Showing posts with label law. Show all posts
Showing posts with label law. Show all posts

17.10.09

சோனியாவை முந்திய கருணாநிதி!





ஆனந்த விகடன், குமுதம் மூலம் தமிழ் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான பத்தி எழுத்தாளரான ஞாநி, தனது இணையதளத்தில் அளித்த ஒரு பதிலில் மேற்கண்ட கருத்தினை தெரிவித்துள்ளார்.

ஞாநி சட்டம் பற்றி எழுதும் பத்திகளில், ‘முழுமையான ஆய்வினை மேற்கொள்கிறாரா?’ என்ற எனது சந்தேகம் மேலும் வலுப்பெறும் வண்ணம், மேற்கண்ட பதிலிலும், தவறான சில கருத்துகளை கூறியுள்ளார்.

என்னைப் பொறுத்தவரை பதில் முழுவதுமே தவறானது. நமது அரசியலமைப்பு சட்டம் வருவாய் தரக்கூடிய அரசுப் பணியில் இருப்பவர்கள் மட்டுமே பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவதையோ அல்லது பதவி வகிப்பதையோ தடை செய்கிறது. (Art 102(1) (a) & 191) மற்ற பணி அல்லது சுயதொழில் மூலமாக வருவாய் ஈட்டுபவர்கள் பதவி வகிக்க எந்த தடையுமில்லை.

தனியார் பணி என்று கூட இல்லை, நகராட்சியில் கணக்காளராக உதவி கணக்காளராக பணியாற்றும் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்கு தடை இல்லை என்று உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பில் கூறியுள்ளது. (1985 (1) SCC 151 Ashok Kumar Bhattacharyya Vs Ajoy Biswas)

ஏன், தொழிலாளர் காப்பீட்டு நிறுவனத்தில் (Employees State Insurance Corporation ESI) மருத்துவராக பணியாற்றுபவர் தேர்ந்தெடுக்கப்பட்டதையும் உச்ச நீதிமன்றம் ESIல் பணிபுரிவது அரசுப் பணியல்ல என்று கூறி அனுமதித்தது.

அடுத்த தவறு, இந்த தடையின் நோக்கம், ஞாநி கூறுவது போல ‘எம்.பி. பணி என்பது மக்களுக்கான சேவை’ என்பது அல்ல. மாறாக சட்டமன்ற ஊழியராக இருப்பவரின் கடமைகளை அவரது சொந்த நலன்கள் பாதிக்கக் கூடாது என்பதுதான் என்றும் மேற்கண்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பில் சுட்டிக் காட்டப்படுகிறது.

மூன்றாவது தவறு தேவையில்லாமல், அம்பேத்கரையும் துணைக்கு அழைத்தது. மேற்கண்ட தடையினைப் பற்றிய எவ்விதமான விவாதமும் இல்லாமலேயே அரசியலமைப்பு சட்ட வரைவுக் குழு அதனை ஏற்றுக் கொண்டது. எனவே அம்பேத்கர் அந்தப் பிரிவினைப் பற்றி என்ன கருதினார் என்பதும், ஞாநி எங்கே படித்தார் என்று விளங்கவில்லை.

எனவே சட்டமன்ற உறுப்பினர் பதவியினை ஒருவர் இழப்பதற்கு, அவருக்கு வேறு வருவாய் இருந்தால் மட்டும் போதாது. அந்த வருவாய் அரசுப் பணியில் இருப்பதால் ஈட்டப்பட்டால் மட்டுமே, தகுதியிழக்க முடியும்!

-oOo-


அதே வலைத்தளத்தில் காணப்படும் மற்றொரு பதில்!

எனக்கென்னவோ இந்தப் பதிலுக்காகவே, கேள்வி வடிவமைக்கப்பட்டதாக தோன்றுகிறது. இந்த பதிலினை எழுதியது தங்கபாலு என்றால் தவறு என்று கூறியிருக்க மாட்டேன். ஆனால், வாசகர் தெளிவு பெறுவதற்காக இந்தப் பதிலினை கூறும் தோரணையில் ஞாநி எழுதியிருப்பதால், சில விளக்கங்களை அளிக்க வேண்டியதிருக்கிறது.

இந்திய விடுதலைக்கு மகாத்மா காந்திதான் காரணம் என்று கூறுவதே எவ்வளவு தூரம் பொருத்தமானது என்று தெரியவில்லை. மவுண்பேட்டன்தான் காரணம் என்று கூறினால் அபத்தம். குடும்ப வன்முறை சட்டம் மகாத்மா வகை என்றால், தகவல் அறியும் சட்டம் மவுண்ட்பேட்டன் ரகம்!

தகவல் அறியும் சட்டத்தின் வரலாறு 1966ம் ஆண்டு இந்தியாவும் கையெழுத்திட்ட ‘சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச ஒப்பந்தம்’ (International Covenant on Civil and Political Rights) என்பதில் இருந்து தொடங்குகிறது, அடுத்து 1975ம் ஆண்டில் இந்திராகாந்தி தேர்தல் வழக்கில் ராஜ் நாராயணன் கேட்ட சில விபரங்களை அளிக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம், இந்தற்கான தேவை வலுப்பெற்றது.

பின்னர் பல்வேறு முயற்சிகள். உச்ச நீதிமன்றமும் தனது தீர்ப்புகளில் சர்வதேச ஒப்பந்தங்களை மதிப்பதின் அவசியத்தினை வலியுறுத்தியது (AIR 1997 SC 3011, AIR 1999 SC 625)

2000ம் ஆண்டில் வாஜ்பாய் அரசால் Freedom of Information Bill 2000, தாக்கல் செய்யப்பட்டது 2002ம் ஆண்டு சட்டமாக நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்றாலும், சில குறைபாடுகளால் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

ஆயினும் அந்த காலகட்டத்திலேயே, ராம் ஜேத்மலானி அரசு உத்தரவு மூலம் தகவல்களை பெற வழி செய்தார். ஆனால் அதிகாரிகளின் ஒத்துழையாமையால் அதுவும் முழுமை பெறவில்லை.

இறுதியில், மன்மோகன்சிங் பிரதம மந்திரியானதும், தற்பொழுதுள்ள தகவல் அறியும் சட்டம்’2005 நிறைவேற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் சோனியாவின் பங்கு, அவர் தலைமையில் இயங்கிய தேசிய ஆலோசனைக் குழு (National Advisory Council) இந்த சட்டதினை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரை செய்தது.

-oOo-

இந்தியாவிற்கு முன்னதாகவே 55 நாடுகள் இந்த சட்டத்தினை நடைமுறைக்கு கொண்டு வந்து விட்டன. முக்கியமாக பாக்கிஸ்தானில் 2002ல் அவசர சட்டம் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டது. எனவே, இந்தியாவில் இந்த சட்டமானது காலத்தின் கட்டாயம் என்றுதான் கூற முடியுமே தவிர, சோனியாவுக்கு இதற்கான பாராட்டுதலை ஒரு அரசியல்வாதி தெரிவிக்கலாம்....பத்திரிக்கையாளர் தெரிவிக்க முடியாது.

ஞாநிக்கு உவப்பில்லாத மற்றொரு செய்தியும் இருக்கிறது. தமிழ்நாட்டில் தகவல் அறியும் சட்டம் 1997ம் ஆண்டு கருணாநிதி அரசால் இயற்றப்பட்டு அமுலில் இருந்து வருகிறது. தமிழக தகவல் அறியும் சட்டம்தான் இந்தியாவின் முதல் சட்டம். 1998ம் ஆண்டில் கோவாவில் இயற்றப்பட்டது. பின்னர்தான் மற்ற பல மாநிலங்களில்.

சோனியாவுக்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்னரே கருணாநிதி, தகவல் அறியும் சட்டத்தினை இங்கு நடைமுறைப்படுத்திவிட்டார் என்பதற்காக ஞாநி கருணாநிதிக்கு பூச்செண்டை கொடுப்பாரா?

மதுரை
17/10/09

ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் ஏன், விளையாட்டு மூலம் வருவாய் ஈட்டும் Professional Sportsperson களை தடை செய்யும் விதி ஏற்ப்படுத்தப்பட்டது தெரியுமா?






10.7.09

பெண், பாவமா?

‘டோண்டு ராகவன்’ என்ற வலைப்பதிவாளர் தனது ‘ யாருக்கும் வெட்கமில்லை - SITA is ultravires of the Constitution of India’ என்ற தலைப்பிட்ட வலைப்பதிவில் கீழ்கண்ட கேள்வியினன எழுப்புகிறார்,


விபசார ஒழிப்புச் சட்டம் விபசாரிகளை மட்டும் தண்டிக்கிறது. கொழுப்பெடுத்துப் போய் அவர்களிடம் செல்லும் வாடிக்கையாளர்களை மட்டும் விட்டு விடுகிறது.
.................................. நான் இப்போது வைக்கும் இன்னொரு கேள்வி. இச்சட்டம் பால் அடிப்படையில் பாகுபாடு (sexual discrimaination) செய்து பெண்ணை மட்டும் தண்டிக்கிறது. இது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. ஆகவே இச்சட்டமே செல்லாது. இவ்வாறு யாராவது ரிட் பேட்டிஷன் போட்டால் வெற்றி பெருமா?


திரு.ராகவனது கேள்வியினை குறித்து 2003ம் ஆண்டு மரத்தடி மற்றும் ராகாகி குழுமங்களில் நான் எழுதிய கட்டுரை ஒன்று அலசுகிறது...அதனை இங்கு மீண்டும் பதிவது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்...

***
கடந்த வாரம் பார்த்துக் கொண்டிருந்த திரைப்படக் காட்சியொன்றில் கதாநாயகன் பிரபு ‘ஸில்க்’ ஸ்மிதாவை கைது செய்ய வேண்டும் என்று சொல்லி காவலரை ஸ்மிதாவின் வீட்டுக்கு அழைத்து வருகிறார். அங்கே ஸ்மிதாவின் அறைக்குள் இருந்து அவரோடு வெளியே வருபவர் பிரபுவின் மாமாவான ராதாரவி! காவலர் அவர்களை விபச்சார குற்றத்திற்காக கைது செய்யப் போவதாக சொல்ல அதற்கு ராதாரவி ஏதோ கேட்க, அந்த ய்வாளர் கூறுகிறார், "திருமணமாகாத ஒரு ஆணும் பெண்ணும் தனியறையில் தகாத முறையில் இருந்தாலே அது விபச்சாரம்தான்"

கதைப்படி அந்தக் காவலருக்கு எப்படியாவது ராதாரவியை கைது செய்ய வேண்டும். எனவே அப்படி கூறுகிறார் என்று வைத்துக் கொள்ளலாம் என்றாலும் பலருக்கும் இந்த விஷயத்தில் சந்தேகங்கள் உண்டு என அறிகிறேன். அதே போல அடிக்கடி திரைப்படங்களில் பேசப்படும், 'விபச்சாரத்தில் பெண்ணுக்கு மட்டும்தனா தண்டனை. ஆணுக்கு இல்லையா?' என்ற வசனமும் குழப்பத்தை ஏற்படுத்தும் வண்ணம் இருக்கிறது.

முதலிலேயே சொல்லி விடுகிறேன். விபச்சாரம் என்பது இந்தியாவின் எந்தச் சட்டத்திலும் குற்றம் என்று சொல்லப்படவில்லை. ஒரு ஆணும் பெண்ணும் தாங்களாகவே இசைந்து உறவு கொள்ளும் பட்சத்தில் எந்தவித குற்றமும் இல்லை. னால் சிறிது கவனம் தேவை. ஏனெனில் பெண்ணுக்கு பதினாறு வயதுக்கு குறைவான பட்சத்தில், பெண்ணின் இசைவு இருந்தாலும் அது பாலியல் பலாத்கார குற்றமாகும்.

சரி, விபச்சாரம் என்பது, 'ஒரு பெண் பணத்திற்காக அல்லது பொருட்களுக்காக உடலுறவுக்கு இசைவது' இதுவும் குற்றமல்ல. குற்றம் எங்கு வருகிறது என்று சொல்வதற்கு முன்னர் ஒரு சிறு குறிப்பு. விபச்சாரத்தின் மூலம் சம்பாதித்த பணம் வருமான வரிக்கு உட்பட்டது. சமீபத்தில் ஆஸ்திரேலியாவின் ஒரு விபச்சார விடுதி பங்குச் சந்தையில் ஈடுபட்டு பணம் முதலீட்ட அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், ஆஸ்திரேலிய விவகாரம் இந்தியாவில் சாத்தியமல்ல. ஏனெனில் விபச்சார விடுதி நடத்துவது என்பது இங்கு குற்றமாகிறது. இந்திய குற்றவியல் சட்டம் (Indian Penal Code'1860) என்ற குற்றங்களையும் அவற்றிற்கான தண்டனைகளையும் வரையறுக்கும் ஒரு சட்டம் இருப்பது அனைவரும் அறிந்தது. இந்தச் சட்டம் 1860ம் ண்டு இயற்றப்பட்ட சட்டமாதலால், அதன் பின் பெருகிப் பரவியுள்ள புதியவகை குற்றங்களுக்கு என தனிப்பட்ட சட்டங்கள் இயற்றப்படுதல் அவசியமாகிறது.

உதாரணமாக போதைப் பொருட்களின் வீச்சமும், பயங்கரவாத செயல்களும் அறியப்படாத காலம் அது. எனவேதான், செய்தித்தாள்களில் அடிபடும் ‘கமிஷனர் கருப்பன் புகழ் எண்டிபிஎஸ், தடா, பொடாவெல்லாம் இந்திய தண்டனைச் சட்டத்தில் இல்லாமல் தனியாக புழங்குகிறது. விபச்சாரமும் சமுகத்தால் அங்கீகரிக்கப்பட்டு ஒரு வாழ்க்கை முறையாகவே பழங்காலத்தில் கருதப்பட்டது. வாழ்க்கை முறையாக மட்டுமேயிருந்த விபச்சாரம், பின்னாளில் பெரும் வியாபாரமாக, பல நாடுகளும் சம்பந்தப்பட்ட பெண்களுக்கு எதிரான மிகப்பெரிய சுரண்டலாக உருவெடுத்த காரணத்தால்ல் அதனை தடுக்கும் பொருட்டு அமெரிக்காவில் 1950ம் வருடம் ஒரு பன்னாட்டு மாநாடு நடைபெற்றது. அந்த மநாட்டில் கையெழுத்திடப்பட்ட ஒப்புதலின் அடிப்படையில் இந்தியாவில் 1956ம் ஆண்டு இவ்வாறு பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி சுரண்டுவதை (trafficking) தடுக்கும் எண்ணத்துடன் நிறைவேற்றப்பட்ட சட்டம்தான் The Suppression of Immoral Traffic Act'1956.

எஸைடி சட்டம் என்று நீதிமன்றங்களில் அழைக்கப்படும் இந்தச் சட்டத்தில் விபச்சாரம் என்பது குற்றமல்ல. ஆனால் விபச்சார விடுதி நடத்துவது, அதற்கு உதவி செய்வது குற்றம். வீட்டினை தெரியாத நபர்களிடம் வாடகைக்கு விடுகையில் சிறிது கவனம் தேவை. அதுவும் நல்ல வாடகையென ஆசை காட்டும் தரகரை நம்பி இங்கே வீட்டை வாடகைக்கு விட்டு வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு இந்த ஆபத்துக்கு நிகழ வாய்ப்பு அதிகம்.

சரி, எது விபச்சார விடுதியாகிறது? எந்த ஒரு பகுதியும் விபச்சாரத்துக்கு பயன்படுத்தப்பட்டு அந்த விபச்சாரத்தின் பலன் வேறு நபருக்கோ அல்லது ஒன்றுக்கு மேலான விபச்சாரிகள் தங்களுக்கிடையே பலனடைந்தலோ அது விபச்சார விடுதியாகிறது. புரிகிறதா? அதாவது ஒரு பெண் வேறு யாருடைய துணையுமின்றி தனியாக தங்கியிருந்து விபச்சாரத்தில் ஈடுபட்டால் அது விபச்சார விடுதியாகாது. அப்படி செய்வதில் குற்றமுமில்லை. ஆனால் இரு பெண்கள் தங்கியிருந்து தங்களுடைய வருமானத்தைப் பகிர்ந்து கொண்டால் அது குற்றமாகிறது. மேலும் ஒரு விபச்சாரியை அண்டி அவர் விபச்சாரம் மூலம் சம்பாதிக்கும் பணத்தில் வாழும் நபர், பதினெட்டு வயது நிரம்பியர் என்றால் அதுவே ஒரு குற்றமாகிறது. இதில் மகன், மகள் கூட அடக்கம்.

இதிலிருந்தே இந்தச் சட்டத்தின் நோக்கம் விபச்சாரத்தை தடுப்பதல்ல மறாக விபச்சாரம் செய்பவரைத் தவிர வேறு நபர்கள் பலனடைவதை தடுப்பதே என்பதை அறியலாம். எனவே நமது பத்திரிக்கைகள் 'விபச்சாரத் தடை சட்டம்' என்று குறிப்பிடுவதே தவறான பதமாகும். ஆங்கில பெயர் அப்படி அர்த்தம் கொள்ளவே கொள்ளாது.

எனவே இங்கு பணமளிக்கும் நபர் எந்தவித குற்றமும் செய்யவில்லை. எனவேதான் ஆணுக்கு தண்டனையில்லை. ஆனால் அவரும் ஒரு சந்தர்ப்பத்தில் குற்றவாளியாக முடியும். அதாவது, விபச்சாரம் நடைபெற்ற இடம் கோவில், கல்விக்கூடம், விடுதி, மருத்துவச்சாலை போன்றவற்றிற்கு 200 மீட்டர் சுற்றளவுக்குள் இருக்கையில் இரண்டு நபர்களும் குற்றவாளியாகின்றனர்.

இதில் ஒரு வேடிக்கை. திரைப்படங்களில் வில்லன்களை கைது செய்வது வரைதான் காண்பிக்க முடியும். அவர்கள் செய்த குற்றங்களை நீதிமன்றத்தில் நிரூபிப்பது என்பது பெரிய தலைவலி! விபச்சாரம் நடந்ததற்கு சாட்சிக்கு என்ன செய்வது. காவலர்களே கஸ்டமர்களை ஏற்பாடு செய்ய வேண்டியதுதான். அப்படிப் போன கஸ்டமர் மீது ஒரு சென்னை நீதிபதி என்ன பொறாமையாலோ ஏகக் கடுப்பாகி, 'நீயும்தான்ன் தவறு செய்திருக்கிறாய். போ! சாட்சிக்கூண்டிலிருந்து குற்றவாளிக்கூண்டுக்கு' என்று விட்டார். பின்னர் மனிதர் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி வெளியே வரவேண்டியதாகிவிட்டது (1972 MadLW (Cri) 211).

காவலர் புலன் விசாரணையை கூர்ந்து கவனிப்பவர்களுக்கு இந்த 'போலி கஸ்டமர்க'ளே போலி என்பது புரியும். உண்மையான கஸ்டமர்களை சாட்சித் தேவைக்காக இப்படி போலியாக்குவது உண்டு. இரண்டாவது உண்மையான கஸ்டமர்களை விட்டு....காவலர் கவனிப்பில் இருக்கும் நபர்களை போலிச்சாட்சியாக்குவதும் உண்டு.

விபச்சார விடுதியில் இப்படி ஆயிரம் பிரச்னைகள் இருக்க காவலர்கள் தினசரி எப்படி அநேகரை விபச்சார குற்றத்திற்காக நீதிமன்றம் கொண்டு வருகிறார்கள்? இருக்கவே இருக்கு இன்னும் ஒரு குற்றம். யாராவது பொது இடத்தில் ஒரு நபரை விபச்சாரத்திற்காக கண் ஜாடையில் அழைத்தால் கூட அது ஒரு குற்றம். கவனிக்கவும் இங்கும் ண் குற்றவாளியல்ல.

காவலர் யாராவது உங்களுக்கு நண்பராக இருக்கும் பட்சத்தில் அவர்கள் தினமும் எழுதிக் குவிக்கும் முதல் தகவல் அறிக்கையை (FIR) பாருங்கள். எல்லாவற்றிலும் ஒரே வாசகம்தான் இருக்கும், "நான் பஸ்ஸ¥க்காக நின்று கொண்டிருந்தேன். அப்போது பார்த்தால் அடையாளம் காட்டக் கூடிய பெண் என் அருகே வந்து, 'வருகிறாயா ஜாலியாக இருக்கலாம்' என்று அழைத்தாள். நான் உட்னே அங்கிருந்த காவலரிடம் புகார் செய்தேன்" இதற்கு மேல் வசனம் கண்டுபிடிக்க அவர்களது கற்பனை வளம் இடம் கொடுக்காது. அந்த "நான்" பெரும்பாலும் ஏற்கனவே பார்த்த காவலர்களின் கவனிப்பில் இருக்கும் நபர்கள்.

இது தவிர விபச்சார விடுதிகளில் விருப்பத்துக்கு மாறாக இருக்கும் பெண்கள், சிறுமிகள் (21 வயதுக்கு குறைவானவர்கள்) ஆகியோரை மீட்க தனி நடைமுறைகள் இருக்கின்றன. நீங்கள் யாருக்காவது உதவ விரும்பினால் சம்பந்தப்பட்ட மாஜிஸ்டிரேட்டிடம் ஒரு மனு கொடுங்கள் போதும். ஆனால், மும்பையில் மிகப் பிரபலமான ஜி..ஆர்.கெய்ர்னார் போன்றவர்களே இதில் ஆர்வமாக ஈடுபட்டு அதிக பலனின்றி சோர்ந்து விட்டனர். விபச்சார விடுதிகள் சமுதாயம் முழுமைக்கான பிரச்னை....இதில் சட்டம் என்ன சாதித்து விடும் என்பது புரியவில்லை...

பி.கு. இக்கட்டுரை எழுதி ஒரே வாரத்தில், நியூசிலாந்து பாராளுமன்றம் ‘விபச்சார விடுதிகளை’ குற்றமென்ற சட்ட ஷரத்தினை ரத்து செய்யும் சட்டம் குறைந்த பெரும்பான்மையில் நிறைவேற்றியது. ஆஸ்திரேலியாவைப் போலவே நியூசிலாந்திலும் தற்போது விபச்சார விடுதிகள் நடத்துவது குற்றமல்ல. விபச்சாரத்துக்கு எதிராக அரசு சட்டம் மூலம் நடத்திய போரின் தோல்வி என இதைக் கூறலாமா?

இன்றைய (24.08.03) சண்டே டைம்ஸில் இணையக கருத்துக் கணிப்பு ‘விபச்சாரம் அனுமதிக்கப்படவேண்டுமா?’ என்பது. 68 சதவீதம் ஆம் என்கிறனர். ஆனால் ‘should prostitution be legalized?’ என்ற டைம்ஸின் கேள்வி தவறு!

3.5.09

சு.சுவாமியின் வெற்றி!

ஸ்ரீதரன் : இதுவரை உச்ச நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் நீங்கள் எத்தனை வழக்குகள் தாக்கல் செய்துள்ளீர்கள்?

சுசுவாமி : எண்ணிலடங்காதது (I have lost count). ஆனால் அவையனைத்திலும் நான் வென்று விட்டேன். அவையனைத்தும் பொதுநல வழக்குகள்
. சுப்பிரமணியன் சுவாமி, சிபி (sify) இணையதள அரட்டையில்...

-oOo-

ஆமாம் வென்றுதான் விட்டார்...

22/12/03 தேதியிட்ட ஏசியன் டிரிபியூன் (Asian Tribune) இதழில் வெளிவந்த ‘சுவாமி, சிறீலங்கா தமிழ் அகதிகளுக்காக மற்றொரு வழக்கினை வென்றெடுத்துள்ளார் (Swamy wins another legal battle for Sri Lankan Tamil Refugees)’ என்ற தலைப்புச் செய்தியின்படி, வென்றுதான் விட்டார்.

அட! இலங்கைத்தமிழ் அகதிகளுக்காக அப்படியென்ன சட்ட சிக்கலை தீர்த்து விட்டார் என்ற ஆர்வம் ஏற்படாமல், வெறுமே செய்தியை மட்டும் படித்தால் சுவாமி தனது எண்ணிலடங்கா பொதுநல வழக்கு வெற்றிகளில், இந்த ‘வெற்றி’யையும் சேர்த்துக் கொள்வது நியாயமாகத்தான் இருக்கும்.

ஆனால் உண்மை நிலவரம் என்ன என்பது, அதே செய்தியில் கொடுக்கப்பட்டிருக்கும் வழக்கின் தீர்ப்பினையும் படித்தால்தான் புரியும்.

வழக்கம் போலவே இந்த முறையும் சுவாமி தன்னை ஒரு ‘நன்கு அறியப்பட்ட அரசியல்வாதியாகவும், ராஜதந்திரியாகவும் (statesman)’ மதராசு நீதிமன்றம் முன்பு அறிமுகப்படுத்திக் கொண்டு, ‘2003-04ம் ஆண்டிலும் அனைத்து உயர் கல்வி நிலையங்களிலும் (கல்லூரிகள்) தமிழகத்திலுள்ள சிறீலங்கா தமிழ் அகதி மாணவர்களுக்காக தனியே இடங்களை உருவாக்கி, அவர்களுக்கு உயர்கல்வி பயிலும் வாய்ப்பினை உருவாக்கித் தர வேண்டும்’ என்ற பரிகாரம் வேண்டி, பேராணை மனு எண் 26463/03 என்ற வழக்கினை தாக்கல் செய்கிறார்.

அதாவது தமிழக அரசு தானாகவே 1996ம் ஆண்டு முதல் கல்லூரிகளில், அவைகளில் அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கும் அதிகமாக இடங்களை உருவாக்கி அவற்றை சிறீலங்கா தமிழ் அகதிகளுக்கு ஒதுக்கி வந்ததாகவும், 2003ம் ஆண்டிலிருந்து அந்த ஒதுக்கீடு (reservation) நிறுத்தப்பட்டதால் அதனை தொடர வேண்டுமென்று தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டுமென்றும் வழக்கு.

எந்த ஒரு சட்டரீதியிலான அல்லது நிர்வாக ரீதியிலான ஆய்வினையும் மேற்கொள்ளாமல், வெறுமே இந்துவிற்கு எழுதும் ஆசிரியருக்கான கடிதம் பாணியில் அமைந்த சுவாமியின் மற்றொரு பேராணை மனு!

முக்கியமாக, அரசியலமைப்புச் சட்டப்படி இம்மாதிரியான விடயங்களில் முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உண்டு என்ற சிறிய கவனம் கூட இன்றி, மாநில அரசு மீது வழக்கினை தாக்கல் செய்த அலட்சியம் குறிப்பிடத்தக்கது. பின்னர், நிதிமன்றம் இந்த தவறினை சுட்டிக் காட்டியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். தனியே ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டு மத்திய அரசாங்கம் பேராணை மனுவில் எட்டாவது எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டது.

சரி, மத்திய அரசினை எதிர்மனுதாரராக சேர்த்த பின்னர் என்ன நடந்தது?

பெரிய வாதப் பிரதிவாதம் எல்லாம் இல்லை. ‘இந்த விடயத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் ஏற்கனவே கூறியபடி மத்திய அரசிடம் உள்ளது. மாநில அரசு விரும்பினால், கல்லூரிகளில் இடங்களை அதிகரித்து சிறீலங்கா தமிழ் அகதிகளுக்கு ஒதுக்கீடு செய்ய மத்திய அரசினை வேண்டிக் கொள்ளலாம்’ என்பதுதான் உத்தரவு.

பல சமயங்களில், வழக்கு தள்ளுபடி என்று கூறினால் வழக்காடிகள் வருத்தப்படுவார்களே என்பதால், அவர்கள் மீது மனமிரங்கும் நீதிமன்றம் தள்ளுபடி என்ற வார்த்தையை பயன்படுத்தாமல், இவ்வாறு சட்டப்புத்தங்களில் ஏற்கனவே உள்ளதை மீண்டும் உறுதிப்படுத்தி வழக்கினை முடித்து வைக்கும்.

ஆனால் தற்பொழுது இந்த வகையான உத்தரவுகளை ‘வெற்றி’ என்று வழக்குரைஞர்களை அணுகும் படிக்காத பாமரர்களே ஏற்றுக் கொள்வதில்லை. ஏசியன் டிரிபியூன் தனது வாசகர்களின் தரம் பற்றி கொண்டிருக்கும் மதிப்பீடு வியப்பளிக்கிறது!

-oOo-

சரி, தீர்ப்புக்கு பின்னர் என்னதான் நடந்தது. ஒன்றும் நடக்கவில்லை.

சுவாமிக்கு இந்த விடயத்தில் உண்மையான ஆர்வம் இருந்திருந்தால், மத்திய மாநில அதிகார மையங்களில் தனக்குள்ள வலிமையை (influence) பயன்படுத்தி, அது கூட வேண்டாம் தமிழக முதல்வரை பொதுவில் வேண்டுவதன் மூலம் எளிதில் இதனை முடித்திருக்கலாம்.

அரசின் கொள்கை முடிவுகளில், நீதிமன்றங்கள் தலையிடுவது இல்லை என்றாலும் கூட அவருக்கு வேண்டியது, நீதிமன்றம் என்ற பொது மேடை, அதைப் பயன்படுத்த ஒரு வழக்கு, ஒன்றுக்கும் உதவாத தீர்ப்பு என்றாலும் ‘சுவாமிக்கு வெற்றி’ என்ற பத்திரிக்கைச் செய்தி...

செய்தி உண்மைதான்....சுவாமிக்கு வெற்றிதானே!

மதுரை
03.05.09

20.3.09

அமெரிக்காவைப் பார்...

நடந்து முடிந்த வழக்குரைஞர்கள் வேலை நிறுத்தத்தைப் பற்றி 19/03/09 தேதியிட்ட ‘இந்து’வில் அதன் அமெரிக்க வாசகர் ஒருவர் எழுதிய கடிதம் கவனத்தை ஈர்ப்பதாயிருந்தது. அதாவது அமெரிக்காவில், ஒரு வழக்காடி தன்னுடைய வழக்கினை தானே நடத்தக்கூடிய உரிமை உள்ளதாம். வழக்குரைஞர் வேலை நிறுத்தம் காரணமாக, தமிழ்நாட்டிலும் வழக்காடிகள் தங்களுடைய வழக்கினை தாங்களே நடத்தும் உரிமையினைப் பெற்றுள்ளார்களாம்.

இந்த கடிதத்தை பிரசுரித்ததன் மூலம், ‘இந்து’ பத்திரிக்கை ஒரு இந்திய வழக்காடிக்கு தனது வழக்கினை தானே வாதிடும் உரிமை இல்லை என்பது போன்ற தோற்றத்தினை ஏற்ப்படுத்தியுள்ளது. வாசகரும் சரி, இந்துவும் சரி அறியாத ஒரு விடயம் நமது நாட்டில் நிலவும் சட்டங்கள் நாகரீகத்திலும் மனித உரிமையைப் பேணுவதிலும், அமெரிக்க நாட்டிலுள்ள எந்த ஒரு சட்டத்திற்கு குறைவான ஒன்றல்ல. இங்கும் ஒரு வழக்காடிதான், தன்னுடைய வழக்கினை நடத்தும் முதல் உரிமை உள்ளவர். வேண்டுமானால் அவர் ஒரு வழக்குரை நியமித்துக் கொள்ளலாம். எனவே இந்த ஒரு சாதாராண உரிமைக்கு கூட அமெரிக்காவை தேடி ஓட வேண்டியதில்லை...

பல சமயங்களில், இங்கும் வழக்காடிகள் தங்களுடைய வழக்குகளை தாங்களே நடத்துவதுண்டு. ஒரு வழக்குரைஞருக்கு கிடைக்கும் உரிமையை விட சற்று மேலான உரிமை, ‘Party in Person’ என்று அழைக்கப்படும் அவர்களுக்கு உண்டு. வழக்கினை வாதிடுகையில், தனது வழக்கின் சாரத்தை விட்டு வெளியே சஞ்சரிக்கும் வழக்குரைஞர், நீதிமன்றத்தால் எச்சரிக்கை செய்யப்படுவார். ஆனால், வழக்காடி வாதிடுகையில், அவ்வித கட்டுப்பாடு எதுவும் விதிக்கப்பட முடியாது. எவ்வளவு தர்மசங்கடம் என்றாலும், நீதிபதி அவரது வாதத்தைக் கேட்டுக் கொண்டேயிருக்க வேண்டியதுதான். இல்லை, கதவுக்கு வெளியே சென்று ‘எனக்கு இங்கே நீதியில்லை. எனது வழக்கினை பேச எனக்கு உரிமை இல்லையா?’ என்று கத்த ஆரம்பித்து விடுவார்கள்.

அது மட்டுமில்லாமல், சட்ட ரீதியிலும் சில உரிமைகள் உண்டு. உரிமையியல் வழக்கில், கூறப்படும் தீர்ப்பில் அந்த தீர்ப்பினை எதிர்த்து எங்கு எவ்வளவு நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யப்பட வேண்டும் என்று கூற வேண்டியதில்லை. நாமே, சட்டப்புத்தகத்தைப் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டியதுதான். ஆனால், வழக்காடி தானே வழக்கினை நடத்துகையில் தீர்ப்பில் அவற்றை குறிப்பிட்டாக வேண்டும். (Order 20 Rule 5A CPC)

சட்டமும், குடிமகன்கள் அனைவரும் சட்டத்தைப் பற்றி அறிந்திருக்க வேண்டும் என்றே கருதுகிறது. சட்டம் இவ்வாறு கூறுகிறது என்பது எனக்குத் தெரியாது என்று வாதிட்டு யாரும் தப்பித்துக் கொள்ள இயலாது.

சுப்பிரமணிய சுவாமி, கே.எம்.விசயன் ஆகியோர் தங்களது வழக்குகளை தாங்களே நடத்திய சில முக்கியமானவர்கள்.

ஆனால், எதற்கு பேராணை மனு (Writ), எதற்கு உரிமையியல் வழக்கு (Civil Suit), எதற்கு மனு (Original Petition), எதற்கு நுகர்வோர் மனு (Consumer Complaint) என்ற விடயங்களை மெத்தப் படித்தவர்களே அறிந்து கொள்ள நேரம் செலவழிக்க விரும்பாத நமது நாட்டில், சாதாரண பொது மக்கள் தங்களது வழக்கினை தாங்களே நடத்தினார்கள் என்ற பத்திரிக்கைச் செய்திகளில், விக்கிரமாதித்யன் கதைகளை விட சற்று அதிக அளவில் உண்மையிருக்கலாம், அவ்வளவுதான்.

-oOo-

சட்ட சம்பந்தமான விடயங்களில் தாங்கள் ஆர்வமுடையவராக இருப்பின் கீழ்கண்ட சரியா, தவறா என்பதை யூகிக்கவும். பின்னர் ஒரு வழக்குரைஞரை தொடர்பு கொண்டு தங்களது சட்ட அறிவினை சரி பார்த்துக் கொள்ளலாம். எனது மற்ற பதிவுகளிலும், பதில்கள் இருக்கலாம்.

(எச்சரிக்கை: advocacy is an art of impossibility என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளவன் நான். எனவே சரியா, தவறா என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை)

(1) உங்களது வீட்டினை 3 வருடங்கள் கழித்து கண்டிப்பாக காலி செய்து தர வேண்டுமென்று ஒப்பந்தம் கையெழுத்திட்டு, வாடகைக்கு விடுகிறீர்கள். 3 வருடம் கழித்து வாடகைதாரர் ஒப்பந்தப்படி காலி செய்தாக வேண்டும்.

(2) உங்களது வங்கிக் கணக்கில் (Bank Deposit) தங்களது மனைவி பெயரை மட்டும் நாமினி (nominee) என காட்டியுள்ளீர்கள். உங்களது மரணத்துக்குப் பின்னர் உங்களது மகனுக்கும் உங்களது மனைவியோடு இந்து மத சட்டப்படி வாரிசுதாரர் என்ற வகையில் டிபாசிட் பணத்தில் உரிமை உண்டு.

(3) அதுவே காப்பீட்டு தொகைக்காக கொடுக்கப்படும் நாமினியாக இருந்தாலும் அதே உரிமை உண்டு

(4) உங்களது நிறுவனம், 3 வருடங்களுக்குள் வேலையை விட்டு செல்வதாயிருந்தால், 1 லட்சம் ரூபாய் செலுத்துவேன் என்ற உறுதியினை பெற்று உங்களை வேலைக்கு அமர்த்துகிறது. அதற்கு ஆதரவாக (security) உங்களது சான்றிதழ்களை நிறுவனத்திடம் சமர்ப்பித்துள்ளீர்கள். ஒரு வருட காலத்தில் வேலையை ராசினாமா செய்து சான்றிதழ்களை பெற வேண்டுமென்றால் 1லட்சம் செலுத்தினால்தான் சான்றிதழ்கள் கிடைக்கும்.

(5) உயில் பத்திரத்தில் முத்திரைக் கட்டணம் (stamp duty) செலுத்த தேவையில்லை.

(6) உங்கள் நண்பருக்கு கடன் உறுதிச் சீட்டு (promissory note) மூலம் கடன் கொடுத்துள்ளீர்கள். மூன்று வருடம் காலம் முடியும் முன், கடனை திருப்பிச் செலுத்த மேலும் ஒரு வருட காலம் அவகாசம் வேண்டுகிறார். நீங்கள் கொடுக்க நினைத்தாலும், மற்றொரு நண்பர் 3 வருட காலத்திற்குள் வழக்கு தாக்கல் செய்யவில்லை என்றால் அவ்வளவுதான் என்கிறார்.

மேற்கண்ட விடயங்களில் தங்களது புரிதல்களையும், இந்த விடயம் சார்ந்த பிரச்னைகள் எழும் பொழுது, ஒரு வழக்குரைஞரின் ஆலோசனை பெறாமல் தங்களால் செயல்பட முடியுமா என்பதையும் சற்று சிந்தியுங்கள். பின்னர் உங்களுடைய இடத்தில் ஒரு சாமான்ய குடிமகனை வைத்து பாருங்கள்.

-oOo-

இந்துவில் நான் மேலே குறிப்பிட்ட கடிதத்தினை எழுதிய வாசகர், சம்பந்தப்பட்ட வழக்காடிகள் plead செய்ததாக குறிப்பிடுகிறார். ப்ளீடு என்ற வார்த்தையினை உரிமையியல் சட்டப்படி எழுத்து பூர்வமாக முதலில் தாக்கல் செய்யப்படும் வழக்கினை குறிக்கவே பயன்படுத்துவோம். பொதுவாக, நீதிமன்ற புறக்கணிப்பு நடைபெறும் பொழுது ‘ப்ளீடிங்’ முதலியவற்றை வழக்குரைஞர்களே பார்த்துக் கொள்வார்கள். வழக்கினை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, அலுவலகத்தில் அதன் ஆய்வினை (scrutiny) முடித்து அதற்கு எண் வாங்கி நீதிமன்றம் முன்பும் கொண்டு வருவார்கள். பின்னர் வழக்காடியை உள்ளே அனுப்பி, வழக்கினை விசாரணைக்கு அனுமதிக்க (admit) வேண்டி இடைக்கால தடை உத்தரவும் (interim injunction, stay, direction etc.,) கோர வைப்பார்கள். அவ்வளவுதான்.

மற்றபடி வழக்காடிகளை இறுதி விசாரணைக்கு எல்லாம் அனுப்புவதில்லை.

வழக்குரைஞர்களின் போராட்டம் என்பது, நீதிமன்ற புறக்கணிப்புதான். வேலை நிறுத்தமல்ல. இதனால்தான், வழக்குரைஞர்கள் தங்களுடைய போராட்டத்தினை நாட்கணக்கில் தாங்க (sustain) முடிகிறது.

தொழிலாளர் போராட்டத்திற்கும், வழக்குரைஞர்களின் போராட்டத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. இது புரியாமல், இந்து வாசகர்கள் அனைத்து வகைகளிலும் ஆதங்கப்பட்டு, கடந்த சில வாரங்களாக கடிதம் எழுதித் தள்ளி விட்டார்கள்.

-oOo-

மேற்கண்ட கடிதம் எழுதிய ரெக்சு அருள் (Rex Arul) அமெரிக்காவில் பொறியாளராக பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். தமிழார்வம் மிக்கவர். திருக்குறளில் மரண தண்டனை பற்றி ஒரு ஆய்வுக் கட்டுரையை எழுதி வாசித்துள்ளார். என்னை பெயர் சொல்லி அழைக்க தயங்கி uncle என்று கூப்பிடுவார். உறவில் எனக்கு சகலை :-)

மதுரை
20.03.09

22.12.08

பயங்கரவாதமும், சட்ட உதவியும்...


மும்பை பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, ‘பிடிபட்ட தீவிரவாதிக்கு வழக்குரைஞரின் உதவி அளிக்கப்படலாமா, கூடாதா?’ என்ற ஒரு கேள்வி எழுப்பப்பட்டு ஊடகங்களிலும் விவாதிக்கப்பட்டு வருகிறது. தானாக முன்வந்து மனு தாக்கல் செய்த வழக்குரைஞரின் வீடு சிவசேனா தொண்டர்களால் தாக்கப்பட்டுள்ளது.

சிவசேனை தொண்டர்கள், நாட்டுப்பற்றினை தங்களது செயலுக்கு காரணமாக கூறினாலும், அவர்களது கோரிக்கை தொலை நோக்குப் பார்வையில் (in long term) நாட்டு நலனுக்கு சாதகமாக இருக்கப் போகிறதா என்றால், சந்தேகமே!

-oOo-

எந்த ஒரு சட்டமுறையின் அடிப்படை விதி ‘Audi Altrem Partem’ என்பதாகும். இதன் அர்த்தம் ‘இரு தரப்பிரனரையும் கேட்க வேண்டும்’ (hear the other side). இந்த விதியினை மீறி சர்வாதிகாரமென்றாலும் சரி, மக்களாட்சியென்றாலும் சரி ஒரு விசாரணையை நடத்தி விட முடியாது.

எனவே மும்பையில் பிடிபட்ட தீவிரவாதிக்கும் தனது தரப்பு வாதத்தினை வைக்க வாய்ப்பளித்துதானாக வேண்டும். அவ்வாறு அளிக்கப்படும் வாய்ப்பானது, உண்மையான ஒன்றாக இருக்க வேண்டுமென்றால் அதற்கு சட்டமுறையினை அறிந்த ஒரு வழக்குரைஞரின் உதவி தேவை.

அவ்வாறான உதவி வழங்கக் கூடாது என்பது, ஏறக்குறைய ‘விசாரணையே கூடாது. அப்படியே தூக்கில் போட்டுவிட வேண்டியதுதான்’ என்று கூறுவதற்கு சமமானது. பயங்கரவாதத்திற்கு எதிரான வலிமை மிக்க ஆயுதம் சட்டத்தின் முறையே (due process of law) தவிர கங்காரு நீதிமன்றங்கள் இல்லை. அவை உடனடி வலி நிவாரணி போல செயல்படலாம். ஆனால் நோய் தீர்க்கும் மருந்து இல்லை.

குற்றம் சாட்டப்படுபவருக்கு, ஒரு வழக்குரைஞரின் உதவி மறுக்கப்படும் விசாரணை முறையும் உண்டு. அதாவது அலுவலர் (Employee) ஒருவர் மீது எடுக்கப்படும் ஒழுங்கீன நடவடிக்கை விசாரணைகளில் (disciplinary proceedings/ domestic enquiry) வழக்குரைஞரின் உதவியினை ஒரு உரிமையாக கோர இயலாது. ஆனால், நிறுவனம் (Management) ஒரு வழக்குரைஞரை தனக்கு உதவியாக வைத்துக் கொண்டால், குற்றம் சாட்டப்பட்டவரும் (delinquent) வழக்குரைஞரின் உதவியினை உரிமையாக கோர இயலும்.

மும்பை பயங்கரவாதி விடயத்திலும், அரசு தனது வழக்குரைஞர் (Public Prosecutor) மூலம் வழக்கு நடத்துகையில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு வழக்குரைஞரின் உதவி கூடாது என்றால், அந்த விசாரணை ஒரு கண்துடைப்பாகவே உலகின் கண்களில் பார்க்கப்படும்.

-oOo-


மேலும் இந்த விடயம், விவாதத்திற்குறிய ஒன்றாக வைக்கப்படுவது, ஒரு வழக்குரைஞரின் பணி என்பது சரிவர புரிந்து கொள்ளப்படாத நிலையினையே உறுதிப்படுத்துகிறது என எண்ணுகிறேன்.

நமது நாட்டிலுள்ள சட்ட முறையின்படி ஒரு வழக்குரைஞர் தனது கட்சிக்காரருக்காக நீதிமன்றத்தின் நான்கு சுவர்களுக்குள்ளாக மட்டுமே வாதிட கடமைப்பட்டவர். ஆனால், தற்பொழுது இங்கும் ஐக்கிய அமெரிக்க நாடுகளைப் போல, வழக்குரைஞர்கள் தொலைக்காட்சி முன் தங்களது கட்சிக்காரருக்காக பேட்டி கொடுக்கும் ஒரு விரும்பத்தகாத நிலை ஏற்ப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றக்கூடிய மூத்த வழக்குரைஞர்கள் கூட இதை உணர்வதில்லை!

நீதிமன்றத்திற்கு வெளியே ஒரு வழக்குரைஞர், தனது கட்சிக்காரர் குற்றமற்றவர் என்று கூறினால், அடுத்த கணமே அவர் அந்த கட்சிக்காரருக்காக ஆஜராகும் உரிமையை இழப்பார் என்பதுதான் உண்மை. தனது கட்சிக்காரர் குற்றமற்றவர் என்று அவரால் கூற முடியுமென்றால், அவரது கட்சிக்காரர் செய்த செயலைப் பற்றி அறிந்த ஒரு சாட்சியாக மாறுகிறார். அந்த வழக்கில் அவரே ஒரு சாட்சியாக மாறும் பொழுது, அதில் வழக்குரைஞராக நீடிக்கும் அருகதை அவருக்கு கிடையாது. ஆயினும் வழக்குரைஞர்களில் விளம்பர மோகத்தில், இத்தகைய ஒரு போக்கு இங்கு வளர்ந்து வருகிறது.

இவ்வாறாக ஒரு வழக்குரைஞர், கட்சிக்காரரின் நலனுடன் தன்னுடைய நலனினையும் (identifyin with the cause of the client) பொருத்தும் ஒரு நிலையில், இத்தகைய விவாதங்கள் எழுவது இயல்பே!

ஆனால் ஒரு வழக்குரைஞர் என்பவர் சட்ட முறைகளை அறியாத ஒருவருக்காக பின்னணி (அல்லது முன்னணி) குரல் கொடுப்பவர் மட்டுமே.

-oOo-


வழக்குரைஞர்களின் தொழிலை வரைமுறைப்படுத்தும் சட்டம் வழக்குரைஞர்கள் சட்டம் (The Advocate’s Act’1961) இந்த சட்டத்தின் கீழ் வழக்குரைஞர்களுக்கான நடத்தை விதிகள் வகுக்கப்பட்டுள்ளன (Standards of Professional Conduct and Etiquette). இந்த விதிகளில் ‘ஒரு வழக்குரைஞர் தனது கட்சிக்காரர் செய்த குற்றத்தினைப் பொருத்து தனது சொந்தக் கருத்து எதுவாக இருப்பினும், யாரும் தகுந்த ஆதாரங்கள் இன்றி தண்டிக்கப்படக்கூடாது என்பதை மனதில் வைத்து, தனது கட்சிக்காரரை பாதுகாக்க வேண்டும்’ என்று தெளிவாகவே கூறப்பட்டுள்ளது.

(15. It shall be the duty of an advocate fearlessly to uphold the interests of his client by all fair and honourable means without regard to any unpleasant consequences to himself or any other. He shall defend a person accused of a crime regardless of his personal opinion as to the guilt of the accused, bearing in mind that his loyalty is to the law which requires that no man should be convicted without adequate evidence)

இனியும், பயங்கரவாதிக்கு வழக்குரைஞர் உதவி கூடாது என்பது, நமது நாடு எவ்விதமான சட்ட முறைகளினால் உலகின் கண்களில் உயர்ந்து நிற்கிறதோ, அதற்கு குந்தகம் விளைவிக்கும் ஒரு வாதமே என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை.

-oOo-

இறுதியில், இந்த விடயத்தில் சுப்பிரமணியசுவாமி கூறிய ஒரு கருத்து கவனிக்கத்தக்கது. ‘பிடிபட்டவரை வெளிநாட்டு எதிரி (enemy alien) என்று அறிவித்து விடுங்கள். அவ்வாறு அறிவித்து விட்டால் நமது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் (Constitution of India) பிரிவு 22(1)ன்படி குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு தனக்கு பிடித்தமான வழக்குரைஞரை நியமித்துக் கொள்ளும் உரிமையினை பிடிபட்டவருக்கு மறுத்து விடலாம்’ என்பதாகும்.

உண்மைதான். ஆயினும் இதன் மூலம் பயங்கரவாதி தனது வழக்குரைஞரை தானே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமையினை மறுக்கலாம். ஆனாலும், அரசு அவருக்காக ஒரு வழக்குரைஞரை நியமிக்க வேண்டும். வழக்குரைஞரின் உதவியே கூடாது என்று கூற முடியாது!

அது இயற்கை விதிக்கு (Natural Justice) மாறானது!

மதுரை
221208

24.10.08

நளினிக்கு கருணை, கானல் நீர்தானா? - 4


அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளுக்கு மன்னிப்பு (pardon) அளிப்பதற்கு குடியரசுத்தலைவர் மற்றும் மாநில அளுனர்களுக்கு உள்ள அதிகாரம் தவிர, அரசாங்கத்திற்கு தண்டனையைக் குறைக்கும் (commute) அதிகாரம் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 433ன் கீழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரத்தினை பயன்படுத்தி, அரசு நினைக்கையில் நளினிக்கோ அல்லது சராதானந்தாவுக்கோ தண்டனனயை குறைக்கலாம். இங்கு நாம் விவாதிக்கும் தீர்ப்பு, அரசின் இந்த அதிகாரத்தின் குறுக்கேயும் நிற்க முடியாது. ஏனெனில், நீதிபதிகள் அரசின் இந்த அதிகாரத்தினைப் பற்றி தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டாலும், அரசு இந்தப் பிரிவு அளிக்கும் அதிகாரத்தினைப் பயன்படுத்தி தண்டனையை குறைக்க இயலாது என்றும் கூறவில்லை.


குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள இதே அதிகாரம் இந்திய தண்டனன சட்டம் பிரிவு 54 மற்றும் 55ன் கீழும் அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது.


ஆனால் பிரிவு 433Aன் படி ஒருவரின் மரணதண்டனையானது ஆயுள் தண்டனையாக இந்தப் பிரிவின்படி குறைக்கப்பட்டால், அவர் குறைந்தபட்சம் 14 ஆண்டுகள் சிறையில் கழிக்காமல் விடுதலை பெற முடியாது. இந்த 14 ஆண்டு கட்டுப்பாடே ஆயுள் தண்டனை என்றால் 14 ஆண்டுகள்தான் என்ற தவறான எண்ணம் சாதாரண மக்களில் மனதில் தோன்ற காரணம்.


-oOo-


குற்றவாளிக்கு மன்னிப்பு மற்றும் தண்டனை குறைப்பு தவிர தண்டனை தள்ளுபடி (remission) என்பதும் உள்ளது. குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 432ன் படி குற்றவாளியானவர் தனது தண்டனையினை தள்ளுபடி செய்ய கோரலாம். இந்த தள்ளுபடியானது, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் மட்டுமல்லாமல், சிறை விதிகள், மற்றும் பிற விதிமுறைகளின்படியும் கோரலாம்.


இவ்விதமான தள்ளுபடிகளை கணக்கிட ஒருவரது சிறைக்காலம் அறுதியிட்டாலே இயலும். உதாரணமாக, ஒருவருக்கு ஐந்தாண்டுகள் தண்டனை என்றால், ஆண்டுக்கு இத்தனை நாட்கள் என அவருக்கு விதிகளின்படி கிடைக்கும் தள்ளுபடியினை கணக்கிட்டு விடலாம்.


ஆனால் ஆயுள்தண்டனை என்பதில் தள்ளுபடி அளித்தாலும், ஆயுள் தண்டனை ஆயுள் தண்டனையாகவே இருக்கும். கணிதத்தில் ‘இன்பினிட்டி’ (infinity) போல. இதைத்தான் நீதிபதிகள் சுட்டிக்காட்டி ஆயுள் தண்டனைக்கு தள்ளுபடி என்பது கிடையாது என்று குறிப்பிடுகிறார்கள்.


பொதுவாக, அரசு ஆயுள் தண்டனையினை 20 ஆண்டு காலம் என்று கருதி ஒரு உத்தரவு பிறப்பித்து பின்னர் 20 ஆண்டுகளுக்கான தள்ளுபடிகளை கணக்கிடுகிறது. 20 ஆண்டுகளுக்கு சுமார் 6 காலம் அதிகபட்சம் தள்ளுபடி கிடைக்கும். இவ்வாறான முறையில்தான் அரசு ஆயுள் தண்டனை பெற்ற நபர்களை 14 ஆண்டுகளில் விடுதலை செய்கிறது. அதனால்தான் கோட்சே, நளினி போன்றவர்கள் தாங்கள் 14 ஆண்டு காலம் சிறையில் கழித்து விட்டதால் விடுதலை செய்ய வேண்டும் என்று கோருகிறார்கள்.


இந்த முறையினையே உச்ச நீதிமன்றம் சராதானந்தாவின் வழக்கில் தவறு என்று கூறுகிறது. அதாவது அரசு எவ்விதம் இவ்வாறு ஆயுள் தண்டனை என்பது 20 வருடம் என கருதுகிறது என்ற கேள்வியினை எழுப்பி அதற்கு சட்டபூர்வமான அதிகாரம் இல்லை என்கிறது.


இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 57ல் தண்டனையை வகுக்கும் தேவை நேர்ந்தால் ஆயுள் தண்டனையை 20 ஆண்டுகள் என கணக்கிடலாம் என்று உள்ளது. உதாரணமாக பிரிவு 511ன் படி ஏதாவது குற்றத்தினை செய்ய முயன்றால் அந்த குற்றத்திற்கான தண்டனையில் பாதி தரலாம் என்று உள்ளது. அதே போல ஒருவர் குற்றம் செய்ய தூண்டி (abet) பின் அந்த குற்றம் செய்யப்படாமல் போனாலும், தூண்டியவர் அந்தக் குற்றத்திற்கான தண்டனையில் கால் பகுதி தரலாம் என்று பிரிவு 116 கூறுகிறது. இம்மாதிரி காரணங்களுக்காகவே 20 வருட கணக்கே தவிர ஆயுள் தண்டனை 20 ஆண்டு என்று எடுத்துக் கொள்வதாக உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளதை நீதிபதிகள் சுட்டிக்காட்டுகின்றனர். அந்தக் கருத்து சரியானதே!


ஆயினும் நீதிமன்றம் கவனிக்கத் தவறிய ஒரு விடயம், இன்றுள்ள நிலையிலேயே, அரசு குற்றவாளியின் ஆயுள் தண்டனையினை 20 ஆண்டு கால தண்டனையாக கருதி (deem) அரசு ஒரு உத்தரவு பிறப்பித்தாலொழிய குற்றவாளி மேலும் தள்ளுபடி பெற்று வெளிவர இயலாது. எனவே அவ்வாறு இல்லாமல் அரசு ஆயுள் தண்டனையினை 20 ஆண்டுகால தண்டனையாக குறைத்தால், தள்ளுபடி சாத்தியமாகலாம். இரண்டு உத்தரவிற்கும் அரசு மனது வைக்க வேண்டும்.


இதன் விளைவு, அவ்வாறு ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டுமென்று ஒருவர் அரசை நிர்பந்திக்க முடியாது. அரசு மனது வைத்தால்தன் இவை இயலும். எனவே ஆயுள் தண்டனை பெற்றவர் மன்னிப்போ அல்லது தண்டனை குறைப்போ பெறுவது அவரது உரிமையல்ல என்பது போலவே தோன்றுகிறது.


அவ்வாறு என்றால், அடிப்படையில் சராதனந்தாவின் தீர்ப்பு புதிதாக எதனையும் கூறவில்லை என்றுதான் கூற வேண்டும். சாகும் வரை வெளியில் விடக்கூடாது என்ற கட்டளையும் தேவையில்லாத ஒன்று. ஏனெனில், குற்றவாளியை விடுதலை செய்ய அரசு நினைக்கையில் தனது மன்னிக்கும் அல்லது தண்டனைக்குறைப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்து விடலாம்.


அதே போல வழக்கில் நீதிபதிகள் முக்கிய பிரச்னையாக எழுப்பிய மரண தண்டனைக்கு மாற்றாக வழங்கப்படும் ஆயுள் தண்டனையை சாதாரண ஆயுள் தண்டனையிலிருந்து வேறு படுத்த முடியுமா? என்ற கேள்வியும் அர்த்தமற்றதாகி விடுகிறது. எந்த ஒரு ஆயுள் தண்டனைக்குமே, நீதிபதிகளின் கருத்துப்படி தள்ளுபடி வழங்க இயலாது என்பதால், அனைத்து ஆயுள் தண்டனைகளும் அரசு மனது வைக்கும் வரை ஆயுள் வரைக்குமே!


-oOo-


ஆயுள் தண்டனை என்பது 20 ஆண்டு காலம் என்பது அல்ல என்றாலும், பல முறை உச்ச நீதிமன்றம் குற்றவாளியை குறைந்தது 20 ஆண்டு காலமாவது சிறையில் வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அவற்றை தங்களது தீர்ப்புக்கு ஆதரவாக நீதிபதிகள் எடுத்துக் கொள்கின்றனர். ஆயுள் தண்டனை என்பது ஆயுள் வரை என்று கூறிய பிறகு, நீதிமன்றம் சாகும் வரை என்பதோ அல்லது 20 ஆண்டு காலம் என்பதோ, அரசுக்கு ஒரு அறிவுறுத்தல் என்றே எடுத்துக் கொள்ள இயலும்.


உச்ச நீதிமன்றம் ஏற்கனவே சாகும் வரை விடுவிக்கக் கூடாது என்று இரு வழக்குகளில் கூறியுள்ள தீர்ப்புகளும் சுட்டிக்காட்டப்படுகிறது. முதலாவது வழக்கில் குற்றவாளிக்கு மரணதண்டனைதான் என்று நீதிபதிகள் மனதளவில் தீர்மானித்து விட்ட நிலையில், அவர் சாகும் வரை சிறையிலேயே இருக்க தயாராக இருக்கிறார் என்ற வாதம் வைக்கப்பட அதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் ஏறக்குறைய ஒரு சமரசத்தீர்வு போல அவருக்கு எவ்வித தள்ளுபடியோ அல்லது தண்டனைக் குறைப்போ தரக்கூடாது என்று தீர்ப்புக் கூறியுள்ளது (சுபாஷ் சந்தர் எதிர் கிருஷ்ணன் லால் (2001) 4 SCC 458). தள்ளுபடி சரி தண்டனைக்குறைப்பு பற்றி நீதிமன்றம் கூறியுள்ளது எவ்வளவு தூரம் சரியானது என்று தெரியவில்லை. ஏனெனில், தண்டனைக்குறைப்பு அளிக்க அரசு குற்றவாளியின் அனுமதியை பெற வேண்டியதில்லை. எனவே அவர் தனக்கு தண்டனைக் குறைப்பு தேவையில்லை என்று கூறியுள்ள போதிலும் அரசு தனது அதிகாரத்தினை பயன்படுத்தலாம். இன்னும் ஒரு பத்தாண்டுகள் கழித்து கிருஷ்னலால் தீராத நோயினால் பெரும் அவதிப்படுகிறார். அவரை விடுதலை செய்வதே மனிதாபிமானம் என்று அரசு நினைக்கையில் நீதிமன்ற தீர்ப்பு அதற்கு எவ்வளவு தூரம் தடையாக இருக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.


ஆயினும் இவ்வாறான உத்தரவு மனித உரிமைக்கு எதிரானதா என்ற கேள்வி ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் எழுப்பப்பட்டுள்ளது. ஜெயவந்த் தத்தராய சூர்யராவ் எதிர் மகராச்டிரிய அரசு (2001) 10 SCC 109 என்ற வழக்கிலும் இவ்வாறு ஒரு தண்டனை வழங்கப்பட, தூக்கிலிருந்து தப்பித்தாயிற்று என்று அப்பொழுது தண்டனையினை ஏற்றுக் கொண்ட சுபாஷ்சிங் தாக்கூர் தற்பொழுது அந்த தண்டனை தவறு என்று நீதிப்பேராணை (writ) மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகையில் மீண்டும் இந்தப் பிரச்னைகள் மறு ஆய்வு செய்யப்படும்.


-oOo-


ஆனால் இங்கு முக்கியமான வித்தியாசம், நளினிக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதிக்கவில்லை. குடியரசுத் தலைவரின் மன்னிப்பு! சராதானந்தா உட்பட மற்றவர்களுக்கு நீதிமன்றம் தண்டனை வழங்குகையிலேயே இவ்வாறு தள்ளுபடி கிடையாது என்று கூறியுள்ளது. நளினிக்கு அவ்வாறான எவ்வித கட்டுப்பாடும் கிடையாது...


ஆயினும், தள்ளுபடி என்பது எந்த ஆயுள்தண்டனைக்கும் கிடையாது என்பதுதான் சராதானந்தாவின் தீர்ப்பில் இருந்து நாம் அறிவது. எது எப்படியோ, நளினி வெளியே வர வேண்டுமென்றால் அரசு மனது வைக்க வேண்டும். தள்ளுபடி என்பது மேற்கண்ட தீர்ப்பின் மூலம் பிரச்னைக்குறிய ஒன்று. அரசு அவரது தண்டனையை குறைப்பதுதான் வழி...


இல்லை, நளினிக்கு காட்டப்பட்டதாக கூறப்படும் கருணை, உண்மையில் ஒரு கானல் நீரே!


மதுரை
24.10.08

16.10.08

நளினிக்கு கருணை, கானல் நீர்தானா? - 3


ஆயுள் தண்டனைக்கான அர்த்தம், குற்றவாளியின் ஆயுள் வரைதான் என்பதில் யாருக்கும் எவ்வித சந்தேகமும் இல்லை. இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 45 ஆயுள் என்பது ஒரு மனிதனின் ஆயுளைக் குறிக்கும் என்று விளக்கமளிப்பதிலிருந்து ஆயுள் தண்டனை என்பதற்கு வேறு எவ்வித விளக்கமும் கூற இயலாது.

இதையே மகாத்மா காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கோபால் கோட்சே தன்னை 14 ஆண்டு சிறைவாசத்திற்குப் பிறகு விடுவிக்க வேண்டுமென்று கோரிய பொழுது உச்ச நீதிமன்றம் கூறியது. (கோபால் விநாயக் கோட்சே எதிர் மகாராஷ்டிர அரசு AIR 1961 SC 400). ஆனால் உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையில் தள்ளுபடி (remit) அளிப்பதற்கு அரசிடம் உள்ள அதிகாரத்தினை ஒத்துக் கொண்டே அந்த தீர்ப்பினை அளித்தது.

கோபால் கோட்சே அடுத்த ஆண்டே அரசால் விடுதலை செய்யப்பட்டார் என்பது வேறு கதை!


-oOo-


ஆனால் தற்பொழுது சக்கீராவின் வழக்கில், கோபால் கோட்சே வழக்கின் தீர்ப்பினைப் பற்றி ஆய்ந்த நீதிபதிகள், சில வகையான ஆயுள் தண்டனைகளுக்கு இவ்வாறு அரசு தண்டனையிலிருந்து தள்ளுபடி செய்யும் அதிகாரத்தினை செலுத்தவிடாமல் உண்மையிலேயே ஆயுள் முழுமைக்கும் என்று மாற்ற வேண்டும் என்ற ஆவலை வெளிப்படுத்துகின்றனர். அதாவது, மரண தண்டனைக்கு மாற்றாக வழங்கப்படும் ஆயுள் தண்டனைகளுக்கு அவ்வாறு தள்ளுபடி வழங்குதல் கூடாது என்கின்றனர்.

மரணதண்டனைக்கு மாற்றான ஆயுள் தண்டனை என்று ஒன்று குற்றவியல் சட்டங்களில் இல்லை எனலாம். இந்த தீர்ப்பின் ஆரம்பத்திலேயே, நீதிபதிகள் மரண தண்டனைக்கு மாற்றாக வழங்கப்படும் ஆயுள் தண்டனையினை மற்ற சாதாரண ஆயுள் தண்டனையிலிருந்து வேறு படுத்த இயலுமா என்பதுதான் இந்த வழக்கில் உள்ள் பிரச்னை என்றே ஆரம்பிக்கின்றனர்.

தவறு இங்கேயே ஆரம்பிக்கிறது. ஒரு குற்றத்திற்கு மரண தண்டனை என்றால் மரண தண்டனைதான். மரண தண்டனை வழங்க வேண்டிய வழக்கில் ஆயுள் தண்டனை வழங்க இயலும் என்றால், அது அனைத்து மரண தண்டனை கைதிகளுக்கும் வழங்கப்பட வேண்டும். இல்லை அம்னெச்டி இண்டர்நேசனலின் ‘மரணதண்டனன என்பது இங்கு ஒரு லாட்டரி’ என்ற குற்றச்சாட்டை உச்ச நீதிமன்றமே ஒத்துக் கொள்வது போல ஆகிவிடும்!

கீழமை நீதிமன்றத்தில், ஆயுள் தண்டனை வழங்க வேண்டிய குற்றத்திற்கு மரண தண்டனை தவறுதலாக வழங்கப்பட்டு அதனை உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக மாற்றுவது ஏதோ கருணைப் பிச்சையல்ல. மாறாக அது குற்றவாளியின் உரிமை!

கீழமை நீதிமன்றம் செய்த தவறுக்காக, குற்றாவாளிக்கு உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்படும் ஆயுள் தண்டனையினை மற்ற ஆயுள் தண்டனையிலிருந்து வேறுபடுத்திப் பார்ப்பது என்பது தர்க்க ரீதியில் மட்டுமல்ல, தார்மீக ரீதியிலும் சரியான ஒரு செயலல்ல என்பதே எனது கருத்து.


-oOo-


நீதிபதிகள், இவ்வாறு தள்ளுபடி இல்லாமல் ஒருவரை ஆயுள் முழுமைக்கும் சிறையில் வைத்திருப்பதற்காக கூறும் மற்றொரு கருத்தும் கவனிக்கத்தகுந்தது. அதாவது, ஒரு குற்றத்தின் தன்மையானது மரண தண்டனை வழங்குவதற்கு சற்று குறைவாக இருக்கிறது. அவ்வாறான சூழ்நிலையில் 14 ஆண்டுகள் என்பது மிகக் குறைவான தண்டனையாக கருதும் நீதிபதி, மரண தண்டனை அளிக்க தூண்டப்படலாம். எனவே இவ்வாறு 14 ஆண்டுகளுக்கும் மேலாக குற்றவாளியினை சிறையில் வைத்திருக்கும் வண்ணம் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

ஆனால், இங்கு நீதிபதிகள் கவனிக்க தவறுவது, ‘மக்களாட்சி அமைப்பில், நாகரீகமான குற்றவியல் முறையில், நீதிமன்றத்தின் பணியானது குற்றவாளி செய்த குற்றத்திற்கு அதிகபட்சம் இந்த அளவிற்கு தண்டிக்கலாம் என்று நிர்வாகத்திற்கு அனுமதி வழங்குவதோடு நின்று விடும்’ என்பதே!

குற்றத்திற்கு தண்டனை வழங்குவது என்பது, சமூகத்தின் ஒழுங்கினை குற்றச்செயல்களில் இருந்து பாதுகாப்பதற்கே!. அதற்காக குற்றவாளியை எவ்வளவு தூரம் தண்டிக்கலாம் என்பது மக்களோடு நேரடித் தொடர்பில் உள்ள நிர்வாகம் மற்றும் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சியாளர்களின் மனக்கவலை.

எனவே நீதிமன்றங்கள் இவ்வளவு தூரத்திற்கு நீங்கள் தண்டித்துக் கொள்ளலாம் என்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற வகையில்தான் குற்றவியல் நடைமுறைச்சட்டம் இயற்றப்பட்டுள்ளது.


-oOo-


சில குற்றவாளிகளை நீதிமன்றம் அனுமதித்த அதிகபட்ச அளவில் தண்டிக்கவும், சில குற்றவாளிகளை விடுதலை செய்வதிலும் அரசிற்கு உள்ள தேவைகளை உணர்ந்தே, நமது அரசியலமைப்புச் சட்டத்திலேயே குடியரசுத் தலைவருக்கும், மாநில ஆளுநருக்கும் குற்றவாளிகளை மன்னித்து விடுதலை செய்யும் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. (பிரிவு 72 மற்றும் பிரிவு 161).

இந்த அதிகாரமானது, அரசியலமைப்புச் சட்டத்திலேயே கொடுக்கப்பட்டுள்ளதால், இவற்றை உச்ச நீதிமன்றம் பறிக்க இயலாது. ஷக்கீரா தீர்ப்பிலும் நீதிபதிகள் ‘இந்த தீர்ப்பானது அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்ட அதிகாரத்தினைப் பற்றியதல்ல (Here it needs to be made absolutely clear that this judgment is not concerned at all with the Constitutional provisions that are in the nature of the State's sovereign power) என்று 56ம் பத்தியில் தெளிவாக குறிப்பிடுகிறார்கள்.

எனவே அரசியலமைப்புச் சட்டம் அளிக்கும் அதிகாரத்தினைப் பயன்படுத்தி நளினியை அல்லது சராதானந்தாவை விடுதலை செய்ய அரசு முடிவெடுக்கையில் உச்ச நீதிமன்றத்தினால் அதனை தடுக்க இயலாது.

அரசியலமைப்பு சட்டம் சரி, குற்றவியல் நடைமுறை சட்டத்தில் அரசிற்கு உள்ள அதிகாரத்தினை இந்த தீர்ப்பின் மூலம் பறிக்க முடியுமா என்பது அடுத்த கேள்வி...


-oOo-


மதுரை
16.10.08

12.10.08

நளினிக்கு கருணை, கானல் நீர்தானா? - 2




சக்கீராவின் கொலை, மனதைத் தைப்பதாக இருந்தாலும் இந்தியா முழுவதும் அவ்வப்பொழுது நிகழக்கூடிய சாதாரண ஒரு குற்றம்தான். சக்கீரா கொலையில் திவான் என்ற இடத்தில் தாசில்தார் அலுவலக எழுத்தர் எனவும், பெங்களூரு என்ற இடத்தில் மதுரை எனவும், தூதர் என்ற இடத்தில் வங்கி காசாளர் எனவும், கோடி என்ற இடத்தில் ஆயிரம் எனவும், லண்டன் என்ற இடத்தில் சென்னை என்றும் நிரப்பினால், தண்டனைக்காக நீதிபதிகள் இவ்வளவு தூரம் குழம்பியிருக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.

எனவேதான், இதனினும் கொடூர கொலைகாரர்கள் ஆயுள்தண்டனையோடு தப்பிக்கையில், சாரதானந்தாவுக்கு மரணம்தான் தண்டனை என்ற முடிவுக்கு நீதிமன்றங்கள் வந்திருக்கலாம்.

கொலை செய்யப்படுபவர்களின் தகுதியும் இங்கு பல சமயங்களில் தண்டனையினை, குறிப்பாக மரண தண்டனையினன நிர்ணயித்திருக்கின்றன என்ற எனது சந்தேகத்திற்கு வலு சேர்க்கும் மற்றும் ஒரு வழக்கு சக்கீராவின் கொலை.

மேலும், அடுத்தவரின் மனைவியை அபகரிக்கும் ஒரு செயல், கொலைக்கான தண்டனையை நிர்ணயிக்கும் முக்கிய காரணியாக இங்கு கருதப்படுகிறது. நானாவதி, குறைந்த தண்டனையோடு தப்பித்ததற்கும், சாரதானந்தா தூக்கு மேடை அருகே சென்று திரும்பியதற்கும், இதுவே முக்கிய காரணி!


-oOo-


சக்கீராவின் வழக்கினைப் படிக்கும் எவருக்கும், முக்கியமாக ஆண்களுக்கு சாரதானந்தாவின் மீது கோபம் எழுவது இயல்பான ஒன்றே...அது பொறாமையால் விளைந்ததாக கூட இருக்கலாம்.

ஆயினும், அவரை தூக்கிலிடுவது தவறான ஒரு முன்னுதாரணமாகி விடுமோ, என்ற குற்றவுணர்வு நீதிபதிகளை, முக்கியமாக தண்டனையை பற்றி தீர்மானிக்க வேண்டிய மூன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும் எழுந்திருக்கலாம்.

சரி, தூக்கு இல்லை என்றால்...ஆயுள் தண்டனை. ஆனால் ஆயுள் தண்டனை கைதிகள் 14 ஆண்டுகளில் வெளியே வந்து விடக்கூடிய ஆபத்து உள்ளது. சாரதானந்தா ஏற்கனவே பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்தாகி விட்டது. அவ்வளவுதானா தண்டனை?

இது என்ன, மரண தண்டனை இல்லையென்றால் 14 ஆண்டுகள்தான. இரண்டு வகை தண்டனைக்களுக்குமான இடைவெளி இவ்வளவு தூரமா, என்ற நீதிபதிகளின் மனவோட்டத்தின் வெளிப்பாடுதான்...சாரதானந்தாவை அவரது ஆயுட்காலம் வரை சிறையில் வைத்திருக்க வேண்டும் என்ற தண்டனை.


-oOo-


இதற்காக, சாதாரண ஆயுள் தண்டனை, மரணதண்டனைக்கு மாற்றாக வழங்கப்படும் ஆயுள் தண்டனை என்று ஆயுள் தண்டனையை, சட்டத்தில் அவ்வாறு இல்லையெனினும் இரண்டு வகையாக பிரிக்கும் முயற்சியில் நீதிபதிகள் ஈடுபட்டு பல்வேறு முன் தீர்ப்புகளை ஆராய்ந்து, எவ்வாறு சாரதானந்தாவை ஆயுள் வரை சிறையில் வைத்திருக்க இயலும் என்றும் தீர்ப்பு கூறியுள்ளனர்.

ஆனால், தங்களது தீர்ப்பு அரசியலமைப்புச் சட்டப்படியும், குற்றவியல் நடைமுறைச் சட்டப்படியும் சாத்தியமானதுதானா என்றும் முழுமையாக ஆராயவில்லை என்றே நினைக்கிறேன்.

தங்களது தீர்ப்பினை அவ்வாறு செய்ல்படுத்துவது சாத்தியமா? அதன் பின் விளைவுகள் என்ன என்று ஆராயாமல் விட்டது கூட முக்கியமல்ல...அப்படியே ஒருவரை ஆயுள் முடியும் வரை, வெளியே வருவதற்கு எவ்வித வாய்ப்பின்றியும் சிறையில் வைத்திருப்பதன் கொடூரத்தைப் பற்றி கொஞ்சம் கூட தங்கள் தீர்ப்பில் கவலைப்படாமல் போனதுதான்.....அதிர்ச்சியளிக்கும் ஒரு விடயம்.

தன் வாழ்நாள் முழுவதும் இனி இந்த நான்கு சுவர்களுக்குள்தான் என்ற நினைப்பில் ஒருவன் வாழ்வது, மரண தண்டனையை விட கருணை மிக்கதா என்ன?

இந்தச் சூழ்நிலையில் நளினிக்கு காட்டப்பட்டது உண்மையிலேயே கருணையா என்ற கேள்வி எழுகிறது.

பதினெட்டு ஆண்டுகளுக்கு மேலாக சிறையே தனது வசிப்பிடமாக கொண்டுள்ள பேரறிவாளனும், இதே கேள்வியைத்தான் கேட்கிறார், ‘ஒன்று என்னை தூக்கில் போடுங்கள்...அல்லது என்று விடுதலை என்று என்றாவது சொல்லுங்கள்’.


-oOo-


மதுரை
11.10.08

10.10.08

நளினிக்கு கருணை, கானல் நீர்தானா? - 1





ராசீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி, பேரறிவாளன் மற்றும் சில குற்றவாளிகள் தங்களது விடுதலைக்காகவும், தண்டனைக்குறைப்புக்காகவும் தமிழக அரசின் ‘கருணை’யை மட்டுமே எதிர் நோக்கியுள்ள நிலையில்...அவர்களது, மற்றும் அவர்களுக்காக களமிறங்கியுள்ளவர்களது நம்பிக்கைக்கு குறுக்கே நிற்கப்போவதாக கூறப்படுவது, சமீபத்தில் பெங்களூருவைச் சேர்ந்த சக்கீரா கொலை வழக்கில் நமது உச்ச நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பு!

முதலில், கொலைக்குற்றவாளிகளுக்கு தண்டனை விதிப்பதில் நீதிபதிகளுக்குள்ள மனவோட்டத்தினை அறிய, அந்த வழக்கின் தன்மையினை தெரிந்து கொள்வது அவசியம்.


-oOo-


சக்கீரா (Shakereh) மைசூர் சமஸ்தானத்தின் திவானாக இருந்தவரின் பேத்தி.. பல கோடி சொத்துக்களின் அதிபதி. முக்கியமாக, பெங்களூரு ரிச்மாண்டு சாலையில் இருந்த 38,000 சதுர அடியில் மற்றும் வெல்லிங்டன் வீதியில் 40,000 சதுர அடியில் கட்டப்பட்டுள்ள பங்களாக்களை கூறலாம். சக்கீராவின் கணவர் இந்திய அயலுறவுத்துறை அதிகாரி (IFS). நான்கு பெண் குழந்தைகள்.


1983ம் வருடம் ராம்பூர் நவாபின் விருந்தாளியாக சென்றிருந்த பொழுது, சக்கீராவுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட நபர்தான் முரளி மனோகர் மிசுரா என்ற சுவாமி சாரதானந்தா (Swamy Shraddananda). சக்கீராவுக்கு தனது நிலங்களை நிர்வகிப்பதில் பிரச்னை இருக்கவே அதில் உதவி புரிவதற்காக பெங்களூருவுக்கு வந்த சாரதானந்தா, ரிச்மாண்டு சாலை பங்காளிவிலேயே குடும்ப உறுப்பினர் போல தங்கினார்.

ஈரான நாட்டு தூதராக நியமிக்கப்பட்ட சக்கீராவின் கணவர், குடும்பத்தை பெங்களூருவிலேயே விட்டுச் செல்லும் நிலை ஏற்ப்பட்டது. தனது மாந்திரீக சக்தியினால் சக்கீராவுக்கு ஆண் வாரிசினை உருவாக்க முடியும் என்று அவரை நம்ப வைத்த சாரதானந்தா, பின்னர் சக்கீராவை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.

விரைவிலேயே சக்கீராவின் திருமணம் விவாகரத்தில் முடிய சாரதானந்தாவை மணமுடித்தார். மகள்கள் அனைவரும் வெளிநாட்டிலேயே தங்கி விட, சக்கீராவும் சாரதானந்தாவும் மட்டும் பெங்களூரிலேயே வசித்தனர்.

சக்கீரா தனது அன்பினை மட்டுமல்லாமல், சொத்துக்கள் அனைத்தையும் சாரதானந்தாவின் மீது கொட்டினார். தனது சொத்துக்களை குறித்த முகவராக (Power of Attorney) சாரதானந்தாவை நியமித்தது மட்டுமில்லாமல், அனைத்தையும் அவரது பெயரிலேயே உயில் எழுதினார். பல்வேறு வங்கி கணக்குகள், லாக்கர்கள் மற்றும் வியாபாரம் இருவரது கூட்டுப் பெயரில் ஆரம்பிக்கப்பட்டது.

ஆயினும், சக்கீரா மகள்கள் மீதான தனது தொடர்பினை துண்டிக்கவில்லை. அவ்வப்பொழுது அவர்கள் சந்தித்துக் கொண்டிருந்தனர்.


-oOo-


1991ம் வருடம் மே மாத இறுதியில் சக்கீரா திடீரென தனது 40வது வயதில் காணாமல் போனார். ஏப்ரல் மாதத்தில் அவரது மகளுடன் தொலை பேசியதுதான், குடும்பத்துடனான அவரது தொடர்பு.

வேலைக்காரன் ராசு அவரை இறுதியாக மே 28ம் தேதி சாரதானந்தாவுடன் பார்த்ததாக பின்னர் கூறினார்.

சக்கீராவின் மகள் சாபா (Sabah), சாரதானந்தாவை தனது அம்மா எங்கே என்று வினவும் பொழுதெல்லாம், அவர் ஐதராபாத் சென்றுள்ளதாகவும், கட்ச்சுவிற்கு (Kutch) வைர வியாபாரி ஒருவரின் திருமணத்திற்கு சென்றுள்ளதாகவும் சாக்கு கூறிவந்தார். பின்னர் வருமான வரிப் பிரச்னைகளுக்கு பயந்து வெளி வராமல் இருப்பதாகவும் கூறினார்.

வெறுப்படைந்த சாபா, பெங்களூருவுக்கு நேரில் வந்தால் சக்கீராவை காணவில்லை. இந்த முறை சாரதானந்தா, சக்கீரா பிரசவத்திற்காக அமெரிக்கா சென்றுள்ளதாக கூறினார். அமெரிக்க மருத்துவமனைக்கு தொடர்பு கொண்டால், அவ்வாறு யாரும் அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை!

சாரதானந்தா தளரவில்லை. சக்கீரா லண்டன் சென்றிருப்பதாகவும், அவரது இருப்பிடத்தை ரகசியமாக வைத்துள்ளதாகவும் கூறினார். ஆனால், சாரதானந்தாவை மும்பை விடுதி அறையில் சந்திக்க சென்ற சாபா, அங்கு தற்செயலாக சக்கீராவின் கடவுச் சீட்டை (Passport) காண நேரிட்டது.

உடனடியாக சாபா, பெங்களூரு அசோக் நகர் காவல் நிலையத்தில் தன் தாயார் காணாமல் போனதாக ஒரு புகார் அளித்தார். சாரதானந்தாவோ, முன் பிணை மனு (anticipatory bail) தாக்கல் செய்து, பிணை பெற்றார். பிணை மனுவில் தனது உறவினர்களுடன் ஏற்ப்பட்ட வழக்குகள் நிமித்தம் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான, சக்கீரா கோபத்துடன் வீட்டை விட்டு வெளியே சென்றதாக குறிப்பிட்டார்.

அசோக் நகர் காவல் நிலைய விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்ப்படவில்லை. ஆயினும் சாபாவின் முயற்சியில் வழக்கானது மத்திய குற்றப்பிரிவிற்கு மாற்றப்பட்டு அவர்களது தீவிர விசாரணையில், சாரதானந்தா தான் சக்கீராவை கொன்று தங்களது பங்களாவிலுள்ள படுக்கையறைக்கு கீழே புதைத்து வைத்ததை ஒத்துக் கொண்டார்.


-oOo-


விசாரணையில், சக்கீராவின் கொலைக்கு பின்னர் அவர் அளித்த முகவர் அதிகாரத்தினை பயன்படுத்தி அவரது பல்வேறு சொத்துக்களை விற்றதும் தெரிய வந்தது. மட்டுமல்லாது, கொல்லப்படுவதற்கு முன்னரே, சக்கீராவின் உடலை புதைப்பதற்காக கவனமாகவும் நிதானமாகவும் அவர் திட்டமிட்ட விபரமும் தெரிய வந்தது.
பெங்களூரு நகர அமர்வு நீதிமன்றம் (Sessions Court) திட்டமிட்ட கொலைக்காக, சாரதானந்தாவுக்கு மரண தண்டனை அளித்தது. அமர்வு நீதிமன்றம் மரண தண்டனை அளிக்கையில் குற்றவியல் நடைமுறை சட்டம் (Criminal Procedure Code) பிரிவு 366ன் உயர்நீதிமன்றம் தண்டனையினை உறுதி செய்ய வேண்டும்.

உயர்நீதிமன்றம் மரண தண்டனையை உறுதி செய்தது.

உச்ச நீதிமன்றத்தில் சாரதனந்தா மேல் முறையீடு தாக்கல் செய்தார். சாரதானந்தா குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால் ஒரு நீதிபதி குற்றவாளிக்கு மரண தண்டனை எனவும் மற்ற நீதிபதி ஆயுள் காலம் முழுவதும் வெளி வர இயலாத ஆயுள் தண்டனை எனவும் கூறினர்.

எனவே, தண்டனை குறித்து மட்டும் தீர்ப்பு கூற வழக்கானது மூன்று நீதிபதிகள் அடங்கிய மன்றத்தின் முன் வைக்கப்பட்டது.

அவ்வாறு மூன்று நீதிபதிகள் அடங்கிய மன்றம் அளித்த தீர்ப்புதான், தற்பொழுது பிரச்சினையாக எழப்போகிறது.

-oOo-


மதுரை
10.10.08



மேலே படத்தில் மீண்டும் 'Shimla Mall' தான். அங்கு சுவராசியமான இடம் இந்த கடைத்தெரு ஒன்றுதான்.

1.7.08

கருத்தும், கவிதையும்...காமக்கதையும்...



அரிஜித் பசாயத்.....உச்ச நீதிமன்றத்தில் தற்பொழுது பணியாற்றும் நீதிபதிகளில் சுறுசுறுப்பு மிக்கவர். நெருங்கி வரும் தனது பணி ஓய்விற்குள்ளாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு வழக்குகளில் தீர்ப்பு கூற வேண்டும் என்ற தாகத்துடன் செயல்படுகிறார். அதே போல பரபரப்பிற்கும் பஞ்சமில்லாதவர்.

சமீபத்தில் பிரிந்து வாழும் கணவன் மனைவிக்கிடையே, ‘குழந்தை யாரிடமிருப்பது’ என்ற வழக்கினை விசாரித்த இவர், ‘இந்து திருமண சட்டம் திருமணங்களை உடைக்கவே பயன்படுகிறது’ என்பது போல ஒரு கருத்தினை உதிர்க்க அது பத்திரிக்கைகளில் பெரிய செய்தியாக வெளிவந்தது. அதற்கு சில நாட்களுக்கு முன்னர் இவரது நீதிமன்றத்தில் வாதிடப்பட்ட பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளியின் பெயர் நேரு என்பதை அறிந்தவர், ‘குற்றவாளிகளிடம் இருந்து தேசத்தலைவர்களின் பெயர்களை பறிக்க அரசு ஏதாவது செய்ய வேண்டும்’ என்று முழங்க அதுவும் செய்தியானது!

முதலாவது கருத்தாவது ஒரு விவாதப் பொருள். இரண்டாவது அபத்தம்.

எதுவாயினும், நீதிபதிகள் இவ்வாறு தங்களது சொந்த கருத்துக்களை உதிர்க்க நீதிமன்ற அறையினைப் பயன்படுத்துவது ஒரு வகையில் அதிகார துஷ்பிரயோகம்தான் என்பது எனது தாழ்மையான கருத்து.

தங்களது தீர்ப்புகளில் நீதிபதிகள் கவிதையினையும், திருக்குறள் போன்றவற்றை நுழைப்பது கூட அப்படித்தான்.

எனக்குத் தோன்றும் ஒரு கருத்தினை அல்லது நான் ரசித்த ஒரு கவிதையினை மற்றவர்களோடு இவ்வாறு ஒரு பதிவு எழுதுவதன் மூலம் பகிர்ந்து கொள்ளுவதில் எனக்கு ஒரு இன்பம் ஏற்ப்படுகிறது. ஆனால், இதற்காக நான் செலவழிப்பது, எனது கணனியும் மின்சாரமும்!

அவ்வாறின்றி அந்த இன்பத்தினைப் பெற எனது பதவி தரும் சில வசதிகளை நான் பயன்படுத்துவது, ஏறக்குறைய அலுவலக ஊர்தியினை சொந்த காரியங்களுக்கு பயன்படுத்துவது போன்ற ஒரு செயல்தான்.

-oOo-

எழுத்தாளர் ஞாநியை குறை கண்டுபிடிப்பது வரவர உற்சாகம் தரும் ஒரு செயலாக இருக்கிறது. கடந்த வார குமுதத்தில் ‘ஓரின சேர்க்கை’ என்பது இந்திய சட்டப்படி குற்றம் என்பது போல எழுதியிருக்கிறார். குறை என்று கூற முடியாது. ஆனாலும் ஆர்வம் உள்ளவர்களுக்கு சில விளக்கங்கள் உதவலாம் என்பதால்...கொஞ்சம் காமக்கதை!

இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 377ஐ மனதில் வைத்து எழுதியிருப்பார் என நினைக்கிறேன். தமிழில் மொழி பெயர்க்கப் போவதில்லை.

“Whoever voluntarily has carnal intercourse against the order of nature with any man, woman or animal, shall be punished with imprisonment for life, or with imprisonment of either description for term which may extend to ten years, and shall also be liable to fine.
Explanation. -Penetration is sufficient to constitute the carnal intercourse necessary to the offence described in this section”

ஆக இந்தப் பிரிவின் கீழ் குற்றம் என்பது ஓரினபாலரை மட்டும் குறி வைக்கவில்லை என்பதை அறியலாம்.

-oOo-

அது என்ன ‘carnal intercourse against the order of nature’?

சென்னை வழக்கு ஒன்றில் (Brother John Antony Vs State 1992 CrLJ Mad 1352) இதனை விரிவாக ஆராய்ந்த நமது நீதிமன்றம் மூன்று வகையான sodomy, buggery மற்றும் bestiality போன்ற பாலியல் வக்கிரங்கள் (sexual perversions) இந்த குற்ற விளக்கத்திற்குள் அடங்கும் என்று கூறுகிறது.

முக்கியமாக sodomy என்பதன் விளக்கம் கவனிக்கத்தக்கது. மீண்டும் தமிழில் மொழி பெயர்க்கப் போவதில்லை.

Non coital carnal copulation with a member of the same or opposite sex e.g. per anus or per os (mouth)

இந்த விளக்கத்தின் மூலம், ஓரினசேர்க்கையோ, ஈரினசேர்க்கையோ குற்றமும் தண்டனையும் அனைவருக்கும் பொதுதான் என்பதை அறியலாம்.

எனது கேள்வி இதுதான்...

Are you sure, you have not ever committed any crime, punishable under law with life imprisonment?

-oOo-

பதிவாளர் பாலபாரதி தனது விடுபட்டவை பதிவில், ‘காவல்துறை வாகனங்களுக்கு’ இன்ஸூரன்ஸ் (காப்பீடு) சென்னையில் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவது கிடையாது. அதனால் அதில் அடிபட்டு விட வேண்டாம் என்று எழுதியிருக்கிறார்.

காவல்துறை மட்டுமல்லாது, அனைத்து அரசு வாகனங்களுக்கும், மோட்டர் வாகன சட்டமானது (Motor Vehicle Act) கட்டாய காப்பீட்டிலிருந்து விலக்கு அளிக்கிறது. அதற்காக வண்டியில் அடிபடுபவர்களுக்கு நஷ்ட ஈடு கிடைக்காது என்பதல்ல. அரசிடம் இருந்து பெற முடியும்.

வாகன விபத்தில் அடிபடுபவர்களுக்கு வாகன உரிமையாளர் நஷ்ட ஈடு தர வேண்டும். உரிமையாளரிடம் அவ்வளவு பணம் இருக்காது என்பதால், காப்பீடு நிறுவனங்கள் தருகின்றன. அரசு அவ்வாறு கூற முடியாதே!

இவ்வாறு கிடைக்கும் நஷ்ட ஈடு, விபத்து நடந்தவுடன் அரசு தன்னிச்சையாக அறிவிக்கும் உதவித்தொகையல்ல. அது வேறு!

-oOo-



QUTUB MINAR, NEW DELHI



மதுரை
01.07.08

17.4.08

சாய் பாபாவும் இராமரின் மோதிரமும்!

கடந்த மாதம் ஏதோவொரு தொலைக்காட்சியில், புட்டபர்த்தி சத்திய சாய்பாபாவை பற்றிய அவரது நிறுவனம் தயாரித்த ஆவணபடம் ஒன்றினை பார்த்தேன். இறுதியில் பொது நிகழ்ச்சியில், தனது வாயிலிருந்து பெரிய பச்சைக்கல் பதித்த மோதிரமொன்றினை எடுத்துக் காட்டி, ‘திருமணத்தின் பொழுது ராமர் சீதைக்கு அணிவித்த மோதிரம்’ என்று தெரிவித்தார். கூட்டம் வியப்பிலாழ மோதிரத்தினை அவரது முன்னே வைத்தார்.

ஆவணப்படத்தில் வர்ணனை வழங்கியவர், அது பின்னர் மறைந்துவிடும் என்று கூற தொலைக்காட்சித் திரை முழுவதுமாக மங்க மோதிரம் மறைந்து போனது!

இவ்வாறாக சாய்பாபா நகைகளை கொணர்வது பற்றிய விபரங்கள் அவர்களது வலைத்தளத்திலும் கண்ணுற்றேன்.

-oOo-

ராமர் சீதைக்கு அணிவித்த மோதிரம் என்றால் அரிய பழம் பொருள் ஆயிற்றே. அரசுக்கு தெரிவிக்காமல் அதனை வைத்திருக்கலாமா என்ற இயல்பான சந்தேகம் எழுந்தது.

1958ம் வருடம் இயற்றப்பட்ட ‘The Ancient Monument and Archeological Sites and Remains Act’ என்ற புராதான சின்னங்களைப் பற்றிய சட்டத்தில் பழம்பொருட்கள் பற்றியும் கூறப்படுகிறது. ராமர் சீதைக்கு அணிவித்த மோதிரமென்றால், இந்த சட்டப்பிரிவில் பழம்பொருள் (antiquity) என்று விளக்கப்படும் பதத்திற்குள் வரும். ஆனால் இந்தச் சட்டப்பிரிவுகளின்படி, மத்திய அரசாங்கம் ஏதாவதொரு பழம்பொருளானது ஒரிடத்திலிந்து மற்றொரு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்படக்கூடாது எனில் அவ்வாறு அறிவிக்கலாம். அவ்வாறான உத்தரவு மீறப்பட்டாலே அது தவறாகும்.

எனவே சாய் பாபா ராமரின் மோதிரத்தினை வைத்திருப்பதில் ஏதும் தவறில்லை!

-oOo-

பின்னர் 1972ம் ஆண்டில், ‘The Antiquities and Art Treasures Act’ என்று பழம்பொருட்கள் மற்றும் கலைச்செல்வங்களுக்காக தனியே ஒரு சட்டமியற்றப்பட்டது.

இந்த சட்டப்பிரிவுகளின்படி பழம்பொருட்களை ஏற்றுமதி செய்தல், விற்றல் ஆகியவற்றில் பல கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டது. முக்கியமாக பழம்பொருட்களை வைத்திருப்பவர்கள் அவற்றை மத்திய அரசிடம் தெரிவித்து அதனைப் பற்றிய விபரங்களை பதிய (register) வேண்டும்.

ஆனால் மத்திய அரசு எந்த எந்த வகையான பழம்பொருட்களை பதிய வேண்டும் என்று அறிவிக்கிறதோ அவற்றை பதிந்தால் போதுமானது.

ராமர் சீதைக்கு அணிவித்தது, தங்க நகை/ ஆபரணம். இதனை பதிவு செய்ய வேண்டுமா என்று பார்த்தால் மத்திய அரசு இதற்காக 1976ம் ஆண்டு GSR 280(E) என்ற அறிவிக்கையினை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் ‘வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகைகள்’ பதிவு செய்யப்பட வேண்டிய பழம்பொருட்கள் பட்டியலில் வருகிறது.

ஆக, சாய்பாபா இந்தச் சட்டத்தின்படி தன்னிடம் உள்ள பழம்பொருளான நகை பற்றிய விபரத்தினை மத்திய அரசிடம் பதியாமல் விடுவது தவறுதான்.

ஆனால், 1980ம் வருடம் மத்திய அரசு S.0. 397(E) என்ற அறிக்கை மூலம் பதிவு செய்ய வேண்டிய பழம்பொருட்களின் திருத்தப்பட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் நகைகள் விடப்பட்டுள்ளது. எனவே சாய் பாபா தான் எடுக்கும் நகைகளை பதிய வேண்டியதில்லை.

எனவே 1976ம் ஆண்டிலிருந்து 1980ம் ஆண்டு வரைதான் இந்தப் பிரச்சினை. பின்னர் இல்லை. சாய்பாபா நகைகளை வைத்திருப்பதில் தவறு ஏதும் இல்லை!

-oOo-

இந்த வெட்டி ஆராய்ச்சிக்காக வலையினை மேய்கையில், இதை விட வெட்டி ஆராய்ச்சி செய்து ‘சாய்பாபா’ பக்தர்களுக்கு அளிக்கும் தங்க நகைகள் மூலம் தங்க கட்டுப்பாடு சட்டத்தினை மீறுகிறார் என்று பல ஆண்டுகளுக்கு முன்னரே அவர் மீது ஒருவர் வழக்கு தொடர்ந்த விபரம் கிடைத்தது

-oOo-

ஞாநி பிரச்சினை விடாது போலிருக்கிறது. சுடுவது சுகம் என்ற வலைப்பதிவில் காப்பிரைட் பற்றிக் கவலைப்படாமல் ஞாநியின் கட்டுரையொன்றினை பதிந்திருக்கிறார்கள். அதில் ஞாநி இவ்வாறு ஆரம்பிக்கிறார்

தனிநாடு கோருவது சட்ட விரோதம என்ற சட்டத்தை மத்திய அரசு 1963ல் கொண்டு வந்ததும, அதுவரை தன் திராவிடநாடு கோரி வந்த திராவிட முன்னேற்றக் கழகம் பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டது

நானறிந்த வரையில் அவ்வாறு 1963ம் வருடம் சட்டம் ஏதும் இயற்றப்படவில்லை!

இந்தியா - சீனா போர் சமயத்தில் நாடு முழுவதும் எழும்பிய தேசபக்தி அலையிலும், இம்மாதிரியான கொள்கைகளை கொண்டிருக்கும் கட்சிகள் தடை செய்யப்படலாம் என்ற மறைமுகமான மிரட்டல்களாலும்தான் திமுக பிரிவினை கோரிக்கையினை கைவிட்டது என்பது எனது அனுமானம்.

அவ்விதம் ஏதும் சட்டம் இயற்றப்பட்டு, யாரேனும் ‘பாபா’ உட்பட (சாய்பாபா இல்லை நம்ம பாபா) தெரிவித்தால் நன்றியுடையவனாக இருப்பேன்.

-oOo-

இந்திய நீதிமன்றத் தீர்ப்புகளை பற்றி சட்டபூர்வமாக அலசும் ஒரு ஆங்கிலப்பதிவில் சுட்டியினை பத்ரி தந்துள்ளார். மணற்கேணியினைப் போல இல்லாமல் மேலும் ஆழமாக சட்டத்தினை ஆழமாக படிக்க விரும்புவர்களுக்கு உதவும்.
http://lawandotherthings.blogspot.com/

மதுரை
18.04.08

29.3.08

இந்திய ஆட்சி மொழியும் நீதிமன்ற நிலைப்பாடும் - பகுதி II


ஹிந்தி வேண்டாம் என்றால் ஆங்கிலம் மட்டும் அந்நிய மொழியில்லையா? அதன் தேவை என்ன? உணர்வு பூர்வமாக அணுகினால் இந்த வாதம் சரியே! ஆனால் நடைமுறையில், இந்தியா ஒன்றுபட்டிருப்பதற்கு ஆங்கிலம் முக்கியமான ஒரு காரணம் என்று நான் உணர்கிறேன். இதை நான் சந்தித்த பலரும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

உதாரணமாக, அரசியலமைப்புச் சட்டத்தின் 345வது பிரிவின் படி மாநில அரசுகள் ஹிந்தியையோ அல்லது அந்தந்த மாநிலத்தில் பயன்படுத்தப்படும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மொழியையோ தனது அலுவலகப் பணிகளுக்கான மொழியாக பயன்படுத்த அனுமதியளிக்கிறது.

348வது பிரிவின் படி குடியரசுத் தலைவரின் அனுமதி பெற்று மாநில அரசு ஹிந்தியையோ அல்லது அந்த மாநிலத்தில் அரசுப் பணிகளுக்காக பயன்படுத்தப்படும் மொழியையோ அந்த மாநிலத்தில் உள்ள உயர்நீதிமன்றத்தில் பயன்படுத்தலாம் என்று கூறுகிறது. இவ்வாறான ஒரு நிலையில் என்ன நிகழும்?

நீதிமன்றத்துக்கு நீதிமன்றம் குழப்பம் நிலவும். உயர் நீதிமன்றங்களில் இருந்து மேல் முறையீட்டுக்கு உச்ச நீதிமன்றம் செல்கையில் மேலும் குழப்பம். ஏறக்குறைய இவ்வாறான நிலையை கிறிஸ்தவர்களின் வேதத்தில் கூறப்படும் 'பாபேல் கோபுர' நிலைக்கு சட்ட மேதை எச் எம் சீர்வாய் ஒப்பிடுகிறார்.

ஆங்கிலம் ஒன்றே இந்த நாட்டு மக்களை ஒருங்கிணைக்கும் ஒரு கருவியாக, நாட்டின் பல மாநிலங்களுக்கும் பயணம் செய்திருக்கும் பலர் அறிவர்.

-oOo-

1952ல் ஹிந்தியும், தேவநாகரி எண்களும் மாநில ஆளுஞர்கள், உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோரை நியமிக்கும் உத்தரவில் பயன்படுத்தப்படலாம் என்பது நடைமுறைக்கு வந்தது.

1955ல் பிற அரசுப் பணிகளுக்காகவும் ஹிந்தி பயன்படுத்தப்படலாம் என்பது நடைமுறைப்படுத்தப்பட்டது.

1956ல் அரசியலமைப்புச் சட்டம் விரும்பியபடி, ஹிந்தியின் பயன்பாட்டை அதிகரிக்க ஆலோசனை வழங்க அமைக்கப்பட்ட பி.ஜி.கெர் ஆணையம் தனது அறிக்கையை குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பித்தது.

1959ல் கெர் ஆணையத்தின் அறிக்கையை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட கோபிந் வல்லப் பந்த் தலைமையில் அமைக்கப்பட்ட பாராளுமன்ற குழு தனது அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து ஆட்சி மொழியினைப் பற்றிய விவாதம் தொடங்கியது.

விவாதம் சூடு பிடிக்க, நேரு 'இந்தியாவின் அனைத்து மொழிகளும் அதன் தேசிய மொழிகளாக சமமாக மதிக்கப்படும். ஆங்கிலம் ஹிந்தியோடு தொடர்ந்து அரசுப் பணிகளுக்காக பயன்படுத்தப்படும். அதனை நீக்குவதற்கான கால அவகாசம் ஏதும் கிடையாது' என்று பாராளுமன்றத்தில் உறுதியளித்தார்.

ஆனால் தேசிய மொழி என்பது உணர்வு பூர்வமான பதம். சட்டபூர்வமான அங்கீகாரம் அதற்கு கிடையாது.

-oOo-

1960ல் ஹிந்தியை பரப்புவதற்காகவும், மைய அரசு அதிகாரிகளுக்கு ஹிந்தி பயிற்சி அளிப்பதற்காகவும், ஹிந்தி கலைச்சொற்கள், நடைமுறை வழக்கத்திற்காக ஹிந்தி கையேடுகள் உருவாக்கவும் மற்றும் உயர் நீதிமன்ற உச்ச நீதிமன்றத்தில் பயன்படுத்தப்படும் வண்ணம் ஹிந்தி சட்ட வரைவுகளை எழுதவும் அதிகாரமளித்து குடியரசுத் தலைவரின் உத்தரவு கையெழுத்தானது.

இந்த உத்தரவின்படி 45 வயதுக்கு குறைவான மைய அரசு அதிகாரிகள் கண்டிப்பான ஹிந்தி வகுப்புகளுக்கு செல்ல வேண்டும். அதில் தேறாவிட்டால் தண்டனை ஏதும் கிடையாது என்றாலும் தேறியவர்களுக்கு ஊக்கத் தொகை போன்றவை வழங்கப்படும். ஹிந்தி பேசும் பகுதிகளில் உள்ள மைய அரசு பணிக்கான பணியாளர்களை நியமிக்கையில் அவர்களுக்கு தேவையான ஹிந்தி அறிவு இருத்தல் வேண்டும்.

1962ல் வெளியான ரயில்வே போர்டு அறிவிப்பு, 'ஹிந்தி பயிற்சி மிகவும் மந்தமாக இருப்பதாக கவலைப்பட்டு பயிற்சிக்கு வராத அலுவலர்கள் வேலைக்கு வராதவர்களாக கருதப்படுவார்கள்' என்று எச்சரித்தது.

போதாதா? தமிழக அரசியல் மொழிப் பிரச்னையில் மெல்ல மெல்ல புகையத் தொடங்கியது.

இதற்கிடையில் அரசியலமைப்புச் சட்டத்தின் பதினைந்து வருட கெடு நெருங்கிக் கொண்டிருந்தது. நேருவுக்கோ இரு பக்கமும் நெருக்கடி!

-oOo-

பதினைந்து ஆண்டுகள் ஆனாலும், ஆங்கிலத்தின் பிடியை நீக்க முடியவில்லை. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு 1965ம் வருடம் ஆட்சி மொழிகள் சட்டம்'1963 நடைமுறைக்கு வந்தது.

ஆட்சி மொழி என்னவோ ஒன்றுதான் என்றாலும் ஆட்சி மொழிகள் சட்டம் என்று பன்மையில் இந்த சட்டத்தின் தலைப்பு அமைந்திருப்பது சட்டத்தை இயற்றியவர்களுக்கே வெளிச்சம்!

இதன் மூலம் ஹிந்தி ஆட்சி மற்றும் அரசுப் பணிகளுக்கான மொழியென்றாலும், ஆங்கிலம் ஹிந்தியோடு சேர்ந்து பயன்படுத்தப் படலாம் என்று கூறப்பட்டது. இதற்கிடையில் தமிழகத்தில் போராட்டம் தீவிரப்பட நேரு, 'ஹிந்தி பேசாத மக்கள் விரும்பி ஏற்றுக் கொள்ளும் வரை ஆங்கிலம் நீக்கி ஹிந்தி மட்டுமே அரசு பயன்பாட்டு மொழியாக மாற்றப்பட மாட்டாது' என்று உறுதி கூறினார்.

இந்த உறுதிக்கு சட்ட வடிவம் கொடுக்கும் வகையில் 1968ல் ஆட்சி மொழிகளின் சட்டத்தில் 'அனைத்து சட்ட மன்றங்களும் ஆங்கிலத்தை நீக்கி ஹிந்தியை மட்டும் அரசு பயன்பாட்டு மொழியாக பயன்படுத்தலாம் என்று தீர்மானம் நிறைவேற்றி அதை பாராளுமன்றத்துக்கு அனுப்பும் வரை, ஆங்கிலமும் ஹிந்தியோடு பயன்பாட்டு மொழியாக நடைமுறையில் இருக்கும்' என்று ஒரு திருத்தம் கொண்டு வரப்பட தமிழகம் அமைதியடைந்தது.

அதற்கிடையே இங்கு ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை முன்னின்று நடத்திய தி.மு.க ஆட்சிக்கும் வந்திருந்தது.

இதற்கிடையில் இந்த மொழிப்பிரச்னை முக்கியமான ஒரு மனிதரின் பதவியை காவு வாங்கியது. 1967ன் இறுதியில் 'ஆங்கிலத்தை விடுத்து ஹிந்திக்கு முதலிடும் கொடுக்கும் மந்திரி சபையின் கல்விக் கொள்கை' மீதான முடிவினை எதிர்த்து முன்பு கல்வி அமைச்சராக பணியாற்றிய வெளியுறவு மந்திரியும் சட்ட மேதையுமான எம்.சி. சாக்ளா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

எது எப்படியோ, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ஹிந்திக்கு மட்டுமே "முதலிடம்" என்று சொல்வதை விட ஹிந்திக்கு மட்டுமே "இடம்" என்று சொல்வதுதான் சரியானதாக இருக்கும்.

அடுத்து இந்த மொழிப் பிரச்னை எப்படி நீதிபதிகளையும் பாதிக்கிறது என்று பார்க்கலாம்.

மும்பை
26.12.03

22.3.08

நிலைத்த அன்பின் நீடித்த அடையாளம்?



செய்தித் தாள் படிப்பவரா நீங்கள்? அவ்வாறென்றால் சில நாட்களுக்கு முன்னர் ஆயுள் காப்பீட்டுக் கழகம்' குறித்த வழக்கு ஒன்றில் சென்னை மாநில நுகர்வோர் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பினைக் குறித்த செய்தியினை படித்த ஞாபகம் இருக்கலாம். பலருக்கு ஞாபகம் இருக்க வாய்ப்பில்லை என்பது எனது கணிப்பு. அதாவது கொலையுண்ட ஒரு மனிதனின் மரணத்தினை விபத்தாகக் கருதி, டபுள் பெனிஃபிட்' எனப்படும் ஆயுள் காப்பீட்டின் இரட்டிப்பு பலனினை அவரது தந்தைக்கு அளிக்கச் சொல்லிய ஒரு தீர்ப்பு.


இச்செய்தியில் என்ன பெரிய கவனிக்கக் கூடிய அம்சம் என்று பலர் நினைக்கலாம். இவ்வாறாகவே நம்மில் பலர் ஆயுள் காப்பீட்டினை சற்று அலட்சியத்துடனே அணுகுவதாக எனக்குத் தோன்றுகிறது.


முதலில் காப்பீட்டுப் பத்திரத்திற்கான மனுவினை நிரப்புவதிலேயே பலர் அலட்சியப் போக்கினை மேற்கொள்கிறார்கள். "....ம்ம் எங்கே எங்கே கையெழுத்து போட வேண்டும் சொல்லுங்கள்!" என்று நமது அவசரத்தில் முகவர் எந்த எந்தக் கேள்விக்கு எவ்வாறு பதிலளித்துள்ளார் என்பதையே கவனிக்க மறந்து போகிறோம். முகவரோ, சங்கடமான கேள்விகளுக்கெல்லாம், அவரது விருப்பம் போலவே ஒரு பதிலினை எழுதி, பத்திரத்தினையும் வாங்கி நம்மிடம் அளிக்கிறார். நாமும், எவ்வித யோசனையுமின்றி அதனை மற்ற பத்திரங்களோடு பத்திரமாக வைத்துக் கொள்கிறோம். இவ்வித அலட்சியத்தின் பலனை பல வருடங்களுக்கு முன்னர் நான் ஏற்றுக் கொண்ட ஒரு வழக்கில் கண்ணுற நேர்ந்தது.

-oOo-


அந்த வழக்கின் வாதி மத்திய கிழக்கு நாட்டில் ஒரு தொழிலாளி. விபத்து ஒன்றில் காயமுற்ற அவர், வேலையிழக்க நேரிட்டது. இந்தியா திரும்பியவர் சிறிய இட்டிலிக்கடை நடத்தி வந்த தனது மனைவியின் பெயரில் அறுபதினாயிரம் ரூபாய்க்கு ஒரு காப்பீட்டுப் பத்திரம் வாங்கினார். ஏதோ ஒரு காரணத்தினால் மனைவி இறக்க நேரிட காப்பீடுப் பணத்தினை கோரியவருக்கு காப்பீட்டுக் கழகம் அளிக்க மறுத்தது. காரணம், மனுவில் அவர், 'பார்த்து வரும் வேலை' என்ற கேள்விக்கு, 'மத்திய கிழக்கு நாட்டில் தொழிலாளி' என்று பதிலளித்திருந்தார். 'ஆனால் காப்பீட்டுப் பத்திரம் வாங்கிய வேளையில் அவர் பணியில் இல்லை. எனவே தவறான தகவல் மூலம் பத்திரம் பெறப்பட்டது' என்பதே!

பலமுறை காப்பீட்டு நிறுவனத்துடன் முட்டி மோதிய பின்னர், நெல்லை நுகர்வோர் நீதிமன்றத்தினை அணுக, 'இந்தத் தவறான பதில், காப்பீட்டினை பாதிக்கும் அளவிற்குப் பெரிய தவறுதல் இல்லை' என்று கூறி அவருக்குச் சாதகமாக தீர்ப்பு கிடைத்தது.

காப்பீட்டு நிறுவனம் சென்னைக்கு மேல்முறையீடு செய்தது. மேல்முறையீட்டில் கூறப்பட்ட காரணம், 'காப்பீடு கிடையாது என்று மறுக்கப்பட்ட பின்னர் கொடுக்கப்பட்ட கால அளவிற்குள் அவர் நீதிமன்றத்தினை அணுகவில்லை' என்பதாகும். நல்ல வேளை, அவரோடு அவரது மைனர் மகன்களும் வாதிகள். மைனர்கள் மேஜராகும் வரை காலதாமத விதி பொருந்தாது. இதை நான் குறிப்பிட்ட மேல்முறையீட்டினை விசாரித்த நீதிபதிக்கும் நிம்மதி!


'நிலைத்த அன்பின் நீடித்த அடையாளம்' என்று விளம்பரப்படுத்தும் ஆயுள் காப்பீட்டு நிறுவனமா காலதாமத விதியினைக் கூறி ஒரு ஏழைத் தொழிலாளியின் வயிற்றிலடிப்பது?' என்ற வாதத்தினை நான் வைத்தாலும் நீதிமன்றம் அபராதத் தொகை ஏதும் விதிக்கவில்லை. ஏதோ இந்த மட்டுமாவது பணம் வந்ததே என்ற திருப்தி வாதிக்கும். ஆனால் அவர் இழந்தது சில வருடங்கள்!

-oOo-


பொதுவாக, ஆயுள் காப்பீட்டு மனுவினை ஒரு நகல் எடுத்து, நமது காப்பீட்டுப் பத்திரத்துடன் சேர்த்து பாதுகாத்தல் நலம். அதோடு நின்று விடாமல், நமது காப்பீட்டு பத்திரத்தில் உறுதி கூறப்பட்டுள்ள பலன்களைப் பற்றி, நமது வாரிசுகளிடம் சற்று விளக்கி வைத்திருத்தலும் நலம் பயக்கும். 'நெருப்பு என்றால் வாய் வெந்து விடாது'.


எனவே துரதிஷ்டமான ஒரு நிலைக்கு அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி விவாதித்தலில் தவறு ஏதும் இல்லை. ஏனெனில் பத்திரம் அளித்ததாலேயே, அதன்படி நிறுவனம் நடந்து கொள்ளும் என்பதற்கு உத்தரவாதமில்லை!


முக்கியமாக, இந்த 'விபத்திற்கான இரட்டிப்பு பலன்' (Double Benefit/ Accident Benefit) என்ற ஒரு உறுதியில் நிறுவனம் பின்வாங்கும் நிலை சில சமயங்களில் ஏற்படுகிறது. சில காப்பீட்டுப் பத்திரங்களில், 'With Accident Benefit' என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அதாவது, இயற்கையாக இன்றி விபத்தின் மூலம் மரணம் நேரிடுகையில் இவ்வகை காப்பீட்டின் பயனாளிகளுக்கு ஆயுள் காப்பீட்டுத் தொகை இரட்டிப்பாக வழங்கப்படும். விபத்து என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது, வாகன விபத்துதான். ஆனால் சட்டப்பிரகாரம், 'விபத்து' என்பதற்கு 'எதிர்பாராத நிகழ்வு' என்றே அர்த்தம்.

-oOo-


1993ம் வருடம் ஆந்திர மாநிலத்தினைச் சேர்ந்த கங்கா ரெட்டி என்பவர் வீட்டிலிருந்து வெளியே இழுத்து நக்ஸலைட்டுகளால் கொல்லப்பட்டார். நம்மில் பலரைப் போலவே இது ஒரு விபத்து அல்ல என்று கருதி விபத்தின் பலனினை அளிக்க மறுத்த காப்பீட்டு நிறுவனம், ஒரு படி மேலே சென்று, 'இது கலவரத்தில் நிகழ்ந்த மரணம். எனவே போர், மலையேறுதல், கலவரம் மூலம் நிகழும் மரணங்களுக்கு காப்பீடு அளிக்க வேண்டியதில்லை' எனவும் வாதிட்டது.


இந்த வாதங்களை நிராகரித்து தேசிய நுகர்வோர் தீர்ப்பாயம் (National Consumer Disputes Redressal Commission) கலவரம், போர் போன்றவை சட்டரீதியிலான பதங்கள் அல்ல என்று விபத்தின் இரட்டிப்பு பலனை அளிக்க தீர்ப்பு கூறியது. ஆயினும் இன்றும் இப்பதங்களை காப்பீட்டுப் பத்திரங்களில் நீங்கள் பார்க்கலாம். காப்பீட்டு நிறுவனத்தின் வாதம் சரியென்றால், 'அமெரிக்காவின் மீதான போர்' என வருணிக்கப்படும் செப்டம்பர் 11 தாக்குதலில் மரணமுற்ற மக்களுக்கு காப்பீடு கிடைக்க வாய்ப்பில்லை.


பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் மீண்டும் நீதிமன்றங்கள் பாம்பு கடித்ததால் நேரிடும் மரணமும் விபத்தே என்று காப்பீட்டு நிறுவனத்திற்கு அறிவுறுத்த நேரிட்டது. 2001ம் வருடம் குஜராத்தில் நிகழ்ந்த கோரமான பூகம்பத்தில், இழந்த உயிர்களுக்கு விபத்திற்கான காப்பீடு உண்டு என்று ஆயுள் காப்பீட்டு நிறுவனம் தாமாகவே வலிய அறிவித்தது.


சமீபத்தில் நடந்த ஒரு வழக்கின் தீர்ப்பும் இவ்வாறான ஒரு சிக்கலினை பின்னர் எதிர்கொள்ள நேரிடும் ஒருவருக்குப் பலனளிக்கலாம். இந்த வழக்கில் விபத்து நேரிட்ட ஒருவர், விபத்து நடந்து 180 நாட்கள் கழித்து மரித்துப் போனார். காப்பீட்டுப் பத்திரத்தின்படி இரட்டிப்பு பலனடைவதற்கு, விபத்து நடந்து 180 நாட்களுக்குள் மரணம் சம்பவிக்க வேண்டும். மண்டி நுகர்வோர் நீதிமன்றம், இவ்விதி சமூக நலனுக்கு எதிரானது என்று கூறி, 'மரணத்திற்குக் காரணம் விபத்து என்று நிரூபிக்கப்பட்டாலே போதுமானது' என்று கூறியது.



இறுதியாக முதலில் கூறிய சென்னை வழக்கு. இந்த வழக்கிலும் ஏற்கனவே தேசியத் தீர்ப்பாயம் கூறிய தீர்ப்பினைக் கண்டுகொள்ளாமல், மீண்டும் காப்பீட்டு நிறுவனம் கலவரம் (Riot) என்று பழைய பல்லவியைப் பாடியது. ஆனால், சென்னை நுகர்வோர் தீர்ப்பாயம் மீண்டும் காப்பீட்டு நிறுவனத்திற்கு அறிவுறுத்த வேண்டியதாயிற்று.இவ்வித சம்பவங்கள் அனைத்திலும், ஏதோ ஒரு உணர்வில் அல்லது அறிவுறுத்துதலில் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றம் சென்றுள்ளனர். ஆனால் இவ்விதப் புரிந்து கொள்ளுதல் இன்றி பலர், 'ஏதோ அவர்கள் அளித்ததுதான் காப்பீட்டு பணம்' என்று எவ்வித எதிர்ப்பும் இன்றி கொடுத்ததை வாங்கிச் சென்றிருக்கலாம்...

மதுரை
21.10.05


WHEN IT STOPPED RAINING...

16.3.08

பெண்கள் தத்து எடுக்க இயலாதா?





‘திருமணம் நிலுவையில் இருக்கையில் இந்துப் பெண்கள் தத்து எடுக்க முடியாது - உச்ச நீதிமன்றம்’ (Hindu woman can’t adopt child when marriage holds)

இது உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஒன்றினைப் பற்றி, 18.01.08 அன்று இந்து நாளிதழில் வெளிவந்த செய்தியின் தலைப்பு. இந்த தலைப்பானது, ஏதோ இந்து சட்டத்தில், தத்து எடுப்பது குறித்து ஆண்களுக்கு உள்ள உரிமை பெண்களுக்கு இல்லை என்பது போன்ற தோற்றத்தினை உருவாக்குகிறது.

ஆனால் அப்படி ஏதும் இல்லை என்பதுதான் உண்மை!

இந்து தத்துச் சட்டப்படி (Hindu Adoptions and Maintenance Act) திருமண உறவிலிருக்கும் ஆண், தனது மனைவியில் அனுமதியின்றி தத்து எடுக்க முடியாது. ஏனெனில், தத்து எடுத்த பின்னர் மனைவியும், தத்து தாய் (Adoptive Mother) என்ற சட்ட தகுதிக்கு உள்ளாவார் என்பதால் மனைவியின் அனுமதி கட்டாயம் தேவை. சுருக்கமாக, கணவன் மனைவி இருவரும் இசைந்தாலே தத்து எடுப்பது சாத்தியம்.

இப்படி ஆணுக்கு ஒரு கட்டாயம் இருக்கையில், பெண்ணிற்கு தனியாக தத்து எடுக்கும் உரிமையளித்து சட்டப்பிரிவு ஏதும் தேவையில்லையே!

***

உச்ச நீதிமன்றத்தின் முன் வந்த வழக்கில் அந்தப் பெண்ணில் கணவர் பலவருடங்களாக எங்கு சென்று என்னவானார் என்று தெரியவில்லை. திருமணமும் விவாகரத்து பெறப்படவில்லை. இவ்வாறான நிலையில் திருமணம் உறவு தொடருவதாகத்தான் கருதப்படும். எனவே அந்தப் பெண் தன்னிச்சையாக தத்து எடுத்ததாக, அவரது தத்து புத்திரனால் கூறப்பட்ட வாதம் நிராகரிக்கப்பட்டது.

பெண் பிரிந்து போய், விவாகரத்து பெறும் முன்னர் ஆணால் தன்னிச்சையாக தத்து எடுக்கப்பட்டிருந்தாலும், அதனையும் செல்லாது என்று இந்த தீர்ப்பினை வைத்தே கூற இயலும்.
இந்துவின் தலைப்பு, படிப்பவர்களை தவறான புரிதல்களுக்கு (misleading) இட்டுச் செல்லக்கூடும் என்றே நினைக்கிறேன்.

மதுரை
160308




EXPRESSIONS OF NATURE & CULTURE, ALAGAR KOIL, MADURAI

22.2.08

ஊழியரின் மரணத்திற்கு சோமி மிட்டல் பொறுப்பா?

“BPO பெண் மரணத்திற்கு நிறுவன நிர்வாகியே பொறுப்பு: உச்சநீதிமன்றம்” நேற்று இப்படி ஒரு தலைப்பு, அவசர உலகில், செய்திகளுக்கு நான் சார்ந்திருக்கும் ‘சற்றுமுன்’னில்!

சற்றுமுன் என்பது, தன்னார்வமிக்க இளைஞர்களின் முயற்சியில் விளைந்த இணைய செய்திச் சேவை. இணையத்தில் உலாவும் வழக்கமுடைய பல தமிழர்களுக்கு பல்வேறு செய்திகளை உடனடியாக சென்று சேர்க்கும் அதன் பணி பாராட்டுக்குறியது. அதன் வாசகன் என்ற உரிமையில், அவர்களது இந்த தலைப்பில் உள்ள தவறினை சுட்டிக்காட்டுவது எனது கடமையாகிறது!

நான் முன்பே கூறியபடி ‘கால் செண்டர்; உட்பட அனைத்து ஐடி நிறுவனங்களும் அந்தந்த மாநில ‘Shops and Establishment Act’ன் ஷரத்துகளுக்கு கட்டுப்பட்டவை. ஆனால், பல நிறுவனங்கள் இரவிலும் இயங்க வேண்டியிருப்பதால், அவைகளுக்கு பெண்களை இரவில் வேலைக்கு அமர்த்தக் கூடாது என்ற ஷரத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் அவ்வாறு விலக்கு அளிக்கப்பட்ட உத்தரவில், ‘பணியாளர்களுக்கு அவர்களது வீட்டிலிருந்து பணியிடத்திற்கு சென்று வர இலவசமாக வாகன உதவியும் பாதுகாப்பும் செய்து தரப்பட வேண்டும்’ என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், சோமி மிட்டல் அவர்கள் நிர்வாக மேலாளராக பணிபுரியும் ஹெவ்லெட் பேக்கர்ட் குளோபல்ஸாப்ட் நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு பெண் ஒருவர், இரவு நேர பணிக்காக அவரை வீட்டிலிருந்து அழைத்துச் சென்ற கார் ஓட்டுநரால் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

எனவே, ஹெவ்லெட் நிறுவனம் தனது ஊழியருக்கு தகுந்த பாதுகாப்பு வழங்காமல் ‘Karnataka Shops and Establishment Act’ன் பிரிவினை மீறியதாக அதன் நிர்வாக மேலாளரான சோமி மிட்டல் மீது ஒரு கிரிமினல் வழக்கு கர்நாடக காவலர்களால் தொடரப்பட்டுள்ளது.

இது ஒரு பெரிய குற்றமாகாது. என்ன அதிகபட்சம் அபராதம் விதிக்கப்படும் அவ்வளவுதான். தமிழக சட்டத்தில் 25 ரூபாயிலிருந்து 250 ரூபாய் வரைதான் அபராதம்!

***

தற்பொழுது முதல் தகவல் அறிக்கைதான் (FIR) எழுதப்பட்டுள்ளது. இனிதான் விசாரனை (investigation), குற்றப்பத்திரிக்கை (charge sheet), நீதிமன்ற விசாரணை, தீர்ப்பு எல்லாம்.

அதற்குள், நடந்த தவறுக்கு நிர்வாக மேலாளர் பொறுப்பு ஏற்க முடியுமா? அவர் மீது கிரிமினல் குற்றம் சாட்ட முடியுமா? போதுமான பாதுகாப்பு அளிக்கப்பட்டதா? என்பதெல்லாம் காவலர்கள் விசாரித்து சோமி மிட்டல் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதா அல்லது வழக்கினை திரும்ப பெற வேண்டுமா என்பதை முடிவு செய்வார்கள்.

***

ஆனால், அதற்கு சோமி மிட்டல் தன் மீது தாக்கல் செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையினை தள்ளுபடி (quash - நசுக்குதல் என்று கூறுவார்கள்) செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்து பின்னர் உச்ச நீதிமன்றத்தினையும் அணுகினார்.

பொதுவாக, முதல் தகவல் அறிக்கையினை உயர், உச்ச நீதிமன்றங்களில் தள்ளூபடி செய்ய மாட்டார்கள் (only in rarest of rare cases என்று உச்ச நீதிமன்றம் சோமி மிட்டல் வழக்கில் கூறியுள்ளது). எனவே, உச்ச நீதிமன்றம் வழக்கின் தன்மை, மற்றும் சோமி மிட்டல் பொறுப்பா இல்லையா என்ற பிறழ்சினைகளுக்கு உள்ளே செல்லாமல், வழக்கினை தள்ளுபடி செய்துள்ளது.

வழக்கில் சோமி மிட்டலுக்கு எதிராக எவ்வித கருத்தினையும் தெரிவிக்கவில்லை. தனியே தீர்ப்பு எழுதிய மார்கண்டேய கட்ஜு மிட்டலுக்கு சாதகமாகத்தான் இரு சட்டப் பிரிவுகளை எடுத்துக் காட்டியுள்ளார். இதனை வைத்தே, மிட்டல் பின்னர் தன் மீது குற்றப்பத்திரிக்கை தொடுக்கப்பட்டால் அதனை தள்ளுபடி (discharge) செய்ய கோரலாம்.


***


எனவே காவலர்கள் கையில்தான் எல்லாம் இருக்கிறது. காவலர்கள் குற்றம் சாட்டினாலும், நீதிமன்றம் அதனை ஒத்துக் கொள்ள வேண்டும். உச்ச நீதிமன்றம் வழக்கில் எந்தக் கருத்தும் கூறவில்லை. மிட்டல் பொறுப்பு என்றோ அல்லது அவர் மீது குற்றப்பத்திரிக்கை தொடுக்கப்பட வேண்டும் என்றோ கூறவில்லை!

ஆனால், இணைய செய்தி நிறுவனங்கள், ஏதோ உச்ச நீதிமன்றம் மிட்டலை பிடி, விடாதே என்ற அளவில் கூறியதைப் போல ஒரு தோற்றத்தினை ஏற்ப்படுத்தியுள்ளனர்.

பாவம், ‘சற்றுமுன்’ தனது வழக்கமான உற்சாகத்துடன் “BPO பெண் மரணத்திற்கு நிறுவன நிர்வாகியே பொறுப்பு: உச்சநீதிமன்றம்” என்ற தலைப்பு வைத்து விட்டது!

மதுரை
22.02.08

16.2.08

ஐடி நிறுவனமென்றால், ஆண்டையா?

சந்தோஷ் பக்கங்கள்’ என்ற வலைப்பதிவில், ஐய்டி நிறுவன ஊழியர்களை தடாலடியாக வேலையிலிருந்து நீக்குவது பற்றி விவாதம் நடைபெற்று வருகிறது. எதிர்வினையாக எழுத விரும்பிதை இங்கு தனிப்பதிவாக...

முக்கியமாக கருத்து தெரிவித்த பலரும், ஐய்டி ஊழியர்களுக்கு ஏதும் சட்டப் பாதுகாப்பு இல்லை என்பது போலவே எழுதியிருக்கிறார்கள். சட்டத்தின் நான்கு மூலைகளுக்கும் உள்ளாக கொண்டு வர முடியாமல் எந்த ஒரு செயலும் இங்கு இல்லை. ஆண்டை - அடிமை சமுதாயத்தில்தான் பிடிக்காத வேலையாளை தூக்கி எறிவதெல்லாம், நியாயம். சனநாயக, மக்கள் நலன் பேணும் (welfare) நாட்டில் அல்ல!

ஐய்டி நிறுவன ஊழியர்களுக்கும் அந்தந்த மாநிலங்களில் நடைமுறையில் உள்ள ‘Shops and Establishment Act’ அளிக்கும் பாதுகாப்பு உண்டு. எனவே போதிய காரணமின்றி (reasonable cause) யாரையும் வேலையிலிருந்து நீக்க இயலாது. ஆனால், போதிய காரணம் என்பதை தற்போதய தாரளமயமாக்கல் சூழலில், நீதிமன்றங்கள் பரந்த அளவில் நோக்கலாம். ஏன், திறமையின்மை கூட போதிய காரணமாகலாம்.

எவ்வளவு தூரம், இது நியாயமான செயலாக இருக்க முடியும்? மேற்கூறிய விவாதத்தில் கூறப்பட்ட இரு கருத்துகளின் மீதான எனது கருத்துகளை தெரிவிப்பதும், பயனளிக்கலாம்.

***

பின்னூட்டங்களில் ‘வேலையில் சேரும் பொழுது, நிறுவனம் விரும்பிய வரையில் (at will) வேலை பார்க்க சம்மதிக்கிறேன் என்று கூறி விட்டு பின்னர் வருத்தப்படலாமா’ என்று ஒரு கேள்வி வைக்கப்படுகிறது. (ஸ்ரீதர் நாராயணன்)

முன்பு ஒருமுறை இந்திய கிரிக்கட் வாரியம், மேற்கிந்திய தீவுகளை நமது அணியினை அனுப்பியது. விளையாட்டு தொடர் முடிந்ததும், சில வீரர்கள் வாரியத்தின் எச்சரிக்கையையும் மீறி அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றனர். பின்னர் அவர்கள் மீது வாரியம் நடவடிக்கை எடுத்த பொழுது, பாதிக்கப்பட்ட வீரர்கள் உச்ச நீதிமன்றம் சென்றனர்.

‘தொடர் முடிந்ததும் வீரர்கள் நேரடியாக இந்தியா திரும்ப வேண்டும்’ என்ற ஒப்பந்தத்தினை வீரர்கள் மீறியதாக, வாரியம் வாதிடுகையில், உச்ச நீதிமன்றம், ‘இந்திய கிரிக்கட் அணியில் இடம் பெற வேண்டுமென்றால், ஒரு கையை கூட வெட்டிக் கொடுக்க தயாராக பலர் உள்ள நிலையில், உங்களது எந்த ஒரு ஷரத்திற்கும் கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்திட்டிருக்கும் நிலையில், அதனை ஏற்றுக் கொள்ள இயலாது’ என்று கூறியது.

ஒரு ஒப்பந்தம் இருப்பதால் மட்டுமே அதனை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதில்லை. இந்திய ஒப்பந்தச் சட்டத்தின் (Indian Contract Act) பிரிவுகளுக்கு ஒப்ப அமைய வேண்டும். தார்மீக நியதிகளுக்கு எதிரான ஒப்பந்த (unconscionable and unreasonable) ஷரத்துகள் நீதிமன்றங்களால் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை, முக்கியமாக ஒப்பந்தமிடும் நபர்கள் சமநிலையில் (equal negotiating position) இல்லாது இருக்கையில்!

***

அடுத்த கருத்து ‘இன்று தரமில்லாதவர்களை சேர்த்துக் கொண்டு செல்ல வேண்டும் என்பது எந்த நிறுவனத்திலும் நடக்காத விஷயம்’ என்பது (இலவச கொத்தனார்)

சரிதான், ஆனால் பிரச்னை, தரமில்லாதவர்களை சேர்த்துக் கொள்ளவதல்ல. மாறாக சேர்த்துக் கொண்ட பின்னர் நீக்குவதில். இதிலுள்ள நியாயம், குழந்தை பிறக்கும் வரை பேசாமல் இருந்து விட்டு, பின்னர் ஊனமாயிருக்கிறதென்று கொன்று விடுவதில் உள்ள நியாயமே!

அப்படியெனில், ஒரு வேலையாளின் தரத்தினை கூட சரியாக வேலையில் அமர்த்தும் முன் சோதிக்கத் தெரியாத முதலாளியின் (employer) திறமையின்மைக்கு என்ன தண்டனை? இத்தனைக்கும், நேர்காணலுக்குப் பிறகு புரேபஷன் காலம் (probation period) கூட உள்ளது.

முதலாளியின் உத்தரவாதத்தினை நம்பி, வேலைக்கு சேர்ந்து, புரேபஷன் காலத்தையும் முடிக்கும் ஒரு வேலையாள் தன்னைச் சுற்றி ஒரு குடும்பத்தினை உருவாக்குகிறார். அதில் ஒரு குழந்தை இருக்கும். அது பள்ளிக்குச் சென்று கொண்டிருக்கும். குடும்பத்தலைவர் வேறு குற்றம் ஏதும் புரியாத பொழுதிலுமா, அந்தக் குழந்தை தண்டிக்கப்பட வேண்டும்.

எனவேதான் ‘திறமையின்மை’யினை மட்டும் காரணம் காட்டி ஒருவரை வேலையிலிருந்து நீக்குவது சட்டத்திற்கு புறம்பான ஒரு செயலாகவே கருதப்பட வேண்டும்.

முதலில் நிறுவனம் என்பது அதன் முதலாளிக்கு மட்டுமே சொந்தமான ஒரு சொத்தாக கருதுவது தவறு. ஒரு தொழில் நிறுவனத்திற்கு அரசு பல்வேறு சலுகைகளை அளிக்கிறது. முதலீட்டில் வங்கிகளும் பங்கெடுக்கின்றன. அனைத்து வேலையாட்களின் கூட்டு முயற்சியிலேயே, நிறுவனம் கட்டமைக்கப்படுகிறது. நிறுவன லாபமானது, எதிர்பாராத வகையில் ஏற்ப்படும் நட்டங்களையும் கணக்கிட்டே நிர்ணயிக்கப்படுகிறது. நட்டமானது, நிர்வாகிகளின் தவறான ஒரு முடிவினாலும் வரலாம். வேலையாள் ஒருவரின் திறமை குறைவதோ, உடல், மன ரீதியிலான குறைபாடு தோன்றுவதோ இவ்வகையிலான நட்டம்தான். ஆனால் அவரது திறமைக்கு ஏற்ற வேலையினை அளித்து, அனைவரோடு அவரையும் முன்னெடுத்துச் செல்வதுதான் நியாயமாக இருக்க முடியும்.

ஏறக்குறைய பலர் சேர்ந்து ஒருவரின் இழப்பினை ஈடு செய்யும் காப்பீடு (Insurance) போன்றதுதான், நான் கூறுவது.

நான் கூறுவதில் நியாயமில்லையெனில், வேறு வகையில் சிந்திந்துப் பாருங்கள். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மனதிலோ உடலிலோ ஊனமேற்ப்படுகையில் மற்றவர்கள், ‘இனி இவரால் பயனில்லை’ என்று அவரை விரட்டி விடுவதும் நியாயம்தானே!

‘liberalisation with human face’ என்பது பின்னர் என்னவாம்?

மதுரை
16.02.08