12.11.06

அப்சலும், க்ரீமி லேயரும் - 5

ஆனால் க்ரீமி லேயர்?

அரசியலமைப்பு குழு அப்படி ஒரு வகுப்பினைப் பற்றி சிந்திக்கவும் இல்லை. விவாதிக்கவும் இல்லை. பங்கு பெற்ற யாரும், ‘உங்களது மகனுக்கும் இட ஒதுக்கீடு தேவையா’ என்று அம்பேத்கரைப் பற்றி வினா எழுப்பவில்லை. எனவே அரசியலமைப்புச் சட்டத்திலும் அவ்வாறான ஒரு பிரிவினரைப் பற்றி எங்கும் குறிப்பிடப்படவில்லை. பின்னர் ஏன் உச்ச நீதிமன்றம், முக்கியமாக மண்டல் கமிஷன் வழக்கில் க்ரீமி லேயரைப் பற்றி கேள்வி எழுப்பி அதற்கு விடை காண முயன்றது? ஒரு வேளை இந்த விவாதம் நரசிம்ஹராவ் அரசு கொண்டு வந்த இரண்டாவது குறிப்பாணையால் எழுந்திருக்கலாம். ஏனெனில் அந்த குறிப்பாணையின் மூலம் பிற்ப்படுத்தப்பட்டவர்களில் ‘poorer section’கு முன்னுரிமை (preference) அளிக்கப்பட்டது. இது க்ரீமி லேயரைப் பற்றியே குறிப்பிடுவதாக இதனைப் படிக்கும் எவரும் புரிந்து கொள்வார்கள். ஆனால், உச்ச நீதிமன்றம் மேற்கண்ட இரு ஆங்கில பதங்களுக்கும் புதிய அர்த்தம் கூறி குறிப்பாணை சரியே என ஏற்றுக் கொண்டது. அதன் மூலம் அரசு குறிப்பாணையும் க்ரீமி லேயரைப் பற்றி குறிப்பிடவில்ல என்றாகிவிட்டது. இனியும் நீதிமன்றம் க்ரீமி லேயர் என்ற கேள்வியினை எழுப்பியது என்றால், நீதிமன்ற சுவர்களை தாண்டி வெளியே நடந்த வாத பிரதிவாதங்களை தனது கருத்தில் உச்ச நீதிமன்றம் எடுத்துக் கொண்டது என்றுதான் அனுமானிக்க முடியும்.

ஏனெனில், தமிழக, கேரள, பீகார் மற்றும் இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக வாதாடிய அனைவருமே க்ரீமி லேயர் என்ற பாகுபாட்டினை வெகுவாக எதிர்த்தனர். வினோதமாக, ‘பிற்ப்படுத்தப்பட்டவர்களில் சிலர் வெகுவாக முன்னேறி விட்டதாகவும், அவர்கள் இட ஒதுக்கீட்டின் முழு பலனையும் அபகரித்துக் கொள்வதாகவும்’ என்ற க்ரீமி லேயர் வாதம் இட ஒதுக்கீட்டின் எதிர்ப்பாளர்களால் முன் வைக்கப்பட்டது. இட ஒதுக்கீட்டினால் திறமைக்குறைவு ஏற்ப்படும் என்ற அவர்களது வாதம் உண்மையெனில், மேலும் திறமைக்குறைவினை ஏற்ப்படுத்தும் க்ரீமி லேயர் வாதம் அவர்களாலேயே வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்க முரணாகும். மேலும் இட ஒதுக்கீடு ‘அனைவரும் சமம்’ என்ற உரிமைக்கு எதிரானது என்பது வழக்கின் அடி நாதமாக இருக்கையில் க்ரீமி லேயர் எந்த விதத்திலும் அந்த வாதத்திற்கு துணை புரியப் போவதில்லை என்ற பொழுதிலும், அந்த வாதம் வைக்கப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தின் முன் எழுந்த பிரச்னையும் இட ஒதுக்கீடு குறிப்பாணை சம உரிமையினை பாதிக்கிறதா என்பதுதான். உச்ச நீதிமன்றமும் இட ஒதுக்கீடு மொத்தமாக 50%க்குள் இருக்கையில் சம உரிமையினை பாதிப்பதாகாது என்று கூறியது சட்டத்தினை பரிசீலனை செய்யும் அதன் அதிகாரத்திற்கு உட்பட்டதுதான். ஆனால், தானாக முன் வந்து க்ரீமி லேயர் என்று பிற்ப்படுத்தப்பட்டவர்களில் ஒரு புது வகுப்பினை வரையறுக்க முயன்றது, அரசின் அதிகாரத்தில் தலையிடும் செயல் என்பது, நீதிபதிகளுக்கு தக்க மரியாதையுடன் நான் கருதும் எண்ணம்.

***
to be continued...

4.11.06

அப்சலும், க்ரீமி லேயரும் - 4

மண்டல் கமிஷன் வழக்கு வரை, ஏன் இந்த நாள் வரை பிற்ப்படுத்தப்பட்டவர்கள் சார்பான சக்தி வாய்ந்த பொதுக்கருத்து பரந்துபட்ட அளவில் இந்தியா முழுவதும் ஏற்ப்படவில்லை என்பது எனது அனுமானம். ஏதோ தமிழகத்தில் மட்டுமே பெரிய பிரச்னையாக எடுத்து வைக்கப்படுகிறது. தமிழகத்தில் இட ஒதுக்கீட்டினை உரிமை என்ற அளவில் ஒரு பொதுவான கருத்தாக இருக்கையில், அகில இந்திய ஊடகங்களை கவனித்தால் இட ஒதுக்கீட்டினை சலுகை என்ற அளவிலேயே அணுகுவதை பார்க்கலாம். ஆயினும் மண்டல் கமிஷன் என்ற பூதம் விபி சிங் தயவால் கிளப்பி விடப்பட்ட பின்னர் எந்த ஒரு அரசியல் கட்சியாலும் அதனை எதிர்க்க முடியாமல், ஊடகங்களின் கருத்தும் பிற்ப்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டு தவிர்க்க முடியாத ஒன்று என்ற கருத்தின் அடிப்படையில் உருப்பெற்றன. ஆயினும் இட ஒதுக்கீடு என்பது சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற உயரிய கருத்திற்கு விரோதமானது என்ற வகையில் தயக்கத்துடனே அணுகப்படுகையில் ‘அதிகபட்சம் 50%’ மற்றும் ‘சரத் யாதவின் பிள்ளைக்கு இட ஒதுக்கீடு தேவையா?’ என்ற வாதங்கள் எடுத்து வைக்கப்படுகையில் அதனை எதிர் கொள்ள யாருமின்றி ஊடகங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பொதுக்கருத்தாக நிலவுகிறது. இன்று கூட தமிழகத்திலேயே பிரபலமாக உள்ள பத்திரிக்கைகளான ஆனந்த விகடன், குமுதம், துக்ளக், குங்குமம், கல்கி போன்றவற்றில் இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவான கருத்து, கதை, துணுக்கு, செய்திகளையாவது சில சமயம் பார்க்க வாய்ப்புண்டு. ஆனால், க்ரீமி லேயர் என்பது தேவையில்லை என்ற ஒரு கருத்தினை நான் அறிந்த வரையில் பார்த்ததில்லை.

இவ்வாறான ஒரு நிலையில், உச்ச நீதிமன்றத்திற்கும் மண்டல் கமிஷன் வழக்கில் இட ஒதுக்கீடு மொத்தத்தில் 50%த்திற்கு மிக கூடாது என்றும் க்ரீமி லேயர் என்று ஒரு வகுப்பிற்கு இட ஒதுக்கீடு தேவையில்லை என்றும் கூறுவது இலகுவான ஒரு காரியம் என்பது எதிர்பார்த்ததுதான்.

அரசியலமைப்பு சட்டத்தில் இட ஒதுக்கீட்டிற்கு ஏதும் அதிகபட்சம் வரையறுக்காத நிலையில் உச்ச நீதிமன்றம் இவ்வாறு கூற முடியுமா? என்ற கேள்வியினை சிலர் எழுப்பினாலும், சட்டப்படி அது இயலக்கூடிய காரியமே! உலகிலுள்ள அனைத்து அரசியலமைப்பு சட்டங்களிலும் நமது சட்டம் மிகவும் பெரியது எனினும், எதிர்காலத்தில் நிகழக்கூடிய அனைத்து பிரச்னைகளையும் எதிர்நோக்கி அதனை வடிப்பது என்பது இயலாத காரியம். அவ்வாறான நேரங்களில், அரசியலமைப்பு சட்டகுழு ஒவ்வொரு பிரிவினையும் பற்றி நடத்திய விவாதங்களை அலசிப்பார்ப்பது இவ்வாறு சட்டமியற்றியவர்களின் நோக்கத்தினை அறிய உதவும்.

வகுப்புவாரி இட ஒதுக்கீடு வழங்க வழிகோலும் அரசியலமைப்பு சட்டத்தின் 16(4) வது பிரிவு குறித்து 30.11.48 அன்று நடைபெற்ற விவாதத்தின் முடிவில் திரு.அம்பேத்கர் கூறுவதை கவனியுங்கள்.

Let me give an illustration. Supposing, for instance, reservations were made for a community or a collection of communities, the total of which came to something like 70 per cent of the total posts under the State and only 30 per cent are retained as unreserved. Could anybody say that the reservation of 30 per cent as open to general competition would be satisfactory from the point of view of given effect to the first principle, namely, that there shall be equality of opportunity? It cannot be in my judgment. Therefore the seats to be reserved, if the reservation is to be consistent with sub-clause (1) of Article 10, must be confined to a minority of seats...........

அரசியலமைப்பு சட்ட வரைவுக் குழுவின் பல உறுப்பினர்களின் இட ஒதுக்கீடு குறித்து மனதில் எழுந்த சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் வண்ணம் திரு.அம்பேத்கார் ஏறக்குறைய உறுதிமொழி போல பேசிய வாக்கியங்கள் இவை!

எனவே, இட ஒதுக்கீடானது பாதிக்கும் மேலாக இருத்தல் இயலாது என்று மண்டல் கமிஷன் வழக்கில் கூறியதற்கு திரு.அம்பேத்கரின் உரையும் காரணம். ஆயினும் மண்டல் கமிஷன் வழக்கில் எந்த சந்தர்ப்பத்திலும் இருத்தல் இயலாது என்று கூறவில்லை. சில அசந்தர்ப்பமான நிலைகளில் 50% வரையறையினை மீறலாம் என்று அனுமதியளிக்கிறது...எந்த மாதிரியான நிலைகள் என்பதற்கு உச்ச நீதிமன்றம் கூறியுள்ள வரிகளுக்குள் தமிழகத்தினை கொணர முடியுமா? என்பதை அறிய இனி பொறுத்திருக்க வேண்டும்.

***
to be continued...

31.10.06

அப்சலும், க்ரீமி லேயரும் - 3


நீதிபதிகள், தங்கள் முன் வைக்கப்படும் வழக்குரைஞர்களின் வாதங்களை அடிப்படையாக கொண்டு மட்டுமே வழக்குகளை, முக்கியமாக பொது நலன் சார்ந்த வழக்குகளை தீர்ப்பது இல்லை என்பது, ஏதாவதொரு பிரச்னையில் பல்வேறு காலகட்டங்களில் அளிக்கப்படும் தீர்ப்புகளை உன்னிப்பாக கவனித்தால் புரியும். உதாரணமாக அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் பிரச்னையில் 1972, 1996, 2002 ஆகிய ஆண்டுகளில் வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத்தின் மூன்று தீர்ப்புகளை ஆராய்ந்தால் எப்படி கால ஓட்டத்திற்கு ஏற்ப நீதிபதிகளும் தங்களது கருத்துகளை வடிவமைத்துக் கொள்கின்றனர் என்பதை உணரலாம். (அர்ச்சகர் பிரச்னையின் பயணம் என்ற தலைப்பில் இந்த மூன்று தீர்ப்புகளை பற்றி எழுதியுள்ளேன்) கவனிக்க வேண்டியது இந்த மூன்று தீர்ப்புகளுக்கும் அடிப்படையான அரசியலமைப்பு சட்டபிரிவுகளில் ஏதும் மாற்றமில்லை. மாறியது நீதிபதிகளின் மனப்போக்கு, அதாவது பொது மக்களின் மனப்போக்கு!

எனவே, இட ஒதுக்கீடு பிரச்னையிலும் நீதிபதிகள் நீதிமன்றத்தில் வைக்கப்படும் வாதங்களையும் தாண்டி தாங்களறியாமலேயே, பொதுக்கருத்துகளாலும் தங்களை வசப்படுத்திக் கொள்வது எதிர்பார்த்ததுதான். நீதிபதி திரு.ரத்னவேல் பாண்டியன் அவர்கள் மண்டல் கமிஷன் வழக்கு என்று அழைக்கப்படும் புகழ் பெற்ற வழக்கில் (Indra Sawhney Vs Union of India AIR 1993 SC 477) ‘இட ஒதுக்கீடு 100% அளவிற்கு இருக்க இயலாது எனினும் அதிகபட்சம் 50%தான் என்ற கட்டுப்பாடும் விதிக்க இயலாது என்றும் ‘க்ரீமி லேயர்’ என்ற பெயரில் நீதிமன்றம் சமூக கொள்கை முடிவில் தலையிடுதல் கூடாது என்றும்’ தனியே தீர்ப்பு எழுதியதற்கு அவர், பிற்ப்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாகிய தமிழகத்தை சேர்ந்தவர் என்பதும் ஒரு காரணமாயிருக்குமா என்று ஒரு கேள்வியினை எழுப்பினால், இல்லை என்று ஆணித்தரமாக மறுப்பது கடினமான காரியம்.

அதே வழக்கில் இட ஒதுக்கீட்டில் அதிகபட்சம் 50%தான் என்று உச்ச நீதிமன்றம் வரையறுத்ததை அதற்கான வாத பிரதிவாதங்களுக்குட்பட்டு தீர்க்கப்பட்டுள்ளது என்று கூற முடியுமென்றாலும், கிரீமி லேயரைப் பற்றி அவ்வாறு கூற முடியாதென்பது எனது எண்ணம். எனெனில் அரசியலமைப்புச் சட்டத்திலுமின்றி, அதனை வடிவமைத்தவர்களின் விவாதத்திலும் அப்படி ஒரு பதமே இடம் பெறவில்லை. அப்படியிருப்பினும் அந்த வழக்கில் தேவையற்ற ஒரு கேள்வியினை உச்ச நீதிமன்றம் எழுப்பி தீர்வு காண முயன்றது, கிரீமி லேயர் குறித்து பொதுவில் விவாதிக்கப்பட்டு வந்ததன் தாக்கம்தான் அன்றி வேறில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.

மண்டல் கமிஷன் வழக்கானது விபிசிங் தலைமையிலான அரசு மத்திய அரசு பணிகளில் 27% பிற்ப்படுத்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என்று 13.08.90 தேதியிட்ட குறிப்பாணையினை (Office Memorandum) எதிர்த்து தொடரப்பட்ட வழக்காகும். நரசிம்ஹராவ் தலைமையிலான அரசு 25.09.91 தேதியிட்ட பிறிதொரு குறிப்பாணை மூலம் இரு மாறுதல்களை விபி சிங் அரசு ஆணையில் கொண்ர்ந்தது. முதலாவது திருத்தம், ‘27% ஒதுக்கீட்டில் பிற்ப்படுத்தப்பட்டவர்களிலும் ‘poorer section’களுக்கு முன்னுரிமை (preference) அளிக்கப்படும். தகுந்த நபர்கள் கிடைக்காத பட்சத்தில் காலியிடங்கள் மற்ற பிற்ப்படுத்தப்பட்டவர்களால் நிரப்பப்படும்’ என்பது. இரண்டாவது, ‘மற்ற ஒதுக்கீட்டில் வராத பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10% ஒதுக்கீடு வழங்கப்படும்’ என்பதாகும். வழக்கானது இக்குறிப்பாணைகள் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் இட ஒதுக்கீடானது சட்டத்தின் முன் அனைவரும் சமமாக பாவிக்கப்படுவார்கள் என்ற அடிப்படை உரிமையினை பாதிக்கிறது எனற வாதத்தினை முன் வைத்து. ஆக, நீதிமன்றத்தின் முன் தாங்கள் பாதிக்கப்படுவதாக முறையிட்டவர்கள் எந்த ஒரு இட ஒதுக்கீட்டில் இடமே பெறாதவர்கள். அவர்களது வாதம் இட ஒதுக்கீடு யார் யாருக்கு என்பதை விட இட ஒதுக்கீடே தவறு என்பதுதான்.

வழக்கினை விசாரித்த நீதிமன்றம், பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க நமது அரசியலமைப்பு சட்டம் இடம் கொடுக்கவில்லை என்று கூறி நரசிம்ஹராவ் அரசு கொணர்ந்த 10% இடஒதுக்கிட்டீனை செல்லாது என்று கூறியது. அடுத்த மாறுதலான பிற்ப்படுத்தப்பட்டவர்களிடையே poorer section என்பதை பிற்ப்படுத்தப்பட்டவர்களில் ஏழைகள் என்று அர்த்தம் கொள்ளமுடியாது என்று கூறி சமூக ரீதியில் மேலும் பின் தங்கிய வகுப்பினர் என்றுதான் எடுத்துக் கொள்ளமுடியும் என்றும் கூறியது. அதாவது பிற்ப்படுத்தப்பட்டவர், மிகவும் பிற்ப்படுத்தப்பட்டவர் என்று பிரிக்கிறோமே, அதனை. மேலும் முன்னுரிமை (preference) என்ற பதத்தினையும் அப்படியே அர்த்தம் கொள்ள முடியாது என்று கூறியது. அவ்வாறு அர்த்தம் கொண்டால் அனைத்து ஒதுக்கீடும் மிகவும் பின் தங்கிய வகுப்பினருக்கு போய் பிற பிற்ப்படுத்தப்பட்டவர்களுக்கு ஏதும் கிடைக்காது. எனவே இரு வகுப்பினருக்கும் எந்த விகிதத்தில் பகிர்ந்தளிப்பது என்பதை அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் தீர்த்தது. நரசிம்ஹராவ் அரசு கொண்டு வந்த திருத்தத்தின் அர்த்தம் படிப்பவர்களுக்கு தெளிவாக விளங்கிக் கொள்ளும் வகையில் அமைந்திருந்தாலும் ‘poorer section’ மற்றும் ‘preference’ ஆகிய வார்த்தைகளுக்கு உச்ச நீதிமன்றம் அவ்வாறாக புதிய அர்த்தத்தினை அளிக்கவில்லையெனில் அந்த திருத்தத்தினையும் செல்லாது என்று தள்ளுபடி செய்ய வேண்டியிருந்திருக்கும். ஆனால், அவ்வாறு செய்ய உச்ச நீதிமன்றம் விரும்பவில்லை.

***
to be continued...

29.10.06

அப்சலும், க்ரீமி லேயரும் - 2

பொதுக்கருத்து தங்களது தீர்ப்பினை வழிநடத்தி விடக்கூடாது என்பதற்கு சில நீதிபதிகள் செய்தித்தாள்களை படிப்பதை கூட நீதிபதிகளாக இருந்த காலத்தில் நிறுத்தி வைத்திருந்தனராம். சமுதாய நிகழ்வுகள் மீது தன்னுடைய தொடர்புகளை முற்றிலுமாக துண்டித்துக் கொண்டு ஒரு முற்றும் துறந்த முனிவரின் (heretic) மனநிலையில் வாழ்ந்த மும்பை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியினைப் பற்றி படித்திருக்கிறேன். ஆனால், உலகம் சுருங்கி வரும் விஞ்ஞான யுகத்தில் இவ்வாறான வாழ்க்கை சாத்தியமல்ல. எனவே நீதிபதிகள் முற்றிலும் சார்பற்ற நிலை கொண்டவர்களாக இருத்தல் என்பது இயலாத ஒன்று. இயற்பியல் விதிகளின் படியே முழுமையான ஒரு நிலை (absolute state) என்பது சாத்தியமல்லாதிருக்கும் பொழுது, ஒர் கட்டுக்குள் அடக்க முடியாத (unpredictable) மனித மனங்களை ஆராயும் நீதி பரிபாலனம் குறைகள் அற்றதாக இருக்க வேண்டும் என்றில்லாமல் அதன் பயணம் அவ்வாறான நிலையினை நோக்கியதாக இருத்தல் வேண்டும் என்ற அளவோடு நமது எதிர்பார்ப்புகள் திருப்தியுற வேண்டும்.

ஆனால் அந்த பயணத்தை வழிநடத்துவதற்கு பொதுக்கருத்துகள் பயன்படுகையில், பொதுக்கருத்தின் பல்வேறு வகையான வெளிப்பாடுகள் தேவையான ஒன்றுதான். நீதிமன்றங்கள் தினம் தோறும் ஆயிரக்கணக்கான வழக்குகளில் தீர்ப்பு கூறுகின்றன. மிக அரிதான தீர்ப்புகளைத் தவிர மற்றவை இவ்வாறு விவாதத்திற்கு உள்ளாவதில்லை. ஏன், ஜெயலலிதா டான்ஸி வழக்கில் விடுதலை செய்யப்பட்ட பொழுது கூட நீதிபதிகள் எதேச்சையாக அறிவுறுத்திய ஒரு வரியினைத் தவிர தீர்ப்பினை அனைவரும் அறுத்து கூறு போட முயலவில்லை. அந்த தீர்ப்பினைக் குறித்து எழுதலாம் என்று அதனை முழுவதும் படித்த நான், சந்தேகத்தின் பலனை குற்றவாளிக்கு அளிக்கும் குற்றவியல் முறைகளின்படி (criminal jurisprudence) முறையான தீர்ப்புதான் என உணர்ந்தேன். ஊடகங்களால் மிகவும் பிரபலப்படுத்தப்பட்ட அந்த ‘மனச்சாட்சி’ கருத்து கூட நிலத்தினை வாங்கியதில் உள்ள வரம்பு மீறலை கருத்தில் கொண்டு நிலைத்தினை திருப்பிக் கொடுப்பதினைப் பற்றியதே தவிர குற்றம் என்பதனை பொறுத்ததல்ல. நீதிமன்றத்தின் நான்கு சுவர்களுக்குள் தங்கள் முன் வைக்கப்படும் பொருட்களையும் தாண்டி வெளியில் நடப்பதையும் நீதிபதிகள் வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ தாங்கள் அறிந்தோ அல்லது அறியாமலோ கவனத்தில் கொள்கையில் விவாதங்களும் ஆர்ப்பாட்டங்களும் அவசியமான ஒன்றுதான்.

உதாரணமாக, டெல்லியில் டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற நாளிதழ் செய்தியினை ஒரு பொது நல வழக்கின் மனுவாக ஏற்றுக் கொண்டு டெல்லி உயர்நீதிமன்றம் சம்பந்தப்பட்டவர்களுக்கு அழைப்பாணை (summons) அனுப்புகிறது. புதிதாக உருவாகியுள்ள சட்டவியலில் இது முறையான ஒன்றுதான். ஏனெனில் மக்களுக்கு அடிப்படை சுகாதார வசதிகள் மறுக்கப்படுவது அவர்கள் ‘வாழ்வதற்கான உரிமை’ (right to life) என்ற அடிப்படை உரிமையினை மீறியதாகும் என்று நீதிமன்றங்கள் கருதுகின்றன. பின்னர் அரசு எந்த எந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடுகையில், அரசுப் பணியினை (executive functions) நீதிமன்றம் மறைமுகமாக கையிலெடுக்கிறது. அவ்வாறான நிலையில் அந்த தீர்ப்பின் மீதான விமர்சனங்கள், ஆர்ப்பாட்டங்கள் எழுவதை தேவையில்லை என்று கூற முடியுமா?

ஏனெனில் அரசியல்வாதிகளைப் போலன்றி பிரச்னையின் அனைத்து பரிமாணங்களையும் நீதிமன்றத்தால் புரிந்து கொள்ளுதல் இயலாது. ஒருவேளை பொது இடத்தில் சிறுநீர் கழிப்பது நோய் பரவ காரணம் என்று கூறப்பட்டு, பொது இடத்தில் சிறுநீர் கழிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் காவல்துறைக்கு உத்தரவிடப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். டெல்லியிலுள்ள குடிசைவாசிகள், கழிப்பிடமே இல்லாத பொழுது நாங்கள் எங்கே செல்லுவோம் என்று ஆர்ப்பாட்டம்தான் நடத்த இயலும். செய்தித்தாளின் செய்தியினைப் போல ஆர்ப்பாட்டமும் நீதிமன்றத்திற்கு ஒரு செய்திதான்.

மீண்டும் கூறுவதனானால், அப்சல் வழக்கில் கூட அவர் குற்றம் செய்யாதவர் என்று தீர்ப்பெழுத வேண்டும் என்று கூறுவது சரியானதாயிருக்காது. யார் யாரோ நகர்த்திய காய்களில், வேறு வழியின்றி பங்கு கொண்ட பகடைக்காயாக அவர் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுவதன் காரணமாக மரண தண்டனை அளித்திருக்க வேண்டுமா என்பது ஒரு விவாதம். தீர்ப்பில் மரண தண்டனைக்கான காரணங்களை நீதிபதிகள் அடுக்கியதில் பொதுக்கருத்தினை கருத்தில் கொண்டதில் இவ்வகையான விவாதம் எழுவது இயல்பே! அடுத்த விவாதம் மரண தண்டனை தேவையா, இல்லையா என்பது குறித்து. இதற்கு பதில் கூற வேண்டியது அரசாங்கமே தவிர நீதிமன்றங்கள் இல்லை.

***
to be continued...

28.10.06

அப்சலும், க்ரீமி லேயரும்...1

உச்ச நீதிமன்றத்திற்கு இது போறாத காலம் போல... பின்னர் இப்படியா, குறுகிய காலத்தில் அடுத்தடுத்து அதன் மூன்று தீர்ப்புகள் நாடு தழுவிய அளவில் விவாதத்தினை ஏற்ப்படுத்தும்? சமீப காலங்களில் நீதிமன்ற தீர்ப்பானது இவ்விதம் மக்களிடையே விவாதத்திற்குள்ளாவது பெருகி வருகிறது. மக்களுக்கு நீதி மன்றங்களின் மீதுள்ள நம்பிக்கையினை குலைக்கும் வண்ணம் மோசமான விளைவுகளுக்கு இவ்விதமான விவாதங்கள் இட்டுச் செல்லலாம் என்று கூறப்பட்டாலும், இது ஒரு நல்ல சமிக்கையே என நான் கருதுகிறேன்.

‘நீதிமன்ற அவமதிப்பு’ என்ற மிரட்டல் ஒரு காகிதப்புலியே என்பதை புரிந்து கொண்ட நீதிபதிகளும் கண்டிப்பினை தளர்த்தி தங்களது ‘அகன்ற தோள்களுக்குள் எவ்வித விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் அளவிற்கும் இடம் உண்டு’ என்று இறங்கி வந்துள்ளனர். இதுவும் நீதித்துறைக்கு ஒரு நல்ல வளர்ச்சியே!

எனவே நீதிமன்ற தீர்ப்பினை குறித்து அறிக்கைகள், ஆர்ப்பாட்டங்கள், விமர்சனங்களை வைப்பது நீதி பரிபாலன முறையின் முன்னேற்றத்திற்குதான் வழிகோலுமே தவிர வீழ்ச்சிக்கல்ல என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம். ஏனெனில் பல குறைபாடுகளை மீறியும், மக்களுக்கு நமது நாட்டில் நம்பிக்கையளிக்கும் வெகு சில அரசு துறைகளில் நீதித்துறையும் ஒன்று. மோசடித்தனமான பழிகூறுதல்கள் (malafide or frivolous allegations) கேட்பவர்களாலேயே நிராகரிக்கப்படும் சாத்தியக்கூறுகளே அதிகம்.

உதாரணமாக அப்சல் வழக்கினை எடுத்துக் கொண்டால், அப்சலை குற்றவாளி என்றது தவறு என்ற விமர்சனம் ஏதும் வைக்கப்படவில்லை. அவ்வாறான விமர்சனங்கள் சட்ட நுணுக்கங்களை அறிந்தவர்களுக்கே இயலும். அவற்றின் பலன் ஒரு சட்ட மாணவருக்காகத்தானேயொழிய (academic interest) வேறில்லை. விவாதங்கள் அப்சலுக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனை குறித்தே!

இங்கு நாம் ஒன்றினைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு நீதிபதி தனிப்பட்ட வகையில் மரண தண்டனையினை எதிர்ப்பவராக இருக்கலாம். ஆனால், சட்டம் மரண தண்டனை அளிக்கக் கூறும் ஒரு வழக்கில் அவர் மரண தண்டனையினை அளித்தலே சரியான தீர்ப்பாக இருக்க முடியும். மரண தண்டனை தேவையா, இல்லையா என்பது பாராளுமன்றத்தின் பணி. அவற்றில் நீதிபதி தனது சொந்தக் கருத்தினை நுழைத்தல், நீதித்துறையின் சமநிலையினை (consistency) பாதிக்கும் என்பது எனது தாழ்மையான எண்ணப்பாடு.

சொந்தக் கருத்து என்பது பொதுக்கருத்தினை உள்வாங்கி உருவாக்கப்படும் உணர்வு! பொதுக்கருத்து (Public Opinion) என்பதனை மக்களாட்சியின் ஒரு தூணாகவே அரசியல் வல்லுஞர்கள் கருதுகிறார்கள். பொதுவாக பொதுக்கருத்து என்பது பத்திரிக்கைகளில் ‘ஆசிரியருக்கு கடிதம்’ கூறப்படும் கருத்துகளின் தொகுப்பு என்பதாகவே ஒரு தோற்றம் எடுத்து வைக்கப்படுகிறது. அதாவது படித்த நடுத்தர வர்க்க மக்களின் பொதுவான எண்ணப்பாடு. ஆனால் இதையும் கடந்து மக்கள் சமுத்திரத்தின் ஆழத்தில் யாரும் அறியாமலேயே பொதுவான கருத்து பல சமயங்களில் உருப்பெறுகிறது. இது வெளித்தெரிவதில்லை. ஆனால் பல அரசாங்கள் வீழ்ந்ததற்கும், எழுந்ததற்கும் இவ்வகையான பொதுக்கருத்துகளே காரணமாக இருந்துள்ளன. அவசரநிலைக்குப் பிறகு இந்திரா காந்தி தோற்றதற்கும், எண்பதில் எம்ஜிஆர் ஜெயித்ததற்கும், இந்தியா ஒளிர்ந்ததற்கு பிறகும் வாஜ்பாய் வீட்டுக்கு போனதற்கும் வெளித்தெரியா பொதுக்கருத்தே காரணம்.

ஆக, ஊடகங்களால் ஊதிப் பெரிதாக்கப்படும் கருத்துகளையும் மீறி யாரும் உணராமலேயே சமுதாயத்தின் ஆழத்தில் உருப்பெரும் கருத்தும் இருக்கலாம். நீதிபதிகள் ‘படித்த நடுத்தர வர்க்கத்தை’ (educated middle class) சேர்ந்தவர்கள். எனவே ‘நடுத்தர வர்க்கத்து கருத்தோடு’ இசைவான அவர்களும் கொண்டிருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம். இவ்வாறான நிலையில் தங்களது சொந்தக் கருத்தினை பொதுக்கருத்து என்று அவர்கள் நம்புவதே தவறான ஒரு முடிவு. அதனை அடிப்படையாக வைத்து வழக்கினை தீர்க்க நினைத்தால், அது சரியான நீதிபரிபாலன முறையாக இருக்காது.

அப்சல் வழக்கில், ‘அப்சலுக்கு அதிக பட்ச தண்டனை வழங்குவது மூலமே சமுதாயத்தின் ஒருங்கிணைந்த மனவோட்டத்தினை திருப்திப்படுத்த இயலும்’ என்று நீதிபதிகள் கூறியது தீர்ப்பினை விமர்சிக்க விரும்பும் எவரும் அடிக்கக்கூடிய ‘weak link’. தீர்ப்பானது சட்ட வினாக்களுக்கு உட்பட்டு அமைந்திர்ந்தால், அதில் தவறிருந்தாலும் சட்ட புத்தகங்களில் மட்டுமே விமர்சிக்கப்படும் ஒரு விஷயமாக இருந்திருக்கும். அப்சலுக்கு மரணதண்டனை கூடாது என்ற ஆர்ப்பாட்டங்களும் அரசினை நோக்கிய குரலாகத்தான் பார்க்கப்பட்டிருக்கும். ஏனெனில் மரண தண்டனையின தளர்த்துவது அரசுக்கு இயலக்கூடிய காரியம். ஆனால், நீதிபதிகள் பொதுக்கருத்தினை தங்களது தீர்ப்புக்கு துணையாக அழைத்துள்ளதால், சட்ட வல்லுஞர்களையும் தாண்டி பொது மக்களும் தங்களது விமர்சனத்தினை எடுத்து வைக்க முன் வருவது இயற்கையே!

அறிக்கை, ஆர்ப்பாட்டம், கண்டனம், பொதுக்கூட்டம் போன்றவை பொதுக்கருத்தினை உருவாக்கும் கருவிகள். பல்வேறு வகையான பொதுக்கருத்தினை உருவாக்க இயலும் பல்வேறு மக்கள் குழுக்களைப் போலவே, மரண தண்டனை எதிர்ப்பு என்ற பொதுக்கருத்தும் உருவாக்கப்பட இவ்வகையான சாதனங்கள் கூடாது என்று கூறுதல் இயலாது.

இந்திய மக்கள் தொகை 100 கோடி! இதில் எத்தனை நபர்களுடைய எண்ணப்பாட்டினை நீதிபதிகள் தங்களது ‘collective conscience’ கருத்திற்கு கணக்கில் எடுத்துக் கொண்டனர்? அல்லது மக்களுடைய ஒருங்கிணைந்த கருத்து அப்சலுக்கு மரணதண்டனை அளிக்க விரும்புகிறது என்பதற்கு நீதிமன்றத்தின் முன் உள்ள சாட்சியம் என்ன? நீதிமன்றத்திற்கு வெளியில் நடப்பதை தங்கள் கருத்தில் நீதிபதிகள் எடுத்துக் கொள்ள முயலுகையில், வெவ்வேறு எண்ணம் கொண்ட மக்கள் குழுக்கள் தங்களது கருத்தினை வெளிப்படுத்தும் முறைகளில் ஒன்று ஆர்ப்பாட்டம். அவ்வளவே!

***

to be continued...

27.10.06

விண்டோஸும் நானும்...

"விண்டோஸ்" என்றால் என்ன? அது மற்ற மென்பொருட்களினும் எப்படி வேறுபடுகிறது என்று தாங்கள் உணர்ந்த அனுபவத்தைக் விவரிக்கவும்?" இப்படி ஒரு கேள்வியை கேட்டது க்ருபா ஷங்கர், சில வருடங்களுக்கு முன்னர் மரத்தடி குழுமத்தில். அதற்கு என்னுடைய பதில்...

'விண்டோஸை மறைக்கப் போடப்படும் ஸ்கிரீன்தான் மென்பொருள். விண்டோஸ் கடினப்பொருளாக இருக்க வேண்டும்' என்று எழுதும் அளவிற்கு நான் அறிவிலி இல்லையெனினும் எனது கம்பியூட்டர் அனுபவங்களை கேட்டால் அதற்கு கிட்டத்தில் வருவேன் போல. மூன்று வருடங்களுக்கு முன்னர் கணணி ஒரு கனவாகவே இருந்து..பின்னர் ஏதோ விளையாட்டுக் கருவி என்று வாங்கியது. அதற்கு முன்னர் வலையத்தைப் பற்றிய யூகங்கள் எல்லாமே பெரிய கதையாக எழுதலாம். எனினும், கணணியை வாங்கப் போன இடத்தில் நான் முழிப்பதை வைத்தே அந்தப் பெண், 'உங்களுக்கு இது தெரியும்தானே இதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்பது தெரியும்தானே' என்று பல முறை கேட்டார்கள். அவர்களிடம், விண்டோஸ் மென்பொருளோடு தரப்படும் விளக்கப் புத்தகத்தை காண்பித்தவாறு, 'நான் இதை முழுவதும் படிக்கும் வரை இதை தொடப்போவதில்லை. ஒவ்வொன்றாக படித்தே இயக்குவேன்' என்று சவால் விட்டேன். (பல நாட்கள் கழித்துதான் தெரிந்தது, மும்பையிலேயே 3500 ரூபாய்க்கு ஒரிஜினல் விண்டோஸ்98 வாங்கிய முட்டாள் நான் மட்டும்தான் என்பது). அவள் கேட்டதில் தவறில்லை. ஏனெனில், 'என்ன சாப்ட் வேர் லோட் பண்ண வேண்டும்' என்று கேட்ட பொழுது என்ன சொல்வது என்று குழம்பி, வெட்கம் பார்க்காமல், கம்பியூட்டர் விற்கும் போது என்னென்ன செய்வீங்களோ அதெல்லாம் செய்யுங்க' என்றேன். ஆனை வாங்கியவன் அங்குசம் வாங்க யோசிப்பது போல விற்பனையாளரிடமே லஜ்ஜையின்றி, 'ஐம்பதாயிரம் ரூபாய்க்கு வாங்கியிருக்கேன். ஏதாவது சிடி இருக்கா?' என்றேன். அவரும் மிகவும் பெருந்தன்மையாக, 'இந்தாங்க ஒரு கலைக்களஞ்சியம்' வச்சுருக்கேன்' என்றார். மிகவும் சந்தோஷமாகி விட்டது.

கணணி வீட்டுக்கு வந்ததும் எல்லாம் மாறிவிட்டது. பொறியாளர்கள் ஒவ்வொன்றாக லோடு செய்யும் போது கலர் கலராக படங்கள் தோன்றுவதும்...இசை வருவதும் நான், மனைவி, மகள் பெருமை பொங்க பார்த்துக் கொண்டிருந்தோம். அவர்களை எவ்வளவு சீக்கிரம் துரத்த முடியுமோ அவ்வளவு சீக்கிரம் துரத்தியாகி விட்டது.

ஆசையாய் அந்த கலைக்களஞ்சியத்தை பிரித்து உள்ளே அனுப்பினால்...ஒன்றும் வரவில்லை. எங்கெங்கோ உள்ள ஐகான்களை அமுக்கி, பலனில்லை. எப்படியோ மை கம்பியூட்டரில் திறந்து அங்குள்ள சிடி படத்தை அமுக்கி...சிடியில் உள்ள போலடரையெல்லாம் ஒவ்வொன்றாக திறந்து பார்க்கிறேன். மூச்சுக் காற்று என் முதுகில் புஸ் புஸ் என எனது மனைவியும் மகளும் பின்னே... ஒவ்வொரு பைலாக திறக்க ஏதோ சில செய்திகள்...சில மேப்கள் அதுவும் பகுதி பகுதியாக. சுமார் ஒரு மணி நேரம் அதிலேயே கழிந்தது. அவ்வளவுதானா என்றிருந்தது.... 'சரி, இது ·பிரீ சிடியில்லையா? இவ்வளவுதான் இருக்கும்' என்று ஒரு சமாதானத்தோடு அன்று கழிந்தது. எனது பதில் மீது எனது மனைவிக்கும் நம்பிக்கை இல்லை. எனக்கும் நம்பிக்கை இல்லை. ஆனாலும், ஒருவரையொருவர் காயப்படுத்திக் கொள்ளாத ஒரு மெளனம் நிலவியது. பல நாட்கள் என் மனைவி அருகில் இல்லாத போது நான் அந்த சிடியை உள்ளே போட்டு முயற்சி செய்வதும் அவர்கள் அருகே வந்தவுடன் வேறு எதையோ நோண்டுவதுமாக கழிந்தது. இப்படியாக இருக்கும் போதுதான் ஒரு முறை என் நண்பன், 'அட அதை இன்ஸ்டால் செய்ய வேண்டும்' என்றான். இந்த ஒரு வார்த்தை போதாதா...ஏதோ இன்ஸ்டால்...அதன் பின்னர் ஒரு நாள் எப்படியோ ஏதையோ பிடித்து அமுக்கினால்...இன்ஸ்ட்ரகஷன் தானாக வர வர...ஆஹா! என்ன ஒரு அருமையான என்சைக்ளோபீடியா! படங்கள் என்ன? வீடியோக்கள் என்ன? ஆனால் அன்றும் மனைவி என்னிடம் ஏதும் கேட்கவில்லை. நாந்தான் அசடு போல வழிந்தேன். பின்னர்தான் ஆட்டோரன் எல்லாம் நான் அறிந்தது. பின்னர் அறிந்த மற்றொன்று, அந்த சிடி டிவி சாரி மானிட்டரோடு கொடுக்கப்பட்ட இலவச சிடி என்று!

அடுத்து ஒரு நாள் விண்டோஸ் வரவில்லை. விற்பனையாளரைப் பிடித்து டோஸ் மேல் டோஸாக விட்டுக் கொண்டிருந்தேன். அவர் வருகிறேன் வருகிறேன் என்றார். இரண்டு நாள் ஆயிற்று. இதற்குள் பலமுறை ஸ்டார்ட் செய்திருப்பேன். மற்ற விஷயமென்றால் கோபத்தில் உதைத்திருப்பேன். 50000 ரூபாயாயிற்றே! எரிச்சலில் பிளாப்பி டிரைவில் இருந்த பிளாப்பியை தூக்கி கடாசினேன். ஒரு தட்டு ....அட...இதோ விண்டோஸ்! இரண்டாவது பாடம்.

பின்னர் விண்டோஸ் என்னைப் படுத்தியதை விட அதை நான் போட்டு படுத்தியதுதான் அதிகம். முதலில் எனது பெயரில் ஒரு போல்டர்....அந்த போல்டரை திறந்தவுடன் எனது பெயரை பெரிதாக பார்த்தவுடன் என்ன ஒரு மகிழ்ச்சி...அட நம்ம பெயரெல்லாம், திரையில் வருகிறதே என்று. சினிமாத் திரையில் டைரக்ஷன் என்று என் பெயர் வந்த மாதிரி ஒரு மகிழ்ச்சி! அடுத்த ஒரு வருடத்தில் எனது கணணியில் பைல்கள் மற்றும் போல்டர்கள் பெயர் மாற்ற்ம்...இட மாற்றாம் செய்தது போல வேறு யாருடைய கணணியிலும் செய்திருக்க முடியாது. போதாதற்கு நான்கு பார்ட்டிஷன்கள் வேறு. இங்கிருந்து அங்கே அங்கிருந்து இங்கே என்று...பாவம் இந்த விண்டோஸ். இப்போது எனது டெஸ்க் டாப்பில் புதிய பெயர்களில் சீராக நான் போல்டர்களையும் ஷார்ட் கட்களையும் அடுக்கியிருப்பது போல யாருடைய கணணியிடமும் பார்த்ததாக எனக்கு நினைவில்லை.

மைக்ரோசாப்ட் வோர்ட் எல்லாம் விண்டோஸ்தான் என்று வெகு நாட்களாக நினைத்து வந்தேன். அது என்ன? சன் டிவிதான் கேபிள் டிவின்னு பலர் இங்க நினைப்பது மாதிரி விண்டோஸ்தான் கம்பியூட்டர்னும் நினைத்து வந்தேன். குழுமத்தில் மற்றவர்களின் உரையாடலைக் கவனித்ததால், என்னையறியாமலேயே நான் கற்ற பாடம். விண்டோஸ் ஆப்பரேட்டிங் சாப்ட் வேர்...அதாவது அதனால் நேரடி பயனில்லை. பிற உபயோகமான மென்பொருட்கள் இயங்க அது ஒரு தளமாக இருக்கிறது. அதாவது வணிகப் பாடத்தில் மத்திய வங்கி (நம்ம ரிசர்வ் வங்கி) போலவும் சட்டப்பாடத்தில் அரசியலமைப்புச் சட்டம் போலவும்...சரிதானே

ஆனாலும் நேற்று சாலையில் நடக்கையில் எனக்கு ஏற்பட்ட சந்தேகம் இது....சரி மற்ற மென்பொருட்களை ஏற்றுவதற்கு விண்டோஸ் உதவி செய்கிறது. அப்படியாயின் முதன்முதலில் விண்டோஸை எப்படி கம்பியூட்டரில் ஏற்றுகிறார்கள். மென்பொருளே இல்லாதிருக்கையில் கம்பியூட்டரை ஆன் செய்தால் என்ன வரும்....கிருபா அடுத்தமுறை சென்னை வரும்போது மென்பொருள் இல்லாத ஒரு கம்பியூட்டரை ஆன் செய்து காட்டவும்....புண்ணியமாகப் போகும்.
மும்பை

( பின்னர் சென்னை சென்ற பொழுது, இந்த வேண்டுகோளை ரொம்ப சீரியஸா எடுத்துக்கிட்டு க்ருபா எனக்கு மென்பொருள் இல்லாத கம்பியூட்டரை போட்டு காண்பிக்கிறேன்னு நின்னான்...இப்ப கலியாணம் ஆயிடுச்சு அதானால நின்னார். நேரம் வாய்க்கவில்லை)

20.10.06

வி.பி.சிங்கின் துரோகம்...

கடந்த பத்து நாட்களாக நானும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடந்து கொண்டிருக்கும் ஒரு வழக்கு குறித்து யாராவது பதிவிடுவார்கள் எதிர்பார்த்தபடியே இருந்தேன். யாரும் எழுதுவதாக தெரியவில்லை. வலைப்பதிவாளர்கள் இந்த வழக்கு குறித்து அறிந்து கொண்டிருக்கவில்லை என்றே அனுமானிக்கிறேன். ஏனெனில் செய்தித்தாள்களிலும் இந்த வழக்கு பற்றிய செய்தி காணப்படவில்லை. உள்ளாட்சித் தேர்தல் செய்திகளுக்கு முக்கியத்துவம் அளித்தது மட்டுமே காரணமாயிருக்காது என நினைக்கிறேன். ஏனெனில் பத்துப் பைசா பெறாத பல வழக்கு குறித்த செய்திகள் வந்து கொண்டுதான் இருந்தன...

வழக்கு திருச்சி பெல் நிறுவனத்தில் தச்சர், பெயிண்டர், வெல்டர், டர்னர் போன்ற திறமை தேவைப்படும் வேலையிடங்களில் ஆள் நிரப்புவது சம்பந்தமாக, அதுவும் கைக்கொள்ளப்பட்ட இட ஓதுக்கீடு குறித்து. காலியிடமான 250 பதவிகளில் 48 இடங்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் 68 இடங்கள் பிற்ப்படுத்தப்பட்டவர்களுக்கும் ஒதுக்கப்பட்டது சரிதான். ஆனால் பிறழ்சினை ‘தாழ்த்தப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கான இடங்களில்தான் போட்டியிட முடியும்’ என்று பெல் நிறுவனம் கூறுவதில் ஆரம்பித்தது. காரணம் தாழ்த்தப்பட்டவர்களில் பெரும்பாலோர் மற்றவர்களை விட தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றுவிட்டனராம். எனவே, ஒதுக்கீடு செய்யப்பட்ட 116 இடங்கள் தவிர பிற இடங்களில் தாழ்த்தப்பட்டவர் அல்லது பிற்ப்படுத்தப்பட்டவர் அல்லாத மற்றவர்கள் மட்டுமே தேர்வுக்காக அழைக்கப்பட்டனர். இன்னும் என்னன்னவோ விளங்காத தேர்வு முறைகளை பெல் நிறுவனம் சுட்டிக்காட்டுகிறது.

வழக்கு நடைபெறுகையில், பெல் நிறுவனத்தின் வாதமாக அவர்களது சீனியர் வழக்குரைஞர் கூறிய வாதங்களும், பெல் நிறுவன கூடுதல் பொது மேலாளரின் பிரமாண பத்திரத்தில் (affidavit) இருந்து வாசிக்கப்பட்ட சில வரிகளும் அவர்களது நோக்கம் என்ன என்பதை ஓரளவுக்கு தெளிவாக்கியது.

வழக்கத்திற்கு மாறாக இந்த முறை தாழ்த்தப்பட்டவர்களின் கட் ஆஃப் மதிப்பெண்கள் பொது ஒதுக்கீட்டின் கட் ஆஃப் மதிப்பெண்களை விட அதிகமாக இருந்தது” கூடுதல் பொது மேலாளரின் பிரமாண பத்திரத்தில்.

விட்டால், மொத்த இடத்தின் 73% இடங்களை தாழ்த்தப்பட்டவர்களே பிடித்து விடுவார்கள்” பெல் நிறுவன சீனியர் வழக்குரைஞர்.

தாழ்த்தப்பட்டவர்கள் தேர்வுக் கட்டண விலக்கு, வயது தளர்த்துதல் போன்ற பிற சலுகைகளைப் பெறுகின்றனர். இந்த சலுகைகளைப் பெறும் வண்ணம் விண்ணப்பித்து விட்டு அவர்கள் பொது ஒதுக்கீட்டில் வர முடியாது” பிரமாண பத்திரத்தில்.

பிற மாநிலங்களில் இவ்வாறுதான் நடக்கிறது. அலகாபத்தில் இது போன்றதொரு வழக்கில் வழங்கப்பட்ட இடைக்கால தடைக்கு எதிரான மேல் முறையீடு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. உச்ச நீதிமன்றம், இடைக்கால தடைக்கு தடை வழங்கி உள்ளது” பெல் நிறுவன சீனியர் வழக்குரைஞர்.

நான் ஏதும் கூற விரும்பவில்லை. முதலில் தேர்வுக்கு இடைக்கால தடை விதித்தது நீதிமன்றம். பின்னர் பெல் தனது சீனியர் வழக்குரைஞரை அழைத்து வந்து காலியிடங்களை உடனடியாக நிரப்பாவிட்டால் உற்பத்தி பாதிக்கும் என்று வாதிட்டது. எனவே தேர்வு செய்யப்பட்டவர்களை ‘வழக்கின் முடிவிற்கேற்ப’ பணியில் சேர அனுமதிக்குமாறு தடை உத்தரவினை தளர்த்தியது. நேற்று வழக்கின் இறுதி விசாரணை நடைபெற்றது. அசட்டுத்தனமான வாதங்களை கேட்டுக் கொண்டிருக்க வேண்டாமென்ற வெறுப்பில் வாதம் முடியும் வரை அந்த நீதிமன்றம் பக்கம் செல்லவில்லை. தீபாவளிக்கு பிறகு தீர்ப்பு வரும். பெல்லுக்கு எதிராகவே தீர்ப்பு வரும் என்று நீதிமன்றத்தில் இருந்த மற்றவர்கள் கூற கேட்டேன்...

சரி, பத்திரிக்கைகள்தான் எழுதுவதில்லை. நாமாவது கூறலாமே என்ற நினைப்பில் இங்கு எழுதுகிறேன். ‘சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்காது’ என்பது இதுதானோ?

16.10.06

பெயரில் என்ன இருக்கு?

எவ்வளவோ இருக்கு. சில வருடங்களுக்கு முன்னர் எழுத்தாளர் சாருநிவேதிதா அவர்கள் எழுதிய ‘கோணல் பக்கங்களின்’ தொகுப்பினன எனது சகோதரர் மின்னஞ்சலில் அனுப்பிய போது, எல்லாவற்றையும் விட, 'என்ன அழகான பெயர்' என்று தங்கை சந்திரமதியின் பெயரை சாருநிவேதிதா வியந்திருந்த விதமே என்னை முதலில் ஈர்த்தது. ஷாரன் என்ற என்னுடைய மகளை, ஜாலியான நேரங்களில் நான் 'சாருமதி' என்று அழைப்பதும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். இதனையும் மீறி ஒரு காரணம் இருக்கிறது. என்னுடைய ரொம்ப நாள் ஆதங்கத்தை இந்தப் பெயர் தீர்த்து வைத்திருக்கிறது.

எனது ஆறாவது வகுப்பு முதல் நாள். வீட்டிலிருந்து வெகுதூரம் உள்ள ஹைஸ்கூல். அப்போது ஹையர் செகண்டரி கிடையாது. ஹிஸ்டரி வாத்தியார் (மன்னிக்கவும். ஆசிரியரை எங்கள் பக்கத்தில், அப்படிச் சொல்லித்தான் பழக்கம்) ஒவ்வொருவராக எழுந்து பெயரைச் சொல்லச் சொன்னார். எனது முறை வந்தது.

பிரபு ராஜ துரை'

வாத்தியார் என்னை ஒரு முறை ஏற இறங்கப் பார்த்தார்.

'பிரபு....ராஜா....துரை. எல்லாம் ஒண்ணுதானே! எந்த முட்டாள் உனக்கு இப்படி பேர் வச்சது. உன் அப்பா பேர் என்ன?'

'காந்திராஜ் சார்' மெல்ல வந்தது வார்த்தை.

'ஆங்...காந்திராஜா...யாரு அந்த கண்ணாடி காந்திராஜா?'

என் அப்பா கண்ணாடி அணிந்திருப்பாராயினும் என்ன சொல்வது என்று தெரியவில்லை.

'சரி உக்காரு' வாத்தியார் அடுத்த மாணவனுக்கு தாவினார்.

வீட்டுக்கு போனதும், அப்பாவிடம் வாத்தியார் சொன்னதைச் சொன்னேன்.

'அவன் பேர் என்ன?'

‘ஜோசப்’

'ஜோசப்பா!' என்று ஒரு முறை யோசித்தவர், 'அந்த முண்டக் கண்ணனா...அவண்ட்ட போயி முண்டக்கண்ண ஜோசப்னு சொன்னேன்னு சொல்லு'.

'அட்ரா சக்கை! வாத்தியார் நம்ம அப்பாவுக்கு ஃப்ரண்டா!' அடுத்த நாள் கிளாஸ”க்கு போனதும் மற்ற மாணவர்களிடம் பெருமையாக சொல்லிக் கொண்டேன். ஆனால் வாத்தியாருக்கு 'தண்ணிவண்டி ஜோசப்பு'னு ஏற்கனவே ஒரு பட்டப் பெயர் இருந்ததால், முண்டக்கண்ணன் என்கிற பட்டப் பெயர் என்னுடைய தயவால் ஏற்படவில்லை.

நம்ம ஊர் பள்ளிக்கூடத்து வாத்தியார்களின் பட்டப் பெயர்கள் மற்றும் மூலங்களை ஆராய்ந்தால், அதனை வைத்தே ஒரு தனி அத்தியாயம் எழுதி விடலாம்.

சரி அதற்கும் சந்திரமதிக்கும் என்ன சம்பந்தம்? ரொம்ப நாளாகத் தேடிக்கொண்டு இருந்தேன். என்னுடைய அப்பாவுக்கு கம்பெனி குடுக்கக் கூடிய இன்னொரு அப்பாவை. சந்திரா என்றாலும் மதி என்றாலும் ஒன்றுதானே. ஆனால் மதி என்கிற பெயர்தான் எனக்கு ரொம்பப் பிடிப்பதாக சொல்லி விட்டேன். மதி புத்திசாலித் தனத்தையும் குறிப்பதால். இப்படிப் பெயர் வைத்த புத்திசாலியினையும் ஒரு நாள் சந்திக்க ஆசை. என்னுடைய தந்தையினைப் போல சுவராசியமான நபராக இருப்பார் என்று அனுமானிக்கிறேன். என் அம்மாவின் பெயரும் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஞானசவுந்திரி பொன்னம்மாள்! என்னுடைய பெயரைப் பற்றிக் கேட்டதற்கு 'பெயரிலாவது எல்லாம் இருக்கட்டும்' என்று வைத்ததாக சொன்னார்கள்.

மும்பைக்கு வந்தால் வேறொரு பிரச்னை. இங்கு எல்லாம் 'சர்நேம்'தான் (sur-name). அப்ளிக்கேஷன் எழுதினாலும் சரி, ஸ்கூல் அட்மிஷன் என்றாலும் சரி. எல்லாவிடத்திலும் சர்நேம் கேட்டு குடைந்து எடுத்து விடுவார்கள். எனவே G.R.Prabhu என்று சொல்லி பிரச்னையினை சமாளித்து வருகிறேன். பிரபு, மஹாராஷ்டிர பிராமண சர்நேம். எனது மகளுடைய முழுப் பெயர் ஷாரன் பொதிகை. அவர்களுடைய பள்ளியிலிருந்து வரும் கடிதங்கள் எல்லாம் Mr & Mrs.Pothigai என்று விலாசமிட்டு வரும். நானும் கண்டு கொள்வதில்லை. பெரிய வேடிக்கை என்னவென்றால் கூட வேலை பார்ப்பவர்கள் எல்லாரையும் நமக்கு சர்நேம்மை வைத்துத்தான் தெரியும். ஷெட்டி வீட்டுக்கு ஃபோன் செய்து, 'ஷெட்டி இருக்கிறாரா என்றால்' அங்கு பெரியக் குழப்பம் வெடிக்கும். எல்லோருமே அங்கு ஷெட்டிதானே என்று எனது சிற்றறிவுக்கு எட்டுவதற்கு ரொம்பக் காலம் பிடித்தது. மற்றொரு பெரிய பிரச்னை. ராஜதுரை என்ற என்னுடைய பெயரைஅங்கிலத்தில் வாசிப்பதற்க்குள் இங்கிருப்பவர்கள் படும் அவஸ்தை. ஆர்னால்ட் ஷ்வார்ட்ஸ்நெகர் என்ற பெயரைக் கூட எளிதில் படித்து விடுவார்கள் போல.

ஷ்வார்ட்ஸ்நெக்ர் என்றதும் ஞாபகம் வருகிறது. 'பிரீடேடர்' படத்துக்குப் பின்னர் எங்கள் தூத்துக்குடியினைச் சுற்றியிருக்கும் கிராமங்களில் கூட அவர் பிரச்சித்தம். ஒரு முறை அண்ணன் வீட்டுக்குச் சென்றிருந்த போது, சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த சினிமா போஸ்டரில் புதிதாக ஒரு நடிகரின் பெயரினைப் பார்த்தேன். 'ஆர்னால்டு சிவநேசன்'. எனக்கு அது யாரென்று புரிந்து கொள்வதற்க்கு கொஞ்ச நேரம் ஆனது. கொஞ்ச நாட்களுக்கு முன்னர் குமுதத்தில் நம்ம ஆள், நேபாள நடிகை மனீஷா கொய்ராலாவை எப்படிச் சொல்வாரென்று போட்டிருந்தார்கள். 'மனுச கொரில்லா'!!!

திருநெல்வேலி பக்கம் வந்தீர்கள் என்றால் தெருவுக்கு ஒரு சுப்பிரமணியினைப் பார்க்கலாம். என் அம்மாவின் அலுவலகத்தில் ஏகப்பட்ட சுப்பிரமணிகள். ஆனாலும் பெயர்க்குழப்பம் இல்லை. முதலில் ஸ்டோர்ஸில் இருந்தவர் ஸ்டோர் சுப்பிரமணி. பின்னர் அவர் வேறு வேறு துறைகளுக்கு மாற்றப் பட்டாலும் ஸ்டோர்ஸ் என்ற பெயர் மட்டும் தங்கி விட்டது. கறுப்பாயிருந்தவர் கறுத்த சுப்பிரமணியம். கீச்சுக் குரலில் பேசுபவர் கீச்சுமூச்சு சுப்பிரமணி. மணிக்கொருதரம் பாத்ரூம் போய் தலை சீவி, பவுடர் போட்டுக் கொள்பவர் பவுடர் சுப்பிரமணி. சந்தோஷமான விஷயம். அவர்களில் பெரும்பாலானோர் தங்கள் பெயர்களை ஸ்போர்ட்டிவாக எடுத்துக் கொண்டனர். ஒருவரைப் பற்றி தெரியாது. ஏனென்றால் அவர் இவர்களுக்கெல்லாம் ஆபீசர்.

பெயர்களைப் பற்றிய இத்தனை பெரிய ஆராய்ச்சி, சந்திரமதி பின்னர் சொன்ன ஒரு சிறிய இன்பர்மேஷனில் ஆரம்பித்தது. அதாவது 'கனடா' என்ற பெயர் அமெரிக்க பூர்வாங்க குடிகளின் வார்த்தையிலிருந்து உருவானதாம். நல்லது அது போல 'அமெரிக்கா' என்ற பெயரும், பெரும்பாலோர் நினைப்பது போல ஐரோப்பிய மூலம் அல்ல. அமெரிக்கோ வெஸ்புகி புதிய கண்டத்தில் கால் வைப்பதற்கு முன்னரே அதற்கு அமெரிக்கா என்ற பெயர் இருந்தது, இந்த உலகத்தின் பார்வையில் இருந்து மறைக்கப் பட்டதற்கு வழக்கம் போல வெள்ளையர் சதிதான் காரணம். தன்னுடைய பெயரினை ஒத்து இருந்த கண்டத்தின் பெயருக்கு, தன்னுடைய பெயராலாயே அப்படியாயிற்று என்று அவரும் அடித்துச் சொல்லி விட்டார். சரி, அப்படியானால் எப்படித்தான் அந்தப் பெயர் வந்தது? அதற்கு பல நூறு வருடங்களுக்கு முன்னர் நம்ம தமிழ்த்திரு நாட்டில் பிறந்த முருகன் என்ற ஒரு சிறுவனும் அவனது செல்ல அக்காவான சந்தனமாரி என்ற மாரியும்தான் காரணம் என்று சொன்னால் ஆச்சர்யப் படுவீர்கள். அது ஒரு சிறிய கதை.

ரொம்ப வருஷம் முன்பு, இந்த முருகனின் குடும்பமும் பஞ்சம் பிழைக்க படகேறிச் சென்றது. கடலிலும் நிலத்திலுமாக வெகு நாட்கள் பயணம். இப்படியாக ஒரு முறை கடலில் சென்று கொண்டிருக்கையில், கப்பல் ஒரு பெரிய புயலில் மாட்டிக் கொண்டு கடலில் மூழ்கி விட்டது. முருகனும் அவன் குடும்பத்தினரும் ஒரு சிறிய படகில். ஆனால், மாரியை காணோம். முருகனுக்கு அவனது அக்காவை இழந்தது பெரிய வருத்தம். ஒரே அழுகை. பின்னர் யாரிடமும் அவன் பேசவே இல்லை. சரியான உணவும், தண்ணீரும் இன்றி பல நாட்கள் பயணப் பட்ட பின்னர், ஒரு நாள் நிலம் கண்ணில் பட்டது. பெரிய மகிழ்ச்சி. நிலத்தினை நெருங்க, நெருங்க அங்கே கரையில் விநோத உடையந்த சிலர் இவர்களைப் பார்த்து கையசைத்தவாறு நின்றனர். அதிசயம்!!! அவர்கள் நடுவே மாரி. முருகன்தான் முதலில் பார்த்தான். இத்தனை நாள் சோகத்தில் பேசாமல் இருந்தவன் தன்னையும் மறந்து கத்தினான், 'ஆ...மாரியக்கா! ஆ...மாரியக்கா!! ஆ...மாரியக்கா!!!' படகு கரையினைத் தொடுவதற்கு முன்னதாகவே தண்ணீரில் குதித்து ஓடினான்.

கரையில் நின்றவர்களுக்கு இந்த விநோதமான மரியாதை பிடித்து விட்டது. அவர்களும் பதிலுக்கு கத்தினர், 'ஆ மெரியக்கா, ஆ மெரியக்கா'

அன்று முதல் வேற்று மனிதர்கள் யார் கடலில் இருந்து வந்தாலும் இவ்வாறு வரவேற்பது அவர்களது கலாச்சாரமாகி விட்டது. அதுவே அவர்களது நிலத்தின் பெயரும் ஆயிற்று. ஐரோப்பியர் ஆதிக்கத்தில் அமெரிக்காவில் ஒழிந்து போன பல கலாச்சாரச் சின்னங்களில் இந்தப் பழக்கமும் ஒன்று. ஆனால் பெயர் மட்டும் தங்கிவிட்டது...

(கட்டுரையில் குறிப்பிடப்பட்ட சந்திரமதி எனப்படும் மதி கந்தசாமிக்கு எனது முந்தைய முந்தைய பதிவினால் 'அந்த நால் ஞாபகம்' வந்ததால் இந்தப் பதிவு!)

12.10.06

மகிழ்ச்சி!

(மரண தண்டனையினைப் பற்றிய எனது பதிவினைப் படித்த நண்பர் ஒருவர் என்னை தீவிரவாதி என்றதாக தமிழினி முத்துவின் பதிவில் படித்தேன்...நண்பரின் தீவிரத்தை குறைப்பதற்காக, நான் இணையத்தில் முதன் முதலில் எழுதியது)


“மகிழ்ச்சி என்பது வாழ்க்கையின் சின்னச் சின்ன விஷயங்களில் ஒளிந்திருக்கிறது. இவ்விஷயங்களைக் கண்டு கொள்பவர்கள் மகிழ்ச்சியினையும் தேடிக்கொள்கிறார்கள்” என்று சில நாட்களுக்கு முன்பு படித்தேன். வலையக நண்பர்கள் பல பெயர்களில் குழுக்களை அமைத்துக் கொண்டு தங்களுக்குள் பரிமாறிக்கொள்ளும் சிறிய பல தகவல்கள் இதற்கு ஒரு நல்ல உதாரணமாக கூறலாம்.

இவ்விதமான சிறிய ஆனால் சுவராசியமான தகவல்களை தொகுத்து எழுதும் பிரபல எழுத்தாளரான சாருநிவேதிதா 'பிரட் உப்புமா' என்ற ஒன்றை எப்படிச் செய்வது என்று கூறி அது எவ்வாறாக கொத்துப் புரோட்டா போல இருக்கும் என்று சில மாதங்களுக்கு முன்னர் ஒரு வலைப்பக்கத்தில் சிலாகித்து எழுதியிருந்தார். அந்த எழுத்தாளர் லேசாக சொல்லிவிட்டுப் போன பைசா பெறாத சாதாரண ஒரு விஷயம், அதனைப் படிக்கையில் ஒரு ஐந்து வருடம் என்னை பின்னோக்கி இழுத்துச் சென்றது. ஐந்து வருடங்களுக்கு முன்பு மனைவி மகளை சென்னையிலேயே விட்டுவிட்டு, மும்பைக்கு வேலை காரணமாக தனியாக வந்தேன். ஹோட்டல் சாப்பாடு வெறுத்துப்போன நேரங்களில் நானே கண்டுபிடித்து 'யுரேகா' என்று கொண்டாடி பின்னர் அடிக்கடி எனது மனைவியிடம் பெருமையடித்துக் கொண்ட ஒரு 'ரெசிப்பி'க்கு வேறு ஒரு சொந்தக்காரரும் இருக்கிறார் என்று அந்த எழுத்தாளரின் கட்டுரையை படித்த பின்னர்தான் புரிந்தது.

சிலர் சமைத்துப் பறிமாறுவது அழகு. என் மனைவி உட்பட. ஆனால் சிலர் சாப்பிடுவதே அழகு. அப்படி எனக்கு ஒரு இஸ்லாமிய நண்பர் உண்டு. நான் அடிக்கடி அவரிடம் சொல்லியிருக்கிறேன், 'நான் மட்டும் பொண்ணாயிருந்தால், நீ சாப்பிடும் அழகுக்கே உன்னை கல்யாணம் பண்ணுவேண்டா' என்று. அப்படி ஒரு சாப்பாட்டு ரசனையாளர். மும்பைக்கு நான் வந்த ஒரே மாதத்தில் என்னையும், மும்பையினையும் பார்க்க வந்தவர், எனது 'பிரட் உப்புமா'வை சாப்பிட்டுப் பார்த்து விட்டு கொடுத்த சான்றிதழ்தான் 'கொத்துப் புரோட்டா மாதிரி இருக்குடா' என்பது. அதையே அந்த எழுத்தாளரும் ஐந்து வருடம் கழித்து எழுதி, நான் படிக்கையில் அட! என்று ஒரு சின்ன மகிழ்ச்சி. மும்பை நெரிசலில் ஒரு பத்து நிமிடம் மகிழ்ச்சியாக கழிந்ததாக அந்த எழுத்தாளருக்கு எழுதினேன்.

முதன் முதலாக மனதில் தைரியம் கொண்டு ஒரு எழுத்தாளருக்கு எழுத நேர்ந்ததற்கு வேறு இரண்டு காரணங்களும் இருந்தன. இப்போதும் அந்தக் காரணங்கள் அப்படியே இருக்கின்றன. நான் கதைகள் படிப்பதை விட்டு வெகுகாலமாகி இப்போதுதான் இணையத்தில் வெளியிடப்படும் கதைகளை படித்து வருகிறேன். இலக்கியம் பற்றி அதிக பரிச்சயமோ அல்லது தெளிவான மதிப்பீடுகளோ எனக்கு இல்லை. ஆனால் ஒரு சிறிய சந்தேகம். அதாவது உங்களுக்கு இந்த காக்கா-பாட்டி-வடை-நரி கதை தெரிந்திருக்கும். இதனது வீச்சுக்கும், வசீகரத்துக்கும் சவால் விடக்கூடிய வேறு ஒரு கதை உண்டா? என்பது ஒரு கேள்வி.
எனக்குத் தெரிந்து இந்தக் கதை தெரியாமல் வளர்ந்த யாரும் தமிழகத்தில் இருக்க வாய்ப்பில்லை. என்னுடைய மகள் ஒரு ஐம்பது தடவையாவது இந்தக்கதையை என் மூலம் கேட்டிருப்பாள். ஆனால் என் சந்தேகம் இதுதான். இதுவும் ஒரு ஈசாப் கதைதானா? அல்லது தமிழகக் கதையா? இதனது மூலம் என்ன? எனது வலையகத்தில் சிலரைக் கேட்டேன். ஆஸ்திரேலியா, அமெரிக்காவிலிருந்து வந்த கடிதங்கள் 'அங்கு இது அறியப்படவில்லை' என்று சொன்னது. நியுஸிலந்து நாட்டின் ஒரு கடிதம் 'இது ஈசாப் கதைதான்' என்றது. மற்றொன்று 'கேள்விப்பட்டிருக்கவில்லை' என்றது. இரானிலிருந்து ‘ஆ'மாம், இது ஒரு புகழ் பெற்ற கதை. எங்கள் புத்தகத்தில் உள்ளது' என்றார். ஈழத்துத் தங்கை சந்திரமதி 'இதுதான் நான் கேட்ட முதல் கதையா என்று அப்பாவிடம் கேட்டுச் சொல்கிறேன்' என்றார். இன்னமும் ஒரு தெளிவான பதில் கிடைக்கவில்லை என்பதால் இதைப் படிக்கும் யாரும் எனக்கு உதவலாம்.

உங்களுக்கு மூன்று அல்லது நான்கு வயதில் குழந்தையிருந்தால், சற்று நேரமுமிருந்தால், டெலிவிஷன் பார்க்காத ஒரு ஞாயிற்றுக்கிழமை மத்தியானத்தில் இதைச் செய்து பாருங்கள். உங்கள் குழந்தை காக்காவாகவும், உங்கள் மனைவி/கண்வர் பாட்டியாகவும், நீங்கள், அட நீங்கள் யாராயிருந்தால் என்ன, நரியாகவும் மாறி ஒரு சின்ன 'skit' நாடகம் நடித்துப் பாருங்களேன். அந்த நாளில் முடிவில், அது ஒரு மகிழ்ச்சியான நாள் என்று குறித்து வைத்துக் கொள்வீர்கள். அந்த நாள் என்ன! இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட தற்போது எட்டு வயது நிரம்பிய எனது மகளிடம், அவள் எப்படி தனது சிறு கைகளை குவித்து நீட்டி, "பாட்டி பாட்டி எனக்கு வடை பசிச்சு வருது பாட்டி. ஒரு தொப்பை குடு பாட்டி" என்று வசனத்தை மாற்றி சொன்னாள் என்று சொல்லிச் சிரிக்கையில் வீட்டில் சில நிமிடங்கள் சந்தோஷ அலை பரவியது.

அடுத்து, இது ஒரு சந்தேகம் இல்லை. ஆனாலும் இதைப் படிக்கும் நண்பர்களும் இவ்வித அனுபவம் இருக்கும். நமது தமிழ் சினிமாக்களில் கதாநாயகியின் காதலைப் பெறுவதற்கு கதாநாயகன் படும் பாடு பெறும் பாடு. ஒரு படத்தில் பெரிய கட்டிடத்தில் இருந்து குதிக்கிறான். இப்படியெல்லாமா செய்வார்கள், முட்டாள்கள் என்று கேலியாகச் சிரிப்பதுண்டு. 'அட, நன்றாகப் படித்து பெரிய வேலைக்குப் போனால், அவங்கப்பன் 'அக்காளைக் கட்டிக்கிறயா இல்லை தங்கச்சியக் கட்டிக்கிறயா' என்று கேட்க மாட்டானா' என்று கிண்டலும் அடித்ததுண்டு. ஆனால் இந்த காதல் படுத்தும் பாடு!


ரொம்பக்காலம் முன்பு, எப்போது எப்போது என்பதெல்லாம் தேவையில்லை, பைக்கில் நண்பரோடு போய்கொண்டிருந்தேன். அந்த பஸ்-டாண்டை கடந்த போது அந்தப் பெண்ணைப் பார்த்தேன். எந்தப் பெண் என்பதும் இப்போது முக்கியமல்ல. ஒரு நிமிட நேரம்தான். கடந்து போயாகி விட்டது. நண்பரை அவரது வீட்டில் விட்டு விட்டு சுமார் இரண்டு மணி நேரம் கழித்து அந்த வழியே திரும்பிக் கொண்டிருந்தேன். அந்த பஸ்-டாண்டை கடந்த போது, கண்கள் என்னையறியாமல், இல்லை அறிந்தேதான் அந்தப் பெண்ணை தேடியது. அறிவு அப்போதே சொன்னது, 'முட்டாள் இரண்டு மணி நேரமாகவா டவுண் பஸ்ஸ¤க்கு நிற்ப்பார்கள்' என்று. ஆனால் காதல் கொண்ட மனம் கேட்கவில்லை. நினைத்துப் பார்க்கையில் இப்போதும் ஒரு சின்ன மகிழ்ச்சி!


மும்பை


(நக்கீரன், ரோசாவசந்த், உங்களது கேள்விகளுக்கு சிறு பதில் எனது முந்தைய பதிவில்...)

11.10.06

தண்டனை, பாலாவின் கேள்விகள்!


‘மணற்கேணி’ சட்டத்தினைப் பற்றிய குறிப்புகளைக் கொடுக்கும் வறட்டுப் பதிவாக உணரப்பட்டுவிடக்கூடாது என்பதில் நான் கவனமாக இருக்க முயன்றாலும், பாலா எனது முந்தைய பதிவில் எதிர்வினையாக வைத்த சில கேள்விகளுக்கு வெறும் பதில்களை மட்டுமே எழுதுவதில் எனக்கு விருப்பமில்லையெனினும், நேரமின்மை எனக்கு எதிராக சதி செய்கிறது.

1. இரட்டை ஆயுள் தண்டனை என்று நீதிபதி தீர்ப்பு வழங்கினாலும், 14 * 2 ==> 28 வருடங்கள் என்று கணக்கிடாமல், ஒரே சமயத்தில் இரண்டு தண்டைனையையும் அனுபவிப்பார். நன்னடத்தை வாங்கி, காந்தி ஜெயந்தி இன்ன பிற கணக்கிடல்களைக் கருத்தில் கொண்டால் எவ்வளவு சீக்கிரம் வெளியில் வந்து விடலாம்?

முன்பே ஒரு முறை இணையத்தில் எழுதியிருக்கிறேன் என நினைக்கிறேன். ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முடியும் வரைதான். பலர் நினைப்பது போல 14 ஆண்டுகள் அல்ல! எனது கட்டுரையில் கூறியபடி நீதிமன்றம் தண்டனை அளித்த பின்னர் அரசிற்கு அதனை குறைக்க அல்லது ரத்து செய்ய அதிகாரம் உள்ளது. ஆனால், தண்டிக்கப்பட்ட குற்றம் மரணதண்டனைக்கு உரிய குற்றமாக இருக்கையில் ஆயுள் தண்டனையினை குறைக்க அல்லது ரத்து செய்ய வேண்டுமெனில், குற்றவாளி குறைந்தபட்சம் 14 ஆண்டுகளாவது சிறையில் கழித்திருக்க வேண்டும். எனவே ஆயுள் தண்டனை கைதி 14 ஆண்டுகளுக்கு முன்னதாக விடுதலையாக முடியாது. பதினான்கு ஆண்டுகள் கழித்து அரசு ரத்து செய்யவில்லையெனில் சாகும் வரை சிறையிலேயே வாட வேண்டியதுதான். எனவே இரு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் ஒருவர் ஒரு ஆயுள் தண்டனையினை அனுபவித்தாலே போதுமானது.

2. அவ்வாறு வெளியில் அனுப்பப்படுபவர், 'தப்பை உணர்ந்து திருந்தியிருக்கிறாரா?', 'செய்த குற்றத்தை உணர்ந்திருக்கிறாரா?', 'இன்னும் கொலைவெறி/ஆத்திரம் கொண்டிருக்கிறாரா?' என்பதெல்லாம் மெய்ப்பிக்கப்பட்டுதான் விடுதலை ஆகிறாரா?

இவ்வாறாக தண்டனை குறைப்பிற்காக மனு செய்கையில், அரசு தண்டனை வழங்கிய நீதிமன்றத்தின் ஆலோசனையினை கேட்கலாம். மற்றபடி நீங்கள் கூறியபடி மெய்ப்பிக்கப்படுவது கஷ்டம்...ஆனால், நன்னடத்தை கருத்தில் எடுத்துக் கொள்ளப்படும்.


3. விடுதலையான பிறகு முன்னாள் கைதியின் வாழ்க்கை கண்காணிக்கப்படுகிறதா? அவருக்கு அரசு எவ்விதம் உதவுகிறது? வாழ்க்கையை சீரமைத்துக் கொள்ள, வேலை தேடிக் கொள்ள என்று ஆலோசகரின் அருகாமை கிடைக்கிறதா?

கண்காணிக்கப்படலாம். ஏனெனில் தண்டனைக் குறைப்பின் பொழுது வேண்டிய கட்டுப்பாடுகளை விதிக்கலாம். அதற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டிய கடமை அவருக்கு உண்டு. மீறினால் தண்டனைக் குறைப்பை ரத்து செய்து மீண்டும் குறைக்கப்பட்ட காலத்தை சிறையில் கழிக்க வைக்கும் உரிமை அரசுக்கு உண்டு.


4. குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும்போது சிறையில் கழித்த காலம், தீர்ப்பு வழங்கியபின் கொடுக்கப்படும் தண்டனைக் காலத்தில் இருந்து கழிக்கப் படுமா? அதாவது, சஞ்சய் தத்திற்கு சிறைவாசம் விதிக்கப்பட்டால், ஏற்கனவே ஜெயிலில் இருந்த மாதங்கள் கணக்கில் கொள்ளப்படுமா?

கண்டிப்பாக எடுத்துக் கொள்ளப்படும். இதனை set off என்று அழைக்கிறார்கள்.

கேள்விகளுக்கு நன்றி பாலா!