22.6.12

தலைவன் செயல் தவறாகாது!முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கட்ஜு, அதிபர் சர்தாரி மற்றும் பிரதம்ர் கிலானி விடயத்தில் பாக்கிஸ்தான் உச்சநீதிமன்றம் நடந்து கொண்டதை விமர்சித்து எழுதிய கட்டுரை, ‘தி ஹிந்து ‘டைம்ஸ் ஆப் இந்தியா ஆகிய இரு நாளிதழ்களிலும் ஒரே நாளில் வெளியாகியுள்ளது.

அந்த கட்டுரையில், நடைமுறைச்சிக்கல்களால் அதிபர், பிரதமர் போன்றவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கைகள் தவிர்க்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள கட்ஜுவின் கருத்து கவனிக்கத் தகுந்தது. குற்றவியல் நடவடிக்கைகளில் இருந்து, அதிபரை பாதுகாக்கும் பாக்கிஸ்தான் அரசியலமைப்பு சட்டப்பிரிவினை எடுத்துக் காட்டி, பாக்கிஸ்தான் உச்சநீதிமன்றம் அதிபர் சர்தாரி விடயத்தில் சற்று அதிகப்படியாக நடந்து கொண்டுள்ளதாக குற்றம் சாட்டும் கட்ஜு, தனது வாதத்திற்கு ஆதரவாக அரசனின் எந்த செயலும் குற்றமாகாது (King can do no wrong) என்ற ஆங்கில சட்டக்கருத்தினை முன் வைக்கிறார்.

இன்று இங்கிலாந்திலேயே வலுவிழந்து போன இந்த சட்டக்கருத்து ஆங்கில நீதிதுறை வரலாற்றில் பல்வேறு காலகட்டத்தில் கையாளப்பட்ட வரலாறு சுவராசியமானது.

-oOo-

கட்ஜுவின் கட்டுரையினை படிக்கும் பொழுதே, எனக்கு இரண்டு நாட்களுக்கு முன் பார்த்த ப்ரோஸ்ட்/நிக்சன் என்ற திரைப்படத்தில் ‘வாட்டர்கேட் விவகாரத்தில் தனது செயலை நியாயப்படுத்துவதற்காக நிக்சன் கூறும், ‘அதிபர் ஒரு செயலைச் செய்தால், அது குற்றமாகாது’ (When the President does it, that means it's not illegal) என்ற கருத்தினை நினைவுபடுத்தியது.

பதவி விலகிய ஒரு அதிபரை, தொலைக்காட்சி நிரூபர் ஒருவர் பேட்டி கண்டதைப் பற்றி ஒரு படமா, என்று அசுவராசியமாகவே எவ்விதமான அறிமுகமும் இல்லாமல்தான் படத்தினைப் பார்த்தேன். வியப்பாக இருந்தது, கொஞ்சம் கூட தொய்வில்லாமல் ஏதோ ‘த்ரில்லர்ரக படத்தினைப் பார்ப்பது போன்ற அனுபவம். ஒரு அரசியல் பேட்டியைக் கூட திரைக்கதையாக்குவதற்கு தனித்திறமை வேண்டும்.

அரசியலில் ஆர்வம் இல்லாதவர்களுக்கு படம் எப்படியிருக்கும் என்று தெரியவில்லை. ஆனால், தமது இளமைக்காலத்தில் கென்னடி/ நிக்சன் நாட்களைக் கடந்து வந்தவர்களுக்கு அருமையான நாஸ்டல்ஜிக் அனுபவத்தைக் கொடுக்கலாம்.

-oOo-

படத்தில் நிக்சன், ப்ரோஸ்ட் அணிந்திருக்கும் ‘ஸ்லிப் ஆன்ரக ஷூவைக் கண்டு வியப்பது எனக்கு வியப்பாக இருந்தது. அவ்வகையான லேஸ் இல்லாத ஷூக்கள் அமெரிக்காவில் அறிமுகமானது, 70களுக்கு பின்னர்தான் எனபது புதிய தகவல்.

‘ஆனால் லேஸ் வைத்து கட்டப்படும் ஷூக்கள்தான் ஆண் தன்மையோடு இருக்கும்என்று நிக்சன் கூறுவது முதன் முதலில் கியர் இல்லாத அல்டிஸ் காரை ஓட்டிய பொழுது எனக்குள் எழுந்த எண்ணத்தை நினைவுபடுத்தியது. ஒரு கையில் கியரைப் பிடித்துக் கொண்டு கார் ஓட்டுவதில் உள்ள ‘கிக்கியர் இல்லாத காரில் இல்லை!

‘மோட்டர் பைக்குகளை கிளப்ப விரல் நுனியில் சுவிட்ச் வைத்தாலும், கால்களால் உதைத்து கிளப்பவே ஆண்கள் விரும்புகிறார்கள்என்று ஒரு மார்க்கெட்டிங் நிறுவன சர்வே அறிக்கை தெரிவித்ததாக படித்திருக்கிறேன்.

கொஞ்சம் கொஞ்சமாக இந்தப் பதிவு ஆணாதிக்க சிந்தனையை வெளிப்படுத்துவது போல இருப்பதால், ‘நான் எப்பொழுதும் ஸ்லிப் ஆன் ரக ஷூக்களையே அணிகிறேன்என்பதையும் சொல்லி வைக்கிறேன். ஆனால் காரணம், தினமும் லேஸை கட்டும் பொழுது ஆள்காட்டி விரலில் உரசி அலர்ஜியாகிறது என்பதுதான்.

கேஸ் கட்டுகளை நாடா கொண்டு கட்டி வைப்பதில் ஆரம்பித்த ஒவ்வாமை. தற்பொழுது, கேஸ் கட்டுகளையும் நானாக கட்டுவதை பொதுவாக தவிர்ப்பேன். ஆக்குபேஷனல் ஹஸார்ட்!

மதுரை
22/06/12

No comments: