Showing posts with label Spectrum. Show all posts
Showing posts with label Spectrum. Show all posts

17.2.12

ஏன் ஆ.ராசா, கடவுள்?


‘மிதிவண்டியில் வீடுவீடாக சென்று பால் விற்கும் பால்காரர் ஒருவருக்கு அலைபேசி அழைப்பு வரும். தலையில் கட்டியிருக்கும் முண்டாசிலிருந்து அலைபேசியை எடுக்கும் அவர், ‘ஹலோ’ ‘ஹலோ’ என்று கத்திவிட்டு வெறுப்பாக காலி சட்டியில் அலைபேசியை வீசி எறிவார்’

தற்போதய சூழ்நிலையில் எவ்விதமான சுவராசியமுமில்லாத இத்திரைப்பட காட்சியமைப்பு, சில ஆண்டுகளுக்கு முன்னர் தொலைக்காட்சியில் அடிக்கடி காண்பிக்கப்பட்டு நம் மனதில் உறைந்து போன நகைச்சுவைக் காட்சி!

ஆனால், அந்த நகைச்சுவையின் பின்னே ஒளிந்திருக்கும் குரூரமான மனநிலைதான் இன்றும், ‘விலைமதிப்பற்ற அலைக்கற்றையை இலவசமாக சிலர் கொள்ளையடிப்பதா? வாங்கிக் கொள்ளட்டும் அதனை வசதியிருப்பவர்கள்’ என்று தர்ம அடிக்கும்பல் (lynching mob) போல ‘பொது ஏலம்’ ‘பொது ஏலம்’ என்று வலியிறுத்தும் ஊடகங்களை ஆட்டுவிக்கிறது.

சமூகத்தில் நடுநிலையில் இருப்பவர்களான பால் விற்பனையாளர்களையெல்லாம் தாண்டி அலைபேசிகள் இன்று அடிமட்டம், ஏன் எந்தமட்டத்திலும் இல்லாத பிச்சைக்காரர்கள் வரை புழக்கத்திற்கு வந்து விட்டது என்றால், அலைக்கற்றை ஏறக்குறைய இலவசம் என்ற அரசின் கொள்கையன்றி வேறெதுவும் இல்லை.

-oOo-

வளர்ச்சிக்கான முக்கியத் தேவை, தொலைதொடர்பும், போக்குவரத்தும் என்பது நமது நாட்டில் பல ஆண்டுகளாக உணரப்படவே இல்லை. தொலைபேசி என்பது ஆடம்பரமாகவே கருதப்பட்டு, சமூகத்தின் நடுத்தர வர்க்கத்தினருக்கே அவ்வசதி மறுக்கப்பட்டு வந்ததை நாற்பது வயதை கடந்தவர்கள் நன்கு அறிவார்கள்.

தொலைபேசி வசதியில்லாத ஒருவன், தான் நிற்கும் சமூக அடுக்கிலிருந்து இருந்து மேல் அடுக்கிற்கு செல்ல முன்பு எடுத்த முயற்சியில் இன்று தன் கையில் அலைபேசியை வைத்திருக்கும் ஒருவன், நூற்றில் ஒரு பங்கு முயன்றால் போதும். அதே வளர்ச்சியை எட்ட முடியும்.

வசதி வாய்ப்பு அற்றவர்களின் வளர்ச்சியில் அலைபேசி எவ்வாறு பங்கெடுக்க முடியும் என்பதை நான் அடிக்கடி நினைவு கூறும் ஒரு உதாரணத்தைக் கொண்டே விளக்க முடியும். மும்பையில் இருக்கையில் பல இளம் வழக்குரைஞர்கள் அலைபேசியை மட்டும் வைத்துக் கொண்டு தங்கள் கட்சிக்காரர்களுடன் அனைத்து தொடர்புகளையும் ஏற்ப்படுத்திக் கொண்டு தங்கள் தொழிலை புரிவதை கவனித்திருக்கிறேன். இவர்கள், வழக்குரைஞர் குடும்பங்களில் பிறந்தவர்கள் இல்லை. அலுவலகம் வாடகைக்கு பிடிக்கும் அளவுக்கு வசதியான குடும்பங்களில் பிறந்தவர்களும் இல்லை. பெரிய சட்ட நிறுவனங்களில் இணைந்து பணியாற்ற இவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது. வேறு ஒரு வழக்குரைஞரின் அலுவலகத்தில் போதிய வருமானம் இன்றி இளைய வழக்குரைஞராக பணியாற்றுவதற்கு அவர்களது குடும்ப சூழ்நிலை இடம் கொடுக்காது.

சமூகத்தின் கடைக்கோடியில் நிற்கும் இவர்களைப் போன்ற வழக்குரைஞர்களும், வசதிமிக்க எதிர்காலம் குறித்த நம்பிக்கையுடன் மற்ற வழக்குரைஞர்களுக்கு நிகராக தொழில் செய்ய முடிகிறதென்றால், அதற்கு காரணம் ஏறக்குறைய இலவசமாக கிடைக்கும் தொலைத் தொடர்பு வசதிதான்.

இந்த உதாரணம் அனைத்து தொழிலுக்கும் பொருந்தும். ஏன், இன்று எழுத ஆர்வமுள்ள எவருக்கும் தமது கருத்தினை இணையத்தில் பதிந்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடிகிறது. இதன் மூலம் கிடைக்கும் பிரபல்யத்தால், தங்களது ஆக்கத்தை புத்தகமாகவும் பதிப்பித்து அடுத்த கட்டத்துக்கு போவது எளிதாக உள்ளது. பெரிய எழுத்தாளர்கள் என்று அறியப்படுபவர்களோடும் சரிக்கு சரியாக நின்று வாசகர்கள் விவாதம் செய்கின்றனர். பத்து ஆண்டுகளுக்கு முன்னர், சென்னையில் இயங்கும் பத்திரிக்கை நிறுவனங்களோடு அறிமுகமில்லாத ஒரு எளிய எழுத்தாளருக்கு கிடைக்காத வாய்ப்பு தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள எழுத்தாளன் ஒருவனுக்கும் இன்று கிடைக்கிறது என்றால், அதற்குக் காரணம் தொலைத்தொடர்பு வசதியை மக்களிடமே விலை பேசும் கொள்கையை அரசு கை விட்டதினால்தான்.

-oOo-

தொலைபேசி நிறுவனங்களுக்கு விற்க்கப்படும் அலைக்கற்றை இறுதியில் விற்க்கப்படுவது நாட்டின் வளர்ச்சியில் தங்களின் பங்கினைப் பெற நம்பிக்கையுடன் காத்திருக்கும் சாதாரண மக்களிடம்தான். அலைபேசி சேவை கட்டணங்களை தீர்மானம் செய்ய ‘டிராய்’க்கு (TRAI) அதிகாரமுண்டு. தற்பொழுது நிலவும் போட்டியின் காரணமாக, விலை குறைவாக இருப்பதை கவனத்தில் கொண்டு விலை நிர்ணயிக்கப்படவில்லை. ஆயினும், எந்தக் காலத்திலும் டிராய் சேவையின் அதிகபட்ச விலை அல்லது குறைந்தபட்ச விலை ஆகியவற்றை நிர்ணயிக்கலாம். அவ்வாறு நிர்ணயிப்பது, சேவை நிறுவனம் அந்த சேவைக்காக செய்துள்ள முதலீட்டிற்கான நியாயமான வட்டி விகிதத்தின் அடிப்படையில் இருக்க வேண்டுமென டிராய் நெறிமுறைகள் கூறுகின்றன.

அவ்வாறான நிலையில், அலைக்கற்றையை பெறுவதற்கு ஒரு நிறுவனம் அரசிற்கு செலுத்தும் தொகையையும் அதன் முதலீடாக கணக்கில் எடுக்கப்படும். அலைக்கற்றை இலவசமாக அளிக்கப்படும் பட்சத்தில், சேவை நிறுவனத்தின் செலவினங்கள் மட்டுமே முதலீடாக கணக்கில் எடுக்கப்படும். எனவே, 1.75 லட்சம் கோடிக்கு அலைக்கற்றையை விற்று இருக்க முடியும் என்றால், அந்த கோடியை இறுதியில் செலுத்தப் போவது, சேவையை பயன்படுத்தும் சாதாரண மக்கள்தான்.

டிராய் இவ்வாறு சேவைக்கட்டணத்தை நிர்ணயிக்கையில், அலைக்கற்றையை குறைந்த விலைக்கு பெற்ற நிறுவனம், தான் லஞ்சமாக செலுத்திய பணத்தை முதலீடாக காண்பிக்க முடியாது. ஏன், உரிமம் பெற்ற நிறுவனம் தனது பங்குகளை வேறு நிறுவனத்திற்கு அதிக விலைக்கு விற்றதையும் செலவுத் தொகையாக காட்ட முடியாது. அனைத்தும் விதிப்படி நடக்கும் என்ற ஒரு சட்டக் கற்பனையில் (legal fiction), அலைக்கற்றைக்கு கொடுக்கப்படும் லஞ்சமானது, சேவை நிறுவனங்களின் லாபத்திலிருந்து கொடுக்கப்படும் பங்குதானேயொழிய வாடிக்கையாளர்களின் பணமல்ல, என்பதுதான் உண்மை!

பேருந்து வழித்தட உரிமங்களையே எடுத்துக் கொள்வோம். மதுரையிலிருந்து தேனி, கம்பம் செல்லும் வழித்தடத்தின் மதிப்பு ஒரு கோடியை எட்டுகிறது. ஆனால், வழித்தடமானது இலவசமாகவே அரசால் முதலில் வருபவருக்கு முன்னுரிமை அடிப்படையில் அளிக்கப்படுகிறது. வழித்தட உரிமையை ஏலம் விட்டால், அரசுக்கு பல கோடி கிடைக்கும்தான். ஆனால், இதுதான் பேருந்து கட்டணம் என்று அரசு நிர்ணயிக்க முடியாது.


தற்பொழுது, எனக்குள்ள பயம் அலைக்கற்றை வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் யாராவது, தமிழகத்தில் வழங்கப்பட்டுள்ள பேருந்து வழித்தட உரிமங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கு தொடர்ந்து விடுவார்களோ என்பதுதான்!

மதுரை
17/02/1

3.2.12

அலைக்கற்றை தீர்ப்பும் கொண்டாட்டமும்!


சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திலுள்ள அதன் முக்கிய கட்டிடத்தின் ஒரு பகுதியில் வழக்குரைஞர்களுக்கான அறைகள் அமைந்துள்ளன. அந்த அறைகள் போதுமானதாக இல்லை என்பதால் புதிதாக வழக்குரைஞர் வளாகம் ஒன்று கட்டப்பட்டது. புதிய வளாகத்திலுள்ள அறைகளும் காணாத நிலையில், அனைவரிடமும் மனுக்களைப் பெற்று அதற்கான குழு ஒன்று தனது நடைமுறைப்படி அறைகளை ஒதுக்கியது.

அறைகளைப் பெறுவதற்காக போட்டி நிலவிய அந்தச் சூழலில், அனைவருக்கும் சமவாய்ப்பளிக்கும் வண்ணமும், அறைகளை கட்டிய அரசிற்கு முழு வருமானம் பெரும் முறையுமாக ஒன்று இருக்குமாயின் அது பொது ஏலமாகத்தான் இருக்க முடியும்.

அப்படியான ஒரு பொது ஏலமானது அறைகளை விரும்பும் அனைவருக்கும் சம வாய்ப்பளித்திருக்கும். மற்றும், நகரின் மிகமிக முக்கியமான இடத்தில் அரசிடம் உள்ள மிகச் சொற்பமான கட்டிடத்திற்கு, அதன் மதிப்பிற்கு ஈடான வருமானத்தை அரசிற்கு பெற்று தந்திருக்கும்.

ஆனாலும், புதிதாக கட்டிய வழக்குரைஞர் அறைகள் பொது ஏலத்தில் விடப்படவில்லை.

ஏனெனில், ஏற்கனவே உயர்நீதிமன்றத்தின் முக்கிய கட்டிடத்தில் அமைந்துள்ள அறைகள், சந்தை மதிப்பிலான வாடகை இன்றி, உயர்நீதிமன்ற குழு நிர்ணயித்த வாடகையினை கொடுத்து வரும் சூழலில், புதிய அறைகளை பெரும் வழக்குரைஞர்களிடம் இருந்து சந்தை மதிப்பிலான வாடகை பெறுவது, அவர்களுக்கிடையேயான சமநிலையை (Level Playing Field) பாதிக்கும். அதாவது ஒரு வழக்குரைஞர் தனது கட்சிக்காரரிடம் இருந்து பெறும் கட்டணத்தில், அந்த வழக்கிற்கான அலுவலக செலவும் அடங்கும். ஒரே வகையிலான சேவைக்கு, தனது கூடுதலான அலுவலக செலவினால் புதிய அறையில் இருக்கும் வழக்குரைஞர் கூடுதல் கட்டணம் நிர்ணயிக்க நேரிடும், அல்லது தனது நிகர கட்டணத்தை குறைத்துக் கொள்ள வேண்டியிருக்கும். எனவே ஏற்கனவே இருந்து கொண்டிருக்கும் வழக்குரைஞர்களிடம் என்ன வாடகை நிர்ணயிக்கப்படுகிறதோ, அதையேதான் புதிய அறைகளுக்கும் நிர்ணயிப்பது நியாயமான செயலாக இருக்க முடியும்.

வழக்குரைஞர்கள் தங்களது தொழிலை கைக்கொள்ளுவதற்கு, அரசிடம் அரிதாக உள்ள முக்கிய இடம், குறைந்த வாடகைக்கு கொடுக்கப்பட முடியுமா? பொது ஏலத்தில் அறைகள் கொடுக்கப்படாதலால், எவ்வளவு நட்டம்?

அது நட்டம் இல்லை என்பதுதான் நிதர்சனம்.

தனது குடிமக்களுக்கு நீதியை வழங்க வேண்டியது அரசின் முக்கிய கடமை. நீதியைப் பெறுவதற்காக பல குடிமக்களுக்கு வழக்குரைஞரின் உதவி தேவைப்படுகிறது. ஒரு நாளைக்கு ஐந்து லட்சம் கட்டணம் பெறும் வழக்குரைஞர்கள் முதல் ஐம்பது ரூபாய் வாங்கும் வழக்குரைஞர்கள் வரை இருக்கிறார்கள். ஆனால், அந்த ஐம்பது ரூபாயைக் கூட கொடுக்க முடியாத மக்களும் நமது நாட்டில் உண்டு. அவர்களுக்கும், நீதியை அளிப்பதற்காகவே, அரசு இலவச சட்ட உதவியை அளிக்கிறது. அதாவது, வழக்குரைஞர் கட்டணத்தை தானே செலுத்த வேண்டிய கட்டாயம், மக்கள் நலம் பேணும் அரசிற்கு (Welfare State) உண்டு.

இந்தச் சூழ்நிலையில் சந்தை மதிப்பில் வழக்குரைஞர்கள் அறைகள் ஒதுக்கப்பட்டால், நூறு ரூபாய் கட்டணம் வாங்கும் வழக்குரைஞர் நூற்றி ஐம்பது ரூபாயும், ஐம்பது ரூபாய் வாங்கிய வழக்குரைஞர் நூறு ரூபாயும் வாங்க நேரிடும். அதுவரை ஐம்பது முதல் தொண்ணூற்று ஒன்பது ரூபாய் வரை கட்டணம் செலுத்த வசதி படைத்த குடிமக்களும் இலவச சட்ட உதவி மையத்தை அணுக வேண்டிய கட்டாயம் ஏற்ப்படும். இறுதியில் சந்தை மதிப்பில் பெற்ற வாடகையினை அரசு இலவச சட்ட உதவி மைய வழக்குரைஞர் கட்டணமாக திருப்பிச் செலுத்தும்!

-oOo-

சென்னை மாநகராட்சி அதற்குச் சொந்தமான இடங்களில், கட்டிடங்களை கட்டி கடைகளாக வாடகைக்கு விட்டுள்ளது. அந்தக் கடைகளுக்கும் போட்டி நிலவும் சூழலில், பொது ஏலம் நடத்தி சந்தை மதிப்பினை வாடகையாக பெறுகிறது. ஆனால், அதற்கான காரணம் இருக்கிறது.

வீட்டு வசதி வாரியம், தான் கட்டும் வீடுகளையும், மனைகளையும் அதிகளவில் மனுக்கள் இருக்கும் சூழலில் லாட்டரி (Lot) மூலம் ஒதுக்குகிறது. அதற்கான காரணம் தனியே இருக்கிறது.

அதைப் போல, முதலில் வருபவருக்கு முன்னுரிமை ( First come First serve) என்ற முறையும் நமது நாட்டில் சுதந்திரம் கிடைத்த நாள் முதலே ஏற்றுக் கொள்ளப்பட்டு நடைமுறையில் இருக்கும் ஒரு முறைதான். உதாரணமாக சிறுகனிம வளங்களை (Minor Minerals) எடுப்பது சம்பந்தமான உரிமங்கள் இந்த முறையில் கொடுக்கப்படுவதுண்டு. அப்படியான முறையில் உரிமங்களை அளிப்பதற்கும் விசேட காரணங்கள் உண்டு. அந்த முறையும் மற்ற முறைகளைப் போலவே, சமத்துவ உரிமையை (Right to equality) பாதிப்பதாக நீதிமன்றங்கள் கருதியதில்லை.

-oOo-

எந்த எந்த உரிமம் எந்த எந்த முறையில் கொடுக்கப்படலாம் என்பது அரசின் கொள்கை முடிவு. அரசு நிர்வாகம் மக்களுக்கு நேரிடையாக பதில் சொல்ல கடமைப்பட்டது. பல்வேறு காரண காரியங்களை ஆராய்ந்த பின்னரே அரசு ஒரு கொள்கை முடிவினை தீர்மானிக்கிறது. எனவேதான், நீதிமன்றங்கள் அரசின் கொள்கை முடிவில் தலையிடுவதில்லை.

கண்மாய் பாதுகாப்பு சட்டத்தில் கூறியுள்ளவாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் குடிசை கட்டி வாழ்பவர்களை, அகற்றி நீர்வளத்தினைப் பெருக்குங்கள் என்று எளிதில் நீதிமன்றங்கள் நிர்வாகத்திற்கு கட்டளையிடலாம். ஆனால், அரசால் அப்படி கண்ணை மூடிக்கொண்டு தனது குடி மக்களை தூக்கி எறிந்து விட முடியாது. பல்வேறு காரணிகளையும், விளைவுகளையும் சீர்தூக்கி பார்க்க வேண்டும். எனவேதான் நீதிமன்றங்கள் அரசு நிர்வாகத்தில் எளிதில் தலையிடுவதில்லை.

இதன் காரணமாகவே, இனி அலைக்கற்றை (Spectrum) உரிமத்தினை பொதுஏலம் மூலமாகவே அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம், அதற்கெனவே அமைக்கப்பட்ட டிராய் (TRAI) க்கு கட்டளையிட்டுள்ளது எவ்வளவு தூரம் சரியான ஒரு தீர்ப்பாக இருக்க முடியும் என்பதில் எனக்கு ஐயமுண்டு!

ஏனெனில், 2003ம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான அரசு புதிய உரிமங்களை ‘முதலில் வருபவருக்கு முதலில் உரிமம்’ என்ற அடிப்படையில் அளிக்க வேண்டும் என்று தீர்மானித்ததற்கு பிரத்யேக காரணங்கள் உண்டு. முக்கியமாக அரசு, அலைக்கற்றை உரிமத்தினை, தகவல் தொடர்பு மூலம் வளர்ச்சிக்கான ஒரு காரணியாகத்தான் பார்த்ததேயொழிய அரசின் வருவாயை பெருக்கும் ஒரு வளமாக கருதவில்லை.

’How would you empower citizens? There could be all sorts of technologies – one is cellphones’ இக்பால் காதிர் என்ற வங்காள தேச தொலைதொடர்பு தொழில்முனைவோர் கூறிய மேற்க்கண்ட கருத்தினை இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் தனது தலையங்க பக்கத்தில் பிரசுரித்துள்ளதற்கு காரணமுண்டு!

இதனை உணர்ந்து கொண்டதாலேயே, டிராய் 2007ம் ஆண்டிலும், சிறு நகர, கிராமப்புறங்களிலும் அலைபேசிச் சேவை பரவலாக்கப்பட வேண்டும் என்றால் 2ஜி அலைக்கற்றை உரிமம் மட்டுமாவது ஏற்கனவே நிலுவையில் இருந்து வரும் முறையிலேயே அளிக்கப்பட வேண்டும் என்று முடிவு எடுத்தது. ஏற்கனவே அதே முறையில் உரிமம் பெற்று அலைபேசி சேவை அளித்து வரும் நிறுவனங்களோடு புதிதாக உரிமம் பெறும் நிறுவனங்கள் போட்டியிட வேண்டுமாயின், புதிய உரிமங்களுக்குமான கட்டணமும் 2001ம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணமாகவே இருக்க வேண்டும் என்றும் முடிவெடுத்தது. டிராயின் இந்த முடிவு தவறான நோக்கத்துடன்  (Ulterior Motives) எடுக்கப்பட்டது என்றோ அல்லது கெட்ட எண்ணத்துடன் (Malafide) எடுக்கப்பட்டது என்றோ உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறவில்லை. அப்படியான ஒரு வாதமும் வைக்கப்பட்டதாக தெரியவில்லை.


2003ம் ஆண்டு தொடங்கி பொது ஏலம் மூலம் கிடைக்கும் அபரிதமான பணத்தை துறந்து உரிமங்கள் அளிக்கப்பட்டு வந்த சூழ்நிலையில், 2ஜி உரிமங்கள் மட்டும் பொது ஏலம் மூலம் அளிக்கப்படாதலால் அரசுக்கு 1.7லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு என்றால், அந்தக் கூற்று பிழையானதாகும் (Fallacious). எனினும் உச்ச நீதிமன்றம் தனது விசாரணையிலும் தீர்ப்பிலும் தணிக்கையாளரின் (CAG) அறிக்கைக்குள் செல்லவில்லை!

வேடிக்கை என்னவென்றால், 2001ம் ஆண்டில் மத்திய அரசு பொது ஏலம் தவிர்த்து குறைந்த தொகைக்கு அலைக்கற்றை உரிமத்தை வாரி வழங்கி அரசுக்கு 11,000/- கோடி நட்டம் ஏற்ப்படுத்தி விட்டதாக நமது உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு உட்பட நீதிப்பேராணை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அரசின் வாதம் பொது மக்களின் நலனை முன்னிட்டு தொலை தொடர்பு வளர்ச்சிக்காக பொது ஏலம் கூடாது என்பது அரசின் கொள்கை முடிவு என்பதால் நீதிமன்றங்கள் அதில் தலையிட முடியாது என்பதாகும். இவ்வாறு வாதிட்டது காங்கிரஸ் அரசு அல்ல. மாறாக தற்பொழுது 1.7லட்சம் இழப்பு என்று உரக்கக் கத்தும் பிஜேபி அரசு!

பிஜேபி அரசுக்கு எதிராக 2001ம் ஆண்டில் 11ஆயிரம் கோடி என்று நமது உயர்நீதிமன்றத்தில் எடுத்து வைக்கப்பட்ட வாதம், மக்கள் நலனுக்கான கொள்கை முடிவிற்கு எதிராக பொது நலவழக்கா? என்று நிராகரிக்கப்பட்டதை யார் இன்று நினைவில் கொள்ளப் போகிறார்கள்.

எனவே, கடந்த பத்து ஆண்டுகளாக இரு அரசுகளாலும் பொதுமக்களின் நலனை முன்னிட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு நடைமுறையினை உச்ச நீதிமன்றம், கூடாது என்பதோடு ஏற்கனவே அளிக்கப்பட்ட உரிமங்களையும் யார் தவறு செய்தவர்கள் யார் உரிமையோடு பெற்றவர்கள் என்று முழுவதும் ஆராயாமல் மொத்தமாக ரத்து செய்தது, ஒரு சரியான தீர்ப்பாக இருக்க முடியாது என்பது என் பணிவான கருத்து. இனி நிகழப் போகும் குழப்பங்களாலும், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படப் போகின்ற மறுஆய்வு (Review) மனுக்களாலும் எனது கருத்து நிலைபெறும் (vindicate) என்று நம்புகிறேன்.

-oOo-

1.7 லட்சம் கோடி!

இந்த தொகைதான் ராஜாவுக்கு எதிராக ஊடகங்களையும், மக்களையும் அதன் விளைவாக நீதிமன்றங்களையும் கொதித்து எழ வைத்தது. மற்றபடி இந்தத் தொகையினை மறந்துவிட்டு பார்த்தால், அலைக்கற்றை ஊழல் என்பது இந்தியா எங்கும் வியாபித்திருக்கும் ஊழல்களில் மற்றுமொரு ஊழல் என்ற வகையிலேயே இருந்திருக்கும்.



ராஜா எவ்வாறு சில நிறுவனங்களுக்கு சார்பாகவும், சில நிறுவனங்களை போட்டியிலிருந்து விலக்கும் வண்ணமும் முடிவுகளை எடுத்தார் என்பதை உச்ச நீதிமன்றம் அடுக்கடுக்கான காரணங்களை தனது தீர்ப்பில் கூறியுள்ளது. தீர்ப்பின் முடிவுகள் ராஜா மீது நடைபெறும் குற்ற வழக்கை பாதிக்காது என்று நீதிபதிகள் கூறியிருப்பினும், அமர்வு நீதிமன்றத்தை பொறுத்தவரை ராஜாவின் விதி மூடி முத்திரையிடப்பட்டது போலவே தோன்றுகிறது. ராஜா தன் மீதான குற்ற வழக்கிலிருந்து விடுதலையடைவது, இனி இறுதியில் அவர் தனது மேல்முறையீட்டிற்காக அணுகப் போகிற உச்ச நீதிமன்றத்தின் கைகளில்தான் உள்ளது.

ஆயினும், சில நிறுவனங்களுக்கு சார்பாக ராஜா செயல்பட்டார் என்பது தீர்ப்பிலிருந்து உறுதியாகத் தெரிந்தாலும், ஏற்கனவே கூறிய காரணங்களால், அவர் நேர்மையாக நடந்து கொண்டிருந்தாலும் அரசுக்கு இதே வருவாய்தான் கிடைத்திருக்கும்.

ஏனெனில் தொடர்ந்த அரசின் கொள்கைப்படியும், டிராய் நெறிமுறைகள்படியும், யார் உரிமம் பெற்றிருந்தாலும் தற்பொழுது கிடைத்திருக்கும் உரிமத் தொகைதான் வசூலிக்கப்பட்டிருக்கும்.

எனவே, ராஜா நேர்மையாக நடந்து கொண்டிருந்தால், பொது ஏலம் தவிர்த்த உரிமம் வழங்குதல் முறையால் அரசுக்கு இழப்பு என்பது வெறும் கோஷமாகவே முடிந்து போயிருக்கும்.

ராஜாவின் தவறுகளுக்காக, அரசு சில காரணங்களுக்காக கடந்த பத்தாண்டுகளாக கைக்கொண்டு வரும் உரிமம் முறையை மாற்றக் கூறுவது, அலைக்கற்றையை ஒரு வருவாய் ஈட்டும் வளமாக பார்ப்பதும் சரியான ஒரு செயலாக இருக்கப் போவதில்லை. எதிர்காலத்தின் இதன் விளைவுகளை நாம் உணரலாம்.

மற்றபடி பொது ஏலத்திலும், உச்ச நீதிமன்றம் பட்டியலிட்ட ராஜாவின் மீறுதல்கள் மிகச் சாதாரணம். போபார்ஸ் ஊழலோ, ஹெச்டிடபிள்யூ நீர்மூழ்கி ஊழலோ, காமன்வெல்த் போட்டி ஊழலோ அல்லது இந்தியாவெங்கும் நித்தம் நித்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஊழல்களோ பொது ஏலமோ இல்லை ஒப்பந்தப் புள்ளி முறையிலான தேர்ந்தெடுப்பில்தான் நடைபெறுகின்றன.

தமிழகத்தினைப் பொறுத்தவரை ஆளும்கட்சியின் ஆதரவு பெறாத எவரும், டாஸ்மாக் மதுக்கடை ஏலத்திலோ அல்லது பொதுப்பணித்துறை ஏலத்திலோ வெற்றி பெறவே முடியாது என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். அவற்றைத் தடுக்க ஏதும் இயலாத ஊடகங்கள், பொது ஏலமே தீர்வு என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினைக் கொண்டாடுவது குரூர நகைச்சுவை!

நீதித்துறையில் நேர்மையின் உருவமாக விளங்கிய ஏ.கே.கங்கூலி நேற்றோடு ஓய்வு பெற்று விட்டார். உச்ச நீதிமன்றத்தை விட்டு தன் வீட்டிற்கு செல்லும் வழியின், முன்னாள் காங்கிரஸ் மத்திய அமைச்சர் சதீஷ் சர்மாவிற்கு எதிராக 1996ல் முன்னாள் நீதிபதி குல்தீப் சிங் கூறிய தீர்ப்பை கொண்டாடிய ஊடகங்களும் நினைவுக்கு வந்திருக்கும்.

ஆனால் 1999ல் அந்த தீர்ப்பிற்கு என்ன நேர்ந்தது என்பதும் நினைவுக்கு வந்த கங்கூலி ஒரு கணம் மனதிற்குள் புன்னகைத்திருப்பார்.

Anyway, well done Sir, your parting judgment is like the other Ganguly reaching his century with a sixer!

மதுரை
03/02/12


10.2.11

சட்டப்புலி சுப்பிரமணியன் சுவாமி!

சுப்பிரமணியன் சுவாமி, மீண்டும் தான் ஒரு சட்டப்பு(ளி) என்பதை நிரூபித்திருக்கிறார்.



’ஸ்பெக்ட்ரம்’ சம்பந்தமான நடைபெற்றுக் கொண்டிருக்கும் வழக்கில், தமிழக முதல்வர் கருணாநிதிக்கும் பங்கிருக்கிறது என்று சுவாமி முழங்க, முதல்வர் சார்பாக தமிழக அரசின் தலைமை வழக்குரைஞர், ‘சுவாமியின் குற்றச்சாட்டு, முதல்வரை அவதூறு (Defame) செய்துள்ளதாக கூறி’ அறிவிப்பு அனுப்பியுள்ளார். சுவாமி பதிலுக்கு, ‘இந்த அறிவிப்பு கருணாநிதியின் சட்ட அறிவீனத்தைக் காட்டுகிறது. நீதிமன்றத்தில் எந்தவிதத்திலும் பேச எனக்கு முழு உரிமையுள்ளது (Absolute Privilege). அதற்காக என் மீது யாரும் வழக்கு தொடர முடியாது’ என்று ஒரே போடாக போட்டுள்ளார்.


சரி, தமிழக அரசு வழக்குரைஞராவது அதனை முதல்வரிடம் தெரியப்படுத்தியிருக்க வேண்டாமா? அடுத்த நாள் அமைச்சர் துரைமுருகன், ‘வெளியே சுவாமி பேசியது குறித்துதான் அறிவிப்பு’ என்று எடுத்து விட……’நீதிமன்றத்திற்குள் எந்த அவதூறையும் பேசுவதற்கு யாருக்கும் உரிமை உள்ளது’ என்று சுவாமி கூறிய சட்டம், அது சரிதானா? என்று ஆராயப்படாமலேயே அனைத்து ஊடகங்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது.


சுவாமியே சொல்லி விட்டார். இனி புகுந்து விளையாண்டு விடலாம், என்று அனைத்து வழக்காடிகளும் நினைத்து விட்டால்?


அப்படியெல்லாம் இல்லை என்று எச்சரிக்கவே இந்தப் பதிவு.


-oOo-


ஒருவரைப் பற்றி அவதூறாக பேசுவது, இரு விளைவுகளை ஏற்ப்படுத்தலாம். அவதூறாக பேசுவது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 499 படி குற்றமாகும். அந்தக் குற்றச் செயலுக்காக அவதூறு செய்தவர் குற்றவியல் முறைப்படி தண்டிக்கப்படலாம். குற்றமோ, இல்லையோ பாதிக்கப்பட்டவர் தனியே உரிமையியல் வழக்கு தொடர்ந்து, அதற்காக அவதூறு செய்தவர் நட்ட ஈடும் கொடுக்க நேரிடலாம்.


அது என்ன, முழு உரிமை? (Absolute Privilege)


அப்படி ஒரு உரிமை சட்ட ரீதியில் இந்தியாவில் ஒரு பிரிவினருக்குத்தான் உள்ளது. பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்!


அரசியலமைப்பு சட்டம் பிரிவு 105 படி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிரிவு 194 படி மாநில சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அவரவர் மன்றங்களிலோ அல்லது அவையால் அமைக்கப்படும் குழுக்களிலோ (Committee) எந்த அவதூறு வழக்கையும் பற்றியும் கவலைப்படாமல் எதையும் பேச உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும், உச்ச நீதிமன்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் தங்களது பணியில் அவர்கள் நடந்து கொள்ளும் விதம் பற்றி விவாதிக்க முடியாது.


சரி, நீதிமன்றத்திற்குள்?


சுவாமி கூறுவது சரிதான்….அந்த நீதிமன்றம் இங்கிலாந்தில் இருக்கும் பட்சத்தில்.


இங்கிலாந்தில் இருக்கும் அப்படிப்பட்ட உரிமை இந்தியாவில் கிடையாது என்று நமது நீதிமன்றங்கள் பல தீர்ப்புகளில் தெளிவுபடக் கூறியும், சுவாமி சும்மா அடித்து விளையாடி உள்ளார்.


-oOo-


1926ம் ஆண்டிலேயே, பம்பாய் உயர்நீதிமன்றத்தின் புல் பெஞ்ச் பாய் சாந்தா எதிர் உமரு அமீர்மாலிக் (1926) 13 AIR Bom 141 என்ற வழக்கில் ஒரு சாட்சி நீதிமன்றத்தில் கூறுவதைப் பொறுத்து கூட அவர் மீது அவதூறு வழக்கு தொடரலாம் என்று தீர்ப்பு கூறியுள்ளது. பம்பாய் தீர்ப்பினைப் பின்பற்றி அலகாபாத் உயர் நீதிமன்றமும் 1940ம் ஆண்டில் முகமது ஈஸா எதிர் நசீம் கான் AIR 1940 All 246 என்ற வழக்கில் ஒரு கொலை வழக்கு சம்பந்தமாக, குற்றவியல் நடுவர் (Judicial Magistrate) முன்பு கொடுத்த வாக்குமூலம், அவதூறானது என்று பாதிக்கப்பட்டவர் குற்றவியல் வழக்கு தொடரலாம் என்று தீர்ப்பு கூறியுள்ளது.


இந்த தீர்ப்புகளில் நீதிமன்றங்கள் வலியுறுத்திய முக்கிய விடயம், ’அவதூறா இல்லையா என்பதை இந்திய தண்டனை சட்டம் கூறுவதை அடிப்படையாக வைத்தே தீர்மானிக்க முடியுமே தவிர, இங்கிலாந்தில் உள்ள நடைமுறையை வைத்தோ அல்லது பொது நன்மை, நீதி பரிபாலனம் என்பதை அடிப்படையாக வைத்து தீர்மானிக்க முடியாது’ என்பதே!


மேலும் தேடினால், 1912ம் ஆண்டிலேயே இங்கிலாந்து நிலைக்கும் நமக்குமுள்ள வேறுபாட்டை வலியுறுத்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு மனுவில் கூறப்பட்ட வாசகங்கள் அவதூறாக இருந்தன என்று மனு தாக்கல் செய்தவர் மீது குற்றவியல் மற்றும் உரிமையியல் வழக்குகள் தாக்கல் செய்யப்படலாம் என்று சி.ஹெச்.கிரெளடி 18 Indian Cases 737 என்று தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. நீதிபதிகள், ‘இந்திய தண்டனை சட்டத்தில் நல்லெண்ணம் (Good Faith) என்பது இல்லாமலிருக்க வேண்டும் என்று கூறப்படுவதிலிருந்து, எங்கு பேசினால் என்ன, நல்லெண்ணம் இல்லை என்றால் குற்றம்தான்’ என்று வலியுறுத்துகின்றனர்.


-oOo-


இங்கிலாந்து நம்மை ஆண்டு கொண்டிருக்கையிலேயே இதுதான் நிலை என்றால், தற்பொழுது நிலை என்ன வேறாகவா இருக்கப் போகிறது.


நமது மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தைப் பொறுத்து சிறிது குழப்பம் நிலவினாலும், 1951ம் ஆண்டில் நாராயண ஐயர் எதிர் வீரப்ப பிள்ளை AIR 1951 Mad 34 என்ற ஒரு வழக்கில் புல் பெஞ்ச அமைக்கப்பட்டு பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது.


சமீபத்தில், தர்மராஜா எதிர் சின்னத்தம்பியா பிள்ளை 1998 (2) MLJ 73 என்ற வழக்கில் கூட நமது நீதிமன்றம் இந்தக் கூற்றை உறுதி செய்துள்ளது.


-oOo-


இறுதியாக, சாட்சிக் கூண்டில் இருக்கும் ஒருவரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. அவர் அளிக்கும் பதிலால் அவர் மீது ஒரு குற்றவியல் வழக்கு தொடரப்படலாம் என்ற நிலையிலும், அவர் பதிலளிக்க கட்டாயப்படுத்தப்படுகிறார் என்றால்…


அப்படி ஒரு நிலையில் இந்திய சாட்சிய சட்டம் (Indian Evidence Act) பிரிவு 132 படி அவருக்கு முழு பாதுகாப்பு உண்டு. அவ்வாறாக நீதிமன்றத்தால் கட்டாயப்படுத்தப்பட்டு பதிலளிக்கும் ஒருவர் மீது, அந்த பதிலை வைத்து, வழக்கு தொடர முடியாது.


ஆனால், சுப்பிரமணியன் சுவாமி, நடைபெற்று வரும் வழக்கில் ஒரு சாட்சியும் இல்லை, அவர் அவ்வாறு கூற கட்டாயப்படுத்தப்படவும் இல்லை. ‘இது கண்டென்ப்ட் ஆப் கோர்ட்’ என்று சுவாமி மிரட்டுவதெல்லாம் சும்மா பூச்சாண்டி!


சட்ட அமைச்சர், ‘அதனாலென்ன….அப்போதும் நீங்கள் தப்பிக்க முடியாது’ என்று துணிந்து சொல்லியிருக்கலாம்!


மதுரை
10/02/11


இஸ்லாமிய வங்கி குறித்து சுவாமி கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு போன வாரம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தேவையின்றி ஒரு வங்கி முயற்சி தள்ளிப் போடப்பட்டதுதான் மிச்சம்!