12.5.06

இறைக் கடமை?

கடந்த வாரம், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நவராத்திரி கொண்டாட்டங்களை தொலைக்காட்சி செய்தியில் பார்க்க நேரிட்டது. கோயம்புத்தூரில் நடந்ததாக காட்டப்பட்ட ஒரு சடங்கு என்னை, சில மாதங்களுக்கு முன்னர் மும்பையில் பார்த்த இஸ்லாமிய முகரம் ஊர்வலத்தையும் தொடர்ந்து நேரிட்ட ஒரு சுவராசியமான சம்பவத்தையும் ஞாபகப்படுத்தியது.

கோவையில் இது பல வருடங்களாக நடந்து வரும் சடங்கா அல்லது முகரம் ஊர்வலங்களுக்கு பதிலடியாக ஏற்படுத்தப்பட்ட வன்முறையா என்று தெரியவில்லை. அதாவது, இளைஞர்கள் சட்டையில்லாமல் சுற்றி நின்று கொண்டு இரு கைகளிலும் வாள் போன்ற நீண்ட கத்திகளைக் கொண்டு மாற்றி மாற்றி தங்கள் புஜங்களைக் காயப்படுத்திக் கொள்கின்றனர். ஒரே ரத்தக் களறி!

முகரம் ஊர்வலத்திலும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. பெரியவர் முதல் சிறியவர் வரை, முனையில் கூர்மையான கத்தி போன்ற ஆயுதம் இணைக்கப்பட்ட சவுக்கினைக் கொண்டு இரு தோள்கள் மீதாக முதுகிலும் மார்பிலும் மாறி மாறி அடித்துக் கொண்டு சென்றனர். ரத்தம் சிந்தலில் கோவை சடங்கிற்கு சற்றும் பஞ்சமில்லை.

முகரம் ஊர்வலத்தை முதலில் தொலைக்காட்சியில் பார்த்த போது அதிர்ந்து விட்டேன். ஆனால் என் மனதில் ஏற்பட்ட வலி கூட ஓங்கி ஒலிக்கப்பட்ட மந்திரங்களின் தாளத்திற்கேற்ப மார்பிலும் முதுகிலும் அந்த சிறிய சவுக்கினால் அடித்துக் கொண்டே சென்றவர்களிடம் காணப்படவில்லை. அந்த ஊர்வலத்தில் சென்ற சிறுவர்களையும் சேர்த்தே கூறுகிறேன். தாங்கள் செய்யும் காரியத்தில் மிக்க திருப்தியுடையவர்களாகவே அவர்கள் காணப்பட்டனர்.

இதே போல வெவ்வேறு காரணங்களால், ஏறக்குறைய அனைத்து மதங்களும் பக்தர்களின் உடல் வருத்துதலை போற்றி வருகிறது. கிறிஸ்தவர்கள், இயேசு சிலுவையில் அறையப்படும் நாளுக்கு முன்னர் நாற்பது நாட்கள் விரதம் இருந்ததை நினைவு கூறும் வகையில் பல்வேறு வகையில் தங்களை வருத்திக் கொள்கின்றனர். நமது நாட்டில் பலர் மாமிசம் உண்ணுவதில்லை. சிலர் ஒரு வேளை உணவை தியாகம் செய்வர். என் உறவினர் ஒருவரோ மிக எளிதாக, முகசவரம் செய்து கொள்வதில்லை. இதையெல்லாம் மிஞ்சி, பிலிப்பைன்ஸ் நாட்டில் சில இளைஞர்கள் வருடம் தோறும் புனித வெள்ளியன்று தங்களை சிலுவையில் அறைந்து கொள்கின்றனர்!

கடந்த முகரம் அனுசரிப்பின் போது, புனித வெள்ளிக்கு முந்தைய உபவாசக் காலம். எனது மனைவி மாமிசம் சாப்பிடுவதில்லை என்று விரதம் (?) பூண்டிருந்தார்கள். நான் அவர்களைக் கேலி செய்து கொண்டிருந்தேன். பதிலுக்கு என்னை ‘லூசிபர்’ என்று அழைத்தார்கள். லூசிபர் சாத்தான்களுக்கெல்லாம் தலைவன். கடவுளுக்கு எதிரி மற்றும் இந்த உலகத்தின் அட்டூழியங்களுக்கு காரணகர்த்தா. இந்த நேரத்தில்தான் முகரம் ஊர்வலத்தை பார்க்க நேரிட்டது. கொஞ்சம் முதலில் அதிர்ந்தாலும் பின்னர் நான் சொன்னேன், " மதங்கள் சில விஷயங்களை செய்யவும், சிலவற்றை செய்யாகூடாதென்றும் சொல்கின்றன. ஆனால் மதத்தலைவர்கள் எது எளிதோ அதை செய்யத்தூண்டி, எது கடினமோ அதைப் பற்றி எதுவும் கண்டு கொள்வதில்லை".

"அது எப்படி இப்படி ரத்தக்களறியாக்கிக் கொள்வது அவ்வளவு எளிதா?"

"எது கடினம். இப்படியாகப்பட்ட வெறியேறிய நிலையில், கோஷங்களின் தாளத்தில் உடம்பைப் புண்ணாக்கிக் கொள்வதா? அல்லது டிக்கட்டுக்காக வரிசையில் நிற்கையில், நண்பர் ஒருவர் வந்து, டிக்கட் கொடுப்பவரை எனக்குத் தெரியும். என்னுடன் அறைக்குள் வா. டிக்கட் வாங்கித் தருகிறேன் என்று சொல்லும் போது வேண்டாம் வரிசையிலேயே நின்று கொள்கிறேன் என்று சொல்லும் நேர்மையா?"

மதச்சடங்குகளுடன், டிக்கட் வரிசையில் நிற்பதை ஒப்புமைப் படுத்தியது கற்றறிந்த மனிதர்களால் ஆழ்ந்து ராயப்படும் மறை பொருளை எளிமையாக அல்லது மேற்போக்காக பார்க்கும் ஒரு செயல் என்பதை நான் அறிவேன். ஆனால் மதக்கடமையினை நமது தினசரி வாழ்க்கையின் சின்ன சின்ன விஷயங்களில் பார்க்கவே நான் ஆசைப்படுகிறேன். ஆன்மீகவாதிகளின் வியாக்கியானங்களை என்னால் புரிந்து கொள்ள முடிவதில்லை.

எல்லா மதங்களுமே மனிதர்களின் சக்திக்கும் அறிவுக்கும் மீறிய தெய்வ சக்தியை போதிக்கிறது. மானிட வாழ்க்கையின் நிலையாமையினையும்...இந்த ஆத்மாவின் பயணத்தில் இந்த மானிட வாழ்க்கையில் அதன் சஞ்சரிப்பு ஒரு சிறு துளி என்றும் நம்புகின்றன. இந்த உலக வாழ்க்கை ஒரு பரீட்சைக் களம் போலவும் முடிவில்லா நீண்ட ஒரு பயணத்திற்கான முதல் படியாகவும் அல்லது இன்னமும் என்னன்னவோ போலவும் கூறுகின்றன. ஆனால் சாதாரண என்னைப் போல மனிதர்களுக்கு இவையெல்லாம் விளங்க முடியாத புதிர்கள். எனவே அவற்றைப் பற்றி நாங்கள் அதிகம் கவலைப் படுவது இல்லை. மத தலைவர்களின் பேச்சினைக் கேட்டு வெளியே வந்தவுடன், மறந்து போகும் விஷயங்கள் அவை. ஏனென்றால் என்னைப் போன்றவர்களுக்கு தினசரி வாழ்க்கைக் கவலைகள் அநேகம் உண்டு. இந்த உலக பிரச்னைகளிலிருந்து விடுபட ஒரு மாற்றாகவும், அதில் ஒரு சிறு விடிவு வந்து விடாதா? என்ற ஏக்கங்களுடன்தான் கடவுளுக்கும் எங்களுக்குமான தொடர்பு.

உலகின் நிலையாமை பற்றி மதங்கள் பேசினாலும், மதத்தலைவர்கள் இந்த உலக வாழ்க்கையின் மேல் மக்களுக்கு உள்ள பிடிப்பை வைத்துத்தான் காலத்தை ஓட்டுகிறார்கள். அதற்காகத்தான் அவர்கள் டிக்கட் வரிசையினை நாம் மீறுவதை கண்டு கொள்வதில்லை. அசாருத்தீன் ஷூ விளம்பரத்திற்காக தனது கையெழுத்தை காலணியில் பதித்த போது பெரிய குரல்கள் எழுந்தன. அது இஸ்லாத்துக்கு எதிரானது என்று. அதே போல ஷபனா ஆஸ்மி ஒரு திரைப்படத்திற்காக தலையினை மழித்துக் கொண்ட போதும் நிகழ்ந்தது. ஆனால் அதே அசாருத்தீன் லஞ்சம் பெற்றது அல்லது தாவூது இப்ராகிம் போதைப் பொருளை கடத்துவது இஸ்லாத்துக்கு விரோதம் என்ற ஆட்சேபங்கள் எழுந்ததாக எனக்குத் தெரியவில்லை. காலணியில் கையெழுத்துப் போடாமல் இருப்பதோ அல்லது தலையினை மழித்துக் கொள்ளாமல் இருப்பதோ எளிது. ஆணிகளால் வருடத்திற்கு ஒரு நாள் சிலுவையில் அறைந்து கொள்வது கூட எளிதுதான். ஆனால் தினசரி டிக்கட் வரிசையினை மீறும் ஆசையினைத் துறப்பது எளிதல்ல.


இப்படித்தான் ஏதேதோ நினைத்துக் கொண்டே, முகரம் ஊர்வலத்தை பார்த்த இரண்டாவது நாளில் மும்பை புறநகர் ரயிலில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தேன்.

மும்பை புறநகர் ரயில்களின் முதலாம் வகுப்பில் எழுதப்படாத விதி ஒன்று உண்டு. மூன்று நபர்கள் அமரும் இருக்கையில் மூன்று பயணிகள்தான் அமர வேண்டும். அந்தப் பயணி ஒரு சிறுவனாயிருந்தாலும் சரி, நின்று கொண்டிருப்பவர் வயோதிகராயிருந்தாலும் சரி 'மூன்றென்றால் மூன்று பேர்தான்'. இதற்கு எதிர்மாறான மற்றொரு எழுதப்படாத விதி இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் உண்டு. அங்கு மூன்று நபர்கள் அமரும் இருக்கையில் நான்காவது பயணி முழு உரிமையுடன் அமர இடம் கோரலாம், ஏற்கனவே அமர்ந்திருக்கும் பயணிகளின் பின்புறங்கள் இருக்கைக்கு வெளியே பிதுங்கி வழிந்தால் கூட. அன்று ஒரு நண்பருக்காக வேண்டி இரண்டாம் வகுப்பில் பயணித்துக் கொண்டிருந்தேன்.

மூன்று நபர்களுக்கான இருக்கையில் மூன்றாவது பயணியாக நான். மற்ற இருவரும் உறவினர்கள் போல. ஜன்னலோரம் அமர்ந்திருந்தவர், இளைஞர். மடியில் ஏதோ புத்தகத்தை விரித்து வைத்து, அதன் மீது குனிந்தவாறு இருந்தார். நடுவில் இருந்தவர் சற்று வயோதிகர். அடுத்த நிறுத்துமிடத்தில் பலர் ஏற, ஒருவர் எனது அருகே வந்து தான் உட்காருவதற்கு தோதாக சற்றே நகர்ந்து கொள்ளுமாறு கண்களிலேயே வினவினார். நான் லேசக உள்ளிழுக்க, கிடைத்த இரண்டரை இன்ச் இருக்கையில் ஒருவாராக அமர்ந்து கொண்டார்.

நிச்சயமாக அப்படிப்பட்ட நிலையில் ஒருவர் அமர முடியாது. வெகுதூர ரயில்களில் இருக்கை கிடைத்தவுடன் 'அப்பாடா' என்று பற்றிக் கொண்டு அடுத்து படுக்கைக்கு பரிசோதகரிடம் மெல்ல அடி போடுவது போல எனக்கு அடுத்து இருந்தவர்களிடம், கொஞ்சம் நகர்ந்து கொள்ளுமாறு வலது கையினை எனக்கு குறுக்கே நீட்டிச் சொன்னார்.

'இன்னும் எப்படி நகருவது. நாங்கள் மூன்று பேருமே நன்கு தடினமான நபர்கள்" எனக்கு அடுத்து இருந்த வயதானவர் சொல்ல, அதனை ஆமோதித்து அவருக்கு அடுத்து இருந்த இளையவரும் ஏதோ கூறியது போல கேட்டது எனக்கு.

'தடினமான நபர்கள்' என்று என்னையும் அவர் சேர்த்துக் கொண்டது பாராட்டா அல்லது கிண்டலா என்பது அவர் சொன்ன தொனியில் இருந்து தெரியாவிட்டாலும், எனக்கு அது பிடிக்கவில்லை. மேலும் அவர் சொன்னது பொய். என்னைப் பற்றி தெரியாது. அவர்களை தடினமான நபர்கள் என்று என்னால் ஒத்துக் கொள்ள முடியாது.

"கால்களை சேர்த்து வைத்து உட்காருங்கள். இடம் இருக்கும்" நான்காவது நபர் அடுத்த எழுதப்படாத விதியை நீட்டினார். அவர் சொன்னது சரிதான். கால்களை ஆங்கில ‘வி’ போல விரித்து வைத்து உட்காருகையில் நான்கு பயணிகளை அந்த இருக்கையில் சமாளிப்பது சற்று சிரமம். அந்த இருவருமோ கால்களை அகட்டியே வைத்திருந்தனர்.

'இது ஏதடா வம்பு' என நான் சற்று முன்னால் நகர்ந்து அமர, நான்காம் நபர் கிடைத்த இடைவெளியில் இன்னும் சற்று இருக்கைக்கு உள்ளாக தள்ளி உட்கார்ந்து கொண்டார். ஏறக்குறைய அவரது முக்கால்வாசி பின்புறம் இருக்கைக்கு உள்ளே வந்துவிட சற்றே தன்னை ஆசுவாசப் படுத்தியவர், விடவில்லை. புன்னகைத்தவாறே அவர்களைப் பற்றி கிண்டலாக ஏதோ அவர்கள் காதில் விழும்படியே முணுமுணுத்தார். எனக்கு அடுத்து இருந்த வயதானவரும் பதிலுக்கு சொல்ல...இது வரை இந்த விதி மீறல்களை எரிச்சலுடன் பார்த்துக் கொண்டிருந்த எதிர்வரிசை பயணிகளும் நான்காவது நபருக்கு சாதகமாக சேர்ந்து கொண்டனர். இந்த மும்முனைத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட நான் இரு உள்ளங்கைகளிலும் கன்னத்தை தாங்கி குனிந்து தூங்க முயற்சித்தேன். ஆனால் இந்த எதற்குமே கவலைப் படாமல், ஜன்னல் பக்கம் அமர்ந்திருந்த நபரோ, 'என்னமும் சொல்லிக் கொள்ளுங்கள்' என்பது போல இன்னமும் கால்களை அகட்டியே வைத்து அதன் மீதான புத்தகத்தை தாங்கி... தலை குனிந்து கருமமே கண்ணாயிருந்தார்.

இருக்கையின் முன்னால் நகர்ந்து அமர்ந்திருந்த நான், 'அப்படி என்னடா விஷயம், தன்னைச் சுற்றி எழும் சொல்லம்புகளை விடவும் முக்கியமாக என்று சிறிது தலையை திருப்பி எட்டிப் பார்த்தால்.....மனிதர், தனது அகட்டிய கால்களுக்கு நடுவே வைக்கப்பட்ட நோட்டுப் புத்தகத்தில் அக்கறையாக ஒரு சிவப்பு பால் பாயிண்ட் பேனாவால் மும்முரமாக, 'ஸ்ரீராம ஜெயம்' எழுதிக் கொண்டு இருந்தார்.

அந்த நோட்டின் தடிமனைப் பார்க்கையில் அவர் கைவிரல்களை கணிசமான அளவு வருத்திக் கொண்டிருப்பார் என்று தோன்றியது!.

வண்டியின் வியர்வைப் புழுக்க எரிச்சலிலும் ஏனோ நான் எனக்குள் புன்னகைத்தேன்!!

மும்பை
2002

1 comment:

தருமி said...

ஞாயிற்றுக்கிழமை பூசையில் 'களவு செய்யாதே' என்று பிரசங்கம் செய்த பாதிரியார் மதிய உணவு நேரத்தில் 'ஊருக்குத்தாண்டி உபதேசம்' அப்டின்னு சொன்னாரு அப்டின்ற கதை மாதிரி ...