10.2.07

ஆற்-காட்டார்!

அமைச்சர் வீராசாமி நீதித்துறை மீது வைத்த கடுமையான விமர்சனங்களுக்குப் பின்னே உள்ள காரணம் என்னவாக இருக்கும் என்பதற்கு பல வழக்குரைஞர்கள் கூறும் ஒரு வதந்தி சாத்தியப்படக்கூடிய ஒரு யூகமே என்பதை நான் அறிந்திருந்தாலும், இந்த நிகழ்வினால் ஏற்ப்படக்கூடிய சில நன்மைகளும் உண்டு என்று நான் கருதுகிறேன்.

முக்கியமாக ‘நீதித்துறை விமர்சனங்களுக்கு அப்பாற்ப்பட்டது’ என்ற ஒரு பொதுவான நிலைப்பாட்டினை இந்த தாக்குதல் கட்டுடைத்துள்ளது. உண்மையில் இந்த தாக்குதல் தமிழக நீதித்துறையினையும், வழக்குரைஞர்களின் பொதுவான எண்ணப்பாட்டினையும் ஓரளவு அசைத்துப் பார்த்துள்ளது.

தங்கள் மீதான விமர்சனங்களுக்கு விளக்கம் கூறும் உரிமையோ அல்லது வசதியோ நீதிபதிகளுக்கு இல்லைதான். ஆனால், இவ்வாறான விமர்சனங்களிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளும் (insulate) மன உறுதியினை அவர்கள் பெற வேண்டும்.

மாறாக, நீதிமன்ற அவமதிப்பு என்ற எதிர்தாக்குதல் தொடுப்பது அல்லது சம்பந்தப்பட்ட வழக்கினை வேறொரு நீதிபதிக்கு மாற்றுவது என்ற வழக்கமான தார்மீக ரீதியிலான செயல்கள் மேற்க்கொள்ளப்பட்டால், நீதித்துறையானது, உலகத்தையே சிறு கிராமமாக சுருக்கிய இணைய காலத்தோடு இசையாமல், அறுபதுகளிலேயே உறைந்து கிடக்க வேண்டியதுதான்.

நிர்வாகம் செயலற்றுப் போகும் வேளைகளில், பொது மக்களுக்கு பாதுகாவலனாக நிற்கும் நீதித்துறையின் போக்கு வரவேற்க்கத்தக்கதே...

ஆயினும் அவ்வாறான நீதிப்பரிபாலனத்தில் பொதுக்கருத்து என்பது நீதியினை பாதிக்கும் ஒரு அம்சமாக இருக்கையில், பொதுக்கருத்தின் ஒரு வடிவமான விமர்சனங்கள், ஏன்? அவதூறான தாக்குதல்களையும் எதிர் கொள்ள நீதித்துறை தன்னை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதே போலவே, ‘சீசரின் மனைவி எல்லாவித சந்தேகங்களுக்கும் அப்பாற்ப்பட்டு இருக்க வேண்டும்’ என்ற பழைய கருத்தினை தூக்கிப் பிடித்துக் கொண்டு வழக்கினை வேறு நீதிபதிக்கு மாற்றாமல் தனது மனச்சாட்சிக்கு மட்டுமே பணிந்து வழக்கினை தீர்மானிக்கும் மன உறுதி பெற வேண்டும்.

தனது மனச்சாட்சிக்கு மட்டுமே பணிந்து நடந்த பல நீதிபதிகள் போதுமான தகுதியிருந்தும் உச்ச நீதிமன்றத்திற்கு செல்லவில்லை! ஆயினும் இந்தியாவின் சிறந்த நீதிபதிகள் என்று பட்டியலிட்டால் அதில் அவர்களுக்கு முக்கியமான இடம் உண்டு என்ற திருப்தி போதாதா!

***
சமீபத்திய பேட்டி ஒன்றில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி திரு கே.ஜி.பாலகிருஷ்ணன் ‘சுயமரியாதை உள்ள எந்த நீதிபதியும் தனது சொத்துக் கணக்கினை காட்ட முன் வரமாட்டார்’ என்று கூறியுள்ளார். இதைத்தான் ‘பத்மாசுரனுக்கு வரம் கொடுத்த சிவன் போல சிலர் நெளிய வேண்டியிருக்கும்’ என்று ‘வேட்பாளர் தகுதி, வேடிக்கைக்காகவா?’ என்ற கட்டுரையின் இறுதி வரியாக நான் குறிப்பிட்டேன்.