16.10.06

பெயரில் என்ன இருக்கு?

எவ்வளவோ இருக்கு. சில வருடங்களுக்கு முன்னர் எழுத்தாளர் சாருநிவேதிதா அவர்கள் எழுதிய ‘கோணல் பக்கங்களின்’ தொகுப்பினன எனது சகோதரர் மின்னஞ்சலில் அனுப்பிய போது, எல்லாவற்றையும் விட, 'என்ன அழகான பெயர்' என்று தங்கை சந்திரமதியின் பெயரை சாருநிவேதிதா வியந்திருந்த விதமே என்னை முதலில் ஈர்த்தது. ஷாரன் என்ற என்னுடைய மகளை, ஜாலியான நேரங்களில் நான் 'சாருமதி' என்று அழைப்பதும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். இதனையும் மீறி ஒரு காரணம் இருக்கிறது. என்னுடைய ரொம்ப நாள் ஆதங்கத்தை இந்தப் பெயர் தீர்த்து வைத்திருக்கிறது.

எனது ஆறாவது வகுப்பு முதல் நாள். வீட்டிலிருந்து வெகுதூரம் உள்ள ஹைஸ்கூல். அப்போது ஹையர் செகண்டரி கிடையாது. ஹிஸ்டரி வாத்தியார் (மன்னிக்கவும். ஆசிரியரை எங்கள் பக்கத்தில், அப்படிச் சொல்லித்தான் பழக்கம்) ஒவ்வொருவராக எழுந்து பெயரைச் சொல்லச் சொன்னார். எனது முறை வந்தது.

பிரபு ராஜ துரை'

வாத்தியார் என்னை ஒரு முறை ஏற இறங்கப் பார்த்தார்.

'பிரபு....ராஜா....துரை. எல்லாம் ஒண்ணுதானே! எந்த முட்டாள் உனக்கு இப்படி பேர் வச்சது. உன் அப்பா பேர் என்ன?'

'காந்திராஜ் சார்' மெல்ல வந்தது வார்த்தை.

'ஆங்...காந்திராஜா...யாரு அந்த கண்ணாடி காந்திராஜா?'

என் அப்பா கண்ணாடி அணிந்திருப்பாராயினும் என்ன சொல்வது என்று தெரியவில்லை.

'சரி உக்காரு' வாத்தியார் அடுத்த மாணவனுக்கு தாவினார்.

வீட்டுக்கு போனதும், அப்பாவிடம் வாத்தியார் சொன்னதைச் சொன்னேன்.

'அவன் பேர் என்ன?'

‘ஜோசப்’

'ஜோசப்பா!' என்று ஒரு முறை யோசித்தவர், 'அந்த முண்டக் கண்ணனா...அவண்ட்ட போயி முண்டக்கண்ண ஜோசப்னு சொன்னேன்னு சொல்லு'.

'அட்ரா சக்கை! வாத்தியார் நம்ம அப்பாவுக்கு ஃப்ரண்டா!' அடுத்த நாள் கிளாஸ”க்கு போனதும் மற்ற மாணவர்களிடம் பெருமையாக சொல்லிக் கொண்டேன். ஆனால் வாத்தியாருக்கு 'தண்ணிவண்டி ஜோசப்பு'னு ஏற்கனவே ஒரு பட்டப் பெயர் இருந்ததால், முண்டக்கண்ணன் என்கிற பட்டப் பெயர் என்னுடைய தயவால் ஏற்படவில்லை.

நம்ம ஊர் பள்ளிக்கூடத்து வாத்தியார்களின் பட்டப் பெயர்கள் மற்றும் மூலங்களை ஆராய்ந்தால், அதனை வைத்தே ஒரு தனி அத்தியாயம் எழுதி விடலாம்.

சரி அதற்கும் சந்திரமதிக்கும் என்ன சம்பந்தம்? ரொம்ப நாளாகத் தேடிக்கொண்டு இருந்தேன். என்னுடைய அப்பாவுக்கு கம்பெனி குடுக்கக் கூடிய இன்னொரு அப்பாவை. சந்திரா என்றாலும் மதி என்றாலும் ஒன்றுதானே. ஆனால் மதி என்கிற பெயர்தான் எனக்கு ரொம்பப் பிடிப்பதாக சொல்லி விட்டேன். மதி புத்திசாலித் தனத்தையும் குறிப்பதால். இப்படிப் பெயர் வைத்த புத்திசாலியினையும் ஒரு நாள் சந்திக்க ஆசை. என்னுடைய தந்தையினைப் போல சுவராசியமான நபராக இருப்பார் என்று அனுமானிக்கிறேன். என் அம்மாவின் பெயரும் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஞானசவுந்திரி பொன்னம்மாள்! என்னுடைய பெயரைப் பற்றிக் கேட்டதற்கு 'பெயரிலாவது எல்லாம் இருக்கட்டும்' என்று வைத்ததாக சொன்னார்கள்.

மும்பைக்கு வந்தால் வேறொரு பிரச்னை. இங்கு எல்லாம் 'சர்நேம்'தான் (sur-name). அப்ளிக்கேஷன் எழுதினாலும் சரி, ஸ்கூல் அட்மிஷன் என்றாலும் சரி. எல்லாவிடத்திலும் சர்நேம் கேட்டு குடைந்து எடுத்து விடுவார்கள். எனவே G.R.Prabhu என்று சொல்லி பிரச்னையினை சமாளித்து வருகிறேன். பிரபு, மஹாராஷ்டிர பிராமண சர்நேம். எனது மகளுடைய முழுப் பெயர் ஷாரன் பொதிகை. அவர்களுடைய பள்ளியிலிருந்து வரும் கடிதங்கள் எல்லாம் Mr & Mrs.Pothigai என்று விலாசமிட்டு வரும். நானும் கண்டு கொள்வதில்லை. பெரிய வேடிக்கை என்னவென்றால் கூட வேலை பார்ப்பவர்கள் எல்லாரையும் நமக்கு சர்நேம்மை வைத்துத்தான் தெரியும். ஷெட்டி வீட்டுக்கு ஃபோன் செய்து, 'ஷெட்டி இருக்கிறாரா என்றால்' அங்கு பெரியக் குழப்பம் வெடிக்கும். எல்லோருமே அங்கு ஷெட்டிதானே என்று எனது சிற்றறிவுக்கு எட்டுவதற்கு ரொம்பக் காலம் பிடித்தது. மற்றொரு பெரிய பிரச்னை. ராஜதுரை என்ற என்னுடைய பெயரைஅங்கிலத்தில் வாசிப்பதற்க்குள் இங்கிருப்பவர்கள் படும் அவஸ்தை. ஆர்னால்ட் ஷ்வார்ட்ஸ்நெகர் என்ற பெயரைக் கூட எளிதில் படித்து விடுவார்கள் போல.

ஷ்வார்ட்ஸ்நெக்ர் என்றதும் ஞாபகம் வருகிறது. 'பிரீடேடர்' படத்துக்குப் பின்னர் எங்கள் தூத்துக்குடியினைச் சுற்றியிருக்கும் கிராமங்களில் கூட அவர் பிரச்சித்தம். ஒரு முறை அண்ணன் வீட்டுக்குச் சென்றிருந்த போது, சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த சினிமா போஸ்டரில் புதிதாக ஒரு நடிகரின் பெயரினைப் பார்த்தேன். 'ஆர்னால்டு சிவநேசன்'. எனக்கு அது யாரென்று புரிந்து கொள்வதற்க்கு கொஞ்ச நேரம் ஆனது. கொஞ்ச நாட்களுக்கு முன்னர் குமுதத்தில் நம்ம ஆள், நேபாள நடிகை மனீஷா கொய்ராலாவை எப்படிச் சொல்வாரென்று போட்டிருந்தார்கள். 'மனுச கொரில்லா'!!!

திருநெல்வேலி பக்கம் வந்தீர்கள் என்றால் தெருவுக்கு ஒரு சுப்பிரமணியினைப் பார்க்கலாம். என் அம்மாவின் அலுவலகத்தில் ஏகப்பட்ட சுப்பிரமணிகள். ஆனாலும் பெயர்க்குழப்பம் இல்லை. முதலில் ஸ்டோர்ஸில் இருந்தவர் ஸ்டோர் சுப்பிரமணி. பின்னர் அவர் வேறு வேறு துறைகளுக்கு மாற்றப் பட்டாலும் ஸ்டோர்ஸ் என்ற பெயர் மட்டும் தங்கி விட்டது. கறுப்பாயிருந்தவர் கறுத்த சுப்பிரமணியம். கீச்சுக் குரலில் பேசுபவர் கீச்சுமூச்சு சுப்பிரமணி. மணிக்கொருதரம் பாத்ரூம் போய் தலை சீவி, பவுடர் போட்டுக் கொள்பவர் பவுடர் சுப்பிரமணி. சந்தோஷமான விஷயம். அவர்களில் பெரும்பாலானோர் தங்கள் பெயர்களை ஸ்போர்ட்டிவாக எடுத்துக் கொண்டனர். ஒருவரைப் பற்றி தெரியாது. ஏனென்றால் அவர் இவர்களுக்கெல்லாம் ஆபீசர்.

பெயர்களைப் பற்றிய இத்தனை பெரிய ஆராய்ச்சி, சந்திரமதி பின்னர் சொன்ன ஒரு சிறிய இன்பர்மேஷனில் ஆரம்பித்தது. அதாவது 'கனடா' என்ற பெயர் அமெரிக்க பூர்வாங்க குடிகளின் வார்த்தையிலிருந்து உருவானதாம். நல்லது அது போல 'அமெரிக்கா' என்ற பெயரும், பெரும்பாலோர் நினைப்பது போல ஐரோப்பிய மூலம் அல்ல. அமெரிக்கோ வெஸ்புகி புதிய கண்டத்தில் கால் வைப்பதற்கு முன்னரே அதற்கு அமெரிக்கா என்ற பெயர் இருந்தது, இந்த உலகத்தின் பார்வையில் இருந்து மறைக்கப் பட்டதற்கு வழக்கம் போல வெள்ளையர் சதிதான் காரணம். தன்னுடைய பெயரினை ஒத்து இருந்த கண்டத்தின் பெயருக்கு, தன்னுடைய பெயராலாயே அப்படியாயிற்று என்று அவரும் அடித்துச் சொல்லி விட்டார். சரி, அப்படியானால் எப்படித்தான் அந்தப் பெயர் வந்தது? அதற்கு பல நூறு வருடங்களுக்கு முன்னர் நம்ம தமிழ்த்திரு நாட்டில் பிறந்த முருகன் என்ற ஒரு சிறுவனும் அவனது செல்ல அக்காவான சந்தனமாரி என்ற மாரியும்தான் காரணம் என்று சொன்னால் ஆச்சர்யப் படுவீர்கள். அது ஒரு சிறிய கதை.

ரொம்ப வருஷம் முன்பு, இந்த முருகனின் குடும்பமும் பஞ்சம் பிழைக்க படகேறிச் சென்றது. கடலிலும் நிலத்திலுமாக வெகு நாட்கள் பயணம். இப்படியாக ஒரு முறை கடலில் சென்று கொண்டிருக்கையில், கப்பல் ஒரு பெரிய புயலில் மாட்டிக் கொண்டு கடலில் மூழ்கி விட்டது. முருகனும் அவன் குடும்பத்தினரும் ஒரு சிறிய படகில். ஆனால், மாரியை காணோம். முருகனுக்கு அவனது அக்காவை இழந்தது பெரிய வருத்தம். ஒரே அழுகை. பின்னர் யாரிடமும் அவன் பேசவே இல்லை. சரியான உணவும், தண்ணீரும் இன்றி பல நாட்கள் பயணப் பட்ட பின்னர், ஒரு நாள் நிலம் கண்ணில் பட்டது. பெரிய மகிழ்ச்சி. நிலத்தினை நெருங்க, நெருங்க அங்கே கரையில் விநோத உடையந்த சிலர் இவர்களைப் பார்த்து கையசைத்தவாறு நின்றனர். அதிசயம்!!! அவர்கள் நடுவே மாரி. முருகன்தான் முதலில் பார்த்தான். இத்தனை நாள் சோகத்தில் பேசாமல் இருந்தவன் தன்னையும் மறந்து கத்தினான், 'ஆ...மாரியக்கா! ஆ...மாரியக்கா!! ஆ...மாரியக்கா!!!' படகு கரையினைத் தொடுவதற்கு முன்னதாகவே தண்ணீரில் குதித்து ஓடினான்.

கரையில் நின்றவர்களுக்கு இந்த விநோதமான மரியாதை பிடித்து விட்டது. அவர்களும் பதிலுக்கு கத்தினர், 'ஆ மெரியக்கா, ஆ மெரியக்கா'

அன்று முதல் வேற்று மனிதர்கள் யார் கடலில் இருந்து வந்தாலும் இவ்வாறு வரவேற்பது அவர்களது கலாச்சாரமாகி விட்டது. அதுவே அவர்களது நிலத்தின் பெயரும் ஆயிற்று. ஐரோப்பியர் ஆதிக்கத்தில் அமெரிக்காவில் ஒழிந்து போன பல கலாச்சாரச் சின்னங்களில் இந்தப் பழக்கமும் ஒன்று. ஆனால் பெயர் மட்டும் தங்கிவிட்டது...

(கட்டுரையில் குறிப்பிடப்பட்ட சந்திரமதி எனப்படும் மதி கந்தசாமிக்கு எனது முந்தைய முந்தைய பதிவினால் 'அந்த நால் ஞாபகம்' வந்ததால் இந்தப் பதிவு!)

7 comments:

ச.சங்கர் said...

மதுரைக்காரருல்ல...அதுதான் புல் குசும்பு :)

சிறில் அலெக்ஸ் said...

இது என்னங்க புதுக் கதை.
அமெரிக்கா ஆ மாரியக்கா..

சரி அப்டியே அமஞ்சிக்கரைக்கும் பெயர்விளக்கம் தந்திட்டீங்கன்னா நல்லாருக்கும்

:)

ஷாரன் பொதிகை.. ஹாலிவுட் பேர்போல இருக்குதே..

Nakkiran said...

//'பிரபு....ராஜா....துரை. எல்லாம் ஒண்ணுதானே!//

அட ஆமா...


// 'மனுச கொரில்லா'!!! //

சூப்பர்...


//'ஆ...மாரியக்கா! ஆ...மாரியக்கா!! ஆ...மாரியக்கா!!!'//

அமெரிக்காவிற்கே பெயர் வைத்தவன் இந்த மறத்தமிழன்

:-)..

Anonymous said...

அட, இது சூப்பரா இருக்கே!

உங்க வலைப்பூவுல மொதல் பதிவா இதைத்தான் படிச்சேன். எனக்கும் மலரும் நினைவு. என்ன ஒரே ஒரு வித்யாசம், நான் சந்திரமதி ஆண் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.

மற்ற பதிவுகளும் சூப்பர். பழையமாதிரியே எழுதறீங்க (காம்ப்ளிமெண்ட்டாகவே எடுத்துக்கொள்ளவும்).

Ms. பொதிகைக்கு அப்புறமாக பிறந்தவர்களுக்குப் பேச்சு எல்லாம் வந்துவிட்டதா?
க்ருபா

சீமாச்சு.. said...

//'ஆ...மாரியக்கா! ஆ...மாரியக்கா!! ஆ...மாரியக்கா!!!' படகு கரையினைத் தொடுவதற்கு முன்னதாகவே தண்ணீரில் குதித்து ஓடினான்.

கரையில் நின்றவர்களுக்கு இந்த விநோதமான மரியாதை பிடித்து விட்டது. அவர்களும் பதிலுக்கு கத்தினர், 'ஆ மெரியக்கா, ஆ மெரியக்கா'
//
வக்கீல் சார்..இது நெஜமா.. இல்ல நெஜமாவே கதையா?

அன்புடன்,
சீமாச்சு...
(மரத்தடி நாட்களிலிருந்து என்னை நினைவிருக்கிறதா?)

PRABHU RAJADURAI said...

"மரத்தடி நாட்களிலிருந்து என்னை நினைவிருக்கிறதா?"

அது எப்படி மறக்க முடியும்...அதனாலதானே எழுதியதையே இங்க மறுபடியும் போடுறது!

Doctor Bruno said...

பெயர் பற்றி ஒரு பதிவு
http://doctorbruno.blogspot.com/2005/03/what-is-in-name.html