1975ம் ஆண்டு என்று நினைக்கிறேன். ஐந்தாம் வகுப்பு வரை புறநகர் ஆரம்ப பள்ளியொன்றில் படித்து விட்டு பாளையங்கோட்டையில் ஆறாம் வகுப்பில் சேர்ந்திருந்தேன். எனது அண்ணனும், மாமாவும் இ.எஸ்.எல்.ஸி. எனப்படும் எட்டாம் வகுப்பு முடித்து ஒன்பதாம் வகுப்பில் இருந்தனர். உயர்நிலைப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் இருந்தாலும், ஒன்பதாம் வகுப்பிலிருந்துதான் சீனியர் மாணவர் என்ற கெத்தும், உண்மையிலேயே ‘ஹைஸ்கூல்’ மாணவன் என்ற ஹோதாவும் வரும்!
எனது அண்ணனும், மாமாவும் அவர்கள் வகுப்பு மாணவர்களின் பராக்கிரமங்களைப் பற்றி எங்களிடம் கூறுவதை வியப்புடன் கேட்டுக் கொண்டிருப்போம். முக்கியமாக, ஜான் பாண்டியன் என்ற மாணவனைப் பற்றிதான் அதிகம் கதைகள் இருக்கும். எவ்வளவு தூரம் உண்மையோ தெரியாது, ஆனால் சொல்லப்படும் விடயங்கள் சுவராசியமானவை.
‘அவன் ஆறடி உயரம் இருப்பான். ஸ்டிரைக் அப்ப எல்லாம் மாணவர்கள் ஊர்வலம் போனால், ஜான் பாண்டியன் தலை மட்டும் தனியே வெளியே தெரியும்’ என்பதில் ஆரம்பித்து ‘மூன்று தடவை ஒன்பதாம் வகுப்பில் மூன்று தடவை பெயில் ஆனதால் அட்டண்டன்ஸ் ரிஜிஸ்டரில் இருந்து அவன் பெயரை எடுத்து விட்டார்கள். ஆனாலும், வகுப்பில் வந்து உட்கார்ந்திருப்பான். வாத்தியார் ஏதும் கேட்க மாட்டார். எப்ப வேண்டும்னாலும் எந்திரிச்சு வெளியே போவான். எந்த கிளாஸில் கூட போய் உட்கார்ந்து கொள்வான்’ என்பது வரை இருக்கும்.
பள்ளிக்கூடத்தை ஒட்டியிருக்கும் மேல்நிலை தண்ணீர் தொட்டி வளாகம் ஒன்றில் வீட்டிலிருந்து சாப்பாடு கொண்டு வரும் மாணவர்கள் அமர்ந்து உணவருந்துவது வழக்கும். அப்படியான பொழுது ஒன்றில் திடீரென சில மாணவர்களுக்குள் அடிதடி! ‘ஜான் பாண்டியன், ஜான் பாண்டியன்’ என்று சிலர் கூவினார்கள். உயரமான அந்த மாணவரை பல மாணவர்கள் சுற்றி வளைத்திருந்தார்கள். அவ்வளவுதான் என்று நினைப்பதற்குள், தனது நீண்ட விரல்களில் வளர்த்திருந்த நகங்களால் ஆக்ரோஷமாக சுற்றிய அனைவரையும் தாக்கி, ஏதோ திரைப்பட சண்டை போல அடித்து துவம்சம் செய்து கொண்டிருந்தார்.
பின்னர் கால ஓட்டத்தில் ஜான் பாண்டியனை மறந்து விட்டாலும், பத்து ஆண்டுகள் கழித்து அதே நபர் தலைமையில் தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் திருநெல்வேலியில் ஊர்வலம் நடத்தியதாகவும், ஆர்.எம்.வீரப்பன் தேர்தலில் வெற்றி பெற பணியாற்றியதாகவும் ஊடகங்கள் வாயிலாக தெரிந்து கொள்ள நேரிட்டது.
அண்ணன் வகுப்பு மாணவரான அதே ஜான் பாண்டியன் போல என்று நினனத்துக் கொண்டேன்!
***
ஜான் பாண்டியன் பிறந்து வளர்ந்தது என்னவோ, கிறிஸ்தவ மதத்தில் என்றாலும் கூட பின்னர் இந்துவாக மதம் மாறி விட்டார். அதன் பொருட்டே அவரால், தாழ்த்தப்பட்டவர்களுக்கான தனித்தொகுதியில் போட்டியிட முடிகிறது.
இணைய விவாதங்களில் பரமக்குடி துப்பாக்கி சூடு விவாதங்களில் பங்கெடுக்கும் இந்துத்துவாவாதிள், ஜான் பாண்டியன் என்ற பெயருக்கும், கிறிஸ்தவ மிச‘நரி’களுக்கும் முடிச்சு போடுகிறார்கள். ஜான் பாண்டியன் தான் மட்டுமல்லாமல், பல கிறிஸ்தவ தாழ்த்தப்பட்டவர்கள் இந்துக்களாக மதம் மாறுவதில் உறுதுணையாக இருந்துள்ளார். கிறிஸ்தவ தாழ்த்தப்பட்டவர்களை சில சடங்குகளுக்குட்படுத்திய பின்னர் அவர்கள் இந்துவாக மாறிவிட்டதாக ஆரியசமாஜத்திடம் ஒரு சான்றிதழும் பின்னர் அவ்வாறு மதம் மாறியவரை தங்களது ஜாதிக்குள் இணணத்துக்கொண்டதாக ஜான்பாண்டியன் ஒரு சான்றிதழும் தருவார்கள். அவ்வளவுதான், சம்பந்தப்பட்டவர் அட்டவணை சாதியினருக்கான சலுகைகளைப் பெற தகுதி பெற்றவராகிவிடுவார்.
இவ்வாறு ஜான்பாண்டியன் அளித்த சான்றிதழை நான் பார்த்திருக்கிறேன். பலருக்கும் கொடுத்திருக்கலாம். சான்றிதழ் வாங்கிய ஒன்றிரண்டு நபர்கள் இ.ஆ.பணியில் கூட இருக்கலாம்!
கிறிஸ்தவர்கள் பலர் இந்துவாக மாற காரணமாக இருந்த ஜான்பாண்டியனை நிலமை புரியாமல் இந்துத்வாவாதிகள் மிச‘நரி’களோடு முடிச்சு போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
***
இந்தக் குழப்பம் ஜான் பாண்டியன் என்ற பெயருக்கு மட்டுமல்ல
தற்கால இளைஞர்களிடம் வரலாற்று அறிவு குறைவாக இருப்பதாக ஆதங்கப்படும் ‘மானுடவிடுதலை’ என்ற வலைப்பதிவில் ‘உத்தம்சிங் ஜாலியன்வாலாபாக் படுகொலை நடத்திய ஜெனரல் டயரை 20 ஆண்டுகள் கழித்து கொன்றதாக’ ஒரு வரலாற்றுப் பிழை காணப்படுகிறது. உத்தம்சிங் கொன்றது ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்த பொழுதில் பஞ்சாப் ஆளுனராகஇருந்த மைக்கேல் ஓ’டாயரை (Michael O’Dwyer) ஜெனரல் டயரை (General Dyer) அல்ல!
உண்மையில் படுகொலை செய்யப்பட்டவரின் பெயரை எப்படி உச்சரிப்பது என்று எனக்கும் தெரியாது...
***
பாளையங்கோட்டையில் எனது சீனியரின் பெயர் ஜான் பொன்னையா. அவருக்கும் ஜான் பாண்டியனுக்கும் உள்ள மற்றொரு ஒற்றுமை உயரம். அவரும் ஆறு அடிக்கு மேலே இருப்பார். சென்னையில் உள்ள ஒரு நண்பரைப் பார்க்க சென்றிருந்தாராம். அழைப்பானை அழுத்தியதும் வந்து கதவை திறந்த நண்பரின் மகனிடன், தன்னுடைய பெயரைக் கூறி இன்னார் வந்திருப்பாத சிறுவனின் அப்பாவிடம் கூறச்சொன்னாராம்.
எனது சீனியரை ஒருமுறை ஏற இறங்க பார்த்த சிறுவன் தன்னுடைய அப்பாவிடம் சென்று ‘Dad, a ‘TALL’ man calling himself ‘JOHN’’ ponniah has come to see you’ என்றானாம்.
மதுரை
23/09/11