7.10.12

கூடங்குளம் பொதுநல வழக்கு!


கூடங்குளம் அணு உலையினை நிறுவி இயக்குவது சம்பந்தமான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு, தற்பொழுது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு நடைபெற்று வருகிறது.

அந்த வழக்கில் அணு உலையினை நிர்மாணிப்பதில் விதிகள் மீறப்பட்டுள்ளன எனவும் அந்த மீறல்கள் நேர்செய்யப்படாமல், உலையினை இயக்க முடியாது என்றுதான் வாதிட முடியுமே தவிர, அணு உலையே கூடாது என்றல்ல. அணு மின்சாரம் தேவையா இல்லையா என்பது அரசின் கொள்கை முடிவை சார்ந்தது. கொள்கை முடிவில் நீதிமன்றம் எளிதில் தலையிடாது.
 
எனவே, அணு உலை அமைக்கக் கூடாது என்று மக்கள் தொடர்ந்து தாங்கள் விரும்பினால் அரசை கோரலாம். போராடலாம். மக்களின் கருத்தினை ஒட்டியே அரசு தனது கொள்கை முடிவுகளை வகுத்துக் கொள்வதால், அக்கருத்தின் வெளிப்பாடான சுந்ததிரமான பேச்சு மற்றும் நடவடிக்கைகள் ( speech and expression) ஆகியவற்றை அனுமதிப்பது, மக்கள் நல ஆட்சியினை பேணும் அரசின் கடமையாக இருத்தல் வேண்டும்.

இதன் காரணமாகவே, அணு உலை பற்றிய தங்கள் சொந்தக் கருத்தினை வடிவமைத்துக் கொள்ளாதவர்கள் கூட கூடங்குளத்தில் அணு உலையினை எதிர்த்து போராடுபவர்களின் மீதான அரசின் பல்வேறு அடக்கு முறைகளை கண்டிக்கும் சூழல் ஏற்ப்படுகிறது. முக்கியமாக, கடந்த மாதம் நடைபெற்ற அணு உலை முற்றுகை போராட்டத்தின் பொழுது, எவ்விதமான உடல் மற்றும் மனக்காயங்கள் இல்லாமல் சமாளித்திருக்க வேண்டிய ஒரு விடயம், சில அரசு அதிகாரிகளின் ஆணவப் போக்கால் மக்களுக்கும் அரசு இயந்திரங்களும் இடையே மிகப் பெரிய இடைவெளியை ஏற்ப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், இரண்டு உயிர்களையும் பலி கொண்டுள்ளது.

இதற்காக நீதி விசாரணை கோரி, இரு பொது நல வழக்குகள் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்யப்பட்டு, வாத பிரதிவாதங்கள் முடிந்து தீர்ப்புக்காக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மனித உரிமை பாதுகாப்பு அமைப்பு என்ற நிறுவனத்திற்காக வழக்கு தாக்கல் செய்த எனது நண்பர் நீதிமன்றம் வர இயலாத சூழ்நிலையில் அவருக்காக நான் வாதிடும் வாய்ப்பு கிடைத்தது. மற்றொரு வழக்கினை தாக்கல் செய்தவர் அ.மார்க்ஸ்!


கூடங்குளம் வன்முறைக்கும், ராம்லீலா வன்முறைக்கும் ஒற்றுமை இருப்பினும், பாதிக்கப்பட்டவர்கள் யாரும் புகார் கொடுக்காத சூழ்நிலையில், மற்றவர்களுக்கு என்ன பிரச்னை, என்ற எண்ணம்தான் மோலோங்கிய நிலையில், அதே போன்றதொரு உத்தரவை இந்த வழக்கில் எதிர்பார்க்க முடியாது. ’80 காவலர்கள் காயம்பட்டுள்ளனர். போராட்டக்காரர்களில் யார் ஒருவருக்கும் கூட காயம் படவில்லை’ என்பதே அரசின் வாதம்.

குற்ற வழக்கிற்கும், கைதுக்கும் அஞ்சி தனியாளாக யாரும் எதற்கும் முன் வர முடியாத சூழலில், பாதிக்கப்பட்டவர்களை நீதிமன்றத்தின் முன் நிற்க வைப்பது இயலாத நிலை. எனவேதான், பாதிக்கப்பட்டவர்களை நேரில் கண்டு உண்மை நிலையினை தெரிந்து கொள்வதற்கு யாரேனும் நீதிபதி தலமையில் விசாரணை வேண்டுமென்று வழக்கு. ஆனால், அவ்விதமாக விசாரணை நடத்த வேண்டுமென்று அரசிற்கு நீதிமன்றம் உத்தரவிட முடியுமா, என்பது கேள்விக்குறி. அதிஷ்டவசமாக, அந்த கேள்வியினை அரசுத் தரப்பில் எழுப்பவில்லை.

எனினும், நீதிபதி தலமையிலான விசாரணையிலும் பெரிதாக ஏதும் விளைந்து விடாது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அவ்விதமான விசாரணை தொடர்ந்து இவ்விதமான செயல்கள் நடக்க இயலாத சூழ்நிலையை ஏற்ப்படுத்தும். அதே போன்று நடந்த பிரச்னையை மக்கள் மன்றத்திற்கு முன் எடுத்துச் செல்லும் ஒரு கருவியாக இந்த வழக்கு பயன்படலாம். பத்திரிக்கைகளில் எழுதப்பட்டது என்றாலும், நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு, அரசு இயந்திரங்களுக்கு தொடர்ந்து தர்மசங்கடத்தை ஏற்ப்படுத்தியது. அடுத்து நடைபெறப் போகும் முற்றுகை போராட்டத்தில் ‘எவ்விதமான வன்முறை செயலுக்கும் இடம் கொடுத்து விடக்க்கூடாது’ என்று தற்பொழுது காவலர்களுக்கு கண்டிப்பாக உத்தரவிடப்பட்டதில் இந்த வழக்கின் பங்கும் உண்டு.

எல்லாவற்றிற்கும் மேலாக, எல்லைக் காவல்படை விமானியின் அகங்காரப் போக்கால் உயிரிழந்த மீனவர் குடும்பம் தகுந்த நஷ்ட ஈடு வேண்டியும், விமானியின் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டியும் நீதிமன்றத்தினை எளிதில் அணுகும் வண்ணம், இந்த வழக்கில் அரசுத் தரப்பில் தாக்கல் செய்துள்ள ஆவணங்கள் பயன்படலாம்.

எல்லா வழக்குகளிலும், முக்கியமாக பொது நல வழக்குகளில், வெற்றி என்பது வழக்கில் கோரப்பட்ட பரிகாரத்தை பொறுத்து அமைவதல்ல. மாறாக, பல்வேறு பக்கவிளைவுகளினால் ஏற்ப்படும் நன்மைகளும் வழக்கின் வெற்றியை நிர்ணயிக்கின்றன. கூடங்குளம் வழக்கில் என்ன நிகழப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

மதுரை
07/10/12

1 comment:

வல்லிசிம்ஹன் said...

மக்கள் அச்சத்தைப் போக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தில்லியில் இருப்பவர்கள் கூடங்குளத்தில் வந்து வீடுகட்டி இருக்கட்டும்.அப்படிச் சொல்வதே அறியாமை என்பார்கள். அவர்கள் சட்டம் மட்டுமே இயற்றுவார்கள். இந்த
துன்பப்படும் மக்களின் அவலத்தை நினைத்துப் பார்க்க அ வர்களால் முடியாது.