2.10.06

விஷம் கக்கிய பாம்பு!

முன்னுரை

கடன் வாங்குவதற்கு பழமையான, அதே சமயம் எளிமையான வழி பிராமிசரி நோட்டு (promissory note). புரோ நோட்டு என்பது கடனை திருப்பிச் செலுத்துவதாக உறுதி கூறி எழுதிக் கொடுக்கப் படும் ஒரு ஆவணம். நிறுவன பங்குகளைப் போல பிராமிசரி நோட்டில் எளிதில் மாற்ற வல்ல பல வசதிகள். மேலும் மேலும் பிராமிசரி நோட்டினை வைத்து தொடரப்படும் வழக்குகளில் வாதிக்குச் சாதகமான சில அனுகூலங்கள் உண்டு. பொதுவாக பிராமிசரி நோட்டு வழக்குகள் எளிதில் முடிந்து விடும்...அந்த கையெழுத்தே மோசடி என்று பிரதிவாதி வழக்காடாத பட்சத்தில். அப்படி ஒரு பிராமிசரி நோட்டு வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்காக வந்தது. எதிர் வழக்காட வந்தவர், திறமையான அதே சமயம் தைரியம் மிகுந்த ஒரு வக்கீல். பொதுவாக புரோ நோட்டு வழக்குகளில் நீதிபதிக்கு அதிக வேலையில்லை. தீர்ப்பது எளிது...

நீதிபதி கேட்டார் பிரதிவாதி வக்கீலிடம், 'என்ன...வழக்கை எதிர் நடத்தப் போகிறீர்களா?'

'ஆமாம், யுவர் ஹானர்'

'புரோ நோட்டு கேஸு என்ன டிபன்ஸ் (defense)' அசுவராசியமாக நீதிபதி. அவருக்குத் தெரியும் கட்சிக்காரனிடம் பீஸ் கறப்பதற்கென்றே வம்படியாக சிலர் வழக்கு நடத்துவர் என்று.

'நான் பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டேன், யுவர் ஹானர்' உடன் வந்தது பதில்.

'என்ன! ம்ம்ம்...என்ன சாட்சி' பொதுவாக ஒரு பத்திரதின் பெயரில் கடன் பெற்றவர்கள் எழுத்து பூர்வமாகவே அதனை திருப்பிச் செலுத்துவர். ஆனால் அப்படி பணம் செலுத்தியதற்க்கான குறிப்பு எதுவும் அந்த புரோ நோட்டில் காணப்படவில்லை.

'ஒரல் (oral) யுவர் ஹானர்' ஒரல் என்பது வாய்மொழிச் சாட்சி.

'ஓ! ஓரலாஆஆ....' நீதிபதி கேலியாக இழுத்தார்.

சற்றும் தயங்காமல் அந்த வக்கீல், முகத்தை மிகவும் žரியஸாக வைத்துக் கொண்டு, குரலை உயர்த்திய படி, 'In the Sessions Courts, Your Honour, they are sending people to gallows on the evidence, which is ORRRAAALLL......'

"கிரிமினல் நீதிமன்றங்களில் குற்றவாளிகளை வெறும் வாய்மொழிச் சாட்சியின் அடிப்படையில் தூக்கு மேடைக்கே அனுப்புகிறார்கள். பிசாத்து, பிராமிசரி நோட்டுக்கு அதனை நம்பக் கூடாதா?' என்பதுதான் அதன் அர்த்தம் என்றாலும்...இறுதியில் அவர், அந்த நீதிபதி கேலியாக 'ஒரலாஆஆ' என்று சொன்னதற்கு இணையாக தானும் அப்படியே திருப்பியடித்ததுதான் வேடிக்கை.

நீதிபதிக்கு முகம் சுண்டிப் போனது. பேசாமல் வழக்கை ஆரம்பிக்க உத்தரவிட்டார்.

வக்கீலின் பதில் அந்த சந்தர்ப்பத்தில் சரியான வாதம் என்றாலும்...சட்டத்தின் படி அதில் பல ஓட்டைகள் இருக்கிறது. உங்களுக்கு தெரிந்திருக்கலாம். ஒரு வழக்கினை நிரூபிக்க சாட்சிகள் அவசியம். வாய்மொழிச் சாட்சிகள் மற்றும் ஆவணச்சாட்சிகள் (Oral Evidence and Documentary Evidence). 'வாய்மொழிச் சாட்சி (மனிதர்கள்) பொய் பகரலாம் ஆனால் ஆவணங்கள் பொய் கூற இயலாது' என்பது சட்டக் கருத்து. எனவேதான் உலகம் முழுவதும் உள்ள சட்டங்கள், ஆவணச் சாட்சி இருப்பின் அதனை எதிர்த்து வாய்மொழிச்சாட்சியினை அனுமதிப்பதில்லை.

ஆனால் பொதுவாக குற்றவியல் வழக்குகளில் வாய்மொழிச் சாட்சியே பிரதானம். எப்படி கொலை நடந்தது என்று எந்த ஆவணத்தினை வைத்து நிரூபிப்பது. எனவே மனிதர்களின் வாய் வார்த்தையினை வைத்துதான் வழக்கு நிற்க முடியும். அதே காரணத்திற்காகத்தான் குற்றவியல் வழக்குகளில் சாட்சிகளின் குறுக்கு விசாரணை அதிக முக்கியத்துவம் பெறுகிறது. சாட்சி கூறுவது உண்மையல்ல என்று எடுத்துரைக்க, குற்றம் சாட்டப் பட்டவரிடம் உள்ள ஒரே ஆயுதம் குறுக்கு விசாரணைதான். உரிமையியல் (civil) வழக்குகளில் அப்படியல்ல. ஆவணத்தை வைத்து வழக்கு உண்மையா? பொய்யா? என்பது விளங்கி விடும்.

ஆக சில நபர்களின் வாய் வார்த்தைகளில்...ஒரு குற்றவாளியினை தூக்கு மேடைக்கு அனுப்பமுடியும். நான் இவ்வளவு விளக்கமாக சொல்லிக் கொண்டு போவது, எங்கனம் ஒரு கிரிமினல் வழக்கில் பல ஆவண சாட்சிகள் செய்ய முடியாத ஒரு காரியத்தை, சிலரின் வாய் வார்த்தைகள் சாதித்தது என்பதை சொல்வதற்காகத்தான்.

சட்டக் கருத்தெல்லாம் இந்த வழக்கில் முக்கியமில்லை. அதைவிட முக்கியம் இந்த வழக்கு எப்படி அமெரிக்க மக்கள் நீதியினை நிலை நாட்ட உறுதியுடன் நிற்கிறார்கள் என்பதற்கும், எவ்வாறு அங்கு சாதாரண மக்கள் தங்கள் கஷ்டங்களை பொருட்படுத்தாமல், நியாயத்திற்காக சில தியாகங்களை செய்ய முன் வருகிறார்கள் என்பதற்கும் ஒரு முக்கிய உதாரணம்.

அதையெல்லாம் மீறி....இதன் பின்ணயில் உள்ள வேதனைகளும்......எவ்வாறு அமெரிக்க நாடு ஒரு அருவருக்கத்தக்க நிலையிலிருந்து, தன்னையும் தனது அமைப்புகளையும் மீட்டெடுத்துக் கொண்டது என்பதனையும் நாம் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

மெட்கார் இவர்ஸ் (Medgar Evers), பைரான்-டீ-ல-பெக்வித் (Byron de la Beckwith) என்ற பெயர்களை கேள்விப்பட்டிருந்தால்...இந்த வழக்கினைப் பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். இதனை அறியா ஒரு சிலரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது எனது விருப்பம்.

ஒரு கொலை

மெட்கர் இவர்ஸ், தான் மரித்த 1963 ம் ஆண்டு, முப்பத்தியேழே வயது நிரம்பிய இளைஞர். அழகான மனைவி மைரில்லே (Myrile Evers) மற்றும் மூன்று சிறு குழந்தைகள். இவர்ஸ் வியட்நாமில் அமெரிக்க அரசுக்காக போரிட்டவர். பின்னர் சட்டக் கல்லூரியில் இடம் மறுக்கப்படவே, காப்பீட்டுப் பத்திர விற்பனையாளர். மிசிசிபியில் உள்ள ஜாக்ஸன் நகரில் அமைதியான இடத்தில் வீடு. வேறு என்ன குறை இருக்கப் போகிறது ஒரு மனிதனுக்கு......ஆனால் இவர்சுக்கு இருந்தது. 'மற்றவர்கள் போல தானும் ஒரு டிபார்ட்மெண்டல் கடையில் பொருட்கள் வாங்கவேண்டும்', 'மற்றவர்கள் போல தானும், தான் விரும்பும் ஒரு உணவு விடுதிக்கு தனது குடும்பத்துடன் செல்ல வேண்டும்', 'தனது பிள்ளைகளும் நல்ல பள்ளிக் கூடத்தில் சேர வேண்டும்', 'தன்னையும் மற்றவர்கள் பெயரைச் சொல்லி அழைக்க வேண்டும்' என்ற சின்னச் சின்ன குறைகள்தான். மொத்தத்தில் தானும் தன்னைப் போன்ற கறுப்பின மக்களும் மனிதர்களாக மதிக்கப் படவேண்டும் என்ற ஒரே ஒரு குறைதான் அவருக்கு இருந்தது.

இவர்ஸால் மற்றவர்கள் போல இந்த குறைகளை சகித்துக் கொள்ள முடியவில்லை. 1954ம் ஆண்டு, அமெரிக்க உச்ச நீதிமன்றம், பள்ளிகளில் இனவாத பாகுபாடு கூடாது என்று தீர்ப்பு சொல்லியிருந்தாலும் இனவாத போக்கில் எவ்வித பெரிய மாற்றமும் ஏற்பட்டு விடவில்லை. இவர்ஸ், 'கறுப்பின மக்கள் முன்னேற்றத்துக்கான தேசிய அமைப்பு' என்ற அமைப்பில் தீவீரமாக ஈடுபட்டு அதன் காரியதரிசியாக பயாற்றி வந்தார். அதன் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டமைக்காக அவருக்கு பல கொலை மிரட்டல்கள். வெள்ளை இனவாத பயங்கரவாத அமைப்பான கூ க்ளஸ் க்ளான் (ku klux klan KKK) அவரைக் கட்டம் கட்டியிருந்தது. அதனை அவரும் அறிந்தே இருந்தார். எனவேதான், விளையாட்டு சொல்லிக் கொடுக்க வேண்டிய வயதில் அவரது குழந்தைகளுக்கு... வெடிச்சத்தம் கேட்டால் எப்படி உடனே தரையோடு படுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொடுக்க வேண்டியிருந்தது. அந்தப் பயிற்ச்சிக்கும் ஒரு நாள் அவசியம் ஏற்பட்டது.

துரதிஷ்டமான அன்று இரவும் இவர்ஸ் வீடு திரும்ப வெகு நேரமாகி விட்டது. வழக்கம் போல அப்பா வருகைக்காக காத்திருந்த குழந்தைகள், அவரது கார் சத்தம் கேட்டதுமே, 'அப்பா வந்து விட்டார்' என்று துள்ளிக் குதித்தன. சில நொடிகள்தான்....அந்த இருளைக் கிழித்த வெடிச்சத்ததில் அதிர்ந்த மூத்த இரண்டு குழந்தைகளும் அடுத்து உடனடியாக, தங்கள் குட்டித் தம்பினை சேர்த்து தரையில் படுத்துக் கொண்டனர். மைரில்லே கதவை நோக்கி ஓடினார். அங்கே ரத்த வடிய கீழே விழுந்து கிடந்தார் இவார்ஸ். ஒரு கையில் சாவிக் கொத்து. மறு கையில் 'jim crow must go' என்ற வாசகம் எழுதப்பட்ட டி-சார்ட். 'அப்பா எழுந்திரு, அப்பா எழுந்திரு' என்ற குழந்தைகளின் அலறலில் மற்றவர்கள் வர, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டார் இவர்ஸ். அவரது குடும்ப மருத்துவர், பிர்ட்டோன் அவரருகே குனிந்து, 'உங்களை சுட்டது யாரென தெரியுமா?' என்று வினவியதற்கு, 'டாக்டர்...ஓஓ..டாக்டர்' என்ற பதிலோடு இவார்ஸின் உயிர் பிரிந்து விட்டது.

ஒரு விசாரணை

இவர்சின் கொலையினைத் தொடர்ந்து நடந்த போலீஸ் விசாரணை, அப்பழுக்கில்லாதது என்பதை சொல்ல வேண்டும். இவர்சுக்கு தனிப்பட்ட வகையில் யாரும் எதிரிகள் இல்லை. எதிரி(கள்) க்ளானை சேர்ந்த அல்லது சேராத வெள்ளை இனவாதி(கள்). அதனை உறுதிப்படுத்தும் விதமாக, லீ சுவல்லி என்பவர், கொலை நடப்பதற்கு ஒரு வாரம் முன்னதாக, தான் பேருந்து நிறுத்தத்தில் ன்று கொண்டிருந்த போது, ஒரு வெள்ளையர் அவரை அணுகி, 'அந்த 'நீக்ரோ' எவர்ஸ் எங்கே வசிக்கிறான்?' என்று கேட்டதாக சொன்னார். 'நீக்ரோ' என்ற வார்த்தை ஸ்பானிய மொழியில் கறுப்பு என்று பொருள் பட்டாலும், பின்னர் அது அமெரிக்காவுக்கு அடிமைகளாக பிடித்து வரப்பட்ட ஆப்ரிக்கர்களின் சந்ததியினரைக் குறிக்கும், கேலி பொதிந்த ஒரு வார்த்தையாக உருமாறி விட்டது.

எவர்ஸ் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஜோ'ஸ் டிரைவ் என்ற மோட்டலின் சிப்பந்தி, கொலை நடந்த நேரத்தில், சவுக்கு போன்ற நீண்ட ஏரியல் கொண்ட வெள்ளை நிற கார் ஒன்று அங்கிருந்து வேகமாக புறப்பட்டுப் போனதாக சொன்னார்.

விரைவில், போலீஸ் ஒரு கொலை வழக்குக்கு முக்கிய தடயமான ஆயுதம், அதாவது இந்த வழக்கில் துப்பாக்கியினை, எவர்ஸ் வீட்டுக்கு அருகில் இருந்த புதரில் இருந்து கண்டெடுத்தனர். அது ஒரு தொலைநோக்கி பொருத்தப்பட்ட 1917 மாடல், .03-06 எட்ஃபீல்ட் ரக ரைபிள். துப்பாக்கியினை விட போலீஸ”க்கு மகிழ்ச்சி தந்தது அதில் இருந்த கைரேகை. மேலும், எவர்ஸ் உடலில் இருந்து எடுக்கப்பட்ட தோட்டாவும், கண்டெடுக்கப் பட்ட துப்பாக்கிக்கு பொருத்தமானது என்று வெடிப்பொருள் அறிக்கையும் (Ballastic Report) உறுதிப் படுத்தியது.

துப்பாக்கி பற்றிய விபரங்கள் வெளியானதுமே, தார்ன் மெக்கின்டையர் (Thorn McIntyre) என்பவர் போலீஸை தொடர்பு கொண்டு தான் அந்த துப்பாக்கியினை, பைரன் டி ல பெக்வித் (Byron De La Beckwith) என்பவருக்கு சில காலம் முன்பு விற்றதாக கூறினார். பெக்வித் யாரென்று தெரிந்ததும், போலீஸ் தங்களது விசாரணை ஏறக்குறைய முடிவுக்கு வந்து விட்டதை உணர்ந்தனர். ஆம், பெக்வித் தான் ஒரு இனவாதி என்பதை சொல்லிக் கொள்வதில் சற்றும் தயங்காத கூ க்ளக்ஸ் க்ளானை சேர்ந்தவர். அவரிடம் சவுக்கு போன்ற நீண்ட ஏரியல் கொண்ட ஒரு வெள்ளை ற கார் இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கியில் இருந்தது....அவரது கைரேகை!

எவர்ஸ் கொலை செய்யப் பட்டதினை கண்ணுற்ற நேரடி சாட்சி (Eye Witness) யாரும் இல்லையெனினும், சந்தர்ப்பவாத சாட்சிகள் (Circumstantial Evidence) பெக்வித்துக்கு எதிராக வலுவாக இருந்ததாக, போலீஸ் நம்பினர். போலீஸ’ன் நம்பிக்கை சரியானது என்பது குற்றவியல் நடைமுறை அறிந்த அனைவரும் ஒத்துக் கொள்ளக்கூடியது. பெக்வித்துக்கு எதிரான மற்றொரு ஆவணம், அவரது வீட்டினைச் சோதனையிடுகையில் கிடைத்த ஒரு விளம்பர புத்தகம். அதில் .03-06 தோட்டாக்களின் சக்தி மற்றும் அதன் குணாதிசயங்களைப் பற்றிய விபரங்கள் பெக்வித்தால் வட்டமிடப்பட்டு இருந்தது.

பெக்வித் விரைவில் கைது செய்யப்பட்டு, எவர்சைக் கொன்ற குற்றத்திற்காக வழக்கு விசாரணைக்குட்படுத்தப்பட்டார். பெக்வித்தோ எதற்கும் அசரவில்லை. தினமும் நீதிமன்றத்திற்கு புன்னகை மிஞ்சிய முகத்தோடும், கேலியோடும் வருவதும், பத்திரிக்கைகளுக்கு பேட்டி தருவதுமாக....எதனைப் பற்றியும் கவலைப் பட்டதாக தெரியவில்லை.

திடீரென இரண்டு போலீஸ்காரர்கள், பெக்வித்தை கொலை நடந்த சமயத்தில் சம்பவ இடத்திலிருந்து 150 மைல் தூரத்திலுள்ள இடத்தில் பார்த்ததாக சாட்சி சொன்னார்கள். இதனை 'அலிபி' என்பார்கள். இதுவரை இந்த தகவலை யாருக்கும் தெரிவிக்காமல் அந்த போலீஸார் திடீரென சொன்னதால், அவர்களது நம்பகத்தன்மை கேள்விக் குறியானது என்றாலும்.....வழக்கின் முடிவில் ஜூரர்கள் எவ்வித முடிவும் எடுக்க முடியாமல் வழக்கு தள்ளிப் போடப் பட்டது. இறுதியில் ஜூரர்கள் எடுத்த முடிவு......இது வரை நீதியினை எதிர்பார்த்து காத்திருந்த மைரில்லேயின் தலையில் இடியாக இறங்கியது. ஆமாம், வழக்கு மெய்ப்பிக்கப் படவில்லை என, 'பெக்வித் குற்றமற்றவர்' என்ற முடிவிற்கு ஜூரர்கள் வந்தனர்.

மைரில்லேயினையும், மற்றும் சிலரையும் தவிர எல்லோரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர், குறிப்பாக அரசு. ஏனெனில் இவ்வழக்கில் பெக்வித் தண்டிக்கப்படும் வேளையில் அதிக பிரச்னை ஏற்படும் என அரசு நம்பியது.

எல்லா நம்பிக்கைகளையும் இழந்த மைரில்லே, ஜாக்ஸன் நகரை விட்டே கிளம்பி வெகுதூரத்திலுள்ள கலிஃபோர்னியோ நகரத்தில் சென்று தனது மூன்று குழந்தைகளுடன் குடியேறிவிட்டார். அவர் தன்னுடன் சுமந்து சென்றது...அவரது கணவருடைய நினைவுகளையும்.....இனி தன் சொந்தக்காலில் வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற உறுதியும். அவற்றோடு ஒரு வைராக்கியத்தையும் அவர் சுமந்து சென்றார்.

விரைவிலேயே... ஜாக்ஸன் நகரமும், மிசிசிபி மாகாணமும் எவர்ஸையும் அவரது கொலையினையும் மறந்து போனது.......ஆனால் காலம் எவர்ஸை மறக்கவில்லை. அது எவர்ஸை மீண்டும் உயிர் பெற்று எழ வைத்தது.....சுமார் 26 வருடங்கள் கழித்து...


ஒரு செய்தி

ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்து ஒன்பதாம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி, ஜாக்ஸன் நகரில் வெளியாகும் 'க்ளேரியான் லெட்ஜர்' (Clarion Ledger) என்ற பத்திரிக்கையில் வெளியான ஒரு செய்தி, அமெரிக்க சட்டவியலில் முக்கியமான ஒரு மைல்கல்லுக்கு அடிப்படையாக விளங்கப் போகிறது என்பதை யாரும் முதலில் அறிந்திருக்கவில்லை.

"State Checked Possible Jurors in Evers Slaying"

என்ற தலைப்பில் ஜெரி மிட்சல் என்ற நிருபர் எழுதியிருந்த ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை ஜாக்ஸன் நகர மக்கள் கவனத்தை கவர்ந்தது. அந்த தலைப்பின் அர்த்தம், 'எவர்ஸ் கொலை வழக்கில் அரசு, போதுமான ஜுரர்களை பெக்வித்துக்கு சாதகமாக சரிகட்டியிருந்தது'.

இந்த விஷயம் வழக்கு நடந்த 1964-ம் ஆண்டே அரசல் புரசலாக ஜாக்ஸன் மக்கள் அறிந்திருந்தார்கள் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில், மாகாண ஆளுஞர் நீதிமன்ற வளாகத்திலேயே குற்றம் சாட்டப்பட்டிருந்த பெக்வித்தை வாஞ்சையாக கட்டியணைத்தார் என்ற செய்தி அப்போதே வெளியானது. மேலும் மிசிசிபி அரசு, பெக்வித்துக்கு எதிரான தீர்ப்பினை அஞ்சியது.

முன்னதாக, அரசு 1950-ம் வருடம் இறையாண்மைக் குழுமம் (Sovereignty Commission) என்ற அமைப்பினை இனவாத பிரிவினையினை மேம்படுத்தும் பொருட்டு ஏற்படுத்தியிருந்தது. எவர்ஸ் வழக்கில் அந்த குழுமம், பெக்வித் விடுதலைக்கு வேண்டி, சாதகமான ஜூரர்களை நியமிப்பதில் மற்றும் சரிகட்டுவதில் முழுதாக ஈடுபடுத்தப்பட்டு அதன் காரணமாகவே பெக்வித் விடுதலை செய்யப்பட்டார் என்ற ஆராச்சியினைத்தான் மிட்செல் கட்டுரையாக வடித்திருந்தார். வழக்கின் அனைத்து ஜூரர்களும் வெள்ளையின ஆண்கள். மிட்சல் அதில் கூறினாரா என்று தெரியாது, பல போலீஸ் மற்றும் நீதிபதிகள் கூட குற்றம்சாட்டப்பட்டவருக்கு சாதகமாக செயல்பட்டனர் என்று நான் படித்தேன்.

ஆனாலும், கடந்த 25 ஆண்டுகளில் அமெரிக்க சமுதாயம் அதன் கண்ணோட்டம் மற்றும் இனவாதத்துக்கு எதிரான குரல்களில் பெரிதும் மாற்றம் ஏற்பட்டிருந்தது. இறையாண்மைக் குழுமம் என்ற பெயரில், அரசு நிறுவனமே இனவாதத்தினை போற்றுவதெல்லாம் பழங்கனவாகியிருந்தது. எனவே மிட்சலின் இந்த கட்டுரை ஜாக்ஸன் மக்களிடையே பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இரண்டொரு நாளில், கலிஃபோர்னியோவில் குடியேறிவிட்ட மைரில்லேவின் பேட்டியுடன் மிட்சல் தனது அடுத்த கட்டுரையினை எழுதியிருந்தார். மைரில்லே, எவர்ஸ’ன் கொலையாலும் தனக்கு கிடைக்காத நீதியினாலும் மனம் சோர்ந்து விடவில்லை. தானும் தனது பிள்ளைகளும் நல்ல கல்வியினைப் பெற்று சமூக முன்னேற்றமடைவதுதான், எவர்ஸுக்கு தான் செலுத்தக் கூடிய சிறந்த அஞ்சலி என்பதை அறிந்திருந்தார். தனது தொடர்ந்த கல்வியின் பயனாக லாஸ் ஏஞ்சல் நகரின் பொதுப் பணித்துறையின் ஆணையர் என்ற பதவியில் இருந்தார். அவரது மகன்களும் மகளும் கூட நல்ல நிலமையில் இருந்தார்கள். ஆனாலும் எவர்ஸின் கொலையாளி தண்டிக்கப்பட வேண்டும் என்ற வைராக்கியம் அவரை விட்டுப் போகவில்லை. அந்த வைராக்கியத்தின் காரணமாகவே, இருபத்தைந்து வருடங்களாக அவர் ஒரு ஆவணத்தினை கட்டிக் காத்து வந்தார். அது, எவர்ஸ் கொலைவழக்கின் அனைத்து விபரங்கள் அடங்கிய நீதிமன்ற ஆவணங்கள். அந்த பேட்டியில் மைரில்லே எவர்ஸ் கொலை வழக்கு மீண்டும் நடத்தப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதற்கிடையில், ஜாக்ஸன் நகர அட்டார்னிக்கும் அவரது உதவி அட்டார்னியான பாபி டிலாஃப்டருக்கும் (Bobby DeLaughter) மிட்சலின் கட்டுரை பெரிய பிரச்னையாகி விட்டது. " எவர்ஸ் கொலை மீண்டும் விசாரிக்கப்பட வேண்டும்" எனவும்.... " கூடவே கூடாது, அது பல பழைய புண்களைக் கிளறும் ஒரு செயல்" என்றும் அநேக குரல்கள், தொலைபேசி வேண்டுதல்கள். ஒரு சட்ட வல்லுஞரின் பார்வையில் 25 வருடங்களுக்கு பின்னர் மறுவிசாரணை என்பது ஒரு கேலிக்கூத்து. மேலும் ஒரே குற்றத்திற்காக ஒரு நபர் இரண்டு முறை விசாரணைக்கு உட்படுத்தப்படக்கூடாது. எது எப்படியாயினும் குறைந்த பட்சம் புதிய சாட்சிகளாவது வேண்டும்.

ஆனால், சட்டச் சிக்கல்கள் மக்களுக்கு புரிய வேண்டுமே. பாபியும் அவரது மேலதிகரியான நகர அட்டார்னி எட்டும் (Ed) இனவாதிகள் என்று பொறுமையிழந்த சிலர் குற்றம் சாட்டினர். பாபிக்கு மக்களை திருப்திப்படுத்த வேண்டியாவது எவர்ஸ் விசாரணை மறுவிசாரணை செய்யப் படவேண்டியது அவசியம் என்று பட்டது. எட், 'உன்பாடு. எதுவும் செய்துகொள்' என்று சொல்லி விட்டார்.

இந்த வழக்கை தான் கையிலெடுப்பதே, வழக்கறிஞர்கள் வட்டத்தில் தன்னை நோக்கி கேலிக்கணைகளை செலுத்தும் என்பதை பாபி அறிந்திருந்தாலும், அவர் பிரச்னை அதுவல்ல. எங்கு விசாரணையினை ஆரம்பிப்பது என்று அவருக்கு தலையும் புரியவில்லை. வாலும் புரியவில்லை.

வழக்கில் பங்கெடுத்த ஜூரர்களின் பெயர்களைத் தவிர எவர்ஸ் வழக்கினைப் பற்றிய வேறு எந்த விபரமும் அவரிடம் இல்லை. ஜூரர்களில் சிலரை விசாரணை செய்ததில் அவருக்கு எந்த நம்பிக்கையும் ஏற்படவில்லை. வழக்கு சம்பந்தமாக சிலருக்கு அவர் விசாரணைக்காக கடிதம் எழுதியிருந்தார். அவற்றில் ஒருவர் மைரில்லே. மைரில்லே தனது அலுவலகத்துக்கு வருவார் என்று பாபி எதிர்பார்க்கவே இல்லை. வந்தது பெரிய ஆச்சர்யம். மைரில்லேவிடம், பாபி எவர்ஸ் வழக்கு சம்பந்தப்பட்ட எந்த ஒரு ஆவணச் சாட்சி, அதாவது துப்பாக்கி, புகைப்படங்கள், தோட்டா போன்ற எதுவும் தன்னிடம் இல்லையென்றும், முக்கியமாக சாட்சிகளை எங்கு சென்று தேடுவது என்றும் மெல்லக் கூறினார். ஆனால் அந்த சந்திப்பின் முடிவில் மைரில்லேவின் உறுதி பாபியை முற்றிலும் மாற்றியிருந்தது. 'விசாரணையின் எந்தவொரு புதிய முன்னேற்றத்தினையும் தனக்குத் தெரிவிக்குமாறு' வேண்டி மைரில்லே பாபியின் கைகளை தன் கைகளால் மெல்ல அழுத்தி விடை பெற்றுக்கொண்டார்.

ஒரு புலன் விசாரணை

மைரில்லே பாபியை சந்தித்த பின் நடந்த காரியங்கள்தான், அமெரிக்க குற்றவியல் வரலாற்றிலேயே ஆச்சர்யமூட்டும் விஷயங்கள் அடங்கிய ஒரு புலன் விசாரணை.

மிட்செல்லின் கட்டுரை வெளிவந்து இரண்டு மாதங்கள் ஓடிவிட்டது. டிசம்பர் ஐந்தாம் தேதி, ஜாக்ஸன் காவல்துறை புகைப்பட நிபுணர் தனது அலுவலக அலமாரிகளை சுத்தம் செய்து கொண்டிருந்த போது அவர் கண்ணில் பட்டது ஒரு போட்டோ. அது 1963-ம் வருடம் எவர்ஸ் கொலை நடந்த பின் எடுக்கப்பட்ட, கொலை நடந்த இடமான அவரது வீடு, மற்றும் வழக்கோடு சம்பந்தப்பட்ட சில புகைப்படங்கள். உடனடியாக அவர் தொடர்பு கொண்டது பாபி. விரைந்து வந்தார் பாபி. புகைப்படத்தை பார்த்த பாபியின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. ஆனாலும் இது ஒரு சிறிய ஆரம்பம்தான் என்பதும் அவருக்கும் தெரிந்திருந்தது.

வழக்குக்கு அடுத்த முக்கிய தேவை...துப்பாக்கி. நீதிமன்ற அலுவலரை விசாரித்ததில், அந்த நாட்களில் வழக்கு முடிந்தவுடன் முக்கியமான பொருட்களை நீதிபதிகள் தங்களுடன் வீட்டுக்கு எடுத்துச் சென்று விடுவர் என்ற செய்தி கிடைத்தது. உடனடியாக எவர்ஸ் வழக்கை விசாரித்த நீதிபதியின் பேரனை அணுகினார். அதனால் பயன் எதுவும் இல்லை.

சோர்ந்து போன பாபிக்கு கிறிஸ்மஸுக்கு பிறகு திடீரென தோன்றியது, 'அவரது மாமனார் வீட்டில் சில துப்பாக்கிகளை பார்த்ததான' ஞாபகம். அவர் மாமனார் ஒரு நீதிபதி. பாபி உடனடியாக அங்கு விரைந்தார். உயிருடன் இருந்த அவரது மாமியாரோ, தனது கணவரின் பொருட்கள் வீட்டின் மேலே மாடியில் இருப்பதாக கூறினார். அங்கிருந்த ஒரு பழைய பெட்டியில் சில துப்பாக்கிகள் இருந்தன. அதில் ஒன்றை பார்த்த மாத்திரத்திலேயே பாபிக்கு தெரிந்து போனது...அதுதான் அந்த துப்பாக்கி என்று.....அதில் ஒட்டப்பட்டிருந்த துண்டுச்சீட்டில்....OML 6/12/63 என்று எழுதியிருந்தது. OML எவர்ஸ் வழக்கை விசாரித்த டிடக்டிவ் ஒ.எம்.லூக். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் கைப்பற்றப்பட்ட எவர்ஸ் வழக்கின் துப்பாக்கி என்பதை பாபி முழுவதுமாக உண்ர்ந்த போது....தனது மயிர்க்கால்கள் குத்திட்டதாக பின்னர் கூறியுள்ளார்.

இதுவும் போதாது என்பது பாபிக்குத் தெரியும். இதற்கிடையில் தற்போது எழுபது வயதினைக் கடந்திருந்த பெக்வித் தன் பொருட்டு நடந்து கொண்டிருக்கும் கூத்தினை கிண்டல் செய்து கொடுத்த பேட்டி டைம்ஸ் பத்திரிக்கையில் வெளிவந்து பாபிக்கு மேலும் கடுப்பேற்றியது.

இந்த வழக்கின் அடுத்த அதுவும் முக்கியமான முன்னேற்றத்துக்கு நன்றி சொல்ல வேண்டியது கூ-க்ள்க்ஸ்-க்ளானுக்கு. 1964ம் வருடம் கொல்லப்பட்ட வேறு சில கறுப்பினத்தவரைப் பற்றிய 'Mississippi Burning' என்ற திரைப்படம் ஓரியன் நிறுவனத்தாரால் வெளியிடப்பட்டது. அதில் க்ளான் பற்றிய தகவல்கள் தவறானது என்று க்ளான் ஓரியன் நிறுவனம் மீது ஒரு வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில் ஒரியனுக்காக வழக்காடிய வக்கீல் ஜேக் ஏப்ளஸ், பாபியின் நண்பர். க்ளான் பற்றி தெரிந்து கொள்வதற்காக ஜேக் படித்துக் கொண்டிருந்த பல புத்தகங்களில் ஒன்று "Klandestine"

டெல்மர் டென்னிஸ் (Delmer Dennis) முதலில் ஒரு பாதிரியார். பின்னர் க்ளான் உறுப்பினர். கடைசியில் மனது மாறி எஃப்.பி.ஐ ஆள்காட்டியாக மாறி ஒரு வழக்கில் க்ளான் உறுப்பினர்களுக்கு எதிரான முக்கிய சாட்சியாக மாற்றப்பட்டார். அவரைப் பற்றியதுதான் அந்த புத்தகம். அதில் ஒரு பக்கத்தைப் படித்ததும் ஜேக்குக்கு ஞாபகம் வந்த நபர் பாபி. உடனடியாக பாபிக்கு போன் செய்து, அந்த பக்கத்தை படித்தார்...

அந்தப் பக்கத்தில் டெல்மர் ஒரு க்ளான் கூட்டத்தைப் பற்றி குறிப்பிடுகிறார். அதில் பெக்வித் கலந்து கொண்டு பேசியது, "நமது மனைவியர் குழந்தை பெறுவதற்க்காக எவ்வளவு சிரமப்படுகிறார்களோ...அந்த நீக்ரோவைக் கொன்றதில் அதை விட அதிகமாக, என் மனதில் வலி எதுவும் இல்லை"

முதல் முறை நடந்த விசாரணையில் இல்லாத, முதல் சாட்சி! அப்படித்தான் பாபி நினைத்திருக்க வேண்டும். ஆனால் டென்னிஸை எப்படித் தேடுவது. அவர் க்ளான் தீவிரவாதிகளுக்கு பயந்து எங்கோ மறைந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார். இப்படி பாபி யோசித்துக் கொண்டிருந்த போது, மிட்செல்லிடம் இருந்து தொலைபேசி அழைப்பு, 'என்ன, வழக்கில் எதாவது முன்னேற்றமுண்டா?'. பாபி அவரிடம் டென்னிஸ் பற்றி சொன்னார்.

'அப்படியா? இதோ, டென்னிஸின் தொலைபேசி எண் தருகிறேன். எழுதிக் கொள்ளுங்கள்' பாபி தன்னை கிள்ளிப் பார்த்துக்கொண்டார்.

டென்னிஸ் இருந்தது செவியர்வில்லெ என்ற பகுதியில். அங்கு போவதற்கு நாள் குறித்துக் கொண்ட பின், பாபிக்குத் தோன்றியது, பெக்வித்தைப் பார்த்தால் என்ன? என்று. பெக்வித் போனில் சிரித்ததாக கூறுகிறார். வழக்கின் இரண்டு தரப்பு கருத்தையும் கேட்க வேண்டி, அவரைப் பார்க்க முடியுமா? என்று கேட்டதற்கு பெக்வித்தின் பதில், "தாங்கள் ஒரு காக்கேசிய வெள்ளை இனத்தவரைச் சேர்ந்தவராக இருக்கும் பட்சத்தில் என்னைக் காண வரலாம். உங்களுடன் வருபவர்களும் அப்படியே" பின்னர் பெக்வித் தான் சொல்லும் இடத்துக்கு தனியாக வருவதனால் பாபியினை சந்திப்பதாக சொல்ல அந்த சந்திப்பு நிகழவேயில்லை.

டென்னிஸ், தனது வீட்டிலிருந்து வெகுதூரத்தில் உள்ள காட்டின் உட்புறம், ரகசியமாக பாபியை சந்தித்தார். புத்தகத்தில் எழுதப்பட்ட விஷ்யங்கள் உண்மைதான் என்றார். தன்னை ஃஎப்.பி.ஐ வேறு கொலைகளுக்கான சாட்சியாக தயார்படுத்தி வந்ததால், எவர்ஸ் வழக்கில் தான் யாரென்று காட்டிக்கொள்ளும் வண்ணம் போலீஸிடம் தெரிவிக்க முடியவில்லை என்றார். ஆனால், தற்போது பாபியின் அழைப்பில் நீதிமன்றம் வர தயங்கினார்.

"நான் 25 வருடங்கள் கஷ்டப்பட்டு விட்டேன். அவன் கிழவனாக இருக்கலாம். ஆனால் மிகவும் பயங்கரமான கிழவன்'. சரி, கோர்ட் மூலம் சம்மன் அனுப்பிவிட்டால் போகிறது என்று பாபி நினைத்தார்.

பாபிக்கு மற்றொரு பெரிய பிரச்னை, எவர்ஸ் வழக்கு ஆவணங்கள். அவை நீதிமன்றத்தில் இல்லை. பழைய ஆவணங்களை அழித்து விட்டார்கள். 'எவர்ஸ் வழக்கு' என்ற ஒரு வழக்கு நடைபெற்றதற்கான சட்டபூர்வமான ஆவணங்கள் இருந்தாலொழிய எந்த வழக்கின் மறு விசாரணைக்காக நீதிமன்றத்தினை அணுக முடியும். ஒருநாள் மிட்செல் பாபியிடம் ஒரு பார்சலைத் தந்தார். திறந்து பார்த்தால் மிசிசிபி அரசு எதிர் பைரன் டி ல பெக்வித் என்ற 1964-ம் ஆண்டு வழக்கின் முழு விபரங்களின் நகல்.

'அசல், எவர்ஸ’ன் மனைவி மைரில்லேவிடம் உள்ளது. அதனை யாரிடமும் கொடுக்க அவருக்கு பயம்'

'இதுவே போதும்...வழக்கு நடைபெறும் போதுதான் அசல் தேவைப்படும்' பாபி. பின்னர் மைரில்லே அசலையும் பாபியிடம், முழு நம்பிக்கை கொண்டு தந்து விட்டார். எந்த சக்தி மைரில்லேவை, அந்த ஆவணங்களைப் பாதுகாப்பாக வைக்க உதவியது?

பின்னர், பெக்வித்துக்கு அலிபியாக நின்ற காவலர்களை பாபி சந்தித்தார். பெக்வித் வழக்கறிஞர்களால் சரிகட்டப்பட்டோம் என்று அவர்கள் ஒப்புக்கொண்டனர். இவர்களை குறுக்கு விசாரணை செய்துவிட வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டார்.

இந்த விசாரணைகளைப் பற்றிய பத்திரிக்கை செய்திகள், பாபியை மிகவும் பாதித்தன. அவருக்கும் மற்றவர்களுக்கும் அநேக மிரட்டல்கள் வேறு. பலர், ஏன் அநாவசியமாக இதனை கிளறி அரசு பணம் வீணாக்கப்படுகிறது என்று ஆதங்கப்பட்டனர். ஒருமுறை, தனது வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வந்த மிரட்டலால், குழந்தைகளை அழைத்துக் கொண்டு அவர் தனது பெற்றோர் வீட்டில் தங்க வேண்டி வந்தது. விரைவில் மேலும் ஆச்சர்யங்கள் ஒன்றன் பின் ஒன்றாக கழ்ந்தன.

1990 செப்டம்பரில் பாபிக்கு ஒரு தொலைபேசி. அழைத்தவர் தன்னை பெக்கி மார்கன் என்று சொல்லிக் கொண்டார். பல வருடங்களுக்கு முன்னர் பெக்வித் அவரது தெருவில் வசித்தவர். ஒருமுறை சிறைக்கு தனது கணவரின் தம்பியை பார்க்க சென்ற மார்கனின் காரில் பெக்வித்தும் தொத்திக் கொண்டாராம். பின்னர் தான் சிறைக்கு வந்த விஷயத்தை யாரிடமும் மார்கன் சொல்லக்கூடாது என்ற மிரட்டலில், ' நான் அந்த நீக்ரோவைக் கொன்றேன். ஆனால் யாராலும் அதனை நிரூபிக்க முடியவில்லை. எனவே, நீங்களும் வாயை மூடிக் கொள்வது நலம்' என்றாராம். மற்றுமொரு புதிய சாட்சி. துள்ளிக் குதித்தார் பாபி.

விரைவில் மற்றுமொரு தொலைபேசி, மேரி ஆன் ஆடம்ஸ் என்பவரிடம் இருந்து. அவர் ஒருமுறை தனது நண்பருடன் உணவகத்தில் இருந்த போது, அவரது நண்பருக்குத் தெரிந்த சிலர் அங்கு வந்து, அவர்களுடன் வந்த ஒரு நபரைக் காட்டி, 'இது யார் தெரிகிறதா? இவர்தான் அந்த எவர்ஸ் என்ற விலங்கைக் கொன்றவர்' என்றவுடன் அந்த நபரும் அதனை ஆமோதிக்கும் வண்ணம் தலை ஆட்டினாராம். அவர்தான் பெக்வித். பின்னர் ஆடம்ஸ், 'ஒரு கொலைகாரனுடன் நான் கைகுலுக்க முடியாது' என்று மறுக்க அவருக்கும் பெக்வித்துக்கும் பெரிய வாக்குவாதம் ஏற்பட்டதாம்.

பாபிக்கு தனது அதிஷ்டத்தினை நம்ப முடியவில்லை. எப்படி இந்த சாதாரண மனிதர்கள், தங்கள் உயிரையும் பற்றிக் கவலைப்படாமல் வலிய, நீதிக்கு துணை நிற்க முன் வருகிறார்கள். இந்தியர்கள் இவர்களிடம் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது. ஆனால் இத்துடன் முடியவில்லை சாட்சிகள். பெக்வித் மீதான இரண்டாவது நீதிமன்ற வழக்கு விசாரணை ஆரம்பித்த பின்னர், இவ்வாறாக முன்வந்த மற்றொரு சாட்சி மிக முக்கியமானது.

மார்க் ரெய்லி 1979-ல் ஒரு சிறை அலுவலர். அந்த சிறையில் வேறு ஒரு குற்றத்திற்காக பெக்வித் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது ரெய்லிக்கும் பெக்வித்துக்கும், அப்பா-மகன் போன்ற உறவு ஏற்பட்டு பெக்வித் அவரிடம் தனது கொள்கைகளை சொல்லிக் கொண்டு இருப்பாராம்.

'கறுப்பர்கள், வெள்ளையர்களுக்கு அடிமைத்தனம் செய்வதற்காக படைக்கப்பட்டவர்கள். அவர்கள் அதனை மீறிச் செல்லும் போது அவர்களை கொல்வதில் தவறு ஒன்றும் இல்லை'.

ஒருமுறை பெக்வித் சிறை மருத்துவமனையில் அடைக்கப்பட்டிருந்த போது அவருக்கு பணிவிடை செய்வதற்கு வந்த கறுப்பின செவிலியரை பார்த்து பெக்வித், வேறு வெள்ளை செவிலியரை அனுப்பச் சொன்னாராம். அதன் காரணமாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, பெக்விக் கோபத்தில் கத்தினாராம், ' அவ்வளவு பெரிய ஆள்னு நினைத்துக் கொண்டிருந்த அந்த நீக்ரோவை, தீர்த்துக் கட்டிய எனக்கு...நீயெல்லாம் எம்மாத்திரம்' இதனை கேட்டுக் கொண்டிருந்த ரெய்லியோடு சேர்த்து பெக்வித்துக்கு எதிரான புதிய வாய்மொழிச் சாட்சிகள் நான்கு. முக்கியமாக கவனிக்க வேண்டியது, இந்த நால்வருமே பெக்வித்துக்கு ஏதோ ஒரு வகையில் நெருக்கமான வெள்ளையர்கள். இவர்களது மனச்சாட்சிக்கு இவர்கள் அடிபணிந்தது என்னை ஒரு இந்தியனின் கண்ணோட்டத்தில் ஆச்சர்யப்பட வைக்கிறது. ஆச்சர்யங்கள் இன்னும் முடியவில்லை...


மறு விசாரணை


1990, டிசம்பரில் பெக்வித் மீது மறுபடியும் கொலைக்குற்றசாட்டுகள் புனையும் பொருட்டு க்ராண்ட் ஜூரர்களை கிடைத்த ஆதாரங்களின் பெயரில் பாபி அணுகினார். அவர்கள் அனுமதியின் பேரில்தான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும். ஜூரர்களின் அறையிலிருந்து வெளியே வந்த பாபியின் முகத்திலிருந்த பெரிய புன்னகையிலிருந்தே....முடிவை, இதற்காக நீதிமன்றம் வந்திருந்த மைரில்லே தெரிந்து கொண்டார். பாபியை கட்டி அணைத்து விசும்பினார், 'நாம் வெகு தூரம் வந்து விட்டோம்'.

பாபி நினைத்தார்,'அமாம்..ஆனால் நாம் வெகு தூரம் இன்னும் போக வேண்டி உள்ளது'.

மூன்று நாட்களில் பெக்வித் எவர்ஸ் கொலை வழக்கின் விசாரணைக் கைதியாக சிறைக்கு அனுப்பப்பட்டார். பெக்வித்தின் மனைவி தன்னுடைய விடுமுறைக் காலத்தை பாபி கெடுத்து விட்டதாக கூறி, அதற்காக அவர் தண்டிக்கப்படுவார் என்று மிரட்டினார்.

ஒரு கலந்துரையாடலில் கலந்து கொள்ள வந்த புகழ் பெற்ற டாக்டர்.மைக்கேல் பேடன் என்ற தடயவியல் நிபுணரை பாபியும் எட்டும் சந்தித்து, எவர்ஸ் வழக்கு பற்றிக் கூறினர். பேடன், ' உயர் சக்தி வாய்ந்த ரைபிள் தோட்டா, எலும்பில் பட்டிருக்கும் வேளையில் அதில் நட்சத்திர வடிவிலான ஒரு துளையிருக்கும்' என்றார். பாபி, மைரில்லே அனுமதியுடன் மறு பிரேத பரிசோதனை செய்துவிடலாம் என்று தீர்மானித்தார். தந்தையின் முகமே அறியாத எவர்ஸின் கடைசி மகன் எவர்ஸின் உடலைப் பார்க்க விரும்பினார். உடல் பார்க்கத் தகுந்த நிலையில் இருக்கும் பட்சத்தில் அனுமதிப்பதாக பாபி கூறினார்.

அவர்களுக்கு மிகப் பெரிய ஆச்சர்யம் காத்திருந்தது எவர்ஸின் பெட்டியில். பெட்டியில் எவர்ஸின் உடல், நேற்றுத்தான் மரித்தது போல எவ்வித அப்பழுக்கும் இன்றி புத்தம் புதிதாக இருந்தது. அருகில் ஹோட்ட்லில் தங்கியிருந்த எவர்ஸின் கடைசி மகன் வரவழைக்கப்பட்டார். உடல் புகைப்படம் மற்றும் எக்ஸ்ரே படம் எடுக்கப்பட்டது, எலும்பில் உள்ள நட்சத்திர துளைக்காக...

எவர்ஸின் உடலைப்பற்றி பாபி கேட்டதற்கு மைக்கேல் பேடன், 'உடல் சிறந்த முறையில் பதப்படுத்தப்பட்டது (embalm) மற்றும் பெட்டி நாலு மீட்டர் ஆழத்தில், ஈரப்பதமின்றி வைக்கப்பட்டதால் இருக்கலாம்' என்றார்.

தனியே பாபியிடம் பேடன், 'நான் விஞ்ஞானி. இது விஞ்ஞான விளக்கம். அதற்கு மேலே நான் சொல்லக்கூடியதெல்லாம்....நீங்கள் கடவுளை நம்புபவரா? அப்படியெனில் உங்களால் விஞ்ஞானமற்ற விளக்கத்தை ஏற்றுக் கொள்ள முடியும்'. ஆரம்பமுதலே....பல ஆச்சர்யங்களை இந்த வழக்கில் பார்த்துவிட்ட பாபியால் பேடனில் விளக்கத்தை ஆமோதிக்க முடிந்தது.

என்ஸ்ரே முடிவு நட்சத்திர துளையை உறுதி படுத்தியது.

நீதியின் வெற்றி

ஒருவழியாக, வழக்கு விசாரணை 1994ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பித்தது. முதல் சாட்சியாக அறிமுகப்படுத்தப்பட்டவர் மைரில்லே. தனது கணவர், அவரது கொள்கைகள் மற்றும் கொலை பற்றி அவர் அளித்த சாட்சியே ஜூரர்களை அவர் பக்கம் ஈர்த்தது. பின்னர் புதிய சாட்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக, பெக்வித் எவ்வாறு பல்வேறு சந்தர்ப்பங்களில் தங்களிடம் எவர்ஸ் கொலையை ஒத்துக் கொண்டதாக கூறினர். ஆனாலும் பெக்வித் அதீத நம்பிக்கையுடன், அரசுத்தரப்பை தினமும் கேலி செய்து கொண்டிருந்தார்.

பிப்ரவரி மாதம் நான்காம் தேதி பாபி தனது வாதத்தை தொடங்கினார்.

'பெக்வித்தின் துப்பாக்கி, அதில் பொருத்தப்பட்டிருந்த தொலைநோக்கி, அவரது கைரேகை, அவரது கார் எல்லாம் அவருக்கு எதிராக இருந்தாலும் இதையெல்லாம் மீறி அவருக்கு எதிரான பெரிய சாட்சி அவரது வாய்.........ஆவணங்கள் அதிகம் அவருக்கு எதிராக இருக்கிறது ஆனால் இதையெல்லாம் மீறி அவர் தனது வாய் மூலம் கக்கிய விஷம்...அதை நாங்கள் சமர்ப்பிக்கிறோம். அவர் கக்கிய விஷம் இன்று அவருக்கு பாதகமாக வந்துள்ளது......'

அடுத்த நாள் தீர்ப்பு. ஜூரர்கள் வழக்கத்தை விட அதிகமான நேரம் எடுத்துக் கொண்டனர். அனைவர் முகத்திலும் தவிப்பு. இறுதியில் நீதிபதி ஹ’ல்ப்ர்ன் பெக்வித்தை குற்றவாளி என்று அறிவித்து....தண்டனைக்காக எழுந்து நிற்க சொன்னபோது நீதிமன்றமே அதிர்ந்தது......நீதிமன்றத்துக்கு வெளியே அதை விட அதிக ஆரவாரம்.

பெக்வித்தின் முகத்தில் முதல் முறையாக கேலிப் புன்னகை மறைந்து போனது. மைரில்லே பாபியை கட்டிக் கொண்டார். அவர் முகத்தில் 25 வருடங்களுக்கு முன் தொலைந்து போன ஒரு மலர்ச்சி வந்து புதிதாக ஒட்டிக் கொண்டது போல இருந்தது.....


பின் குறிப்பு:-

மிசிசிபி உச்ச நீதிமன்றம் 1997 ம் வருடம், ஜாக்ஸன் நகர நீதிமன்றம் பெக்வித்துக்கு அளித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்தது. எவர்ஸ் வழக்கு அறுபதுகளில் ஊற்றி மூடப்பட்ட வேறு சில கறுப்பினத்தவரின் மீதான் குற்ற வழக்குகளை உயிர் பெற்று எழ செய்து....இறுதியில் மிசிசிபி நீதித்துறை தனது கேவலமான வரலாற்றுக்கு பரிகாரம் தேடிக் கொண்டது.

பாபி எவர்ஸ் வழக்கு எப்படி தனது சொந்த வாழ்க்கையினை பாதித்தது என்றும் மற்ற பல விபரங்களையும் 'Never Too Late" என்ற புத்தகமாக எழுதியுள்ளார். அந்த புத்தகத்தின் சுருக்கத்தினன ரீடர்ஸ் டைஜஸ்டில் படித்து அதனையும் சுருக்கி மொழிபெயர்த்துள்ளேன். இந்த வழக்கின் காரணமாக மனைவியே வெறுத்துப் போய் அவரையும் அவரது குழந்தைகளையும் பிரிந்து விட, பாபி அவரைப் புரிந்து கொண்ட புதிய மனைவி தேடிக் கொண்டார். தற்போது அவர் ஒரு நீதிபதி.

எவர்ஸ் வழக்கு 'The Ghosts of Mississipi' என்ற திரைப்படமாக வெளிவந்துள்ளது. மைரில்லேவாக நடித்தது... வேறு யாராக இருக்கும்? ஊஃபி கோல்ட்பெர்க்!

1.10.06

வைகோ விடுதலையும் தாராள எண்ணங்களும்...II



ஏன் இவ்வாறு ஒரு நாட்டின் பிரதமரில் இருந்து கடைசிக் குடிமகன் வரை சட்டத்தை மீறும் நிலை ஏற்படுகிறது? ஏன் ஒரு மத்திய அமைச்சரே 'நான் தடை செய்யப்பட்டுள்ள இயக்கத்தினை இருபத்தைந்து முறை தரித்துள்ளேன்' என்று கூற தைரியம் கொள்கிறார்?

பொருளாதாரத்தின் முக்கியமான கோட்பாடான 'Doctrine of Diminshing Retrun' என்பது சட்டத்திற்கும் பொருந்துகிறது.

சட்டமானது மக்களின் அடிப்படி சிந்தனைகளுக்கு (common sense) மாறாக அதிகதிகமாக திரும்புகையிலும் மற்றும் மக்களின் சுதந்திரமான எண்ணங்களிலிருந்து அவர்களை விலக்கி வைக்க மேலும் மேலும் முயலுகையிலும் சட்டத்திற்கு கீழ்ப்படிதலின் அளவும் குறைந்து கொண்டே போக வாய்ப்பு இருக்கிறது.


இந்திய தண்டனைச் சட்டத்தின் 125 மற்றும் 126ம் பிரிவினைப் பற்றி கூறினேன். அந்தப் பிரிவுகள் இயற்றப்படுகையில் இலங்கை, பர்மா போன்றவை நம்முடன் அமைதியைப் பேணும் வேறு நாடுகள் ஆயினும் அனைத்து நாடுகளின் குடிகளும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் குடிகளாகளே. எனவே, வேறு நாட்டில் அழிம்பினை (Depredation) ஏற்படுத்தும் செயல்கள் இங்கும் குற்றமாக்கப்பட்டன.

தற்பொழுது முழுவதும் சுதந்திரமடைந்த நாடுகளாக இவை இயங்குகையில், இவ்விதமான பிரிவுகள் மக்களின் பொதுக்கருத்துக்கு இசைந்து வருவதில்லை.

கண்ணப்பனோ, வைகோவோ நான் 25 முறை கொலை செய்தேன் என்று கூற தைரியம் கொள்ள முடியாது. ஆனால் பயங்கரவாத இயக்கமாக பொடா சட்டத்தின் பட்டியிலில் சேர்க்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் இயக்கத்தினை ஆதரிப்பதாக பெருமை கொள்கின்றனர் என்றால், சட்டம் மக்களுடைய பொதுவான எண்ணத்தினை பிரதிபலிப்பதாக இல்லை என்றே கூற வேண்டும்.

பெரும்பான்மை எண்ணம் என்று கூட இல்லை, கணிசமான மக்கள் கூட்டம் இவ்வகையான சட்டங்களால் தங்களது சுதந்திரம் மட்டுப்படுத்தப்படுவதாக எண்ணினாலே போதுமானது.

வைகோ தவறு செய்தாரா இல்லையா என்பதை விட இவ்விதமான சட்டங்கள் தாராள எண்ணங்களுக்கு (libertarian) எதிரானவை என்று 'எண்ணங்கள்' பத்ரி சேஷாத்ரி கூறுவது மிகவும் கவனிக்கத் தக்கது. ஏனெனில் ஒருவர் தனது மனதில் கொள்ளும் கருத்தினை வெளிப்படுத்துவதை தடுக்கும் சட்டங்கள் மிக மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்த வல்லவை.


உதாரணமாக, பாலஸ்தீன ஹமாஸ் இயக்கம் பொடா சட்டத்தில் பட்டியலிடப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். ஹமாஸ் இயக்கம் பாலஸ்தீன விடுதலைக்கு மட்டுமல்லாது, சமுதாய பணியிலும் தன்னை அதிகமாக ஈடுபடுத்துகிறது. உண்மையில் பாலஸ்தீன மக்களின் ஆதரவை ஹமாஸ் பெறுவதே அதன் சமூக பணிகளின் காரணமாகத்தான். ஹமாஸை பற்றி நான் எனது எண்ணங்களை பகிர்ந்து கொள்கையில் அதன் சிறப்பான சமூக பணிகளை எடுத்துக் காட்டினாலே போதும் அதைக் கூட குற்றமென கூறலாம்.

தமிழீழத்தைப் பற்றி ஒரு பத்திரிக்கையாளர் எழுதுகையில் 'விடுதலைப்புலிகள் அங்கு சிறப்பான சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தியிருக்கின்றனர்' என்று எழுதினால் அதையும் 'சப்போர்ட்' என்ற ஆங்கில வார்த்தைக்குள் அடக்கிவிடலாம்தான். ஏனெனில் பொடா சட்டத்தின்படி ஒரு இயக்கத்தின் பயங்கரவாத செயல்களை அல்ல, ஒரு இயக்கத்தை ஆதரித்தாலே அது குற்றம் என அரசு நம்மை நம்ப வைக்கிறது.


அடுத்து, நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை கட்டுரையாளரான தாமஸ் ஃப்ரீட்மேன் இந்திய இஸ்லாமியர்களை மற்ற நாட்டு முக்கியமாக சவூதி அரேபிய இஸ்லாமியர்களிடம் இருந்து வேறுபடுத்துகிறார். ஏன் இந்திய முஸ்லீம்கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் அல்கொய்தா போன்ற அமைப்புகளில் இல்லை என்பதற்கு அவர் கூறும் காரணம் நம் நாட்டில் நிலவும் மக்களாட்சி மற்றும் சுதந்திரமான பத்திரிக்கை அமைப்புகள்.

குஜராத்தில் இஸ்லாமியர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். ஆனாலும் இந்தியா முழுமைக்கும் இஸ்லாமியர்கள் மற்றும் நடுநிலமை வகிக்கும் இந்துக்கள் ஆகியோர் தங்களது எதிர்ப்பினை பதிவு செய்ய முடிகிறது. சிறந்த நாடகாசிரியரான விஜய் டெண்டூல்கர் உணர்ச்சி வெள்ளத்தில் ஒருகணம் தடுமாறி 'என்னிடம் ஒரு துப்பாக்கி இருந்தால் முதலில் போய் நரேந்திர மோடியை போய் சுடுவேன்' என்று கூறுவது கூட முடிகிறது.

இவ்விதமாக மனதின் எண்ணங்களை சுதந்திரமான வகையில் வெளிப்படுத்த இயலுகையில் பயங்கரவாத எண்ணங்கள் உண்மையில் குறைந்துதான் போகும் என நான் உறுதியாக நம்புகிறேன். ஏனெனில், டெண்டூல்கரே தனது வார்த்தைகளுக்கு பின்னர் வருந்தியிருப்பார். அவரது ஆதங்கத்தை கண்ணுற்ற பாதிக்கப்பட்டவர்களில் சிலர், 'இந்த வார்த்தையே போதும்' என்றும் நினைக்கலாம்.

ஆனால் ஆட்சியாளர்கள், எதிலுமே உடனடி பலனை எதிர்பார்க்கும் காவல்துறையினரின் ஆலோசனையின் பெயரில், தீவிரவாத எண்ணங்களை ஒரேடியாக மறுப்பதன் மூலம் இல்லாமல் போகச் செய்யலாம் என்று நம்புகிறார்கள். கவலையை போதையில் மறைக்க முயற்சிப்பது போன்ற செயல்தான் இது.

அல்-கொய்தாவையே எடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் பயங்கரவாதிகள், யாரையும் வெடி வைத்து பிளப்பார்கள் என்ற கருத்துதான் ஊடகங்கள் எங்கும் பரவிக் கிடக்கின்றன. அல்கொய்தா யார்? எதற்குத் தோன்றியது? அவர்களது இறுதியான நோக்கம் என்ன? அதில் நியாயம் ஏதும் இருக்கிறதா? நடைமுறை சாத்தியமா? என்பதைப் பற்றிய எந்த ஒரு செய்தியையும், விவாதத்தையும் நான் காணவில்லை.

ஒருவரின் உடல் உபாதைகளை வைத்தே அவருக்கு இருப்பது குணப்படுத்த முடியாத புற்றுநோய்தான் என்று ஒரு மருத்துவர் முடிவுக்கு வருவது எவ்வளவு தவறான செயலோ அந்த அளவுக்கு தவறான ஒரு செயல் இது.

ஒரு பக்கத்து உண்மைகள் முழுவதுமாக மக்களுக்கு மறுக்கப்படுகையில், அந்த நியாயங்களைப் பொறுத்து ஒரு பொதுகருத்து ஏற்படப் போவதில்லை. அவ்விதமான பொதுக்கருத்துகள் ஏற்படாத நிலையில், அந்த நியாயங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் எந்த அரசுக்கும் வரப் போவதில்லை. பிரச்னைகளுக்கு தீர்வும் கிடைக்கப் போவதில்லை.

இறுதியாக, இவ்விதமான மாற்றுக் கருத்துகள், எண்ணங்கள் அனுமதிக்கப்படாமல் போகையில் நிலமை மேலும் மோசமாக போவதற்கு நமது நாட்டில் நடந்த ஒரு உதாரணத்தையும் கூற முடியும்.

அவசர காலத்தின் பொழுது ஊடகங்கள் அரசின் குரலை மட்டுமே பிரதிபலித்தன. ஒரு காலகட்டத்தில் மக்களுக்கு ஊடகங்களின் பெயரில் நம்பிக்கையே இல்லாமல் வெறும் வதந்திகளையே உண்மையென நம்ப ஆரம்பித்தனர். அரசு அட்டூழியங்கள் புரிந்தாலும், அந்த அட்டூழியங்கள் ஒன்றுக்கு பத்தாக மக்கள் நம்பத் தொடங்கினர். இறுதியில் மக்களுக்கு அரசின் மீது இருந்த ஒட்டு மொத்த நம்பிக்கையும் போய்...அரசினையே தூக்கி எறிந்தனர்.


விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிப்பதை சட்டம் போட்டு தடை செய்ய முயலும் அரசு ஒன்றினை மறந்து விட்டது. ஏதோ இந்த சட்டம் போட்டதால் மக்கள் ஆதரவளிப்பதிலிருந்து விலகவில்லை. அதற்கு முன்னரே நடந்த ராஜீவ் காந்தி கொலையே பெருமளவு காரணம். அந்த கொலையால் மக்களிடம் தோன்றிய பொதுக்கருத்தின் விளைவே விடுதலைப்புலிகள் இயக்கம் இங்கு தடை செய்யப்பட்டது. அந்த மக்களுக்கு தங்களது சிந்தனையில் அதே நிலையில் நீடிப்பதற்கும் காலப்போக்கில் மாற்றிக் கொள்வதற்கும் உரிமை இருக்கிறது. மக்கள் எவ்விதமான எண்ணப்பாட்டை கொள்ள வேண்டும் என்று தீர்மானித்த கம்யூனிச நாடுகளின் நிலை நாம் அறிந்ததுதானே!


சட்டத்தினை பற்றி எழுந்துள்ள பயத்தினால், பட்டியலில் இடம் பெற்றுள்ள எந்த ஒரு இயக்கத்தையும் பற்றிய நேர்மையான ஒரு விவாதம் நடத்தப்பட போவதில்லை.

இந்தியாவில் மட்டுமல்ல. இணையப் பதிவுகளையே பார்த்தால், ஈழப் பிரச்னையைப் பற்றிய எந்த ஒரு விவாதத்திலும் பங்கு கொள்பவர்கள் 'நான் விடுதலைப் புலி ஆதரவாளன் இல்லை' என்ற ஒரு மறுப்பினை எழுத வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். யாருமே விடுதலைப் புலி ஆதரவாளர்கள் இல்லை என்றால் எப்படி அந்த இயக்கத்தால் தமிழீழப்பகுதியில் ஆட்சி செய்ய முடிகிறது. பெரும்பான்மையான மக்களின் ஆதரவு இல்லாமல் அதனால் இன்று இருக்கும் நிலைக்கு உயர்ந்திருக்க முடியாது. கணிசமான எண்ணிக்கையில் இருக்கும் ஒட்டு மொத்த மக்கள் கூட்டத்தை நாம் எப்படி அப்படியே பெருக்கித் தள்ள முடியும்?

இவ்வாறாக ஒரேடியாக மாற்றுக் கருத்தினை மறுக்க முயன்றால் படிப்படியாக மக்களுக்கும் அரசு வலியுறுத்தும் கருத்தின் மீது உள்ள நம்பிக்கை எவ்வித விவாதத்திற்கும் உட்படாமலேயே, அது நியாயமாக இருப்பினும் மறைந்து போகுமென்பதுதான் வரலாறு நமக்கு கற்பித்த பாடம்.

ஒருவேளை இதை கருத்தில் கொண்டே பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவளிப்பதை குற்றமாக கருதாமல் பொடா சட்டத்தினை எழுதியிருக்கலாம்.

ஆனால், அரசு எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் குடிமக்களுக்கு இதனை தெளிவுபடுத்தியதாக தெரியவில்லை. ஊடகங்களிலும் செய்தி இல்லை. எனவேதான் ஆதரிப்பதே குற்றம் என்று அரசு கருதி அதனை செயல்படுத்த நினைக்கிறது என்றே எண்ணத் தோன்றுகிறது. என்னைப் பொறுத்தவரை பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு இது சரியான வழியல்ல...

மும்பை
21/04/04

30.9.06

வைகோ விடுதலையும் தாராள எண்ணங்களும்... I

(வைகோ விடுதலையின் பொழுது எழுதியதுதான்... இன்றும் அர்த்தமுள்ளதாகவே எனக்கு படுவதால்...)


சில நாட்களுக்கு முன்னர் அருண் வைத்யநாதன் என்பவர் 'வைகோ வழக்கில்’ மறு ஆய்வுக் குழுமத்தின் (Review Committee) தீர்ப்பினை பற்றி தனது வலைப்பதிவில் குறிப்பிடுகையில் 'பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் வைகோவே சட்டத்தை மீறலாமா?' என கேள்வி எழுப்பியிருந்தார்.

எதிர்பார்த்தது போலவே அவர் எழுப்பிய கேள்விக்கு சாதகமாக எதிர்வினைகள் இல்லை. ஆனாலும் மனிதர் அவரை ஆதரிக்க கூடிய ஒருவர் கூட இல்லையா என்று புலம்பியிருந்தார்.

அதன் பலனோ என்னவோ, 'இட்லி வடை' என்ற வலைப்பதிவாளர் பொடா சட்டம் முதல் பத்திரிக்கைச் செய்திகள் வரை பலவற்றை ஆதாரக் குறிப்புகளாக காட்டி 'மனித உரிமைகளை எல்லாம் தூர வைத்து விட்டு தீவிரவாதிகளை மூட்டைப் பூச்சி நசுக்குவது போல நசுக்க வேண்டும்' என்று பொரிந்து தள்ளியிருந்தார்.

இயல்பாக நகைச்சுவை ததும்பும் அவரது பதிவில் 'மறுஆய்வுக் குழுமத்தின் தீர்ப்பு மட்டுமே பெரிய நகைச்சுவை' எனக்குறிப்பிட்டு பின்னர் சேரியமாகவே சொல்கிறேன் என்று தனது கருத்துகளை எழுதியிருந்தார். வாசகர்களின் எதிர்வினைகளும் அவர் எழுதிய அதே வேகத்தோடு 'இட்லி சட்னியாயிரும்' என்பது வரை இருந்தது.

இரு வலைப்பதிவுகளையும் படித்த பின்னர் எனக்கு நிலை கொள்ளவில்லை, உடனடியாக பொடா சட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்று.
வைகோ எவ்விதத்தில் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றத்தினை செய்தார் என்பதும், குழுமத்தின் தீர்ப்பு என்னவென்பதும் நான் அறியேன் என்றாலும் அறிந்தமட்டிலும் சிலவற்றை பகிர்ந்து கொள்கிறேன்.


'அரசியல் தலைவராக இருக்கும் வைகோவே சட்டத்தை மீறலாமா?' என்ற அருணின் சந்தேகம் பலருக்கும் எழுவது இயல்பு.

ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். 'தான் சட்டத்தை மீறியதாக' வைகோ நிச்சயம் கூறியிருக்க முடியாது. இந்நிலையில் அவரது செயல் சட்டத்தை மீறியிருப்பதாக நீதிமன்றம்தான் தீர்க்க வேண்டும். மேலும், நீதிமன்றம் தீர்மானம் செய்யுமுன்னே நம்மால் தீர்ப்பு கூற முடியுமென்றால் நீதிமன்றங்களில் வழக்கு எதற்கு? நேரிடையாக தண்டனை கொடுத்து விடலாமே.

பொடா சிறப்பு நீதிபதி மாவட்ட நீதிபதி தகுதியில் இருப்பவர். ‘வைகோவின் செயல் சட்டத்தை மீறவில்லை’ என்று கூறியிருக்கும் குழுமத்தின் தலைவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர். எனவே, வைகோ சட்டத்தை மீறியிருக்கிறார் என்ற குற்றச்சாட்டு தற்பொழுது நியாயமில்லாதது. “பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவு தெரிவிப்பது குற்றமெனில் ஆதரிப்பதாக கூறும் அவர் குற்றவாளியில்லையா?” என்ற பொதுவான கேள்வி பத்திரிக்கை செய்திகளை வைத்து எழுகின்றது என்பது என் அபிப்பிராயம்.
-oOo-

பொடா சட்டத்தினை படித்த நான் வைகோ, பொடா சட்டத்தின் பிரிவு 21(1)(அ) பிரிவின் மீது குற்றம்சாட்டப்பட்டார் என்றே நினைத்தேன். 'இட்லி வடை' தனது ஆதராக் குறிப்பிலும் இந்தப் பிரிவினையே குறிப்பிடுகிறார். சரி, இந்தப் பிரிவு கூறுவது என்ன? "A person commits an offence if he invites support for a terrorist organisation" என்பதுதான்.

கவனிக்கவும் இங்கு குற்றமாக கூறப்படுவது ஆதரவு தெரிவிப்பதை அல்ல. ஆதரவு கோருவதை. பொடா சட்டம் முழுவதும் நான் படித்த வரையில் எங்குமே பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவு தெரிவிப்பது குற்றம் என கூறப்படவேயில்லை.

"உங்கள் வாக்குகளை பாஜாகாவுக்கு போடுங்கள்" என்று கூறாமல் ரஜினி "என் ஓட்டு பாஜாகாவுக்கு" என்று கூறியதன் வித்தியாசம் புரிந்தால் நான் இங்கு கூற விரும்பும் வித்தியாசமும் புரியும்.

சரி, அடுத்த பிரிவான 22ம் பிரிவு இந்த வித்தியாசத்தினை தெளிவாக்க உதவும். இந்தப் பிரிவு பயங்கரவாத இயக்கங்களுக்கு பொருளுதவி செய்வதைப் பொறுத்தது. பிரிவு 22(1)(அ) கூறுவது என்ன? "A person commits an offence if he invites another to provide money" இதற்கு அர்த்தம் பணத்தினை கோருவது என்பதை நான் கூற வேண்டியதில்லை.
அடுத்த உப பிரிவு 22(2)(அ) "A person commits an offence if he receives money or other property" இதற்கு அர்த்தம் பணம் பெறுவது குற்றம். அடுத்த உப பிரிவு 22(3)(அ) முக்கியமானது. "A person commits an offenc if he provides money or other property" இது பணம் கொடுப்பது.

ஆக, 22ல் மிகத் தெளிவாக பணத்தினை கோருவது, பெறுவது, அளிப்பது என்று எவ்வித சந்தேகத்திற்கும் இடமில்லாமல் பிரித்த சட்ட வரைவாளர்கள் 21ம் பிரிவில் கோட்டை விடுவார்களா?
-oOo-


எனது கருத்து மயிரினைப் பிளப்பது போன்ற மிக நுட்பமானது (hyper technical) என்று தள்ள முடியாது. ஏனெனில், குற்றவியல் வழக்குகளைப் பொறுத்தவரை இதுதான் குற்றம் என தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும். எனவே 'இட்லி வடை' சுட்டிக்காட்டும் கண்ணப்பன் 25 முறை என்ன 25 ஆயிரம் முறை கூட 'நான் இன்னாரை ஆதரிக்கிறேன்' என்று கூறிவிட்டு நான் குற்றமே செய்யவில்லை என வாதிடலாம்.

எனது கருத்தினை வைத்து, 'நீ இன்னருக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவிக்க முடியுமா?' என்று கேட்டுவிடாதீர்கள். எனது மருந்தினை என்னிடமே சோதிக்க இயலாது.

நான் கூற வருவது இவ்விதமெல்லாம் வாதிட வழி இருக்கிறது. எனவே 'இட்லி வடை' கூறியதைப் போல வைகோ விடுவிக்கப்பட்டதில் நகைச்சுவையாக ஏதும் இருக்க வழியில்லை.


வேடிக்கை என்னவென்றால், இக்கட்டுரை எழுதுமுன்னர் செய்திகளை மேய்கையில்தான் வைகோ கைது செய்யப்பட்டது பிரிவு 21(3)ன் படி என்ற விபரம் தெரியவந்தது. இந்தப் பிரிவு என்ன கூறுகிறது? "A person commits and offence if he addresses a meeting for the purpose of encouraging support for a terrorist organisation or to further its activities"
மீண்டும் ஒருமுறை படித்தால் இந்தப் பிரிவு எவ்வளவு குழப்பமாக (ambiguous) எழுதப்பட்டிருக்கிறது என்பது புரியும்.

இதில் கூறப்படுவது ஆதரவு திரட்டுவதற்காக கூட்டப்படும் கூட்டமா? இல்லை எந்த கூட்டத்திலும் ஆதரிக்கும் நோக்கத்துடன் பேசப்படும் பேச்சா? addresses a meeting என்பதற்குப் பிறகு arranged என்ற வார்த்தை இருந்திருந்தால் குழப்பமில்லாமல் இருந்திருக்கும்.

பயங்கரவாத இயக்கத்திற்கு ஆதரவு திரட்டும் நோக்கத்துடன் ஒரு கூட்டம் கூட்டப்படுகிறது. அங்கு வைகோ மட்டுமல்லாது 'அண்ணன் வருகிறார். அமைதியாக இருங்கள்' என்று கூட்டத்துக்கு அறிவிக்கும் எடுபிடி வரை அனைவரும் கைது செய்யப்பட வேண்டியவர்களே!

சரி, எந்த ஒரு கூட்டத்திலும் பயங்கரவாத இயக்கத்தினை ஆதரிப்பதனை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் பேசுவது குற்றம் என்று வைத்துக் கொண்டாலும், இந்தப் பிரிவின்படியும் ஆதரிப்பது மட்டுமே குற்றமாகவில்லை என வாதிட வழி இருக்கிறது' எனவே வெறுமே ஆதரித்தார் என்று வரும் பத்திரிக்கைச் செய்திகளை வைத்து வைகோ சட்டத்தை மீறினார் என்று கூற இயலாது.
-oOo-

இதற்கெல்லாம் முக்கிய காரணம் சமீப காலங்களில் எழுதப்படும் பல சட்டங்கள் போலவே, இந்த பொடா சட்டமும் மோசமாக வரையப்பட்டிருப்பதுதான்.
இந்திய தண்டனைச் சட்டம் சுமார் 125 ண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டது. மெக்காலே கல்வித்திட்டம் என்று நாம் அடிக்கடி விவாதிக்கும் அதே மெக்காலேவால் எழுதப்பட்டது. அதன் ஒவ்வொரு பிரிவும் யாதொரு குழப்பமும் இன்றி, சில சமயம் ஒரு கவிதையைப் படிப்பது போல சிலாகித்து படிக்கும் வண்ணம் இருக்கிறது.


ஆனால், சமீப காலங்களில் எழுதப்படும் சட்டங்கள் ஏதோ ஒருவர் எழுதும் கடிதம் போல எவ்வித கவனமும் இன்றி எழுதப்படுகின்றன. அதனாலேயே சட்டம் இயற்றப்பட்ட பின்னர் எழும் வழக்குகளைப் பொறுத்து சட்டப்பிரிவுகளை அங்கே இங்கே தட்டி மாற்றுவது வழக்கமாகி விட்டது. முதலில் இந்த "support" என்ற வார்த்தையே மிகவும் பாமரத்தன்மையாக இருக்கிறது. சப்போர்ட் என்றால் என்ன? என்றும் கூறப்படவில்லை. இந்த பொதுப்படையான வார்த்தைக்குள் எந்த ஒரு செயலையும் அடக்கிவிடலாம். இத்தகைய வார்த்தைகள் சட்டத்தினை துஷ்பிரயோகம் செய்ய துணையாக இருக்கும்.


சட்ட வரைவாளர்களின் ஆங்கில அறிவுக் குறைவு மற்றும் அவசர சட்டமாக பிறப்பிக்க வேண்டி வரைவாளர்கள் மீது அரசு ஏற்படுத்தும் நிர்ப்பந்தமே மோசமான சட்டவரைவுகளுக்கு காரணம். இப்படி மோசமாக ஆங்கிலத்தில் எழுதுவதை விட தாய் மொழியிலேயே சட்டத்தை இயற்றுவது நன்மை பயக்கும் என எண்ணுகிறேன். சரி, அதற்கு தனியே ஒரு கட்டுரை எழுதலாம்.
-oOo-


சட்டத்தை மீறுவதைப் பொறுத்து இவ்வளவு கண்டிப்பாக பேசுகிறோமே...முன்பு எம்ஜிர் முதல்வராக இருக்கையில் மதுரையில் ஒரு மாநாடு நடைபெற்றது. கலைஞர் கருணாநிதி ஏற்படுத்திய தமிழீழ தரவு இயக்கம் (TESO) மாநாட்டினை ஏற்பாடு செய்த அமைப்பு. மாநாட்டின் பெயர் ‘தமீழீழ ஆதரவு மாநாடு’. மாநாட்டில் பணம் வசூலிக்கப்பட்டு தமிழீழ போராட்டக்குழுக்களுக்கு வழங்கப்பட்டது. அப்போது எம்ஜிருடன் நெருக்கமாக இருந்த விடுதலைப்புலிகள் அதை பெற்றுக் கொள்ளவில்லை. பின்னர் அந்தப்பங்கும், சீறீசபாவுக்கு வழங்கப்பட்டது என நினைக்கிறேன். மற்ற இரு பெரிய போராளிக்குழுக்களூம் பணம் பெற்றனர்.

பணம் பெற்ற அனைவருமே ஆயுதப் போரட்டத்திற்குதான் அதை பயன்படுத்த போகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. மாநாட்டின் சிறப்பு பேச்சாளர்...நம்ம பிரதமர் வாஜ்பேயி! சரி, இதில் என்ன தவறு என்று கேட்கிறீர்களா?


‘இந்திய நாட்டுடன் அமைதியான உறவினை கொண்டிருக்கும் எந்த ஒரு நாட்டின் மீது போர் தொடுக்கும் அல்லது அழிம்பு செய்யும் செயலோ அல்லது அதற்கு உதவி புரிவதோ இந்திய தண்டனை சட்டம் பிரிவு 125, 126ன் படி ஏழு ஆண்டு தண்டனைக்குறிய குற்றம்’


ஏறக்குறைய தமிழ்நாட்டின் மொத்த ஜனத்தொகையையும், முன்னாள் பிரதமர், முதல்வர், ரா பிரிவு அதிகாரிகள், ஏன் இன்னாள் பிரதமரையும் சேர்த்து உள்ளே போடலாம்.
... to be contd.

மும்பை
19/04/2004

29.9.06

பரிசுகள் பலவிதம்!

டயோசிசன் (diocese) என்ற வார்த்தையினை அறிந்திருக்கலாம். தென் மாவட்டத்துக்காரர்கள், குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டத்துக்காரர்கள் அறிந்திருப்பர். டயோசிசன் என்பது, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய கிறிஸ்தவ திருச்சபையினை குறிப்பது. கிறிஸ்தவ சபையில் பெரும்பாலும் கத்தோலிக்கர் மற்றும் புரட்டஸ்டாண்ட் (அதாவது ஆதி கத்தோலிக்க திருச்சபையிலிருந்து 'protest' செய்து தனிச்சபை அமைத்தவர்கள்) என்ற இரண்டு பெரிய பிரிவுகள் உண்டு. கத்தோலிக்கர்கள் வாடிகனில் உள்ள போப்பினை தலைவராக கொண்டு, அதற்கு கட்டுப் பட்டவர்கள். புரட்ட்ஸ்டாண்ட் பிரிவினர் அப்படி எந்த ஒரு பெரிய அமைப்பிற்கும் கட்டுப்படாமல் தனித்து இயங்குபவர்கள்.

புரட்டஸ்டாண்ட் திருச்சபை, இங்கு தென்னிந்திய திருச்சபை (Church of South India or CSI) என்ற பெரிய அமைப்பாக விளங்கினாலும், அதன் சிறுசிறு அமைப்புகளாக விளங்கும் இந்த டயோசிசன்கள் தனித்து இயங்கும் அதிகாரம் படைத்தவை. குறிப்பாக திருநெல்வேலி டயோசிசன் ஆசியாவிலேயே மிகப் பழமையானது மற்றும் இந்தியாவிலேயே பெரிய புரட்டஸ்டாண்ட் திருச்சபை. இதே போல கத்தோலிக்க டயோசிசனும் உண்டு. கத்தோலிக்க-புரட்டஸ்டாண்ட் திருச்சபைகளுக்கான போட்டி பெப்ஸி-கோக் போட்டி போல அவ்வளவு பிரபலம்.

திருநெல்வேலி டயோசிசன் தொன்மையானது மட்டுமல்ல, திருநெல்வேலி மாவட்டத்தில் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு அமைப்புமாகும். கலெக்டர் கார்களில் காணப்படும் அவர்கள் பெயர்கள் தாங்கிய போர்டினைப் போல, 'பிஷப் ஆப் தின்னவேலி' என்ற பெயரைத் தாங்கிய போர்டுடன் ஒரு கான்டாசா கார், கடந்த முறை திருநெல்வேலி சென்றிருந்த போது எங்கள் அம்பாசடர் காரினை சர்ர்ர்ர் என்று தாண்டிச் சென்றதைப் பார்த்தேன். இத்தகைய சக்தி, திருநெல்வேலி டயோசிசனுக்கு இறையருளால் மட்டுமன்றி அதற்குச் சொந்தமாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பல கோவில்கள், கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் இதர விடுதிகளின் நிர்வாகத்தாலும் கிடைக்கிறது.

ஆர் எஸ் எஸ்காரர்கள் மேடைக்கு மேடை முழங்குவது போல மத மற்றும் மொழிவாரியான சிறுபான்மையினருக்கு நமது இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஒரு முக்கியமான உரிமையினை வழங்கியுள்ளது. அதாவது அவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்விக்கூடங்களை ஆரம்பித்து நடத்தலாம். மற்றபடி பெரிதாக உரிமை எதனையும் சிறுபான்மையினர் பெற்று விடவில்லை. பல நீதிமன்றத் தீர்ப்புகளால் தற்போது சிறுபான்மையினரின் கல்விக்கூட நிர்வாக உரிமை மட்டுப் படுத்தப் பட்டிருந்தாலும், இத்தகைய கல்விக்கூடங்களில் ஆசிரியர்கள், பணியாளர்களை நியமிக்கும் ஒரு பெரிய உரிமை இத்தகைய சிறுபான்மை அமைப்புகளுக்கு உண்டு. இதனோடு அபரிதமாக உள்ள சொத்துக்கள் மற்றும் கணிசமான எண்ணிக்கையில் உள்ள திருச்சபை அங்கத்தினர்கள், டயோசிசனை ஒரு சக்தி வாய்ந்த அமைப்பாக மாற்றியுள்ளனர்.

இவ்விதமான லௌகீகமான விஷயங்களை உள்ளடக்கிய இறைவனது திருச்சபையில், அதனை வழிநடத்தும் நபர்களின் எண்ணங்கள் ஆன்மப்பிரகாரமாக மட்டுமே இருக்க வேண்டும் என எண்ணுவது தவறு. சக்தி வாய்ந்த டயோசிசனின் பல்வேறு நிர்வாக அலுவல்களுக்கான பதவிகளுக்கு கடும் போட்டி நிலவும். கத்தோலிக்க திருச்சபை போலன்றி புரட்டஸ்டாண்ட் திருச்சபையில் அதன் தலைவரான 'பிஷப்' (ஆயர் என்றழைக்கிறார்கள், தமிழில்) பதவி உள்பட தேர்தல்தான். தேர்தல் என்றாலே அதன் வழித்தோன்றல்களான போட்டி, பொறாமை, வஞ்சகம் ஏன் சிலமுறை வன்முறையும் டயோசிசன் விவகாரங்களில் அரசு தேர்தல்களைப் போல எழுவதுண்டு. ஆனால் ஒருமுறை நாங்கள் சந்தித்த அனுபவம் வித்தியாசமானது...

டயோசிசன் சம்பந்தப்பட்டவர்கள் சட்ட ரீதியான பிரச்னைகளுக்காக எங்களை அணுகுவதுண்டு. அப்படித்தான் அன்று நானும் எனது சீனியரும் முக்கியமான ஒரு வேலையிலிருந்த போது ஒருவர் வேகமாக அலுவலகத்தினுள் நுழைந்தார். வந்தார் என்று சொல்வதை விட ஜல்லிக் கட்டுக்காக உசுப்பேற்றி விட்ட ஒரு காளையினைப் போல சடாரென புகுந்து, மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்க நின்றார். நான் என் சீனியரிடம் கண் காட்ட, தலையினைத் தூக்கிப் பார்த்தவர் எதுவும் சொல்லாமல், வந்தவரே ஏதாவது சொல்லட்டும் என்ற தொனியில், முகத்தில் எந்த சலனமுமின்றிப் பேசாமல் இருந்தார்.

வேறு யாரவதென்றால் கோபப் பார்வை அல்லது குறைந்த பட்சம் ஒரு எரிச்சல் பார்வையாவது பார்த்திருப்பார். ஆனால் வந்தது டயோசிசனில் முக்கியமான பொறுப்பு வகிக்கும் கொளரவமான நபர். அது தவிர ஒரு வேலையில் அதீத கவனத்துடன் மூழ்கியிருக்கையில் என்னதான் தடங்கல் ஏற்பட்டாலும், செய்து கொண்டிருக்கும் வேலையின் தீவிரத்திலுருந்து விடுபட சிறிது நேரம் பிடிப்பதுண்டு.

வந்தவர் நாற்காலியிருந்தாலும் அமரவில்லை. அதன் மீது கைகளை ஊன்றிக் கொண்டே, 'சார், இந்த ராஸ்கல்கள் பண்ண காரியத்தைப் பாத்தீயளா?' என்றார்.

'ராஸ்கல்கள்' என்று அவர் குறிப்பிட்டது, டயோசிசனில் அவருக்கு எதிரணியினை சேர்ந்தவர்கள் என்று அனுமானித்துக் கொண்டேன்.

'என்னாச்சு?', எனது சீனியர். தற்போது அவர் குரலில் லேசான எரிச்சல் இருந்தது. இதற்கு மேலும் எதுவும் அவர் பேச விரும்பவில்லை என்பதும் எனக்குப் புரிந்தது.

'என்னா அசிங்கம். அவனுங்க பாருங்க, அங்ன ஆபீஸ் சுவர் பூரா என்னப் பத்தி கெட்ட கெட்ட வார்த்தையா எழுதீருக்கானுவ...'

எங்கள் பக்கத்து கெட்ட வார்த்தைகள், உலகின் எந்த வகைக்கும் சளைத்ததில்லை. திட்டப்படுபவரை விட திட்டப்படுபவரின் முன்னோர்கள்தான் வம்புக்கு இழுக்கப் படுவதுண்டு. "அட! ஏதோ சுவராசியமான விஷயம் போல என்று நான் நினைத்தது போல எனது சீனியரும் நினைத்திருக்க வேண்டும். மெல்ல நாற்காலியில் சாய்ந்து, ஒரு சிகரெட்டினையும் வாயில் வைத்துக் கொண்டார். மண்டையினை உடைத்துக் கொண்டிருந்த வேலையிலிருந்து ஒரு சின்ன ரிலாக்சேஷன் என்று நினைத்திருக்கலாம். மெல்லிதான ஒரு சிரிப்பினைக் கூட அவர் முகத்தில் என்னால் உணர முடிந்தது.

'என்ன செய்யணும்', சிகரெட்டினைக் கொளுத்திக் கொண்டார்.

'நா, அவனுங்கள விடப் போறதில்லை. மான நஷ்ட நோட்டீஸ் ஒன்னு அனுப்புங்க சார்', நாலைந்து பெயர்களைச் சொன்னார், சடசடவென்று. அவர்கள்தான் அதற்குக் காரணம் என்று.

'அனுப்பிரலாம்.....' என்று சீனியர் என்னைப் பார்த்தார்.

குறிப்பறிந்த நான், எனது பேடை இழுத்து வைத்து, 'அதுல என்ன எழுதியிருந்ததுன்னு கரெக்டா சொல்லுங்க...'

'எல்லாம் கெட்ட கெட்ட வார்த்தைங்க...' இன்னமும் அவருக்கு உட்காரத் தோன்றவில்லை.

'அதான் என்ன கெட்ட வார்த்தை?'

'அத்த எப்படி தம்பி என் வாயால சொல்லுவேன். அந்த அசிங்கத்த நான் சரியா பாக்கக்கூட இல்ல'.

நான் என் சீனியர் முகத்தைப் பார்த்தேன், பரிதாபமாக.

சீனியர், 'அப்ப ஒண்ணு செய்யுங்க. திரும்பி ஆபீஸ¤க்குப் போயி, அங்க என்ன எழுதியிருக்குன்னு ஒரு பேப்பரில எழுதிட்டு வாங்க. பையன் நோட்டீஸ் அனுப்பிருவான்' பையன் என்றது என்னை.

வந்தவருக்கும் இந்த யோசனை பிடித்திருந்தது. அப்படியே எழுதிக் கொண்டு வருவதாக சொல்லிவிட்டுப் போனார்.


ஒரு மணி நேரம் கழிந்தது. நாங்கள் எங்கள் வேலையினை முடித்து விட்டு, டீ குடித்துக் கொண்டிருந்தோம். எழுதிக் கொண்டு வரப் போனவரைக் கூட மறந்து விட்ட தருணத்தில் மீண்டும் உள்ளே நுழைந்தார்.

நேரே எங்கள் அறைக்கு வந்தவர், மறுபடியும் உட்காராமல் நின்றபடியே ஒரு சின்ன 'பிரவுன் கவரை’ எனது சீனியர் முன் மேஜையில் போட்டார்.

'பாருங்க, நீங்களே படிச்சுக்கங்க...'

சீனியர் அதைத் தொடவில்லை. நான்தான் அதை எடுத்துப் பிரித்தேன். பிரித்தால் உள்ளே காகிதம் எதுவும் இல்லை. ஒரு ஐம்பது ரூபாய்த் தாள் மட்டும் இருந்தது. எதுவும் புரியாமல் அதை சீனியரிடம் காட்டினேன். இருவரும் வந்தவர் முகத்தைப் பார்த்தோம். அவரோ அந்தக் கவரையும் பணத்தையும் வெறித்துப் பார்த்தவாறு இருந்தார். திடீரென, அவருக்கு மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கியது. வியர்த்து வேறு கொட்டத் தொடங்கி விட்டது. நாங்கள் என்ன? என்ன? என்று கேட்பதற்குள், சடாரென என் கையில் இருந்த கவரையும், பணத்தையும் பிடுங்கி எதுவும் சொல்லாமல் எங்கள் அலுவலகத்தை விட்டு வெளியே ஒடி விட்டார். நாங்கள் இருவரும் ஒன்றும் புரியாமல் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்தோம். என்ன பேசுவது என்று கூட எங்கள் இருவருக்கும் புரியவில்லை.


மேலும் ஒரு அரை மணி நேரம் கழிந்திருக்கும். அந்த நபர் மறுபடி வந்தார். முதல் முறையாக அவர் முகத்தில் பெரிய சிரிப்பு. சத்தம் எதுவுமில்லை...ஆனால் வாயில் பொங்கிய சிரிப்பினை அவரால் அடக்க முடியவில்லை. அந்தச் சிரிப்பு மாறாமலேயே, அவராக நாற்காலியினை இழுத்துப் போட்டு அமர்ந்தார். முதல் முறையாக ரிலாக்ஸ்டாக அவரைப் பார்த்தேன். அந்த்ச் சிரிப்பும் முகத்தில் ஒட்டிவிட்டாற்ப் போல மறையவில்லை. 'என்ன ஆச்சு?' கண்களிலேயே சீனியர் கேட்டார்.

'நீங்க நம்ப மாட்டீங்க இந்தக் கூத்தை. பெரிய ஆபத்திலருந்துல்லா இன்னைக்கு தப்பிச்சேன். அப்போ இங்க வந்தன்லா, வர்ற வழில அங்ன சென்னரி ஹால்ல, நம்ம பிரண்டோட மகளுக்கு சடங்கு. அதுக்கு போனவன், மொய் கவருக்கு பதிலா, நீங்க எழுதிட்டு வரச் சொன்னீங்கல்லா, அந்த காயிதம் வச்சிருந்த கவரை குடுத்துட்டு வந்துட்டேன். இங்க பாத்தன்லா. அப்படியே ஆடிப் போயிட்டேன். மறுபடி அங்ன போயி அவன்ட என்னத்தையோ சொல்லி, அந்த கவரைத் தேடி வாங்கிட்டு வந்திட்டன். நல்ல வேளை அவம் பிரிக்கல்ல...'

ஒரே மூச்சில் சொல்லி முடித்தார். நாங்கள் சிரிக்கக் கூட இயலாமல், நம்ப முடியாமல் உட்கார்ந்திருந்தோம். வேறு பல விஷயங்களைப் பற்றி பேசிச் சென்றார். நாங்கள் அந்த கவரை வாங்கிப் பார்க்கவும் இல்லை. அவரும் நோட்டீஸ் அனுப்புவதைப் பற்றி பேசவில்லை.

'விடுங்க. கெடக்குறானுங்க. செத்த பயலுக' என்றார்.

28.9.06

ஓசாமா பிழைக்கும் வழி!

ஆப்ரிக்க நாடான ‘ருவாண்டா’வின் பாராளுமன்றம் விரைவில் தங்களது சட்டத்திலிருந்து மரண தண்டனையினை நீக்குவது குறித்து விவாதிக்கவுள்ளது. ருவாண்டா குடிமக்களில் பெரும்பான்மையினரின் எதிர்ப்பினையும் மீறி இவ்வாறு அதன் பாராளுமன்ற அங்கத்தினர்கள் மரண தண்டனையினை ஒழிப்பது குறித்து விவாதிக்க முன்வந்ததற்கு ஏதோ மனித உரிமைக் காவலர்களாக அவர்கள் மாறியதல்ல காரணம். மாறாக அவ்வாறு மரண தண்டனையினை ஒழித்தால்தான் ஐரோப்பிய நாடுகளோடு ருவாண்டா ஒரு எக்ஸ்ட்ராடிஷன் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ள இயலும். ஏன் ருவாண்டாவுக்கு ஐரோப்பிய நாடுகளோடு இவ்வாறான ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டிய அவசியம்?

சில வருடங்களுக்கு முன்னர் ருவாண்டாவில் நடைபெற்ற இனப்படுகொலையினை தொலைக்காட்சி செய்தியினை பார்ப்பவர்கள் மறந்திருக்க இயலாது. பல்லாயிரக்கணக்கான மக்கள் வாள்களை உபயோகித்தே வெட்டிக் கொல்லப்பட்டனர். இந்தப் படுகொலையினை பின்னிருந்து இயக்கிய பல சூத்ரதாரிகள் ஐரோப்பிய நாடுகளில்தான் பதுங்கியுள்ளனர். அவர்களை ருவாண்டாவாக்கு கொணர்ந்து தனது சட்டத்தின் முன் நிறுத்த ருவாண்டா இதுவரை எடுத்த நடவடிக்கைகள் பலனளிக்கவில்லை. ஏனெனில் பல ஐரோப்பிய நாடுகளில் மரணதண்டனை என்பது ஒழிக்கப்பட்டுள்ளது. மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரான அபு சலேமை கூட போர்ட்ச்சுக்கலில் இருந்து இங்கு தருவிக்க அவருக்கு அதிகபட்சம் 25 வருடங்களுக்கு மேலான சிறைத்தண்டனை வழங்கப்பட மாட்டாது என்று இந்திய அரசு ஒரு உறுதிமொழியினை அளிக்க நேரிட்டது. இதே காரணத்திற்காகவே ருவாண்டாவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறான ஒரு சட்டத்திருத்தத்தினை ஏற்படுத்தும் நிலைக்கு நிர்பந்தப்படுத்தப்பட்டுள்ளனர்!

அபு சலேம் எக்ஸ்ட்ராடிஷன் வழக்கு லிஸ்பனில் நடைபெற்ற பொழுது எனக்கு ஏற்ப்பட்ட சந்தேகம் மீண்டும் எழுகிறது..... பேசாமல் ஒசாமா பின் லேடன் போர்ட்சுகலுக்கு நழுவி விட்டால் வாஷிங்டன் என்ன செய்யும்?

மதுரை
280906

27.9.06

இருமனம் இணைந்தால் திருமணம் இல்லையா?


ராஜாத்தியும் செல்லையாவும் சென்னையில் படிக்கும் போது காதலர்கள். ஆனால் அவர்களது காதல் அவர்களது பெற்றோர்களால் ஏற்றுக் கொள்ளப்படாது என்பது இருவருக்கும் தெரியும். ஏனெனில் அவர்கள் இருவரும் வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள். மேலும் அவர்கள் காதலித்த ஆண்டு 1960. தமிழகத்தில் சுயமரியாதை இயக்கம் என்று சொல்லப்பட்ட திராவிட இயக்கமானது கல்லூரி மாணவர்களை தன்னகத்தே இழுத்து வேகமாக வளர்ந்து வந்த காலம். அதன் தலைவர் பெரியார் ஈ.வி.ராமசாமி இந்து மத சடங்குகளை தூக்கி எறிவதாக கங்கணம் கட்டிக் கொண்டு தீவிர பிரச்சாரம் செய்து வந்தார். செல்லையா சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர். சுயமரியாதை இயக்கம் எதிர்த்து நின்றவற்றில் முக்கியமானது இந்து திருமண சடங்குகள். செல்லையா தனது இயக்கத் தோழர்களின் ஆலோசனை வேண்ட விரைவிலேயே ராஜாத்தியும் செல்லையாவும் பெரியார் தலைமையில் வெறுமே மோதிரங்களையும், மாலைகளையும் மாற்றிக் கொண்டு திருமணம் செய்து கொண்டார்கள்....இல்லை அவ்வாறு நினைத்துக் கொண்டார்கள்!

விடுமுறையில் வீட்டுக்கு போன ராஜாத்தி வரவில்லை. செல்லையா தானும் ராஜாத்தியும் திருமணம் செய்து கொண்டதாக கூறி ராஜாத்தி தன்னுடன் வந்து சேர்ந்து வாழ வேண்டும் (Restitution of Conjugal Rights) என்று வழக்கு தாக்கல் செய்தார். நீதிமன்றம் இந்து திருமண சடங்குகள் ஏதும் பின்பற்றாமல் நடைபெற்றதாக கூறப்படும் திருமணத்தை எவ்வாறு திருமணமாக அங்கீகரிப்பது என்ற கேள்வியை எழுப்பியது. செல்லையாவின் வழக்கறிஞர்களிடம் இருந்ததோ ஒரே பதில்! எந்த இந்து ஆகமங்கள் வகுத்த சடங்கு முறைகளை தூக்கி எறிய வேண்டும் என்று அந்த திருமணம் நடைபெற்றதோ அதே இந்து மத ஆகமங்கள் கூறும் 'காந்தர்வ முறையிலான' திருமணமே செல்லையாவின் திருமணம், என்று வாதிடப்பட்டது.

ஆனால் இதே முறையிலான ஒரு வாதம் ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்கு முன்னர் நடை பெற்ற மற்றொரு சுயமரியாதை திருமணம் சம்பந்தப்பட்ட (தெய்வயானை ஆச்சி v/s சிதம்ப்ரம் செட்டியார் AIR1954 Mad 557) என்ற வழக்கிலும் எடுத்து வைக்கப்பட்டு சென்னை உயர்நீதி மன்றத்தினால் நிராகரிப்பட்டு இருந்தது. நீதிமன்றம் 'காந்தர்வ முறை என்பது சரிதான். ஆனால் அவ்வகையான திருமணத்திலும் முக்கியமான சடங்குகள் பின்பற்றப்பட் வேண்டியது அவசியம். அந்த சடங்குகள் எதுவும் பின்பற்றப்படாத வகையில் இந்த் திருமணம் செல்லாது' என்று தீர்ப்பு கூறியது (1966 (2) MLJ 40).

1954-ல் கூறப்பட்ட தெய்வயானை ஆச்சி வழக்கு தீர்ப்பும் 1966-ன் ராஜாத்தி வழக்கின் தீர்ப்பும் சுயமாரியாதை இயக்கத்தில் பெரிய ஆதங்கத்தை எழுப்பியது. அதன் பலனாக சுயமரியாதை இயக்கத்தின் கிளையான திராவிட முன்னேற்ற கழகம் 1967-ல் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த பின்னர் கொணர்ந்த முதல் சட்டத்திருத்தம், ‘சுயமரியாதை திருமணங்கள்' என்ற புதிய வகை திருமணங்களும் இந்து திருமணம்தான் என்று இந்து திருமண சட்டம்'1955 ல் ஏற்ப்படுத்தியதுதான். இந்த சட்டத்திருத்தம் தமிழகத்துக்கு மட்டுமே பொருந்தும்.

காதலர்களை இப்படி பிரித்துப் போட்டு சட்டத்திருத்தத்திற்கு வழிவகுத்த இந்து திருமண சட்டம்'1955 என்ன சொல்கிறது? இந்து திருமணம் என்பது இரண்டு இந்துக்களிடையே சாஸ்திரப்படியோ, அல்லது நெடுங்காலம் நிலவி வரும் பழக்க வழக்கத்தின்படியோ அல்லது சட்ட ஷரத்துகளின்படியோ நடைபெற்றாலே அது செல்லுபடியாகும். நமது கிராமங்களில் கோவில் பூசாரியை வைத்து வேறு சடங்குகள் இல்லாமல் தாலி கட்டிக் கொள்வது நெடுங்காலம் நிலவி வரும் பழக்க வழக்கத்தில் வருவதால் செல்லும். மேலே சொன்ன வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் ஜாதியில் சடங்குகளை கடைபிடித்து திருமணம் செய்வது வழக்கம். பல்வேறு சடங்குகள் இருப்பினும் 'சப்தபதி' 'பானிகிரஹானம்' என்ற இரு சடங்குகள் கடைபிடிக்காத பட்சத்தில் அந்த திருமணம் அறவே செல்லாது. இந்த இரண்டு வழிகளும் அடைக்கப்பட்ட நிலையில்தான் செல்லையா தனது திருமணம் 'காந்தர்வ' என்ற இந்து சாஸ்திரங்களில் கூறப்பட்ட முறையில் நடைபெற்றதாக வாதிட்டார். அதனை ஒத்துக் கொண்ட் நீதிமன்றம் காந்தர்வ முறையிலும் பின்னர் திருமண சடங்குகள் அவசியம் என்றது.


இந்து சாஸ்திரீய திருமண முறைகள்

சட்டத்தின் அங்கீகாரம் பெற்று விட்ட இந்து சாஸ்திரங்கள் திருமணங்களைப் பற்றி என்ன சொல்கிறது? காந்தர்வ திருமணம் என்பது ஒரு முறையென்றால் பிற வகையான முறைகள் இருக்கின்றனவா? இந்து சட்டத்திற்காக ஸ்ருதி, ஸ்மிருதி, புராணங்கள் என்று பல மூலங்கள் இருக்கின்றன. ஆதிகாலத்தில் இருந்தே அறியப்பட்டதும் இதற்கெல்லாம் தலையானதுமான மனுவின் சட்டங்கள் இவற்றில் முக்கியமானது. இந்து சாஸ்திரங்கள் எட்டு வகையான திருமண முறைகள் பற்றி கூறுகின்றன. அந்த எட்டு வகை திருமணங்களைப் பற்றி அர்த்த சாஸ்திரம் எழுதிய கெளடில்யர் வரை பல்வேறு ரிஷிகள் குறிப்பிட்டு இருந்தாலும் மனுவின் விளக்கம் பயனுள்ளது.

1. பிரம்ம முறை
வேத ஆகமங்களை கற்றுத்தேர்ந்து, நல்லொழுக்கமுள்ள ஒரு ஆணை, பெண்ணின் தந்தை அழைத்து, தனது மகளுக்கு விலையுயர்ந்த ஆடை அணிகலன்களைப் பூட்டி மணமுடித்து வைப்பது.

2. தெய்வா முறை
பூசை புனஸ்காரங்களை நிறைவேற்றும் அர்ச்சகருக்கு, பெண்ணின் தந்தை தனது மகளை ஆபரணங்களைப் பூட்டி தானமாக அளிப்பது.

3. அர்ஷா முறை
புனித கடமையை நிறைவேற்றும் பொருட்டு மணமகனிடம் இருந்து பெண்ணின் தந்தை தானமாக இவ்விரண்டு ஜோடி பசுக்களையும் காளைகளையும் பெற்று தனது மகளை மணமகனுக்கு அளிப்பது.

4. பிராஜாபத்ய முறை
பெண்ணின் தந்தை மணமகனுக்கு மரியாதை செலுத்தி, 'நீங்கள் இருவரும் இனி உங்கள் கடமைகளை இணைந்தே நிறைவேற்றுவீர்களாக' என்று சொல்லி தனது மகளை தானமாக அளிப்பது.

5. அசுர முறை
மணமகன் தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தனங்களை ஒரு கன்னிப் பெண்ணின் உறவினர்களுக்கு பரிசாக அளித்து மணமகளை அடைவது

6. காந்தர்வ முறை
மணமகனும் மணமகளும் ஒருவருக்கொருவரான பாலுணர்வால் உந்தப்பட்டு தாமாகவே இணைந்து வாழ்வது.

7. ராக்ஷஷ முறை
ஒரு பெண்ணின் உறவினர்களை கொன்று அல்லது காயப்படுத்தி, அவள் அழுதாலும் அரற்றினாலும் கவலைப்படாமல் அவள் விருப்பத்துக்கு மாறாக அவளை கவர்ந்து செய்து மணமுடிப்பது.

8. பைசாச முறை
ஒரு பெண் மயக்கமுற்று அல்லது உறக்கத்தில் இருக்கையிலோ அல்லது போதையிலிருக்கையிலோ அவளை நயவஞ்சகமாக அடையும் பாவகரமான முறை.

அனைத்து ரிஷிகளும் சிறிதளவே ஒருவருக்கொருவர் இந்த விளக்கங்களில் இருந்து வேறுபடுகிறார்கள். உதாரணமாக கெளதமர், யக்ஞவல்கியர் போன்றவர்கள் ராக்ஷஷ முறையினை, 'போரில் பலப்பிரயோகம் செய்து மணப்பெண்னை கவர்ந்து வருதல் காந்தர்வ முறை' என்று எளிமையாக குறிப்பிட்டுகின்றனர். பெயரிலும் வித்தியாசம் இல்லை என்றாலும் பெளதன்ய ராக்ஷஷ முறையை ஷாத்ர முறையென்றும் அசுர முறையினை மனுஷ முறையென்றும் கூறுகின்றார். பொதுவாக அனைவரும் ராக்ஷஷ முறை சத்திரியர்களுக்கு சட்டப்பிரகாரமான ஒன்று என்று ஒத்துக் கொள்கின்றனர். பைசாச முறையை எல்லோருமே தவறான முறை என்று ஒதுக்கினாலும் பெளதன்யர் மட்டும் காந்தர்வ, பைசாச முறைகள் சூத்திரர்களுக்கு தவறில்லை என்கிறார்.

இந்த எட்டுவகை திருமணங்களில் பிராஜாபத்ய மற்றும் பைசாச முறைகள் வெகுகாலம் முன்பே வழக்கொழிந்து விட்டன. பிரஜாபத்ய முறைக்கும் பிரம்ம முறைக்கும் பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை எனினும் மிக எளிமையான எவ்வித பிக்கல் பிடுங்கல் இல்லாத முற்போக்கான ஒரு முறை இந்து சமுதாயத்திலிருந்து அழிந்து போனது வருந்தத்தக்க ஒரு விஷயம். ராஜபுத்திரர்களிடையே நிலவி வந்த ராக்ஷஷ முறையும் ஒழிந்து போனாலும் சில மலைவாழ் பழங்குடிகளிடம் இன்றும் திருமணச் சடங்குகளில் ஒன்றாக நிலவி வருகிறது.

குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் மேற்சொன்ன எட்டு முறைகளும் ஒரு பெண்ணை திருமணத்திற்காக அடையும் முறையே தவிர திருமண முறைகள் அல்ல. ஏனெனில் திருமண சடங்குகள் பின்பற்றப்பட வேண்டிய அவசியம் இருக்கிறது. இந்த எட்டு முறைகளை மணமகளை தானமாக தருதல், விற்றல் மற்றும் மணமக்களுக்கு இடையேயான ஒப்பந்தம் என மூன்று வகைகளாக வகைப்படுத்தலாம். கடைசி மூன்று வகைகளில் மணமக்களுக்கிடையேயான ஒப்பந்தம் திருமணத்துக்கு முன்போ அல்லது பின்போ ஏற்படுவதாக கருதப்படுகிறது.

பைசாசம் என்று ஒரு முறை இருப்பதாலேயே அனுமதியில்லா உடலுறவு என்பது வேதகாலங்களில் ஒத்துக் கொள்ளப்பட்டது என்பது அர்த்தம் அல்ல. யக்ஞவல்கியர் குற்றவாளியின் கைகளை வெட்ட வேண்டும் என்கிறார். என்ன! அந்தப் பெண் உயர்குடியில் பிறந்திருந்தால் மரணதண்டனை என்கிறார். பாதிக்கப்பட்டவர் பிறந்த குடியைப் பொருத்து தண்டனைகள் மாறுவது ஏற்றுக் கொள்ளப்ப்ட்ட ஒரு விஷயமாக இருந்தது. ஆந்திர நாட்டை சார்ந்தவர் என்று கருதப்படும் அபஸ்தம்ப பாலியல் குற்றங்களுக்கு தரும் தண்டனை இன்று கூட பலரால் அடிக்கடி பரிந்துரைக்கப்படுவது. அதாவது ஒரு பெண்ணைப் பார்த்து, ஆபாசமாக பாடினால் பாடிய நாக்கு இழுத்து வைத்து அறுக்கப்படும். புரிந்து கொண்டிருப்பீர்கள். 'எந்த உறுப்பு தவறு செய்ய பயன்படுத்தப்படுகிறதோ அந்த உறுப்பினை வெட்டி எறிய வேண்டும்' என்கிறார்.

எப்படியோ பிரம்ம, காந்தர்வ மற்றும் அசுர வகை திருமணங்களைத் தவிர மற்ற வகை திருமணங்கள் ஏறக்குறைய முற்றிலும் தற்போது வழக்கொழிந்து விட்டது. இந்த மூன்று வகைகளிலும் கெள்டில்யரால் அர்த்த சாஸ்திரத்தில் 'தர்ம விவாகம்' என்று பரிந்துரைக்கப்பட முதல் ஐந்து வகை திருமணங்களில் இடம் பிடிக்காத, காந்தர்வ முறை மட்டுமே எதிர்காலத்தில் நிலைத்திருக்கப் போகிறது.


காந்தர்வ முறை திருமண முறையும் இந்தியாவின் அதன் எதிர்காலமும்
மிகவும் தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டு பல்வேறு காலங்களில் வேத வல்லுஞர்களாலும், நீதி மன்றங்களாலும் ஒதுக்கித் தள்ளப்பட்ட ஒரு திருமண முறை உண்டென்றால் அது காந்தர்வ முறையாகத்தான் இருக்க முடியும். மனுவின் விளக்கத்தை அப்படியே எடுத்துக் கொண்டு 'சடங்குகள் எதுவும் நிறைவேற்றப்படாத நிலையில் காந்தர்வ முறை என்பது 'கள்ளக்காதல்' (concubinage) என்ற பதத்தின் இடக்கரடக்கலான வார்த்தை' என்று நிராகரிக்கப்பட்டது. ஆனால் மனு பிற திருமணங்களுக்கும் சடங்குகளை எடுத்துரைக்கவில்லை. சடங்குகள் என்பது எல்லா வகை திருமணங்களும் முழுமை பெறுவதற்கு அவசியம் என்பது மறைபொருளான உண்மை. ஆகவே, ஒரு பெண்ணுக்கும் ஆணுக்குமான ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு தகுந்த சடங்குகளுடன் அவர்கள் மணமுடிக்குங்கால் அதனை சட்டபூர்வமில்லாதது என்று ஒதுக்கி விட முடியாது. என்ன! சில சமயங்களில் காந்தர்வ திருமணங்களில் சடங்குகள் ஆணும் பெண்ணும் உடலுறவு கொண்ட பின் நிறைவேற்றப் படுகிறது. ஒரு மணமகள் தன் சுய விருப்பத்தில் மணமகனை தானே தேர்ந்தெடுக்கும் சுயம்வரமே ஒரு வகையான காந்தர்வ திருமணம்தான்.

காந்தர்வ வகை திருமணங்கள் ஆதிகாலம் தொட்டே நிலவி வருவது மட்டுமல்லாமல் பல்வேறு ரிஷிக்களால் முழுமையாக அங்கீகரிக்கப்பட்டு இருக்கிறது. தர்ம சாஸ்திரங்கள் என்று அழைக்கப்படும் ஸ்மிருதிகள், ‘பருவமடைந்து மூன்று ஆண்டுகள் மணமுடிக்கப்படாமல் இருக்கும் ஒரு பெண் தன்னுடய பிரிவுக்குள் தானே ஒரு மணமகனைத் தேர்ந்தெடுத்து மணமுடிக்க' அனுமதி தருகிறது. ஆதிகாலத்தில் காந்தர்வ முறை ஷத்திரியர்களுக்கு மட்டுமே உரியது என்று கருதப்பட்டாலும் மனு, பெளதன்யர், நாரதர், யக்ஞவல்கியர் போன்றவர்கள் அனைத்து பிரிவுகளுக்கும் ஏற்றது என்று கூறிய படியால் அனைத்து பிரிவுகளிலும் சட்டர்பூர்வமாக கருதப்பட்டது. ஜாதிக்கு ஜாதி காதல் உணர்வுகள் வித்தியாசப்பட போகிறதா என்ன?

ஆனாலும், காந்தர்வ முறைகளை பற்றி எழுந்த குழப்பங்கள் நீதிமன்ற தீர்ப்புகளையும் பாதித்தது. காந்தர்வ முறை வழக்கொழிந்து விட்டதா இல்லையா? என்ற பல சந்தேகங்கள் எழுந்து சில முன்னுக்குப் பின் முரணான தீர்ப்புகள் கூறப்பட்டன. ஆனாலும் காலப்போக்கில் திருமண சடங்குகள் கடைபிடிக்கப்படுகையில் காந்தர்வ திருமணங்கள் செல்லும் என்பது பொதுவாக ஒத்துக் கொள்ளப்பட்ட சட்டக்கருத்தாக உருப்பெற்றது.

தற்போது சட்டரீதியாக, இப்படிப்பட்ட திருமண முறைகள் அவசியமில்லாத ஒன்று. 1954ம் ண்டு நிறைவேற்றப்பட்ட சிறப்புத் திருமண சட்டம் (Special Marriage Act'1954) மனம் ஒத்த இரு இந்துக்கள் பெற்றோர் சம்மதம் இல்லாமல் சடங்குகளை பின்பற்றாமல் திருமண பதிவாளர் முன்னிலையில் சட்டரீதியாக திருமணம் செய்து கொள்ள வழி வகுத்தது. ஆனால் அத்தகைய மணமக்களுக்கு சொத்துரிமை வழங்குவதில் சில குழப்பங்கள் ஏற்பட்டு 1976ம் ஆண்டு ஏற்பட்ட சட்ட மாறுதல்கள் மூலம் பிரச்னைகள் முற்றிலும் நீக்கப்பட்டன.

காந்தர்வ முறை மணம் புரிபவர்கள் தற்போது சிறப்புத் திருமண சட்டம்1954 அல்லது தமிழ்நாட்டைச் சேர்ந்தவராயிருப்பின் இந்து திருமணச் சட்டத்தின் கீழ் வரும் சுயமரியாதை அல்லது சீர்திருத்த திருமணங்களைப் குறித்த சிறப்பு ஷரத்துகளின் அடிப்படையில் திருமணம் புரிந்து கொள்ள வகையிருக்கிறது.

திருமணமே பொருளாதார பாதுகாப்பை முன்னிறுத்தி ஏற்பட்டுள்ள ஒரு வழக்கம். பொருளாதார பாதுகாப்பை தவிர வேறு உபயோகங்கள் திருமணங்களுக்கு இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. 'திருமணப் பந்தத்தினை மீட்டெடுப்பதற்கான' சட்டங்கள் (Restitution of Conjugal Rights) இருந்தாலும் விரும்பாத ஒரு கணவனையோ அல்லது மனைவியையோ நடைமுறையில் சேர்ந்து வாழ வைப்பது நீதிமன்றங்களால் முடியாத காரியம். எனவேதான் தனது குடிமக்களுக்கு சமுதாய, பொருளாதார பாதுகாப்பை அளிக்கவல்ல வளர்ச்சியடைந்த நாடுகளில் தற்போது திருமண பந்தமில்லாமல் 'long term relationship' என்று அழைக்கப்படும் மனமொத்த இருவர் சேர்ந்து வாழும் முறை பரவலாக பின்பற்றப்படுகிறது. இந்த முறையில் வாழ்வதால் பல அனுகூலங்கள் இருக்கின்றன. இந்தியாவும் அவ்வாறு பொருளாதார வளர்ச்சி பெறும் எதிர்காலத்தில் இங்கும் மெல்ல மெல்ல அத்தகைய முறை பின்பற்றப்பட போகிறது. மும்பை போன்ற நகரங்களில் மேல்தட்டு மக்கள் சிலர் ஏற்கனவே அப்படி வாழ்கின்றனர். தகுந்த பொருளாதார பாதுகாப்பு இருக்கையில் இப்படி வாழ எண்ணம் கொள்ளும் யாரும் இம்முறையை தாராளமாக கடைபிடிக்க முடியும். 'இது அந்நிய கலாச்சாரம் இல்லை. காந்தர்வ முறை என்று தி நூல்களில் சொல்லப்பட்ட இந்திய கலாச்சாரத்தின் நவீன வடிவம்தான்’ என்ற வாதமும் வைக்கப்பட இயலும். எது எவ்வாறாயினும், கணவன் மனைவிக்கிடையே நிலவும் அன்பும், ஒருவரையொருவர் சார்ந்திருக்கும் தன்மையைத் தவிர வேறு எந்த தாலியும் திருமண பந்தத்திற்கு வேலி இல்லை...

மும்பை
2002

14.9.06

நானாவதி!

(கொலை கதைகள் படிப்பதில் ஆர்வமுள்ளவர்களுக்காக, ஜூரர்கள் முறை இந்தியாவில் இருந்து ஒழிந்து போக காரணமாதும், பரபரப்பாக பேசப்பட்டதுமான வழக்கினைப் பற்றியது. நீதிமன்ற தீர்ப்புகளை பின்பற்றி கற்பனன ஏதும் இன்றி எழுதப்பட்டது. மொழி பெயர்ப்பல்ல!)

'இன்று எப்படியும் இந்தப் பிரச்னைக்கு முடிவு கட்டி விட வேண்டும்' கவாஸ் நானாவதி நினைத்துக் கொண்டார். 'எத்தனை நாட்கள் மனதுக்குள் வைத்து புழுங்குவது? எங்கு சென்றாலும் என்ன செய்தாலும் துரத்தி துரத்தி அரித்துக் கொண்டிருக்கும் கேள்விக்கு இன்று விடை கண்டு விட வேண்டும். இனிமேலும் இதை வளர விடக்கூடாது' என்று ஏதேதோ கறுவிக் கொண்டு இருந்தார்.

இந்திய கப்பற்படையில் உயர் பதவியில் இருந்த நானாவதிக்கு மனப்புழுக்கம் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். நானாவதியும் அவரது அவரது மனைவியான சில்வியாவும் பம்பாய் மேல்தட்டு வர்க்கத்தில் மிகவும் பிரபலம். 'இருவரும் என்ன பொருத்தம். அழகு' என்று அவர்கள் கலந்து கொள்ளும் விருந்துகளில் பொறாமைக் கண்கள் அவர்கள் மீது விழும். இந்திய பார்ஸி சமூகத்தை சார்ந்தவரான நானாவதியை ஆங்கிலேயரான சில்வியா காதல் திருமணம் புரிந்ததில் ஆச்சர்யம் எதுவும் இல்லை. பத்து வருட திருமண வாழ்க்கையின் பலனாக இரண்டு மகன்கள், ஒரு மகள். நானாவதியின் வேலை நிமித்தமாக பல இடங்களில் மாறி மாறி வசித்து வந்த மகிழ்ச்சிகரமான அந்த குடும்பத்தில் புயல் வீசப் போகிறது என்பதை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

புயலுக்கு காரணமானவர் பம்பாய் 'பார்ட்டி சர்க்கியூட்' என்று அழைக்கபடும் விருந்துக் குழுமத்தில் பிரபலமான பிரேம் அஹ¤ஜா. அஹ¥ஜா 34 வயது இளைஞர். சிந்தியரான அஹ¤ஜா பம்பாயில் தனது சகோதரியான மாம்மியுடன் வசித்து வந்தார். ஆட்டோ-மொபைல் தொழில் செய்து வந்த அஹ¤ஜாவின் உபதொழில் 'திருமணமான பெண்களைக் கவருவது' என்பது பம்பாய் விருந்துக் குழுமங்களில் கிசுகிசுக்கப்பட்டு வந்தது. அதுவும் பணி நிமித்தமாக அதிக காலம் வெளியே தங்க நேரிடும் பல கப்பற்படை அதிகாரிகளின் குடும்பங்களில் பிரச்னைகளை உருவாக்கியவர் என்பது அனைவாரலும் பேசப்பட்ட ஒரு ரகசியம்.

திருமணம் முடிந்து ஏழு வருடங்கள் கழித்து 1956ல் நானாவதியும் சில்வியாவும் குழந்தைகளுடன் பம்பாயில் குடியேறினர். இருவருக்கும் தெரிந்த நண்பர் ஒருவர் மூலம் அஹ¤ஜா நானாவதியுடன் அறிமுகம் கிட்ட விரைவிலேயே குடும்ப நண்பர்களாக மாறினர். அஹ¤ஜாவின் வசீகரமும், செல்வமும், மேல்தட்டு பழக்க வழக்கங்களும் நானாவதியையும் சில்வியாவையும் அஹ¤ஜா பக்கம் இழுத்தது. நானாவதி பணி நிமித்தம் அடிக்கடி வெளியே செல்ல, சில்வியாவுக்கு அஹ¤ஜாவின் மீதான நட்பு காதலாக மாறியது.

முதலில் அஹ¤ஜாவுக்கு சில்வியாவின் மீது இருந்தது மோகம்தான். ஆனல் சில்வியாவோ அஹ¤ஜா மீது அளவு கடந்த காதல் கொண்டிருந்தார். 'திருமணம் செய்து கொள்ளலாம்' என்று சில்வியா வேண்டிய போது, 'அப்படியானால் எத்தனை பெண்களைத்தான் நான் மணந்து கொள்வது?' என்று அலட்சியமாக பதிலளித்தார். சில்வியாவுக்கோ உயிரே பிரிந்தது போல இருந்ததாம். ஆனால் காலம் செல்ல செல்ல சில்வியாவின் அபரிதமான காதலால் அஹ¤ஜாவின் மனம் மாறியது என்றே தோன்றுகிறது. 'ஒரு மாதம் இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்காமல் இருப்பது. அதற்குப் பின்னரும் காதல் மிஞ்சியிருந்தால் திருமணம் செய்து கொள்வது' என்று முடிவெடுத்திருந்தனர்.

இதற்கிடையில்தான் நானாவதிக்கு மனைவியின் நடவடிக்கை மீது சந்தேகம் வலுத்தது. கடந்த சில மாதங்களாகவே சில்வியாவின் உறவில் ஒருவிதமான இறுக்கத்தை கவனித்து வந்தார். 1959ல் இரண்டு வார கப்பல் பயணத்துக்குப் பிறகு ஏப்ரல் மாதம் பதினெட்டாம் தேதி வீட்டுக்கு வந்திருந்தார். அவரது சகோதரரும் தனது மனைவியுடன் விருந்தினராக வந்திருந்தார். இருவரும் குடும்பத்துடன் மூன்று நாட்கள் அஹமது நகர் சென்றனர். பம்பாய் திரும்பிய சில நாட்களில் நானாவதியின் சகோதரர் சென்று விட்டார். இரு குடும்பங்களும் பேசி மகிழ்ந்தாலும் சில்வியா முகத்தில் வழக்கமான உற்சாகம் இல்லை. நானாவதியின் கேள்விக்கும் சரியான பதில் இல்லை. 'அதெல்லாம் ஒன்றும் இல்லை. நான் ஓ.கே.' என்பதுதான் பதிலாக இருந்தது.


***
ஏப்ரல் மாதம் 27ம் தேதி. நானாவதி வீட்டு செல்ல நாய்க்கு உடல்லை சரியில்லை. நானாவதியும் சில்வியாவும் நாயை அழைத்துக் கொண்டு பம்பாய் பரேலில் இருந்த கால்நடை மருத்துவமனைக்கு சென்றனர். திரும்பி வரும் வழியில் சில்வியா 'மெட்ரோ சினிமா'வில் மாலைக் காட்சிக்காக அனுமதிச் சீட்டுகள் வாங்கினார். பின்னர் வீட்டில் மதிய உணவுக்காக மேசையில் அமர்ந்திருக்கையில் நானாவதி தனது கைகளை சில்வியாவின் தோள் மீது ஆதரவாக வைத்தார். ஆனால் சில்வியாவோ நானாவதியின் இந்த செயலால் மேலும் இறுக்கமானது போல இருந்தது. அவரிடமிருந்து எந்த பதிலும் இல்லை.

உணவுக்கு பின்னர், சில்வியா எதுவும் பேசாமல் முன்னறைக்கு சென்று ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டார். அவர் அருகே சென்று அமர்ந்த நானாவதி மெல்ல ஆரம்பித்தார்.

"கவனி. சில விஷயங்களை நமக்குள் நேரிடையாக தீர்த்துக் கொள்வது நல்லது. என் மீது உனக்கு இன்றும் முன்பு போலவே காதல் உள்ளதா?"

சில்வியாவிடம் இருந்து பதில் ஏதும் இல்லை.

"நீ வேறு யாரையும் காதலிக்கிறாயா?"

மீண்டும் பதில் இல்லை.

நானாவதிக்கு உடனே அஹ¤ஜாவின் நினைப்பு வந்தது. ஏனெனில் சில நாட்களுக்கு முன்னர் அவர் கப்பலில் இருக்கும் போது அவரது சகோதரர் அளித்த ஒரு விருந்தில் கலந்து கொள்ள சில்வியா போகவில்லை. ஏன் போகவில்லை என்று பின்னர் கேட்ட போது, 'அஹ¤ஜாவின் சகோதரி அளித்த ஒரு விருந்தில் கலந்து கொள்வதாக ஏற்கனவே ஒத்துக் கொண்டதால் போகவில்லை' என்று பதில் வந்தது. 'அஹ¤ஜாவாக இருக்குமோ' என்று ஒரு கணம் நினைத்த நானாவதி,

"யார் அஹ¤ஜாவா? சொல்" என்றார்.

"ம்" சில்வியா இந்த முறை பதிலளித்தார்.

"நீ எனக்கு உண்மையுள்ளவளாக இருக்கிறாயா?" என்ற கேள்விக்கு பதிலில்லை சில்வியாவிடமிருந்து. ஆனால் 'இல்லை' என்று உணர்த்தும் விதமாக தலையசைத்தார்.

நானாவதி திடுக்கிட்டார். சில்வியாவைப் பற்றியிருந்த கரத்தை விடுவித்தவாறு, " நான் உடனே போய் அந்தப் பன்றியுடன் இந்த விஷயத்தைப் பேசி தீர்க்கப் போகிறேன்"

உடனே சில்வியா நானாவதியின் கரங்களைப் பற்றியபடி "இல்லை. இல்லை. நீங்கள் போக வேண்டாம். அவனிடம் துப்பாக்கி இருக்கிறது. உங்களைச் சுட்டு விடுவான். அவனிடம் என்ன பேசப் போகிறீர்கள்?" பதட்டத்துடன் கெஞ்சினாள்.

"அவன் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் என்பது எனக்குத் தெரிய வேண்டும். உன்னைத் திருமணம் செய்து குழந்தைகளையும் பார்த்துக் கொள்ள அவன் தயாராக இருக்கிறானா என்று கேட்கப் போகிறேன். இந்தத் துரோகத்துக்கு அவன் பதில் சொல்ல வேண்டும்"

நானாவதி தொடர்ந்தார், "இந்தப் பிரச்னையிலிருந்து மீள்வதற்கு கவுரமான ஒரே வழி அவன் உன்னை திருமணம் செய்து கொண்டு குழந்தைகளை பார்த்துக் கொள்வதுதான். பேசிப் பார்ப்பேன். இல்லை அவனை அடித்து நொறுக்கி விடுவேன்"

"சொல்லு. அவன் உன்னை திருமணம் செய்து கொள்வதற்கு தயாராக இருக்கிறானா?" மீண்டும் மீண்டும் கேட்டும் சில்வியாவிடம் இருந்து பதில் வரவில்லை.

***

ஏப்ரல் மாதம் 27ம் தேதி மதிய உணவுக்கு பின் மேற்கண்ட உரையாடல் தங்களுக்குள் நடந்ததாக நானாவதியும் சில்வியாவும் பின்னர் அடித்துக் கூறினாலும்...இத்தகைய அமைதியான முறையில் இந்த உரையாடல் நடந்திருக்க முடியாது என்று நீதிமன்றங்கள் நிராகரித்தன. நானாவதியின் கழுத்துக்கு முன்னர் தொங்கிய தூக்குக் கயிற்றிலிருந்து தப்பிக்கும் வண்ணம் கணவன் மனைவி இருவரும் பேசி வைத்து இந்த உரையாடலை ஜோடித்திருக்க வேண்டும் என்று கருதின. ஏனெனில் அந்த நாளின் மாலையில் நானாவதி செய்த காரியம் அப்படிப்பட்டது.


மாலை நானாவதி சில்வியாவையும் குழந்தைகளையும் தனது காரில் மெட்ரோ சினிமா அழைத்துச் சென்றார். அரங்கத்தில் அவர்களை இறக்கி விட்டவர், தான் கப்பலிலுள்ள மருத்துவமனையில் சுகவீனமான நாய்க்கு மருந்து வாங்கி விட்டு காட்சி முடியும் நேரத்தில் வந்து அவர்களை வீட்டுக்கு அழைத்துச் செல்வதாக கூறிச் சென்று விட்டார். ஆனால் திரைப்படம் முடிந்து வெகு நேரமாகியும் நானாவதி வரவில்லை. சில்வியா குழந்தைகளை அழைத்துக் கொண்டு தனியே வீட்டுக்கு திரும்ப வேண்டியதாகி விட்டது.

மாலை மணி 4.45. கப்பற்படையின் புரோவோஸ்ட் மார்ஷலான கமாண்டர் சாமுவேல் நியூ குயின்ஸ் சாலையில் இருந்த தனது வீட்டின் ஜன்னல் வழியே அருகிலிருந்த பாண்ட் ஸ்டாண்டின் அழகை ரசித்துக் கொண்டிருந்தார். திடீரென ஜன்னல் முன் தோன்றிய அந்த உருவம் அவரை அதிர்ச்சியடைய வைத்தது. ஒரு கணம் அவருக்கு ஒன்றும் புரியவில்லை. 'நானாவதி! என்னவாயிற்று இவனுக்கு? நன்றாக குடித்திருக்கிறானோ?' பல கேள்விகள் மனதில் ஓடி மறைந்தன.

"நானாவதி? என்ன நடந்தது. ஏன் இப்படி இருக்கிறாய்? இங்கே என்ன திடீரென?" கேள்விகளை அடுக்கியவாறே நானாவதியை எதிர் கொண்டார்.

"கமாண்டர், எனக்கும் என்ன நடந்தது என்று தெரியவில்லை. ஆனால் நான் ஒரு மனிதனை சுட்டு விட்டேன் என்று நினைக்கிறேன்"

"என்ன சுட்டு விட்டாயா? எங்கே நடந்தது"

"நேபியன் ஸீ சாலையில்"

"ஏன்?"

"அவன் என் மனைவியை நயவஞ்சகமாக உறவு கொண்டு விட்டான்"

"சரி! சரி! உள்ளே வந்து அமைதியாகச் சொல். என்ன செய்யலாம் என்று யோசிக்கலாம்"

"நன்றி. ஆனால் நான் போக வேண்டும். நான் எங்கே சென்று இதனை சொல்ல வேண்டும் என்று சொல். அது போதும்"

கமாண்டர் சாமுவேல் எவ்வளவு வருந்தி அழைத்தும் நானாவதி உள்ளே வரவில்லை, "சரி. நீ சி.ஐ.டி அலுவலகத்தில் உள்ள துணை ஆணையாளர் லோபோவைப் போய் பார். நான் அவருக்கு இப்போதே ஃபோன் செய்து நீ வரும் விபரம் சொல்கிறேன்"

அப்படியே கமாண்டர் சாமுவேல் துணை ஆணையாளர் லோபோவை தொடர்பு கொண்டு பேசினார். அவர் பேசி முடிக்கையில் நானாவதி அங்கு இல்லை. புரோவஸ்ட் மார்ஷல் என்பவர் கப்பற்படையில் காவல் பணிகளைச் செய்பவர். எனவே அவருக்கு காவல் துறையுடன் நெருங்கிய தொடர்புண்டு.

***

மாலை மணி 5.05. காம்தேவி காவல் நிலைய காவலர், உதவி ஆய்வாளர் பஃன்சால்கருக்கு, காவல் நிலையத்துக்குள் பதட்டத்துடன் ஓடி வரும் அந்த மனிதனைப் பார்த்ததும் புரிந்து போனது, 'இது ஒரு சாதாரண வழக்காக இருக்கப் போவதில்லை' என்று.

"ஐயா. கொலை நடந்துருச்சு"

"என்ன கொலையா? யாரை? எங்கே?"

"என் பெயர் புரன்சிங். நான் ஸெடல்வாட் ரோட்டில இருக்கிற 'ஜீவன் ஜ்யொத்' கட்டிடத்தில் வாட்ச் மேனா இருக்கிறேன். எங்க பில்டிங்ல பிரேம் அஹ¤ஜா என்பவர் இருக்கிறார். அவரோட ஃபிரண்ட் நானாவதி. நேவில ஆபிஸரா வேலை பார்க்கிறார். நாலே கால் மணி இருக்கும் நானாவதி அவரோட கார்ல வந்தாரு. காரை நிறுத்திட்டு படியில ஏறி அஹ¤ஜா வீட்டுக்கு போனவரு, ஐந்து நிமிடம் கூட இருக்காது திரும்பி வந்து காரை வேகமா திருப்பி வேளியே போகப் பார்த்தார். அவர் பின்னாலேயே அஹ¤ஜா வீட்டில வேலை பார்க்கிற அஜ்னானியும், தீபக்கும், 'நானாவதி அஹ¤ஜாவை கொன்று விட்டதாக சொல்லிக்கொண்டு ஓடி வந்தார்கள். நான் கேட்டில் காரை மறித்ததும் அஜ்னானி காருக்கு முன்னால் வந்து நின்று கொண்டார். 'ஏன் அஹ¤ஜாவை கொன்றீர்கள்?' என்று கேட்டேன். அதற்கு அவர், 'அவன் என் மனைவியுடன் தொடர்பு வைத்திருந்தான். எனவே அவனுடன் எனக்கு சண்டை வந்து அவனைக் கொன்று விட்டேன்' என்றார்"

"ம்ம்ம்...மேலே சொல்லு. பிறகு என்ன நடந்தது" பஃன்சால்கர்.

"நான் அவரிடம் போலீஸ் வரும் வரை அவர் அந்த கட்டிடத்தை விட்டு போகக் கூடாது என்று சொன்னேன். அதற்கு அவர், தானும் போலீஸ் ஸ்டேஷனுக்கே செல்வதாக சொல்லிவிட்டு காரை ஓட்டிக் கொண்டு போய்விட்டார். பின்னர் அஹ¤ஜாவின் அக்கா மாம்மி என்னை இங்கு வரச் சொன்னார்கள். நீங்கள் உடனே அங்கு வரவேண்டும்"

"சரி வா, போகலாம்" ப•ன்சால்கர் புரன்சிங்கை தன்னுடன் ஜீப்பில் ஏற்றிக் கொண்டார்.

***

அஹ¤ஜாவின் ஃப்ளாட் இருந்த நேப்பியன் ஸீ சாலை பம்பாயிலேயே அதிக விலைமதிப்பு மிக்க இடம். பெரிய தொழில் அதிபர்கள் வசிக்கும் இடம். அங்கு வீடுகளை வைத்திருக்கும் கனவான்கள், 'இந்தியாவிலேயே மிகப் பெருமை மிக்கது இந்த விலாசம்' என்று சொல்லிக் கொள்வர்.

அஹ¤ஜாவின் வீடு ஜீவன் ஜ்யோத் கட்டிடத்தின் முதல் மாடியில் இருந்தது. பஃன்சால்கர் அங்கு சென்ற போது புரன்சிங் குறிப்பிட்ட அஹ¤ஜாவின் சகோதரி மாம்மி, வேலையாட்கள் அஜ்னானி, தீபக் இவர்களுடன் மருத்துவர் ஒருவரும் இருந்தார்.

அது ஒரு பெரிய ஃப்ளாட். முதலில் ஒரு ஹால். அந்த ஹாலின் வடக்குப் பக்கம் அஹ¤ஜாவின் படுக்கை அறை. அங்கு சுவ்ரை ஒட்டியபடி ஒரு பெரிய ரேடியோகிராம். அதற்கு தெற்குப்பக்கம் குளியலறைக்குச் செல்லும் கதவு. அந்தக் கதவுக்கு அடுத்து கண்ணாடியுடன் கூடிய அலங்காரம் செய்து கொள்ளும் கப்போர்ட்டு.

பாத்டப் வசதியுடன் பெரிய குளியலறை அது. அங்கிருந்த கம்மோடுக்கு மேலாக சிறிய கண்ணாடிகள் பொருத்திய ஜன்னல். அஹ¤ஜா, வலது கை மீது தலையை தாங்கி இடுப்பில் ஒரு டவலை மட்டும் சுற்றியபடி,அந்தக் குளியலறையில்தான் பிணமாகக் கிடந்தார். தலை படுக்கையறை பக்கமாகவும் கால்கள் கம்மோடினை நோக்கியும் கிடந்தது. கம்மோடுக்கு மேலிருந்த ஜன்னல் கண்ணாடிகள் உடைந்திருந்தது. குளியலறையிலேயே அஹ¤ஜாவின் மூக்குக் கண்ணாடியும் இரண்டு சுடப்பட்ட தோட்டாக்களும் இருந்தது. அஹ¤ஜாவின் ஒரு செருப்பு குளியலறையிலும் மறுசெருப்பு படுக்கையறையிலும் இருந்தது. குளியலறை சுவர்களிலும் அதன் கதவு கைப்பிடியிலும் இரத்தம் சொட்டிக் கொண்டு இருந்தது. மூலையில் ஒரு கவர் "லெஃப்டினண்ட் கானல் கே.எம்.நானாவதி என்ற பெயரைத் தாங்கியபடி நடந்த நிகழ்ச்சிக்கு சாட்சியாக கிடந்தது.

***

உதவி ஆய்வாளர் ஃபன்சால்கர் அஹ¤ஜாவின் வீட்டுக்கு போன அதே வேளையில் நானாவதி துணை ஆணையாளர் லோபோவின் அலுவலகத்தில் இருந்தார். லோபோ இது ஒரு கொலை வழக்கு என்பதால் அங்கிருந்த ஆய்வாளர் மோக்காஷியிடம் நானாவதியை அவரது பாதுகாப்பில் எடுத்து வழக்கினை புலன் விசாரணை செய்யும்படி உத்தரவிட்டார்.

நானாவதியை காவல் சிறையில் வைத்த மோக்காஷி சம்பவ இடத்துக்கு விரைந்தார். அங்கு ஏற்கனவே சென்றிருந்த உதவி ய்வாளர் ஃபன்சால்கர் மோக்காஷிக்காக காத்திருந்தார். அது ஒரு கொலை வழக்கான பட்சத்தில் ஆய்வாளர் அந்தஸ்தில் உள்ள ஒரு அதிகாரிதான் புலன் விசாரணை செய்ய முடியும்.

***

பிரேத விசாரணையை (inquest) முடித்து அஹ¤ஜாவின் பிணத்தை பிரேத பரிசோதனைக்காக (autopsy) அனுப்பிய மோக்காஷி அங்கேயே விசாரணையை தொடங்கினார். கொலை நடந்த வீட்டிற்குள் மூன்று நபர்கள் இருந்தாலும் யாரும் கொலையை நேரடியாக கண்ணுறவில்லை. ஆனாலும் அஹ¤ஜாவை சுட்டுக் கொன்றது நானாவதி என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனாலும் எதையும் எளிதாக, அதுவும் கொலை வழக்கில் எடுத்துக் கொள்ள முடியாது என்பதை அனுபவம் அவருக்கு உணர்த்தியிருந்தது.

டாக்டர் ஜாலா என்பவரால் அஹ¤ஜாவின் பிரேதம் பரிசோதனை செய்யப்பட்டது. ஒரு குண்டு அஹ¤ஜாவின் வலது நெஞ்சுப் பகுதியில் புகுந்து சற்றே கீழிறங்கி நுரையீரலைத் துளைத்து அங்கேயே தங்கியிருந்தது. நெஞ்சில் குண்டு துளைத்த இடத்தில் கரித்துகள்களோ அல்லது திசுக்கள் பொசுக்கப்பட்ட தடங்களோ (charring or carbonaceous tatooing) இல்லை. மற்றொரு குண்டு தலையில் பின்பகுதியில் வேகமாக சிராய்த்து உட்புகாமல் ஆனால் பலத்த ரத்தப்போக்கை கபாலத்துக்குள் ஏற்படுத்தியிருந்தது. இடது கையில் இரு விரல்களுக்கு இடையேயும் குண்டு பாய்ந்து சென்ற காயம் இருந்தது. இடது உள்ளங்கையில் பின்புறத்தில் மேலும் இரண்டு இடங்களில் குண்டு பாய்ந்ததற்கான காயங்கள். உள்ளங்கை காயங்களில் கரிபதிந்து பொசுங்கியிருந்தது. உள்ளங்கையில் இருந்த மூன்று காயங்களும் ஒரு குண்டினாலேயே ஏற்பட்டிருக்க வேண்டும், அதுவும் கை துப்பாக்கியிலிருந்து ஆறிலிருந்து பதினெட்டு அங்குல தூரத்தில் இருக்கையிலேயே ஏற்பட்டிருக்க வேண்டும் என அனுமானித்தார். இதைத் தவிர அஹ¤ஜாவின் உடலில் பெரிய காயங்கள் எதுவும் இல்லை.

நானாவதியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கி ஆறு ரவைகள் பொருத்தக்கூடிய செமி-ஆட்டோமாட்டிக் ரக கைத்துப்பாக்கி. செமி ஆட்டோமாட்டிக் என்பதால் ஒவ்வொரு தோட்டாவை சுடுவதற்கும் குதிரையை இழுக்க வேண்டும். இழுக்கப்பட்ட குதிரையை மீண்டும் விட்டாலே அது பழைய நிலைக்கு போய் அடுத்த தோட்டா சுடுவதற்கு தயாரான நிலைக்கு வரும். இவ்வாறாக குதிரையை இழுத்து விடுவது தோட்டா இருக்கும் அறையை சுழற்றி விடுவதற்கும் தோட்டாவை அறைந்து சுடுவதற்குமான இரண்டு பணிகளையும் செய்வதால் அதற்கு அதிகம் பலம் உபயோகப்படுத்த வேண்டும். அதாவது ஒவ்வொரு முறை சுடுவதற்கும் குறைந்தது 20 பவுண்டு அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும்.

அந்தத் துப்பாக்கியிலிருந்து மூன்று தோட்டாக்கள் சுடப்பட்டிருந்தன. இரண்டு குளியலறையிலும் ஒரு தோட்டா அஹ¤ஜவின் உடலிலிருந்தும் கண்டெடுக்கப்பட்டன.

***

ஒரு வழக்கில் கைது செய்யப்பட்ட நபரை 24 மணி நேரத்துக்குள் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்படவேண்டும். கொலை நடந்த அன்றே கைது செய்யப்பட்ட நானாவதியும், மறு நாள் நீதிபதி முன்று ஆஜர்படுத்தப்பட்டார். காவலர்கள் அவரை மேலும் விசாரிக்க வேண்டியிருந்ததால், நீதிபதி அவரை காவலர் வசமே ஒப்படைத்தார். காவலர்கள் விசாரணை முடிந்தவுடன் விசாரணைக் கைதியாக சிறையில் அடைப்பது வழக்கம். பின்னர் புலன் விசாரணை முழுவதுமாக முடிந்தவுடன் குற்றம் சாட்டப்பட்டவரை பிணையில் (bail) விடுவிப்பதுண்டு. ஆனால் கைது செய்யப்பட்ட மூன்றாவது நாளே, நீதிபதிக்கு பம்பாய் கப்பற்படை பிரிவின் கொடி அலுவலரிடம் இருந்து ஒரு கடிதம், ' கப்பற்படை சட்டத்தின் அதிகாரத்தினை பயன்படுத்தி நானாவதி சிறைக் காவலில் அல்லாமல் கப்பற்படைக் காவலில் வைக்கப்படுகிறார்' என்பதாக. நீதிபதிக்கு வேறு வழியில்லை. எனவே நானாவதி சாதாரண சிறையில் ஒரு நாள் கூட கழிக்காமல் கப்பற்படைக் காவலிலேயே பாதுகாக்கப்பட்டார்.

புலன் விசாரணை வேகமாக முடிந்து, அஹ¤ஜா கொலை வழக்கு பம்பாய் அமர்வு நீதிபதி (Sessions Judge) முன்னர் விசாரணைக்கு வந்தது. ஜூரர்கள் முன்னதான விசாரணை. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இருப்பது போல இந்தியாவிலும் எழுபதுகள் வரை கிரிமினல் வழக்குகள் ஜூரர்கள் முன்னிலையில் நடைபெற்றன.

ஜூரர்களை கொண்டு விசாரிக்கப்படும் வழக்குகளில் நீதிபதியும் இருப்பார். வழக்கின் சட்டம் சம்பந்தமான பிரச்னைகளுக்கு (questions of law) நீதிபதிதான் பதிலளிப்பார். ஆனால் பொருண்மை சம்பந்தமான கேள்விகளுக்கு (questions of fact) ஜூரர்கள் பதிலளிப்பர். உதாரணமாக குற்றம் சாட்டப்பட்ட நபர் கொலை செய்துள்ளாரா இல்லையா என்பதை ஜூரர்கள் தீர்மானிப்பர். அதற்கு உதவும் வண்ணம் வழக்கு விசாரணை முடிந்தவுடன், நீதிபதி ஜூரர்களுக்கு வழக்கின் தன்மை மற்ற பிற சட்டம் சார்ந்த விஷயங்களை விளக்குவார். அதற்குப் பிறகு ஜூரர்கள் தங்களது தீர்ப்பினை கூறுவர். குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளியா இல்லையா என்பதை ஜூரர்கள் தீர்மானித்த பிறகு தண்டனை என்ன அளிப்பது என்பதை நீதிபதி தீர்மானிப்பார். பொதுவாக குற்றவியல் சட்டங்களில் அதிக பட்ச தண்டனை குறிப்பிடப்பட்டிருக்கும். அந்தக் குறிப்பிட்ட கால அளவைக்குள் நீதிபதி என்ன தண்டனை வேண்டுமானாலும் அளிக்கலாம்.

ஜூரர்கள் முறை 1861ம் ண்டு இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஜூரர்களின் அனுபவமின்மையும் மற்ற சில காரணங்களும் பல தவறான தீர்ப்புகளுக்கு வழிவகுத்து விட்டதால் 1872ல் நீதிபதி ஜூரர்களின் தீர்ப்பிலிருந்து வேறுபடும் போது வழக்கினை உயர்நீதிமன்றத்தின் ய்வுக்கு அனுப்பலாம் என்ற சட்டதிருத்தம் கொண்டுவரப்பட்டது. வேறு சில திருத்தங்களுக்கு பின்னர் இறுதியில் 'ஒரு வழக்கில் ஜூரர்களின் முடிவு, நெறிமுறைக்குட்பட்டு ஒரு மனிதன் எடுக்கும் முடிவுக்கு வேறுபட்டது' என்று நீதிபதி கருதினால், அவர் தனது கருத்தினை தெளிவாக எழுதி உயர்நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு அனுப்பலாம் என்பது சட்டமாக இருந்தது.

***

ஒரு சாதாரண கொலை வழக்கு இந்தியாவின் மத்தியதர மேல்தட்டு மக்களிடையே மிக மிக பரபரப்பாக விவாதிக்கப்பட்டதற்கு சம்பந்தப்பட்டவர்களின் சமுதாய தகுதிகள்தான் காரணம் என்றாலும், மரபு மீறிய காதல் அதன் தகாத விளைவுகளைப் பற்றி பொதுவாக மக்கள் மத்தியில் நிலவிய குற்ற உணர்வும் ஒரு காரணம் எனலாம். ஆர்.கே.கரஞ்சியாவின் 'பிளிட்ஸ்' பத்திரிக்கை நானாவதிக்காக பரிந்து பேசி அவர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று ஒரு இயக்கத்தையே நடத்தியது. வழக்கு விபரங்கள் தொடர்ந்து பத்திரிக்கைகளில் வெளிவந்தன. பம்பாயில் பல மக்கள் 'பிளிட்ஸ்' வருகையை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

அரசு தரப்பு வழக்கு மிகவும் எளிதானது. 'சில்வியா நானாவதியிடம் அஹ¤ஜா மீதான தனது காதலை பற்றி கூறியவுடன், நானாவதி மனைவியை திரைப்படத்துக்கு அனுப்பிவிட்டு தனது கப்பலுக்குச் சென்று, 'தான் அஹமது நகர் வரை தனியாக செல்ல வேண்டியிருப்பதாகவும், பாதுகாப்புக்கு ஒரு கைத்துப்பாக்கி வேண்டுமென' பொய்யான காரணத்தைக் கூறி துப்பாக்கியை பெற்று பின்னர் அஹ¤ஜாவின் வீட்டுக்குச் சென்று அவரை சுட்டுக் கொன்று விட்டார். எனவே அது மரணதண்டனைக்கு ஏதுவான திட்டமிட்ட கொலை' என்பது தான் அரசு வழக்கு.

கொலை நடந்த பொழுது அதே வீட்டில் இருந்த மூன்று முக்கிய சாட்சிகள் அஹ¤ஜாவின் அக்கா மாம்மி மற்றும் வேலைக்காரர்கள் அஜ்னானி, தீபக் ஆகியோர்.

முதலில் அஜ்னானி, "சரியாக நாலு மணி பதினைந்து நிமிடத்திற்கு அஹ¤ஜாவின் அறைக்கு தேநீர் கோப்பையை எடுத்து வரப்போனேன். அப்போது அவர் குளியலறைக்கு சென்று விட்டார். ஐந்து நிமிடம் கழித்து சமையலறையிலிருந்த நான் கதவு மணி அடிக்கும் சத்தம் கேட்டு கதவைத் திறந்தேன். உள்ளே வந்த நானாவதி நேராக அஹ¤ஜாவின் அறைக்குச் சென்றார்"

அஹ¤ஜாவின் சமையல்காரரான தீபக், "கதவு மணி அடிக்கும் சத்தம் கேட்டு நான் பார்த்தபோது நானாவதி உள்ளே வந்து விட்டார். அவர் 'பிரேம்' என்று கூப்பிட்டபடியே வேகமாக அஹ¤ஜாவின் அறைக்குச் சென்றார். அப்போது அஹ¤ஜா கண்ணாடிக்கு முன் அமர்ந்து தலை சீவிக் கொண்டு இருந்ததைப் பார்த்தேன். உள்ளே சென்ற நானாவதி கதவை உடனே சாத்தி விட்டார்'

மாம்மி, 'நான் எனது அறையிலிருந்த அலமாரியிலிருந்த சேலையை எடுத்துக் கொண்டிருக்கும் போது நானாவதி உள்ளே வரும் சத்தம் கேட்டது. சேலையை எடுத்த நான் அறை வாயிலுக்கு வரும் போது ஜன்னல் கண்ணாடிகள் உடையும் சத்தம் கேட்டது. ஒரு இருபது வினாடி நேரம்தான் இடைவெளி இருக்கும் இரண்டு செயல்களுக்கும்' என்றார்.

துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு மாம்மி அஹ¤ஜாவின் அறைக்குச் செல்லும் முன்னதாகவே அஜ்னானியும் தீபக்கும் அறைக்குள் புகுந்து விட்டனர். அங்கே கீழே விழுந்து கிடந்த அஹ¤ஜாவின் முன்னர் நானாவதி கைத்துப்பாக்கியுடன்! துப்பாக்கியை அஜ்னானி முன் நீட்டிய அஹ¤ஜா, 'அவரை யாராவது தடுத்தால் அவர்களையும் சுடப் போவதாக மிரட்டினார்'. 'இது என்ன?' என்று கேட்ட மாம்மியை பொருட்படுத்தாமல் வீட்டை விட்டு வெளியேறினார் நானாவதி. இந்த மூன்று நபர்களின் சாட்சியில் மிகச் சிறிய முரண்பாடுகள் இருந்தாலும், பொதுவாக நானாவதி அஹ¤ஜாவின் அறைக்குள் புகுந்து சில வினாடி நேரங்களில் அவரது துப்பாக்கியில் இருந்து மூன்று தோட்டாக்கள் வெளியேறி விட்டது என்பது உறுதியானது.

***

பொதுவாக குற்றவியல் வழக்குகளில் அரசுத் தரப்பு, குற்றத்தை நிரூபிக்க வேண்டுமென்பதால் குற்றம் சாட்டப்பட்டவரின் தரப்பில் சாட்சிகள் ஏதும் இருக்காது. ஆனால் நானாவதி தரப்பில் பல சாட்சிகள் முன்னிறுத்தப்பட்டன. முக்கியமாக நானாவதி மற்றும் சில்வியா!

அஹ¤ஜாவை சுட்டது நானாவதிதான் என்பது உறுதியான விஷயம் என்பதால், நானாவதியின் வாதம், 'அது கொலையல்ல. இருவருக்கும் நடைபெற்ற போராட்டத்தில் தவறுதலாக குண்டுகள் பாய்ந்து அஹ¤ஜா மரணமடைந்தார்' என்பதுதான். இரண்டாவது அவ்வாறே நானாவதி அஹ¤ஜாவை கொன்றிருந்தாலும் 'அது ஒரு திட்டமிட்ட கொலையல்ல. திடீரென ஏற்பட்ட உணர்ச்சி வெள்ளத்தில் உருவான நிகழ்வு' என்று கூறப்பட்டது.

நானாவதி தனது சாட்சி விசாரணையில், இந்தக் கட்டுரையின் முதலில் சொல்லப்பட்ட உரையாடலைத் தொடர்ந்து தான் 'அஹ¤ஜா சில்வியாவை திருமணம் செய்து கொண்டு குழந்தைகளை பார்த்துக் கொள்ள' தயாராக இருக்கிறானா என்று கேட்கத்தான் அவன் வீட்டுக்கு போனதாக கூறுகிறார். 'அஹ¤ஜாவிடம் துப்பாக்கி இருப்பதாக சில்வியா கூறியதின் பேரிலேயே தானும் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு போனதாக' ஒரு சப்பைக்கட்டு!
"நான் அஹ¤ஜாவின் அறைக்குள் நுழைந்ததும், 'அசிங்கம் பிடித்த பன்றியே! சில்வியாவை திருமணம் செய்து கொள்ள தயாராக இருக்கிறாயா?' என்று கேட்டேன். அதற்கு அவன், 'நான் உறவு கொள்ளும் பெண்கள் அனைவரையும் நான் திருமணம் செய்ய வேண்டுமா?' என்றான். நான் உடனே துப்பாக்கி இருந்த கவரை மேசை மீது வைத்து விட்டு அவனை அடித்து நொறுக்கப் போவதாக சொன்னேன். அவன் பாய்ந்து கவருக்குள் இருந்த துப்பாக்கியை எடுத்து என்னை வெளியே போகுமாறு மிரட்டினான். நான் துப்பாக்கியை வாங்க போராடினேன். அப்போது இரண்டு குண்டுகள் வெடித்து அவன் மீது பாய்ந்து விட்டது" நானாவதியின் வாக்குமூலத்தின் முக்கியப் பகுதி.

கணவனுக்கு உதவியாக சில்வியாவும், கிளிப்பிள்ளை போல நானாவதியின் சாட்சிக்கு சாதகமாக வாக்குமூலம் கொடுத்தார். இவர்களது இந்த வாதத்தை எதிர்பார்த்திருந்த அரசுத் தரப்பு சில்வியா அஹ¤ஜாவுக்கு எழுதிய கடிதங்களை வணங்களாக தாக்கல் செய்து இருந்தது. மார்ச் மாதம் பத்தொன்பதாம் தேதி' 1959ம் வருடம் சில்வியா இரு கடிதங்களை அனுப்பியிருக்கிறார். முதல் கடிதம் 1958 மே மாதம் எழுதப்பட்டது. அதில், 'நேற்று இரவு நீ மணமுடிக்கக் கூடிய அநேக பெண்களைப் பற்றி பேசிய போது, எனக்குள் ஏதோ அறுந்து போனது போல இருந்தது. வேறு யாருடனும் நீ நெருக்கமாக இருப்பதை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது' என்றிருந்தது.

இரண்டாவது கடிதத்தில், 'நீ மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்று நான் என்னால் முடிந்ததைச் செய்வேன். எனக்கு நீ வேண்டும். நாம் நினைத்த காரியங்கள் கைகூடும்' என்று நம்பிக்கையாக எழுதப்பட்டிருந்தது. கடைசி கடிதம் கொலை நடப்பதற்கு பத்து நாட்களுக்கு முன்பு எழுதப்பட்டது. அதில்,' நான் உன்னுடன் வரப்போவதை எதுவும் தடுக்கப் போவதில்லை. நான் முடிவெடுத்து விட்டேன். எனது மனம் மாறாது. இந்த ஒரு மாதமும் நான் என்னைத் துன்புறுத்திக் கொள்கிறேன், பின்னர் ஏதும் புதிய பிரச்னைகள் முளைத்து விடாமல் இருப்பதற்க்காக' என்று இருந்தது. இந்த மூன்றாவது கடிதம் அஹ¤ஜாவும் சில்வியாவும் திருமணம் செய்து கொள்ள தீர்மானித்து விட்டதாக நம்ப வைக்கிறது. ஆக நானாவதி கூறியது ஏற்றுக் கொள்ளமுடியாதது.

'நானாவதி மிகச் சரியாக சுடுவதில் தேர்ச்சி பெற்றவர். எனவே அஹ¤ஜாவின் உடலில் ஏறுக்கு மாறாக ஏற்பட்டுள்ள குண்டுக் காயங்கள் நானாவதி அவரை சுட்டிருந்தால் ஏற்பட்டிருக்காது' என்று பின்னாளில் இந்திய கப்பற்படை தலைவராக பொறுப்பேற்ற காமடோர் நந்தா நானாவதியின் சார்பாக சாட்சி சொன்னார். மிகவும் மனம் கொந்தளித்த நிலையில் மிக அருகே இருக்கும் ஒரு நபரை சுடும் போது திறமையெல்லாம் இரண்டாமிடம் என்பதுதான் உண்மை.

முக்கியமாக, கட்டிட காவலாளி புரன்சிங்கிடம் நானாவதி, 'தான் அஹ¤ஜாவைக் கொன்று விட்டதாக' கொடுத்த குற்ற ஒப்புதல் (confession), எல்லாம் 20 வினாடிகளுக்குள் நடந்து முடிந்து விட்டதாக வீட்டிலிருந்தவர்கள் அளித்த சாட்சி, கொலை நடந்த அறையில் சண்டை நடைபெற்றதற்கான அடையாளமே இல்லாதது, துப்பாக்கியில் இருந்து வெளியேறிய மூன்று தோட்டாக்கள், அதனை செலுத்துவதற்கு வேண்டிய சக்தி, அஹ¤ஜாவின் நெஞ்சில் பாய்ந்த குண்டுக் காயத்தில் கரி பொசுங்கிய அடையாளம் எதுவும் இல்லாதது, இடுப்பில் கட்டிய டவல் கூட அவிழாமல் அஹ¤ஜா விழுந்து கிடந்த நிலை மற்றும் அவரது மூக்குக் கண்ணாடி உடையாமல் இருந்தது ஆகிய காரணிகள் மற்றும் பல காரணிகள், 'நடந்தது போராட்டத்துக்கு பின்னர் நிகழ்ந்த விபத்து' என்று நானாவதி கூறியதை பொய்யாக்கியது.

தீர்ப்பு நாளன்று நானாவதியின் தரவாளர்கள், முக்கியமாக அவர் சார்ந்த பார்ஸி சமூகத்தினர் பம்பாய் நகரெங்கும் பிரார்த்தனை ஏற்பாடு செய்திருந்தனர். அதன் பலனோ அல்லது வேறு பலன்களோ, 'நடந்தது, விபத்து. நானாவதி குற்றமற்றவர்' என்ற ஜூரர்களின் தீர்ப்பு பம்பாய் நீதித்துறை வட்டாரங்களில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது.


'நானாவதி குற்றவாளியல்ல' என்ற ஜூரர்களின் முடிவை செஷன்ஸ் நீதிபதி ஏற்றுக் கொள்ளவில்லை. முடிவு சாதாரண நிலையில் தெளிந்த மனிதர்கள் எடுக்கும் நிலையை மீறியதாக கருதி உயர்நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு அனுப்பினார். வழக்கினை ஆராய்ந்த பம்பாய் உயர் நீதிமன்றம் 1960ம் வருடம் மார்ச் மாதம் 11ம் தேதி, 'நானாவதியை குற்றவாளி என்று தீர்மானித்து அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது' அது ஒரு விபத்து இல்லை என்றால் குறைந்த பட்சம் ‘திட்டமிட்ட கொலை (murder) அல்ல’ என்ற வாதத்தினையும் உயர் நீதிமன்றம் நிராகரித்தது. அதாவது, சில்வியா நானவதியிடம் தனக்குள்ள காதலைக் கூறி சில மணி நேரம் கழித்து, நாய்க்கு மருந்து வாங்கப் போவதாக கூறி துப்பாக்கியை பெற்று பின்னர் கொலை செய்ததால் அது திட்டமிட்ட கொலையே என்று தீர்மானித்தது. உணர்ச்சி வெள்ளத்தில் செய்யப்படும் கொலை (homicide under sudden provocation) அத்தகைய உணர்ச்சிகள் தூண்டப்பட்டு உடனடியாக அது வடிந்து மறைவதற்குள் செய்யப்பட வேண்டும். அந்த வகை கொலைகளுக்கு தண்டனை குறைவு.

உயர்நீதிமன்ற தீர்ப்பு வந்த அதே நாள் அப்போதைய பம்பாய் மாகாண கவர்னராக இருந்த திரு.பிரகாசா ஒரு உத்தரவைப் பிறப்பித்தார். அதாவது,' நானாவதி உச்ச நீதிமன்றத்துக்கு மேல் முறையீடு செய்யும் வரை அவரது தண்டனை ரத்து செய்யப்பட்டு அவர் ஐ.என்.எஸ்.குஞ்சலியிலுள்ள கப்பறபடை சிறையிலேயே இருக்க வைக்கப்பட வேண்டும்' என்பதாகும். எனவே நானாவதி பொதுவான சிறைக்குப் போவது மறுபடியும் தடுக்கப் பட்டது. ஆனால் இந்த முறை ஆளுஞர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் குற்றங்களுக்கான தண்டனையிலிருந்து மன்னிப்பளிக்கும் தனது விஷேஷ அதிகாரத்தை பயன்படுத்தியிருந்தார். ஒரு மாநில ஆளுஞருக்கும், குடியரசுத் தலைவருக்கும் இத்தகைய மன்னிப்பு அளிக்கும் அதிகாரம் இருக்கிறது.

உச்ச நீதிமன்றத்தில் அநேக சட்டப் பிரச்னைகள் எழுப்பப்பட்டன. பொறுமையக அனைத்து பிரச்னைகளையும் ஆராய்ந்த உச்ச நீதிமன்றம் வழக்கின் அனைத்து தன்மைகளையும் அலசி ராய்ந்து 1961 ம் ண்டு நவம்பர் இருபத்தி நாலாம் தேதி தனது தீர்ப்பின் மூலம் நானாவதிக்கு அளிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்து அவரது அப்பீலை தள்ளுபடி செய்தது.

நானாவதி சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் விரைவிலேயே அப்போது பம்பாய் மாகாண ளுஞராக இருந்த திருமதி.விஜயலட்சுமி பண்டிட் (ஜவஹர்லால் நேருவின் சகோதரி) அரசியலமைப்புச் சட்டத்தின் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி நானாவதியை மன்னித்து விடுதலை செய்து விட்டார்.

விடுதலையடைந்த நானாவதி தனது குடும்பத்துடன் கனாடா நாட்டில் குடியேறி விட்டார். இரண்டு வருடங்களாக மக்களிடையே அதிகமாய் அலசப்பட்ட, பல்வேறு நீதிமன்றங்களில் நாட்கணக்காக ஆராயப்பட்ட, இறுதியில் இந்திய நீதிபரிபாலன முறையில் இருந்த ஜூரர்கள் முறை அகற்றப்பட முக்கிய காரணமாக இருந்த 'அஹ¤ஜா கொலை வழக்கு' ஒரு நாடகம் என்று மக்களில் சிலர் பேசத் தொடங்கினர்.....

***

31.8.06

'ஸ்ரீப்'... 'ஸ்ரீப்'...



விடுமுறைத்தின மத்தியான வேளையில் ஏதாவது வேலை விஷயமாக வீட்டை விட்டு கிளம்புவதைப் போல துன்பம் வேறு எதுவும் இருக்கப் போவதில்லை. நெஞ்சு நிறைய எரிச்சலுடனும் உடல் முழுவதும் அசதியுடனும், இறுதியாக கண்ணாடியில் ஒரு முறை பார்த்துக் கொண்டு உள்ளறையிலிருந்து வெளியேறிய போதுதான், வார்த்தைகளில் வடிக்க முடியாத அந்த சிறு சத்தங்கள் என்னை ஒரு முறை எல்லாவற்றையும் மறந்து ஒரு கணம் அப்படியே நிற்க வைத்து விட்டது.

"ஸ்ரீப்" "ஸ்ரீப்"

சத்தம் வந்த பக்கம் முகத்தை பாதி திருப்புகையிலையே மீண்டும் "ஸ்ரீப்" "ஸ்ரீப்".

எனக்குப் புரிந்து போனது. கண்ணாடி வைத்த அந்த பீரோவுக்கு மேலே நெருக்கமாக மேற்கூரை வரை அடுக்கி வைக்கப்பட்ட பயணப் பெட்டிகளுக்கு பின்னே சில நாட்களுக்கு முன்னர் பொரித்த புறாக்குஞ்சுககளின் சத்தம்தான் அது.

அதற்கு மேலும் முகத்தை திருப்பவில்லை. கால்கள் என்னையறியாமல் வெளியே செலுத்த படியில் இறங்கிக் கொண்டிருந்தேன். அதுவரை என்னை நிறைத்திருந்த எரிச்சலும், அசதியும் பற்றிய நினைப்பே இல்லாமல், 'நான் ஏன் இப்படி அசடு போல புன்னகைத்துக் கொண்டிருக்கிறேன்' என்று வியப்பாக இருந்தது. தொடர்ந்து சாலையில் நடக்கையிலும், ஆட்டோவில் பயணிக்கையிலும், ரயிலின் நெரிசலிலும் ஏதோ சந்தோஷமாகவே உணர்ந்து கொண்டிருந்தேன். வழக்கமாக மும்பை வீதிகளிலும், ரயில் நிலையங்களிலும் இருந்து மனதை பிசையும் சில காட்சிகள் எதுவும் அன்று எதுவும் கண்ணில் பட்டதாக எனக்குத் தெரியவில்லை. என்ன வேலை விஷயமாக அன்று வெளியே போனேன் என்று கூட இப்போது ஞாபகம் இல்லை. மேலே இருந்து வந்த அந்த சிறு சத்தம் இன்னும் மனதில், மிட்டாயை தின்ற பிறகும் நாவில் ஒட்டியிருக்கும் இனிப்பினைப் போல சந்தோஷத்தை விதைத்துக் கொண்டு இருக்கிறது.

வீட்டிற்கு திரும்பியபின்னர் முதலில் நான் சென்றது பீரோவுக்கு அருகில்தான். னால் சத்தம் ஏதும் கேட்கவில்லை. கடந்த ஒரு மாதமாகவே அந்த பீரோவுக்கும் ஜன்னலுக்குமாக பறந்து கொண்டிருந்த புறாக்கள்தான் எங்களுக்கு வேடிக்கை. எனக்கு புறாக்கள் மீது அதிக பிரியம் இருந்ததில்லை. இரண்டொரு நாட்களுக்கு முன்னர் கூட, 'கொஞ்சம் இங்கே வந்து கேளுங்களேன் என்று ரகசியமாக குஞ்சுகளின் சத்தத்தைக் கேட்க அழைத்த போது, 'ஹாங்' என்று அசிரத்தையாக மறுத்தேன். மும்பையில் அங்கிங்கெனாதபடி எங்கும் புறாக்கள் நிறைந்திருப்பதால் இருக்கலாம். அல்லது ஜன்னலை ஒட்டிய மரம் முழுவதும் நிறைந்த காகங்கள் மீது நான் கொண்ட அபரிதமான காதலும் காரணமாக இருந்திருக்கலாம். பெரும்பாலான மக்களின் அன்பு புறாக்கள் மீதும் வெறுப்பு காகங்கள் மீதும் படிந்திருந்தது எனக்கு வழக்கம் போலவே ஒரு வேறுபட்ட நிலையை எடுக்க வைத்திருந்தது. சில நாட்கள் முன்பு ‘புறாக்கள் காகங்களை விட வன்முறை விரும்பிகள்’ என்று வேறு படித்துத் தொலைத்து விட்டேன்.

ஆறு மாதங்களுக்கு முன்னர் ஜன்னலை அடுத்து இருந்த மரத்தில் இரண்டு காகங்கள் குஞ்சு பொரிப்பதற்க்காக கட்டிய ஒரு கூடு எங்கள் பொழுது போக்காக இருந்தது. தினமும் குஞ்சுகள் பொரிப்பதற்காக காத்திருந்தோம்.

ஒரு நாள் என் மனைவி, "அந்த கூட்டில் பார்த்தீர்களா என்னவென்று?"

"என்ன குஞ்சு பொரித்து விட்டதா?"

"இல்லை. அங்கே பாருங்கள்"

கொஞ்சம் கவனமாக பார்த்ததில் அந்தக் கூட்டினை கட்ட உபயோகப்பட்ட மரக்குச்சிகளிடையே எனது அலுமினிய சட்டை தொங்க போடும் ஹாங்கர்!

"அட! இந்த ஜன்னல் கம்பி வழியா எப்படி எடுத்துட்டுப் போயிருக்கும்" என்று நான் வியந்து கொண்டிருந்ததில் அந்த திருட்டுக் காகங்களின் மீதும் கோபம் வரவில்லை.

ஆனால் தினமும் கவனித்துக் கொண்டிருந்தாலும் குஞ்சு பொரித்து விட்டதா இல்லையா என்று கணிக்க முடியவில்லை. எங்கள் திருட்டுப் பார்வையில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்கையில் மிகவும் கவனமாக இருந்து விட்டன அந்தக் காகங்கள். எனக்கும் காக்கா முட்டை எத்தனை நாளில் பொரிக்கும் என்ற விபரமெல்லாம் தெரியாது. விரைவில் கூடு கூட மெல்ல மெல்ல சிதிலமாகி வர, ஒரு நாள் அடித்த பெரிய காற்றில் அந்தக் கூட்டின் வடிவம் கூட மாறிப் போனது.

'என்னப்பா! குஞ்சு பொரிச்சுதா இல்லையா. என்ன பண்ணுது அந்தக் காக்கா?"

சற்றே கூட்டை உற்றுப் பார்த்த என் மனைவி, 'இல்லப்பா, அந்தக் காக்காதான் குஞ்சுன்னு நினைக்கிறேன். நல்லா வளர்ந்துட்டுது"

"என்ன சொல்ற அது ஏதோ கோழி சைசுக்கு இருக்குது" என்று சொன்னாலும் கொஞ்சம் கவனமாக பார்த்ததில் அதுதான் பொரித்த குஞ்சுவாக இருக்கும் என்று எனக்குத் தோன்றியது. வெட்கம்! கடைசியில் ஏற்கனவே குஞ்சு பொரித்து அதுவே பெரிய காக்கா மாதிரி எங்களுக்குத் தெரியாமலே வளர்ந்து விட்ட விஷயத்தை என் மகளிடம் சொல்ல தைரியம் இல்லை. அது வரை 'எங்கள் வீட்டில் எப்படி கோழிக்குஞ்சு பொரித்தது என்பதிலிருந்து காக்காக் குஞ்சு பொரிப்பது வரை ஏகப்பட்ட விஷயங்களை' அவளிடம் மேதாவி போல அளந்து வைத்திருந்தேன்.

இப்போது அந்தக் கூட்டின் ஏதோ ஒன்றிரண்டு குச்சிகளே மரத்தில் எஞ்சியிருக்கிறது. எனது ஹேங்கரை கூட காணவில்லை. நைசாக மீண்டும் எனது வீட்டிலேயே, அந்த காகங்கள் கொண்டு வந்து வைத்து விட்டதா என்பது தெரியவில்லை. திருப்பித் தரவிட்டாலும் பரவாயில்லை. அந்த ஹாங்கரை கூட்டில் பார்த்த போது மனதில் வந்து பரவிய ஒரு சந்தோஷ அலைக்கு என்ன விலை குடுத்தாலும் தகும்.

இந்த சந்தோஷமோ கஷ்டமோ நம் மனதில்தான் இருக்கிறது போல. பல வருடங்களுக்கு முன்னர் படித்த கி.ராஜநாராயணனின் கதை இப்படித்தான். மறக்கமுடியாத கதை. புழுக்கமான ஒரு மத்தியான வேளையில் அனல் அடிக்கும் கரிசல் காட்டு சாலையில் செல்லும் ஒரு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளைப் பற்றியது. அனைவரும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டும் எரிச்சல் பட்டுக்கொண்டும் பயத்துக் கொண்டிப்பர். ஒரு நிறுத்தத்தில் ஒரு கிராமத்துப் பெண் கைக்குழந்தையுடன் பேருந்தில் ஏற அந்தச் சூழ்லையே கொஞ்ச நேரத்தில் மாறிப்போகும். பின் இருக்கும் ஒருவரைப் பார்த்து அந்தக் குழந்தை சிரிக்க அவர் அதனுடன் விளையாட அந்த சந்தோஷம் அனைவரையும் விரைவில் தொற்றிக் கொள்ள அந்தப் பேருந்து முழுவதும் உற்சாக அலை வீசும். விரைவில் அந்தப் பெண் ஒரு நிறுத்தத்தில் பேருந்தினை விட்டு இறங்கிப் போக மீண்டும் பேருந்தில் சோர்வு சூழ்ந்து கொள்ளும்.

இந்தக் கதையினை பற்றி சிந்திக்கையில், ஒரு விஷயத்தில் எனது அபிமான எழுத்தாளர் கி.ர வுடன் வேறுபட வேண்டியிருக்கிறது. அதாவது அதன் முடிவு. கதையின் முடிவைப் போல நம்மை தொற்றிய சந்தோஷம் 'கப்' என்று திடீரென முடிந்து போவதல்ல. அது ஒரு ஒரு அலை போல. குளத்தில் எறிந்த கல் முழுகிப் போனாலும் அலை வளையங்கள் மெல்லத்தான் ஓய்ந்து போகின்றது. அதுவும் அலை ஓய்ந்த பின்னரும் மனதுக்குள் கற்பனைக் கல்லை எறிந்து அலைகளை அவ்வப்போது பரவச் செய்வதும் சாத்தியமே.

ஏனென்றால் இந்தக் கோபம், சந்தோஷம் போன்ற உணர்வுகளை நமது மூளைக்குள் சுரக்கும் ரசாயண வஸ்துக்களே தீர்மானம் செய்கின்றன. இதனை அடிப்படையாக வைத்தே ‘ப்ரோஸாக்’ (Prozac) போன்ற மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும் மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. ஆனாலும் இந்த மருந்துகளை விட மிகவும் உபயோகமானது, பின் விளைவுகள் எதுவும் இல்லாத 'மனசை லேசாக்கி என்னை அன்று வழியனுப்பிய "ஸ்ரீப்" ஓசை'.

சில வருடங்களுக்கு முன்னர் இது போலத்தான். அப்போது வேறு ஒரு வீட்டில் வசித்து வந்தோம். அதன் ஜன்னலருகே துரதிஷ்டவசமாக இப்போது உள்ளது போல மரம் இல்லை. னாலும் அருகிலிருந்த சுவற்றின் கீரலில் இருந்து முளைத்து போதிய பின்பலம் இல்லாதலால் அரையடி நீளத்துக்கு மேல் வளரவே முடியாமல், என்றும் பதினாறாக விளங்கிய ஒரு செடி ஜன்னலருகே நான் செல்லும் போதெல்லாம் என்னைப் பார்த்து புன்னகைக்கும்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை, எழும்ப மனமில்லாமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்த போது கேட்ட "தட்" என்ற சத்தம் என்னை அதிர்ந்து எழ வைத்தது. என்னவென்று புரிபட சிறிது நேரம் பிடித்தது. ஜன்னல் கம்பி வழியே வீட்டினுள் பாய்ந்த ஒரு சிட்டுக்குருவிதான் மின்விசிறியில் அடிபட்டு மூலையிலிருந்த மேஜைக்கு அடியில் தூக்கியெறிப்பட்டுக் கிடந்தது. அருகே சென்று பார்த்ததில் அதற்கு உயிர் இருந்தது புரிந்தது. என்னைப் பார்த்து பயந்து ஒரு மூலைக்குள் ஒதுங்க முயன்று தோற்றுப் போனதைப் பார்த்து ஒரு பெரிய நிம்மதி எனக்குள். மகளை வேகமாக எழுப்பினேன். கண்களை திறக்க முடியாமல் இருந்தவள் விஷயம் தெரிந்தவுடன் மிகவும் உற்சாகத்துடன் என்னுடன் சேர்ந்து கொண்டாள். மெல்ல அதன் அருகில் சென்று எனது கைகளில் அதை பதவிசாசக எடுத்தேன். உடல் முழுவதும் ஜன்னி கண்டது போல நடுங்கிக் கொண்டிருந்தது. எனக்கு புரிந்து போனது. அடி ஏதும் படவில்லை. அதிர்ச்சிதான் அதனை அப்படி கட்டிப் போட்டிருக்கிறது என்று.

மகள் வேகமாக உள்ளே போய் நீர் எடுத்து வந்தாள். மெல்ல அதற்கு ஊட்ட வேகமாக குடித்தது. உடல் நடுக்கம் நின்ற மாதிரி இருந்த போது அதனை கீழே விட்டால் அதற்கு நிற்க முடியவில்லை. 'பொத்' என்று விழுந்து கிடந்தது. இறக்கைகளை அடிக்கக் கூட அதற்கு தைரியமில்லை. மகளுடைய பிஞ்சுக்கைகளில் பின்னர் தஞ்சமாக, அதற்கு இதமாக இருந்திருக்க வேண்டும் போல. நன்றாக பொதிந்து அமர்ந்து கொண்டது.

இது வரை மரத்திலும் காயத்திலுமே பார்த்து வியந்திருந்த சிட்டுக்குருவியை கைகளில் கண்ட மகளுக்கு ஏகப்பட்ட சந்தோஷம். அவள் முகம் அப்படி மலர்ந்திருந்தது. சிறிது நேரத்தில் மெல்ல எழ முயன்ற அந்த சிட்டுக்குருவி சடாரென் எழும்பிப் பறந்து டி.விக்கு பின்னே மறுபடியும் விழுந்து ஒளிந்து கொண்டது. பறக்க முடியவில்லையோ என்று அருகே சென்று பார்த்தால், மீண்டும் அங்கிருந்து ஒரு எம்பு எம்பி ஜன்னல் கம்பியில் உட்கார்ந்து சில விநாடிகளில் வெளிக்காற்று பட்ட உற்சாகத்தில் எதுவுமே நிகழாதது போல ‘ஜிவ்’ என்று பறந்து போனது.

மகளுக்கு முதலில் ஏமாற்றமாக இருந்தது. 'ஏம்பா, அது இங்கருந்து போயிருச்சு' என்று கேட்டபடி இருந்தாள். பின்னர் அதையே ஒரு 'இப்படி அடிபட்டு அவளால் காப்பாற்றப்பட்ட ஒரு ஆண்குருவி தனது பெண்குருவியுடன் இணைந்த கதையாக' நான் சொல்ல புன்னகையுடன் கேட்டுக் கொண்டாள்.

எனக்கு இன்றும் நன்றாக நினைவிருக்கிறது. அந்த ஞாயிற்றுக் கிழமை முழுவதும், 'என்ன நடந்தது. ஏன் இப்படி மனம் லேசாக ஏதோ சந்தோஷமாக உணர்கிறேன்' என்று வியந்தவாறே இருந்தேன்...

மும்பை
10.12.02


24.8.06

மலை போல் நிற்கும் வசீம் ராஜா!

இன்று காலை செய்தித்தாள்களில் ‘வசீம் ராஜா’ என்ற பெயரைப் படித்ததும், இயல்பாக மனதில் தோன்றி என்னையறியாமல் நான் சொல்லிப்பார்த்துக் கொண்ட வாக்கியம்தான் ‘அங்கு மலை போல் நிற்கும் வசீம் ராஜா’. எந்த ஆண்டு என்று நினைவில்லை. ஆசீப் இக்பால் தலைமையில் வலுவிழந்த ஒரு பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு விளையாட வந்திருந்த பொழுது, சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் நமது வானொலியின் தமிழ் வர்ணனையில் அடிக்கடி உச்சரிக்கப்பட்ட வாக்கியங்கள் இவை...உச்சரித்தவர் நமது சாத்தை அப்துல் ஜப்பார் அவர்கள்!

வாசிம் ராஜா கவரில் நிற்பார் என நினைக்கிறேன். வலப்புறம் எழும்பி வரும் பந்துகளை கவனமாக நமது வீரர்கள் கவர் டிரைவ் செய்ய பந்துகள் வாசிம் ராஜாவை கடந்து செல்லும் தருணங்கள் அரிதானவையே!

பொங்கல் விடுமுறையும், சென்னையில் டெஸ்ட் போட்டிகளும் இணைந்து வரும் நாட்கள் பலருக்கு வாழ்க்கையின் மறக்க முடியாத தருணங்கள். முக்கியமாக அந்த தமிழ் வருணனை. சற்றே பெண்தன்மை வாய்ந்த குரலில் ஆற்றொழுக்கு நடையில் எப்பொழுது நிதானம் தவறாத திரு.ராமமூர்த்தியையும், உணர்ச்சி வெள்ளத்தில் வார்த்தைகள் கிடைக்காமல் திக்குமுக்காடிப் போய் ‘வல்லுநர் மணி அவர்களே’ என்று மற்றவரை துணைக்கழைக்கும் திரு.ஜப்பாரையும், திரு.கூத்தபிரானையும் கிரிக்கெட் விளையாட்டின் நுணுக்கங்களை என்னைப் போன்ற சிறு ஊர்காரர்களும் ஓரளவுக்கு விளங்கக்கூடிய அளவில் இடையிடையே கூறும் வல்லுநர் மணியினையும் மறக்க முடியுமா?

தற்பொழுது எனக்கு கிரிக்கட் நடப்பதும் தெரியாது...தமிழ் வருணனைகள் இருப்பதும் தெரியாது. ஆனால், சென்னையில் முதன்முதலாக கிரிக்கெட்டினை தொலைக்காட்சியில் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்த்த பொழுது, அங்கிருந்த பல வீடுகளில் தொலைக்காட்சியின் சப்தத்தினை குறைத்து வைத்து தமிழ் வருணனைகளை அருகே வைத்து கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

திருநெல்வேலி, தூத்துக்குடியில் கூட கிரிக்கெட் என்பது ஏதோ சென்னையிலிருந்து மாற்றலாகி வந்திருக்கும் ஒரு குடும்பத்திலுள்ள பையனை மையமாக வைத்து பீட்டர் விடும் சில பையன்கள் விளையாடும் விளையாட்டு என்பதிலிருந்து அனைவரும் ஒரு கை பார்க்க துணிந்ததற்கு 1983ல் இந்திய உலக கோப்பை வெற்றிக்கு முன்னதாகவே இந்த தமிழ் வருணனைகள் முக்கிய காரணம் என்பேன்! ஆயினும் பாளையங்கோட்டையில் இருந்து ஹாக்கி ஒழிந்து போனதில், இந்தியா உலக கோப்பையினை வெல்லாமல் இருந்திருக்கலாம் என்று பல்லைக் கடிப்பவர்களில் நானும் ஒருவன்.

அதுவரை ‘நியூபால்’ என்று மட்டுமே கூற பழக்கப்பட்டிருந்த எனக்கு, பள்ளியில், வேகமாக ஒரு பையன் ஓடி வந்து, இயல்பாக ‘புதுப்பந்து எடுத்தாச்சா?’ என்று கேட்கையில் புதுமையாக இருந்தாலும், தமிழ் வருணனைகளின் வீச்சு புரிந்தது. டெஸ்ட் போட்டி என்பதே ‘இந்தியன் எக்ஸ்பிரஸில் ஏதோ ஓரளவுக்கு தெரியும் படங்களும், எவ்வளவு ஓட்டங்கள் யார் யார் அவுட் என்பது மட்டுமே புரியும், கரகரவென்ற நிதானமான குரலில் கேட்கும் ஆங்கில வருணனைகள் மட்டுமே’ என்றிருந்த எங்களுக்கு ஏறக்குறைய நேரில் படம் போல பார்க்கும் அனுபவத்தினை அளித்தது தமிழ் வருணனைகள்தான் என்றால் மிகையல்ல...ஆசீப் இக்பால் விளையாட இறங்கி ஒரு நான்கினை அடித்ததுமே...’ஆஹா பெரிய வீரர்கள் என்றால் இப்படித்தான்...ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல இந்த ஒரு அடியே போதுமே’ என்று ஜப்பார் அவர்கள் புகழ்ந்ததிலேயே நான் ஆசிப் இக்பாலின் விசிறியாகிவிட்டேன். அவர் விளையாடுவதை நான் ஒரு முறை கூட எங்கும் பார்த்ததில்லை. ஆயினும் அவர் எப்படிப்பட்ட ஸ்டைலிஸ்ட் வீரர் என்று பத்திரிக்கைகள் வருணிப்பதை படிக்கையில் ஆனந்தமாயிருக்கும்.

அது ஒரு பொற்காலம் என்றால் இளையவர்களுக்கு பிடிக்காது...எனவே எனக்கு அது ஒரு கனாக்காலம்!

மால்கம் மார்ஷல், வாசீம் ராஜா போன்றவர்கள் இல்லை என்று நினைக்கையில் எனக்கு வயதாகிறது என்ற எண்ணம் மெலெழும்புகிறது...