30.10.11

முக்குலம்தான் ஆளணும்…

மதுரை மக்கள் அனைவரையும் பதட்டமடைய வைக்கும் நாள் ஒன்று உண்டு என்றால் அது பசும்பொன் தேவர் பிறந்தநாள் கொண்டாட்டங்கள்தான். பரமக்குடி துப்பாக்கி சூட்டிற்கு பின்னால், பதட்டச் சூழல் இருக்காது என்று பார்த்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும் போல இருக்கிறது. பேருந்து கூரை மீதேறி பலர் பயணம் செய்யும் படத்தை நேற்று செய்தித்தாளில் பார்த்த போது காவல்துறை ‘வீரசிகாமணிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று இருந்தது.

இதே போன்ற ஒரு காரணத்திற்குதான், பரமக்குடி நிகழ்வின் பொழுது மதுரையில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

இன்றும் காய்கறி வாங்க வாகனத்தில் செல்கையில், எதிர்ப்படும் பிறந்த நாள் கொண்டாட்ட கும்பல்கள் அச்ச உணர்வையே ஏற்ப்படுத்துகின்றன.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் பலவித கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். முக்கியமாக, வேறு சமுதாயத்திற்கு எதிரான கோஷங்கள் எழுப்பக்கூடாது என்று…ஆனால், போன வாரம் சாலையில் பார்த்த ஆட்டோ ஒன்றின் பின்புறம் ஒட்டப்பட்டிருந்த போஸ்டரில் கொட்டை எழுத்துகளில் எழுதப்பட்டிருந்த வாசகம் ஒன்று சகாயத்தையும், மொத்த காவல்துறையையும் கேலி செய்வது போல இருந்த்தது. அந்த வாசகங்கள், ‘எக்குலமும் வாழனும். முக்குலம்தான் ஆளணும்

-oOo-

இத்தனை வருடங்கள் தேவர் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் இவ்விதமான பதட்ட சூழலில் கொண்டாடப்பட்ட பொழுது யாரும், ‘இப்படியெல்லாம் விமரிசையாக விழா தேவையா? என்று கேட்கவில்லை. இம்மானுவேல் சேகரன் குரு பூஜை என்று அதே முறையில் மற்றவர்கள் தொடங்கி, துப்பாக்கி சூட்டில் முடிந்தவுடனே ‘இப்படி விழாக்கள் எல்லாம் எதற்கு? என்று பலர் கிளம்புகின்றனர்.

இப்படித்தான், முன்பு எந்த எந்த சாதியை சேர்ந்தவர் பெயரில் எல்லாம் போக்குவரத்துக் கழகங்கள் தொடங்கப்பட்ட பொழுது யாரும் கேட்கவில்லை. தாழ்த்தப்பட்ட சாதியை சார்ந்த ஒருவர் பெயரில் போக்குவரத்து தொடங்கி கலவரத்தில் முடிந்ததும், ‘இது என்ன, போக்குவரத்து கழகங்களுக்கு சாதிவாரியாக பெயர்கள் என்று நியாயம் பேசினார்கள்.

ஏன், காந்தி மண்டபம், நேரு நினைவிடம், சிலைகள், சமாதிகள் என்றெல்லாம் வரிப்பணத்தை செலவழித்து ஏதேதோ அமைக்கப்பட்ட பொழுது யாரும் ஏன் என கேட்கவில்லை. மாயாவதி அம்பேத்கர் நினைவாக பூங்கா அமைத்தால் 500 கோடியா என்று கணக்கு பார்க்க ஆரம்பிக்கின்றோம்.

It seeems, there is still something fundamentally wrong with our attitude

-oOo-
  
பலரும் பலமுறை பேஸ்புக்கில் இணையவில்லையா, ட்வீட் செய்யவில்லையா என்று கேட்டு வந்தாலும், சோம்பேறித்தனம் அல்லது புதிய பழக்கத்திற்கு அடிமையாக வேண்டாம் என்று தவிர்த்தே வநதேன். ஆயினும் நேரமின்மையால் தொடர்ந்து பதிவு எழுத முடியாத சூழலில், ந்ம் மனதில் எழும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தட்வீட்டர் வசதியாக இருக்கிறது. எனவே ட்வீட்டரில் prabhuadvocate என்ற பெயரில் நேற்றிலிருந்து என்னை இணைத்துக் கொண்டேன். எனது ட்வீட்கள் சுவராசியமாக இருக்க் முயல்கிறேன்.

அரசியல் தலைவர்களின் ட்வீட்கள் சுவராசியமாக உள்ளன. எவ்வளவுதான் கவனாக இருப்பினும், பலரது மறுபக்கம் (Particularly, lighter side) ட்வீட்களின் வெளிப்படுவதை தடுக்க முடியாது எனத் தோன்றுகிறது. ஆனால், பிஜேபி ஆசாமிகள் ஏன் எப்பொழுதும் கோபமாக இருக்கின்றார்கள்?

-oOo-


நேற்று இரானிய இயக்குஞராகிய அப்பாஸ் கியாரஸ்டோமியின் 'The Wind will carry us'  என்ற படம் பார்த்தேன். அந்த அனுபவத்தை பதிய வேண்டும் என்ற விருப்பம்தான் ட்வீட் செய்ய கிளம்பியது!

அநியாயத்திற்கு மெதுவாக நகரும் திரைப்படம் என்றாலும், அருமையான காட்சியமைப்புகள். ஒவ்வொரு ப்ரேமையும் அப்படியா நிறுத்தினால், நேஷனல் ஜியாக்கிரபி புத்தகத்தில் வரும் புகைப்படம் போல இருந்தது. படம் முடிந்ததும் ஏதோ நாமும் ஒருவாரம் அந்த கிராமத்தில் வாழ்ந்தது போல இருந்தது.

நீங்களே பார்த்து புரிந்து கொள்ளுங்களேன்...

மதுரை
30/10/11