26.10.12

ஹைதராபாத் பயணக் குறிப்புகள் 1


கடந்த ஐந்து நாட்களாக, சாலை வழியே குடும்பத்துடன் ஹைதராபாத் பயணம்.

சென்னையிலிருந்து ஓங்கோல் வரைதான் நான்கு வழிச்சாலை (NH5). தரமும் சென்னை – மதுரை போல இல்லை. பின்னர் சிறிது தூரத்தில் இடது பக்கம் திரும்பினால் மாநிலச் சாலை (State Highway) கூகுளை நம்பியது தவறாகி விட்டது. இப்பொழுதான் சாலை அமைத்து கொண்டிருக்கிறார்கள். அங்கங்கே சாலை உடைந்து, மீண்டும் விஜயவாடா – ஹைதராபாத் ஹைவே (NH9) பிடிப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது.

பின்னர் அங்கிருந்து ஹைதராபாத் 85 கி.மீட்டர்கள்தான்!

9 மணிக்கு சென்னையில் கிளம்பி 10 மணிக்கு புழலை தாண்டி ஹைதராபாத் ஹோட்டலை அடைய இரவு 9 மணியாகி விட்டது. ஹோட்டலை தேடி ஒரு மணி நேரம் சுற்றியதும் அடக்கம்.

வழியில் நல்ல உணவு விடுதிகள் இல்லை. உணவை சென்னையிலிருந்தே எடுத்துச் செல்வது நலம்

ஒரு மாநில தலைநகருக்கு மாநிலத்தின் மற்றொரு பகுதியிலிருந்து செல்லும் சாலை இந்த அளவிற்கா மோசமாக இருக்கும் என்று இருந்தது. தமிழ்நாடு எவ்வளவோ பரவாயில்லை.

இந்த சாலை அமைத்து முடிக்க இரண்டு மூன்று வருடம் பிடிக்கலாம். அதுவரை 100 கி.மீ. அதிகமானாலும் பரவாயில்லை என்று விஜயவாடா வழியே ஹைதராபாத் செல்லுங்கள். வரும் பொழுது அப்படித்தான் வந்தேன். விஜயவாடாவிற்குள் சுற்றி உணவு உண்ட நேரம் உட்பட அதே நேரம்தான் ஆயிற்று.

-oOo-

ஹைதராபாத் – விஜயவாடா சாலை புதிய நான்கு வழிச்சாலை. இன்னமும் கட்டணம் வசூலிக்க ஆரம்பிக்கவில்லை. இன்னமும் ஒரு மாதத்தில் ஆரம்பித்து விடுவார்கள் என நினைக்கிறேன்.

ஆனால் சில நகர்ப்பகுதிகளில், தமிழகத்தில் உள்ளது போல வேலி அமைக்கவில்லை. ஹைவே ஒட்டிய பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் நீக்கப்படவும் இல்லை. எனவே ஹைவே சில இடங்களில் சாதாரண சாலையாகி சாலையோர வியாபாரம், பைக் நிறுத்தம் என களை கட்டுகிறது.

நேரமிருப்பின் விஜயவாடாவை ஒரு சுற்று சுற்றுங்கள். மலைகளின் இடையே அமைந்த அழகான நகரம். நல்ல அசைவ உணவு விடுதிகள் இருந்தன (Ask for 11 to 11). கிருஷ்ணா நதியின் பிரமாண்டத்தை அதிசயிக்கையில் ‘பைசா வசூல்’ என்று இருந்தது!

விஜயவாடாவிலிருந்து ஓங்கோல் வரை 73ரூ கட்டணம் வாங்குகிறார்கள். ஹைவே என்று சந்தோஷமாக ஆரம்பித்த பயணத்தின் உற்சாகம் சீக்கிரமே வடிந்து விட்டது. சாலையில் தரம் மிகவும் மோசம். எங்குமே பாலம் கட்டப்படாமல்  ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ஒரு மாற்றுப் பாதை!

தேசிய நெடுஞ்சாலைத் துறை மீது நுகர்வோர் வழக்கு போடலாமா என்று யோசித்து வருகிறேன். சென்னை – கொல்கத்தா சாலை என்று பெரிதாக நினைத்தேன். இப்படி பல்லிளிக்கிறது.

எங்குமே இங்குள்ளது போல கூரை வேய்ந்த கட்டணம் வசூலிக்கும் இடம் இல்லை. ஓட்டுநர்கள் ஓய்வெடுக்கும் இடமும் இல்லை. டிரக்குகளை ஓரம்கட்டி நிறுத்தும் இடமும் இல்லை.

எப்படியோ, போன பாதைக்கு வந்த பாதை பரவாயில்லை. அது வரை நிம்மதி.

இறுதியாக ஹைதராபாத் நகருக்குள்ளும் சரி, ஹைவேயிலும் சரி. எந்த ஒரு இரு சக்கர வாகனமும், வேகமாக வரும் காரைப் பார்த்து பயப்படுவார்கள் என்று நினைத்து விடாதீர்கள். எவ்வித அச்சமும் இன்றி சாலையை பைக்கில் கடக்கிறார்கள். நாம்தான் கவனமாக இருக்க வேண்டியுள்ளது.

மதுரை
26/10/12

2 comments:

Anonymous said...

Sir,

Try to check the routes and roads for any long trips in http://www.team-bhp.com

This forum is the hangout place for anything on indian cars and highways.

PRABHU RAJADURAI said...

Thank you for the information, I have bookmarked it