4.7.06

அந்தரங்கம் புனிதமானது - II



நான் ஒரே ஒரு பெரிமேஸன் நாவல் படித்திருக்கிறேன். பல வருடங்களுக்கு முன்னர் என்பதால் கதை முழுவதும் மறந்து விட்டது என்றாலும், சிறு சிறு பொய்கள் கூறும் ஒரு பெண்ணிற்கு நேரிடும் சிக்கல்களைக் களைய பெரிமேஸன் முற்படுவார் என்பது நினைவிருக்கிறது. ஆனாலும் தெளிவாக குறிப்பிடக்கூடிய இரு அம்சங்கள் உண்டு. முதலாவது, பெரிமேஸன் நாவல்கள் எழுத்தாளர் சுஜாதாவை மிகவும் பாதித்திருக்க வேண்டும் என நான் நினைத்தது. இரண்டாவது, தெரியாத்தனமாக ஒரு குற்றம் நிகழ்ந்த இடத்தில் பெரிமேஸன் இருந்த விபரம் காவலர்களுக்குத் தெரியவர அந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட கைரேகையுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதற்காக, பெரிமேஸனின் கைரேகையை பெறுவதற்கு காவலர்கள் படாத பாடு படுவார்கள். காவலர் அவருக்கு காப்பி கொடுத்து உபசரிப்பார், கைரேகையை அதில் பெரிமேஸன் விட்டுச்செல்வார் என எதிர்பார்த்து அல்லது பெரிமேஸனை சம்பவ இடத்தில் இருட்டில் பார்த்த ஒரு சாட்சி பெரிமேஸனை இவர்தான் அவர் என காவலர்கள் முன்னிலையில் அடையாளம் காட்டுவதற்காக பெரிமேஸன் எழுந்து நிற்கும் வண்ணம் செய்ய முயலுவார்கள் என்றும் நினைக்கிறேன். அப்போதுதான் கல்லூரியில் அடியெடுத்து வைத்திருந்த எனக்கு இது ஏனென்று புரியவில்லை. 'பேசாமல் முட்டிக்கு முட்டி தட்டினால், பெரிமேஸன் எழுந்து நிற்க மாட்டாரா இல்லை கையைப் பிடித்திழுத்து கைரேகையை பதிக்க முடியாதா என்ன' என்று நினைத்தேன்.

பெரிமேஸன் அமெரிக்கரா அல்லது பிரிட்டிஷ்காரரா என்பது தெரியாது. ஆனால், பெரிமேஸன் மீது காவலர்கள் ஏன் வன்முறையை பயன்படுத்தவில்லை என்ற எனது சந்தேகத்துக்கு விடை அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் ஐந்தாவது சட்டத் திருத்தத்தில் பின்னர் கண்டேன். அதன்படி ஒரு மனிதன் ஒரு குற்ற வழக்கில் அவனுக்கு எதிரான சாட்சியாக இருக்கும்படி கட்டாயப்படுத்தப்படக் கூடாது. 'Protection against Self-incrimination' என்று இதைச் சொல்வார்கள். ஆக, பெரிமேஸனை அடையாளத்திற்காக எழுந்து நிற்க வேண்டுவது, அவரை ஒரு குற்ற வழக்கில் மாட்டுவதற்காக. அது அவருக்கெதிராகவே அவரை சாட்சியாக்கும் செயல். அதைப் போலவே நான்காவது சட்டதிருத்தமும் முக்கியமானது. அதன்படி ஒரு மனிதனின் உடல், உடமைகளை காரணமின்றி சோதனையிடுவதும், பறிமுதல் செய்வதும் கூடாது. இதற்கான ஆணையை அவ்வகையான சோதனைகளை மேற்கொள்வதற்கும் பறிமுதல் செய்வதற்குமான தகுந்த காரணங்களைக் காட்டி நீதிமன்ற உத்தரவினைப் பெற்ற பிறகே மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதாகும். எனவே பெரிமேஸனின் கைரேகையை பெறுவதும் அவரது உடலை சோதனையிடுவது மற்றும் பறிமுதல் செய்வது என்னும் வட்டத்துக்குள் வரும். காவலர்களின் அத்தகைய செயல்களுக்கெதிரான பாதுகாப்பை அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம் பெரிமேஸனுக்கு அன்று வழங்கியது.

ஆனால், இன்று பெரிமேஸன் காலத்திலிருந்து வெகுதூரம் வந்து விட்டோம். குற்றம் சாட்டப்பட்டவரிடம் இருந்து கைரேகை பெறுவது என்ன தேவைப்பட்டால் அவரது இரத்தத்தை எடுத்து அதனை சோதனையிடுவதே அரசியலமைப்புச்சட்டத்தின் நான்காம், ஐந்தாம் சட்டத்திருத்தத்தினை மீறியதாகாது என்று அமெரிக்க நீதிமன்றங்கள் தீர்ப்பளித்து விட்டன. பொதுவாக இதற்கு நீதிமன்ற உத்தரவு தேவையென்றாலும், சில சமயங்களில் அதற்காக காத்திருக்க முடியாது. உதாரணமாக ஒரு சாலை விபத்தில் வண்டியோட்டி மது அருந்தியிருக்கிறார் என்று நிரூபிக்க வேண்டுமென்றால் அவரை உடனடியாக சோதனையிட்டாக வேண்டும். ஆக இவ்வாறாக உடலிலிருந்து ஏதாவது கட்டாயப்படுத்தி எடுப்பதை சட்டபூர்வமாக அங்கீகரித்தாலும்....இரண்டு விதமான கருத்துகள் இன்றும் நிலவி வருகின்றன.

இந்த வகையில் தற்போது புதிதாக சேர்ந்திருப்பது டிஎன்ஏ சோதனை. வெளிப்படையாக சாம்பிள் எடுப்பது, சம்பந்தபட்டவரின் மயிரை வேண்டுவது. உள்ளார்ந்த சாம்பிள் வாயிலுள்ள எச்சிலிலிருந்து எடுக்கப்படுகிறது. இந்த முறையினைப் பற்றி பலத்த விவாதங்கள் நடைபெற்று வருகிறது. ஏனெனில் டிஎன்ஏ வெறும் உடலைப் பற்றி பேசுவதோடு நிற்காமல் சம்பந்தப்பட்டவரின் மனதையும் பற்றி பேசுகிறது எனவே இது நேரிடையாக ஐந்தாம் சட்டத்திருத்தத்தை மீறுகிறது என்று சிலர் கூறுகிறார்கள். மேலும், காவலர்கள் எந்த அளவில் ஒரு மனிதனின் டிஎன்ஏ மீதான சோதனையை நிறுத்துவார்கள் என்பதும் கேள்விக்குறியே!

இதனிடையில் பல நாடுகள் டிஎன்ஏ சோதனைகள் நடத்துவது குறித்தான சட்டப்பிரிவுகளை ஏற்படுத்தி உள்ளனர். நாட்டுக்கு நாடு இவற்றின் கடுமை வேறுபட்டாலும், காவலர்கள் மரபணு சோதனை மிகவும் அத்தியாவசியமான ஒன்று என்று அரசினை வலியுறுத்தி பெருகி வரும் குற்றங்களை தடுப்பதற்கான முக்கியமான யுதம் இந்த மரபணு சோதனை என்று அரசாங்கங்கள் கருத ஆரம்பித்து விட்டன. ஆயினும் பல நிகழ்வுகளை ஆய்ந்த பின்னர் எனது எண்ணமாக கூறுவது, குற்றம் சாட்டப்பட்டவர்களின் மீது கட்டாயமாக மரபணு சோதனை செய்வதை இனியும் தவறென்று கூற முடியாது. முக்கியமாக வன்புணர்வு குற்றங்களில் இது அவசியம் தேவைப்படுகிறது. ஆனால் மரபணு சோதனை என்பது உடனடியாக செய்யப்பட வேண்டியது அவசியம் இல்லை என்பதால் தகுந்த காரணங்களை விளக்கி நீதிமன்ற ஆணை பெற்ற பின்னரே மேற்கொள்ளப்பட வேண்டும். அடுத்து, எந்த காரணத்துக்காக சோதனை மேற்கொள்ளப்பட வேண்டுமோ அதைத் தவிர வேறு சோதனைகள் மேற்கொள்ளப்படக் கூடாது. உதாரணமாக, கொலை செய்யப்பட்டவரின் கைகளில் ஒரு மயிர் இருக்கிறது. அந்த மயிர் பிடிபட்டவரின் உடலில் உள்ளதா என்பதை அறிய எடுக்கப்பட்ட சாம்பிளை வைத்து அவருக்கு வேறு ஏதேனும் நோய் இருக்கிறதா என்பதை ஆராயக்கூடாது. பொதுவாக நீதிமன்ற உத்தரவு என்று வரும் பொழுது நான் குறிப்பிட்ட விஷயங்கள் நிச்சயம் ஆராயப்படும். நான் படித்த ஆஸ்திரேலிய நாட்டு வழக்கு ஒன்றில் இவ்வாறு மரபணு சோதனைக்கு அனைவரும் காணக்கூடிய வகையில் நீதிமன்றத்தில் வைத்து உத்தரவிடாமல் நீதிபதியின் அறைக்குள் வைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் உச்சநீதிமன்றம் அதை தள்ளுபடி செய்துள்ளது.

இவ்வளவு காரியங்கள் இருக்கையில் ஈராக்கில் பிடிபட்ட சதாமின் மீதான மரபணு சோதனை எவ்வளவு தூரம் சரியானது. ஈராக்கில் எவ்வித சட்டமும் இல்லை என எடுத்துக் கொள்வோம். அமெரிக்க ஈராக்கின் மீது படையெடுத்ததற்கான காரணம் நாளுக்கு நாள் மாறி வந்தாலும், 'வளைகுடா நாடுகளுக்கு 'நாகரீகம்' கற்பிக்கவும், மக்களாட்சியை ஏற்படுத்தவும்' என்றும் ஒரு காரணம் எடுத்து வைக்கப்படுகிறது. 'சட்டத்தின் முறை' (Due Processof Law) என்பது சதாம் மரபணு சோதனை விஷயத்தில் கடைபிடிக்கப்பட்டுள்ளதா? ‘சட்டத்தின் ஆட்சி நடைபெறாத ஈராக், பிடிபட்டவர் எந்த சட்ட முறையினையும் மதிக்காத சதாம்' என்றால் பின்னர் என்ன வகையான மக்களாட்சியை அமெரிக்கா ஏற்படுத்தப் போகிறது. சதாமின் கைதினை உலகம் பார்ப்பது இருக்கட்டும். ஈராக் மக்கள் உன்னிப்பாக பார்த்து வருகின்றனர். அதில் நாகரீகமான சட்டத்தின் முறையை அமெரிக்கா கடைபிடிக்குமானால் அதுவே ஈராக்கியர்களுக்கு ஒரு பாடமாக இருந்திருக்கும். ஆனால் அமெரிக்கா எப்போதுமே இப்படித்தான்....தனது தேவைகளுக்கேற்ப சட்டத்தின் எல்லைகளை விரிவுபடுத்திக் கொள்ளும்.

சதாம் விஷயத்தில் ஏன் மரபணு சோதனை? சதாமை அவர் ஒளிந்திருந்ததாக கூறப்பட்ட துளையிலிருந்து வெளியில் எடுத்ததும் அவர், 'நான் சதாம் ஹ¥சைன். ஈராக்கின் ஜனாதிபதி' என்று கூறியதாகவும் அமெரிக்க ராணுவ அதிகாரி, 'ஜனாதிபதி புஷ் தனது வாழ்த்துகளை உங்களுக்கு தெரிவிக்கிறார்' என்று பதிலுரைத்ததாகவும் அமெரிக்க ராணுவம் கூறுகிறது. ராணுவத்திடம் மாட்டியவர் தன்னை சதாம் என்று ஒப்புக்கொண்டவுடன் ஏன் சோதனை? அமெரிக்க நீதி ஒரு குற்றத்தினை ஒருவர் மீது நிரூபிக்க தேவையிருப்பின் மட்டுமே கட்டாயமான மரபணு சோதனையை அனுமதிக்கின்றன. இங்கு மரபணு சோதனை மூலம் எதை நிரூபிக்கப் போகிறார்கள். வெறுமே சதாமை அவமானப்படுத்துவது என்றால் அது 'மனித உரிமைக்கான உலகளாவிய பிரகடனம் (1948) மற்றும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச ஒப்பந்தம் (1966) ஆகியவற்றை மீறியதாகும். சதாம் எவ்வளவு கொடூரமான கொலைகாரராக இருக்கட்டும். அவர் ஒரு மனிதர். தனது உடல், தன்னைப் பற்றிய விபரங்களின் மீது முழு உரிமை உண்டு. உதாரணமாக அவருக்கு ஒரு நோய் இருக்கிறது. அதை மற்றவர்களுக்கு தெரிவிக்காமல் வைத்திருக்க அவருக்கு முழு உரிமை உண்டு. அமெரிக்கா தனது சோதனைகளை எந்த அளவில் நிறுத்திக் கொண்டது என்பது யாருக்குத் தெரியும்? சதாம் தன் உடலைப் பற்றி ரகசியமாக வைத்திருக்க விரும்பியிருக்கும் சில விஷயங்கள் தற்போது அவரது அனுமதியின்றியே ஜியார்ஜ் புஷ் கையில் இருக்கும் வாய்ப்பு உண்டு...

இதுவெல்லாம் என்ன யூகங்கள்தானே! எந்தவிதமான சட்டத்தின் ஆட்சியும் நடைபெறாத ஈராக்கில், அதுவும் யுத்த காலத்தில் இப்படியெல்லாம் உயரிய சட்டக்கருத்துகளை நடைமுறைப்படுத்த என்ன தேவை? இத்தனை காலம் சர்வாதிகார ஆட்சி புரிந்த சதாம் ஹ¥சைனுக்கு என்ன தனி மனித உரிமை பற்றியெல்லாம் கவலை? என கேள்வி எழலாம்...ஏற்கனவே கூறியபடி 'அமெரிக்கா, தானே தகுந்த நேரத்தில் அவ்வாறு நடந்து கொள்ளாத பட்சத்தில் நாகரீக தொட்டில் என வரலாற்றில் வருணிக்கப்பட்ட ஈராக்கிலும் பிற வளைகுடா நாடுகளிலும் என்ன வகையான நாகரீகத்தை அறிமுகப்படுத்தப் போகிறார்கள்?
தொடரும்...

No comments: