இன்று
டைம்ஸின் ஒரு மூலையில் “Loss for road accident victims, gain for insurers: Opposition”
என்ற
தலைப்பிலான செய்தி பலரால் கண்டு கொள்ளப்படாமலேயே போயிருக்கலாம். ஆனால், இந்தச்
செய்தியில் நம்மில் சிலருடைய எதிர்காலத்தையே புரட்டிப் போடக்கூடிய பயங்கரம் ஒன்று
இருப்பதும், விழிப்பான மக்களவை உறுப்பினர்கள் சிலரால் அந்த பயங்கரம் தள்ளிப் போடப்பட்டுள்ளது
என்பதும் நம்மை அதிர்ச்சியடைய வைக்கலாம்.
அதீத சம்பளம்
கிடைக்கும் ஒரு வேலையில் நீங்கள் இருக்கலாம். உங்கள் சேமிப்பும் வங்கிக் கடனுமாக
சென்னையில் ஒரு வீடு வாங்கியிருக்கலாம். பெரிய கார் கூட வைத்திருக்கலாம். இனி
எனக்கென்ன, என்று எதிர்காலம் பிரகாசமாகத் தெரிகையில் உங்கள் சொத்துகள் அனைத்தும்
அடித்துச் செல்லப்பட்டால்?
அப்படிப்பட்ட
ஆபாயத்திலிருந்துதான் நாம் தற்காலிகமாக காப்பாற்றப்பட்டுள்ளோம்.
நீங்களோ அல்லது
உங்களுடைய ஓட்டுநரோ, எவ்வளவு சிறந்த முறையில் வண்டியை ஓட்டினாலும்,
எதிர்பாராதவிதமாக, விபத்து நடைபெறும் சாத்தியக்கூறு உள்ளது. உங்களது வாகனம்
சம்பந்தப்பட்ட விபத்தில் காயம்படும் நபருக்கு / உயிரிழக்கும் நபரை
நம்பியிருப்பவர்களுக்கு வாகன உரிமையாளராகிய நீங்கள் நஷ்டஈடு தரவேண்டும். ஆனால்,
நஷ்ட ஈடானது பாதிக்கப்படுபவரின் வயது, வருமானம், மருத்துவ செலவு ஆகியவற்றைப்
பொறுத்து பல லட்சங்களில், ஏன் கோடியில் கூட இருக்கலாம். அதனை நீங்கள் கொடுக்க
இயலாது என்பதால்தான், வாகனங்கள் கட்டாயமாக காப்பீடு செய்யப்படுகின்றன. அதனாலேயே,
வாகன உரிமையாளர்கள் நிம்மதியாக தூங்க முடிகிறது.
வாகன
உரிமையாளர்கள் என்ன, விபத்தில் சிக்கி சின்னாபின்னமாகும் நபர்களுக்கும் அவர்தம்
குடும்பங்களுக்கும் உள்ள ஒரே ஆறுதல், அவர்களுக்கு ஏற்ப்பட்ட இழப்புக்கு ஈடான பண
மதிப்பு காப்பீடு நிறுவனங்களால் தரப்படுவதாகும். தண்டுவடத்தில் ஏற்ப்படும்
பாதிப்பால், வாழ்நாள் முழுவதும் படுக்கையிலேயே கழிக்க நேரிடும் ஒருவரின்
குடும்பத்தினர் படும்பாடு சொல்லி மாளாது. பிற பாடுகளோடு பொருளாதார ரீதியிலான
கஷ்டமும் சேர்ந்து கொண்டால் தற்கொலை எண்ணம்தான் மிஞ்சும் என்பதால், காப்பீடு
நிறுவன நஷ்டஈடு முக்கியத்துவம் பெறுகின்றன.
இதுவரை
அரசுடமையாக்கப்பட்ட காப்பீடு நிறுவனங்கள் மட்டுமே இயங்கி வந்த சூழ்நிலையில், மோட்டார்
வாகன காப்பீட்டில் லாபம் ஏதுமில்லையென்றாலும், அவற்றின் பிற காப்பீடுகளில்
கிடைக்கும் அபரிதமான லாபம், மோட்டார் வாகன காப்பீட்டில் அவற்றை தாராளமாக இருக்க
உதவியது. ஆனால், தற்பொழுது தனியார் காப்பீடு நிறுவனங்கள் பெருகியுள்ள சூழலில்
இப்படிப்பட்ட ஒரு சட்டதிருத்தம், நம்மை கவலை கொள்ள வைக்கிறது.
புதிய
சட்டதிருத்தத்தின்படி காப்பீடு நிறுவனம் ஒரு குறிப்பிட்ட அளவிற்குத்தான் நஷ்டஈடு
தரும். அதற்கு மேலான தொகையை வாகன உரிமையாளரிடம் வாங்கிக் கொள்ள வேண்டியதுதான்.
எத்தனை உரிமையாளர்களிடம் லட்சக்கணக்கில் நஷ்டஈடு தர வசதியிருக்கும்?
ஒரு எலும்பு
முறிவினை நேர்ப்படுத்தவே இரண்டு மூன்று லட்சம் செலவாகும் நிலையில், சட்டதிருத்தம்
அமுலுக்கு வந்தால் காப்பீடு நிறுவனம் அதிகபட்சம் ரூ.50,000/-ம்தான் தரும். பெரிய
அளவில் காயமேற்ப்பட்டு பத்து, இருபது லட்சம் செலவானால், எந்த லாரி உரிமையாளரை
துரத்தி நஷ்ட ஈட்டினைப் பெறுவது?
மாதம்
ரூ.50,000/- சம்பளம் பெறும் 30 வயதுடைய இளம் கணவர் ஒருவர் உங்களது வாகனத்தில்
அடிபட்டு இறந்தால், அவருக்கு நீங்கள் தர வேண்டிய இழப்பீடு 75 லட்சத்தை தாண்டலாம்.
சட்ட திருத்தம் அமுலுக்கு வந்தால், காப்பீடு நிறுவனம் தரும் தொகை 20 லட்சம் அளவில்
இருக்கும். மீதியை நீங்கள்தான் தர வேண்டும். 1995ம் ஆண்டு மஹாஜன் என்ற அமெரிக்கமருத்துவரின் மரணத்திற்கு ஈடாக அவரது மனைவிக்கு அளிக்கப்பட்ட தொகை சுமார் 7 கோடி!
நினைத்துப்
பாருங்கள், அந்த மஹாஜன் உங்களுடைய காரில் அடிபட்டு இருந்தால் 7 கோடி ரூபாய்
கொடுப்பதற்கு போதிய சேமிப்பு/ சொத்து உங்களிடம் இருக்கிறதா என்று. பயமாக
இருக்கிறதல்லவா?
ஆனால்
இவ்விதமான அச்ச உணர்வு ஏதுமின்றி நமது மத்திய அமைச்சரவை இந்த சட்டதிருத்தத்திற்குஒப்புதல் அளித்துள்ளதுதான் சோகம். மேல் சபையிலும் நிறைவேற்றப்பட்டு, ஏதோ சில
மக்களவை உறுப்பினர்கள் விழித்துக் கொண்டதன் பலன், நாம் தப்பித்தோம்.
ஆயினும்,
எவ்விதமான சமரசத்திற்கும் இடமில்லாமல் எதிர்க்க வேண்டிய கட்டாயத்தில் இந்த
சட்டத்திருத்தம் நம்மை வைத்துள்ளது.
மதுரை
17/05/12
5 comments:
மோட்டார் வாகன விபத்து மூன்றாம் ந்பர் காப்பீடு குறித்த ஏழு பதிவுகள் கொண்ட எனது தொகுப்பு
http://marchoflaw.blogspot.in/2007/01/blog-post.html
பதிவில் கூறப்பட்டுள்ள மஹாஜன் வழக்கு பற்றிய பதிவு
http://marchoflaw.blogspot.in/2010/03/blog-post.html
அமெரிக்க சம்பவம் ஒன்றோடு தொடர்புடைய மோட்டார் வாகன விபத்து குறித்த மற்றொரு பதிவு
http://marchoflaw.blogspot.in/2006/06/blog-post_07.html
இதைப்பற்றி எந்த மீடியாவும் தப்பித்தவறிக்கூட வாயைத்திறக்காமல், பொட்டி செய்திகூட போடாமல் இருக்குதே.....
ஆர்.கே.செல்வமணியின் 'மக்களாட்சி' படத்தில் ஒரு தொழிலதிபர் அரசாங்கத்தையே நடத்துபவர் என வந்தபோது மிகைப்படுத்துதல் என்றிருந்தேன்.. இன்று அது ரொம்ப கம்மினு தோணுது..
இந்த விடயம் குறித்த எகனாமிக் டைம்ஸ் மற்றும் டைம்ஸ் ஆப் இந்தியாவின் விளக்கமான கட்டுரை
Should there be a limit on compensation for accident victims?
http://articles.economictimes.indiatimes.com/2012-06-11/news/32174848_1_mact-compensation-accident-victims
Post a Comment