Showing posts with label Compensation. Show all posts
Showing posts with label Compensation. Show all posts

18.5.12

மக்களவை உறுப்பினர்களுக்கு நன்றி!



இன்று டைம்ஸின் ஒரு மூலையில் “Loss for road accident victims, gain for insurers: Opposition” என்ற தலைப்பிலான செய்தி பலரால் கண்டு கொள்ளப்படாமலேயே போயிருக்கலாம். ஆனால், இந்தச் செய்தியில் நம்மில் சிலருடைய எதிர்காலத்தையே புரட்டிப் போடக்கூடிய பயங்கரம் ஒன்று இருப்பதும், விழிப்பான மக்களவை உறுப்பினர்கள் சிலரால் அந்த பயங்கரம் தள்ளிப் போடப்பட்டுள்ளது என்பதும் நம்மை அதிர்ச்சியடைய வைக்கலாம்.

அதீத சம்பளம் கிடைக்கும் ஒரு வேலையில் நீங்கள் இருக்கலாம். உங்கள் சேமிப்பும் வங்கிக் கடனுமாக சென்னையில் ஒரு வீடு வாங்கியிருக்கலாம். பெரிய கார் கூட வைத்திருக்கலாம். இனி எனக்கென்ன, என்று எதிர்காலம் பிரகாசமாகத் தெரிகையில் உங்கள் சொத்துகள் அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டால்?

அப்படிப்பட்ட ஆபாயத்திலிருந்துதான் நாம் தற்காலிகமாக காப்பாற்றப்பட்டுள்ளோம்.

நீங்களோ அல்லது உங்களுடைய ஓட்டுநரோ, எவ்வளவு சிறந்த முறையில் வண்டியை ஓட்டினாலும், எதிர்பாராதவிதமாக, விபத்து நடைபெறும் சாத்தியக்கூறு உள்ளது. உங்களது வாகனம் சம்பந்தப்பட்ட விபத்தில் காயம்படும் நபருக்கு / உயிரிழக்கும் நபரை நம்பியிருப்பவர்களுக்கு வாகன உரிமையாளராகிய நீங்கள் நஷ்டஈடு தரவேண்டும். ஆனால், நஷ்ட ஈடானது பாதிக்கப்படுபவரின் வயது, வருமானம், மருத்துவ செலவு ஆகியவற்றைப் பொறுத்து பல லட்சங்களில், ஏன் கோடியில் கூட இருக்கலாம். அதனை நீங்கள் கொடுக்க இயலாது என்பதால்தான், வாகனங்கள் கட்டாயமாக காப்பீடு செய்யப்படுகின்றன. அதனாலேயே, வாகன உரிமையாளர்கள் நிம்மதியாக தூங்க முடிகிறது.


வாகன உரிமையாளர்கள் என்ன, விபத்தில் சிக்கி சின்னாபின்னமாகும் நபர்களுக்கும் அவர்தம் குடும்பங்களுக்கும் உள்ள ஒரே ஆறுதல், அவர்களுக்கு ஏற்ப்பட்ட இழப்புக்கு ஈடான பண மதிப்பு காப்பீடு நிறுவனங்களால் தரப்படுவதாகும். தண்டுவடத்தில் ஏற்ப்படும் பாதிப்பால், வாழ்நாள் முழுவதும் படுக்கையிலேயே கழிக்க நேரிடும் ஒருவரின் குடும்பத்தினர் படும்பாடு சொல்லி மாளாது. பிற பாடுகளோடு பொருளாதார ரீதியிலான கஷ்டமும் சேர்ந்து கொண்டால் தற்கொலை எண்ணம்தான் மிஞ்சும் என்பதால், காப்பீடு நிறுவன நஷ்டஈடு முக்கியத்துவம் பெறுகின்றன.


இதுவரை அரசுடமையாக்கப்பட்ட காப்பீடு நிறுவனங்கள் மட்டுமே இயங்கி வந்த சூழ்நிலையில், மோட்டார் வாகன காப்பீட்டில் லாபம் ஏதுமில்லையென்றாலும், அவற்றின் பிற காப்பீடுகளில் கிடைக்கும் அபரிதமான லாபம், மோட்டார் வாகன காப்பீட்டில் அவற்றை தாராளமாக இருக்க உதவியது. ஆனால், தற்பொழுது தனியார் காப்பீடு நிறுவனங்கள் பெருகியுள்ள சூழலில் இப்படிப்பட்ட ஒரு சட்டதிருத்தம், நம்மை கவலை கொள்ள வைக்கிறது.

புதிய சட்டதிருத்தத்தின்படி காப்பீடு நிறுவனம் ஒரு குறிப்பிட்ட அளவிற்குத்தான் நஷ்டஈடு தரும். அதற்கு மேலான தொகையை வாகன உரிமையாளரிடம் வாங்கிக் கொள்ள வேண்டியதுதான். எத்தனை உரிமையாளர்களிடம் லட்சக்கணக்கில் நஷ்டஈடு தர வசதியிருக்கும்?

ஒரு எலும்பு முறிவினை நேர்ப்படுத்தவே இரண்டு மூன்று லட்சம் செலவாகும் நிலையில், சட்டதிருத்தம் அமுலுக்கு வந்தால் காப்பீடு நிறுவனம் அதிகபட்சம் ரூ.50,000/-ம்தான் தரும். பெரிய அளவில் காயமேற்ப்பட்டு பத்து, இருபது லட்சம் செலவானால், எந்த லாரி உரிமையாளரை துரத்தி நஷ்ட ஈட்டினைப் பெறுவது?

மாதம் ரூ.50,000/- சம்பளம் பெறும் 30 வயதுடைய இளம் கணவர் ஒருவர் உங்களது வாகனத்தில் அடிபட்டு இறந்தால், அவருக்கு நீங்கள் தர வேண்டிய இழப்பீடு 75 லட்சத்தை தாண்டலாம். சட்ட திருத்தம் அமுலுக்கு வந்தால், காப்பீடு நிறுவனம் தரும் தொகை 20 லட்சம் அளவில் இருக்கும். மீதியை நீங்கள்தான் தர வேண்டும். 1995ம் ஆண்டு மஹாஜன் என்ற அமெரிக்கமருத்துவரின் மரணத்திற்கு ஈடாக அவரது மனைவிக்கு அளிக்கப்பட்ட தொகை சுமார் 7 கோடி!

நினைத்துப் பாருங்கள், அந்த மஹாஜன் உங்களுடைய காரில் அடிபட்டு இருந்தால் 7 கோடி ரூபாய் கொடுப்பதற்கு போதிய சேமிப்பு/ சொத்து உங்களிடம் இருக்கிறதா என்று. பயமாக இருக்கிறதல்லவா?

ஆனால் இவ்விதமான அச்ச உணர்வு ஏதுமின்றி நமது மத்திய அமைச்சரவை இந்த சட்டதிருத்தத்திற்குஒப்புதல் அளித்துள்ளதுதான் சோகம். மேல் சபையிலும் நிறைவேற்றப்பட்டு, ஏதோ சில மக்களவை உறுப்பினர்கள் விழித்துக் கொண்டதன் பலன், நாம் தப்பித்தோம்.

ஆயினும், எவ்விதமான சமரசத்திற்கும் இடமில்லாமல் எதிர்க்க வேண்டிய கட்டாயத்தில் இந்த சட்டத்திருத்தம் நம்மை வைத்துள்ளது.

மதுரை
17/05/12

15.6.10

போபாலும் ஆங்கில காந்திமதிகளும்!

கடந்த சில நாட்களாக, போபால் விஷவாயு விபத்தின் குற்ற வழக்கு தீர்ப்பு குறித்து நமது ஆங்கில தொலைக்காட்சி ஊடகங்கள் நடந்து கொள்ளும் முறை எரிச்சல் ஏற்ப்படுத்துவதாய் உள்ளது.

வழக்கின் தன்மை பற்றியோ, குற்றவியல் நடைமுறை பற்றியோ சிறிதும் சிந்திக்காமல் ‘நீதி செத்து விட்டது’ என்றும் ’வாரன் ஆண்டர்சன் தப்பித்து விட்டார்’ என்றும் கூக்குரலிடுவதில் ஏறக்குறைய நமது தமிழ்ப்படங்களில் காந்திமதி மண்ணை வாரி தூற்றி சாபம் விடும் இயலாமைதான் தெரிகிறது.

-oOo-

தற்பொழுது தண்டனை பெற்றவர்களின் மீதான குற்றச்சாட்டு கவனக்குறைவான செயலால் மரணம் ஏற்ப்படுத்தியது. அந்த குற்றத்திற்கு அதிகபட்ச தண்டனை இரண்டு ஆண்டுகள்தான். அதையும் கொடுத்தாயிற்று. பின்னர் எங்கிருந்து நீதி செத்தது என்பது தெரியவில்லை.

வேறு கடுமையான குற்றச்சாட்டு ஏற்கனவே நீக்கப்பட்டு கவனக்குறைவினால் மரணம் ஏற்ப்படுத்துதல் என்ற வகையிலே மட்டும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது கடந்த பல ஆண்டுகளாக அனைவருக்கும் தெரிந்த நிலையில், அதைப் பற்றி சிறிதும் கவலைப்படாத ஊடகங்கள் தற்பொழுது ஏன் இப்படி அலறுகின்றன என்பது புரியவில்லை. (எனது போபால் பற்றிய கட்டுரையில் இதனைப் பற்றி குறிப்பிட்டுள்ளேன்)

ஆண்டர்சன், தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பின்னர், அவரைப் தனியே பிரித்து மற்றவர்களைப் பற்றி மட்டும் வழக்கு நடைபெற்ற சூழலில், தீர்ப்பில் ஆண்டர்சனைப பற்றி குறிப்பிடவில்லை என்று தனியே ஒரு புலம்பல்!


காங்கிரஸ் என்ன செய்தது, பிஜேபி என்ன செய்தது என்று தற்பொழுது கேட்கும் ஊடகங்கள், இது வரை தாங்கள் என்ன செய்தோம் என்பதையும் கூறினால் நல்லது. இதில் வேடிக்கை என்னவென்றால், ’டைம்ஸ் நவ்’ ‘இதோ நாங்கள் ஆண்டர்சனின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து விட்டோம்’ என்று ஒரு தம்பட்டம். விட்டால், காப்டன் பிரபாகரன் போல அவரை சங்கிலியில் கட்டி அட்லாண்டிக் வழியே கூட்டி வந்து விடுவார்கள் போல.

ஆண்டர்சன் எங்கு வசிக்கிறார் என்பது, எந்தக் காலத்திலும் யாருக்கும் தெரியாத ரகசியமல்ல. பல வருடங்களுக்கு முன்னரே அவர் வசிக்கும் வீட்டின் படங்கள் பத்திரிக்கைகளில் வெளியானது.

ஆண்டர்சன் அரச மரியாதையுடன் இந்தியாவை விட்டு சென்றது அன்றே தொலைக்காட்சியாலும் பத்திரிக்கைகளாலும் ஆவணமாக்கப்பட்ட ஒரு விடயம். இவ்வளவு வருடங்கள், அதைப் பற்றி எதுவும் கவலைப்படாத இந்த ஊடகங்கள், தற்பொழுது அர்ஜுன் சிங் தாத்தாவைப் போட்டு இப்படி காய்ச்சுவது என்ன நியாயம் என்று புரியவில்லை.

தர்ம அடி என்பது இதுதான். யார் வேண்டுமானாலும் ஒரு தடியை எடுத்து அர்ஜுன் சிங்கை ஒரு போடு போட்டு விட்டுப் போகலாம் போல. ஆண்டர்சனை இங்கிருந்து அனுப்ப வேண்டுமென்றால், ஒரே ஒரு மனிதர்தான் அதற்கு உத்தரவிட்டு இருக்க முடியும். அவரை குறிப்பிட முடியாது. அர்ஜுன் சிங் என்றால் பிரச்னை இல்லை!

-oOo-

‘குற்ற மனமில்லாச் செயல் குற்றமல்ல’ என்பது குற்றவியலின் முக்கியமான ஒரு விதி. எந்த ஒரு தவறான செயலையும் தண்டனைக்கேதுவான குற்றச்செயலாக கருதுவதற்கு ‘mens rea’ எனப்படும் குற்றமனம் தேவை.

கவனக்குறைவான் ஒரு செயலால் மற்றொரு நபருக்கு ம்ரணத்தையோ அல்லது காயத்தையோ விளைவித்தல் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றம். கவனக்குறைவான ஒரு செயலில், மேற்கண்ட குற்ற மனம் இல்லை என்பது போலத் தோன்றினாலும் அந்த வகையில் கவனக்குறைவாக இருத்தலுக்கு ஒரு குற்ற மனம் தேவை.


எனினும், இந்த வகை குற்றத்திற்காக சட்டம் அளிக்கும் தண்டனை மிகக் குறைவு. அதிக பட்சம் இரண்டு வருடங்கள்!

இந்திய தண்டனைச் சட்டம் இயற்றப்பட்ட பொழுது பெரிய வாகனங்களும் இல்லை. நச்சு தொழிற்சாலைகளும் இல்லை. எனவே கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டியோ அல்லது நச்சுப்புகை தொழிற்சாலை நடத்தியோ ஒருவரை கொன்றாலும் சரி, ஆயிரம் பேரை கொன்றாலும் சரி அதே சிறிய தண்டனைதான்.

போபால் விபத்திலும் சரி, தொடர்ச்சியாக காரை ஏற்றி பல பேரை கொன்று போட்ட சல்மான்கான், நந்தா வழக்குகளிலும் இந்த தண்டனை போதாது என்று ’கொலை இல்லை என்றாலும் தண்டிக்கத்தகுந்த வகையில் மரணத்தை ஏற்ப்படுத்துதல் ( Culpable homicide not amounting to murder) என்ற் அதிகபட்சம் பத்து வருடம் தண்டனை தரத்தக்க ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. எதிர்ப்பார்த்தது போல, போபால் வழக்கிலும், அந்த குற்றச்சாட்டு உச்ச நீதிமன்றத்தால் நீக்கப்பட்டது.

எனவே, போபால் தீர்ப்பில் அதிர்ச்சி தெரிவிக்க புதிதாக என்ன இருக்கிறது என்று புரியவில்லை!

-oOo-

குற்ற வழக்கை விடுங்கள். உண்மையில் நாம் கோட்டை விட்டது நஷ்ட ஈடு வழ்க்கில்.(எப்படி என்ற விபரம் எனது போபால் கட்டுரையில் உள்ளது) எனெனில் தொழிலதிபர்கள் தூக்கு மேடைக்கு கூட போவார்கள். ஆனால் தாங்கள் திவாலாவதை பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கும் தவறிழைத்தவர்களின் இரத்தத்தினை விட, வளமான எதிர்காலத்திற்கான தகுந்த பாதுகாப்பே சிறந்த நிவாரணமாக இருக்க இயலும்.

தொழில் நடத்த வேண்டும் என்றால், அந்த தொழிலுக்கு சம்பந்தமே இல்லாத ஏழைகள் அதனால் பாதிக்கப்பட்டால் அதற்கான முழு நஷ்ட ஈடும் அளிக்க தொழில் நிறுவனங்கள் தயாராக இருக்க வேண்டும்.


அந்த வகையில், இப்படி உணர்ச்சிகரமாக பிரச்னையை கிளப்பியதற்கு வேண்டுமானால் ஆங்கில தொலைக்காட்சி ஊடகங்களிற்கு நமது நன்றியினை தெரிவிக்கலாம்!

மதுரை
16/06/10

19.3.10

நாம் கொடுத்த கோடியும்...கிடைக்கப் போகும் லட்சமும்!

டாக்டர் சுரேஷ் மஹாஜன் இந்தியர். ஆனால், இந்தியாவில் ஆரம்பித்த தனது மருத்துவ தொழிலை அமெரிக்காவில் தொடர்ந்து, பின்னர் அமெரிக்க குடிமகனாக மாறியவர். அமெரிக்க பெண்ணான பட்ரீசியாவை மணந்து, மூன்று குழந்தைகளுக்கு தந்தையான மஹாஜன் தனது நாற்பத்தி ஏழாவது வயதில், ஒரு சாலை விபத்தில் இறந்து போனார்.

1995ம் வருடம் தனது பெற்றோர்களை காண இந்தியா வந்திருந்த மஹாஜன் பயணம் செய்த கார் மீது லாரி மோதிய விபத்தில் மஹாஜன் உயிரிழக்க நேரிட்டது.

பட்ரீசியா, மஹாஜனின் மரணத்திற்கு இழப்பீடு கோரி வழக்கு தாக்கல் செய்தார். விபத்தினை ஏற்ப்படுத்திய லாரியை காப்பீடு செய்திருந்த நிறுவனம், யுனைட்டட் இந்தியா இன்ஸுரன்ஸ் கம்பெனி (United India Insurance Co.Ltd.,)

விபத்து நடப்பதற்கு முந்தைய வருடமான 1994ம் வருடத்தில் மஹாஜனின் வருட வருமானம் 9லட்சம் அமெரிக்க லாடர்கள் என்று கூறப்பட்டாலும் அவரது நிகர வருமானம் (take home salary) 3,39,445 டாலர்கள் என்று கண்டறியப்பட்டது.

பலபடிகளைக் கடந்து, வழக்கு இறுதியில் சென்ற இடம் உச்ச நீதிமன்றம். அங்கு மஹாஜனனின் மரணத்திற்காக நிர்ணயிக்கப்பட்ட இழப்பீடு ரூ.6,78,89,100/- இந்த தொகையானது வ்ழக்கு தாக்கல் செய்த தேதியிலிருந்து 9% வருட வட்டியுடன் சேர்த்து வழங்கப்பட வேண்டியது.

மஹாஜன் குடும்பத்திற்கு ஆயுள் காப்பீடு மூலம் கிடைக்கும் 2,50,000 அமெரிக்க லாடர்கள் இந்த இழப்பீடு தொகையில் கழிக்கப்பட வேண்டும் என்ற யுனைட்டட் இன்ஸூரன்ஸ் நிறுவனத்தின் வாதம் நிராகரிக்கப்பட்டது. (United India Insurance Co.Ltd., Vs Patricia Jean Mahajan 2002 (6) SCC 281)

1995ம் ஆண்டு நிகழ்ந்த மரணத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட தொகை சுமார் 7 கோடி இந்திய ரூபாய்கள். இன்றைய பண மதிப்பில் சுமார் சுமார் 20 கோடி இருக்கலாம். மேலும் பத்து ஆண்டுகள் கழித்து சுமார் 30 கோடியை தொடலாம்.

***

அமெரிக்கரான பட்ரீசியாவிற்கு கொடுக்கப்பட்ட இழப்பீடு தொகைக்காக யுனைட்டட் இந்திய இன்ஸூரன்ஸ் நிறுவனத்தின் சம்பந்தப்பட்ட கிளையில் அதன் அனைத்து வாடிக்கையாளர்களும் செலுத்திய பிரீமிய தொகை பயன்படுத்தப்பட்டதாம்.

ஒரு வேளை மஹாஜனைப் போல பத்து அமெரிக்க மருத்துவர்கள் இறந்திருந்தால், வேறு வழியில்லை. பத்து கிளைகளின் பிரீமியத் தொகையை கொடுக்க வேண்டியிருக்கும்.

ஏனெனில், மோட்டார் வாகன விபத்துகளில் உயர்ந்த பட்ச இழப்பீடு என்பது கிடையாது. காப்பீடு நிறுவனங்களும் தாங்கள் கொடுக்க வேண்டிய அதிக பட்ச இழப்பீடு இவ்வளவுதான் என்று வரையறுக்க இயலாது.

எனவே, அமெரிக்கரான மஹாஜன் இந்தியாவில் ஏற்ப்பட்ட சாலை விபத்தில் இறந்ததால், வளரும் நாடான இந்தியாவின் நிறுவனம் ஒன்று அளித்த இழப்பீட்டு தொகை...1995ல் சுமார் 7 கோடி!

வருடம் 2020 என்றால் 30 கோடி இருக்கலாம்.

***

அதே 2020ம் ஆண்டு, அமெரிக்க நிறுவனம் ஒன்று இந்தியாவில் நிர்மாணித்து, இயக்கும் அணு உலையில் ஏற்ப்பட்ட விபத்து ஒன்றினால், மஹாஜன் அளவிற்கு சம்பாதிக்கும் இந்திய மருத்துவர் ஒருவர் இறந்து போனால்...அமெரிக்க நிறுவனம் அவரது மனைவிக்கு அளிக்கும் இழப்பீடு 30 லட்சம் கூட இல்லாமல் போகலாம். அணுக்கரு இழப்பிற்கான சிவில் கடப்பாடு சட்டம் (Civil Liability for Nuclear Damage Act) என்ற சட்டம் நமது பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டால்...

இந்தச் சட்டம் அணு உலை விபத்தால் ஏற்ப்படும் இழப்புகளுக்கு தர வேண்டிய அதிக பட்ச இழப்பீட்டினை நிர்ணயிக்கும். அதாவது மொத்த இழப்பீடு சுமார் 2000 கோடி. அதுவும் அணு உலையை நிர்மாணிக்கும்/ இயக்கும் நிறுவனம் தர வேண்டிய அதிக பட்ச தொகை சுமார் 500 கோடி மட்டுமே. மீதி, இந்தியர்களின் வரிப்பணத்திலிருந்து தரப்பட வேண்டும்.

உதாரணமாக, போபால் விசவாயு விபத்தில் உயிரிழந்தவர்கள் மட்டும் சுமார் 2500 நபர்கள். செர்னோபில்லில் அதிகம் இருக்கலாம். அப்படி ஒரு விபத்து இந்தியாவில் நடந்தால், அமெரிக்க நிறுவனம் இந்திய மஹாஜன்களுக்கு கொடுக்கும் இழப்பீடு சுமார் 20 லட்சத்தை தாண்டாது.

மேலிருந்து கீழ் நோக்கி எதுவும் பாயலாம்...பணம் மட்டும் பாயாது!

மதுரை
19/03/10