூடாது, அது 'சாத்தானின் வேத'மாக இருந்தாலும் சரி, வேறு என்னவாக இருந்தாலும் சரி' என்று கூறுகிறார்.

மைய அரசோ அல்லது மாநில அரசோ ஒரு புத்தகத்தை அதில் கூறப்படும் கருத்து நாட்டின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் என்றோ, சட்டவிரோதமானது என்றோ அல்லது சட்டம் ஒழுங்கினை குலைக்கலாம் என்றோ தடை செய்கிறது. இத்த்கைய அதிகாரம் அரசிற்கு இருக்க வேண்டியது அவசியம். எந்தப் புத்தகத்தையும் தடை செய்யக் கூடாது என்ற கொள்கை முடிவு ஆபத்தானது.உதாரணமாக, ‘இஸ்லாமிய மத உணர்வுகளை' புண்படுத்துவதாக கூறி சாத்தானின் வேதம் தடை செய்யப்பட்டாலும், உண்மையான காரணம் அப்பொழுது நாட்டில் நிலவிய சூழலில், எளிதில் சாமானிய மக்களை உசுப்பேற்றி ஒரு கலவரத்தை ஏற்ப்படுத்தி விடலாம் என்ற அச்சத்தால்தான். அப்பாவிகளின் உயிர் பணயமாக வைக்கப்படுமெனில், ஒரு புத்தகத்தை தடை செய்வது என்பது தவறான ஒரு முடிவாக இருக்காது.

ஆனால், இத்தகைய ஒரு தடை தற்காலிகமான ஒன்றாகத்தான் இருக்க முடியும். மேலும் இம்மாதிரியான தடை உத்தரவை எதிர்த்து சம்பந்தப்பட்டவர் நீதிமன்றத்தை அணுகினால், அரசின் முடிவு சரியானதா என்பதை நீதிமன்றம் ஆராயும் வாய்ப்பும் உள்ளது. சமீபத்திய உதாரணம், ‘ஆராக்ஷன்’ திரைப்படம் மீதான தடையும், நீதிமன்றத்தின் உத்தரவும். முக்கியமாக இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் (Guidelines) வகுக்கப்பட்டால், நீதிமன்றங்களால் இந்த வழக்குகளை தீர்ப்பது எளிதான செயலாகவும் இருக்கும்.

ஆனால் பிரச்சனை, புத்தகத்தை தடை இல்லாமல் வெளியிடுவதிலோ அல்லது தடையை நீக்குவதிலோ இல்லை. இந்திய தண்டனை சட்டத்தின் கீழான வம்பு வழக்குகளை எதிர்கொள்வதுதான் உண்மையான பிரச்சனை!எனது ‘சைபர் கிரைம் பற்றிய பதிவிலே நான் கூறியபடி, நடிகை குஷ்பு தமிழர்களின் உணர்வுகளைப்புண்படுத்திவிட்டார் என்றோ அல்லது ஒவியர் எம்.எப்.ஹுசைன் இந்துக்களின் உணர்வுகளைப்புண்படுத்திவிட்டார் என்றோ எந்த ஒரு நீதிமன்றத்தாலும் தீர்ப்பு கூறப்படவில்லை. ஆனாலும், முன்னவர் தமிழகம் முழுவதும் பின்னவர் இந்தியா முழுவதும் உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றங்களில் அலைகழிக்கப்பட்டதையும் அதனால், ஹுசைன் இந்தியாவை விட்டே வெளியேற வேண்டிய சூழல் ஏற்ப்பட்டதையும் நாம் அறிவோம்.

எனவே, தடை செய்யப்படுவது மட்டும் பிரச்சனை அல்ல!

மாறாக மற்றொரு நபரின் மத உணர்வுகளைப் புண்படுத்த வேண்டும் என்ற தீர்மானமான எண்ணத்துடன் (deliberate intention) ஒருவரின் செயல் இருக்குமாயின் அதனை குற்றம் என்று கூறும் இந்திய தண்டனச் சட்டத்தின் பிரிவு 298, ஒழுக்கக்கேடான (obscene) எழுத்து, ஒவியம் அல்லது பாடல் போன்றவற்றை குற்றம் என்று கூறும் பிரிவு 292 ஆகியவையும் மற்றும் அவதூறை (Defamation) உள்ளடக்கிய பல்வேறு குற்றங்களில் ஒரு புத்தகத்தை கொண்டு வர முடியும் என்பதுதான் பிரச்சனை.

‘சாத்தானின் வேதம்’ புத்தகத்தை இந்தியாவின் எந்த மூலையிலும் படிக்கும் ஒருவர் சல்மான் ருஷ்டி மற்றும் அந்த புத்தகத்தோடு சம்பந்தப்பட்ட எவர் மீதும், அவர் அந்த புத்தகம் விற்பனையான இடத்திலிலுள்ள காவல்துறையில் புகார் கொடுத்து வழக்கு பதிவு செய்ய இயலும். காவலர்கள் மறுத்தால் அங்குள்ள நீதித்துறை நடுவர் (Judicial Magistrate) தனிநபர் குற்றவழக்காகவும் பதிவு செய்ய இயலும். குற்றவியல் வழக்குகளில் அழைப்பாணை கிடைத்ததும் ஒருவர் நேரில் ஆஜராக வேண்டும். பின்னர் விலக்கு அளிக்கப்பட்டாலும், அவர் சார்பாக வக்கீல் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். இல்லை வாரண்ட்…கைது இன்ன பிற தொந்தரவுகள்.நீதித்துறை நடுவர் என்பவர், நீதிபதிகள் மட்டத்தில் கடைநிலையில் இருப்பவர். சட்டத்தில் இளங்கலை பட்டம் பெற்ற ஒரு வருட காலத்திற்குள்ளாகவே ஒருவர் நடுவராக நியமிக்கப்பட வாய்ப்பு உண்டு. தற்போதைய இலக்கியச் சூழல் பற்றியோ, பின்நவீனத்துவம் பற்றியோ அவர் அறிந்திருக்க தேவையில்லை. அவர்தான் தனியாளாக, ஹுசைன் தனது ஓவியம் மூலமாக வேண்டுமென்றே இந்துமத உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளாரா அல்லது சாருநிவேதிதாவின் ‘தேகம் புதினம் ஒழுக்கக் கேடானதா என்பதை தீர்மானிப்பார்.

அதற்காக, இந்திய தண்டனைச் சட்டத்தின் இந்தப் பிரிவுகளை நீக்குவதும் சாத்தியமல்ல. அப்படியெனில், படைப்பாளிகளை சுதந்திரமாக எவ்வித அச்ச உணர்வுமின்றி தங்கள் படைப்புக்ளை ஆக்க எவ்வாறு ஊக்குவிப்பது?

எனக்குத் தோன்றும், ஒரே தீர்வு தணிக்கை வாரியம் (Censor Board) போன்ற சட்டபூர்வமான அமைப்பினை ஒன்றினை ஏற்ப்படுத்தி, இவ்விதமான தாக்குதல்களுக்கு தங்கள் படைப்பு உள்ளாகலாம் என்று அச்சப்படும் படைப்பாளிகள் தங்களது படைப்பினை அந்த அமைப்பிற்கு சமர்ப்பிக்க கோரலாம். அறிஞர்கள் அடங்கிய அந்த அமைப்பின் சான்றிதழைப் பெற்றால், மேற்கூறிய இந்திய தண்டனை சட்டபிரிவுகளின் கீழ் தாக்கல் செய்யப்படும் வழக்குகளில் இருந்து அந்த படைப்பிற்கு விலக்கு (Immunity) அளிக்கலாம்.

மேலும், அவ்விதம் விலக்கு அளிக்கையில் ‘இந்த படைப்பு படிப்பவரது ஒழுக்க நெறிகளுக்கு ஏதுவானதாக இல்லாதிருக்கலாம் ‘மத உணர்வுகளைப் புண்படுத்தலாம் என்ற எச்சரிக்கையினை தாங்கி அந்த படைப்பு வெளிவர வேண்டும் என்ற கட்டுப்பாடுகளையும் அந்த அமைப்பு விதிக்கலாம்.

எனக்குத் தோன்றிய வரையில் இப்படிப்பட்ட ஒரு அமைப்பே இந்தப் பிரச்சனைக்கான நிரந்தரமானதும், முழுமையானதுமான தீர்வாக இருக்க முடியும்.

மதுரை
06/11/115.11.11

வரலாறு மிக முக்கியம்!

தினகரன் நாளிதழில் 'பீட்டர் மாமா' என்ற பெயரில் அரசியல் கிசுகிசுக்கள் தினமும் எழுதப்படும். நேற்றைய பகுதியில், 'மதுரை மீட்டிங்ல அப்போ கொபசாவா இருந்த ஜெயலலிதாவுக்கு எம்ஜிஆர் வெள்ளிச் செங்கோல் கொடுத்தார். அதுக்குப் பிறகு கிடுகிடுன்னு வளர்ந்து சீயெம் ஆயிட்டார்' என்று ஒரு 'செய்தி' எழுதப்பட்டுள்ளது.

எம்ஜியாரிடம் இருந்து ஜெயலலிதா வெள்ளிச் செங்கோல் பெறுவது போல ஒரு புகைப்படம் அதிமுக கட்சி சுவரொட்டிகளில் அடிக்கடி பார்க்கலாம். எம்ஜிஆர் அதிமுக தலைமையை ஜெயலலிதாவிடம் ஒப்படைத்ததன் அடையாளமாக, அந்தப் புகைப்படும் தொண்டர்கள் மனதில் பதிய வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், உண்மையில் ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையில் நடத்தப்பட்ட எம்ஜிஆர் மன்ற மாநாட்டில் அந்தச் செங்கோல் ஜெயலலிதாவால் எம்ஜியாருக்கு வழங்கப்பட்டது.


ஜெயலலிதா கவனமாக இருக்க வேண்டும். சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் அதிமுகவால் மதுரையில் நடத்தப்பட்ட பிரமாணமான கண்டனக் கூட்டத்தில் ஒபிஎஸ் அதே போன்ற செங்கோலை ஜெயலலிதாவிற்கு வழங்கினார்...

-oOo-

இரண்டு நாட்களாக, சுவிட்சர்லாந்து ஹெச் எஸ் பி ஸி வங்கியில் பணம் வைத்திருக்கும் இந்தியர்களின் பெயரை கூற வேண்டுமென்று தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்கப் போகிறேன். பின்னர் பூகம்பம்தான் என்று மிரட்டிக் கொண்டிருந்த வருண் காந்தி, இதோ அப்படி கேட்டே விட்டதாக நேற்று டைம்ஸில் செய்தி வெளியாகி உள்ளது.

வருண் காந்தியின் தந்தையான சஞ்ச்ய் காந்தி நான் பதினொராவது வகுப்பு படிக்கும் பொழுது பயிற்சி விமானத்தில் சாகசப் பயிற்சி செய்து கொண்டிருந்த பொழுது விமானம் கீழே விழுந்து இறந்து போனார். அவரது தாயாரும், இந்தியாவின் பிரதமரும் ஆகிய இந்திரா காந்தியின் உணர்ச்சிகளை படம் எடுத்துவிட வேண்டும் என்று குழுமியிருந்த புகைப்படகாரர்களை, பெரிய கறுப்பு கண்ணாடி அணிந்து வந்து இந்திரா ஏமாற்றினார்.

சஞ்சய் உடலைப் பார்க்க வ்ந்த இந்திரா அதிகாரிகளிடம் முதலில் கேட்டு வாங்கி தன்னுடன் வைத்துக் கொண்டது, சஞ்ச்ய் காந்தியின் கைக்கடிகாரம்!


'ஏன் இந்திரா சஞ்சயின் கைக்கடிகாரத்தை குறிப்பாக கேட்டு வாங்கி வைத்துக் கொண்டார்' என்பதற்கு அன்றைய பத்திரிக்கையாளர்களிடம் இருந்த ஒரெ யூகம் பற்றி வருண் காந்திக்கு தெரியுமா?

-oOo-

அவர்களைப் பற்றி யாரேனும் குற்றம் சாட்டினால், 'எங்கள் மீது தவறு இருந்தால் தூக்கில் போடுங்கள்' என்று அன்னாகுழுவினர் கூச்சலிடுகின்றனர். மற்ற அரசியல்வாதிகளும் முன்பு இதே வசனம்தானே பேசுவார்கள்!

ஆனால், அரசியல்வாதிகள் அன்னா ஹசாரே போல, 'திக்விஜயசிங்கிற்கு பைத்தியம் பிடித்து விட்டது' என்ற அளவிற்கு போக மாட்டார்கள். விமர்சனங்களைத் தாங்கும் பண்பு அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல, தங்களுக்கும் வேண்டும் என்று அன்னா குழுவினர் உணர்ந்ததாக தெரியவில்லை.

எப்படியோ, விரைவில் ஜன்லோக்பால் அளவிற்கு லோக்பால் வந்துவிடும். இந்தியாவின் துன்பங்கள் தீர்ந்துவிடும்!

இந்தியாவின் கஷ்டம் தீருகிறதோ இல்லையோ, அனில் அம்பானி, ரத்தன் டாடா அவர்க்ளை கைது செய்யும் நிலை ஏற்ப்பட்டால், அன்று 2ஜி வழக்கு முடிவுக்கு வந்து விடும் என்று நினைத்தேன். சுப்பிரமணியன்சுவாமி கூட அவர்கள் இருவரும் சிறைச்சாலை சுவரைப் பார்க்கும் நாள் வரும் என்று பேட்டியளித்தார். ஆனால் அது இனி நடக்காது போல!

2ஜி வழக்கு முடிவுக்கு வருகிறதோ இல்லையோ, கூடங்குளம் பிரச்சினை முடிவுக்கு வராதது போலத் தோன்றுகிறது. உள்ளாட்சித்தேர்தலுக்கு முன் தினம், நண்பர் ஒருவருடன் 'இடிந்தகரைக்கு' சென்றிருந்தேன்.

சுனாமியைப் பற்றி பேசுகிறார்கள், ஜப்பான் போல பாதிப்பில்லை என்கிறார்கள். ஏன் செர்னோபிலைப் பற்றி பேசவில்லை என்று புரியவில்லை.


'வரலாறு மிக முக்கியம்!'

மதுரை
06/11/11

4.11.11

கனிமொழி வழக்கில், ஜெயலலிதாவின் தலைவிதி!

கனிமொழிக்கு மீண்டும் பிணை மறுக்கப்பட்ட செய்தியில், விநோதமாக ஜெயலலிதாவும் கருணாநிதிக்கு இணையாக கவலை கொள்ள சாத்தியக் கூறுகள் உண்டு. 2ஜி வழக்கினை கவனித்து வரும் ஊடகங்கள் ஜெயலலிதா வழக்கின் மீதும் ஒரு கண் வைக்கலாம். ஜெயலலிதாவும் நாட்டின் தற்போதய சூழ்நிலை புரியாமல் ஒன்றிற்கு இரண்டு தடவை உச்ச நீதிமன்றத்தை அணுகி பலரின் பார்வையை தனது வழக்கின் பக்கம் ஈர்த்துள்ளார்.

கனிமொழிக்கு பிணை மறுக்கப்பட்டதை விட அத்ற்கான காரணங்களாக நீதிபதி எடுத்து வைக்கும் கருத்துகள் ஜெயலலிதா வழக்கோடும் பொருத்திப் பார்க்கப்படலாம். அவ்வாறான் ஒரு சூழ்நிலையில் கர்நாடக நீதிபதிக்கு ஜெயலலிதாவை விடுதலை செய்வது என்பது குற்றவாளி என தீர்ப்பதை விட கடினமான செயலாக இருக்கும்.

‘உனக்கும் வேண்டாம், எனக்கும் வேண்டாம்’ என்ற வகையில் இனி கருணாநிதிக்கும் ஜெயலலிதாவிற்கும் இடையில் அவர்களேயறியாமல் ஒரு போர்நிறுத்தச் சூழல் (truce) உருவாகலாம்.

-oOo-

அரசியல்வாதிகளை சுத்தம் செய்கிறேன் என்று உச்சநீதிமன்றம் கிளம்பியுள்ள சூழலில், நீதிமன்றங்களே புதிதாய் கிளம்பியுள்ள பிரச்னையில் கலகலத்துப் போய்விடும் போல உள்ளது. சென்னை நீதிமன்றத்தில் வெடித்துள்ள பிரச்னை, இறுதியில் தில்லி உச்சநீதிமன்றம் வரை பின்விளைவுகளை ஏற்ப்படுத்தலாம். தற்போதைக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் அனைவரும் அதிர்ந்து போய் உள்ளார்கள்.

அடுத்த ஒரு மாதம், உயர்நீதிமன்றத்திற்கு சோதனைக்காலம்!

-oOo-

சென்னை நீதிமன்ற களோபரங்களுக்கு இடையிலும், அண்ணா நூலகத்தை மாற்றுவதற்கு நீதிமன்றம் தடை விதித்தது மகிழ்ச்சி தரும் செய்தி. தலைமை செயலகம் திறப்புவிழாவில் அதற்கு கிடைத்த எதிர்மறை விளம்பரம் (negative publicity) தலைமைச் செயலகம் மாற்றப்பட்ட பொழுது பெரிய எதிர்ப்பினை மக்களிடையே தோற்றுவிக்கவில்லை. ஹிந்து கூட அம்மாவின் நோக்கம் அறிந்து சும்மா கிடக்கும் தலைமைச் செயலகத்தை என்ன செய்யலாம் என்று, கொஞ்சம் உள்நோக்கத்துடன் போட்டி நடத்தியது.

ஆனால், நூலகம் விடயம் பரவலான எதிர்ப்பினை ஏற்ப்படுத்தி விட்டது. ஊடகங்கள் ஏதோ தங்களது சுதந்திரத்தில் கைவைக்கப்பட்டுள்ளது போல துடித்தன. போதாதற்கு நீதிபதி விட சில மாதங்களுக்கு முன்னர் நூலகத்திற்கு சென்று பார்த்து வியந்துள்ளது, வழக்குரைஞர்களின் பணியினை எளிதாக்கியுள்ளது.

வழக்கு மேலும் விசாரணைக்கு முன்னரே, ஜெயலலிதா இந்த முயற்சியை கைவிட்டு விடுவார் எனறே நினைக்கிறேன்.

மதுரை
03/11/11

30.10.11

முக்குலம்தான் ஆளணும்…

மதுரை மக்கள் அனைவரையும் பதட்டமடைய வைக்கும் நாள் ஒன்று உண்டு என்றால் அது பசும்பொன் தேவர் பிறந்தநாள் கொண்டாட்டங்கள்தான். பரமக்குடி துப்பாக்கி சூட்டிற்கு பின்னால், பதட்டச் சூழல் இருக்காது என்று பார்த்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும் போல இருக்கிறது. பேருந்து கூரை மீதேறி பலர் பயணம் செய்யும் படத்தை நேற்று செய்தித்தாளில் பார்த்த போது காவல்துறை ‘வீரசிகாமணிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று இருந்தது.

இதே போன்ற ஒரு காரணத்திற்குதான், பரமக்குடி நிகழ்வின் பொழுது மதுரையில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

இன்றும் காய்கறி வாங்க வாகனத்தில் செல்கையில், எதிர்ப்படும் பிறந்த நாள் கொண்டாட்ட கும்பல்கள் அச்ச உணர்வையே ஏற்ப்படுத்துகின்றன.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் பலவித கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். முக்கியமாக, வேறு சமுதாயத்திற்கு எதிரான கோஷங்கள் எழுப்பக்கூடாது என்று…ஆனால், போன வாரம் சாலையில் பார்த்த ஆட்டோ ஒன்றின் பின்புறம் ஒட்டப்பட்டிருந்த போஸ்டரில் கொட்டை எழுத்துகளில் எழுதப்பட்டிருந்த வாசகம் ஒன்று சகாயத்தையும், மொத்த காவல்துறையையும் கேலி செய்வது போல இருந்த்தது. அந்த வாசகங்கள், ‘எக்குலமும் வாழனும். முக்குலம்தான் ஆளணும்

-oOo-

இத்தனை வருடங்கள் தேவர் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் இவ்விதமான பதட்ட சூழலில் கொண்டாடப்பட்ட பொழுது யாரும், ‘இப்படியெல்லாம் விமரிசையாக விழா தேவையா? என்று கேட்கவில்லை. இம்மானுவேல் சேகரன் குரு பூஜை என்று அதே முறையில் மற்றவர்கள் தொடங்கி, துப்பாக்கி சூட்டில் முடிந்தவுடனே ‘இப்படி விழாக்கள் எல்லாம் எதற்கு? என்று பலர் கிளம்புகின்றனர்.

இப்படித்தான், முன்பு எந்த எந்த சாதியை சேர்ந்தவர் பெயரில் எல்லாம் போக்குவரத்துக் கழகங்கள் தொடங்கப்பட்ட பொழுது யாரும் கேட்கவில்லை. தாழ்த்தப்பட்ட சாதியை சார்ந்த ஒருவர் பெயரில் போக்குவரத்து தொடங்கி கலவரத்தில் முடிந்ததும், ‘இது என்ன, போக்குவரத்து கழகங்களுக்கு சாதிவாரியாக பெயர்கள் என்று நியாயம் பேசினார்கள்.

ஏன், காந்தி மண்டபம், நேரு நினைவிடம், சிலைகள், சமாதிகள் என்றெல்லாம் வரிப்பணத்தை செலவழித்து ஏதேதோ அமைக்கப்பட்ட பொழுது யாரும் ஏன் என கேட்கவில்லை. மாயாவதி அம்பேத்கர் நினைவாக பூங்கா அமைத்தால் 500 கோடியா என்று கணக்கு பார்க்க ஆரம்பிக்கின்றோம்.

It seeems, there is still something fundamentally wrong with our attitude

-oOo-
  
பலரும் பலமுறை பேஸ்புக்கில் இணையவில்லையா, ட்வீட் செய்யவில்லையா என்று கேட்டு வந்தாலும், சோம்பேறித்தனம் அல்லது புதிய பழக்கத்திற்கு அடிமையாக வேண்டாம் என்று தவிர்த்தே வநதேன். ஆயினும் நேரமின்மையால் தொடர்ந்து பதிவு எழுத முடியாத சூழலில், ந்ம் மனதில் எழும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தட்வீட்டர் வசதியாக இருக்கிறது. எனவே ட்வீட்டரில் prabhuadvocate என்ற பெயரில் நேற்றிலிருந்து என்னை இணைத்துக் கொண்டேன். எனது ட்வீட்கள் சுவராசியமாக இருக்க் முயல்கிறேன்.

அரசியல் தலைவர்களின் ட்வீட்கள் சுவராசியமாக உள்ளன. எவ்வளவுதான் கவனாக இருப்பினும், பலரது மறுபக்கம் (Particularly, lighter side) ட்வீட்களின் வெளிப்படுவதை தடுக்க முடியாது எனத் தோன்றுகிறது. ஆனால், பிஜேபி ஆசாமிகள் ஏன் எப்பொழுதும் கோபமாக இருக்கின்றார்கள்?

-oOo-


நேற்று இரானிய இயக்குஞராகிய அப்பாஸ் கியாரஸ்டோமியின் 'The Wind will carry us'  என்ற படம் பார்த்தேன். அந்த அனுபவத்தை பதிய வேண்டும் என்ற விருப்பம்தான் ட்வீட் செய்ய கிளம்பியது!

அநியாயத்திற்கு மெதுவாக நகரும் திரைப்படம் என்றாலும், அருமையான காட்சியமைப்புகள். ஒவ்வொரு ப்ரேமையும் அப்படியா நிறுத்தினால், நேஷனல் ஜியாக்கிரபி புத்தகத்தில் வரும் புகைப்படம் போல இருந்தது. படம் முடிந்ததும் ஏதோ நாமும் ஒருவாரம் அந்த கிராமத்தில் வாழ்ந்தது போல இருந்தது.

நீங்களே பார்த்து புரிந்து கொள்ளுங்களேன்...

மதுரை
30/10/11

23.9.11

ஜான் (?) பாண்டியன்


1975ம் ஆண்டு என்று நினைக்கிறேன். ஐந்தாம் வகுப்பு வரை புறநகர் ஆரம்ப பள்ளியொன்றில் படித்து விட்டு பாளையங்கோட்டையில் ஆறாம் வகுப்பில் சேர்ந்திருந்தேன். எனது அண்ணனும், மாமாவும் இ.எஸ்.எல்.ஸி. எனப்படும் எட்டாம் வகுப்பு முடித்து ஒன்பதாம் வகுப்பில் இருந்தனர். உயர்நிலைப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் இருந்தாலும், ஒன்பதாம் வகுப்பிலிருந்துதான் சீனியர் மாணவர் என்ற கெத்தும், உண்மையிலேயே ‘ஹைஸ்கூல்’ மாணவன் என்ற ஹோதாவும் வரும்!

எனது அண்ணனும், மாமாவும் அவர்கள் வகுப்பு மாணவர்களின் பராக்கிரமங்களைப் பற்றி எங்களிடம் கூறுவதை வியப்புடன் கேட்டுக் கொண்டிருப்போம். முக்கியமாக, ஜான் பாண்டியன் என்ற மாணவனைப் பற்றிதான் அதிகம் கதைகள் இருக்கும். எவ்வளவு தூரம் உண்மையோ தெரியாது, ஆனால் சொல்லப்படும் விடயங்கள் சுவராசியமானவை.

‘அவன் ஆறடி உயரம் இருப்பான். ஸ்டிரைக் அப்ப எல்லாம் மாணவர்கள் ஊர்வலம் போனால், ஜான் பாண்டியன் தலை மட்டும் தனியே வெளியே தெரியும்’ என்பதில் ஆரம்பித்து ‘மூன்று தடவை ஒன்பதாம் வகுப்பில் மூன்று தடவை பெயில் ஆனதால் அட்டண்டன்ஸ் ரிஜிஸ்டரில் இருந்து அவன் பெயரை எடுத்து விட்டார்கள். ஆனாலும், வகுப்பில் வந்து உட்கார்ந்திருப்பான். வாத்தியார் ஏதும் கேட்க மாட்டார். எப்ப வேண்டும்னாலும் எந்திரிச்சு வெளியே போவான். எந்த கிளாஸில் கூட போய் உட்கார்ந்து கொள்வான்’ என்பது வரை இருக்கும்.

பள்ளிக்கூடத்தை ஒட்டியிருக்கும் மேல்நிலை தண்ணீர் தொட்டி வளாகம் ஒன்றில் வீட்டிலிருந்து சாப்பாடு கொண்டு வரும் மாணவர்கள் அமர்ந்து உணவருந்துவது வழக்கும். அப்படியான பொழுது ஒன்றில் திடீரென சில மாணவர்களுக்குள் அடிதடி! ‘ஜான் பாண்டியன், ஜான் பாண்டியன்’ என்று சிலர் கூவினார்கள். உயரமான அந்த மாணவரை பல மாணவர்கள் சுற்றி வளைத்திருந்தார்கள். அவ்வளவுதான் என்று நினைப்பதற்குள், தனது நீண்ட விரல்களில் வளர்த்திருந்த நகங்களால் ஆக்ரோஷமாக சுற்றிய அனைவரையும் தாக்கி, ஏதோ திரைப்பட சண்டை போல அடித்து துவம்சம் செய்து கொண்டிருந்தார்.

பின்னர் கால ஓட்டத்தில் ஜான் பாண்டியனை மறந்து விட்டாலும், பத்து ஆண்டுகள் கழித்து அதே நபர் தலைமையில் தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் திருநெல்வேலியில் ஊர்வலம் நடத்தியதாகவும், ஆர்.எம்.வீரப்பன் தேர்தலில் வெற்றி பெற பணியாற்றியதாகவும் ஊடகங்கள் வாயிலாக தெரிந்து கொள்ள நேரிட்டது.

அண்ணன் வகுப்பு மாணவரான அதே ஜான் பாண்டியன் போல என்று நினனத்துக் கொண்டேன்!

***
ஜான் பாண்டியன் பிறந்து வளர்ந்தது என்னவோ, கிறிஸ்தவ மதத்தில் என்றாலும் கூட பின்னர் இந்துவாக மதம் மாறி விட்டார். அதன் பொருட்டே அவரால், தாழ்த்தப்பட்டவர்களுக்கான தனித்தொகுதியில் போட்டியிட முடிகிறது.

இணைய விவாதங்களில் பரமக்குடி துப்பாக்கி சூடு விவாதங்களில் பங்கெடுக்கும் இந்துத்துவாவாதிள், ஜான் பாண்டியன் என்ற பெயருக்கும், கிறிஸ்தவ மிச‘நரி’களுக்கும் முடிச்சு போடுகிறார்கள். ஜான் பாண்டியன் தான் மட்டுமல்லாமல், பல கிறிஸ்தவ தாழ்த்தப்பட்டவர்கள் இந்துக்களாக மதம் மாறுவதில் உறுதுணையாக இருந்துள்ளார். கிறிஸ்தவ தாழ்த்தப்பட்டவர்களை சில சடங்குகளுக்குட்படுத்திய பின்னர் அவர்கள் இந்துவாக மாறிவிட்டதாக ஆரியசமாஜத்திடம் ஒரு சான்றிதழும் பின்னர் அவ்வாறு மதம் மாறியவரை தங்களது ஜாதிக்குள் இணணத்துக்கொண்டதாக ஜான்பாண்டியன் ஒரு சான்றிதழும் தருவார்கள். அவ்வளவுதான், சம்பந்தப்பட்டவர் அட்டவணை சாதியினருக்கான சலுகைகளைப் பெற தகுதி பெற்றவராகிவிடுவார்.

இவ்வாறு ஜான்பாண்டியன் அளித்த சான்றிதழை நான் பார்த்திருக்கிறேன். பலருக்கும் கொடுத்திருக்கலாம். சான்றிதழ் வாங்கிய ஒன்றிரண்டு நபர்கள் இ.ஆ.பணியில் கூட இருக்கலாம்!

கிறிஸ்தவர்கள் பலர் இந்துவாக மாற காரணமாக இருந்த ஜான்பாண்டியனை  நிலமை புரியாமல் இந்துத்வாவாதிகள் மிச‘நரி’களோடு முடிச்சு போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

***
இந்தக் குழப்பம் ஜான் பாண்டியன் என்ற பெயருக்கு மட்டுமல்ல


உண்மையில் படுகொலை செய்யப்பட்டவரின் பெயரை எப்படி உச்சரிப்பது என்று எனக்கும் தெரியாது...

***
பாளையங்கோட்டையில் எனது சீனியரின் பெயர் ஜான் பொன்னையா. அவருக்கும் ஜான் பாண்டியனுக்கும் உள்ள மற்றொரு ஒற்றுமை உயரம். அவரும் ஆறு அடிக்கு மேலே இருப்பார். சென்னையில் உள்ள ஒரு நண்பரைப் பார்க்க சென்றிருந்தாராம். அழைப்பானை அழுத்தியதும் வந்து கதவை திறந்த நண்பரின் மகனிடன், தன்னுடைய பெயரைக் கூறி இன்னார் வந்திருப்பாத சிறுவனின் அப்பாவிடம் கூறச்சொன்னாராம்.

எனது சீனியரை ஒருமுறை ஏற இறங்க பார்த்த சிறுவன் தன்னுடைய அப்பாவிடம் சென்று ‘Dad, a ‘TALL’ man calling himself ‘JOHN’’ ponniah has come to see you’ என்றானாம்.

மதுரை
23/09/11

7.9.11

நீதிமன்ற பாதுகாப்பும், இட ஒதுக்கீடும்!

வழக்கு ஒன்றில் கலந்து கொள்வதற்காக, கடந்த வருடம் உச்ச நீதிமன்றம் சென்றிருந்தேன். எனது வழக்கு அடுத்த நாள்தான் என்றாலும், மூத்த வழக்குரைஞருடன் வழக்கு பற்றி விவாதிக்க முன் தினமே நீதிமன்றம் சென்றேன். ’மெட்டல் டிடக்டர்’, ஸ்டென் கன் சகிதமான காவலர்கள் என்று அனைவரையும் வாயிலிலேயே முழுமையாக சோதித்த பிறகே உள்ளே அனுப்பினர்.சாதாரண உடையில் இருந்ததால், நானும் பொதுமக்கள் செல்லும் வாயில் வழியாக செல்ல முயன்றேன். மூத்த வழக்குரைஞரால், ‘ஒரு குறிப்பிட்ட வழக்கிற்காக என்னை அனுமதிக்குமாறு’ வேண்டிய சீட்டு என்னிடம் இருந்தது. ஆனால் வாயிலில் இருந்தவர்கள் அந்த வழக்கு எண்ணை தங்களது கணிணியில் தட்டிப் பார்த்து, சீட்டில் குறிப்பிடப்பட்டிருந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு விட்டது எனவும், அதனால் நான் உள்ளே செல்வதில் அர்த்தமில்லை என்று கூறி என்னை திருப்பி அனுப்பி விட்டனர்.


நான் வழக்குரைஞர் என்றால், அடையாள அட்டை எங்கே என்றனர்.


வழக்குரைஞராக 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்தாலும், நான் இதுவரை ஒரு அடையாள அட்டை (identity card) கூட வைத்துக் கொண்டதில்லை.


அட! இப்படி ஒரு பாதுகாப்பா என்று வியந்தேன்.


***

மறுநாள் வழக்குரைஞர் உடைகளுடன் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றேன். சக வழக்குரைஞர் ஒரு கூட வர, வழக்குரைஞர்களுக்கான வாயில் வழியாக உள்ளே சென்றேன். காவலர்கள் இருந்தனர். ஆனாலும், நான் யார் என்று ஒருவரும் வினவவில்லை. அடையாள அட்டை இருக்கிறதா என்றும் கேட்கவில்லை.


முக்கியமாக, நான் அணிந்து சென்ற அங்கிக்குள்ளே ஒரு ஏ.கே.47ஐ மறைத்து எளிதில் எடுத்துச் செல்ல முடியும். ஆயினும் என்னை யாரும் துழாவவில்லை!


’போங்கையா, நீங்களும் உங்கள் பாதுகாப்பும்’ என்று நினைத்துக் கொண்டேன்!


***

பத்ரியின் ’எண்ணங்கள்’ வலைப்பதிவில் பின்னூட்டமிட்டுள்ள நண்பர் ஒருவர், ”The idea of Reservation policy and it's time frame is conveniently forgotten here. Any reservation policy should not go beyond 10 years. but we have been practicing this policy for more than 60 years in states like TN. now, only those who r economically backward [poor class] are the ones need attention” என்ற ஒரு கருத்தை தெரிவித்து உள்ளார்.


நமது நாட்டில் கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு எனப்படும் இடப்பங்கீடானது அரசியலமைப்பு சட்ட பிரிவு 15 மற்றும் 16ன் அடிப்படையில் வழங்கப்படுகிறது. அதற்கு எவ்விதமான கால வரையறையும் கிடையாது.


பாராளுமன்ற, சட்டமன்ற, நகர்மன்ற, பஞ்சாயத்து தேர்தல்களில், அட்டவணை பிரிவினருக்காக தனித் தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றன. அவ்விதம் தனித் தொகுதி ஏற்ப்படுத்துவதற்குத்தான் பிரிவு 334ன் கீழ் காலவரையறை உள்ளது.


ஆயினும் பல சமயங்களில் ஏதோ இடப்பங்கீட்டிற்கும் காலவரையறை உள்ளது போன்ற தவறான தகவல் பரிமாறப்படுகிறது. பலராலும் படிக்கப்படும் எண்ணங்கள் போன்ற நம்பகத்தன்மை வாய்ந்த பதிவுகளில் இவ்வாறு தவறான தகவல்கள் இடம் பெறுவது துரதிஷ்டவசமானதாகும்.


மதுரை
07/09/11

30.8.11

அன்னா வழியும் அண்ணா வழியும்
இந்த நடவடிக்கை, ஒரு பாராட்டத்தக்க நோக்கம்தான். ஆனால், பல்வேறு வகுப்பைச் சார்ந்த மக்களின் ஒரு அமைப்பு ............விதிமுறைகளை வகுக்கும் வண்ணம் தாங்களே இவ்வாறு சட்டமியற்றிக் கொள்ள முடியுமா என்பதுதான் இங்கு ஆழமாக பரிசீலிக்க வேண்டிய ஒரு விடயம்

மேற்கண்ட வாக்கியம் தாங்கள் கூறுவது போல ஜன்லோக்பால் சட்டம் ஒன்றை இயற்றினால்தான் ஆயிற்று, என்று வலியுறுத்தும் அன்னா ஹசாரே குழுவின் நடவடிக்கையை பற்றி யாரோ கூறியது என்று நினைத்தால்...அது தவறு!


நீதிமன்றம் இவ்வாறு மக்கள் குழு ஒன்று சட்டமியற்றிக் கொள்ள முடியுமா என்று வினவிய நடவடிக்கை, ஒரு திருமண முறை!

ஆம், திருமண முறைதான். 1934ம் ஆண்டில் அப்பொழுதான் முளைவிடத் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தினர் நடத்தி வைத்த முதல் திருமணம் செல்லத்தகுந்ததா என்ற கேள்விதான் தெய்வானை ஆச்சி வழக்கில் எழுப்பப்பட்டது. அந்த வழக்கின் தீர்ப்பில்தான், உயர்நீதிமன்றம் இவ்வாறு ‘சுயமரியாதை இயக்கம்’ என்று கூறிக்கொள்ளும் ஒரு அமைப்பு தானே ஒரு திருமணமுறையை ஏற்ப்படுத்தும் வண்ணம் தனக்குத்தானே சட்டமியற்றிக்கொள்ள முடியுமா என்று கேட்டது.

இறுதியில் சுயமரியாதை திருமண முறை சட்டப்படி செல்லாது என்று தீர்ப்பளித்தது.


‘பாராட்டத்தக்க நோக்கம் கொண்டவை’ என்று உயர்நீதிமன்றத்தால் புகழப்பட்டாலும், இவ்வாறு அமைப்பு ஒன்று, தானே சட்டமியற்ற இயலாது என்று நிராகரிக்கப்பட்டதால், சுயமரியாதை இயக்கத்தில் பெரிய ஆதங்கமேற்ப்பட்டது. மேலும் முதலாவது தீர்ப்பு கூறப்பட்ட 1953ம் ஆண்டு போல அல்லாமல் 1966ல் சுயமரியாதை இயக்கம் தமிழகத்தில் மிகப்பெரிய மக்கள் சக்தியாக உருவெடுத்திருந்தது. அதன் அரசியல் தலைவராக முன்னிறுத்தப்பட்ட அண்ணாதுரை  ஏறக்குறைய பெரும்பான்மை தமிழக மக்களின் ஆதரவைப் பெற்றிருந்தார்.ஆனால், அண்ணாதுரை ஒரு வருடம் காத்திருந்தார்.

அடுத்த ஆண்டே அவரது திராவிட முன்னேற்றக் கழகம் தமிழக ஆட்சியை கைப்பற்றியது. தமிழக முதல்வராக பதவியேற்ற அண்ணாவின் அரசினால் முதலில் இயற்றப்பட்ட சட்டத்திருத்தம், சுயமரியாதை திருமணத்தையும் ஒரு திருமணமுறையாக அறிமுகம் செய்து பிரிவு 7A ஐ இந்து திருமணச் சட்டத்தில் ஏற்ப்படுத்தியதுதான் (Act 21 of 1967)

அது அண்ணா வழி!

அன்னா வழி?

மக்களாட்சியில் மாற்றத்திற்கு வழியில்லையோ?மதுரை
30/08/11