26.1.12

அமெரிக்க காஞ்சனா, ஆபத்தான காஞ்சனா


உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட நீதிமன்ற வழக்கு விசாரணை பற்றிய படம் என்று பார்த்து ஏமாந்த மற்றொரு இல்லை எரிச்சலடைந்த படம் ‘தி எக்ஸார்சிசம் ஆஃப் எமிலி ரோஸ்’ (2005)

அப்படியும், அதனைப் பற்றி இங்கு பதிவிடுவதன் அவசியம், ‘மற்றுமொரு பயமுறுத்தும் வகையிலான படமாக மட்டுமே கடந்து போகாமல், உலகெங்கும், முக்கியமாக இங்கு விரவிக் கிடக்கும் பேய்விரட்டுதல் என்ற மூடநம்பிக்கையினை மருத்துவத்திற்கு மாற்றாக பார்ப்பவர்களிடம் விதைக்கூடிய வகையில் சார்பு நிலையில் அணுகியிருப்பதன் அரசியலைக் குறித்த ஆதங்கம்தானேயொழிய வேறில்லை.


கத்தோலிக்க கிறிஸ்துவத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட எளிமையான ஒரு குடும்பத்திலிருந்து நகரத்திற்கு உயர்கல்விக்காக எமிலி செல்கிறாள். அங்கு விடுதியில் தனியே தங்கியிருக்கும் எமிலியை பயங்கரமான வலிப்பு (Epilepsy) நோய் தாக்குகிறது. அதாவது வலிப்புடன், மனநோயும் (Psychosis). விஞ்ஞானத்தால் அப்படித்தான் அவளது அனுபவங்களை விளக்க முடியும். படிப்பினைத் தொடர முடியாத எமிலி வீட்டிற்கே திரும்பி வருகிறாள். நிலமை மேலும் மோசமாக, அவர்கள் சார்ந்திருக்கும் கோவில் பாதிரி, எமிலியை பேய் பிடித்திருப்பதாக நம்புகிறார். பேயை விரட்டும் அவரது முயற்சிகள் தோல்வியடைய, அதற்கு காரணம் எமிலி உட்கொள்ளும் மருந்துகள்தான் என்று கருதி, பாதிரி எமிலியை மருந்துகளை நிறுத்தச் சொல்கிறார். ஆயினும் பாதிரியின் முயற்சிகள் தோல்வியடைந்து எமிலி பரிதாபமாக இறந்து போகிறார்.

எமிலி இறந்தது பாதிரியின் அலட்சியத்தால் (Negligence) என்று அவர் கைது செய்யப்பட்டு அவர் மீது விசாரணை நடக்கிறது. ஒருவருக்கு பேய் பிடித்திருக்கிறது என்ற முடிவிற்கு வருவதற்கும் அதனை விரட்டுவதற்கும் அதீத கட்டுப்பாடுகளை வைத்திருக்கும் கத்தோலிக்க சபைக்கு அதனை மீறிய பாதிரியின் செயல் தர்மசங்கடத்தை ஏற்ப்படுத்த சபைக்கு பங்கம் வராமல் காக்க, ஒரு பெரிய சட்டநிறுவனத்தை பாதிரியின் வழக்கினை நடத்த ஏற்ப்பாடு செய்கிறது. ஆனால் இறுதியில் பாதிரி சபைக்கு கட்டுப்படாமல், ‘தான் செய்ததே சரி எனவும், உலகமாந்தர்கள் அனைவருக்கும் முன்மாதிரியாக இருக்கும் வண்ணம் கன்னிமேரி விருப்பத்தின்படி எமிலி தன்னை சாகக்கொடுத்தாள்’ என்றும் நிறுவ முயலுகிறார்.


விசாரணைக்கு பின்னர் ஜூரர்கள் பாதிரி குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டாலும், திரைக்கதை ’பேய்பிடிப்பதும் சாத்தியம்தான், பேய்விரட்டுவதும் ஒரு சிகிச்சை முறையாக இருக்கலாம்’ என்பதை நிறுவும் சார்புநிலையில் (biased) எழுதப்பட்டு, ‘பேய்பிடி’ப்பதன் விஞ்ஞானம் புரியாதவர்கள் தங்களை மேலும் மோசமான விளைவுகளுக்கு இட்டுச் செல்லும் மூடநம்பிக்கையில் மேலும் அமிழ்ந்து போக இந்த திரைப்படம் வாய்ப்பளிக்கிறது.

அதற்காகவே இந்தப் படத்தில் பல காட்சிகள் இருக்கிறது. நம்மை திகிலூட்டச் செய்வதற்காக திணிக்கப்பட்ட காட்சிகள் மட்டுமல்லாமல், பாதிரியின் வழக்குரைஞரின் (லாரா லின்னே) ஏற்ப்படும் அனுபவங்களும் படம் பார்ப்பவர்களை அந்த முடிவிற்கு தள்ளும் வகையிலேயே அமைந்துள்ளன.

நீதிமன்றத்தில் பேய்பிடிப்பதும் ஒரு சாத்தியம்தான் என்பதை நிறுவ வழக்குரைஞர் சாட்சிகளிடம் கேட்கும் கேள்விகளும், முன்னிறுத்தும் சாட்சிகளும், வாதங்களும் ஏற்றுக்கொள்ள இயலாதவை. சில சமயங்களில் அபத்தம் என்று நம்மை முணுமுணுக்கச் செய்பவை!

நல்லவேளை இந்தப் படம் தமிழில் வெளிவரவில்லை. வந்திருந்தால் வேப்பிலையடிக்காரர்களுக்கு தனி மவுசு வந்திருக்கும்.

மதுரை
26/01/12

15.1.12

ஏமாற்றமளித்த கொலை வழக்கு!


ஒரு திரைப்படத்தைப் பார்த்த பின்னர், அதனைப்பற்றிய விபரங்களை ‘விக்கிபீடியா’ போன்ற இணைத்தளங்களில் படித்து முழுமையான அனுபவமாக இருக்கிறது. உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் அமைந்த திரைப்படங்களை பார்ப்பதில் பெரும் விருப்பம் உள்ள எனக்கு, எவ்வளவு தூரம் திரைப்படம் உண்மையிலிருந்து விலகியிருக்கிறது என்பதை அறிந்து கொண்ட பிறகுதான் தூங்கச் செல்ல முடிகிறது.

படத்தினை சுவராசியமாக அமைப்பதற்காக, திரைக்கதையில் எடுத்துக் கொள்ளும் சுதந்திரம் (Cinematic Liberty) தேவையான ஒன்றுதான். பியூட்டிஃபுல் மைண்ட், தி கிரேட் டிபேட்டர்ஸ் போன்ற படங்களைப் பார்த்த பிறகு அவற்றின் உண்மைத்தன்மையை படித்த பிறகும் அந்தப் படங்களின் மீதான மரியாதை குறையவில்லை.

ஆனால், இருநாட்களுக்கு முன்னர் பார்த்த ‘மர்டர் இன் த பர்ஸ்ட்’ என்ற திரைப்படம் அவ்விதமான ஒரு அனுபவத்தை தராமல், ஏதோ நான் ஏமாற்றப்பட்டதைப் போல உணர்ந்தேன்.



கலிபோர்னியாவின் ‘அல்காட்ராஸ்’ சிறையில் தனிமைச் சிறையில் (Solitary Confinement) அடைக்கப்பட்டதால் மனநிலை பாதிக்கப்பட்டு அதனால், சக கைதி ஒருவரை ஸ்பூனால் குத்திக் கொன்ற ஹென்றி யங் என்பவரின் மீது நடைபெற்ற வழக்கு பற்றிய படம் என்பதால் ஆர்வத்துடன் பார்த்தேன். உண்மைச் சம்பவமாக இல்லாதிருந்தால், இதனை ஒரு திரைக்கதையாகவே ஒத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். எனினும், படத்தைப் பார்க்கையில் ‘என்னடா, மூன்று வருடங்களாகவா ஒருவனை தனிமைச்சிறையில் அடைத்து வைத்திருக்க இயலும்’ என்றிருந்தது.

நீதிமன்ற காட்சியில் சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்வது, மிகைப்படுத்தப்பட்டதாக உணர்ந்தேன்.

ஆனாலும், தனிமைச் சிறையால் உடல்சிதைந்து, மனவளர்ச்சி குன்றிப் போன ஹென்றியாக நடித்திருக்கும் கெவின் பேக்கனின் ஒப்பனையும், உழைப்பும் அசாத்தியமாயிருந்தது.

இறுதியில் படத்தினைப் பற்றிய உயர்வான எண்ணங்கள் அனைத்தும், உண்மைச் சம்பவங்களை படித்த பின்னர் வடிந்து போனது. ஹென்றி தனிமைச் சிறையில் இருந்தது, மூன்று வருடங்கள் இல்லை, மாறாக சில மாதங்கள்தான் என்பது கூட உறுத்தலாக இல்லை. ஏனெனில், சில நாட்கள் தனிமைச் சிறை என்பதே கொடுமையானதும், மனித உரிமை மீறலுமான செயலாகும். மூன்று வருடங்கள் தனிமைச்சிறையில் ஒருவரால் உயிர் பிழைத்திருக்கவே முடியாது.


உறுத்தலான உண்மை, ஹென்றியின் கடந்தகாலம் பற்றியது. ஹென்றி சிறைக்கு வந்தது, வங்கிக் கொள்ளை சம்பவங்கள் மற்றும் கொலைக் குற்றத்திற்காக. ஆனால் படத்தில், தனது தங்கையுடன் சிறு வயதிலேயே அனாதையாக்கப்படும் ஹென்றி தங்கையின் பசியைப் போக்க, ஐந்து டாலர் திருடிய ஒரே குற்றத்திற்காக, சிறைக்கு அனுப்பப்படுகிறான்.

சாதாரணமாக நாம் தமிழ்ப்படங்களில் பார்க்கும் அரைமணி நேர பிளாஷ்பேக் சில நிமிடங்களில், அனால் அதே கழிவிரக்கத்துடன் ஓடி மறைகிறது.

தனிமைச் சிறையின் கொடுமை குறித்து பேச முயலும் படத்தில், மரண தண்டனை பற்றி பேச முயன்ற ‘விருமாண்டி’ என்ற தமிழ்ப்படத்தில் செய்யப்பட்ட அதே தவறு.

தனிமைச் சிறையோ, பிற சிறைக் கொடுமைகளோ மனித உரிமை மீறல் என்றால், பாதிக்கப்படும் நபர் அப்பாவியாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. கொடுஞ்செயல்கள் செய்தவர்களுக்கும் சேர்த்துதான் இக்கொடுமைகளுக்கு எதிரான வாதங்கள் உள்ள சூழ்நிலையில் ‘ஹென்றி அப்பாவி, அவனை எப்படி தனிமைச் சிறையில் அடைப்பீர்கள்?’ என்ற கேள்வி படத்தின் அடிநாதத்தை சிதைத்துப் போடுவதாக உணர்கிறேன்.

ஏமாற்றமளித்த திரைப்படம் ‘Murder in the first’

மதுரை
16/01/12

ஞாயிற்றுக் கிழமை படுக்கையில் காப்பி!

பார்த்து ஒரு நாள் கழிந்துவிட்டது. ஆனாலும் ‘லாசே’யும் அவர் வேலை பார்த்த டென்மார்க் தேசத்து ‘ஸ்டோன் பண்ணையும்’ சக வேலையாட்களும், அதன் முதலாளியும் இன்னமும் மனதை விட்டு அகலமாட்டேன் என்கிறார்கள். நேற்றுப் பார்த்த ‘Pelle the conqueror’ என்ற டேனிஷ் திரைப்படம் பற்றிதான் குறிப்பிடுகிறேன். கதாநாயகன் என்னவோ, துரதிஷ்டம் பிடித்த லாசேவின் குட்டிமகன் பெல்லேதான். ஆயினும் படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களுமே ஏதாவது ஒருவகையில் அவ்வப்பொழுது நினைவில் வந்து போகிறார்கள்.

ஒருவேளை படத்தின் கதாபாத்திரங்களை, அந்த பள்ளிக்கூட வாத்தியார் உட்பட அவர்களின் மிகைப்படுத்தப்பட்ட வகையில் பல தமிழ்ப்படங்களில் நாம் பார்த்தவர்களாயிருப்பதால், எழுந்த தாக்கமாகவும் இருக்கலாம்.

வறுமையால் ஸ்வீடனில் இருந்து துரத்தப்படும் லாசேவும் அவரது மகனும், வேலை தேடி டென்மார்க் தேசம் வந்தாலும், ‘குடியிருக்க ஒரு சிறு வீடு’ ‘ஞாயிற்றுக்கிழமை காலையில் படுக்கையில் கிடைக்கும் காப்பி’ என்ற அவர்களது ஆசை எட்டாக்கனியாகவே இருந்தாலும், நம்பிக்கையுடனே படம் முடிகிறது.


1910ம் ஆண்டு எழுதப்பட்ட புகழ்பெற்ற டென்மார்க் தேசத்து நாவலை படமாக்கியிருக்கிறார்கள். எனவே நாவலின் கிளைக்கதையில் இடம்பெற்றிருக்கும் பல பாத்திரங்கள் சுருக்கமாக வந்து போனாலும், அவர்களைப் பற்றிய முழுக்கதையையும், நம் மனதில் உணர்வுகளாக எழ வைத்தது இயக்குஞரின் திறமை என்றால், கண்ணை மூடிக்கொண்டாலும் படம் பார்ப்பது போன்ற உணர்வை அளித்தது, இசையமைப்பாளரின் திறமை!

ஆனால் படத்தில் அனைத்தையும் மிஞ்சி நிற்பது, லாசேவாக நடித்த மாக்ஸ் வான் சிடோ என்ற ஸ்வீடன் நடிகரின் நடிப்பு. லாசேவின் இயலாமையும், தோல்வியும், அவநம்பிக்கையும் அவரது உடல்மொழியிலேயே தெறிக்க அவ்வளவு இயல்பான நடிப்பு.

1989ம் வருடத்திற்கான சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்காக ஆஸ்கர் விருதை தட்டிச்சென்ற பெல்லே எரொபிரென், (உச்சரிக்க சிரமப்படவேண்டாம். படத்தில் வரும் ஒரு சிறுவனின் பெயரை அவனது அம்மாவே சரியாக உச்சரிக்க முடியாதாம்) திரைப்பட ரசிகர்கள் தவறவிடக்கூடாத படம்.

மதுரை
15/01/12