1.3.11

'விவேக்'(கமற்ற) நீதி!

உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு மீண்டும் ஒரு பிரச்சினையை அவரைச் சுற்றி உருவாக்கியுள்ளார். இதுவும் பெண்ணுரிமை அமைப்புகளை கோபம் கொள்ளச்செய்யும் ஒரு செயல் என்றாலும், அதிஷ்டவசமாக அநேகரால் கண்டுகொள்ளப்படாமல், வெறும் பத்திரிக்கைச் செய்தியோடு முடிந்து போய் உள்ளது.


1997ம் ஆண்டு இளம் பெண் ஒருவர் மூன்று நபர்களால் கடத்தப்பட்டு வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படுகிறார். குற்றத்தை விசாரித்த நீதிமன்றம் 10 ஆண்டுகள் தண்டனை விதித்தது. கூட்டு வன்புணர்வுக்கு (Gangrape) குறைந்தபட்ச தண்டனையே 10 ஆண்டுகள். பொதுவாக, தண்டனை சட்டங்களில் அதிகபட்ச தண்டனைதான் குறிப்பிடப்படும். வன்புணர்வு குற்றம் விதிவிலக்கு!

பின்னர் உயர்நீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்ய, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நீதிபதிகள் கட்ஜு மற்றும் மிஸ்ரா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதற்குள் 14 ஆண்டுகள் கழிந்து விட்டிருந்தது. பாதிக்கப்பட்டவர் திருமணமாகி இரு குழந்தைகளுக்கு தாயாகியிருந்தார் குற்றவாளிகள் ஏறக்குறைய 31/2 ஆண்டுகள் சிறையில் இருந்திருந்தனர். குற்றவாளிகளுக்கும் பாதிக்கப்பட்டவருக்கும் ஏதோ சமரசம் ஏற்ப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

மேற்கண்ட காரணங்களை மட்டும் குறிப்பிட்டு, இந்த வழக்கில் பத்து ஆண்டுகளுக்கு குறைவான தண்டனை வழங்க போதுமான மற்றும் சிறப்பு காரணங்கள் (adequate and special reasons) இருப்பதாக கூறி, குற்றவாளிகள் ஏற்கனவே சிறையில் கழித்த 31/2 ஆண்டுகளை அவர்களுக்கான தண்டனையாக கூறி அவர்களை கட்ஜு விடுவித்துள்ளார்.

கூடுதலாக, குற்றவாளிகள் மூவரும் தலா பாதிக்கப்பட்டவருக்கு ரூ.50,000/- கொடுக்க வேண்டுமென்று கூறியுள்ளார். ஆனால், அவர்கள் கொடுக்காவிட்டால் வருவாய் வசூல் சட்டப்படி வசூல் செய்யப்பட வேண்டுமாம். அதற்குப் பதிலாக உடனடியாக கொடுக்கப்பட்டால் தீர்ப்பு என்றிருந்தால், அங்கேயே கட்டியிருப்பார்கள். இனி, எங்கே போய் அவர்களிடம் வசூல் செய்வது?

வருவாய் வசூல் சட்ட (Revenue Recovery Act) சிக்கல்கள் கட்ஜுவிற்கு தெரிந்திருக்க நியாயமில்லை!

பிரச்னை அதுவல்ல, மாறாக ‘சுமார் பதினைந்து வரிகளுக்குள் முடிந்துவிட்ட ஒரு தீர்ப்பில், கூட்டு வன்புணர்வாளர்களுக்கான தண்டனையை 31/2 வருடங்களாக குறைக்க முடியுமா’ என்பதுதான். தீர்ப்பில் கூறப்பட்ட போதுமான மற்றும் சிறப்பு காரணங்கள் உச்ச நீதிமன்றம் வரும் அனைத்து வன்புணர்வு வழக்குகளிலும் இருக்கும்.

சம்பவம் நடந்து 14 ஆண்டுகள் கடந்து போவதோ பாதிக்கப்பட்டவருக்கு திருமணம் ஆவதோ, அவருக்கு குழந்தைகள் பிறப்பதோ, குற்றவாளிகள் 31/2 ஆண்டுகள் சிறையில் கழிப்பதோ, ஏன் அவர்களுக்குள் சமரசம் ஆவதோ அனைத்து வழக்குகளிலும் உள்ள அம்சம்தான். அப்படியென்றால் அவை எப்படி சிறப்பான காரணங்கள் ஆகும்?

போதுமான காரணம்? நிச்சயமாக கிடையாது.

ஒருவேளை வழக்கில் போதுமான சாட்சிகள் இல்லாது இருக்கலாம். வழக்கை முழுமையாக விசாரித்தால், குற்றவாளிகளை விடுவிக்க வேண்டிய சூழல் இருந்திருக்கலாம். குற்றம் நடைபெற்றதா என்ற சந்தேகம் கூட எழுந்திருக்கலாம். எனவே, குற்றவாளிகளை விடுதலை செய்வதற்கு பதிலாக, பாதிக்கப்பட்டவருக்கு ஏதேனும் நஷ்ட ஈடு பெற்றுத் தரலாமே என்ற நல்ல எண்ணமும் கட்ஜுவுக்கு இருந்திருக்கலாம்.

ஆனால் இது முறையல்ல. சிரமம் பார்க்காமல் ஐந்து பக்கங்களில் தெளிவான காரணத்தைக் கூறி ஒரு தீர்ப்பினை எழுதியிருக்கலாம். ஆனால் ஐந்து வரிகளில் முடிந்து போன இந்த தீர்ப்பு, மக்களிடையே என்னவிதமான எண்ணத்தை ஏற்ப்படுத்தும்?

‘பணத்தை அட்வான்ஸாக கட்ட வேண்டுமா, அல்லது இன்ஸ்டால்மெண்டில் கட்டினால் போதுமா?’


மதுரை
02/03/11

மீனவன் என்ன மேத்தாவா?

சர்வாதிகாரமோ அல்லது மக்களாட்சியோ, எந்த ஒரு அரசும் அதன் குடிமகனுக்கு ஆற்ற வேண்டிய முதல் கடமை, அவனது உயிருக்கு போதிய பாதுகாப்பு அளிப்பதே!


அந்தப் பாதுகாப்பை வேண்டியே ஒவ்வொரு குடிமகனும், ஒரு நாட்டின் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடந்து கொள்கிறான். உயிருக்கான பாதுகாப்புக்கு பின் வருவதுதான் பொருளாதார, சமூக பாதுகாப்பு போன்றவை எல்லாம்.


இந்தப் பாதுகாப்பை வலியுறுத்துவதற்கு தனியே ஒரு சட்டம் தேவையில்லை எனினும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 21, இந்த உரிமையை அடிப்படை உரிமைகளில் ஒன்றாக குறிப்பிடுகிறது. முக்கியமான அம்சம், இந்திய நாட்டிலுள்ள பிற நாட்டு குடிமக்களுக்கும் இந்த உரிமை உண்டு.


இந்தியாவில் உள்ள பிற நாட்டு குடிமக்களுக்கு கூட இருக்கும் இந்த உரிமையை கோரித்தான், தமிழக மீனவர்களின் உயிர்களை காப்பாற்றுங்கள், போதிய பாதுகாப்பு கொடுங்கள் என்று அரசை யாராலும் வற்புறுத்த முடியும்.


இவ்வளவு மீனவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். அவர் இந்திய எல்லைக்குள் இருந்தாரா அல்லது இலங்கை எல்லைக்குள் இருந்தாரா என்பது விசாரணைக்கு பின்னர்தான் தெரியவரும். ஆனால், மீனவர்களின் உயிர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டிய அரசு, இதுவரை யாரையாவது கைது செய்திருக்கிறதா? இல்லை என்றால், இதுவரை தாக்கல் செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான முதல் தகவல் அறிக்கைகளின் முடிவு என்ன? குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்றால், தனது கடமையிலிருந்து தவறியதற்காக அவர்களுக்கு அரசு நட்ட ஈடு தர வேண்டாமா? இனி இது போல நடக்காமல் இருக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன?


யாருக்கும் எழும் இவ்விதமான, கேள்விகளுக்கு அரசிடமிருந்து தகுந்த பதில் இல்லை என்றால், அணுக வேண்டிய ஒரே இடம், நீதிமன்றம்தான்.


அப்படிப்பட்ட ஒரு நீதிப்பேராணை மனுவை, சமீபத்தில் நமது உயர்நீதிமன்றம் ‘ஏதோ இது இந்திய-இலங்கை பிரச்னை’ போல நினைத்துக் கொண்டு தள்ளுபடி செய்துள்ளது. நீதிமன்றத்தை விட, அந்தக் கருத்தை எவ்விதமான விமர்சனமும் இல்லாமல் ஏற்றுக் கொண்ட நமது ஊடகங்கள் மீதுதான் வெறுப்பும், விரக்தியும் தோன்றுகிறது.


இரண்டு நாட்களாக, யாராவது ஒரு தலையங்கமாவது எழுதுவார்கள் என்று எதிர்பார்த்து, ஏமாந்ததன் விளைவுதான் இந்தப் பதிவு.


தமிழக மீனவர்கள் அகால மரணமடைவதற்கும், இந்திய இலங்கைப் பிரச்னைக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்?


சம்பந்தப்பட்ட வழக்குரைஞர் மீதும் கோபம் வருகிறது. மீனவர்களின் உயிரினை, இந்திய எல்லைக்குள் கூட பாதுகாக்கும் அதிகாரம் எங்களுக்கு இல்லை என்று கூறிய நீதிமன்றத்திற்கு அவர் கூறியிருக்க வேண்டிய பதில், ‘ எங்கோ இருக்கும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இந்தியர்கள் மீதான தாக்குதலை தடுக்க உயர்மட்ட அளவில் நடவடிக்கை எடுத்து, அப்படி எடுத்த விபரத்தை ஒரு பிரமாண வாக்குமூலமாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் 2009ம் உத்தரவிட்டது. எங்கோ இருக்கும் ஆஸ்திரேலியா எல்லைக்குள் நடந்த தாக்குதலை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன கேட்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் இருக்கையில், இங்கிருக்கும் நாகப்பட்டினத்தில் தாக்குதல் அல்ல கொல்லப்பட்டால் கூட கேட்க அதிகாரம் இல்லையா?’ என்பதுதான்.


மதுரையில் வழக்கு வியாழக்கிழமை வருகிறது…….என்ன நடக்கிறது பார்க்கலாம்.


மீனவர்கள் பீடிக்கு பற்ற வைக்கும் தீக்குச்சியிலிருந்து, படகுகளுக்கு போடும் டீஸல் வரை அவர்களிடம் இருந்து வரி வசூலிக்கும் மத்திய அரசிற்கு அதற்கான தார்மீக உரிமை கொஞ்சம் கூட கிடையாது.


மதுரை
01/03/11