Showing posts with label punishment. Show all posts
Showing posts with label punishment. Show all posts

1.3.11

'விவேக்'(கமற்ற) நீதி!

உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு மீண்டும் ஒரு பிரச்சினையை அவரைச் சுற்றி உருவாக்கியுள்ளார். இதுவும் பெண்ணுரிமை அமைப்புகளை கோபம் கொள்ளச்செய்யும் ஒரு செயல் என்றாலும், அதிஷ்டவசமாக அநேகரால் கண்டுகொள்ளப்படாமல், வெறும் பத்திரிக்கைச் செய்தியோடு முடிந்து போய் உள்ளது.


1997ம் ஆண்டு இளம் பெண் ஒருவர் மூன்று நபர்களால் கடத்தப்பட்டு வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படுகிறார். குற்றத்தை விசாரித்த நீதிமன்றம் 10 ஆண்டுகள் தண்டனை விதித்தது. கூட்டு வன்புணர்வுக்கு (Gangrape) குறைந்தபட்ச தண்டனையே 10 ஆண்டுகள். பொதுவாக, தண்டனை சட்டங்களில் அதிகபட்ச தண்டனைதான் குறிப்பிடப்படும். வன்புணர்வு குற்றம் விதிவிலக்கு!

பின்னர் உயர்நீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்ய, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நீதிபதிகள் கட்ஜு மற்றும் மிஸ்ரா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதற்குள் 14 ஆண்டுகள் கழிந்து விட்டிருந்தது. பாதிக்கப்பட்டவர் திருமணமாகி இரு குழந்தைகளுக்கு தாயாகியிருந்தார் குற்றவாளிகள் ஏறக்குறைய 31/2 ஆண்டுகள் சிறையில் இருந்திருந்தனர். குற்றவாளிகளுக்கும் பாதிக்கப்பட்டவருக்கும் ஏதோ சமரசம் ஏற்ப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

மேற்கண்ட காரணங்களை மட்டும் குறிப்பிட்டு, இந்த வழக்கில் பத்து ஆண்டுகளுக்கு குறைவான தண்டனை வழங்க போதுமான மற்றும் சிறப்பு காரணங்கள் (adequate and special reasons) இருப்பதாக கூறி, குற்றவாளிகள் ஏற்கனவே சிறையில் கழித்த 31/2 ஆண்டுகளை அவர்களுக்கான தண்டனையாக கூறி அவர்களை கட்ஜு விடுவித்துள்ளார்.

கூடுதலாக, குற்றவாளிகள் மூவரும் தலா பாதிக்கப்பட்டவருக்கு ரூ.50,000/- கொடுக்க வேண்டுமென்று கூறியுள்ளார். ஆனால், அவர்கள் கொடுக்காவிட்டால் வருவாய் வசூல் சட்டப்படி வசூல் செய்யப்பட வேண்டுமாம். அதற்குப் பதிலாக உடனடியாக கொடுக்கப்பட்டால் தீர்ப்பு என்றிருந்தால், அங்கேயே கட்டியிருப்பார்கள். இனி, எங்கே போய் அவர்களிடம் வசூல் செய்வது?

வருவாய் வசூல் சட்ட (Revenue Recovery Act) சிக்கல்கள் கட்ஜுவிற்கு தெரிந்திருக்க நியாயமில்லை!

பிரச்னை அதுவல்ல, மாறாக ‘சுமார் பதினைந்து வரிகளுக்குள் முடிந்துவிட்ட ஒரு தீர்ப்பில், கூட்டு வன்புணர்வாளர்களுக்கான தண்டனையை 31/2 வருடங்களாக குறைக்க முடியுமா’ என்பதுதான். தீர்ப்பில் கூறப்பட்ட போதுமான மற்றும் சிறப்பு காரணங்கள் உச்ச நீதிமன்றம் வரும் அனைத்து வன்புணர்வு வழக்குகளிலும் இருக்கும்.

சம்பவம் நடந்து 14 ஆண்டுகள் கடந்து போவதோ பாதிக்கப்பட்டவருக்கு திருமணம் ஆவதோ, அவருக்கு குழந்தைகள் பிறப்பதோ, குற்றவாளிகள் 31/2 ஆண்டுகள் சிறையில் கழிப்பதோ, ஏன் அவர்களுக்குள் சமரசம் ஆவதோ அனைத்து வழக்குகளிலும் உள்ள அம்சம்தான். அப்படியென்றால் அவை எப்படி சிறப்பான காரணங்கள் ஆகும்?

போதுமான காரணம்? நிச்சயமாக கிடையாது.

ஒருவேளை வழக்கில் போதுமான சாட்சிகள் இல்லாது இருக்கலாம். வழக்கை முழுமையாக விசாரித்தால், குற்றவாளிகளை விடுவிக்க வேண்டிய சூழல் இருந்திருக்கலாம். குற்றம் நடைபெற்றதா என்ற சந்தேகம் கூட எழுந்திருக்கலாம். எனவே, குற்றவாளிகளை விடுதலை செய்வதற்கு பதிலாக, பாதிக்கப்பட்டவருக்கு ஏதேனும் நஷ்ட ஈடு பெற்றுத் தரலாமே என்ற நல்ல எண்ணமும் கட்ஜுவுக்கு இருந்திருக்கலாம்.

ஆனால் இது முறையல்ல. சிரமம் பார்க்காமல் ஐந்து பக்கங்களில் தெளிவான காரணத்தைக் கூறி ஒரு தீர்ப்பினை எழுதியிருக்கலாம். ஆனால் ஐந்து வரிகளில் முடிந்து போன இந்த தீர்ப்பு, மக்களிடையே என்னவிதமான எண்ணத்தை ஏற்ப்படுத்தும்?

‘பணத்தை அட்வான்ஸாக கட்ட வேண்டுமா, அல்லது இன்ஸ்டால்மெண்டில் கட்டினால் போதுமா?’


மதுரை
02/03/11

14.10.09

‘ஒரு பெண்’ என்றா தேடுவார்கள்?

நான் அடிப்படையில் ஒரு உரிமையியல் (civil) வழக்குரைஞர். குற்றவியல் வழக்குகளில் அவ்வப் பொழுது பங்கு கொண்டாலும், அவை பெரும்பாலும் காசோலை மோசடி, நில மோசடி போன்ற உரிமையியல் பிரச்னைகளை உள்ளடக்கியதாக இருக்கும். ஒரு கொலை வழக்கையாவது நடத்த வேண்டுமென்பதுதான் எனது உச்சகட்ட குற்றவியல் லட்சியம்!

மதுரை வந்த பொழுதில், மாவட்ட நீதிமன்றத்தில் குற்றவியல் மேல்முறையீடு ஒன்றினை நடத்தித் தர வேண்டுமென்று, ஜூனியர் ஒருவர் கேட்கவும் உற்சாகமாக ஏற்றுக் கொண்டேன்.

குற்றம் சாட்டப்பட்டவர்...ம் வசந்தன் என்று வைத்துக் கொள்ளலாம். நகர பேருந்தில் பயணி. தனது இடம் வந்ததும், பேருந்தை நிறுத்த கேட்டுக் கொள்கிறார். நடத்துநர் அது விரைவுப் பேருந்து என்று அடுத்த நிறுத்தத்தில்தான் நிறுத்துகிறார். எரிச்சலுற்ற வசந்தன் இறங்கும் பொழுது படியில் நின்று கொண்டிருந்த நடத்துநரை தள்ளிவிட்டு இறங்கிச் சென்று விட்டார். தடுமாறி கொஞ்சம் ஏடா கூடமாக கீழே விழுந்த நடத்துநரின் விலா எலும்பு ஒன்று உடைந்து விட்டது.

நடத்துநரை கீழே தள்ளிவிட்டு திரும்பிப் பார்க்காமல் வீட்டுக்குச் சென்று விட்ட வசந்தன், அடுத்த நாள் செய்தித்தாளில் ‘பயணியால் தாக்கப்பட்ட நடத்துநர் மருத்துவமனையில் அனுமதி’ என்று பெட்டிச் செய்தியை துரதிஷ்டவசமாக பார்க்க நேரிட்டது. குற்ற உணர்வில் ‘அந்த நடத்துநரை தள்ளிவிட்ட நடத்துநர் தான்தான்’ என்று தாயாரிடம் கூற, அவரோ உடனே அரசு மருத்துவமனைக்குச் சென்று, அந்த நடத்துநரையே சந்தித்து தனது மகனின் செயலுக்கு மன்னிப்பு கேட்டார்.

நடத்துநருக்கு ஏற்பட்டதோ, இந்திய தண்டனைச் சட்டப்படி கொடுங்காயம் (grevious hurt) குற்றவாளியை எப்படி கண்டுபிடிப்பது என்று இருந்த காவலர்களுக்கு, அவராகவே வந்து மாட்டவும், உடனடியாக பிடித்து குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்து விட்டனர்.

கொடுங்காயத்துக்கு அதிகபட்ச தண்டனை ஏழு வருடம். குற்றவாளியின் எண்ணப்பாட்டினைப் பொறுத்து தண்டனை வழங்கப்படும். நீதிபதியோ கடுமையானவர். ஏழு வருடம் தீட்டி விட்டார்.

-oOo-

‘இதுக்கெல்லாமா ஏழு வருடம் கொடுப்பார்கள், மனிதத்தன்மையே இல்லையா?’ வழக்கைப் படித்த எனக்கு தோன்றியது இதுதான். ஒரு வருடமென்றாலும் எனக்கு இப்படித்தான் தோன்றியிருக்கும்.

‘சரி, ஏற்கனவே சிறையில் இருந்த சில மாதங்களை தண்டனைக்காலமாக குறைக்கச் சொல்லலாம்’ என்று நினைத்து வழக்கைப் படித்த எனக்கு நியாயமான சந்தேகம் ஒன்று தோன்றியது. சம்பவம் நடந்ததற்குப் பிறகு வசந்தனை, நடத்துநர் சாட்சி விசாரணை பொழுதுதான் பார்க்கிறார். பின்னர் எப்படி, வசந்தநன்தான், நடத்துநரை தாக்கியவர் என்று காவலர்கள் கண்டுபிடித்து, அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்? என்ற சந்தேகம்தான் அது.

காவலர் வழக்குகளை சோடிக்கத்தான் செய்வார்கள். வசந்தனின் தாயார் நடத்துநரைப் பார்த்த விபரமெல்லாம் இல்லாமல் அவர்களாகவே வசந்தனை கண்டுபிடித்த மாதிரித்தான் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வார்கள். இவ்வாறு பாதிக்கப்பட்டவரும், தாக்குபவரும் முன்பின் அறிமுகம் ஆகாத நபராக இருக்கும் பட்சத்தில், காவலர்கள் தாக்கியவர் என்று ஒருவரை கைது செய்தவுடன் ‘identification parade’ நடத்துவது அவசியமானது.

மேல்முறையீட்டில், இந்த ஒரு கருத்தை வைத்தே எனது வாதத்தை வடிவமைத்த நான், இறுதியில் குற்றம் செய்யப்பட்டதாகவே இருப்பினும், இத்தகைய ஒரு செயலை நாம் அனைவருமே நமது வாழ்வின் ஏதாவது ஒரு தருணத்தில் செய்யக் கூடியவர்களாகவே இருக்கிறோம். நமது அதிஷ்டம், நமக்கு அப்படி ஒரு வாய்ப்பு அமைவதில்லை...அமைந்தாலும் விலா எலும்புகள் எப்பொழுதுமே உடைவதில்லை. இந்தச் செயலுக்கு ஏழு வருடம் என்பது நியாயமா? என்றும் ஒரு கேள்வியை வைத்தேன்...

ஒரு வாரம் கழித்து ஜூனியர் என்னைச் சந்தித்து, ‘சார், அப்பீலில் வசந்தனை முழுசா விடுவிச்சிட்டாங்க’ என்று கூறிய பொழுது தரையிலிருந்து எழும்பி கொஞ்சம் உயரத்தில் பறப்பது போல இருந்தது.

-oOo-

மணற்கேணி வலைப்பதிவுகளை தெரிந்தோ அல்லது தெரியாமலோ கண்ணுறுபவர்களைப் பற்றிய புள்ளிவிபரங்களை தரும் வலைத்தளத்தில், மிகுந்த சுவராசியத்துடன் நான் பார்ப்பது, ‘தேடுபொறியில் எந்த வார்த்தையினைத் தேடி மணற்கேணிக்கு வருகிறார்கள் என்பது’.

இரு நாட்களுக்கு முன்னர், ‘ஒரு பெண்’ என்ற இரு வார்த்தைகளை கூகிளில் தேடி இங்கு வந்திருக்கிறார் ஒரு நபர். பெண் என்று தேடலாம், ஒரு என்று கூட தேட வாய்ப்பு உண்டு. ‘ஒரு பெண்’ என்றா தேடுவார்கள்?

எந்த நோக்கத்தில் ஒருவர் ‘ஒரு பெண்’ என்ற வார்த்தைகளை கூகுளில் தேடியிருக்கக்கூடும்?. பொழுது போகாத நேரங்களில், இந்தக் கேள்விக்கான விடையினை தேட முயல்வதுதான் தற்பொழுது எனது பொழுது போக்கு.

-oOo-


நேற்று மூத்த வழக்குரைஞர் ஒருவர், ‘எதற்காக சென்னை மியூசிக் அகாடெமியில் மலையாளிகளை வேலைக்கு வைப்பதில்லை தெரியுமா?’ என்று கேட்டார். எனக்குத் தெரியவில்லை. அவர் சொன்ன பதில்...மெக்ஸிகோ சலவைக்காரியெல்லாம் பிச்சை வாங்க வேண்டும்.

நீங்களும் பொழுது போகாத நேரங்களில் யோசித்துக் கொண்டிருந்தால் கண்டுபிடித்து விடலாம்.

எனக்கும் பல சமயங்களில் தோன்றும். ‘இங்கே கவிஞர், எழுத்தாளர் என்று பீற்றிக் கொள்கிறார்களே. sixக்கும்  sexக்கும் என்ன வித்தியாசம்? என்று ஒரு நண்பர் கேட்டு அதுக்கு ஒரு பதில் சொன்னாரே, அந்த கிரியேட்டிவிட்டி முன்னால இவங்க கற்பனையெல்லாம் தூசுன்னு’

யார் சொல்லியிருப்பா, இத முதல்லன்னு இப்ப யோசிச்சுட்டு இருக்கேன்!

மதுரை
141009