Showing posts with label Kondapalli. Show all posts
Showing posts with label Kondapalli. Show all posts

12.11.12

ஹைதராபாத் பயணக்குறிப்புகள் 3


கொண்டபள்ளி!

ஐதராபாத் சாலார்ஜங் அருங்காட்சியத்தில் இருந்த கலைப்பொருட்கள் கடையில், இந்தப் பெயரைக் கேட்டதும், ‘ஏதோ பரிச்சயமான பெயராக உள்ளதே’ என்று பொறி தட்டினாலும் புலப்படவில்லை.

விஜயவாடாவிற்கு அருகில், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள கொண்டபள்ளி என்ற கிராமத்தில் செய்யப்படும் மரப்பொம்மைகள் மிகவும் பிரபலமானவை எனப்படித்ததும் அந்த ஊரையும் பார்த்து செல்ல வேண்டும் என்ற ஆர்வம் ஏற்ப்பட்டது.

ஐதராபாத்திலிருந்து விஜயவாடாவுக்கு செல்லும் நெடுங்சாலையில் விஜயவாடாவிற்கு முன்னதாக சில மைல் தொலைவில், நெடுஞ்சாலையிலிருந்து இடது பக்கம் திரும்பினால் சுமார் பத்து கி.மீ, தொலைவில் மலையடிவாரத்தில், இருக்கிறது கொண்டபள்ளி

 

கொண்டபள்ளி சென்று பொம்மைகள் எங்கு கிடைக்கும் என்று கேட்டால் ஒரு தெருவை கைகாட்டுகிறார்கள். கண்ணாடி ஷோ கேஸ் உள்ள ஒரு கடையில் சென்று பார்த்த என் மனைவி பின்னர் அருகிலிருந்த ஓட்டு வீட்டினுள் சென்று பார்த்துக் கொண்டிருந்தார். நேரமாகவும் நானும் சென்று அந்தக் கடையில் பார்த்தால் பாரம் சுமந்து செல்லும் பெரிய மாட்டு வண்டி என்னைக் கவர்ந்தது. வேறு சில மரப்பொம்மைகளும் அருமையாக இருந்தன.


அருகிலிருந்த ஓட்டு வீட்டில் சில பொம்மைகளைப் பார்த்துக் கொண்டிருந்த என் மனைவியை வலுக்கட்டாயமாக கடைக்கு அழைத்து மாட்டு வண்டியையும் வேறு சில பொம்மைகளையும் வாங்கிக் கொண்டு வெற்றிகரமாக திரும்பினோம். விலையும் ஏதோ வெளியூரிலிருந்து வந்திருக்கிறார்களே என்று அதிகமாகவெல்லாம் கூறவில்லை.

மதுரை வந்து பொம்மைகளை அருகருகே அடுக்கி வைத்தால், ’அருமையாக இருக்கிறதே’ என்று கடையில் வாங்கிய பொம்மைகள் இயந்திரத்தில் கடைந்து, இயந்திரத்திலேயே வர்ணம் பூசப்பட்ட பொம்மைகள். என் மனைவி வாங்கிய சிறு பொம்மைகள், கையிலேயே செதுக்கி, கையிலேயே வர்ணம் பூசப்பட்டு, ‘நாங்கள்தாம் கொண்டபள்ளியாக்கும்’ என்று என்னைப் பார்த்து கேலி செய்தது.

ஆயினும் கடையில் வாங்கிய பாரவண்டி கொண்டபள்ளிதான்!

விஜயவாடா பக்கம் போனால், கொண்டபள்ளி போக மறக்க வேண்டாம். நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பரிசளிக்க அருமையான மரப்பொம்மைகள் கிடைக்கிறது.

பொம்மைகளைப் பார்த்த எனது நண்பன் கூறினான், ‘கொண்டபள்ளி, நக்சல் தலைவர் சீத்தாராமையா ஊரல்லவா’


அட, ஆமாம். இதை எப்படி கவனிக்காமல் விட்டேன்!

 

மதுரை

11/11/12