14.7.12

மூன்று பிரபலங்களும், வெட்டிப் பேச்சும்...


மூன்று பிரபலங்களைக் குறித்து சமீபத்தில் வந்த வதந்தி, விசாரித்தால் ஓரளவிற்கு உண்மையிருக்கலாம்

முதலாமவர் திரைப்பட இயக்குஞர். அவர் இயக்கிக் கொண்டிருக்கும் ஒரு திரைப்படத்திற்காக, உல்லாசத்திற்கு பெயர் பெற்ற நாடு ஒன்றில் சில நாட்கள் தங்க நேர்ந்தது. தினமும் படப்பிடிப்பிற்கு செல்வதும், பின்னர் விடுதி அறையில் வந்து நல்ல பிள்ளையாக தங்குவதுமாக இருந்தவரை, அந்த விடுதி வரவேற்பறை பெண்மணி கவனித்துக் கொண்டே இருந்தார். இயக்குஞர் விடுதியிலிருந்து விடைபெறும் சமயம் அந்தப் பெண், ‘திரைப்படம் எடுப்பதற்காகவோ அல்லது வேறு வேலைகளுக்கோ இங்கு பலர் வந்து தங்குகிறார்கள். அனைவரும் மற்ற நேரங்களில், மதுக்கூடத்தையோ அல்லது வேறு கேளிக்கைகளையோ தேடி போவார்கள். ஆனால், நீங்கள் அப்படி ஏதும் இல்லாமல் உங்களது அறைக்கு திரும்பி விடுகிறீர்கள். உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கிறது. நானும் உங்கள் மதம்தான்,  நாம் திருமணம் செய்து கொள்ளலாமா?என்றாரார்.

இயக்குஞரோ, ‘தனக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பதாகவும், அந்தப் பெண்ணுக்கு வேறு நல்ல கணவன் கிடைப்பார் என்று வாழ்த்தி‘ விடை பெற்றாராம்.


இரண்டாமவர், அரசின் முக்கியதுறை ஒன்றில் மிக உயர்ந்த பதவியிலிருப்பவர். சில மாதங்களுக்கு முன்னர், வேறு ஒரு உயர்ந்த பதவி வகிப்பதற்காக பிரச்னைக்குறிய ஒரு இடத்திலிருக்க நேரிட்டது. குடியரசு தினத்திற்கு முன்பு, கொடியேற்று விழாவை எப்படி நடத்துவது என்று விவாதிக்க தனது சகாக்களை அழைத்தார். இவரது ஆர்வத்தில் சகாக்கள் அதிர்ந்து போய் விட்டனராம். ‘ஏன் நாமெல்லாம் பிரச்னையில்லாமல் தொடர்ந்து செய்ல்படவேண்டாம் என்று நினைக்கிறீர்களா? இல்லாத வழக்கத்தை ஏற்ப்படுத்தி, வம்பில் சிக்கிக் கொள்ள வேண்டாம்என்றார்களாம். இவருக்கும் ஆச்சரியாமாம்...

மூன்றாமவர், நாடறிந்த அரசியல்வாதி முதன்மையான பொறுப்பிலிருப்பவர். தனக்கு அந்த பொறுப்பு கிடைப்பதற்கு முக்கிய காரணம் என்று நினைக்கும் ஒரு விடயத்தில் அவர் எடுத்த நடவடிக்கை, நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட அதிக கோபத்திலிருந்தவரை பார்க்க இளம் அதிகாரி ஒருவர் சென்றிருந்தார். வெறுப்பில், தன் முன் இருந்த காகிதத்தில் கோட்டுப்படங்களை கிறுக்கிக் கொண்டே இருந்தவர், அதிகாரி பேச்சை எடுத்ததும், நீதிபதிகளை ‘இவர்களைப் பற்றி தெரியாதா?‘ என்ற ரீதியில் திட்டித் தீர்த்தாராம். அப்படி திட்டியதில் சில வார்த்தைகளை அச்சில் ஏற்ற இயலாதாம்...

-oOo-

கிரேக்க மூலத்திலிருந்து ட்ரிவியல் (Trivial) என்ற் ஆங்கில வார்த்தை உருவானதற்கு ஒரு கதை உண்டு. அந்தக் காலத்தில் பெண்கள் தத்தம் வீடுகளில் இருந்து பொருட்கள் வாங்க சந்தைக்கு செல்வார்கள். அப்படி மூன்று வழியில் (Tri + Via) இருந்து வரும் பெண்கள் சந்தைக்கு செல்லும் வழியில் ஒன்றாக கூடுகிறார்கள். ‘அப்படி செல்லும் வழியில் பெண்கள் என்ன பேசுவார்கள்?, அதுதான் ட்ரிவியல் பேச்சுஎன்று நான் சொன்னால், பெண்கள் அமைப்பு வைத்து என்னை கண்டிப்பார்கள்.
எனவேதான், ஆண்களும் இதற்கு விதிவிலக்க என்று விளக்கவே இந்தப் வெட்டிப் பேச்சு பதிவு!

சென்னை
14/07/12

11.7.12

அகிலேஷ் யாதவின் கொடை!



‘உத்திரப்பிரதேச முதல்வர் அம்மாநில சட்டமன்ற பிரதிநிதிகளுக்கு, மகிழுந்து வாங்குவதற்காக ரூ.20 லட்சம் அளிக்கப் போவதாக’ செய்தி வெளிவந்தவுடனேயே, ஊடகங்களில், முக்கியமாக ஆங்கில ஊடகங்களில் எதிர்ப்பு எழுந்தது. எதிர்ப்பு என்பதை விட, அந்த விமர்சனங்களில் மறைந்திருந்த கிண்டல்களும் புரிந்து கொள்ளக்கூடியதாகவே இருந்தது.

‘டாக்ஸ்பேயர் மனியிலிருந்து எம் எல் ஏக்களுக்கு காரா?’ என்ற எதிர்ப்பினை சமாளிக்க முடியாமல், அறிவித்த வேகத்திலேயே அகிலேஷ் அதனை திரும்ப பெற்றுக் கொண்டார்.

ஊடகங்கள் கிளப்பிய விமர்சனப் புழுதியில் ‘அந்த தொகை ஒன்றும் ‘பொனாசா’ இல்லை. பெரிய மகிழுந்து தேவைப்படும் உறுப்பினர்கள், அவர்களது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.20 லட்சம் வரை செலவழித்து மகிழுந்து வாங்கிக் கொள்ளலாம் எனவும் பின்னர் அவர்களது பதவிக்காலம் முடிந்ததும் தேய்மானத்திற்காக கழித்தது போக, மீதி கிரயத் தொகையை கொடுத்து வண்டியை தாங்களே சொந்தமாக்கிக் கொள்ளலாம் என்ற அந்த திட்டத்தின் சாராம்சங்கள்’ விவாதிக்கப்படாமலேயே போயின.

சட்டமன்ற பிரதிநிதிகள் என்ன, பல தனியார் நிறுவனங்களே தங்களின் இடைநிலை நிர்வாகிகளைக் கவர, இதே வகையான திட்டங்களை செயல்படுத்துகிறார்கள். அநேக நிறுவனங்களில் இளநிலையில் இருக்கும் பொறியாளர்கள் முதற்கொண்டு அனைவருக்கும் மகிழுந்து வாங்குவதற்கான படிகள் அளிக்கப்படுகையில் லட்சக்கணக்கான மக்களின் பிரதிநிதியாக சட்டமன்றத்தில் பதவி வகிக்கும் நபருக்கு ரூ 20 லட்சம் என்பது பெரிய தொகையல்ல.

ஆயினும் பழைமைவாத உடைகளோடும், நாட்டுப்புறத்தன்மையோடும், முரடர்களாக நம்முன் உருவகப்படுத்தப்பட்டுள்ள எம் எல் ஏக்களுக்கு மகிழுந்து என்பதால், நம்முடைய ஆழ்மனதில் ஏற்ப்படும் ஒவ்வாமையே இந்த எதிர்ப்பின் மூல காரணம் என்றே நான் நினைக்கிறேன்.

எம் எல் ஏக்களுக்கு இவ்வாறு பலன்கள் அளிக்கப்படுகையில் நம்மால் உணரப்படும் அசூயையான உணர்வு, பொருளாதார மந்தநிலையிலும் சில நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளுக்கு கோடிக்கணக்கில் அளிக்கப்படும் பலன்களை காண்கையில் வியப்பாக மாறுகிறது.

சர்வதேச பணச்சந்தையிலும், பங்கு வர்த்தகத்திலும் பல்லாயிரக்கணக்கான எண்களோடு உறவாடும் ஐஐஎம் நிர்வாகிகள், அதே திறமையினை பயன்படுத்தி ஒரு சட்டமன்ற தொகுதியிலாவது வெற்றி பெற்றதில்லை. ஏன், ஊடகங்களின் பெரிய ஆதரவு இருந்தும், சென்னையில் சில ஐஐடி தொழில்நுட்பவாதிகளால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி ஒன்று ஒரே தேர்தலோடு உடைந்து போனது.

மகிழுந்து ஒரு நிறுவனத்தின் நிர்வாகிக்கு தேவைப்படுவதை விட மக்கள் பிரதிநிதிக்கு அதிகம் தேவைப்படுகிறது. நகர்ப்புற சாலைகளை கடந்து பட்டி தொட்டியிலும் சுலபமாக சென்று வர பெரிய வகை மகிழுந்துகள் (SUV) ஏற்றதாக இருக்கும் என்று அகிலேஷ் நினைத்ததில் தவறில்லை.

நாடு இருக்கும் பொருளாதார நிலையில், இவ்வகையான செலவினங்கள் தேவையா என்பதும் வெற்று வாதமே! ஏனெனில், இதே பொருளாதார நிலை வேறு எந்த நிறுவன நிர்வாகிக்கும், மகிழுந்தினை மறுக்கவில்லை. மேலும் நாட்டின் பொருளாதார நிலை, நாட்டில் செயல்படும் நிறுவனங்களின் ஒட்டுமொத்தமான பொருளாதார நிலையோடு நேரடி தொடர்புடையதாகும்.

பல பிரதிநிதிகள் கோடீசுவரர்களாம். கோடீசுவரராக பணியில் சேருபவர் அவரது கோடிகளைக் கொண்டு வந்து கொட்ட வேண்டுமா. அதுவும், இந்த திட்டமானது சாதாரண நிலையிலிருக்கும் உறுப்பினர்களை மனதில் கொண்டே அறிவிக்கப்பட்டதாக அகிலேஷ் கூறுகிறார்.

வசதியாக உள்ள பிரதிநிதிகளை பார்க்கும் நாம், நடுத்தர நிலையில் இருந்து இயங்கும் பல பிரதிநிதிகளை மறந்து விடுகிறோம். திருநெல்வேலியில் நான் வழக்குரைஞராக பணியினை தொடங்கிய பொழுதில் நேரில் கண்டு பழகிய மூன்று பிரதிநிதிகளை இந்தக் கணத்தில் என் நினைவுக்கு வருகிறார்கள்.

ரமணி நல்லதம்பி என்ற பெயரை இன்று நெல்லையிலேயே யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. 1989லும் 1991லும் இருமுறை காங்கிரசு கட்சியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். குறுகிய காலத்திலேயே தனது துணிச்சலான அரசியல் மற்றும் சட்டமன்ற செயல்பாட்டினால் கருணாநிதி, செயலலிதா ஆகிய இருவரின் கவனத்தையும் கவர்ந்தவர். ஆனால் அதே வேகத்தில் அரசியலிலிருந்து காணாமல் போனார். சில காலம் கழித்து ‘நக்கீரன்’ அட்டையில் புற்றுநோயால் தாக்கப்பட்டு சாகும்தறுவாயிலிருந்த ரமணியின் புகைப்படத்தை கண்டவர்கள் அதிர்ந்து போனார்கள். ரமணியும், வழக்குரைஞராக பணியாற்றிய அவரது கணவராகிய நல்லதம்பியும் தங்களது சொற்ப வருமானத்தையும் ரமணியின் சிகிச்சைக்காகவே செலவிட்டு வறுமையில் தள்ளப்பட்டு நிற்கையில், அவர் சார்ந்திருந்த கட்சியே அவரை கைவிட்டு விட்டதுதான் கொடுமை!

இதே காலகட்டத்தில் அதிமுகவிலிருந்து நெல்லை பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட வேலையா என்பவரையும் நான் அறிவேன். அரசு வழக்குரைஞராக இருக்கையிலேயே அவரது நேர்மைக்கும் கண்ணியத்துக்கும் பெயர் பெற்றவர். ஓரளவு வசதியானவராயினும்,  ஐந்து வருடம் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியதை வைத்து, எவ்விதத்திலும் தமது செல்வத்தையோ, செல்வாக்கையோ விரிவுபடுத்தியவரல்ல. இவரும் இளம்வயதிலேயே இறந்து போனதுதான் துரதிஷ்டம். முதல்வரின் காலில் கட்சிக்காரர்கள் அனைவரும் ‘பொத்’ ‘பொத்’ என்று விழுந்து கொண்டிருக்கையில், ‘வேலையா அண்ணன் விழுந்தாரா, இல்லையா?’ என்பதுதான் எங்களிடையே அப்பொழுது புதிராக உலவிய சந்தேகம்!

1967லிருந்தே திமுக பிரதிநிதியாக பலமுறை பணியாற்றிய ஏ.எல்.எஸ் என்று அழைக்கப்படும் ஏ.எல்.சுப்பிரமணியன் பற்றி கூட ஏதும் கடுமையான குற்றச்சாட்டுகள் இல்லை. நான் அறிந்தவரை அரசியலுக்காக தனது சொத்துக்களை இழந்தவர் என்றுதான் இவரைப் பற்றியும் கூறுவார்கள்.

இவர்களில் ரமணி நல்லதம்பி கொஞ்சம் பயர்பிராண்ட். ஆனால் மற்ற இருவரும் அதிர்ந்து பேசி கூட நான் எப்பொழுதும் பார்த்ததேயில்லை. சட்டமன்ற உறுப்பினர் என்றதும், எனக்கு இவர்கள்தாம் நினைவுக்கு வருகிறார்கள்.

இவர்களைப் போன்று, எத்தனையோ சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழகம் முழுவதும் இருக்கலாம். உத்திர பிரதேசத்திலும் இருக்கலாம். தங்களது அரசியல் செயல்பாட்டிற்காகவும், மக்கள் பிரச்னைக்கான உழைப்பிற்காகவும், அரசு செலவில் ஒரு மகிழுந்து கிடைக்குமாயின், அது ஒரு பொருத்தமான பலனாகத்தான் இருக்க முடியும்.

ஏற்றுக்கொள்ள இயலாத வகையில் அகிலேஷின் திட்டத்தில் ஏதும் குறைகளை என்னால் காண இயலவில்லை.

மதுரை
11/07/12