இன்று தமிழகத்தின் முக்கிய செய்திகளில் ஒன்றாக அலசப்படும் சல்லிக்கட்டு வழக்கு, கடந்த 2006ம் ஆண்டு மாட்டு வண்டிப் பந்தயத்திற்கு (Rekla Race) அனுமதி கிடையாது என்று காவல்துறை வெளியிட்ட ஒரு சுற்றறிக்கையில் தொடங்கியது.
தொண்ணூறுகளில் கோவாவில், சூதாட்டத்திற்காக மாடுகளை மோதவிட்டு நடைபெறும் காளை சண்டையினை (bull fight) எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அதனை தடை செய்து மும்பை உயர்நீதிமன்றத்தின் கோவா கிளை உத்தரவிட்டிருந்ததை, சுற்றறிக்கைக்கு காரணமாக கூறப்பட்டிருந்தது.
இதனால் தமது கோவில் குடமுழுக்கு விழாவில் நடத்த உத்தேசித்திருந்த மாட்டு வண்டி பந்தயத்திற்கு அனுமதி வேண்டி, ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்த கரிசல்குளம் பஞ்சாயத்து தலைவர் நமது உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையினை அணுகினார். வழக்கினை விசாரித்த நீதிபதி.பானுமதி விலங்குகள் பால் அன்பு கொண்டவர். விலங்குகள் குறித்தான சட்டங்களைப் பொறுத்து மேனகா காந்தி அவர்கள் தொகுத்துள்ள புத்தகம் ஒன்றினை துணைக்கு வைத்துக் கொண்டு மாட்டு வண்டிப் பந்தயம் என்ன சல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு மற்றும் விலங்குகளை துன்புறுத்தும் அனைத்து வகையான போட்டிகளையும் அரசு தடை செய்ய மார்ச்’2006ல் உத்தரவிட்டார்.
ஆனால், இந்த வழக்கில் நீதிபதி தான் வழங்கும் தீர்ப்பானது ஏறக்குறைய பொதுநல வழக்கினை ஒத்திருப்பதாக உணரவில்லை. அவ்வாறு உணர்ந்திருந்தால், வழக்கினை அதன் முக்கியத்துவம் கருதி ஒன்றுக்கும் மேற்ப்பட்ட நீதிபதிகள் விசாரிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதியினை வேண்டியிருப்பார். மேலும், இதே போன்றதொரு வழக்கில் மற்றொரு நீதிபதி அனுமதி அளித்து உத்தரவிட்டதை நீதிபதி அறிந்திருந்தும், அதற்கு எதிர்மாறான தீர்ப்பினை அளித்தது சட்டப்படி சரியல்ல. அவ்வாறான நிலைமையிலும் அவர் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட நீதிபதிகளால் வழக்கு விசாரிக்கப்பட வேண்டும் என்றே கூறியிருக்க வேண்டும்.
முக்கியமாக, அரசு தரப்பு எவ்வித வாதத்தினையும் வைக்காத நிலையிலும் மனுதார் தரப்பிலும் பெரிய அளவில் எவ்வித வாதமும் புரியப்படாத நிலையிலும், வழக்கின் எல்லைகளை மீறி, நீதிபதி ஏறக்குறைய தனது சொந்த எண்ணங்களை தீர்ப்பாக எழுதியது எவ்வளவு தூரம் சரியென்று தெரியவில்லை.
‘
a judge is entitled to have his own opinion on an issue before him but the same will become a judgment only if the same is placed before the court and tested by an adverse opinion’ என்று பின்னர் இரு நீதிபதிகள் முன் நடந்த வாதத்தில், இதனை மனதில் வைத்தே நான் குறிப்பிட்டேன்.
***
2006 டிசம்பர் வரை தூங்கிய பிரச்னை, பொங்கல் நெருங்கவும் விழித்தது. சல்லிக்கட்டு நடத்தும் பலரும் அனுமதி வேண்டி பொதுநல வழக்காக இரு நீதிபதிகள் முன்பு வழக்கு தாக்கல் செய்ய, அலங்காநல்லூருக்காக நானும் ஒரு வழக்கு தாக்கல் செய்தேன். இதே வேளையில் சம்பந்தப்பட்ட மக்களின் நாடித்துடிப்பை உணர்ந்த அரசு, சல்லிக்கட்டு நடத்த வேண்டி தானும் உதவ முன் வந்தது. இந்தக் கால கட்டம் வரை சல்லிக்கட்டு என்பது, நீதிபதிகள், வழக்குரைஞர்கள் அனைவராலும் எதிர்மறை உணர்விலேயே அணுகப்பட்டு, சல்லிக்கட்டினை நீதிமன்றத்தினால் அனுமதிக்கவே முடியாது எண்ணமே இருந்தது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல!
ஆயினும் இவ்வித பின்வாங்கும் (defensive) எண்ணத்தினை கைவிட்டு முன்னேறும் (offensive) எண்ணத்தினை என்னுள் விதைத்தது, சுமார் இருபது வருடங்களுக்கு முன்னர் எனது நண்பரின் ஊரில் நான் பார்த்த சல்லிக்கட்டும், ராஜநாராயணனின் ‘கோபல்ல கிராமம்’ நாவலும்.
***முதன் முதலில் சல்லிக்கட்டினை பார்த்த எனக்கு ‘இவ்வளவுதானா’ என்றிந்தது. சல்லிக்கட்டானது திரைப்படங்களாலும், ஊடகங்களாலும் காட்டப்படும் வகையில் மாட்டின் கொம்பினைப் பிடித்து அதனை சாய்ப்பதல்ல...யதார்த்தமாக திரைப்படம் எடுப்பதாக கூறப்படும் கமல்ஹாசனின் விருமாண்டி படத்திலேயே அவர் மாட்டினை அடக்கும் காட்சி நகைப்பிற்குரியதாக இருக்கும்.
மாறாக திட்டி வாசலில் இருந்து அவிழ்த்து விடப்படும் மாடானது சுமார் 30 முதல் 50 அடி அகலமுள்ள மைதானம் வழியாக ஓட வேண்டும். அவ்வாறு ஓடும் மாட்டின் கொம்பினை ஒரு கையாலும், திமிலை மற்றொரு கையாலும் அணைத்துப் பிடித்தவாறு மாடுபிடி வீரர் குறிப்பிட்ட தூரம் (சுமார் 50 அடி) ஓட வேண்டும். இதனை அணைவது என்கிறார்கள்.
பொதுவாக மாட்டின் கொம்பில் பரிசினை கட்டுவதில்லை. திட்டி வாசலிலேயே அறிவிப்பாளரின் கையில் மாட்டிற்கான பரிசானது கொடுக்கப்படும். மாட்டினை அணைந்த வீரர் திரும்பி ஓடி வந்து பரிசினை பெற்றுக் கொள்கிறார். பல சமயங்கள் மாட்டினை அணைய முடியாது. அப்பொழுது மாடு வென்றதாக அறிவிக்கப்பட்டு பரிசு மாட்டின் உரிமையாளரிடம் கொடுக்கப்படும்.
சில மாடுகள் ஓடாமல், சடக்கென திரும்பி ‘வா ஒரு கை பார்க்கலாம்’ என்றவாறு திரும்பி நிற்கும். அப்பொழுது மட்டுமே விளையாட்டு சூடு பிடிக்கும்.
இந்த சமயத்தில்தான் ‘கோபல்ல கிராமம்’ நாவலில் ஒரு இடத்தில் தங்களது கிராமத்தினை ஏற்ப்படுத்திய பின்னர், நாயக்கர்கள் காடுகளில் திரியும் மாடுகளை பிடித்து வர வாலிபர்களை அனுப்புவார்கள் என்று படித்தது நினைவுக்கு வந்தது. ஆக, அணைவது என்பது மாட்டினை பிடித்து தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதுதானே தவிர காளையோடு சண்டையிடுவது அல்ல என்று அனுமானித்தேன்
***இதற்குப் பின்னர் வழக்கினை எடுத்துச் செல்வது சிரமமாக இருக்கவில்லை. விரைவில் பொங்கல் வருவதால், வழக்கினை இடைக்கால உத்தரவிற்காக நீதிமன்றம் எடுத்துக் கொண்டது. அரசும் நிலைமையின் தீவிரம் கருதி விளக்கமாக, எங்களது மனுவினை ஒட்டி மேலும் பல தகவல்களுடன் தனது எதிர்மனுவினை தாக்கல் செய்திருந்தது.
எங்களது வழக்குகளோடு, சல்லிக்கட்டினை படம் வரையப் போய் மாட்டினால் குத்தப்பட்டு இறந்து போன ஒரு ஒவியரின் தந்தை இதனை தடை செய்ய வேண்டும் என்று தாக்கல் செய்த வழக்கும் எடுத்துக் கொள்ளப்பட்டது. திடீரென, விலங்குகள் நல வாரியம் (Animal Welfare Board) வழக்கில் தன்னை இணைத்துக் கொண்டு, மடிக்கணணி, புகைப்படங்கள், பத்திரிக்கைச் செய்திகள் முதலியவற்றுடன் சல்லிக்கட்டினை தடை செய்ய வேண்டும் என்று கோரியது. அவற்றை பரிசீலிக்கும் எவருக்கும் ‘ஆஹா இத்தனை ரத்தம் சிந்துதலா’ என்று இருக்கும்.
***விலங்குகள் நல வாரியத்தின் வாதம், ‘ சல்லிக்கட்டிற்காக மாடுகள் சாராயம் கொடுக்கப்பட்டும், மிளகாய் பொடி தூவப்பட்டும், வால்கள் முறுக்கப்பட்டும் வெறியேற்றப்படுகின்றன. திட்டிவாசலில் இருந்து கிளம்பும் மாடும் உதைக்கப்பட்டும் அடிக்கப்பட்டும், வால்கள் பிடித்து இழுக்கப்பட்டும் துன்புறுத்தப்படுகின்றன. எனவே, விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் (The Prevention of Cruelty to Animals Act’1960) பிரிவு 11 (a) மீறப்படுகிறது என்பதாகும். அந்தப் பிரிவு கூறுவதாவது...
‘
If any person beats, kicks, over-rides, over-drives, over-loads, tortures or otherwise treats any animal so as to subject it to unnecessary pain or suffering or causes or being the owner permits any animals to be so treated........he shall be punishable’
***எங்களது தரப்பு வாதம் அரசின் வாதத்தை ஒட்டியே அமைந்திருந்தது. எத்தனையோ நூற்றாண்டுகளாக எங்கள் கலாச்சாராத்தோடு ஒட்டியுள்ள இந்தப் போட்டியினை முழுவதுமாக தடை செய்வது தேவையற்றது. ஆதிகாலத்தில் மாடுகளை தன்னுடன் இசைந்து வாழும் நோக்கத்துடன், அதனை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் திறமையினை வெளிப்படுத்தும் ஒரு போட்டியானது, இன்று மனிதர்களை காவு வாங்கும் ஒரு வருடாந்திர நிகழ்ச்சியாக போனது உண்மைதான். ஆனால் அரசு மட்டும் மனது வைத்தால், தகுந்த கட்டமைப்பு வசதிகளை (infrastructure facility) ஏற்ப்படுத்தி தர முன் வந்தால் தமிழர்களின் நாகரீகத்தினையும், கலாச்சாரத்தினையும் பறைசாற்றும் ஒரு நிகழ்ச்சியாக உலகின் முன் வைக்க முடியும்.
‘பலரும் நினைப்பது போல சல்லிக்கட்டில் உயிரிழப்பவர்கள், பெரும்பாலும் பங்குபெரும் வீரர்கள் அல்ல. வீரர்கள் மாடுகளோடு பழகி தகுந்த பயிற்சி பெற்றவர்கள். மாட்டின் கொம்பிலிருந்து தப்பிக்கும் லாவகம் அறிந்தவர்கள். போட்டி நடைபெறும் இடத்திற்கும் பார்வையாளர்களுக்கும் இடைவெளி ஏதும் கிடையாது என்பதால் பார்வையாளர்களே பெரும்பாலும் குத்தப்படுகிறார்கள். இவ்வாறாக மைதானத்திற்குள் குவிபவர்கள், ஜாலிக்காக சரக்கடித்து வரும் கிராமத்து இளைஞர்கள். இவர்களே பய உணர்வு ஏதும் இன்று மாடுகளின் மீது விழுபவர்கள். இவர்களை விலக்கி, மாடுபிடி வீரர்களுக்கு தகுந்த மைதானத்தினை ஏற்ப்படுத்திக் கொடுத்தால் உயிரிழப்புகளை தவிர்ப்பது இயலும்’
அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட உயர்நீதிமன்றம் 2007 பொங்கலை ஒட்டி சல்லிக்கட்டு நடத்த அனுமதி கொடுத்தது. எங்களது வாதத்தினை ஒட்டி பார்வையாளர்களுக்கு தடுப்புச் சுவர் (barricade) கட்டப்பட்டது. இதனால் கடந்தமுறை அலங்காநல்லூரில் உயிரிழப்பு ஏதும் இல்லை. போட்டியாளர்களுக்கு தனி உடை வழங்கப்பட்டது. ஆயினும், இதுவும் போதாது என்பது எனது எண்ணம். குறிப்பிட்ட எண்ணிக்கையில் முறை வைத்து போட்டியாளர்களை அனுமதிக்கலாம். ஏனெனில் அதிகமாக போட்டியாளர்கள் இருப்பதும் குழப்பம் விளைவிக்கிறது.
***எங்களது முக்கியமான மற்றொரு வாதம், ‘சல்லிக்கட்டு அதன் உண்மையான வடிவில் நடத்தப்பட்டால், உலகில் விலங்குகள் சம்பந்தப்படுத்தி மனிதன் நடத்தும் அனைத்து போட்டிகளிலும் நாகரீகமிக்கது’ என்பதாகும்.
‘குறிப்பாக, காளைகள் சம்பந்தப்படுத்தி நடைபெறும் அனைத்து போட்டிகளிலும் காளைகள் கொல்லப்படுகின்றன அல்லது காயப்படுத்தப்படுகின்றன. ஸ்பெயினில் மனிதர்களை குறுகலான சந்துகள் வழியாக காளைகள் துரத்தும் போட்டிகளிலேயே சிமிண்ட் தரையில் ஓடுவதால் காளைகள் விழுந்து கால்களை முறித்துக் கொள்கின்றன.
ஆனால், சல்லிக்கட்டின் இன்றைய நிலையிலேயே காளைகளுக்கு காயம்படுவதில்லை. காளைகளுக்கு சாராயம் கொடுப்பதும், துன்புறுத்தி தயார்ப்படுத்துவதும் மாடுகளை தகுந்த மருத்துவரின் சோதனைகளுக்கு உட்படுத்துவதன் மூலம் தடுக்க முடியும். குதிரைப் போட்டிகளில், குதிரைகளுக்கு ஸ்டெராய்ட் கொடுக்கப்பட்ட நிகழ்ச்சியும் நடந்ததே!
மற்றபடி போட்டியாளர்கள் மட்டுமே மைதானத்தில் அனுமதிக்கப்படுகையில் மற்ற அடித்தல், உதைத்தல் மாட்டின் மீது கும்பலாக பாய்ந்து அமுக்குதல் அனைத்தையும் தடுப்பது சுலபம். விதிகளை மீறி மாட்டினை பிடிக்கும் வீரர்களை வெளியேற்றலாம்.
மாட்டினை அணைவதும், விலங்குகளை துன்புறுத்துதல் என்று கூறமுடியுமா? சட்டமே தேவையற்ற வலி என்றுதானே கூறுகிறது.’.
இதற்கு பதிலளித்த விலங்குகள் நல வாரிய வழக்குரைஞர், ‘துன்புறுத்துதல் (cruelty) என்பது ஒரு விலங்கானது தனது இயற்கையான சூழலில் செய்யாத ஒரு செயலை செய்ய வைப்பது’ என்றார். போனவாரம் நான் சந்தித்த உச்ச நீதிமன்ற வழக்குரைஞர்களும் ‘எந்த மாடு தன்னை இவ்வாறு திட்டிவாசலில் இருந்து ஓட வைப்பதை விரும்பும்?’ என்றார்.
அன்று நான் ‘எந்த நாய் தன்னை ரிப்பன் கட்டி அலங்கரிக்க விரும்புகிறது. எந்த குதிரை தன் மீது ஒரு மனிதன் அமர்ந்திருக்க ஓட விரும்புகிறது. ஏன், The Performing Animals (Registration) Rules’2000 பந்தயத்தில் ஒரு குதிரையினை எட்டு முறை அடிக்கலாம் (whip) என்று அனுமதிக்கிறதே, அது துன்புறுத்துதல் இல்லையா? விலங்கு நல வாரியம் வேண்டுமானால் நகரங்களுக்கு சென்று குதிரைப் பந்தயம், நாய்க்காட்சி போன்றவற்றை நிறுத்தட்டுமே பார்க்கலாம்’ என்றேன்.
வருந்த வைத்த ஒரு விஷயம், விலங்கு நல வாரிய வழக்குரைஞரிடம் இருந்து உச்ச நீதிமன்றத்தில் எங்களுக்காக வாதாடிய வழக்குரைஞர் வரை, சல்லிக்கட்டில் மத உரிமை அடங்கியுள்ளதை ஒத்துக் கொள்ளவே மாட்டோம் என்பதுதான்.
‘சல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்று கீதையிலும் சொல்லவில்லை, பைபிளிலும் சொல்லவில்லை, குரானிலும் சொல்லவில்லை’ என்று மதுரையில் வாதிடப்பட்டதுதான் வேடிக்கை!
***ஒரு நாள் முழுவதும் வாதங்களை கேட்ட நீதிபதிகள் 2007ம் வருடம் சல்லிக்கட்டினை அனுமதித்து இடைக்கால அனுமதி வழங்கினர். பின்னர் இறுதி விசாரணையிலும் அதே வாதமே புரியப்பட்டது. நீதிபதிகள் சல்லிக்கட்டின் தற்பொழுதைய நிலையில் துன்புறுத்துதல் இருப்பது உண்மைதான் எனினும், இதனை கட்டுப்படுத்த இயலும் என்று கூறி இதற்கான விதிமுறைகளை வகுக்க அரசினை பணித்தது. வழக்கம் போல இதனை கிடப்பில் போட்ட அரசு இன்று.... உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு (review) மனு தாக்கல் செய்து கொண்டு ஒரு அதிசயம் நிகழுமா என்று பார்த்தவாறு இருக்கிறது. தீர்ப்பின்படி அரசு விதிகளை வகுத்திருந்தால், இன்று அலங்காநல்லூரில் சல்லிக்கட்டு நடத்த முடியாத சூழல் ஏற்ப்பட்டிருக்காது.
***
யாரும் எதிர்ப்பார்க்கவில்லை, வாரியம் உச்ச நீதிமன்றம் செல்லும் என! ஆனால், அவர்கள் இப்படி செய்திருக்கக் கூடாது. சம்பந்தப்பட்ட யாரையும் எதிர்மனுதாரர்களாக சேர்க்காமல் அரசினையும், சல்லிகட்டு வேண்டாம் என்று கூறியவரையும் மட்டுமே சேர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஒரு மேல் முறையீடு! அதில் ஒரு எக்ஸ்பார்ட்டி இடைக்கால தடை!!
எனவே வழக்கில் தங்களை இணைத்துக் கொள்ளவே சம்பந்தப்பட்டவர்கள் ஒரு மனு தாக்கல் செய்ய வேண்டி வர, அரசு மட்டுமே தடையை நீக்க மனு செய்ய வேண்டிய நிலை!
சல்லிக்கட்டின் வரலாற்றினை எடுத்து வைக்க யாரும் இன்றி, ‘காட்டுமிராண்டித்தனம்’ என்று தலைமை நீதிபதி கூற என்னுடன் வந்த அலங்காநல்லூர் நண்பர் கொதித்துப் போனார். மீண்டும், இத்தனை நபர்கள் இறந்து போனார்கள் என்ற தகவல் மட்டுமே வைக்கப்பட தடையை நீக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். கவனமாக வளர்த்த மரம் சடாரென வெட்டப்பட்டது போல உணர்ந்தோம்.
இனி, இறுதி விசாரணையில் மட்டுமே, சல்லிக்கட்டினை ஒரு முறையான போட்டியாக மாற்றி, அதன் பாரம்பரியத்தினை காப்பாற்ற இயலும் என்ற வாதத்தினை நீதிபதிகள் புரியும் வண்ணம் வைத்தல் இயலும்.
வேடிக்கை, வழக்கின் முடிவில் திடீரென தலமை நீதிபதி, ‘வேண்டுமானால், மாட்டு வண்டி பந்தயம் நடத்திக் கொள்ளுங்கள்’ என்று கூறி வழக்கில் சம்பந்தமே இல்லாத ரேக்ளா பந்தயத்திற்கு ஒரு வரியில் அனுமதி கொடுத்து விட்டார்.
உண்மையில் ரேக்ளா பந்தயத்தில், மாடு படும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல. அங்கே மேனகா காந்தி தீர்ப்பினைப் பார்த்து பொறுமிக் கொண்டிருக்கிறார்.
ரேக்ளா பந்தயத்தின் முடிவில் மாடுகள் நாக்கு தள்ளிப் போய், மரணத்தை எட்டிப் பார்த்து திரும்புகின்றன. மஞ்சுவிரட்டில், மாடுகளை ஊருக்குள் அவிழ்த்து விட்டு அவற்றை வாலிபர்கள் துரத்துகிறார்கள். துரத்துபவர்கள் களைப்படைந்தால், வேறு குழு தொடர்ந்து துரத்தும். இங்கும் மாடு முழுமையாக களைப்படைந்து, கடுமையான துன்பம் அனுபவிக்கும்...
ஆனால் சல்லிக்கட்டினை திறமையை வெளிப்படுத்தும் ஒரு கிராமப் போட்டியாக உருவாக இயலும் என்பது எனது தனிப்பட்ட கருத்தும் கூட!
மதுரை
14.01.08
விலங்கு ஆர்வலர்களுக்கு மேனகா காந்தியின் பின் செல்லும் ஆபத்து புரியவில்லை. மும்பையில் இருக்கையில் குஜராத்தி அமைப்பு ஒன்றின் விருதினை மேனகா அவர்கள் பெரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரிட்டது. மேனகா தனது பேச்சின் நடுவே, ‘பசுவின் பாலைக் குடிப்பது அதன் இரத்தத்தை அருந்துவது போன்றது. நான் எனது மகனுக்கு இதுவரை பசும் பாலோ, பால் பொருட்களோ கொடுத்ததேயில்லை’ என்றார்
அமுல் மாநிலத்தவர்களுக்கு மயக்கமே வந்து விட்டது!