முக்கியமாக எதாவது ஒன்றிற்கு பொருத்தமான ஆங்கில வார்த்தை என்னவென்று தெரியாமல் போய்விட்டால் என்ன செய்வது?
மதுரைக்கு வந்த கடந்த சில வருடங்களில் நான் இழந்தது, ஆங்கில பத்தி எழுத்தாளர்களின் கட்டுரைகளை. ஆயினும் தமிழிலும் பாமரன், ஞாநி, சாருநிவேதிதா போன்றவர்கள் தொழில் முறையில் பத்தி எழுதுகிறார்கள். பாமரன் சாரு நிவேதிதா போன்றவர்களைப் போல ஞாநி எனக்கு சுவராசியமாக இருந்ததில்லை எனினும், அவரது கருத்துகள் இணையத்தில் சமீப காலங்களில் அதிகம் விவாதிக்கப்படுகிறது.
ஆனால், நேற்று குமுதத்தில் வாசிக்க நேர்ந்த ஞாநி அவர்களது கட்டுரை, மும்பையில் நான் கொண்டது எத்தனை அர்த்தமற்ற பயம் என்பதை விளக்கியது.
மனிதர் மொழி ஆளுமை, தமிழ் அறிவு எதுவும் பற்றிக் கவலைப்படாமல், தானும் ஒரு பத்தி எழுத்தாளன் என்று கூறிக்கொண்டு, எங்கெல்லாம் முடியவில்லையோ அங்கெல்லாம் ஆங்கில வார்த்தைகளை உபயோகித்தே எழுதியிருக்கிறார்.
ஆரம்பத்திலேயே ‘அவையெல்லாம் ‘சப்ஜெக்ட்டுக்கு’ முழு நியாயம் செய்யவில்லை’ என்கிறார். தான் நினைப்பதை எழுத்தில் வடிக்க சிரமப்படும், இயலாதவர்களும் இங்கு தொழில் முறை எழுத்தாளர்கள் என்று கூறிக்கொள்ள முடியுமென்றால், அவரது அரைகுறை எழுத்தினை காசுக்கு விற்கும் பத்திரிக்கை வாசகனை கிள்ளுக்கீரையாக நினைக்கிறது என்பது அல்லாமல் வேறு என்ன இருக்க முடியும்?
‘ஹீரோ, சினிமா’ போன்ற வார்த்தைகள் எல்லாம் புறந்தள்ளப்பட்டு இன்று கதாநாயகன், திரைப்படம் என்ற வார்த்தைகள் சரளமாக எழுத்து உலகில் புழங்கி வந்தாலும் பாவம், அவருக்குத் தெரியவில்லை போலும். முரணாக, பின்னர் கதாநாயகன் என்ற வார்த்தையினை அவரே உபயோகிக்கிறார்.
‘கால்ஷீட் நேரத்துக்கு நடிக்க செல்லாமல்’ என்பதற்கு பொருத்தமான தமிழ் வார்த்தை என்ன என்பது ஏதோ, தன்னார்வர்த்தில் எழுதும் வலைப்பதிவாளர்களுக்கு தெரியாமல் இருப்பதில் அர்த்தமுண்டு. ஆனால், காசுக்கு எழுதும் ஞாநி போன்ற எழுத்தாளர்கள் அவசியம் அதனை கற்று பின் எழுத முயல வேண்டும்.
‘எழுப்பியிருக்கும் கேள்வி ஒரு படத்தின் கேப்டன் இயக்குஞரா? ஸ்டாரா? நடைமுறையில் அது ஸ்டார்தான் என்று இருந்த போதும் எல்லோருமே நியாயப்படி டைரக்டர்தான் கேப்டனாக இருக்க வேண்டும்’
தொடர்ந்து ஒரு விஞ்ஞானியைப் பற்றி எழுத முயல்பவர் ‘கணிதம், பயோமெடிக்கல், எஞ்ஜினீயரிங், மருத்துவம் சர்ஜரி................கார் டிரைவர், மெக்கானிக், டாக்டர், சினிமா இயக்குஞர், டி.வியில் வானிலை அறிவிப்பாளர்’ என்று இஷ்டத்துக்கு பண்பலை வானொலி அறிவிப்பாளர் மாதிரி பொளந்து கட்டுகிறார்.
பின்னர் கற்பிதங்கள் என்ற அதிகம் தெரிந்திராத வார்த்தையினை பயன்படுத்துபவருக்கு ‘பிரிலியண்ட்’ என்ற வார்த்தைக்கு தமிழில் தெரியாமல் தடுமாறுகிறார்.
இறுதியாக, ‘காற்றுப் பிரிதல்’ என்று எந்த மருத்துவரும், விஞ்ஞான மாணவரும் இயல்பாக பயன்படுத்தும் வார்த்தையினை தமிழில் எழுதினால், அதுவும் விஞ்ஞான ஆராய்ச்சியினைப் பற்றி எழுதுகையில் ‘பாரம்பரியம் மிக்க குமுதம்’ இதழுக்கு பொருந்தி வராது என்பதால் ‘farting’ என்று ஆங்கிலத்தில் எழுதுவதாக ஒரு சப்பைக்கட்டு வேறு!
அண்ணாமலையாரே இந்தப் புகழுரையினை கேட்டு சற்று, மேலுலகத்தில் நெளிந்திருப்பார்!
-oOo-
எனது சந்தேகம் இதுதான்.
பணம் வாங்கிக் கொண்டு எழுதும் ‘எழுத்தாளரான’ ஞாநிக்கு இருக்கும் தமிழ் அறிவினை விட எனது ஆங்கில அறிவு சற்று அதிகம் இருக்கலாம். ஏனெனில் நான் தமிழ் வார்த்தைகளை உபயோகித்து ஆங்கில கட்டுரை எழுதியதில்லை. ஹிந்துவில் எனக்கு பத்தி எழுத வாய்ப்பு தருவார்களா?
மதுரை
30.03.08
“Some men are born Mediocre, some men achieve mediocrity, and some men have mediocrity thrust upon them”

MY BELOVED THOOTHUKUDI