6.11.11

சாருநிவேதிதாக்களை காப்பது எப்படி?



ஏ.கே.ராமனுஜன் அவர்களின் '300 ராமாயணங்கள்' என்ற கட்டுரை, இந்து மதஉணர்வுகளை புண்படுத்துவதாக கூறப்பட்டு தில்லி பல்கலைக்கழக வரலாற்றுப் பிரிவு பாடத்திட்டத்திலிருந்து சமீபத்தில் நீக்கப்பட்டது, பெரிய அளவிலான விவாதத்திற்கு வகுத்துள்ளது.

இதனைப் பற்றி கருத்து தெரிவித்த எண்ணங்கள் பத்ரி,'எந்தப் புத்தகத்தையும் தடை செய்யக் கூடாது, அது 'சாத்தானின் வேத'மாக இருந்தாலும் சரி, வேறு என்னவாக இருந்தாலும் சரி' என்று கூறுகிறார்.

மைய அரசோ அல்லது மாநில அரசோ ஒரு புத்தகத்தை அதில் கூறப்படும் கருத்து நாட்டின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் என்றோ, சட்டவிரோதமானது என்றோ அல்லது சட்டம் ஒழுங்கினை குலைக்கலாம் என்றோ தடை செய்கிறது. இத்த்கைய அதிகாரம் அரசிற்கு இருக்க வேண்டியது அவசியம். எந்தப் புத்தகத்தையும் தடை செய்யக் கூடாது என்ற கொள்கை முடிவு ஆபத்தானது.



உதாரணமாக, ‘இஸ்லாமிய மத உணர்வுகளை' புண்படுத்துவதாக கூறி சாத்தானின் வேதம் தடை செய்யப்பட்டாலும், உண்மையான காரணம் அப்பொழுது நாட்டில் நிலவிய சூழலில், எளிதில் சாமானிய மக்களை உசுப்பேற்றி ஒரு கலவரத்தை ஏற்ப்படுத்தி விடலாம் என்ற அச்சத்தால்தான். அப்பாவிகளின் உயிர் பணயமாக வைக்கப்படுமெனில், ஒரு புத்தகத்தை தடை செய்வது என்பது தவறான ஒரு முடிவாக இருக்காது.

ஆனால், இத்தகைய ஒரு தடை தற்காலிகமான ஒன்றாகத்தான் இருக்க முடியும். மேலும் இம்மாதிரியான தடை உத்தரவை எதிர்த்து சம்பந்தப்பட்டவர் நீதிமன்றத்தை அணுகினால், அரசின் முடிவு சரியானதா என்பதை நீதிமன்றம் ஆராயும் வாய்ப்பும் உள்ளது. சமீபத்திய உதாரணம், ‘ஆராக்ஷன்’ திரைப்படம் மீதான தடையும், நீதிமன்றத்தின் உத்தரவும். முக்கியமாக இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் (Guidelines) வகுக்கப்பட்டால், நீதிமன்றங்களால் இந்த வழக்குகளை தீர்ப்பது எளிதான செயலாகவும் இருக்கும்.

ஆனால் பிரச்சனை, புத்தகத்தை தடை இல்லாமல் வெளியிடுவதிலோ அல்லது தடையை நீக்குவதிலோ இல்லை. இந்திய தண்டனை சட்டத்தின் கீழான வம்பு வழக்குகளை எதிர்கொள்வதுதான் உண்மையான பிரச்சனை!



எனது ‘சைபர் கிரைம் பற்றிய பதிவிலே நான் கூறியபடி, நடிகை குஷ்பு தமிழர்களின் உணர்வுகளைப்புண்படுத்திவிட்டார் என்றோ அல்லது ஒவியர் எம்.எப்.ஹுசைன் இந்துக்களின் உணர்வுகளைப்புண்படுத்திவிட்டார் என்றோ எந்த ஒரு நீதிமன்றத்தாலும் தீர்ப்பு கூறப்படவில்லை. ஆனாலும், முன்னவர் தமிழகம் முழுவதும் பின்னவர் இந்தியா முழுவதும் உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றங்களில் அலைகழிக்கப்பட்டதையும் அதனால், ஹுசைன் இந்தியாவை விட்டே வெளியேற வேண்டிய சூழல் ஏற்ப்பட்டதையும் நாம் அறிவோம்.

எனவே, தடை செய்யப்படுவது மட்டும் பிரச்சனை அல்ல!

மாறாக மற்றொரு நபரின் மத உணர்வுகளைப் புண்படுத்த வேண்டும் என்ற தீர்மானமான எண்ணத்துடன் (deliberate intention) ஒருவரின் செயல் இருக்குமாயின் அதனை குற்றம் என்று கூறும் இந்திய தண்டனச் சட்டத்தின் பிரிவு 298, ஒழுக்கக்கேடான (obscene) எழுத்து, ஒவியம் அல்லது பாடல் போன்றவற்றை குற்றம் என்று கூறும் பிரிவு 292 ஆகியவையும் மற்றும் அவதூறை (Defamation) உள்ளடக்கிய பல்வேறு குற்றங்களில் ஒரு புத்தகத்தை கொண்டு வர முடியும் என்பதுதான் பிரச்சனை.

‘சாத்தானின் வேதம்’ புத்தகத்தை இந்தியாவின் எந்த மூலையிலும் படிக்கும் ஒருவர் சல்மான் ருஷ்டி மற்றும் அந்த புத்தகத்தோடு சம்பந்தப்பட்ட எவர் மீதும், அவர் அந்த புத்தகம் விற்பனையான இடத்திலிலுள்ள காவல்துறையில் புகார் கொடுத்து வழக்கு பதிவு செய்ய இயலும். காவலர்கள் மறுத்தால் அங்குள்ள நீதித்துறை நடுவர் (Judicial Magistrate) தனிநபர் குற்றவழக்காகவும் பதிவு செய்ய இயலும். குற்றவியல் வழக்குகளில் அழைப்பாணை கிடைத்ததும் ஒருவர் நேரில் ஆஜராக வேண்டும். பின்னர் விலக்கு அளிக்கப்பட்டாலும், அவர் சார்பாக வக்கீல் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். இல்லை வாரண்ட்…கைது இன்ன பிற தொந்தரவுகள்.



நீதித்துறை நடுவர் என்பவர், நீதிபதிகள் மட்டத்தில் கடைநிலையில் இருப்பவர். சட்டத்தில் இளங்கலை பட்டம் பெற்ற ஒரு வருட காலத்திற்குள்ளாகவே ஒருவர் நடுவராக நியமிக்கப்பட வாய்ப்பு உண்டு. தற்போதைய இலக்கியச் சூழல் பற்றியோ, பின்நவீனத்துவம் பற்றியோ அவர் அறிந்திருக்க தேவையில்லை. அவர்தான் தனியாளாக, ஹுசைன் தனது ஓவியம் மூலமாக வேண்டுமென்றே இந்துமத உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளாரா அல்லது சாருநிவேதிதாவின் ‘தேகம் புதினம் ஒழுக்கக் கேடானதா என்பதை தீர்மானிப்பார்.

அதற்காக, இந்திய தண்டனைச் சட்டத்தின் இந்தப் பிரிவுகளை நீக்குவதும் சாத்தியமல்ல. அப்படியெனில், படைப்பாளிகளை சுதந்திரமாக எவ்வித அச்ச உணர்வுமின்றி தங்கள் படைப்புக்ளை ஆக்க எவ்வாறு ஊக்குவிப்பது?

எனக்குத் தோன்றும், ஒரே தீர்வு தணிக்கை வாரியம் (Censor Board) போன்ற சட்டபூர்வமான அமைப்பினை ஒன்றினை ஏற்ப்படுத்தி, இவ்விதமான தாக்குதல்களுக்கு தங்கள் படைப்பு உள்ளாகலாம் என்று அச்சப்படும் படைப்பாளிகள் தங்களது படைப்பினை அந்த அமைப்பிற்கு சமர்ப்பிக்க கோரலாம். அறிஞர்கள் அடங்கிய அந்த அமைப்பின் சான்றிதழைப் பெற்றால், மேற்கூறிய இந்திய தண்டனை சட்டபிரிவுகளின் கீழ் தாக்கல் செய்யப்படும் வழக்குகளில் இருந்து அந்த படைப்பிற்கு விலக்கு (Immunity) அளிக்கலாம்.

மேலும், அவ்விதம் விலக்கு அளிக்கையில் ‘இந்த படைப்பு படிப்பவரது ஒழுக்க நெறிகளுக்கு ஏதுவானதாக இல்லாதிருக்கலாம் ‘மத உணர்வுகளைப் புண்படுத்தலாம் என்ற எச்சரிக்கையினை தாங்கி அந்த படைப்பு வெளிவர வேண்டும் என்ற கட்டுப்பாடுகளையும் அந்த அமைப்பு விதிக்கலாம்.

எனக்குத் தோன்றிய வரையில் இப்படிப்பட்ட ஒரு அமைப்பே இந்தப் பிரச்சனைக்கான நிரந்தரமானதும், முழுமையானதுமான தீர்வாக இருக்க முடியும்.

மதுரை
06/11/11























5.11.11

வரலாறு மிக முக்கியம்!

தினகரன் நாளிதழில் 'பீட்டர் மாமா' என்ற பெயரில் அரசியல் கிசுகிசுக்கள் தினமும் எழுதப்படும். நேற்றைய பகுதியில், 'மதுரை மீட்டிங்ல அப்போ கொபசாவா இருந்த ஜெயலலிதாவுக்கு எம்ஜிஆர் வெள்ளிச் செங்கோல் கொடுத்தார். அதுக்குப் பிறகு கிடுகிடுன்னு வளர்ந்து சீயெம் ஆயிட்டார்' என்று ஒரு 'செய்தி' எழுதப்பட்டுள்ளது.

எம்ஜியாரிடம் இருந்து ஜெயலலிதா வெள்ளிச் செங்கோல் பெறுவது போல ஒரு புகைப்படம் அதிமுக கட்சி சுவரொட்டிகளில் அடிக்கடி பார்க்கலாம். எம்ஜிஆர் அதிமுக தலைமையை ஜெயலலிதாவிடம் ஒப்படைத்ததன் அடையாளமாக, அந்தப் புகைப்படும் தொண்டர்கள் மனதில் பதிய வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், உண்மையில் ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையில் நடத்தப்பட்ட எம்ஜிஆர் மன்ற மாநாட்டில் அந்தச் செங்கோல் ஜெயலலிதாவால் எம்ஜியாருக்கு வழங்கப்பட்டது.


ஜெயலலிதா கவனமாக இருக்க வேண்டும். சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் அதிமுகவால் மதுரையில் நடத்தப்பட்ட பிரமாணமான கண்டனக் கூட்டத்தில் ஒபிஎஸ் அதே போன்ற செங்கோலை ஜெயலலிதாவிற்கு வழங்கினார்...

-oOo-

இரண்டு நாட்களாக, சுவிட்சர்லாந்து ஹெச் எஸ் பி ஸி வங்கியில் பணம் வைத்திருக்கும் இந்தியர்களின் பெயரை கூற வேண்டுமென்று தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்கப் போகிறேன். பின்னர் பூகம்பம்தான் என்று மிரட்டிக் கொண்டிருந்த வருண் காந்தி, இதோ அப்படி கேட்டே விட்டதாக நேற்று டைம்ஸில் செய்தி வெளியாகி உள்ளது.

வருண் காந்தியின் தந்தையான சஞ்ச்ய் காந்தி நான் பதினொராவது வகுப்பு படிக்கும் பொழுது பயிற்சி விமானத்தில் சாகசப் பயிற்சி செய்து கொண்டிருந்த பொழுது விமானம் கீழே விழுந்து இறந்து போனார். அவரது தாயாரும், இந்தியாவின் பிரதமரும் ஆகிய இந்திரா காந்தியின் உணர்ச்சிகளை படம் எடுத்துவிட வேண்டும் என்று குழுமியிருந்த புகைப்படகாரர்களை, பெரிய கறுப்பு கண்ணாடி அணிந்து வந்து இந்திரா ஏமாற்றினார்.

சஞ்சய் உடலைப் பார்க்க வ்ந்த இந்திரா அதிகாரிகளிடம் முதலில் கேட்டு வாங்கி தன்னுடன் வைத்துக் கொண்டது, சஞ்ச்ய் காந்தியின் கைக்கடிகாரம்!


'ஏன் இந்திரா சஞ்சயின் கைக்கடிகாரத்தை குறிப்பாக கேட்டு வாங்கி வைத்துக் கொண்டார்' என்பதற்கு அன்றைய பத்திரிக்கையாளர்களிடம் இருந்த ஒரெ யூகம் பற்றி வருண் காந்திக்கு தெரியுமா?

-oOo-

அவர்களைப் பற்றி யாரேனும் குற்றம் சாட்டினால், 'எங்கள் மீது தவறு இருந்தால் தூக்கில் போடுங்கள்' என்று அன்னாகுழுவினர் கூச்சலிடுகின்றனர். மற்ற அரசியல்வாதிகளும் முன்பு இதே வசனம்தானே பேசுவார்கள்!

ஆனால், அரசியல்வாதிகள் அன்னா ஹசாரே போல, 'திக்விஜயசிங்கிற்கு பைத்தியம் பிடித்து விட்டது' என்ற அளவிற்கு போக மாட்டார்கள். விமர்சனங்களைத் தாங்கும் பண்பு அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல, தங்களுக்கும் வேண்டும் என்று அன்னா குழுவினர் உணர்ந்ததாக தெரியவில்லை.

எப்படியோ, விரைவில் ஜன்லோக்பால் அளவிற்கு லோக்பால் வந்துவிடும். இந்தியாவின் துன்பங்கள் தீர்ந்துவிடும்!

இந்தியாவின் கஷ்டம் தீருகிறதோ இல்லையோ, அனில் அம்பானி, ரத்தன் டாடா அவர்க்ளை கைது செய்யும் நிலை ஏற்ப்பட்டால், அன்று 2ஜி வழக்கு முடிவுக்கு வந்து விடும் என்று நினைத்தேன். சுப்பிரமணியன்சுவாமி கூட அவர்கள் இருவரும் சிறைச்சாலை சுவரைப் பார்க்கும் நாள் வரும் என்று பேட்டியளித்தார். ஆனால் அது இனி நடக்காது போல!

2ஜி வழக்கு முடிவுக்கு வருகிறதோ இல்லையோ, கூடங்குளம் பிரச்சினை முடிவுக்கு வராதது போலத் தோன்றுகிறது. உள்ளாட்சித்தேர்தலுக்கு முன் தினம், நண்பர் ஒருவருடன் 'இடிந்தகரைக்கு' சென்றிருந்தேன்.

சுனாமியைப் பற்றி பேசுகிறார்கள், ஜப்பான் போல பாதிப்பில்லை என்கிறார்கள். ஏன் செர்னோபிலைப் பற்றி பேசவில்லை என்று புரியவில்லை.


'வரலாறு மிக முக்கியம்!'

மதுரை
06/11/11

4.11.11

கனிமொழி வழக்கில், ஜெயலலிதாவின் தலைவிதி!

கனிமொழிக்கு மீண்டும் பிணை மறுக்கப்பட்ட செய்தியில், விநோதமாக ஜெயலலிதாவும் கருணாநிதிக்கு இணையாக கவலை கொள்ள சாத்தியக் கூறுகள் உண்டு. 2ஜி வழக்கினை கவனித்து வரும் ஊடகங்கள் ஜெயலலிதா வழக்கின் மீதும் ஒரு கண் வைக்கலாம். ஜெயலலிதாவும் நாட்டின் தற்போதய சூழ்நிலை புரியாமல் ஒன்றிற்கு இரண்டு தடவை உச்ச நீதிமன்றத்தை அணுகி பலரின் பார்வையை தனது வழக்கின் பக்கம் ஈர்த்துள்ளார்.

கனிமொழிக்கு பிணை மறுக்கப்பட்டதை விட அத்ற்கான காரணங்களாக நீதிபதி எடுத்து வைக்கும் கருத்துகள் ஜெயலலிதா வழக்கோடும் பொருத்திப் பார்க்கப்படலாம். அவ்வாறான் ஒரு சூழ்நிலையில் கர்நாடக நீதிபதிக்கு ஜெயலலிதாவை விடுதலை செய்வது என்பது குற்றவாளி என தீர்ப்பதை விட கடினமான செயலாக இருக்கும்.

‘உனக்கும் வேண்டாம், எனக்கும் வேண்டாம்’ என்ற வகையில் இனி கருணாநிதிக்கும் ஜெயலலிதாவிற்கும் இடையில் அவர்களேயறியாமல் ஒரு போர்நிறுத்தச் சூழல் (truce) உருவாகலாம்.

-oOo-

அரசியல்வாதிகளை சுத்தம் செய்கிறேன் என்று உச்சநீதிமன்றம் கிளம்பியுள்ள சூழலில், நீதிமன்றங்களே புதிதாய் கிளம்பியுள்ள பிரச்னையில் கலகலத்துப் போய்விடும் போல உள்ளது. சென்னை நீதிமன்றத்தில் வெடித்துள்ள பிரச்னை, இறுதியில் தில்லி உச்சநீதிமன்றம் வரை பின்விளைவுகளை ஏற்ப்படுத்தலாம். தற்போதைக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் அனைவரும் அதிர்ந்து போய் உள்ளார்கள்.

அடுத்த ஒரு மாதம், உயர்நீதிமன்றத்திற்கு சோதனைக்காலம்!

-oOo-

சென்னை நீதிமன்ற களோபரங்களுக்கு இடையிலும், அண்ணா நூலகத்தை மாற்றுவதற்கு நீதிமன்றம் தடை விதித்தது மகிழ்ச்சி தரும் செய்தி. தலைமை செயலகம் திறப்புவிழாவில் அதற்கு கிடைத்த எதிர்மறை விளம்பரம் (negative publicity) தலைமைச் செயலகம் மாற்றப்பட்ட பொழுது பெரிய எதிர்ப்பினை மக்களிடையே தோற்றுவிக்கவில்லை. ஹிந்து கூட அம்மாவின் நோக்கம் அறிந்து சும்மா கிடக்கும் தலைமைச் செயலகத்தை என்ன செய்யலாம் என்று, கொஞ்சம் உள்நோக்கத்துடன் போட்டி நடத்தியது.

ஆனால், நூலகம் விடயம் பரவலான எதிர்ப்பினை ஏற்ப்படுத்தி விட்டது. ஊடகங்கள் ஏதோ தங்களது சுதந்திரத்தில் கைவைக்கப்பட்டுள்ளது போல துடித்தன. போதாதற்கு நீதிபதி விட சில மாதங்களுக்கு முன்னர் நூலகத்திற்கு சென்று பார்த்து வியந்துள்ளது, வழக்குரைஞர்களின் பணியினை எளிதாக்கியுள்ளது.

வழக்கு மேலும் விசாரணைக்கு முன்னரே, ஜெயலலிதா இந்த முயற்சியை கைவிட்டு விடுவார் எனறே நினைக்கிறேன்.

மதுரை
03/11/11