28.11.10

கட்ஜூவின் என்கவுண்டர்!

உச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூ நமது உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்த பொழுது, எனது மூத்த வழக்குரைஞர், ’அவரது தீர்ப்புகள் செல்லுமா?’ என்று ஒரு சந்தேகத்தை எழுப்பினார். ‘ஏன் சார்?’ என்றால்…

‘அவர்தான் பதினாறு வயசை தாண்டவில்லையே. மைனர் சொன்ன தீர்ப்பு செல்லுமா?’ என்றாரே பார்க்கலாம்.

18 வயதுக்குள் செய்யப்படும் செயல்கள் குற்றமாகாது என்ற தைரியத்தில்தான், கட்ஜூ அவர்கள் அலகபாத் நீதிமன்றத்தை அவமதிக்க துணிந்துள்ளார் போல!

மூன்று நாட்களுக்கு முன்னர் தான் கூறிய தீர்ப்பு ஒன்றில், அலகபாத் உயர்நீதிமன்ற தனி நீதிபதி கூறிய தீர்ப்பு சட்டம் சாராத ‘வேறு பலன்களுக்காக’ கூறப்பட்டுள்ளதாக தனது தீர்ப்பில் குற்றம்சாட்டியுள்ளார் (as these interim orders are clearly passed on extraneous consideration).

ஒரு தீர்ப்பினைப் பற்றி சட்டரீதியில் விமர்சிக்கலாம். சட்டம் சாரத வகையில் கூட குறை கூறலாம். ஆனால் அந்த தீர்ப்பினை நீதிபதி வேறு பலன்களுக்காக கூறியுள்ளார் என்று கூறுவது நீதிமன்ற அவமதிப்பாகும். இந்த அடிப்படையில் கட்ஜூ கூறியவை, ஒரு தீர்ப்பில் கூறப்பட்டிருப்பினும், நீதிமன்ற அவமதிப்பே!

தனி நீதிபதியில் உத்தரவு சட்டப்படி சரியான ஒரு உத்தரவா இல்லையா என்ற மேல் முறையீட்டில், தீர்ப்பினை பற்றி எவ்விதமான விமர்சனத்தையும் கூற கட்ஜுவிற்கு உரிமை உண்டு. ஆனால், உத்தரவு வேறு பலன்களுக்காக கூறப்பட்டுள்ளதாக கூறியது, நீதித்துறையின் அனைத்து நெறிமுறைகளையும் மீறிய ஒரு செயல்.

ஒரு நீதிபதி, அதுவும் பாராளுமன்ற ஒட்டெடுப்பு முறை மூலமே பதவி நீக்கம் செய்யப்படத்தக்க ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி வேறு பலன்களுக்காக தீர்ப்பு கூறுவது என்பது, பதவி நீக்கம் செய்யப்பட வேண்டிய அளவுக்கு முறை தவறிய செயல். மட்டுமல்லாமல் அந்த நீதிபதியை சிறையில் அடைக்க வேண்டிய குற்றச் செயல். ஆனால், கட்ஜு, நீதிமன்ற நடைமுறை, இயற்கை நீதி போன்றவை இந்த நாட்டின் நீதிதுறையின் ஆதர்ச விதிகள் என்பதையெல்லாம் மறந்து, மிகச் சாதாரணமாக ஒருவரை குற்றவாளி என்று கூறியுள்ளார். இந்திய அரசியலமைப்பில் தான் வகிக்கும் மிக உயர்ந்த ஒரு பொறுப்பின் முக்கியத்துவத்தையும் தனது தீர்ப்பில் எழுதும் ஒவ்வொரு வார்த்தையும், 100 கோடி மக்கள் தொகையுள்ள இந்த நாட்டின் அனைத்து நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்தும் என்பது புரியாமல் செயல்பட்டுள்ளார்.

இந்த நீதித்துறை தாக்குதலின் ‘Judicial Encounter’ அதிர்ச்சியிலிருந்து யாரும் மீளவில்லை போல. மூன்று நாட்களாகி விட்டன. இனிதான் பார்க்க வேண்டும். உச்ச நீதிமன்றம் என்ன செய்யப் போகிறது என்பதை!

***
இவ்வாறு அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பது, கட்ஜுவுக்கு ஒன்றும் புதிதல்ல. தனது அளவுக்கு மீறிய ஆர்வத்தால் இப்படித்தான் வார்த்தைகளை கொட்டி, பின் மாட்டிக் கொள்வார்.

கடந்த மாதம்தான், திருமணம் இல்லாமலேயே இருவர் சேர்ந்து வாழும் முறை பற்றிய தீர்ப்பில், வைப்பு (keep) என்ற வார்த்தையினை பயன்படுத்தி வழக்குரைஞர் இந்திரா ஜெய்சிங்கிடம் வாங்கி கட்டினார். (If a man has a `keep' whom he 1maintains financially and uses mainly for sexual purpose and/or as a servant it would not, in our opinion, be a relationship in the nature of marriage)

இங்கே ஒன்றைக் குறிப்பிட்டாக வேண்டும். கட்ஜு எப்படி அப்பழுக்கில்லாத நேர்மையானவரோ அதே போன்று, பெண்களிடம் பரிவு மிக்கவர்.

***

நிர்வாகம் அதன் வேலையை செய்யட்டும். நீதிமன்றங்கள் அதனுடைய வேலையை மட்டும் செய்யட்டும்’ என்பதில் கட்ஜு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளவர். நிர்வாகத்திலோ அல்லது சட்டமியற்றுதலிலோ நீதிமன்றங்கள் தலையிடுவதைக் கண்டால் அவருக்கு பொறுக்காது.

அந்த வேகத்தில், நுகர்வோர் நீதிமன்றங்கள் தேவையான அளவிற்கு உருவாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய உயர்நீதிமன்ற தீர்ப்பினை தள்ளுபடி செய்கையில், உயர்நீதிமன்றத்தோடு நிற்காமல், இடைக்கால உத்தரவு வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும் தனது தீர்ப்பில் ஒரு கை பார்த்தார். கூட இருந்த நீதிபதி பயந்து போய் தனியே தீர்ப்பு எழுதி, அதோடு நிற்காமல், ‘For the views been taken herein, I regret to express my inability to agree with Brother Katju, J. in regard to the criticisms of various orders passed in this case itself by other Benches. I am of the opinion that it is wholly inappropriate to do so. One Bench of this Court, it is trite, does not sit in appeal over the other Bench particularly when it is a coordinate Bench. It is equally inappropriate for us to express total disagreement in the same matter as also in similar matters with the directions and observations made by the larger Bench. Doctrine of judicial restraint, in my opinion, applies even in this realm. We should not forget other doctrines which are equally developed viz., Judicial Discipline and Respect for the Brother Judges’ State of UP Vs. Jeet Bisht 2007 (6) SCC 586’ என்று அதே தீர்ப்பில் கட்ஜுவையும் விமர்சிக்க வேண்டியதாயிற்று.

***
ஆயினும், மேற்கண்ட தீர்ப்பு வெளிவந்த சில நாட்களில், பல்வேறு குற்றச் செயல்களுக்காக குற்றம் சுமத்தப்பட்ட பெண்கள், சிறுவர்கள் ஆகியோருக்கு மறுவாழ்வு கொடுப்பது சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு பொதுநல வழக்கினை வேறு இரு நீதிபதிகள் ஏற்க மறுத்து, அவ்வகையான வழக்குகளை நீதிமன்றம் விசாரிக்கலாமா என்ற கேள்விக்கு பதிலளிக்க மூன்று நீதிபதிகள் அடங்கிய மன்றத்தை அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இந்தப் பிரச்னை பெரிதாக கிளம்ப தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன், ‘பொதுநல வழக்குகள் தாக்கல் செய்ய தடை இல்லை’ என்று அறிவிக்க வேண்டியதாயிற்று.

***
ஆயினும் கட்ஜுவை ஒரு பிடி பிடிக்க வேண்டும் என்று காத்திருந்தவர்களுக்கு, அடுத்த வருடமே ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.

அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளில் தற்காலிக பணியாளர்களாக வேலைக்கு சேர்பவர்களை பின்னர் நிரந்தரமாக்குதல் கூடாது என்று முன்பு உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்சு உமா தேவி (JT 2006 (4) SC 420) என்ற வழக்கில் ஒரு தீர்ப்பு கூறியிருந்தது.

ஆனால், பின்னர் கட்ஜுவும் மற்றொரு நீதிபதியும் இருக்கும் இரு நீதிபதிகள் அடங்கிய பெஞ்சு முன்பு பணி நிரந்தரம் சம்பந்தப்பட்ட மற்றொரு வழக்கு வர கட்ஜு பணி நிரந்தரம் செய்யலாம் என்பதோடு நிற்காமல், உமா தேவியின் வழக்கு யூக்லிட்டின் தேற்றம் போல அப்படியே கடைபிடிக்க வேண்டியதில்லை’ என்றும் கூறினார் (we find that often Uma Devi's case (supra) is being applied by Courts mechanically as if it were a Euclid's formula without seeing the facts of a particular case. பூரன் சந்திர பாண்டே வழக்கு 2007 (11) SCC 92)

ஒரே வருடத்தில் மற்றொரு நிரந்தரமாக்குதல் பிரச்னை உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்சுக்கு முன்பு வந்த பொழுது (தயானந் வழக்கு 2008 (10) SCC 1) பூரன் சந்திர பாண்டே வழக்கில் கட்ஜூவின் தீர்ப்பினை வெறுமே ஒரு கருத்தாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, மற்ற உயர்நீதிமன்றங்களை கட்டுப்படுத்தும் ஒரு முன்தீர்ப்பாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று தீர்ப்பு கூறப்பட்டது (In the light of what has been stated above, we deem it proper to clarify that the comments and observations made by the two-Judges Bench in UP State Electricity Board vs. Pooran Chandra Pandey (supra) should be read as obiter and the same should neither be treated as binding by the High Courts, Tribunals and other judicial foras nor thwe find that often Uma Devi's case (supra) is being applied by Courts mechanically as if it were a Euclid's formula without seeing the facts of a particular case)

முக்கியமாக இந்த தீர்ப்பில் நீதிபதிகள், மற்ற உயர்நீதிமன்றங்களுக்கு கூறுவது போல கட்ஜுவிற்கு ‘நீதித்துறையின் மாண்பினை’ போற்றுவது குறித்து கடுமையான வார்த்தைகளில் அறிவுறுத்தியிருந்தனர்.

வேடிக்கையான அம்சம் என்னவென்றால், நீதித்துறையின் ஒழுக்கத்தை பேண வேண்டியது குறித்து அறிவுறுத்த மூன்று நீதிபதிகள் பயன்படுத்திய வரிகள், ஜீட் பிஸ்ட் வழக்கில் கட்ஜு கூறிய தீர்ப்பிலுள்ள வரிகள்!

***

இந்த முறை கட்ஜு சற்று அகல கால் வைத்துள்ளார்...யார் காலை தட்டி விடப்போகிறார்கள் என்று பார்க்கலாம்.

மதுரை
28/11/10

12.11.10

சபாஷ்! சைலேந்திரபாபு

சைலேந்திரபாபுவிற்கு சபாஷ் போடத் தோன்றுகிறது. அவரது தியாகம் வியக்க வைக்கிறது. எனெனில், மோகன்ராஜ் என்கவுண்டர் முடிவு எடுத்ததும் (அவர் மறுத்தாலும், தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்து அதுதான் என்று புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இணையத்திலும் கூட போலி என்கவுண்டர் என்ற ஒன்று இருக்கிறது என்பதே தெரியாமல், என்கவுண்டர் என்றால் வாழத்தகுதியில்லாத ஒருவனை காவலர்கள் போட்டுத்தள்ளுவது என்ற அர்த்ததில்தான் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்) அவர் மனதில் ஒரு முறை கேரளாவின் லக்ஷ்மணா, குஜராத்தின் வன்சாரா, தில்லியின் ரஜ்பீர் சிங், மும்பையின் தயா நாயக் ஆகிய பெயர்கள் மனதில் ஓடியிருக்கும். அந்தப் பயத்தை எல்லாம் தள்ளி வைத்து விட்டு கொடூரன் மோகன்ராஜ் என்கவுண்டர் (sic) செய்து விடலாம் என்ற முடிவினை அவர் எடுத்திருந்தால், அந்த தியாத்தை வியந்து ‘சபாஷ்’ போடுவதில் என்ன தவறு இருக்க முடியும்.


***

நேற்று ஆய்வாளர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். கோவை என்கவுண்டர் பற்றி பேச்சுத் திரும்பிய பொழுது, ‘அண்ணாத்துரை ரொம்ப அப்பாவி. எப்படித்தான் சுட்டாரோ தெரியவில்லை’ என்று கூறினார்.

வர்கீஸை சுட்ட ராமச்சந்திர நாயரும் அப்பாவிதான். இப்படித்தான் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர், கேரள காவலர்களால் கைது செய்யப்பட்ட நக்ஸல் வர்கீஸ், பின்னர் காவல்துறையோடு நடந்த சண்டையில் கொல்லப்பட்டதாக முதலில் சொல்லப்பட்டது. ஆலயம் கூட கிறிஸ்தவ முறைப்படி அவரது உடலை புதைக்க மறுத்தது.

வர்கீஸ் கொல்லப்பட்டு சுமார் 25 ஆண்டுகள் கழித்து, அவரை சுட்ட ராமச்சந்திரன் நாயர் என்ற காவலர், தனது மனச்சாட்சியின் குரலுக்கு பயந்து ‘நான் இருந்தேன் என்பதற்கு சாட்சியாக” என்று ஒரு புத்தகத்தை எழுதி அதில் வர்கீஸை மேலதிகாரியின் உத்தரவுக்கு பணிந்து தான் சுட்டதாக கூறியிருந்தார்.

அந்தப் புத்தகம் அவரது ஒப்புதல் வாக்குமூலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, ராமச்சந்திரன் நாயர், முன்னாள் IG லக்ஷ்மணா மற்றும் முன்னாள் DGP விஜயன் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கு நடைபெறுகையில் ராமச்சந்திரன் நாயர் இறந்து போக, கடந்த அக்டோபர்’ 2010ல் ஐஜி லக்ஷ்மணா குற்றவாளி என்று தீர்ப்புக் கூறப்பட்டு, 74 வயது லக்ஷ்மணா கடந்த ஒரு மாதமாக சிறையில்…

ஒருவேளை இருபது வருடங்கள் கழித்து அண்ணாதுரையும் தனது மனச்சாட்சிக்கு பணிந்தால்....சைலேந்திரபாபுவுக்கு துணையாக, எந்த ஊடகவியலாளரும் சிறைக்குச் செல்லப் போவதில்லை.

***

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, நரேந்திர மோடியை கொலை செய்ய திட்டம் தீட்டி வந்த லக்ஷர் தோய்பா பயங்கரவாதி சொராபுதீனை தீரமாக குஜராத் காவலர்கள் சுட்டுக் கொன்ற பொழுது, DIG வன்சாரா மீது சூட்டப்பட்ட புகழாரங்கள் முன்பு இன்று சைலேந்திரபாபுவிற்கு கிடைக்கும் புகழாரங்கள் எல்லாம் ஒன்றுமில்லை!

இன்று வன்சாராவிற்காக கவலைப்பட எந்த ஊடகமும் தயாரில்லை. பாவம், ராஜ்குமார் பாண்டியன். ஐ பி எஸ் அதிகாரியாக குஜராத் செல்லும் தான், அங்கு ஒரு கைதியாக சிறையில் வாட வேண்டியிருக்கும் என்பதை கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்.

இருபது வருடங்களுக்கு முன்னர் ஐ பி எஸ் கனவுகளை நெஞ்சில் சுமந்து கொண்டிருந்த சைலேந்திரபாபுவும் நினைத்திருக்க மாட்டார். ஒரு கொலையில் தனக்கும் பங்கிருப்பதாக, சந்தேகிக்கப்படுவோம் என்று…

***

எட்டு வருடங்களுக்கு முன்னர், தில்லி அன்சால் வணிக வளாகத்தில், இரு லக்ஷர் இ தொய்பா பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்ற ACP ரஜ்பீர் சிங் கொண்டாடப்பட்டார். உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்த ரஜ்பீர் சிங் 13 வருடங்களில் உதவி ஆணையாளராக பதவி உயர்வு பெற்றார். காரணம் அவர் பணி செய்த 24 ஆண்டுகளில் 56 என்கவுண்டர்களை நடத்தியுள்ளார். ஆனால், கொடூர பயங்கரவாதிகளை ஒரு தனக்கு ஒரு சிராய்ப்பு கூட இல்லாமல் சுட்டுத்தள்ளிய ரஜ்பீர் 2008ம் ஆண்டில் நிசமான ஒரு துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டார். பல்வேறு நில கட்டபஞ்சாயத்துகளில் ஈடுபட்ட ரஜ்பீர், அதனால் ஏற்பட்ட ஒரு தகறாரில் ஒரு ரியல் எஸ்டேட் வியாபாரியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

***

சுமார் 50 நபர்களை என்கவுண்டரில் விண்ணுக்கு அனுப்பிய மும்பை ஆய்வாளர் விஜய் சலாஸ்கர் கூட இப்படித்தான். ஒரு சிராய்ப்பு கூட வாங்கியதில்லை. அனால் நிசமாகவே ஒரு துப்பாக்கி சண்டை நடந்தது. பயங்கரவாதி அஜ்மல் கசாபுடன். சலாஸ்கரின் பெயர் எழுதிய ரவை அன்றுதான் துப்பாக்கியிலிருந்து கிளம்பியது.

ஆனால், 85 நபர்களுக்கு மேல் போட்டுத்தள்ளிய மும்பையின் தயா நாயக் அந்த சண்டையில் பங்கெடுக்க முடியவில்லை. எனெனில் 2006ல் மும்பை தாதா உலக நடவடிக்கைகளில் அவருக்கும் பங்கிருப்பதாக வழக்கு தொடரப்பட்டு அவரே சிறைக்கு செல்ல வேண்டியிருந்தது.

பிரதீப் சர்மா…அவரது என்கவுண்டர்கள் 100ஐ தாண்டி வெகுகாலமாயிற்று. அவரும் தாவூது இப்ராகிமோடு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வேலை நீக்கம் செய்யப் பட்டார். தற்பொழுது நீதிமன்ற உத்தரவால் மீண்டும் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

சைலேந்திரபாபுவுக்கு கூட இப்படித்தான். முதலில் சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற கொடூரனில் ஆரம்பிக்கும். பின்னர் பெண்ணை பலாத்காரம் செய்து கொன்ற கொலைகாரனை போட்டுத் தள்ளினால் என்ன என்ற எண்ணம் பிறக்கும். அடுத்து கொள்ளைக்காரன். காலப்போக்கில் குற்ற உணர்வுகள் மரத்துப் போன பின், ‘இந்த லோக்கல் ரவுடியை கொஞ்சம் கவனியுங்கள். நான் உங்களைக் கவனிக்கிறேன்’ என்று ஒரு தொழிலதிபர் வந்தால் அதையும்தான் செய்து பார்ப்போமோ என்ற எண்ணம் வரலாம்.

தான் மறுத்தால் கூட, அண்ணாதுரை வந்து, ‘நான் செய்து கொள்கிறேன். நீங்கள் கொஞ்சம் கண்டுகொள்ளாமல் இருந்தால் போதும்’ என்றால் முடியாது என்று கூற முடியுமா?

முடியாது என்று கூறினால், அண்ணாதுரை ராமச்சந்திரன் நாயர் போல ஒரு புத்தகம் எழுதினாலும் எழுதுவார் என்ற பயம் உருவாகுமல்லவா?

அதனால்தான் அவரது துணிவுக்கு ஒரு சபாஷ் போட வேண்டும் என்று தோன்றுகிறது.



மதுரை
131110

கோயம்புத்தூர் டுமீல்! டுமீல்!!

2008ம் ஆண்டு வாரங்கல்லில் பொறியியற் கல்லூரி மாணவி ஸ்வப்னிகாவும் அவளது நண்பியும் மூன்று இளைஞர்களால் அமிலத் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். 21 நாட்கள் போராடிய ஸ்வப்னிகா மரித்துப் போனார். ஆனால் அதற்கு முன்பாகவே, கைது செய்யபப்ட்ட மூன்று இளைஞர்களும் புலன் விசாரணைக்காக அழைத்துச் சென்ற சென்ற காவலர்களை தாக்க முயன்றதாக கூறி, சுட்டுக் கொல்லப்பட்டார்கள். ஆந்திர மக்களின் கோபம் கைதிகள் கொல்லப்பட்டதால் தணிக்கப்பட்டது.


***

2010ம் ஆண்டு கோயம்புத்தூரில் 9 வயது முஸ்கானும் அவளது தம்பியான ரித்திக்கும் வாகன ஓட்டியால் பணத்துக்காக கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டனர். சம்பவம் நடந்து சில நாட்களில் புலன் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட வாகன ஓட்டி மோகன்ராஜ் காவலரை தாக்க முயன்றதாக கூறி, சுட்டுக் கொல்லப்பட்டார்.

***

1978ம் ஆண்டு புது தில்லியில் கீதா சோப்ரா என்ற 16 வயது சிறுமியும் அவளது தம்பியானா சஞ்சய் சோப்ரா என்ற 14 வயது சிறுவனும் பில்லா, ரங்கா என்ற இருவரால் பட்டப்பகலில் கடத்தப்படுகிறார்கள். கடத்திய கார் விபத்துக்குள்ளாக, குழந்தைகள் இருவரும் கொல்லப்படுகிறார்கள். தில்லி மட்டுமல்லாமல் இந்தியாவே இந்தச் செயலைப் பார்த்து அதிர்ந்தது. கொலைகாரர்கள் மீதான வழக்கு விரைந்து நடத்தப்பட்டு 1982ம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார்கள்.


***

1990ம் ஆண்டு கொல்கத்தாவில் 14 வயது ஹீதல் பரேக் என்ற சிறுமி தனஞ்சய் சட்டர்ஜி என்ற வீட்டு பாதுகாவலரால் பலாத்காரப்படுத்தப்பட்டு கொல்லப்படுகிறாள். கொல்கத்தா முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்ப்படுத்திய இந்தச் செயலுக்காக வழக்கு தொடரப்பட்டு 2004ம் ஆண்டில் தனஞ்சய் தூக்கிலிடப்பட்டார்.

***

2000ம் ஆண்டு தர்மபுரியில் கல்லூரி பேருந்து ஒன்று அரசியல் போரட்டத்தில் எரிக்கப்பட்டது. மூன்று விவசாயக் கல்லூரி மாணவிகள் இறக்க நேரிட்டது. தமிழகத்தில் பெரிய கொந்தளிப்பை ஏற்ப்படுத்திய இந்தக் குற்றத்திற்கு 2007ம் ஆண்டில் விசாரணை நீதிமன்றத்தால் மூன்று குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டு 2010ல் உறுதி செய்யப்பட்டுள்ளது.


***

1998ம் ஆண்டு சென்னையில் சரிகா ஷா என்ற 20 வயது கல்லூரி மாணவி இளைஞர்கள் சிலரின் சீண்டலில் இருந்து தப்பிக்க முயன்றதில், விபத்தில் பலியானார். தமிழகமே கொந்தளித்தது. கைது செய்யப்பட்டவர்கள் மீது கொலை குற்றம் சாட்டப்பட்டது. தமிழ்நாடு அரசு பெண்களை சீண்டுவதற்கு எதிரான கடுமையான சட்டம் பிறப்பித்தது.


***

1999ம் ஆண்டு புது தில்லியில் ஜெஸிக்கா லால் என்ற மாடல் உயர் ரக கேளிக்கை விடுதி ஒன்றில் மனு சர்மா என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆங்கில ஊடகங்களில் அதிர்ச்சி அலைகளை ஏற்ப்படுத்திய இந்தச் செயலுக்காக மனு சர்மா கைது செய்யபப்ட்டாலும், விசாரணை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். ஊடகங்கள் கொந்தளித்தது. பின்னர் தில்லி உயர்நீதிமன்றம் மனு சர்மாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து, உச்சநீதிமன்றத்தால் 2010ம் ஆண்டில் உறுதி செய்யப்பட்டது.

மனு சர்மா, முன்னாள் குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மாவின் பேரன்.

***

1996ம் ஆண்டு புது தில்லியில் பிரியதர்ஷினி மட்டூ என்ற 25 வயது சட்டக் கல்லூரி மாணவி பலாத்காரப்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். சந்தோஷ்குமார் சிங் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டு விசாரணை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். ஊடகங்கள் கொதித்து எழுந்தது. தில்லி உயர்நீதிமன்றம் சந்தோஷ்குமாருக்கு தூக்குத் தண்டனை விதித்தது. அக்டோபர் 2010ல் உச்சநீதிமன்றம் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது.


சந்தோஷ்குமார் சிங்கின் தந்தை பாண்டிச்சேரியின் காவல் துறைத் தலைவராக இருந்தவர் (IG of Police).

***

1990ம் ஆண்டு சண்டிகரில் ருசிகா கிர்கோத்ரா என்ற 14 வயது சிறுமி பிரதாப் சிங் ரத்தோர் என்பவரால், டென்னிஸ் பயிற்சியின் போது சீண்டப்படுகிறார் (molest). பின்னர் ரத்தாரால் ருசிகாவின் குடும்பம் பலவித இன்னல்களுக்கு உட்படுத்தப்பட்டது. இறுதியாக 1993ல் ருசிக்காவின் சகோதரர் பொய்வழக்கு ஒன்றில் கைவிலங்கிடப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டு காவல் நிலையத்தில் நிர்வாணப்படுத்தப்பட்டு சித்தரவதைக்குள்ளாக்கப்படுகிறார். மனமுடைந்த ருசிகா விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

ருசிகா தற்கொலை செய்து கொண்ட அன்று ரத்தோர் கேளிக்கை விருந்து ஒன்றின் மூலம் கொண்டாடுகிறார். சிலமாதங்களில் அவர் ஹரியானா மாநில காவல்துறை கூடுதல் தலைவராக பொறுப்பு ஏற்கிறார். பின்னர் அவர் மாநில காவல் துறை தலைவராகவும் பொறுப்பு ஏற்றார்.

1998ல் ருசிகா வழக்கினை விசாரிக்க சி பி ஐக்கு உத்தரவிடப்பட்டது. டிசம்பர் 2009ல் ரத்தோருக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஊடகங்கள் பெரிய அளவில் இதனை செய்தியாக்க மேல் முறையீட்டில் தண்டனை 18 மாதங்கள் என அதிகரிக்கப்பட்டு முதல் முறையாக ரத்தோர் சிறைக்கு அனுப்பப்பட்டார். 11/11/10 அன்று உச்ச நீதிமன்றம் ரத்தோரை பிணையில் விடுவித்துள்ளது.

ருசிகாவின் தந்தை ரத்தோருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று கேட்டு வருகிறார்.

***

2006ம் ஆண்டில் நோய்டாவில் 7 வயது முதல் 12 வயது வரையிலான பல (எழைக் குழந்தைகளை பாலியல் பலாத்காரப்படுத்தி கொன்றதாக மனிந்தர் சிங் பாந்தர் என்ற தொழிலதிபர் மீதும் கோலி என்ற அவரது வேலையாள் மீதும் குற்றம் சுமத்தப்பட்டது. 2009ல் விசாரணை நீதிமன்றம் இருவருக்கும் மரண தண்டனை விதித்தது. சில மாதங்களில் உயர்நீதிமன்றம் பாந்தரை விடுதலை செய்தது. வேலையாள் கோலி மீதான மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்டது. பாந்தர் மீது மேலும் 5 கொலை வழக்குகள் உள்ளன.


ஏறக்குறைய 40 குழந்தைகள் அந்தப் பகுதியில் 2005 முதல் 2007 வரை காணாமல் போயிருக்கின்றன. அந்தக் குழந்தைகளின் படங்கள் கிடைக்கவில்லை…


தொழிலதிபர் பாந்தர் காவலர்களின் அனைத்து தேவைகளையும் கவனித்துக் கொள்வதாக, தெகல்கா மட்டும் சமீபத்தில் குற்றம் சாட்டியுள்ளது.

***

பிப்ரவரி’ 2008. பட்டாலா மாவட்டம், பஞ்சாப். தனது உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த தலித் சிறுமி சோனு மாஸி, பிந்தா மாஸி என்ற இரு சகோதரர்களால், கடத்தப்பட்டு பலாத்காரப்படுத்தப்பட்டு கொன்று விட்டனர். காவலர்கள் சகோதரர்களை தேடிக் கொண்டிருக்கின்றனர். வழக்கு விபரம் தெரியவில்லை.


நவம்பர்’2008. கான்பூர் மாவட்டம். உத்தர பிரதேசம். 16 வயது தலித் சிறுமி மூன்று இளைஞர்களால் கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். புனீத், சுனில், நரேஷ் என்ற இளைஞர்களை காவலர்கள் தேடி வந்தனர். வழக்கு விபரம் தெரியவில்லை.


ஆகஸ்ட்’2009. பீட் மாவட்டம், மஹாராஷ்டிரா. சுமிதா பவார் என்ற 15 வயது தலித் சிறுமி கோவில் அர்ச்சகர் மற்ற இருவரால் பலாத்காரப்படுத்தப்பட்டார். காவலர்கள் வழக்கினை பதிவதற்குப் பதிலாக, சுமிதாவை அடித்து துன்புறுத்தினர். தற்பொழுது, வழக்கு பதியப்பட்டுள்ளது. வழக்கு விபரம் தெரியவில்லை.


செப்டம்பர்’2009. கேந்தரபாரா, ஒரிஸ்ஸா. 16 வயது தலித் சிறுமியை பணம் கேட்டு கடத்திய காந்தியா மாலிக் அவளை பலாத்காரப்படுத்தி பின்னர் அந்த சிறுமியின் பெற்றோரின் கண் எதிரிலியே அவளை உயிரோடு எரித்துக் கொன்றார். சிறுமியை கடத்திய பின்னர் புகாரினை விசாரிக்க மறுத்த காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மாலிக்கை காவலர்கள் தேடி வருகின்றனர். வழக்கு விபரம் தெரியவில்லை.


செப்டம்பர்’ 2010. நீல்கிரி, ஒரிஸ்ஸா. 6 வயது தலிச் சிறுமியை அவரது 20 வயது உறவினர் கடத்திச் சென்று பலாத்காரப்படுத்தி கொன்று விட்டார். ஊர்மக்கள் ஆர்ப்பாட்டம் செய்ய குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கு விபரம் தெரியவில்லை.


செப்டம்பர்’ 2010. கான்பூர் மாவட்டம். உத்திரபிரதேசம். 15 வயது தலித் சிறுமி இளைஞர் ஒருவர் பலாத்காரம் செய்த புகாரை வாங்க மறுத்ததால், சிறுமி தற்கொலை செய்து கொண்டார். தற்பொழுது வழக்கு பதிவு செய்து இளைஞரை காவலர்கள் தேடி வருகின்றனர். வழக்கு விபரம் தெரியவில்லை.




செப்டம்பர்’ 2010. மாண்ட்லா, மத்திய பிரதேசம். ஆறு இளைஞர்கள் 14 வயது தலித் சிறுமியை கடத்திக் கொண்டு போய் பலாத்காரம் செய்து, அதனை செல்லிடைப் பேசியில் படம் பிடித்து சுற்றில் விட்டனர். அதன் மூலம் குற்றம் வெளியே தெரிய வந்து கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கு விபரம் தெரியவில்லை.


ஏப்ரல்’2010. புது தில்லி. தன்னிடம் பாடம் படித்த 8 வயது தலித் சிறுமியை பலாத்காரப்படுத்தி கொன்ற டியூசன் ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்ற அரசு தரப்பு வாதம் ‘இந்த வழக்கு அரிதிலும் அரிதான வழக்கு இல்லை’ என்று நிராகரிக்கப்பட்டது


***

ஏன் இவை அரிதிலும் அரிதான வழக்கு இல்லை என்று சந்தேகம் கொள்பவர்கள், கூகுளில் “Minor Dalit, Rape, Murder” என்ற வார்த்தைகளை கொடுத்து தேடி சந்தேகத்தை தீர்த்துக் கொள்ளலாம்.



மதுரை
121110