6.11.11

சாருநிவேதிதாக்களை காப்பது எப்படி?



ஏ.கே.ராமனுஜன் அவர்களின் '300 ராமாயணங்கள்' என்ற கட்டுரை, இந்து மதஉணர்வுகளை புண்படுத்துவதாக கூறப்பட்டு தில்லி பல்கலைக்கழக வரலாற்றுப் பிரிவு பாடத்திட்டத்திலிருந்து சமீபத்தில் நீக்கப்பட்டது, பெரிய அளவிலான விவாதத்திற்கு வகுத்துள்ளது.

இதனைப் பற்றி கருத்து தெரிவித்த எண்ணங்கள் பத்ரி,'எந்தப் புத்தகத்தையும் தடை செய்யக் கூடாது, அது 'சாத்தானின் வேத'மாக இருந்தாலும் சரி, வேறு என்னவாக இருந்தாலும் சரி' என்று கூறுகிறார்.

மைய அரசோ அல்லது மாநில அரசோ ஒரு புத்தகத்தை அதில் கூறப்படும் கருத்து நாட்டின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் என்றோ, சட்டவிரோதமானது என்றோ அல்லது சட்டம் ஒழுங்கினை குலைக்கலாம் என்றோ தடை செய்கிறது. இத்த்கைய அதிகாரம் அரசிற்கு இருக்க வேண்டியது அவசியம். எந்தப் புத்தகத்தையும் தடை செய்யக் கூடாது என்ற கொள்கை முடிவு ஆபத்தானது.



உதாரணமாக, ‘இஸ்லாமிய மத உணர்வுகளை' புண்படுத்துவதாக கூறி சாத்தானின் வேதம் தடை செய்யப்பட்டாலும், உண்மையான காரணம் அப்பொழுது நாட்டில் நிலவிய சூழலில், எளிதில் சாமானிய மக்களை உசுப்பேற்றி ஒரு கலவரத்தை ஏற்ப்படுத்தி விடலாம் என்ற அச்சத்தால்தான். அப்பாவிகளின் உயிர் பணயமாக வைக்கப்படுமெனில், ஒரு புத்தகத்தை தடை செய்வது என்பது தவறான ஒரு முடிவாக இருக்காது.

ஆனால், இத்தகைய ஒரு தடை தற்காலிகமான ஒன்றாகத்தான் இருக்க முடியும். மேலும் இம்மாதிரியான தடை உத்தரவை எதிர்த்து சம்பந்தப்பட்டவர் நீதிமன்றத்தை அணுகினால், அரசின் முடிவு சரியானதா என்பதை நீதிமன்றம் ஆராயும் வாய்ப்பும் உள்ளது. சமீபத்திய உதாரணம், ‘ஆராக்ஷன்’ திரைப்படம் மீதான தடையும், நீதிமன்றத்தின் உத்தரவும். முக்கியமாக இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் (Guidelines) வகுக்கப்பட்டால், நீதிமன்றங்களால் இந்த வழக்குகளை தீர்ப்பது எளிதான செயலாகவும் இருக்கும்.

ஆனால் பிரச்சனை, புத்தகத்தை தடை இல்லாமல் வெளியிடுவதிலோ அல்லது தடையை நீக்குவதிலோ இல்லை. இந்திய தண்டனை சட்டத்தின் கீழான வம்பு வழக்குகளை எதிர்கொள்வதுதான் உண்மையான பிரச்சனை!



எனது ‘சைபர் கிரைம் பற்றிய பதிவிலே நான் கூறியபடி, நடிகை குஷ்பு தமிழர்களின் உணர்வுகளைப்புண்படுத்திவிட்டார் என்றோ அல்லது ஒவியர் எம்.எப்.ஹுசைன் இந்துக்களின் உணர்வுகளைப்புண்படுத்திவிட்டார் என்றோ எந்த ஒரு நீதிமன்றத்தாலும் தீர்ப்பு கூறப்படவில்லை. ஆனாலும், முன்னவர் தமிழகம் முழுவதும் பின்னவர் இந்தியா முழுவதும் உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றங்களில் அலைகழிக்கப்பட்டதையும் அதனால், ஹுசைன் இந்தியாவை விட்டே வெளியேற வேண்டிய சூழல் ஏற்ப்பட்டதையும் நாம் அறிவோம்.

எனவே, தடை செய்யப்படுவது மட்டும் பிரச்சனை அல்ல!

மாறாக மற்றொரு நபரின் மத உணர்வுகளைப் புண்படுத்த வேண்டும் என்ற தீர்மானமான எண்ணத்துடன் (deliberate intention) ஒருவரின் செயல் இருக்குமாயின் அதனை குற்றம் என்று கூறும் இந்திய தண்டனச் சட்டத்தின் பிரிவு 298, ஒழுக்கக்கேடான (obscene) எழுத்து, ஒவியம் அல்லது பாடல் போன்றவற்றை குற்றம் என்று கூறும் பிரிவு 292 ஆகியவையும் மற்றும் அவதூறை (Defamation) உள்ளடக்கிய பல்வேறு குற்றங்களில் ஒரு புத்தகத்தை கொண்டு வர முடியும் என்பதுதான் பிரச்சனை.

‘சாத்தானின் வேதம்’ புத்தகத்தை இந்தியாவின் எந்த மூலையிலும் படிக்கும் ஒருவர் சல்மான் ருஷ்டி மற்றும் அந்த புத்தகத்தோடு சம்பந்தப்பட்ட எவர் மீதும், அவர் அந்த புத்தகம் விற்பனையான இடத்திலிலுள்ள காவல்துறையில் புகார் கொடுத்து வழக்கு பதிவு செய்ய இயலும். காவலர்கள் மறுத்தால் அங்குள்ள நீதித்துறை நடுவர் (Judicial Magistrate) தனிநபர் குற்றவழக்காகவும் பதிவு செய்ய இயலும். குற்றவியல் வழக்குகளில் அழைப்பாணை கிடைத்ததும் ஒருவர் நேரில் ஆஜராக வேண்டும். பின்னர் விலக்கு அளிக்கப்பட்டாலும், அவர் சார்பாக வக்கீல் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். இல்லை வாரண்ட்…கைது இன்ன பிற தொந்தரவுகள்.



நீதித்துறை நடுவர் என்பவர், நீதிபதிகள் மட்டத்தில் கடைநிலையில் இருப்பவர். சட்டத்தில் இளங்கலை பட்டம் பெற்ற ஒரு வருட காலத்திற்குள்ளாகவே ஒருவர் நடுவராக நியமிக்கப்பட வாய்ப்பு உண்டு. தற்போதைய இலக்கியச் சூழல் பற்றியோ, பின்நவீனத்துவம் பற்றியோ அவர் அறிந்திருக்க தேவையில்லை. அவர்தான் தனியாளாக, ஹுசைன் தனது ஓவியம் மூலமாக வேண்டுமென்றே இந்துமத உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளாரா அல்லது சாருநிவேதிதாவின் ‘தேகம் புதினம் ஒழுக்கக் கேடானதா என்பதை தீர்மானிப்பார்.

அதற்காக, இந்திய தண்டனைச் சட்டத்தின் இந்தப் பிரிவுகளை நீக்குவதும் சாத்தியமல்ல. அப்படியெனில், படைப்பாளிகளை சுதந்திரமாக எவ்வித அச்ச உணர்வுமின்றி தங்கள் படைப்புக்ளை ஆக்க எவ்வாறு ஊக்குவிப்பது?

எனக்குத் தோன்றும், ஒரே தீர்வு தணிக்கை வாரியம் (Censor Board) போன்ற சட்டபூர்வமான அமைப்பினை ஒன்றினை ஏற்ப்படுத்தி, இவ்விதமான தாக்குதல்களுக்கு தங்கள் படைப்பு உள்ளாகலாம் என்று அச்சப்படும் படைப்பாளிகள் தங்களது படைப்பினை அந்த அமைப்பிற்கு சமர்ப்பிக்க கோரலாம். அறிஞர்கள் அடங்கிய அந்த அமைப்பின் சான்றிதழைப் பெற்றால், மேற்கூறிய இந்திய தண்டனை சட்டபிரிவுகளின் கீழ் தாக்கல் செய்யப்படும் வழக்குகளில் இருந்து அந்த படைப்பிற்கு விலக்கு (Immunity) அளிக்கலாம்.

மேலும், அவ்விதம் விலக்கு அளிக்கையில் ‘இந்த படைப்பு படிப்பவரது ஒழுக்க நெறிகளுக்கு ஏதுவானதாக இல்லாதிருக்கலாம் ‘மத உணர்வுகளைப் புண்படுத்தலாம் என்ற எச்சரிக்கையினை தாங்கி அந்த படைப்பு வெளிவர வேண்டும் என்ற கட்டுப்பாடுகளையும் அந்த அமைப்பு விதிக்கலாம்.

எனக்குத் தோன்றிய வரையில் இப்படிப்பட்ட ஒரு அமைப்பே இந்தப் பிரச்சனைக்கான நிரந்தரமானதும், முழுமையானதுமான தீர்வாக இருக்க முடியும்.

மதுரை
06/11/11























10 comments:

PRABHU RAJADURAI said...

சாருநிவேதிதா ரசிகர்கள் என்னை மன்னிக்கவும்...அவரது பெயர் ஒரு குறியீடு அவ்வளவுதான். மேலும் அதற்கு இணையத்தில் உள்ள பிராண்ட் ஈக்குவிட்டிக்காகவும் அவரது பெயர் பயன்படுத்தப்படுகிறது.

கிருஷ்ண மூர்த்தி S said...

இங்கே புத்தகங்கள், செய்திகள் மீதான தடை, தடா எல்லாம் அரைகுறை ஞானம், அரசியல் உள்நோக்கங்களுடன் கூடியவைதான்!

ஒரு முதிர்ச்சியடைந்த ஜனநாயகத்தில் ஒரு விஷயத்தை ஏன், எதற்காகத் தடை செய்ய வேண்டும் அல்லது மட்டுப்படுத்த வேண்டும் என்ற தெளிவு இருக்கும். நம்மூர் அரசியல்வாதிகள் தாங்களும் முதிர்ச்சி அடையாமல், ஜனங்களையும் முதிர்ச்சி அடைய விடாமல் தடையாகவே இருந்து கொண்டிருக்கிறார்கள்.

இர்விங் வாலஸ் எழுதிய ஒரு கதை, ஏழு நிமிடங்கள்! 1969 இல் வெளியானது. இந்தப்பதிவில் விவாதத்துக்கு உட்படுத்துகிற மாதிரித்தான் ஏன் எதற்காகத் தடை செய்யவேண்டும் என்ற கேள்விகளை வைத்து ஒரு கோர்ட் ரூம் டிராமாவாக அதன் கதையும் விரிகிறது.

இங்கே அந்தப்புத்தகத்தைப் பற்றிக் கொஞ்சம் கூடுதலாகத் தெரிந்து கொள்ளலாம்.

http://suvasikkapporenga.blogspot.com/2010/10/seven-minutes-by-irving-wallace.html

வவ்வால் said...

//எனக்குத் தோன்றும், ஒரே தீர்வு தணிக்கை வாரியம் (Censor Board) போன்ற சட்டபூர்வமான அமைப்பினை ஒன்றினை ஏற்ப்படுத்தி, இவ்விதமான தாக்குதல்களுக்கு தங்கள் படைப்பு உள்ளாகலாம் என்று அச்சப்படும் படைப்பாளிகள் தங்களது படைப்பினை அந்த அமைப்பிற்கு சமர்ப்பிக்க கோரலாம். அறிஞர்கள் அடங்கிய அந்த அமைப்பின் சான்றிதழைப் பெற்றால், மேற்கூறிய இந்திய தண்டனை சட்டபிரிவுகளின் கீழ் தாக்கல் செய்யப்படும் வழக்குகளில் இருந்து அந்த படைப்பிற்கு விலக்கு (Immunity) அளிக்கலாம்.//

இந்த எண்ணமே மிகவும் பிற்ப்போக்கானது,திரைப்படங்கள் தணிக்கை செய்து வந்த பின்னரும் இப்படி சொல்லி வழக்கு போடப்படவில்லையா, தடை செய்யப்படவில்லையா, சென்சார் ஆனதால் மட்டும் இம்யூனிட்ட்ய் தர சட்டத்தில் இடம் இருக்கா?
உ.ம்: ஆராக்‌ஷன் என்ன சென்சார் செய்யாமலா வந்தது.

இப்போ ஒன்று இர்ண்டு நூல்கள் தான் பாதிக்கப்படுகிறது,, சென்சார் வந்தால் எல்லாமே பாதிக்கப்படும்.இன்னும் வெள்ளைக்காரன் காலத்தில் இருக்கிங்க,அப்போ தான் எல்லாத்துக்கும் சென்சார் போட்டாங்க.

மேலும் ஒரு நூலீன் மீதான வழக்கு என்பது விற்பனைக்கு உதவும்.அதற்காகவே கூட சிலர் சர்ச்சையாக எழுதுகிறார்கள்.

கிருஷ்ண மூர்த்தி S said...

//ஒரே தீர்வு தணிக்கை வாரியம் (Censor Board) போன்ற சட்டபூர்வமான அமைப்பினை ஒன்றினை ஏற்படுத்தி..//

இப்போதுள்ள சூழலில் இந்த மாதிரி அமைப்பு ஒன்றை ஏற்படுத்துவதே பெரும் பிரச்சினைக்கு வழி வகுத்துவிடும் அபாயம் இருக்கிறதே!

Anonymous said...

minus vote for miss leading title

Victor Suresh said...

நீங்கள் பரிந்துரைக்கும் தீர்வு சரியாகப் படவில்லை. சென்சார் போர்டு என்பதெல்லாம் கலையின் வெளிப்பாட்டிற்கு ஆகாதது. உண்மையான எந்தக் கலைஞனும் இந்தத் தீர்வுக்கு ஒத்துக் கொள்ள மாட்டான்.

PRABHU RAJADURAI said...

நான் குறிப்பிடும் அமைப்பு தணிக்கை வாரியம் போல அனைத்து புத்தகங்களையும் தணிக்கை செய்யும் அமைப்பு அல்ல. தங்களது புத்தகத்தில் கூறப்பட்ட விடயத்தை வைத்து தன் மீது அநாவசிய குற்ற வழக்கு தொடரப்படுமோ என்று அஞ்சும் எழுத்தாளர்கள் மட்டுமே அந்த அமைப்பின் சான்றிதழை பெறும் வகையில் அத்தகைய வம்பு வழக்குகளில் இருந்து தங்களை காத்துக் கொள்வதற்கான வழிமுறை மட்டுமே!

prasanna said...

Censorship curtails the freedom of the Author/Creator in the pretext of the popular culture's religious or moral standpoint.

I believe a precautionary word/warning about the content of the material should be made available to the viewer/reader before the screening/content - as s/he is aware of it.

I personally believe in a evolved Democracy diversified perspectives of an incident should be allowed. It becomes an issue only when a particular viewpoint of the incident is forced on viewers/readers. That becomes manipulative in nature and that is what powerful media moguls do in a manipulative Democracies!

In a deeper sense, Democracy is a fictional word used frequently in non-fictional context. We just have to put up with it.

Bruno said...

//நான் குறிப்பிடும் அமைப்பு தணிக்கை வாரியம் போல அனைத்து புத்தகங்களையும் தணிக்கை செய்யும் அமைப்பு அல்ல. தங்களது புத்தகத்தில் கூறப்பட்ட விடயத்தை வைத்து தன் மீது அநாவசிய குற்ற வழக்கு தொடரப்படுமோ என்று அஞ்சும் எழுத்தாளர்கள் மட்டுமே அந்த அமைப்பின் சான்றிதழை பெறும் வகையில் அத்தகைய வம்பு வழக்குகளில் இருந்து தங்களை காத்துக் கொள்வதற்கான வழிமுறை மட்டுமே!//

Good idea !!!

நெல்லை கபே said...

முழு சுதந்திரம் என்பதும் ஆபத்தே...நான் உங்கள் கருத்தை வழிமொழிகிறேன்.
என் வலையில்'
மாயன் : அகமும் புறமும்: திருச்சி துவாரகையில் இருந்து ரொம்ப தூரமோ?
மாயன் : அகமும் புறமும்: ஒஸ்தி