Showing posts with label religion. Show all posts
Showing posts with label religion. Show all posts

20.3.08

புனித வெள்ளியும், மூன்று மணி நேர பாடுகளும்!


நான் சிறுவனாயிருக்கையில், சலூனில் முடி வெட்டிக் கொள்வதை விட அச்சம் தரும் சடங்கு ஒன்று உண்டென்றால், அது புனித வெள்ளியன்று கோவிலுக்கு செல்வதுதான்!

கோடைக்காலம் தொடங்கியிருக்கும் மத்தியான வெயிலில் தொடர்ந்து மூன்று மணி நேரம் கோவிலுக்குள் உட்கார்ந்திருப்பது...இல்லை, உட்கார்ந்து, எழுந்து, பின் முட்டிக்காலிட்டு மீண்டும் உட்கார்ந்து, எழுந்து, முட்டிக்காலிட்டு என்று வறுத்து எடுக்கப்படுவது கொடுமை!

அதுவும் எங்கள் கோவில் உறுப்பினர்கள் பக்தியில் சிறந்தவர்கள், உடல் முழுவதும் வியர்த்துக் கொட்டினாலும் தொடர்ந்து ஜெபம் செய்வதில் சளைக்காதவர்கள்.

‘அடப்போங்கப்பா, இயேசுவுக்கே கஷ்டம் ஒரே நாளோடு போயிற்று...எனக்கு வருடா வருடம் இப்படி மூன்று மணிநேரம் இந்தப் பாடா’ என்று மனதிற்குள் நினைப்பதையும் வெளியில் சொல்ல முடியாது.

-oOo-

புனிதவெள்ளியில் கோவிலுக்கு செல்லும் பழக்கம் எப்போது நின்றது என்று நினைவில்லை. கல்லூரிக்கு சென்றதும், கொஞ்சம் கொஞ்சமாக கோவிலுக்கு செல்லும் பழக்கம் நின்று போனதோடு அதுவும் நின்றிருக்கலாம்.

ஆனால், மும்பையிலிருக்கையில் திடீரென ‘புனித வெள்ளிக்கு கோவிலுக்கு வர வேண்டும்’ என்று மனைவி வேண்டியதில், இது என்னடா புதுச்சோதனை என்றிருந்தது. நான் சார்ந்திருந்த புரொட்டஸ்டாண்ட் பிரிவினரைப் போல இல்லாமல், கத்தோலிக்கர்கள் ‘பூசை’யினை சுருக்கமாக முடித்துவிடுவார்கள் என்பதால் அவர்கள் மீது பரிவு இருந்தாலும், புனித வெள்ளி பூசையில் ஆழம் தெரியாமல் காலை விட நான் தயாராக இல்லை.

‘வெள்ளிக்கிழமை மத்தியானம் எல்லாம் ஆகாது. வேண்டுமானால் வியாழக்கிழமை மாலை பூசைக்கு வருகிறேன்’ என்றேன். இரவு நேரம், ஏதோ சினிமாவுக்கு போவது போல ஒரு மணி நேரத்தில் வந்து விடலாம் என்பதால்.

அதுவும் சரிதான் என்று சமரசமானார்கள். ஆனால் வியாழக்கிழமை மாலை எனது நண்பரை பார்க்க வேண்டியிருந்ததால், வெள்ளிக்கிழமை காலை பார்க்கலாம் என்றேன்.

வெள்ளிக்கிழமை காலையும் முடியவில்லை. அதற்காக மத்தியான நேரத்து மூன்று மணி நேர பூசையெல்லாம் வரமுடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டேன். யார் கோவிலுக்குள் மூன்று மணி நேரம் உட்கார்ந்திருப்பது?

ஈஸ்டருக்கு போய்விட்டால் போயிற்று!

ஆனால், கத்தோலிக்கர்களுக்கு கிறிஸ்துமஸ் என்றாலும் சரி, புதுவருடமென்றாலும் சரி., ஈஸ்டரும் ஆகட்டும். நள்ளிரவில் கோவிலுக்கு போனால்தான் திருப்தியாக இருக்கும். அதற்கும் வந்தது ஆப்பு, உச்ச நீதிமன்ற உத்திரவு ஒன்றின் மூலம்.

மும்பையில் தாண்டியா கொண்டாட்டங்கள் இரவு பத்து மணி தாண்டிதான் வேகம் பிடிக்கும். பல இடங்களில் பன்னிரண்டு மணியையும் தாண்டி பத்து நாட்கள் உறக்கத்தை கெடுக்கும். அது குறித்து எழுந்த ஒரு வழக்கில், ‘இரவு பத்து மணிக்கு மேல் பொதுவில் ஒலிபெருக்கியை பயன்படுத்தக் கூடாது’ என்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு கத்தோலிக்க நள்ளிரவு பூசைக்கும் வேட்டு வைத்து விட்டது.

எனவே கிறிஸ்துமஸ், புதுவருட பூசைகள் மும்பை பாந்த்ரா (Bandra) கோவில்கள் முன்னாள் இரவு 8.30க்கு ஆரம்பித்து 9.30க்கெல்லாம் முடித்து விட்டார்கள். சரி, ஈஸ்டருக்கும் பிரச்னை இல்லை என நினைத்தேன்.

-oOo-

ஈஸ்டருக்கு மலாடிலுள்ள (Malad) அக்கா வீட்டுக்கு போவதென்று முடிவாயிற்று. அங்கும் பூசை இரவு 8.30க்குத்தான். போனதுமே அக்கா சாப்பிடுகிறாயா என்று கேட்டாள். உணவின் மணம் என்னை இழுத்தாலும், ‘இன்னும் பசிக்கட்டும், அதுதான் பத்து மணிக்கு வந்து விடலாமே’ என நினைத்து வேண்டாமென்று விட்டேன்.

எனது மனைவியோ, ‘மூணு மணி நேரம் கோவிலுக்குள் உட்கார வேண்டுமா’ என்று வெள்ளிக்கிழமை பூசைக்கு வரவில்லை என்று எனது அம்மாவிடம் புகார் வாசித்துக் கொண்டிருந்தார்கள்.

கோவிலில் பூசை சரியாக 8.30 மணிக்கு சாதாரணமாகத்தான் ஆரம்பித்தது. ஆனால், பாதிரியார் புரட்சிக்காரர் போல, இது என்ன அரசு உத்தரவு போடுவது என்று நினைத்தாரோ இல்லையோ, பேசினார் பேசினார் பேசிக்கொண்டே இருந்தார். எனக்கோ பசி வேறு, கோபம் தலைக்கேறியது. நாற்காலிகளை நெருக்கமாக வேறு போட்டிருந்ததால் அங்கும் இங்கும் அசைய முடியவில்லை.

பின்னரும் பூசையினை இழுத்தடித்தார்கள். கடைசியில் வீட்டுக்கு வருகையில் மணி பன்னிரண்டு. வந்த பின்னர்தான் புரிந்தது. பூசை முடிந்த நேரம் சரியாக 11.30!

‘வெள்ளிக்கிழமை கோவிலில் 3 மணி நேரம் உட்கார்ந்திருப்பதா, என்று கேட்டீர்கள் அல்லவா. அதற்குதான் இன்று 3 மணி நேரம் உட்கார்ந்தீர்கள்’ என்று எனது மனைவி கிண்டல் செய்ய, அக்காவும் நானும் ஒருவரையொருவர் பார்த்து அர்த்தமாக புன்னகைத்துக் கொண்டோம்.

அதன் அர்த்தம் எனது மனைவிக்கு புரியவில்லை.

-oOo-

வெள்ளிக்கிழமை பூசைக்கு கோவிலுக்கு போகும் கட்டாயம், எனக்கு எப்பொழுது நின்றது என்று தெரியவில்லையாயினும் எனது மூத்த அண்ணன் எப்பொழுது நிறுத்தினான் என்று எங்களுக்கு மறக்காது.

அவன் கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்த பின்னர், வீட்டு ஒழுங்குகளிலிருந்து தானாகவே சில சலுகைகளை உருவாக்கிக் கொண்டான். இவ்வாறுதான் புனித வெள்ளிக்கு முன்னர், ‘மூன்று மணி நேரமெல்லாம் என்னால் கோவிலில் உட்கார முடியாது’ என்று சொல்ல, ‘அப்படியென்றால் வியாழக்கிழமை மாலை சர்வீஸுக்கு போய் வந்து விடுவதாக எங்கள் அம்மாவுடன் சமாதானமாயிற்று.

அக்காவும் கூட போக, தனது நண்பர்களிடம் ‘இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் வந்து விடுவதாக’ அவன் கூறிப்போனது எனக்கு இன்றும் ஞாபகம் இருக்கிறது.

ஆனால், சர்வீஸ் (தியானம்) ஆரம்பிப்பதற்கு சில நிமிடங்கள் இருக்கையில், மிக மிக அரிதாகவே மின் சப்ளை நிறுத்தப்படும் எங்கள் தெர்மல் நகரிலேயே (Thermal Nagar) மின் இணைப்பு துண்டிக்கப்பட கோவிலுக்குள் இருட்டில் விசிறியும் இல்லாமல் வேர்த்துக் கொட்ட உட்கார்ந்திருக்கிறார்கள். கடைசியில் மின் இணைப்பு வந்து கோவில் முடிந்த பொழுது சரியாக ‘மூன்று மணி’ நேரம் கடந்திருந்ததாம்.

வீட்டுக்கு வந்து அக்கா சொல்லிச் சொல்லி சிரித்துக் கொண்டிருந்தார்கள்!

Miracles do happen...sometimes

மதுரை
210308





VELANKANNI CHURCH

12.5.06

இறைக் கடமை?

கடந்த வாரம், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நவராத்திரி கொண்டாட்டங்களை தொலைக்காட்சி செய்தியில் பார்க்க நேரிட்டது. கோயம்புத்தூரில் நடந்ததாக காட்டப்பட்ட ஒரு சடங்கு என்னை, சில மாதங்களுக்கு முன்னர் மும்பையில் பார்த்த இஸ்லாமிய முகரம் ஊர்வலத்தையும் தொடர்ந்து நேரிட்ட ஒரு சுவராசியமான சம்பவத்தையும் ஞாபகப்படுத்தியது.

கோவையில் இது பல வருடங்களாக நடந்து வரும் சடங்கா அல்லது முகரம் ஊர்வலங்களுக்கு பதிலடியாக ஏற்படுத்தப்பட்ட வன்முறையா என்று தெரியவில்லை. அதாவது, இளைஞர்கள் சட்டையில்லாமல் சுற்றி நின்று கொண்டு இரு கைகளிலும் வாள் போன்ற நீண்ட கத்திகளைக் கொண்டு மாற்றி மாற்றி தங்கள் புஜங்களைக் காயப்படுத்திக் கொள்கின்றனர். ஒரே ரத்தக் களறி!

முகரம் ஊர்வலத்திலும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. பெரியவர் முதல் சிறியவர் வரை, முனையில் கூர்மையான கத்தி போன்ற ஆயுதம் இணைக்கப்பட்ட சவுக்கினைக் கொண்டு இரு தோள்கள் மீதாக முதுகிலும் மார்பிலும் மாறி மாறி அடித்துக் கொண்டு சென்றனர். ரத்தம் சிந்தலில் கோவை சடங்கிற்கு சற்றும் பஞ்சமில்லை.

முகரம் ஊர்வலத்தை முதலில் தொலைக்காட்சியில் பார்த்த போது அதிர்ந்து விட்டேன். ஆனால் என் மனதில் ஏற்பட்ட வலி கூட ஓங்கி ஒலிக்கப்பட்ட மந்திரங்களின் தாளத்திற்கேற்ப மார்பிலும் முதுகிலும் அந்த சிறிய சவுக்கினால் அடித்துக் கொண்டே சென்றவர்களிடம் காணப்படவில்லை. அந்த ஊர்வலத்தில் சென்ற சிறுவர்களையும் சேர்த்தே கூறுகிறேன். தாங்கள் செய்யும் காரியத்தில் மிக்க திருப்தியுடையவர்களாகவே அவர்கள் காணப்பட்டனர்.

இதே போல வெவ்வேறு காரணங்களால், ஏறக்குறைய அனைத்து மதங்களும் பக்தர்களின் உடல் வருத்துதலை போற்றி வருகிறது. கிறிஸ்தவர்கள், இயேசு சிலுவையில் அறையப்படும் நாளுக்கு முன்னர் நாற்பது நாட்கள் விரதம் இருந்ததை நினைவு கூறும் வகையில் பல்வேறு வகையில் தங்களை வருத்திக் கொள்கின்றனர். நமது நாட்டில் பலர் மாமிசம் உண்ணுவதில்லை. சிலர் ஒரு வேளை உணவை தியாகம் செய்வர். என் உறவினர் ஒருவரோ மிக எளிதாக, முகசவரம் செய்து கொள்வதில்லை. இதையெல்லாம் மிஞ்சி, பிலிப்பைன்ஸ் நாட்டில் சில இளைஞர்கள் வருடம் தோறும் புனித வெள்ளியன்று தங்களை சிலுவையில் அறைந்து கொள்கின்றனர்!

கடந்த முகரம் அனுசரிப்பின் போது, புனித வெள்ளிக்கு முந்தைய உபவாசக் காலம். எனது மனைவி மாமிசம் சாப்பிடுவதில்லை என்று விரதம் (?) பூண்டிருந்தார்கள். நான் அவர்களைக் கேலி செய்து கொண்டிருந்தேன். பதிலுக்கு என்னை ‘லூசிபர்’ என்று அழைத்தார்கள். லூசிபர் சாத்தான்களுக்கெல்லாம் தலைவன். கடவுளுக்கு எதிரி மற்றும் இந்த உலகத்தின் அட்டூழியங்களுக்கு காரணகர்த்தா. இந்த நேரத்தில்தான் முகரம் ஊர்வலத்தை பார்க்க நேரிட்டது. கொஞ்சம் முதலில் அதிர்ந்தாலும் பின்னர் நான் சொன்னேன், " மதங்கள் சில விஷயங்களை செய்யவும், சிலவற்றை செய்யாகூடாதென்றும் சொல்கின்றன. ஆனால் மதத்தலைவர்கள் எது எளிதோ அதை செய்யத்தூண்டி, எது கடினமோ அதைப் பற்றி எதுவும் கண்டு கொள்வதில்லை".

"அது எப்படி இப்படி ரத்தக்களறியாக்கிக் கொள்வது அவ்வளவு எளிதா?"

"எது கடினம். இப்படியாகப்பட்ட வெறியேறிய நிலையில், கோஷங்களின் தாளத்தில் உடம்பைப் புண்ணாக்கிக் கொள்வதா? அல்லது டிக்கட்டுக்காக வரிசையில் நிற்கையில், நண்பர் ஒருவர் வந்து, டிக்கட் கொடுப்பவரை எனக்குத் தெரியும். என்னுடன் அறைக்குள் வா. டிக்கட் வாங்கித் தருகிறேன் என்று சொல்லும் போது வேண்டாம் வரிசையிலேயே நின்று கொள்கிறேன் என்று சொல்லும் நேர்மையா?"

மதச்சடங்குகளுடன், டிக்கட் வரிசையில் நிற்பதை ஒப்புமைப் படுத்தியது கற்றறிந்த மனிதர்களால் ஆழ்ந்து ராயப்படும் மறை பொருளை எளிமையாக அல்லது மேற்போக்காக பார்க்கும் ஒரு செயல் என்பதை நான் அறிவேன். ஆனால் மதக்கடமையினை நமது தினசரி வாழ்க்கையின் சின்ன சின்ன விஷயங்களில் பார்க்கவே நான் ஆசைப்படுகிறேன். ஆன்மீகவாதிகளின் வியாக்கியானங்களை என்னால் புரிந்து கொள்ள முடிவதில்லை.

எல்லா மதங்களுமே மனிதர்களின் சக்திக்கும் அறிவுக்கும் மீறிய தெய்வ சக்தியை போதிக்கிறது. மானிட வாழ்க்கையின் நிலையாமையினையும்...இந்த ஆத்மாவின் பயணத்தில் இந்த மானிட வாழ்க்கையில் அதன் சஞ்சரிப்பு ஒரு சிறு துளி என்றும் நம்புகின்றன. இந்த உலக வாழ்க்கை ஒரு பரீட்சைக் களம் போலவும் முடிவில்லா நீண்ட ஒரு பயணத்திற்கான முதல் படியாகவும் அல்லது இன்னமும் என்னன்னவோ போலவும் கூறுகின்றன. ஆனால் சாதாரண என்னைப் போல மனிதர்களுக்கு இவையெல்லாம் விளங்க முடியாத புதிர்கள். எனவே அவற்றைப் பற்றி நாங்கள் அதிகம் கவலைப் படுவது இல்லை. மத தலைவர்களின் பேச்சினைக் கேட்டு வெளியே வந்தவுடன், மறந்து போகும் விஷயங்கள் அவை. ஏனென்றால் என்னைப் போன்றவர்களுக்கு தினசரி வாழ்க்கைக் கவலைகள் அநேகம் உண்டு. இந்த உலக பிரச்னைகளிலிருந்து விடுபட ஒரு மாற்றாகவும், அதில் ஒரு சிறு விடிவு வந்து விடாதா? என்ற ஏக்கங்களுடன்தான் கடவுளுக்கும் எங்களுக்குமான தொடர்பு.

உலகின் நிலையாமை பற்றி மதங்கள் பேசினாலும், மதத்தலைவர்கள் இந்த உலக வாழ்க்கையின் மேல் மக்களுக்கு உள்ள பிடிப்பை வைத்துத்தான் காலத்தை ஓட்டுகிறார்கள். அதற்காகத்தான் அவர்கள் டிக்கட் வரிசையினை நாம் மீறுவதை கண்டு கொள்வதில்லை. அசாருத்தீன் ஷூ விளம்பரத்திற்காக தனது கையெழுத்தை காலணியில் பதித்த போது பெரிய குரல்கள் எழுந்தன. அது இஸ்லாத்துக்கு எதிரானது என்று. அதே போல ஷபனா ஆஸ்மி ஒரு திரைப்படத்திற்காக தலையினை மழித்துக் கொண்ட போதும் நிகழ்ந்தது. ஆனால் அதே அசாருத்தீன் லஞ்சம் பெற்றது அல்லது தாவூது இப்ராகிம் போதைப் பொருளை கடத்துவது இஸ்லாத்துக்கு விரோதம் என்ற ஆட்சேபங்கள் எழுந்ததாக எனக்குத் தெரியவில்லை. காலணியில் கையெழுத்துப் போடாமல் இருப்பதோ அல்லது தலையினை மழித்துக் கொள்ளாமல் இருப்பதோ எளிது. ஆணிகளால் வருடத்திற்கு ஒரு நாள் சிலுவையில் அறைந்து கொள்வது கூட எளிதுதான். ஆனால் தினசரி டிக்கட் வரிசையினை மீறும் ஆசையினைத் துறப்பது எளிதல்ல.


இப்படித்தான் ஏதேதோ நினைத்துக் கொண்டே, முகரம் ஊர்வலத்தை பார்த்த இரண்டாவது நாளில் மும்பை புறநகர் ரயிலில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தேன்.

மும்பை புறநகர் ரயில்களின் முதலாம் வகுப்பில் எழுதப்படாத விதி ஒன்று உண்டு. மூன்று நபர்கள் அமரும் இருக்கையில் மூன்று பயணிகள்தான் அமர வேண்டும். அந்தப் பயணி ஒரு சிறுவனாயிருந்தாலும் சரி, நின்று கொண்டிருப்பவர் வயோதிகராயிருந்தாலும் சரி 'மூன்றென்றால் மூன்று பேர்தான்'. இதற்கு எதிர்மாறான மற்றொரு எழுதப்படாத விதி இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் உண்டு. அங்கு மூன்று நபர்கள் அமரும் இருக்கையில் நான்காவது பயணி முழு உரிமையுடன் அமர இடம் கோரலாம், ஏற்கனவே அமர்ந்திருக்கும் பயணிகளின் பின்புறங்கள் இருக்கைக்கு வெளியே பிதுங்கி வழிந்தால் கூட. அன்று ஒரு நண்பருக்காக வேண்டி இரண்டாம் வகுப்பில் பயணித்துக் கொண்டிருந்தேன்.

மூன்று நபர்களுக்கான இருக்கையில் மூன்றாவது பயணியாக நான். மற்ற இருவரும் உறவினர்கள் போல. ஜன்னலோரம் அமர்ந்திருந்தவர், இளைஞர். மடியில் ஏதோ புத்தகத்தை விரித்து வைத்து, அதன் மீது குனிந்தவாறு இருந்தார். நடுவில் இருந்தவர் சற்று வயோதிகர். அடுத்த நிறுத்துமிடத்தில் பலர் ஏற, ஒருவர் எனது அருகே வந்து தான் உட்காருவதற்கு தோதாக சற்றே நகர்ந்து கொள்ளுமாறு கண்களிலேயே வினவினார். நான் லேசக உள்ளிழுக்க, கிடைத்த இரண்டரை இன்ச் இருக்கையில் ஒருவாராக அமர்ந்து கொண்டார்.

நிச்சயமாக அப்படிப்பட்ட நிலையில் ஒருவர் அமர முடியாது. வெகுதூர ரயில்களில் இருக்கை கிடைத்தவுடன் 'அப்பாடா' என்று பற்றிக் கொண்டு அடுத்து படுக்கைக்கு பரிசோதகரிடம் மெல்ல அடி போடுவது போல எனக்கு அடுத்து இருந்தவர்களிடம், கொஞ்சம் நகர்ந்து கொள்ளுமாறு வலது கையினை எனக்கு குறுக்கே நீட்டிச் சொன்னார்.

'இன்னும் எப்படி நகருவது. நாங்கள் மூன்று பேருமே நன்கு தடினமான நபர்கள்" எனக்கு அடுத்து இருந்த வயதானவர் சொல்ல, அதனை ஆமோதித்து அவருக்கு அடுத்து இருந்த இளையவரும் ஏதோ கூறியது போல கேட்டது எனக்கு.

'தடினமான நபர்கள்' என்று என்னையும் அவர் சேர்த்துக் கொண்டது பாராட்டா அல்லது கிண்டலா என்பது அவர் சொன்ன தொனியில் இருந்து தெரியாவிட்டாலும், எனக்கு அது பிடிக்கவில்லை. மேலும் அவர் சொன்னது பொய். என்னைப் பற்றி தெரியாது. அவர்களை தடினமான நபர்கள் என்று என்னால் ஒத்துக் கொள்ள முடியாது.

"கால்களை சேர்த்து வைத்து உட்காருங்கள். இடம் இருக்கும்" நான்காவது நபர் அடுத்த எழுதப்படாத விதியை நீட்டினார். அவர் சொன்னது சரிதான். கால்களை ஆங்கில ‘வி’ போல விரித்து வைத்து உட்காருகையில் நான்கு பயணிகளை அந்த இருக்கையில் சமாளிப்பது சற்று சிரமம். அந்த இருவருமோ கால்களை அகட்டியே வைத்திருந்தனர்.

'இது ஏதடா வம்பு' என நான் சற்று முன்னால் நகர்ந்து அமர, நான்காம் நபர் கிடைத்த இடைவெளியில் இன்னும் சற்று இருக்கைக்கு உள்ளாக தள்ளி உட்கார்ந்து கொண்டார். ஏறக்குறைய அவரது முக்கால்வாசி பின்புறம் இருக்கைக்கு உள்ளே வந்துவிட சற்றே தன்னை ஆசுவாசப் படுத்தியவர், விடவில்லை. புன்னகைத்தவாறே அவர்களைப் பற்றி கிண்டலாக ஏதோ அவர்கள் காதில் விழும்படியே முணுமுணுத்தார். எனக்கு அடுத்து இருந்த வயதானவரும் பதிலுக்கு சொல்ல...இது வரை இந்த விதி மீறல்களை எரிச்சலுடன் பார்த்துக் கொண்டிருந்த எதிர்வரிசை பயணிகளும் நான்காவது நபருக்கு சாதகமாக சேர்ந்து கொண்டனர். இந்த மும்முனைத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட நான் இரு உள்ளங்கைகளிலும் கன்னத்தை தாங்கி குனிந்து தூங்க முயற்சித்தேன். ஆனால் இந்த எதற்குமே கவலைப் படாமல், ஜன்னல் பக்கம் அமர்ந்திருந்த நபரோ, 'என்னமும் சொல்லிக் கொள்ளுங்கள்' என்பது போல இன்னமும் கால்களை அகட்டியே வைத்து அதன் மீதான புத்தகத்தை தாங்கி... தலை குனிந்து கருமமே கண்ணாயிருந்தார்.

இருக்கையின் முன்னால் நகர்ந்து அமர்ந்திருந்த நான், 'அப்படி என்னடா விஷயம், தன்னைச் சுற்றி எழும் சொல்லம்புகளை விடவும் முக்கியமாக என்று சிறிது தலையை திருப்பி எட்டிப் பார்த்தால்.....மனிதர், தனது அகட்டிய கால்களுக்கு நடுவே வைக்கப்பட்ட நோட்டுப் புத்தகத்தில் அக்கறையாக ஒரு சிவப்பு பால் பாயிண்ட் பேனாவால் மும்முரமாக, 'ஸ்ரீராம ஜெயம்' எழுதிக் கொண்டு இருந்தார்.

அந்த நோட்டின் தடிமனைப் பார்க்கையில் அவர் கைவிரல்களை கணிசமான அளவு வருத்திக் கொண்டிருப்பார் என்று தோன்றியது!.

வண்டியின் வியர்வைப் புழுக்க எரிச்சலிலும் ஏனோ நான் எனக்குள் புன்னகைத்தேன்!!

மும்பை
2002